என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    சில பெண்களுக்கு கால் பகுதிகளில் குறிப்பாக தொடையில் அதிகளவில் சதை காணப்படும். இவர்கள் வீட்டில் இருந்தபடி ஒரு சில பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    ஒரு சில பெண்களுக்கு கால் பகுதிகளில் குறிப்பாக தொடையில் அதிகளவில் சதை காணப்படும். இதில் அவர்கள் எந்த உடை போட்டாலும் பார்க்க நன்றாக இருக்காது. இவர்கள் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கால் பகுதிகளில் உள்ள அதிகப்படியாக சதை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

    அவ்வாறு நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடி ஒரு சில பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அவை முறையே.... தரையில் ஒருக்களித்துப் படுத்துக்கொள்ளுங்கள். வலது கையை தலையின் அடியில் வைத்துக்கொண்டு இடது கையை மார்புக்கு நேரே தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள்.

    வலது காலை 'எல்’ வடிவத்தில் மடித்து வையுங்கள். மூச்சுக் காற்றை உள் இழுத்தபடி இடதுகாலை மேலே உயர்த்துங்கள். மூச்சுக் காற்றை வெளியே விட்டபடி காலைத் தரையோடு தரையாக இறக்கி விடுங்கள். இதேபோல் 10 தடவை செய்யுங்கள். நன்கு பழகிய பிறகு 25 முறை செய்யலாம். இதை ஒரு பக்கமாகச் செய்தால் மட்டும் போதும்.

    இடது காலை உயர்த்தி இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டியது இல்லை. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் உங்கள் கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைவதை காணலாம்.

    பலன்: இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியை பலப்படுத்தும். பிரசவ நேரத்தில் முதுகு இடுப்புப் பகுதிகளில் ஏற்படும் சிறு வலிகளை தடுக்கும். தொடை இடுப்புத் தசைகளை இலகுவாக்கும். கர்ப்ப நேரத்தில் பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை விரட்டும். 
    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. அதுவே காயத்தின் வீரியத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் முதல்கட்ட சிகிச்சையாகும். தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

    விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால், இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக் கொள்ளக்கூடாது.

    தீப்புண்ணில் கிருமிகள் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். எனவே பிறர் கைகளில் உள்ள அசுத்தம் மற்றும் கிருமிகள் தாக்குதல் புண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

    கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூடி பாதுகாக்க வேண்டும். இது வலியை குறைக்கும்.

    தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.

    தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக்கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெய்யை மேலும் பரவச் செய்துவிடும்.

    ஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி தீயைப் பரவவிடாமல் அணைக்கலாம். அல்லது கம்பளி, ஜமுக்காளம் போன்ற தடிமனானத் துணியைக்கொண்டு பாதிக்கப்பட்டவர் மீது போர்த்தி தரையில் உருளச் செய்தாலும் தீ அணைந்துவிடும்.

    வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கைத்தவறி உடம்பில் பட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் பாகம் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான சமயங்களில், பாதிக்கப்பட்ட இடத்தில் ரசாயனக் கலவையான பேனா மை, காபி பொடி போன்றவைகளை பூசக்கூடாது. இது மேலும் புண்களில் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

    தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளங்களைக் கூரிய பொருட் களால் குத்தி உடைப்பதும் தவறானது. இதுவும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

    தீக்காயத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மேல் தோல் மட்டும் சிவந்துவிடுதல் முதல் நிலைப் பாதிப்பு. தோலின் மேல் கொப்புளங்கள் உண்டாவது இரண்டாம் நிலை. மேல் தோல், கீழ் தோல், அதற்கு அடியில் உள்ள திசுக்கள் வரையிலும் ஆழமாகத் தீயால் கருகிவிடுவதை மூன்றாம் நிலை என்கிறார்கள்.

