என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பாவ் பாஜி மும்பையில் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இந்த பாவ் பாஜியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    உருளைக்கிழங்கு - 4
    பட்டாணி - 100 கிராம்
    காலிபிளவர் - 100 கிராம்
    கேரட் - 1 சிறியது
    குடைமிளகாய் - 1
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    பாவ் பாஜி மசாலா - 1 மேஜைக்கரண்டி
    வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி



    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு, குடை மிளகாய், கேரட் இரண்டையும் தோல் சீவி துண்டுகளாக  வெட்டி வைக்கவும். காலி பிளவரையும் நறுக்கி வைக்கவும்.

    குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர், பட்டாணி, சிறிது உப்பு சேர்த்து 3 விசில் வரும் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
     
    விசில் அடங்கியதும் மூடியை திறந்து வெந்த காய்கறிகளை ஒரு மத்து கொண்டு நன்கு மசித்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    குடைமிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து  ஒரு நிமிடம் கிளறவும்.

    பிறகு மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி 100 மில்லி தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.

    மசாலா கெட்டியானதும் வெண்ணெய் சேர்த்து கிளறி பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான பாவ் பாஜி மசாலா ரெடி.

    பாவ் பன் செய்முறை

    தேவையான அளவுக்கு பாவ் பன் எடுத்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசை கல்லை வைத்து லேசாக சூடானதும் 2 மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் கரைந்ததும் பன்னை அதில் சேர்த்து இருபுறமும் லேசாக சூடு படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

    சூடு படுத்திய பாவ் பன்னோடு இந்த மசாலாவை சேர்த்து அதன் மேல் சிறிது வெண்ணெய் வைத்து பரிமாறவும்.

    சூப்பரான பாவ் பாஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
    ரோஸ் வாட்டரை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி அழகை மேன்மேலும் அதிகரிக்க முடியும். ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மென்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைத்து, சருமமே இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இங்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

    • ரோஸ் வாட்டர் பாட்டிலை 1/2 மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக காணப்படும்.

    • கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் இந்த முறையை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.



    • மென்மையான சருமம் தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

    • வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.

    • இரவில் படுக்கும் போது, வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால், அதனை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், மேக்கப் நீங்குவதோடு, சருமமும் மென்மையோடு இருக்கும்.

    • ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். மேலும் ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக காட்டும்.

    சாப்பிடும்போது பேசக்கூடாது. உணவை ரசித்து சாப்பிடவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த பெரியோர்கள் சொல்லுக்கு விஞ்ஞான பூர்வமாகவும் விளக்கம் கிடைத்திருக்கிறது.
    சாப்பிடும்போது பேசக்கூடாது. உணவை ரசித்து சாப்பிடவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த பெரியோர்கள் சொல்லுக்கு விஞ்ஞான பூர்வமாகவும் விளக்கம் கிடைத்திருக்கிறது. அதற்கு மனித முகத்தின் வடிவமும் ஒரு காரணம் என்கிறது. மனித முகத்தில் மண்டை ஓட்டின் அமைப்பு கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது மருத்துவம்.

    இந்தத் தொண்டையை மேலும் 3 பகுதிகளாக பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதன்படி தொண்டையை முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை என்று 3 வகைப்படுத்துகிறார்கள். வாயிலிருந்து உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயை கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராஸிங் போல செயல்படுகிறது.

    சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். அதேபோல்தான் சுவாசப்பாதை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க்கொண்டிருக்கும். உணவுப் பாதை ரெயில்வே பாதை போல எப்போதாவதுதான் அதில் ரெயில் வரும். ஆனால் ரெயில் வரும்போது சாலை மூடப்படும். அப்படித்தான் உணவு வரும்போது, அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக்கொள்ளும். உணவு கடந்து போனதும் மீண்டும் திறந்து கொள்ளும்.



    இதற்காக கதவு போன்ற அமைப்பு இருக்கிறது. இதனால் உணவுக்குழாய்க்குள் காற்றோ, சுவாசக்குழாய்க்குள் உணவோ போய்விடாமல் தடுக்கப்படுகிறது. ஆனால் நாம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது சுவாசக்குழாய் திறக்கும். சுவாசக்குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும்போது சுவாசக்குழாய்க்குள் உணவுப்பொருள் தவறாக நுழைந்து விடும். அதை வெளியே தள்ளுவதற்காக சுவாசக்குழாய் வேகமான ஒரு விசையை உருவாக்கும்.

