என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக் கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.
    ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக் கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தொழிலகம் அமைக்க வேண்டிய இடம், தொழில் நடத்தும் முறை, தொழிலகத்தில் பதிவு செய்தல், நிதி உதவி, உரிமம், மின் இணைப்பு, நீர்வசதி, எந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்குதல், திறமையான பணியாளர்களை அமர்த்துதல் என ஒவ்வொன்றையும் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.

    இனி பெண்களுக்கு ஏற்ற தொழில்களை பற்றி பார்ப்போம்...

    உணவு பொருட்கள்:- பெண்கள் தாங்களாகவே ஊறுகாய் தயாரிக்கலாம். இதே போல ரொட்டி, ஜாம், மிட்டாய், சிப்ஸ், கேக், சேமியா, அப்பளம், சாம்பார் பொடி, குச்சி ஐஸ், தேங்காய் பப்ஸ், சீவல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் குறைந்த முதலீட்டில் செய்ய லாம்.

    வீட்டு உபயோக பொருட்கள்:- பெண்கள் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்யலாம். இதேபோல வெள்ளை பினாயில், பல் பொடி, கிளனிங் பவுடர், ஆயுர் வேதிக் பல் பொடி, வாசனை பத்தி மற்றும் குடை, பாய், பிளாஸ்டிக் பை, வயர் கூடை, கயிறு தயாரிக்கும் தொழில் ஆகியவற்றையும் பெண்கள் செய்யலாம்.

    ஸ்டேசனரி பொருட்கள்:- பென்சில், சாக்பீஸ், பால்பென் ரீபிள், மை, நோட்டு லேமினேஷன், காகிதம், நைலான் பிரஷ், எழுது அட்டை, பைல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் தயாரிக்கலாம்.

    துணி வகைகள்:- பெண்கள், குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கலாம். டைலரிங் தொழில் செய்யலாம். துணி யில் ஸ்கிரீன் பிரிண்டிங், எம்ப் ராய்டரி, பித்தான், ஊக்கு, தலைமுடி கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவை தயாரிக்கலாம்.

    இந்த தொழில்களை செய்ய ஆலோசனை பெறவும், இது போன்ற தேவைகளுக்காக மத்திய-மாநில அரசுகள் தொழில் அமைச்சகம் மூலம் பயிற்சியும் வழங்கி வருகிறது. 
    தோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. தோல் வியாதிகளா? அது சரியாகாது என்ற நிலை இப்போது இல்லை.
    பருத் தழும்பு:

    பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகிச்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.

    தற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக் களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

    முடி பிரச்சினைகளுக்கு தீர்வு:

    இன்றைய அவசர வாழ்க்கை முறையின் பரிசாக முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை பல்வேறு நோய்களால் நமக்கு என வேண்டிய முடிகள் பாதிக்கப்படுவது அதிகரித்தும் பெண்களுக்கு வேண்டாத இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட்டு அழகு சீர்குலைவதும் அதிகமாகி கொண்டே வருவதை காண்கிறோம்.

    இவை ஏற்படுத்தும் மன உளைச்சல் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நன்கு புரியும். முடி சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண யாரை அணுகுவது? என்ற தெளிவு நன்கு படித்தவர்கள் மத்தியில் அறவே இல்லை என்றே சொல்லலாம். முடிக்கென்று தனி டாக்டர் கிடையாது. தோல் டாக்டரே முடி சம்பந்தபட்ட அனைத்து சிகிச்சைகளையும் முறையாக படித்து பட்டம் பெற்றவர்.

    தற்போது முறையாக உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த பக்க விளைவு இல்லாத புதிய மருந்து மாத்திரைகள் முடி பிரச்சினைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்த தோல் டாக்டர்கள் அறிவுரை அவசியம். முக்கியமாக முடி வியாதிகளை சரியாக கண்டுபிடிக்கவும், காரணங் களை ஆராயவும் பயன்படும் அதிநவீன கருவிகளையும் தோல் டாக்டரால் மட்டுமே இயக்க முடியும்.

    திடீர் முடி உதிர்வு:

    அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும் வாய்ப்பு உண்டு. இது தானாகவே சரியாகி விடும். பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. இருந்தாலும் தோல் மருத்துவரின் நேரடி ஆலோசனையை பெறுவது நல்லது.

    பரம்பரை வழுக்கை:

    பரம்பரை வழுக்கைக்கும் இப்போது நல்ல மருந்து மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் யூ.எஸ்.எப்.டி.ஏ. என்ற அமெரிக்க அமைப்பின் முறையான அனுமதி பெற்ற, பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாதவை. இவற்றை தோல் டாக்டரின் அறிவுரையின்படி பயன்படுத்தினால் பரம்பரை வழுக்கையை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடலாம். இந்த மருந்துகளின் வருகையால் முடி மாற்று அறுவை சிகிச்சையின் தேவை குறைந்து வருகிறது.