    தீப்பிடித்தவர் பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடினால், தீயின் வேகம் கூடி பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே, பதற்றப் படாமல் கவனமாக அவரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்டவரின் உடம்பில் சுத்தமான காற்று படுமாறு பார்த்துக்கொள்வது நல்லது. ஒருபோதும் தீக்காயத்தின் மீது சோப் உபயோகித்து கழுவது கூடாது.

    எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள். 
    பலருக்கு இந்த க்ளூடன் புரதம் எந்த தொந்தரவும் செய்வதில்லை. ஆனால் சிலருக்கு க்ளூடன் அலர்ஜி, குடல் பாதிப்பு நோய் போன்றவையை ஏற்படுத்துகின்றன.
    இப்பொழுது அடிக்கடி, பேசப்படும் ஒரு வார்த்தை ‘க்ளூடன்’ அலர்ஜி என்பதாகும். ‘க்ளூடன்’ என்பது என்ன? இது ஒரு புரத குடும்பம். நம் ஊர் தானிய பிரிவில் கோதுமை, பார்லி பிரிவில் இருப்பது. இதில் கோதுமை உணவு தென்னகத்திலும் பொதுவான உணவாகி விட்டது. இந்த க்ளூடனில் உள்ள க்ளூடனின் மற்றும் கலையாடின் புரதத்தில் தான் அதிக உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்கின்றனர்.

    கோதுமை மாவினை தண்ணீர் ஊற்றி பிசைந்தவுடன் இந்த க்ளூடன் புரதம் வழுவழுப்பான தன்மையினைத் தருகின்றது. இந்த கோதுமை ‘பிரெட்’ தயாரிப்பிலும் வெகுவாய் பயன்படுத்தப்படுகின்றது.

    பலருக்கு இந்த க்ளூடன் புரதம் எந்த தொந்தரவும் செய்வதில்லை. ஆனால் சிலருக்கு க்ளூடன் அலர்ஜி, குடல் பாதிப்பு நோய் போன்றவையை ஏற்படுத்துகின்றன.
    சீலியக் நோய் என்பது கடும் நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படுவது.

    கோதுமை அலர்ஜி என்பது அதிக ஆபத்தில் கொண்டு விடலாம். மூச்சு விடுவதில் சிரமம், நினைவின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

    க்ளூடன் ஒவ்வாமை

    * வயிற்று வலி, * உப்பிசம், * மலச்சிக்கல், * வயிற்றுப் போக்கு, * சோர்வு, * தலைவலி, * வயிற்றுப் பிரட்டல், * தைராய்டு பிரச்சினை, * ரத்த சோகை, * படபடப்பு, * மனச்சோர்வு, * மூட்டு வலி, * தசை வலி.
    போன்ற அறிகுறிகளைக் காட்டும்.

    க்ளூடன் இல்லாத உணவு வகைகள்:-

    * அரிசி, * சோளம், * சோயா, * உருளை, * பீன்ஸ், * சிறுதானியங்கள், * ஆரரூம், * கொட்டை வகைகள், * ஓட்ஸ், * முட்டை, * காய்கறிகள், * பழங்கள், * பால்-பால் பிரிவு போன்றவை ஆகும்.

    க்ளூடன் ஒவ்வாமை உடையவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.

    * பிஸ்கட், * பிரட், * கேக், * சாக்லேட், * மால்ட் பானங்கள், * பிஸ்தா, * பீட்சா, * கோதுமை, * பார்லி போன்றவை ஆகும்.

    இப்பொழுது ‘க்ளூடன்’ இல்லாத உணவு வகைகள் பல வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எதனையும் மருத்துவ ஆலோசனை பெற்று பின்னர் பயன்படுத்துவதே சிறந்த வழியாகும். 
    தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சிக்கன் தோரன் அருமையாக இருக்கும். இன்று இந்த சிக்கன் தோரனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் துண்டுகள் - அரை கிலோ (சிறியதாக நறுக்கியது),
    வெங்காயம் - 2 கப்,
    பூண்டு - 2 தேக்கரண்டி,
    இஞ்சி - 2 தேக்கரண்டி,
    பச்சை மிளகாய் - 8,
    சிக்கன் மசாலா பொடி - 2 தேக்கரண்டி,
    நல்ல மிளகு பொடி -1 கப்,
    சீரகம் - 1 தேக்கரண்டி,
    தேங்காயம் (துருவியது) - 1 கப்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - ½ கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 1 தேக்கரண்டி,
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
    பிரியாணிஇலை - சிறிதளவு.