    அதைத்தான் புரையேறுதல் என்கிறார்கள். மருத்துவர்கள் இதனை வாட்ச்டர்க் மெக்கானிஸம் என்கிறார்கள். இந்தப் புரையேறுதல் சாப்பிடும்போது மட்டுமல்ல, சிலசமயங்களில் தூங்கும்போதும் கூட ஏற்படுகிறது. அசந்து தூங்கும்போது சிலசமயம் நம்மையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக்குழாய்க்குள் நுழைந்து விடும். மனிதர் தூக்கத்தில்தானே இருக்கிறார் என்று சுவாசக்குழாய் சும்மா இருந்துவிடாது. உடனே அந்த உமிழ்நீரை வெளியே தள்ளும்.

    இதைத்தான் தூக்கத்தில் புரையேறுதல் என்கிறார்கள். இப்படி சுவாசக்குழாய்க்கும் உணவுக்குழாய்க்கும் நேரடி தொடர்பு இருப்பதால் தான் சாப்பிடும்போது பேசக்கூடாது என்கிறார்கள். தூங்கும்போது நடக்கும் மற்றொரு முக்கியமான நிகழ்வு குறட்டை, விழித்திருக்கும்போது தாடை சதைகள் கெட்டியாக இருக்கும். தூங்கும்போது இந்தக் கெட்டித்தசை தளர்ந்து விடும். ஆழ்ந்த தூக்கத்தில் முழுமையாக கட்டுப்பாடு இழந்து சுவாசக்குழாயின் மேல் விழுந்து அழுத்தும். இதனால் தடங்கல் உண்டாகி காற்றுப்போகும் முயற்சி தடைபடும். 
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பழுத்த மாம்பழம் - 4
    சர்க்கரை - 200 கிராம்
    லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி



    செய்முறை :

    மாம்பழங்களை நன்றாக கழுவி அதன் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை விழுதை போட்டு 5 நிமிடம் வரை கிளறவும்.
        
    பிறகு அதனுடன் சர்க்கரை, லெமன் ஜூஸ் சேர்த்து ஜாம் பதம் வரும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

    ஜாம் பதம் தெரிந்து கொள்ள ஒரு சிறிய தட்டை ப்ரீஸரில் வைக்கவும். ஜாமை சிறிது எடுத்து அந்த குளிர்ந்த தட்டில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் ஜாம் உடனே ரூம் டெம்பரேச்சருக்கு வந்து விடும். அதை ஒரு விரலால் நடுவே கோடு போடவும். இரண்டு பக்கமும் ஒட்டாமல் தனித்தனியாக பிரிந்தால் அது தான் சரியான பதம். ஜாம் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். பிரிஜ்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

    தோசை, இட்லி, பூரி பிரெட்டுடன் சேர்த்து  சாப்பிட நன்றாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த தியான ஆசனங்களில் அமர்ந்து பிராணயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சியான கபால பாத்தியும் அதன்பிறகு பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்யவும்.
    ஆசனப் பயிற்சிகளை முடித்த பிறகு தியான ஆசனத்தில் அமர்ந்து இரண்டொரு நிமிடங்கள் ஓய்வு பெறவும். பிராணாயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சிகளை செய்வதற்கு பயனுள்ள எளிய தியான ஆசனம் மற்றும் தியான ஆசனங்களுக்குரிய முத்திரை இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தியான ஆசனங்களில் அமர்ந்து பிராணயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சியான கபால பாத்தியும் அதன்பிறகு பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்யவும்.

    பெயர் விளக்கம் :  ‘சுக’ என்றால் அனுகூலமான துன்பமில்லாத என்று பொருள். ஆசனம் என்றால் இருக்கை. இந்த ஆசனத்தில் அமர்வது சுலபமாகவும் சுகமாகவும் இருப்பதால் சுகாசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை : முதலில் தண்டாசனத்தில் அமரவும் பிறகு இடது, வலது காலை ஒன்றன் பின் ஒன்றாக மடக்கவும். வலது பாதம் இடது தொடையின் கீழும், இடது பாதம் வலது காலின் கீழும் இருக்கட்டும். மார்பை நிமிர்த்தவும். தலை, கழுத்து, முதுகு ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இரு கைகளையும் நீட்டி முழங்காலின் மேல் வைத்து கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும் சின்முத்திரையைப் பற்றிய விளக்கம் அடுத்து வரும் ஆசனத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்டுள்ளது.