    பொடுகுத்தொல்லை:

    பொடுகு என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது மருத்துவ அடிப்படையில் பலவகை தலை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். காரணம் தெரியாமல் பொதுவாக ஒரு எண்ணையை தேய்ப்பது பலன் தராது.



    இளநரை:

    முடிவேரில் இருந்து முடி உருவாகும் போது அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலானின் என்ற கருப்பு நிற பொருள் சேர்க்கப்படுவதால் முடி கருமையாக வளர்கிறது. இதில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இதிலும் பல வகைகள் உண்டு. சில சத்து மாத்திரைகளை நீண்ட காலம் தோல் டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

    புழு வெட்டு:

    வட்ட வடிவில் திடீரென்று உருவாகும் முடியற்ற இடங்களை புழுவெட்டு என்று குறிப்பிடுகிறோம். தலையிலோ, மீசை தாடியிலோ உருவாகும். சிலருக்கு தலையில் பெரும் பகுதி பாதிக்கப்படலாம். சிறிய அளவிலான புழு வெட்டுக்கள் தானாகவே சரியாக வாய்ப்பு உண்டு. நீங்களாக வெங்காயம் போன்றவற்றை தேய்க்காமல் தோல் மருத்துவரை அணுகி முறைப்படி சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.

    ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சியின்மை:

    தற்போது இந்த பிரச்சினைக்காக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத்தன்மை மற்றும் ஹார்மோன் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். முறைப்படி காரணத்தை கண்டுபிடித்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் முடி வளரச் செய்யலாம்.

    தேவையற்ற முடிவளர்ச்சி:

    இளம் பெண்களுக்கு பரம்பரையாக வோ, ஹார்மோன் பிரச்சினைகளாலோ, முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி ஏற் படுகிறது. அவர்கள் தேவையற்ற முடிகளை Waxing அல்லது Threading மூலம் அகற்றினால் சீக்கிரமே மீண்டும் இன்னும் பெரிதாக வளரும். தேவையற்ற முடிகளை நீக்க உலகத்தரம் வாய்ந்த Diode Laser, Long Pulse Nd YAG Laser மற்றும் Triple Wavelength Diode Laser ஆகிய மூன்றையும் சேர்த்து பயன்படுத்தும்போது முடி நீக்கம் விரைவானதாகவும், எளிமை யானதாகவும் ஆகின்றது. இதை முறையாகச் செய்யத் தெரிந்தவர் உங்கள் தோல் மருத்துவர் மட்டுமே. லேசர் முடிநீக்கம் திருநங்கைகளுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு வரப்பிரசாதம். எங்கள் மருத்துவ மனையில் ஏராளமான திருநங்கைகள் முகத்தில் முடிநீங்கி மகிழ்வுடன் செல்வதை காண்கிறோம். இந்த லேசர் வசதி உள்ள தோல் மருத்துவ மனையை அணுகினால் நிரந்தரத் தீர்வு பெறலாம். பக்க விளைவு சிறிதும் இல்லை.

    பச்சை அகற்றுதல்:

    சிறுவயதில் ஒரு வேகத்தில் யோசிக்காமல் நெருக்கமானவர் பெயரையோ படங்களையோ பச்சை குத்திக் கொண்டவர் களுக்கு பின்பு அதுவே பெரிய தலைவலியாகி விடுகிறது. சீருடைப் பணிகளில் சேர முடியாது. திருமண வாழ்க்கையில் விவாகரத்து வரை ஏற்படுத்தக் கூடிய சிக்கல்கள் இவற்றால் உடைந்த திருமணங்கள் பல. தற்போது எங்கள் மருத்துவமனையில் பச்சை அகற்றுவதற்கென்றே அதிநவீன Nano Second மற்றும் Pico Second Q-Switched Nd YAG Laser கருவி கள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. இவற்றின் மூலம் தோலுக்கு பாதிப்பு இல்லாமல் பச்சையை அகற்றலாம். இது தென் தமிழக மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமாகும்.

    இது மட்டும் இல்லாமல் தோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. தோல் வியாதிகளா? அது சரியாகாது என்ற நிலை இப்போது இல்லை.