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.

    இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    இப்போது 2 கப் நீர் சேர்த்து., அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வேக வைக்கவும்.

    நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும்.

    பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

    இப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று வலி ஏற்படும் பகுதியை வைத்து என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். அதன் பின்னர் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
    வயிறு வலிக்கும் உங்கள் உடல் உறுப்பில் உள்ள பிரச்னைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. நம் வயிறு ஈரல், கல்லீரல், மண்ணீரல், சிறு குடல், பெருங்குடல், மலக் குடல், கணையம், சிறுநீரகம், சிறுநீர் பை, விந்துப் பை, சின்னப்பை உள்ளிட்ட உறுப்புகள் அடங்கியுள்ளன. நம் வயிறு எந்த பகுதியில் வலிக்கின்றதோ, அப்பகுதியில் உள்ள உறுப்பில் பிரச்சனை உள்ளது என்று நாமே கண்டுபிடிக்கலாம்.

    * மேல் வயிறு வலது மூலையில் வலியாக இருந்தால் ஈரல் மற்றும் பித்தப் பை கல் சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம்.

    * மேல் வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்

    * அடிவயிறு வலது மூலை வலித்தால் அது அப்பண்டிஸ்



    * அடிவயிறு நடுவில் வலித்தல் சிறுநீர்ப்பை வீக்கம், கர்பப்பை பிரச்னைகள்

    * அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்

    * நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி இருந்தால் நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன் பிரச்னை

    * தொப்புளை சுற்றி வலி இருந்தால் ஃபுட் பாய்சனாக இருக்கலாம்

    இப்படி வலி ஏற்படும் பகுதியை வைத்து நாமே என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம். 
    பெண்களின் அழகை கெடுக்கும் முக்கியமான விஷயம் கருவளையம். இங்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த கண் கருவளையத்தை சரிசெய்யும் முறைகளை காணலாம்.
    பெண்களின் அழகை கெடுக்கும் முக்கியமான விஷயம் கருவளையம். இங்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த கண் கருவளையத்தை சரிசெய்யும் முறைகளை காணலாம்

    தக்காளி ஜூஸை ஒரு டீ ஸ்பூன் எடுத்து, கருவளையம் இருக்கும் பகுதிகளில் தடவி, 10 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் காலை மாலை இருவேளைகளும் செய்துவர விரைவில் கருவளையம் சரியாகும்.

    துருவிய உருளைக்கிழங்கிலிருந்து சாறு எடுத்து, அதில் பஞ்சை ஊற வைத்து, அதை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். 10 நிமிடத்திற்கு பின், குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி வர கருவளையம் போய் விடும்.

    டீ பேக்குகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்தாலும் கண் கருவளையம் சரியாகும்.



    பாதாம் எண்ணெயை கொண்டு முகத்தில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு விட்டு, காலையில் கழுவி வர, அதில் இருக்கும் வைட்டமின் ஈ சக்தி, கருவளையத்தை போக்குகிறது.

    தினமும் குளிர்ந்த பாலில், பஞ்சை நனைத்து, கருவளையத்தில் தேய்த்து வர, கருவளையம் நீங்கி முகப்பொழிவு கூடும்

    வெள்ளிரிக்காயை ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்த பின் எடுத்து, அதை 10 நிமிடம் கருவளையத்தில் வைத்து வர முகம் புத்துணர்ச்சியடையும்.