    பயிற்சிக் குறிப்பு : பத்மாசனம், சித்தாசனம், வஜ்ராசனம் போன்ற தியான ஆசனங்களை சில நாட்கள் பழகினால்தான் அதில் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியும். ஆனால் இந்த ஆசனத்தை சாதாரணமாக எல்லோரும் செய்யலாம். அதனால் பத்மாசனம், வஜ்ராசனம் செய்ய முடியாதவர்கள் இந்த ஆசனத்தில் அமர்ந்து பிராணயாமம் செய்து பயன் பெறலாம்.

    பயன்கள் : தியானம் அல்லது பிராணாயாம பயிற்சி உடலையும், மனதையும் அதிக சிரமமோ, வலியோ இல்லாமல் சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது. 
    உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.
    குழந்தை பராமரிப்பு ஒரு கலை என்பார்கள். ஆனால் இன்றைய பெற்றோர் பெரும்பாலும் அந்த கலையில் வல்லவர்களாக இருப்பதில்லை.

    குறிப்பாக குழந்தைகளை ஊட்டச்சத்துடன் வளர்க்க வேண்டிய விஷயத்தில் நாகரிக உலகின் பெற்றோர் பலரும் தோற்றும் விடுகிறார்கள். காரணம் நிகழ்கால உலகம் ஆரோக்கியத்தை விட நாவின் கோரிக்கைக்கு அடிபணிந்து ருசிக்குத் தான் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஆனால் பழையக் காலங்களில் குழந்தைகளை ஆரோக்கியம் நிறைந்தவர்களாக பெற்றோர் வளர்த்தனர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற வகையில் பிள்ளைகளுக்கு உணவுகளை கொடுத்தனர். குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த நம் பாரம்பரிய உணவுகளை பார்த்து பார்த்து தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கினர். உடலுக்கு வலிமை தரும் கம்பு, சோளம், கேப்பை மற்றும் பயறு வகைகளை அன்றாட உணவுகளில் சேர்த்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணினர்.

    அதிலும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்களாக இருந்தனர். தாங்கள் பெற்ற ஆரோக்கியத்தை குழந்தைகளும் பெற அவர்கள் பெரிதும் முயற்சி எடுத்தனர். ஆனால், இந்த பழக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில் ஏற்பட்ட தொய்வு, நிகழ்கால தாய்மார்கள் பலருக்கும் ஆரோக்கியத்தை அட்சய பாத்திரமாய் அள்ளித்தரும் நம் பாரம்பரிய உணவுகளை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க தவறிவிட்டது.

    நவநாகரிக உலக பெற்றோர் பாக்கெட்டில் அடைத்த ‘ரெடிமேட்’ உணவுகளையும், நொறுக்குத்தீனிகளையும் தான் பெரிதும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். இல்லையென்றாலும், குழந்தைகள் அடம்பிடித்து கேட்டு நொறுக்குத்தீனிகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் விளைவு விபரீதமானதாக இருக்கிறது.

    குழந்தைகளின் எடை வயதுக்கும், உயரத்துக்கும் தொடர்பற்றதாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள் பலரும் உடல் பருமனால் பெரிதும் அவதிபட தொடங்கிவிட்டார்கள். இதற்கு பாரம்பரிய உணவுகளை புறக்கணித்து, நாகரிகம் என்ற பெயரில் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவதுதான் காரணம்.

    அதிலும் குறிப்பாக, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தினமும் உணவு உண்பதில் ஆர்வம் காட்டுவதை விட செயற்கை ரசாயன கலவைகளோடு தயாரித்து சந்தைப்படுத்தப்படும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். இதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மன அழுத்தம், கற்பதில் குறைபாடு போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கைவிடுக்கிறது.



    இன்றைய குழந்தைகள் நொறுக்குத்தீனிகளை விரும்புவதற்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. சிப்ஸ், பர்க்கர், பீட்சா, ரசாயன வகை குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்கள் வீடுகளில் தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளை தூண்டுகிறது.

    ஒரு ஆய்வு தரும் தகவல்படி, உலகம் முழுவதும் 2 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் ஒரு வருடத்தில் டி.வி., இணையதளம் உட்பட பல்வேறு ஊடகங்கள் மூலம் திரும்ப திரும்ப விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் (கிட்டத்தட்ட 2 கோடி முறை) அவற்றை ருசித்து பார்க்கும் ஆவல் அவர்களின் மனதில் உதிக்கிறது.