    இவ்வாறு டாக்டர். எம்.எஸ். ஆதித்தன் கூறினார். 
    உலகளவில் இரண்டாவது உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இந்த ஆண்டில் மட்டும் 96 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    உலகளவில் இரண்டாவது உயிர்க்கொல்லி நோயாக புற்றுநோய் உருவெடுத்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் புற்றுநோய்க்கு 96 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 1 கோடியே 80 லட்சம் பேர் புதிதாக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    21-ம் நூற்றாண்டில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக புற்றுநோய் அமைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்நாளில் 5 ஆண்களுக்கு ஒருவரும், 6 பெண்களுக்கு ஒரு பெண்ணும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    வயது முதிர்ச்சி, உடல் ஆரோக்கிய பாதிப்பு, இன்றைய வாழ்க்கை சூழல் போன்றவை புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன. புகைப்பழக்கத்தை கைவிடுவது, முறையாக உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவது போன்றவை புற்றுநோய் அபாயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். பிராக்கோலி, பீன்ஸ், கேரட், பெர்ரிஸ், சிட்ரஸ் பழங்கள், மஞ்சள், தக்காளி, இஞ்சி, மீன், ஆலிவ் ஆயில், லவங்கப்பட்டை போன்றவை புற்றுநோயை காக்கும் உணவுகளாகும்.
    தயிர் சாதம், பழைய சாதம், சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மாவடு. இன்று மாவடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாவடு - 8 கப்
    கல் உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த் தூள் - தேவைக்கு
    வெந்தய தூள் - 2 டீஸ்பூன்
    கடுகு தூள் - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    கடுகு - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    கெட்டியான மாவடுக்களைக் கழுவி, ஈரம் போக துடைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் போடுங்கள்.

    அதில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டுக் கலக்குங்கள்.

    தூள் செய்த கல் உப்பை அதில் சேர்த்து, தினமும் கைபடாமல் குலுக்கிவிடுங்கள். மூன்று நாட்களில் தண்ணீர் ஊறிவரும்.

    பின்னர் கடுகு, வெந்தயப் பொடிகளைச் சேர்த்து மஞ்சள் தூளைச் சேருங்கள். மரக் கரண்டியால் அடிக்கடி கிளறிவிடுங்கள்.

    இரண்டு நாட்கள் ஊறியபின் அரை கப் நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து ஆறிய பின்னர் மாவடுவில் கலந்துவிட்டால் சுவையான மாவடு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
    வீடுகளில் பெரும்பாலானவர்கள் ஊதுபத்தி பயன்படுத்துகிறார்கள். வீடு முழுவதும் நறுமணம் கமழ செய்யும் ஊதுபத்தியில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களும் கலந்திருக்கின்றன. அதிலும் ஒருசில ஊதுபத்தி வகைகளில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. அவைகளால் உடல் உறுப்புகள் கடும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.

    சீன பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும்.



    இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு நேரும். தொடர்ந்து ஊதுபத்தி உபயோகிக்கும்போது இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து வெளியாகும் புகை ரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஊதுபத்தி வாசத்தை குழந்தைகள் நுகர்வதும் ஆபத்தானது. கர்ப்பிணி பெண்கள் நுகரும்போது கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஊதுபத்தியில் இருந்து வெளியேறும் புகை குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு சரும ஒவ்வாமை பிரச்சினையும் ஏற்படும்.

    ஊதுபத்தி பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்னும் பட்சத்தில் குறைந்த நேரம் மட்டுமே உபயோகிப்பது நல்லது. நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
    தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பது வெறும் கட்டுக்கதையே. மாறாக, உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் மட்டுமே இருக்கின்றன.
    தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பது வெறும் கட்டுக்கதையே. மாறாக, உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் மட்டுமே இருக்கின்றன.

    * தாய்ப்பால் கொடுப்பதால், தாயின் கருப்பை வேகமாகச் சுருங்கும். குழந்தை பேருக்கு முன் இருந்த உடல் போல் மாற அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

    * தாய்ப்பால் கொடுத்தல், உடல் எடை பிரசவத்திற்கு பிறகு மளமளவென ஏறாமல் தடுக்கச்செய்யும்.

    * தாய்ப்பால் கொடுப்பது ஒரு கருத்தடை முறையாகவே பார்க்கப்படுகிறது.

    * அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர் ரத்தஅழுத்த நோய் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர் ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை.

    * அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதால், இதயம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    * தாய்ப்பால் கொடுப்பது கர்ப்பப்பை புற்று நோயிலிருந்தும் மார்பகப் புற்றுநோயிலிருந்தும் காக்கிறது.
    லெமன் ஐஸ் டீ குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த லெமன் ஐஸ் டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வதும் மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    தேயிலைத் தூள் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை - 2
    சர்க்கரை - 8 டீஸ்பூன்
    புதினா இலைகள் - சிறிது
    ஐஸ் கட்டிகள் - 1 டம்ளர்



    செய்முறை :


    இரண்டு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் தேயிலைத் தூளைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டிக்கொள்ளுங்கள்.

    ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு எலுமிச்சை பழத்தை மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    தேநீரில் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.

    கண்ணாடி டம்ளரில் ஐஸ் துண்டுகளைக் கால் பகுதி வரை நிரப்புங்கள்.

    இதில் அரை டம்ளர் அளவுக்குத் தேநீரைச் சேருங்கள்.

    பிறகு கால் டம்ளர் தண்ணீரை ஊற்றுங்கள்.

    நறுக்கிய எலுமிச்சைத் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு, ஜில்லென்று பரிமாறுங்கள்.

    குளுகுளு லெமன் ஐஸ் டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தற்காலத்தில் குழந்தைகளுக்கு பல்வேறு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். சரி எந்த வயதில் உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பிள்ளைகளின் உடல் பருமன் என்பது உடனே கவனிக்கப்பட வேண்டிய வாழ்வின் முக்கியமான அம்சமாகும். சரி எந்த வயதில் உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்

    ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி குண்டாக இருந்தாலே, (உடல் பரிசோதனையுடன்) இது போல் நடக்க வைப்பது, பந்து கொடுத்து விளையாட வைப்பது,  நீச்சல் பழகக் கற்றுக்கொடுப்பது, மூன்று சக்கர சைக்கிள் ஓட்டச் சொல்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தினாலே, அவர்கள் உடல் ஆரோக்கியமாக, வலுவாக வளர ஆரம்பிக்கும்.

    5-17 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பள்ளியிலும் வீட்டிலும் பல்வேறு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். பள்ளியில் உடற்பயிற்சி நேரத்தில் இவர்கள், தங்களை அங்குள்ள விளையாட்டுக்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும்கூட, ஏதாவது உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இப்படி இரண்டிலும் 30 நிமிடங்கள் செலவிட்டாலே போதுமானது.



    இவர்களுக்குத் தினமும் ஒரு மணி நேரப் பயிற்சி தேவை. வாரத்துக்கு இப்படி 3-4 தடவை உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது. இவர்கள், தொலைக்காட்சி, செல்பேசி, கணினி, வீடியோ விளையாட்டுக்கள் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் விளையாடுவதற்கான நேரம் கிடைக்கும்.

    வீட்டு வளர்ப்புப் பிராணிகளோடு நடத்தல், வேகமாக நடத்தல், ஓடுதல், குதித்தல், இசைக்கு ஏற்ப ஆடுதல், பூப்பந்து, கால்பந்து, டென்னிஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றைத் தன் நண்பர்களுடன் சேர்ந்து விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்தாலே போதும்.

    எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு வருக்கும் அவர்களது உடல் நிலை, உடல் தகுதி, அவர்களுக்கு இருக்கும் நோய்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    நமக்கு மனஅழுத்தம் உருவாக யாரோ, எதுவோ காரணமில்லை. நாம்தான் காரணம். நாம் யதார்த்தத்திற்கு தக்கபடியான எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொண்டால், மனஅழுத்தமின்றி நிம்மதியாக வாழலாம்.
    எதிர்பார்ப்பிற்கும் - யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளிதான் மனஅழுத்தத்திற்கு காரணம். இந்த இடைவெளி அதிகரித்தால், மனஅழுத்தமும் அதிகரிக்கும். உதாரணம் சொல்கிறேன். ‘நமது குழந்தைக்கு ஏதாவது ஒரு பள்ளியில் படிக்க இடம் கிடைக்கும்.

    எங்கு கிடைத்தாலும் குழந்தை அங்கு சேர்ந்து முடிந்த அளவு படிக்கும்’ என்ற அளவுக்கு பெற்றோரின் எண்ணம் இருந்தால், ‘அட்மிஷன்’ எந்த பள்ளியில் கிடைத்தாலும் அவர்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ளும். அப்போது அவர்களது எதிர்பார்ப்பிற்கும்- யதார்த்தத்திற்கும் இடைவெளி இல்லை. அதனால் குழந்தையின் அட்மிஷன் விஷயத்தில் அந்த பெற்றோருக்கு மனஅழுத்தம் தோன்றாது.