    புதினா இலையை நீர் சேர்த்து விழுதாக அரைத்து அதை ஒரு வாரம் இரவு முழுவதும் கருவளையத்தில் தடவி வர ஆச்சரியப்படத்தக்க முகப்பொழிவு கிடைக்கும்.

    ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, முகத்தில் ஒரு 15 நிமிடம் ஊற வைக்க முகப்பொழிவு கிடைக்கும். இவ்வாறு ஒரு மாதம் இரவு செய்ய வேண்டும்.
    இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வாத்துக்கறி குழம்பு சூப்பராக இருக்கும். இன்று வாத்துக்கறி குழப்பை வேலூர் ஸ்டைலில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாத்துக்கறி - 1 கிலோ
    சின்ன வெங்காயம் - அரை கிலோ
    தக்காளி - 4
    தேங்காய் துருவல் - 1 கப்
    இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - 4
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தவாவில் சிறிது எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கி ஆற வைத்து, பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    துருவிய தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது, பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த வாத்துக்கறி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.

    பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.

    வாத்துக்கறியிலிருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி எட்டு முதல் பத்து விசில் வரை விட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூடான, டேஸ்டான வேலு}ர் வாத்துக்கறி குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நேர்முகத் தேர்வில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகள் என்ன? அதை திருத்திக் கொண்டு வெற்றிபெறுவது எப்படி? என்பது பற்றி இங்கு காண்போம்...
    நேர்முகத்தேர்வு வாழ்வின் அடுத்த அத்தியாயத்தின் வாசல் கதவு. முறையான புரிதலுடன் நேர்முகத்தேர்வை அணுகுபவர்களுக்கு மட்டுமே அந்தக் கதவு திறந்து வாழ்வில் புதிய வழி பிறக்கிறது. வேலையில் சேர கனவுகளோடு காத்திருக்கும் பலருக்கும் நேர்முகத்தேர்வு என்றாலே சிறிது அச்சமும், பதற்றமும் இருக்கலாம். சரியாக திட்டமிடாததால் நேர்முகத் தேர்வில் கோட்டை விட்டவர்கள் பலர் உண்டு. நேர்முகத் தேர்வில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகள் என்ன? அதை திருத்திக் கொண்டு வெற்றிபெறுவது எப்படி? என்பது பற்றி இங்கு காண்போம்...

    பணி, பணியிடம் பற்றி அறியாதிருத்தல்:

    நேர்முகத் தேர்விற்கு செல்லும் பலரும் கண்டுகொள்ளாத மிக முக்கியமான விஷயம் இது. தாங்கள் செல்லும் அலுவலகம் மற்றும் பணி பற்றிய தகவல்கள் ஏதும் அறியாமல் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வது பலரது வாடிக்கை. இப்படிச் சென்றால் மேலாளர் உங்களுக்கு பணியின் மீது ஆர்வம் இல்லை என்று எண்ணக் கூடும். எனவே பணி, பணியிடம் என அலுவலகம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது மேலாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய உதவும்.

    தாமதமாக செல்லுதல்:


    சிலருக்கு, இது சாதாரணமான விஷயமாக தெரியலாம். ஆனால் நீங்கள் காலத்தின் முக்கியத்தை எந்த அளவிற்கு உணர்ந்து செயல்படுகிறீர்களோ, அந்த அளவிற்கு மேலாளரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க உதவும். எனவே நேர்முகத்தேர்வுக்கு தயாராகும் போதே தேர்விற்கு செல்லும் இடம், போக்குவரத்து, புறப்படும் நேரம் என எல்லாவற்றையும் குறித்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே அங்கு இருப்பதற்கு ஏற்ற வகையில் விவேகமாக செயல்படுங்கள். ஏனெனில் உங்கள் எதிர்கால பயணத்திற்கு ‘டிராபிக்’ ஒரு தடையாகி விடக்கூடாது.