    அதிலும், 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மாதத்தில் சுமார் 21 நாட்கள் வரை நொறுக்குத்தீனி தொடர்பான விளம்பரங்களை காண அதிகம் ஆர்வம்காட்டுகிறார்களாம். இதுவும் நொறுக்குத்தீனிகளை அவர்கள் அதிகம் சாப்பிடுவதற்கு காரணமாக இருக்கிறது.

    நொறுக்குத்தீனிகளின் விபரீதம் உணர்ந்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம், குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் அதிக அளவுகளில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கக்கூடாது என எச்சரித்துள்ளது. மேலும், அதுபோன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்களை தடை செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது.

    இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை முக்கியம்தான். ஆனால் நாகரிக உலகின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அதை காட்டிலும் முக்கியமானது.

    நாம் உணவு விஷயத்தில் முன்னோக்கி செல்வதை காட்டிலும் பின்னோக்கி செல்வது சாலச்சிறந்தது. நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பாரம்பரிய உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க முன்வாருங்கள். அப்போதுதான் நம் பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். மனிதனின் ஆரோக்கியம் தான் படிப்பு, வேலை, விளையாட்டு என அத்தனை அம்சங்களுக்குமான அடிப்படை.

    ஆக, உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் இனி பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.

    -மாசு 
    வெயில் காலத்தில் வயிற்று கோளாறு, உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் கற்றாழை மோர் பருகலாம். இன்று இந்த மோரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிக்காத தயிர் - அரை கப்
    கற்றாழை - 4 சிறு துண்டுகள்
    இஞ்சி - சிறு துண்டு
    பெருங்காய தூள் - சிறிதளவு
    கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கற்றாழைத்துண்டுகளை நீரில் பத்து முறை நன்கு கழுவ வேண்டும். இல்லையென்றால் கசக்கும்.

    மிக்ஸியில் இஞ்சித்துண்டை தூளாக்கிய பின் கற்றாழைத்துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தயிர், பெருங்காய தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைத்து அதில் பின்னர் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும். (தயிர் அரைத்த பின் கற்றாழைப் போட்டால் கற்றாழை நன்றாக அரையாது).

    இதனை டம்ளரில் ஊற்றி அதில் கொத்துமல்லித் தழை போட்டு பருகவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு அடைவதில் உண்டாகும் தடைகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மையமானது நவீன செயற்கை முறை கருத்தரித்தலுக்காக அனைவராலும் நம்பிக்கையுடன் அணுகப்படும் மருத்துவமனையாக விளங்கி வருகிறது. தம்பதிகளின் பிரச்சினையை கச்சிதமாக கண்டறிந்து, அதற்கான தக்க ஆலோசனைகள் மற்றும் முறையான சிகிச்சைகளை அளித்து குழந்தை பேறு அடைய செய்வதே எங்கள் குறிக்கோள் என்று அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணன் லட்சுமணன் தெரிவித்தார்.

    சமீபத்தில் சென்னை ஏ.ஆர்.சி. மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர். சரவணன் லட்சுமணன் மற்றும் டாக்டர் மகாலட்சுமி சரவணன் ஆகியோர் சாதனை நிகழ்த்தி உள்ளனர். அதாவது, குழந்தைப்பேறு அடைவதில் ஆண்களுக்கு உள்ள குறைபாடுகள், அவர்களது ஆரோக்கியம், அதற்கான விழிப்புணர்வு ஆகியவை குறித்து வீடியோ காட்சி பதிவுகளில் பல்வேறு அரிய ஆலோசனைகளை வழங்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

    மேற்கண்ட கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய ‘யூ-டியூப்’ வீடியோ காட்சிகளை உலக அளவில் நூற்றுக்கணக்கான நாடுகளில், 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்கள். அந்த வீடியோ பதிவுகளுக்காக ஏ.ஆர்.சி மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர் சரவணன் லட்சுமணன் மற்றும் டாக்டர் மகாலட்சுமி சரவணன் ஆகியோருக்கு ‘ஏசியா புக் ஆப் சாதனை’ விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

    தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு அடைவதில் உண்டாகும் தடைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றி டாக்டர் சரவணன் லட்சுமணன் அளித்த ஆலோசனைகள் வருமாறு :

    திருமணமான தம்பதிகள் இயற்கையான குழந்தைப்பேறு கிடைக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்..?