    அதற்கு மாறாக, பிரபலமான பள்ளி ஒன்றில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டு அது நடக்காமல் போகும்போது அங்கே எதிர்பார்ப்பிற்கும்- யதார்த்தத்திற்கும் இடைவெளி தோன்றி, அது அந்த பெற்றோருக்கு மனஅழுத்தத்தை கொடுக்கும். ஆக நமக்கு மனஅழுத்தம் உருவாக யாரோ, எதுவோ காரணமில்லை. நாம்தான் காரணம். நாம் யதார்த்தத்திற்கு தக்கபடியான எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொண்டால், மனஅழுத்தமின்றி நிம்மதியாக வாழலாம்.

    நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இரண்டு விதமான மனிதர்களை சந்தித்திருப்பீர்கள். ஒரே மாதிரியான சோகம், வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழும் இரண்டு மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஒருவர் அதை தாங்கிக்கொள்ளும் சக்தியை பெற்றிருப்பார். இன்னொருவர் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் நிலைகுலைந்துபோய் கடும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பார்.

    ஒரே மாதிரியான சம்பவம்தானே! ஏன் ஒரு மனிதரால் அதை தாங்கிக்கொள்ள முடிகிறது? இன்னொரு மனிதரால் அதை ஏன் தாங்கிக்கொள்ள முடியவில்லை? இது பற்றி சர்வதேச அளவில் ஆய்வு ஒன்று நடந்தது. அதில், ‘ஒரு மனிதரின் மனோபலத்தை அவரது பாரம்பரியம் 50 சதவீதம் அளவுக்கு தீர்மானிக்கிறது. வளரும் சூழல், சமூகம், கலாசாரம், நண்பர்கள், வளர்ப்புமுறை, கல்வி போன்றவை இன்னொரு 50 சதவீதத்தை தீர்மானிக்கிறது’ என்று கண்டறிந்தார்கள். இதை வைத்து பார்க்கும்போது பாரம்பரியத்தில் இருந்து என்ன கிடைத்தாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் வளர்ப்பு முறை, வளரும் சூழல், நண்பர்கள், கலாசாரம், கல்வி போன்றவைகளால் பெறும் மனோபல அளவை நம்மால் அதிகரித்துக்கொள்ள முடியும். அதன் மூலம் மனஅழுத்தமின்றி வாழவும் முடியும்.

    காலையில் நீங்கள் விழிக்கிறீர்கள். படுக்கையில் இருந்து நீங்கள் கண்களை திறக்கும்போதே மிக உஷாராக இருக்கவேண்டும். நான்கு முனை தாக்குதல் போன்று, நாலாபுறமும் இருந்தும் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் உங்களை நோக்கி ஏவப்பட்டுக்கொண்டிருக்கும். வீட்டில் இருந்தும், பக்கத்து வீட்டில் இருந்தும், டெலிவிஷன் வழியாகவும், செல்போன் வழியாகவும் நீங்கள் பார்ப்பதும்- கேட்பதும் உங்களை விடாமல் துரத்தி மனஅழுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கும். நீங்கள் இரண்டு காதுகள் இருக்கிறதே என்று எல்லாவற்றையும் கேட்க முன்வந்தால், இரண்டு கண்கள் இருக்கிறதே என்று எல்லாவற்றையும் பார்க்க முன்வந்தால், உங்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டு மன அழுத்தம் உருவாகிவிடும். இதில் இருந்து தப்பிக்க எதை பார்ப்பது, எதை கேட்பது, எதை பேசுவது என்று சிந்தித்து முடிவெடுத்து உங்களுக்கு நீங்களே கடிவாளம் போட்டுக்கொள்ள வேண்டும்.

    சோஷியல் மீடியாக்கள் இப்போது தனி மனிதர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கின்றன. சைபர் கிரைம்களும், நிச்சயமற்ற அரசியல் சூழல்களும், இயற்கை இடர்பாடுகளும்கூட மனஅழுத்தத்தை உருவாக்குவதில் பங்கு வகிக்கிறது.

    ஒருவருக்கு மன அழுத்தம் ஏற் படும்போது அவரது முடிவெடுக்கும்திறன் குறையும். அவர் மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் தடுமாறுவார். அவரது செயல்பாட்டுத்திறன் குறையும். நினைவாற்றல், தூக்கம், நிம்மதி, வேலை ஈடுபாடு போன்றவை குறைந்துபோகும். அதோடு மனஅழுத்தத்தால் பல்வேறு நோய்களும் தோன்றும். குறிப்பாக ஜீரணமண்டல நோய்கள் தாக்கும். வயிற்று தொந்தரவுகள், அசிடிட்டி பிரச்சினை, ஜீரண கோளாறு, நரம்பு மண்டல பாதிப்பு போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை.