    மிடுக்கான உடை:

    நேர்முகத்தேர்வை பொறுத்தமட்டில் ஆடையின் பங்கு என்பது மிக முக்கியமானது. பார்த்தவுடன் உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவது உங்கள் உடைதான். எனவே டீ-சர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அறவே தவிர்த்துவிடுங்கள். மிடுக்கான உடையை நேர்த்தியாக அணிந்து செல்லுங்கள்.

    பேசும் விதம்:

    உங்கள் குணநலனை பற்றி மேலாளருக்கு உணர்த்துவது நீங்கள் பேசும் விதம்தான். பலரும் எங்கோ பார்த்தபடி அல்லது குனிந்தபடி பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதிகாரிகள் கேள்வி கேட்கும் போதும் சரி, நீங்கள் பதில் சொல்லும் போதும் சரி, நேராக தேர்வாளரின் கண்களை பார்த்து பேசினால்தான் நீங்கள் தைரியமான திறமையான நபர் என்று அவர் அறிந்து கொள்ள முடியும். மேலும் நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளும் அவர்கள் கேட்டுகேட்டு சலிப்படைந்த வார்த்தைகளாக இல்லாமல் புதிய ஈர்ப்புடைய வார்த்தைகளாக இருந்தால் உங்களால் நிச்சயம் அவர்களை கவர முடியும்.



    கேள்வி கேட்பது:

    பொதுவாகவே நேர்முகத்தேர்வில் பங்கேற்பவர்களிடம் அங்குள்ள அதிகாரிகள் நீங்கள் ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் கேட்க விரும்புகிறீர்களா? என்று கேட்பார்கள். அதற்கு பலரும் இல்லையென்று நழுவிக் கொள்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவ்வாறாக இல்லாமல் உங்கள் மனதில் தோன்றும் நியாயமான கேள்வி, சந்தேகங்களை கேட்டால் நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிவீர்கள். மேலும் அதிகாரிகள் உங்களை தேர்வு செய்வதற்கு இது தூண்டுதலாக அமையும்.

    செல்போனை அணைப்பது:

    நேர்முகத்தேர்வு அறைக்குள் செல்லும் முன் கூடுமானவரை உங்கள் செல்போனை அணைத்து வைத்து விடுவது சிறந்தது. முடியாத பட்சத்தில் அதை ஒலிஅற்ற நிலையிலாவது (சைலண்ட் மோடு) வைத்திருங்கள். இது உங்களுக்கும், அங்குள்ள பிறருக்கும் கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க உதவும். நன்மதிப்பையும் பெற்றுத் தரும்.

    பொய் கூறுதல்:

    ஒரு ஆய்வில் நேர்முகத்தேர்விற்கு செல்வோர் அளிக்கும் சுயவிவரங்களில் பலர் பொய்யான தகவல்களை அளிப்பதாக தெரிய வந்துள்ளது. வலைத்தளத்தில் இருந்து ஏதாவது ஒரு ரெஸ்யூமை ‘காப்பி’யடிப்பது பலரது பழக்கமாக உள்ளது. அதில் பெயர், முகவரி போன்றவற்றை மட்டும் திருத்தி பெரும்பாலானோர் தங்களது ரெஸ்யூமை தயார் செய்கின்றனர். அப்போது சில முக்கிய விவரங்களை நீக்காமலும், உயர்த்தி சொல்வதற்காக உண்மையற்ற சில விவரங்களை குறிப்பிட்டும் வைக்கிறார்கள். இப்படி தேவையற்ற தகவல்களை குறிப்பிடுவது பலரின் நேர்காணலை முடித்து வைத்திருக்கிறது.