    30 வயதுக்குள் திருமணமான தம்பதிகள் இயற்கையான குழந்தைப்பேறுக்காக ஒரு வருட காலம் காத்திருக்கலாம் என்பது பொதுவானது. அதுவே, தம்பதிகளுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருந்தால் அவர்கள் ஆறு மாதங்கள் வரை பார்த்து விட்டு அதன் பின்னர் தக்க மருத்துவ ஆலோசனைகளை நாடலாம். ஆனால், தம்பதிகளுக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் தக்க மருத்துவ ஆலோசனையை நாடுவதே பாதுகாப்பான முறையாகும்.

    இன்றைய காலகட்டத்தில் நிறைய தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிடைப்பதில் ஏன் காலதாமதம் உண்டாகிறது..?

    முன்பெல்லாம் திருமணம் என்பது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 25 முதல் 30 வயதுக்குள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இன்றைய நாகரிக வளர்ச்சிகள் காரணமாக, இன்றைய சூழலில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் 30 முதல் 35 வயதுக்குள் திருமணம் செய்வது வழக்கமாகி விட்டது. குழந்தைப்பேறு என்பது வயது சார்ந்து செயல்படக்கூடிய காரணியாக உள்ள நிலையில், தக்க வயது கடந்த தாமத திருமணங்கள் குழந்தைப்பேறுக்கு முக்கியமான தடையாக அமைகிறது. குறிப்பாக, கல்வி, தொழில் மற்றும் உத்தியோகம் போன்றவற்றால் ஏற்படும் மனோ ரீதியான பாதிப்புகள் உடல் சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உணவுப்பழக்கம் போன்ற காரணங்களும் தடைகளாக அமைந்திருக்கின்றன.

    பழைய காலத்தை ஒப்பிடும்போது இப்போது, இயற்கையான குழந்தை பிறப்பில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவ ரீதியான காரணங்கள் எவை..?

    இன்றைய காலகட்டத்தில் சராசரியை விடவும் கூடுதலாக உடல் எடை உள்ள பெண்கள் குழந்தைப்பேறு தாமதம் காரணமாக எளிதில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவது, மாதவிடாய் கோளாறுகள், கருமுட்டை போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களும் காரணங்களாக உள்ளன. ‘பிரி மெரிட்டல் கவுன்சிலிங்’ என்று சொல்லப்படும் திருமணத்துக்கு முன்பு தக்க மருத்துவ ஆலோசனைகளை பெற்று அவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த சிக்கலுக்கு எளிதாக தீர்வு காண இயலும்.

    இன்றைய மருத்துவ ரீதியான செயற்கை கருத்தரித்தல் முறைகள் பற்றி ..?

    மருந்துகள் மூலம் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது, ஆரம்ப கட்ட சிகிச்சை முறையான ஐ.யு.ஐ (I.U.I Intra Uterine Insemination), பாதிப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் IVF மற்றும் ICSI போன்ற நவீன சிகிச்சை முறைகள் உள்ளிட்ட அணுகுமுறைகள் மருத்துவ உலகில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

    தாய்மை கனவை நனவாக்கும் நவீன மருத்துவம்

    கருத்தரித்தலில் உள்ள குறைகளை அகற்றும் 3D லேப்ரோஸ்கோபி சிகிச்சை முதலில் சென்னை பிரசாந்த் ஆராய்ச்சி மையத்தில் உபயோகப்படுத்தப் பட்டது என்று தெரிவித்த மருத்துவர் கீதா ஹரிப்பிரியா, கருத்தரித்தல் குறைபாடுகளுக்கான பல்வேறு அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றி தெரிவித்ததாவது ERA இந்த முறையின் மூலம் கர்ப்பப்பையின் உள் சுவருக்கு, கருவை எந்த நாட்களில் ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிக அளவில் உள்ளது என்ற தகவலை துல்லியமாக கண்டறிய முடிகிறது.