    அளவுக்கு மீறி வியர்த்தல், பதற்றம் உருவாகுதல், இதய துடிப்பு அதிகரித்தல், உயர்ரத்த அழுத்தம் தோன்றுதல் போன்றவைகளும் உருவாகும். ‘செர்விகல் ஸ்பான்டிலோசிஸ்’ எனப்படும் கழுத்து தொடர்புடைய பாதிப்புக்கு நிறைய பேர் கழுத்தில் ‘செர்விகல் காளர்’ பொருத்தியிருக்கிறார்கள். இந்த பாதிப்பிற்கு மனஅழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது. மனஅழுத்தத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து மீண்டால்தான், இந்த நோய்க்கு தரப்படும் மருந்தும், பயிற்சிகளும் முழுமையாக பலன்தரும்.

    மனஅழுத்தத்திற்கு சரியான முறையில், சரியான நேரத்தில் தீர்வுகண்டு அதை கட்டுப்படுத்தாவிட்டால் அது தற்கொலை சிந்தனையை உருவாக்கிவிடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதில் 8 முதல் 10 ஆயிரம் பேர் வரை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவும், தமிழ்நாடும் இதில் முன்னிலை வகிக்கிறது. தற்கொலை செய்துகொள்கிறவர்களில் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். வேலையின்மை, உறவுச்சிக்கல், தொடர் தோல்விகள், மனம்விட்டுப் பேச நண்பர்கள் இல்லாமை, குடும்பத்தினரின் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய முடியாமை போன்ற பல காரணங்கள் ஆண்களின் தற்கொலைலை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.
    வயிறு பிரச்சனை, அஜீரண கோளாறு, வாய்வு தொல்லை இருப்பவர்கள் இந்த சூப்பை அடிக்கடி செய்து குடிக்கலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முழுப்பூண்டு - 2,
    வெங்காயம் - ஒன்று,
    தண்ணீர் - அரை லிட்டர்,
    மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    பால் - ஒரு கப்,
    கெட்டித் தயிர் - சிறிதளவு,
    ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மைதாவை வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைத்து கொள்ளவும்.

    அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வறுத்த மைதாவையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

    பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான பூண்டு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர்.
    விழா காலங்களில் தொடர்ச்சியாக வருகின்ற காரணங்களால் ஆடை வடிவமைப்பாளர்களும், தயாரிப்பாளர்களும் புதிய புதிய வடிவமைப்புகளில் ஆடைகளை சந்தையில் விற்பனைக்கு தருகின்றனர். பெண்கள் ஆடைகளில் விழாக்கால ஆடை என்பதில் பிரதான இடம் பிடிப்பவை லெஹன்கா சோலி. அதுபோல் திருமண நிகழ்வுகளுக்கும் லெஹன்கா சோலி விரும்பி அணிகின்ற ஆடையாகவே உள்ளது.

    லெஹன்கா சோலி என்பது உடனுக்குடன் அணிந்து கொள்ளவும், வேறு உடைக்கு மாறும்போது சுலபமாக கழட்டி மாற்றி கொள்ளவும் முடியும். அதுபோல் பெண்களுக்கு கூடுதல் அழகையும், பொலிவையும், கவர்ச்சியையும் தரும் ஆடை என்பதாலும் அதிக பெண்கள் லெஹன்கா சோலியை விரும்பி அணிகின்றனர். அதுபோல் லெஹன்கா என்பது சிலகாலம் வரை வைத்திருந்து அணியக்கூடிய வகையில் இருக்கும்.

    உடனே சிறியதாக மாற்றம் அடையாது. அதுபோல் உடல் அளவில் ஏதும் மாற்றம் ஏற்பட்டாலும் சிறு மாற்றம் செய்து அணிய வசதியான ஆடையாகவும் உள்ளது. தற்போது லெஹன்கா சோலி என்பதில் கீழ் பகுதி பேண்ட் என்றவாறு பலோசா மற்றும் ஷராரா பேண்ட் போன்றவை வந்துள்ளன. இது புதிய லெஹன்கா ஆடை வகையாக மாற்றம் பெற்றுள்ளன. லெஹன்கா சிறப்பிடம் பெறுவதற்கு மேலும் சில காரணிகள் இருக்கவே செய்கின்றன.