    போலியாக குறிப்பிட்ட விஷயங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்போது மாட்டிக் கொண்டவர்கள் பலர். உதாரணமாக பாப் மியூசிக்கை ரசிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தால், அதுபற்றிய கேள்விகளுக்கும் விடையளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பொழுதுபோக்கு விஷயமான இதிலிருந்தா கேள்வி கேட்பார்கள் என்று தேவையற்ற விவரங்களை கொடுத்துவிட்டு பதில் தெரியாமல் அவஸ்தைப்படக்கூடாது. இதுபோல சாதாரணமான விஷயங்களிலும் உண்மையான விவரங்களையே பதிவு செய்ய வேண்டும். அதுவே உங்களைப் பற்றிய நல்லெண்ணத்தை தோற்றுவிக்கும். வெற்றிக்கு வித்திடும்.

    மேற்காணும் தவறுகளை பொறுப்புடன் உணர்ந்து திருத்திக் கொண்டால், நீங்கள் நேர்காணலில் ஜெயிக்கப்போவது நிஜம்! 
    வாயுக்கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்தும் அக்னி சார தௌதி செய்வதற்குரிய வஜ்ராசனம் மற்றும் ஜாலந்தர பந்த் பயிற்சி முறையை பார்ப்போம்.
    அக்னி சார தௌதி செய்வதற்குரிய வஜ்ராசனம் மற்றும் ஜாலந்தர பந்த் பயிற்சி முறையை முதலில் பார்ப்போம்.

    வஜ்ராசனம்:

    பெயர் விளக்கம்:  தேவர்களின் தலைவரான இந்திரனின் கையில் உள்ள பலம் பொருந்திய வஜ்ராயுதம் போல இந்த ஆசனம் உடலுக்கு அதிக வலிமை அளிப்பதால் வஜ்ராசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை:  தரை விரிப்பின் மேல் அமர்ந்து, கால்கள் இரண்டையும் நேராக நீட்டி வைக்கவும்.  வலது காலை மடக்கி, வலது குதிகாலை வலது புட்டத்தின் அடியிலும், இடது காலை மடக்கி இடது குதிகாலை இடது புட்டத்தின் அடியிலும் வைக்கவும். இரு குதிகால்களுக்கு இடையில் புட்டம் இருக்கட்டும். முழங்கால்கள் இரண்டும் சேர்ந்திருக் கட்டும். பாத விரல்கள் முதல் முழங்கால்கள் வரைக்கும் விரிப்பின் மேல் படிந்திருக்கட்டும்.

    முதுகு, கழுத்து, தலை நேராக இருக்கட்டும். இரு கைகளையும் நீட்டி தொடை களின் மேல் கைவிரல் களால் சின் முத்திரை செய்யவும், முழங்கால்கள் சற்று மடங்கிய நிலையில் இருக்கட்டும், கண்களை மூடவும் உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். ஆரம்பப் பயிற்சியில் சிலருக்கு வஜ்ராசனத்தில் அமரும் போது குதிகால் பகுதியில் அதிக வலி உண்டாகலாம்.

    அத்தகையவர்கள் இரு பாதத்திற்கு அடியில் மிருதுவான துணி ஒன்றை சுருட்டி வைத்து அதன்மேல் அமர்ந்து செய்யலாம்.  அல்லது அமருவதற்கு சரியாக இருக்கும் அளவு சிறிய இருகால் மனை ஒன்றை தரை விரிப்பின் மேல் வைத்து அதன் மேல் அமர்ந்து செய்யலாம். மனையின் இடை வெளியில் கால்களும் மனையின் மேல் புட்டமும் இருக்கட்டும்.

    பயன்கள்:  இந்த ஆசனத்தினால் தொடை, முழங்கால், கணுக்கால், பாதம், உறுதி பெறும்.

    பெயர் விளக்கம்:

    ஜாலந்தர பந்த்:  ஜாலந் என்றால் வலைப் பின்னல், வலை போன்ற அமைப்பு என்றும் ‘தர’ என்றால். ஆறாகப் பாய், ஒரு தொடர் ஓட்டம் என்றும் பொருள் படுகிறது. ஜாலந்தர பந்தம் என்றால் கழுத்துப் பகுதியில் உள்ள வலை போன்ற நாடிகளில் செல்லும் பிராணவாயு மற்றும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் என்று பொருள் படுகிறது.