    CYSTOPLASMIC TRANSPER_ இந்த பிரத்தி யேக வழிமுறையை வயதான பெண்கள் அல்லது பல தடவைகள் I----VF முறையில் தோல்வியுற்ற பெண்கள் ஆகியோருக்கு தானமாக பெறப்படும் கருமுட்டையிலிருந்து MITOCHONDRIA என்ற ஊக்க பொருட்களை மட்டும் பெற்று, தங்களுடைய மரபணுக்களைக்கொண்ட குழந்தைகளையே பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    PRP இந்த முறையின் மூலமாக மாதவிடாய் நின்றுபோகும் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கும்கூட, தக்க கருமுட்டையினை உருவாக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்படி செய்ய முடியும். குறிப்பாக, இந்த முறையில் கர்ப்பப்பை உள்புற சுவர் வளரவும், விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 
    பாலியல் பலாத்காரங்களில் சிக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பாலியல் பலாத்காரங்களில் சிக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    நாடு முழுவதும் கடந்த 2004-ம் ஆண்டு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 19.9 சதவீதம் சிறுமிகள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

    2005-ல் இது 22.2 சதவீதமாகவும், 2006-ல் 25.6 சதவீதமாகவும் அதிகரித்தது. 2007-ல் 24.7 சதவீதமகவும் 2008-ல் 25.4 சதவீதமாகவும், 2009-ல் 25.1 சதவீதமாகவும், 2010-ல் 25 சதவீதமாகவும், 2011-ல் 29.8 சதவீதமாகவும், 2012-ல் 36.5 சதவீதமாகவும், 2013-ல் 39.4 சதவீதமாகவும், 2014-ல் 38.6 சதவீதமாகவும், 2015-ல் 32.8 சதவீதமாகவும், 2016-ல் 43.2 சதவீதமாகவும் இருந்தது.

    சில ஆண்டுகளில் மட்டும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் குறைந்த போதிலும், மொத்தத்தில் அதிகரித்தே வருகிறது.

    2016-ம் ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 165 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில் 18 ஆயிரத்து 552 வழக்குகளில் விசாரணை முடிந்து 4,739 பேர் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, 25.5 சதவீதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு உள்ளனர். 13 ஆயிரத்து 813 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    அதே 2016-ம் ஆண்டு நிலவரப்படி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரத்து 739 வழக்குகள் இருந்தன. இதில் 22 ஆயிரத்து 763 வழக்குகளில் விசாரணை முடிந்து 6,991 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள். அதாவது 30.7 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர். 15 ஆயிரத்து 772 வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 
    கோடையில் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் சில பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கோடையும் வசந்தம் தான். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    இப்பொழுது வெயில் காலம் ஏற்பட்டுவிட்டது. இதில் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் நீர்சத்து குறையலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிடும். இதனால் அடிக்கடி சிறுநீர் செல்ல நேரிடும் இது மேலும் நீரின் அளவினை உடலில் குறைக்கும்.

    அதிக சூடு இல்லாமல் இருக்க உங்களை வீட்டுக்குள்ளேயே அடையச் செய்யக்கூடாது. காலை, மாலைகளில் வெளியே வாருங்கள். நடை பயிற்சி செய்யுங்கள். இன்சுலின், மருந்து இவை அதிக உஷ்ணம், உரையும் குளிர் இரண்டிலும் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு என்பதை அறியுங்கள். ஆகவே மருந்துகளை பாதுகாப்பாக வையுங்கள்.

    * நன்கு தண்ணீர் குடியுங்கள். கை அருகிலேயே தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். அடிக்கடி சிறிது நீர் குடியுங்கள்.

    * வெயில் காலம் என்பதால் உங்கள் சர்க்கரை அளவினை வீட்டிலேயே அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள். அதன்படி இன்சுலின் உபயோகப்படுத்துங்கள். (இன்சுலின் உபயோகிப்பவர்களுக்கு மட்டும்)

    * மருந்து கைவசம் கை பையில் இருக்கட்டும்.
    * சிறிய உணவு கைவசம் இருக்கட்டும்.
    * தலை தொப்பி, கறுப்பு கண்ணாடி இவை வெளியில் செல்லும்பொழுது அவசியம் அணியுங்கள்.
    * வெயில் உங்கள் சருமத்தினை எரிக்காத வகையில் தகுந்த பருத்தி ஆடைகளை உடலை மூடி அணிந்து கொள்ளுங்கள்.

    அவ்வளவு தான். கோடையில் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் இந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கோடையும் வசந்தம் தான்.
    மூட்டு வலி என்பது நம் வீட்டில் பலரிடம் நாம் கேட்கும் மிக சாதாரண வார்த்தை ஆகிவிட்டது. ஆர்த்லைட்டிஸ் என்ற இந்த வார்த்தைக்கு கீழ் 100 வகை பிரிவுகள் இருக்கின்றன.