    லெஹன்கா சிறப்பு மிக்க துணி வகைகள்


    லெஹன்கா என்பது பெரும்பாலும் அதிக எம்பிராய்டரி மற்றும் மேல் வேலைப்பாடுகளுடன்தான் காணப்படும். இந்த சீசனில் அதில் சற்று மாறுபட்டு கனமான அதிக உயர்தர தையல்களுடன் கண்கவரும் வகையில் உயர்ரக துணிகளான பராகோட், பனாரஸி பட்டு, காஞ்சிபுரம் பட்டு மற்றும் பிற தாய பட்டு துணிகளுடன் உருவாக்கப்படுகின்றன. அதிக எம்பிராய்டரி இல்லாமல் உயர்ரக பட்டு துணி என்பதில் மைசூர் பட்டு மற்றும் பனாரஸி பட்டு துணி லெஹன்கா அதிக பொலிவுடன் காட்சி தருகின்றன. சாதாரணமாக அணியக்கூடிய வகையில் பட்டு துணி லெஹன்கா இருப்பதுடன் அதிக விலையின்றியும் கிடைக்கின்றது.

    கோப்பு படம்

    மேற்புற ஓவிய வேலைப்பாடுகள்

    ஓவியம் சார்ந்த (அ) கலைநயம் சார்ந்த பிரிண்ட் செய்யப்பட்டவை அதிகமாக உள்ளன. அதாவது அழகிய ஓவியங்கள், மார்டன் ஆர்ட், முரலி மற்றும் பாரம்பரிய ஓவியக் கலைகளான ஆஸ்டெக் மற்றும் மெரேக்கான் ஓவியப்பாணியிலான வடிவங்கள் அழகுற துணிகளின் மீது பி ரிண்ட் செய்யப்படுவதால் அவை ஆடம்பர வடிவமைப்பை தருகின்றன. இந்த பிரிண்ட் செய்யப்பட்ட துணியின் ஓரப்பகுதியில் பிரம்மாண்ட அளவில் நெய்யப்படும் சில லெஹன்காகள் வருகின்றது. எம்பிராய்டரி செய்யப்பட்டு அதிக கனமான லெஹன்கா போலன்றி எடை குறைந்த இந்த லெஹன்கா அணிவதற்கு இலகுவாக உள்ளது.

    பூ வேலைப்பாடு லெஹன்கா

    லெஹன்காவில் மெல்லிய பட்டு துணியின் மீது அழகிய வண்ண வண்ண மலர்கள் பிரிண்ட் செய்யப்பட்டு தரப்படுகின்றன. கார்பா மலர்கள் என்ற இவை பல வண்ண சாயலில் அழகுடன் பிரிண்ட் செய்யப்பட்டு பளபளப்பும், வழவழப்பும் கூடிய பின்னணியில் இரவு நேர ஒளி அழகுற ஜொலிக்கின்றன. கற்கள், கண்ணாடி போன்றவை பதிந்த இந்த லெஹன்கா ஒற்றை வண்மம் மற்றும் பல வண்ண பின்னணியில் தனி சிறப்பு அழகுடன் காட்சி தருகின்றன.

    பெரிய ஜாக்கெட் அமைப்புடன் கூடிய லெஹன்கா

    லெஹன்கா ஜாக்கெட் அமைப்பு என்பது இடுப்பு வரை மட்டுமே இருக்கும். புதிய ஜாக்கெட் என்பது முழு அளவு அதாவது இடுப்பிற்கு கீழ் பகுதி வரை இறங்கியவாறும், முழுக்கை அமைப்புடன் பிரம்மாண்ட ஆடை வடிவமைப்புடன் இருக்கின்றன. இந்த ஜாக்கெட் என்பது அதிக வேலைப்பாட்டுடன் தனிக்கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமின்றி பிளைன் லெஹன்கா என்றவாறும் சில வருகின்றன. அதாவது ஓரப்பகுதியில் மட்டும் பட்டையான லேஸ் வைக்கப்பட்டு உடல் பகுதி ஏதும் பிரிண்ட் செய்யப்படாது பிளைன்-ஆக உள்ள லெஹன்காவும் சற்று வித்தியாசமாக காட்சி தருகின்றது. லெஹன்கா சோலி தன் கனமான எம்பிராய்டரி வேலைப்பாட்டை குறைத்து கொண்டு பிரிண்டட் லெஹன்கா சோலிகளாக உலா வருகின்றன. 
    கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் குழந்தைகள் 50 சதவீதம் வயிற்றுப் போக்கு மற்றும் 25 சதவீதம் நிமோனியாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
    இன்று (அக்டோபர் 15-ந்தேதி) உலக கைகழுவும் தினம்.