    செய்முறை:  வஜ்ராசனத்தில் அமரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இரு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப்பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைத்து இரு கை விரல்களாலும் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும் உடலை தளர்வாக வைத்துக் கொள்ளவும். இரு நாசிகளின் வழியாக முடிந்த அளவு மூச்சுக் காற்றை இழுத்து நிறுத்தவும். மெதுவாக தலையை தாழ்த்தி முகவாய்க்கட்டை, கழுத்துப்பட்டை எலும்பை தொகுப்பு அழுத்தி வைக்கவும். மூச்சை வெளியே விடாமல் 5 முதல் 10 வினாடி அப்படியே நிலைத்திருக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: தொண்டை மற்றும் முதுகுப் பகுதியின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.



    பயிற்சி குறிப்பு: கழுத்து நரம்புகளில் வளையும் தன்மை குறைவாக உள்ளவர்கள், முரட்டுத் தனமாக கழுத்தை வளைக்காமல் முடிந்த அளவு செய்யவும். நாள்பட சரியாக வந்து விடும்.

    எடை குறைப்பு:
    கழுத்து நரம்பு வலி, தலை கிறுகிறுப்பு, உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளவர்கள் செய்யக் கூடாது.

    பயன்கள்:
    தைராய்டு, பாரா தைராய்டு, நன்கு இயங்க உதவுகிறது. தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, அடைப்பு நீங்கும் மன அழுத்தம் படபடப்பு, கோபம் குறையும் மனம் அமைதியுறும்.

    அக்னி சார தௌதி


    பெயர் விளக்கம்: இப்பயிற்சி ஜீரண கருவிகளை தூய்மைப்படுத்தி ஜடராக்னியை விருத்தி செய்வதால் அக்னி, சார தௌதி என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும், மூச்சை ஆழமாக உள்ளுக்குள் இழுக்கவும். மூச்சை வெளியே விட்டு நுரை யீரலில் இருக்கும் காற்றை முடிந்த அளவு வெளியேற்றவும். முதுகை வளைக்காமல் சிறிதளவு முன் பக்கம் உடலை சாய்க்கவும், உள்ளங்கைகளை முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். தலையை தாழ்த்தி ஜாலந்தரபந்தம் செய்யவும். மீண்டும் மூச்சுக் காற்றை உள்ளுக்கு இழுக்காமல் இருந்து வயிற்றை சுருக்கி முடிந்த அளவு முதுகுடன் வயிற்றுத் தசைகளை ஒட்டி இருக்கும்படி செய்து உடனே வயிற்று தசைகளை விரித்து வயிற்றை அதன் இயல்பான நிலைக்கு கொண்டு வரவும்.

    இப்படியே வயிற்றுத் தசைகளை உள்நோக்கி இழுப்பதும் மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வருவதுமாக 5 முதல் 10 முறை அவரவர் தேக நிலைக்கு தக்கபடி செய்யவும், இது ஒரு சுற்று பயிற்சி ஆகும். இந்த பயிற்சியை சில நாட்கள் 3 முதல் 5 சுற்று வரை செய்யவும். நன்கு பயிற்சி பெற்ற பிறகு 10 சுற்று வரை செய்யலாம். ஒவ்வொரு சுற்றுக்கு இடையிலும் தலையை மேலே உயர்த்தி சாதாரண மூச்சுடன் சில வினாடிகள் ஓய்வு பெறவும்.

    கவனம் செலுத்தவேண்டிய இடம்:  மூச்சின் இயக்கம், வயிற்றுத்தசை சுருங்கி விரிதல் மற்றும் மணிப்புர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு:  இந்த பயிற்சியில் தொடர்ந்து வயிற்று தசைகளை சுருக்குவதும், விரிப்பதுமாக செய்யும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கக்கூடாது.