    இந்த மூட்டு வலிக்கு கிருமி தாக்குதல், புகை பிடித்தல், முன்பு ஏற்பட்ட அடி, பரம்பரை உடலில் அதிக எடை என பல காரணங்கள் இருக்கக் கூடும். பல காரணங்களின் சேர்க்கையாகவும் இருக்கக் கூடும்.

    ஆனால் நமது வாழ்க்கை முறை மூட்டுவலி தவிர்க்கப்பட உதவும், பாதிப்பு  ஏற்பட்டால் மறு வாழ்க்கை முறைதான் கூடவோ, குறையவோ காரணமாக அமையும்.

    மூட்டு வலி எனும் பொழுது வலி வீக்கம், மூட்டுக்களை அசைப்பதில் கடினம் என இருக்கும். ஆக வரும் முன் காப்பதே எதிலும் சிறந்த பாதுகாப்பாக அமையும்.

    * உடற்பயிற்சி: இன்னமும் இதனை கடை பிடிக்காத மக்கள் கோடானு கோடி உள்ளனர். உடற்பயிற்சி உடல் நலன், மன நலனைக்காக்கும். என்பதோடு மூட்டு பாதுகாப்பிற்காக  ஆலோசனை பெற்று செய்யும் பயிற்சிகள் வெகுவான பலனை அளிக்கின்றது என ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

    * மருத்துவர்களை தவிர்த்தல்: பலர் மருத்துவர்களை சந்திப்பது என்றாலே அஞ்சுவர். கையில் கிடைக்கும் மாத்திரையினை எடுத்துக் கொண்டு பிரச்சினைகளை பெரிதாக்கிக் கொள்வர்.

    கோடை காலத்தில் கடற்கரை பகுதிக்கு அருகில் இருப்பவர்களுக்கு வெயிலும், பிசுபிசு வென்ற உணர்வும் வியர்வையும், காற்றின் ஈரப்பதத்தில் மாறுதலும் இருப்பதால் மூட்டு வலி பாதிப்புடையவர்கள் தனக்கு  பாதிப்பு கூடுதலாக இருக்கிறதென்றே சொல்வார்கள். பொதுவில் மிதான உஷ்ணம் மூட்டு வலி பாதிப்பு உடையவர்களுக்கு குறைந்த வலியினையே கொடுக்கும்.

    என்றாலும் மேற் கூறப்பட்டுள்ள காரணங்களால் இவர்கள் வலி கூடுவது போல் உணரலாம். அதிக வெய்யில் நேரத்தில் வீட்டுக்குள் இருத்தலும் காலை, மாலை நேர உடற் பயிற்சி, தேவையான அளவு நீர் குடித்தல், மருத்துவர் அளித்த மருந்து இவை மூட்டுவலி குறைய கண்டிப்பாய் உதவும்.

    நாள்பட்ட மலச்சிக்கல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், அதிக காரம், மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மூலநோய் வருகிறது.

    நாள்பட்ட மலச்சிக்கல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், மலம் கழிக்க கஷ்டப்படுதல், நீண்டநாள் வயிற்றுப்போக்கு, ஆசன வாயில் ஏற்படும் நோய்த் தொற்றுகள், அதிக காரம், மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது போன்ற காரணங்களால் மலக்குடல் அழுத்தத்திற்கு ஆளாகி மூலநோய் வருகிறது.

    மூல நோயின் அறிகுறிகள்?

    ஆசன வாயில் அரிப்பு ஏற்படுதல், வலியுடன் மலம் கழித்தல், மலத்துடன் இரத்தம் கலந்து வருதல், மலம் கழிக்கும் போதும், கழித்த பிறகும் தாங்க முடியாத எரிச்சல் மற்றும் வலி எற்படுதல், ஆசன வாய்ப்பகுதியில் பட்டாணி அளவிற்கோ அல்லது அதற்கு மேலோ மலக்குடல், முளை போல் வெளித்தள்ளுதல் போன்றவையே.

    மூலநோய் வராமல் தடுக்கும் வழிகள்?

    மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் முடிந்த அளவு சீக்கிரமாக மலம் கழித்து விட வேண்டும். அதிகபடியான காரம், மசாலா உணவுகளை சாப்பிடக்கூடாது. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதை தவிர்க்க வேண்டும்.
    மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.
    மோரில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், விட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும். வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும். மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.



    இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.

    மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர். மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.

    கோடை காலத்தில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும். ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது.
    ×