    கை கழுவி விட்டேன் உணர்ச்சியின் வேகத்தில் உறவுகளிலும் நட்புகளிலும் சொல்லப்படுகினற வாக்கியமிது..பலவேளைகளில் சொல்லிவிட்ட பிறகு பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. இப்படித்தான் நாம் கைகழுவும் வழக்கத்தைக் கைவிட்டதால் பல வியாதிகளுக்கு ஆளாகிறோம். உலகின் பெரும்பாலான நோய்கள் சுகாதாரமின்மையால் தான் பரவுகின்றன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிலும் இத்தகைய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். எனவே, வருங்கால சந்ததி ஆரோக்கியமானதாக திகழ குழந்தைகள் சோப் மூலம் கைகளைக் கழுவும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

    இரு கரங்களையும் சேர்த்து குவித்து வணங்குவது தான் தமிழ்ப்பண்பாடு.மாறாக ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது கைக்குலுக்கி வணக்கம் சொல்வது இன்று நடைமுறை வழக்கமாகி விட்டது.கைகளால் இரு சக்கர வாகனங்களை ,எந்திரங்களை பயன்படுத்தும் போது நம் கைகளில் தூசிகள் படர்ந்து அதன்மூலம் கிருமிகள் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆகவே கைகளை நன்றாக கழுவவேண்டும். கை கழுவுவது என்பது கைகளை தண்ணீரில் நனைப்பது இல்லை.

    அவ்வாறு செய்வதால் கைகளில் உள்ள நோய் கிருமிகள் அழியாது. சோப்பு போட்டு முறையாக கழுவதன் மூலமே கிருமிகளைக் கொல்ல முடியும். கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் குழந்தைகள் 50 சதவீதம் வயிற்றுப் போக்கு மற்றும் 25 சதவீதம் நிமோனியாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இது தவிர டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, வயிற்று பூச்சிகள், பன்றி காய்ச்சல், எபோலா, தோல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களும் அவர்களை நெருங்குவதில்லை. நோய்த் தொற்று, சுத்தமில்லாத கையில் ஒரு கோடி வைரஸ்களும், 10 லட்சம் பாக்டீரியாக்களும் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    நம் கைகளில் ஒட்டியுள்ள கிருமிகள்,நாம் உண்ணும் உணவுடன் நம் வயிற்றுக்கு சென்று நமக்கே வியாதிகளை உண்டாக்குகின்றன. நாம் மட்டும் கைகழுவினால் மட்டும் போதாது. விட்டில் வேலை செய்யும் பணியாளர்கள், சமைப்பவர்கள் அனைவரும் முறையாக கையைக் கழுவ வேண்டும். இன்றைய நாகரிக மோகத்தில் திசு பேப்பரால் கையை சாப்பிட்டப் பின்னும்,மலம்கழித்தபிறகும் பயன்படுத்துவது அதிகமாகிக் கொண்டுவருகிறது..



    சில திருமண வீடுகளில் உணவுகளை கையால் பரிமாறுகிறார்கள்.சுத்தமற்ற கையினால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படுகின்றன. இதைப்போல சாலை ஒரக்கடைகளிலும், துரித உணவு விடுதிகளிலும் கைகளால் உணவுகளை எடுத்துப்போட்டு சமைக்கிறார்கள்.வியர்வையை கைகளால் துடைத்து அந்த கையால் உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் வரும்.

    கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை வீட்டு வேலை செய்பவர்களிடமும்,ஆயாவிடமும் விட்டுசெல்கின்றனர். இவர்களுக்கு சோப்பு வாங்கி கொடுத்து குழந்தையை தூக்கும்போதும், உணவு ஊட்டும் போதும் கைகளை கழுவ சொல்லவேண்டும். மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்துவிட்டு வந்தபின்பு அவசியம் கையை சோப்பு போட்டு கழுவவேண்டும்.

    ஏனென்றால் மருத்துவமனை சார்ந்த கிருமி தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். குழந்தைகளுக்கு கைகளை சோப்புகள் போட்டு கழுவும் பழக்கத்தை ஏற்படுத்துவதின் மூலம் தொற்று நோய் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும். கைகழுவும்போது விரல்களின் இடுக்குகளில் சோப்புப் போட்டு இரண்டு கைகளாலும் தேய்க்க வேண்டும்.

    வெளியில் சென்று விட்டு வரும் போது கைகளையும் கால்களையும் நன்றாக சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி.ஆகவே குழந்தைகளுக்கு கைகழுவும் பழக்கத்தை சொல்லிக்கொடுக்கவேண்டும் இதற்கு தேவை மக்களிடையே விழிப்புணர்வு.கைகளை சுத்தமாக கழுவுவதால் ஆரோக்கியமாக வாழும் குழந்தைகள், பள்ளி வாழ்க்கையில் சுறுசுறுப்பாக விளங்குகின்றனர். கைகளைக்கழுவுவோம்,கவனத்துடன் உடல் நலம் காப்போம்.

    மருத்துவர்.நா.மோகன்தாஸ்,

    முன்னாள் தலைவர்,

    இந்திய மருத்துவ சங்கம், தமிழக கிளை
    ×