    எப்பொழுது பயிற்சி செய்யலாம்:  காலையில் வெறும் வயிற்றில் செய்யலாம். ஆசனம் அல்லது பிராணாயாமத்தின் முடிவிலும் செய்யலாம்.

    தடைக்குறிப்பு: வயிறு, குடல்புண், உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, தைராய்டு சுரப்பி அதிக அளவு இயக்கு நீரை சுரத்தல் போன்ற குறைபாடு உள்ளவர்கள் செய்யக் கூடாது.

    பயன்கள்: வயிற்றுத்தசை மற்றும் உதரவிதானம் பலம் பெறும். அஜீரணம், மலச்சிக்கல், அதிக அமில சுரப்பு நீங்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், அதிக அமில சுரப்பு நீங்கும், மந்தமாக செயல்படும் கல்லீரல், சிறுநீரகம், கணையம் நன்கு இயங்கும் ஆற்றல் பெறும், தொந்தி குறையும். வயிற்றில் உண்டாகும் வாயுக்கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்தும், சோர்வு நீங்கும், சுறுசுறுப்பு அதிகரிக்கும். மன அழுத்தம், எந்த காரியத்திலும் மந்தமாக செயல்படுதல் போன்ற குறைபாடுகளை நீக்கவும் இந்த பயிற்சி பயன்படுகிறது.
    சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிட மிகவும் உகந்தது கோதுமை ரவை தேப்லா. இன்று இந்த தேப்லாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - கால் கப்,
    கோதுமை மாவு - ஒரு கப்,
    ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் (வேண்டுமெனில்),
    ஓமம் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
    வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - அரை சிட்டிகை.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை ரவை, ஓட்ஸ், ஓமம், உப்பு, மஞ்சள் தூள், வெள்ளை மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து, 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

    மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெலிதான முக்கோணமாகச் செய்யவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் செய்து வைத்த தேப்லாவைப் போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்து தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.

    சூப்பரான சத்தான கோதுமை ரவை தேப்லா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    விளையாட்டுகளில் ஈடுபடுவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்து கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர்.
    இன்றைய மாணவர்கள் செல்போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதை போக்குவதால் விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரியாமல் இருக்கிறார்கள். இது அவர்களது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். விளையாடுவதால் ஏற்படும் நன்மைகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடும் போது அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு ஏற்படுகின்றது. குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு மாணவர், தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கிறார். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகின்றார். எனவே, அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ள நபராகவும் மாறுகிறார்.

    விளையாட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளின் போது ஒவ்வொரு மாணவரும், மற்ற மாணவர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக்கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்து கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்தவர்களாக மாற காரணமாக இருக்கின்றது.

    விளையாட்டில் ஈடுபடும் போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக்கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் சந்தர்ப்பங்களின் போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலையை அறிந்துகொள்ளல் போன்றவற்றை அவர் கற்றுக்கொள்கிறார். இவை அனைத்தும் எதிர்காலத்தில் அவர் தனது இலக்குகளை வெற்றி கொள்வதற்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றன.

    விளையாட்டில் ஈடுபடும் மாணவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் ஆகியோரை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எனவே விளையாட்டில் உண்டாகும் இந்த ஏனையோரை மதிக்கும் பழக்கம், பின்னர் மாணவரது வாழ்க்கையிலும் தானாகவே நிலைத்து நிற்கின்றது. விளையாட்டில் ஈடுபடும் போதும், அதற்கான பயிற்சிகளின் போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தும் போது அவர்கள் மீது மதிப்பு மரியாதை ஏற்படும். இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்துவதாக விளையாட்டும், அதற்கான பயிற்சியும் அமைந்துள்ளது. 
    தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
    உடல் பருமன், நமது உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில், தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.

    தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.

    அதே நேரத்தில் கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.

    அதேபோல குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணம் என்று சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.

    தைராய்டு மிகுதியாலோ, குறைவாலோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களாலோ பெண்கள் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். 
    ×