என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    ஆஸ்துமா ஒன்றும் வெல்ல முடியாத பிரச்சனை அல்ல. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஆஸ்துமா ஒன்றும் வெல்ல முடியாத பிரச்சனை அல்ல. கொஞ்சமே கொஞ்சம் விழிப்புணர்வாய் இருந்தால் இனிமையானதாய் மாற்றிவிட முடியும் என்பதே உண்மை. இதோ ஆஸ்துமாக்காரகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகளை பார்க்கலாம்.

    * பூண்டும் இஞ்சியும் அற்புதமான ஆண்டிபயாடிக். பனிக்காலத்தில் அவை ஆஸ்துமாவுக்கு எதிராக அவை மிகச் சிறப்பாகப் பணியாற்றும். இவை இரண்டும் மிகச்சிறந்த ஆண்டி இன்ஃபளமேட்டரியாகவும் செயல்படக்கூடியவை.

    * சூரிய ஒளியால் கிடைக்கும் விட்டமின் டி ஆஸ்துமாவை குறைக்கக் கூடியது. விட்டமின் சி மூச்சுக் குழாயில் ஏற்படும் அலற்சிகளை குறைக்கிறது. இதனால் மூச்சுத் திணறலையும் தடுக்கிறது.

    * அதிமதுரம் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் மிக முக்கியமான இடம் வகிப்பது. இந்தியா மட்டும் இல்லாமல் சீன மருத்துவத்திலும் ஆஸ்துமாவுக்கு எதிரான மிகச்சிறந்த மருந்தாக அதிமதுரம் கருதப்படுகிறது. நுரையீரலின் நுண் துளைகளிலும் மூச்சுக் குழாயிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அதிமதுரம் மிகச் சிறந்தது.

    * உடலில் மக்னீசியம் குறைவாக உள்ளவர்கள் ஆஸ்துமாவால் அவதிப்பட நேர்கிறது என பல ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் என்கிறார்கள். நமது மூச்சு மண்டலத்தின் வழிப்பாதையை சீராக்குவதில் மக்னீசியத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே, மக்னீசியம் அதிகமாக உள்ள மஞ்சள் வண்ண காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப் போதுமான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.

    ஆஸ்துமா உணவுமுறை

    ஆஸ்துமாவுக்கு உண்ண வேண்டிய உணவுகளைப் போலவே, உண்ணக் கூடாத உணவுகளும் உள்ளன. பனிக்காலத்தில் மட்டுமாவது அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஆஸ்துமாவின் கடுமையை ஆரோக்கியமாக எதிர்கொள்ளலாம்.

    * பால் பொருட்கள் இயல்பாகவே நெஞ்சில் கபத்தை உருவாக்கும் ம்யூக்கஸ் எனும் திரவத்தைப் பெருக்கும் இயல்புடையவை. அளவுக்கு அதிகமாக இவற்றைப் பனிக்காலத்தில் எடுத்துக்கொள்ளும்போது சளி, நெஞ்சடைப்பு, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகிய பிரச்சனைகள் உருவாகின்றன. எனவே, பால் பொருட்களிடம் கவனமாக இருங்கள்.

    * ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் நொறுக்குத் தீனிகள் எல்லாவகையில் உடலுக்குத் தீங்கானவையே. குறிப்பாக ஆஸ்துமாக்காரர்கள் பனிக் காலங்களில் இவற்றிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. இவற்றில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்து நிறைந்திருப்பதால் இவை மூச்சுக்குழாயின் நுண் துளைகளை மிக மோசமாகப் பாதிக்கின்றன. எனவே, ரொட்டி, பாஸ்தா, மிட்டாய்கள், பரோட்ட உள்ளிட்ட மைதா உணவுகள் ஆகியவற்றை பனிக் காலங்களில் தவிர்ப்பதே நல்லது.

    சர்க்கரை நோய்க்கு காரணங்கள் எதுவாக இருப்பினும் முக்கியமான டிரீட்மென்ட் “உணவு முறை” தான். உணவுக்கட்டுப்பாடு என்று கூறுவதைவிட உணவு முறை என்று கூறுவது பொருந்தும்.
    இன்றைக்கு பெரும்பாலான மக்களின் உரையாடல்களின் போது பொதுவாக பேசப்படுவது “உனக்கு சர்க்கரை நோய் இருக்கா..? எனக்கும் இருக்கு!” என்பது தான். அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பது தற்பொழுது சர்க்கரை நோய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் பாகு பாடில்லாமல் நிலவுகிறது.

    இதற்கு வாழ்வியல் முறைகள், மரபு வழிக்காரணங்கள் என பல கூறப்படுகிறது. காரணங்கள் எதுவாக இருப்பினும் முக்கியமான டிரீட்மென்ட் “உணவு முறை” தான். உணவுக்கட்டுப்பாடு என்று கூறுவதைவிட உணவு முறை என்று கூறுவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.

    சர்க்கரை நோய் இருப்பவர்கள் என்ன சாப்பிட வேண்டும்? இவர்கள் “எல்லாம் சாப்பிடலாம்”! அப்படியா?! நம் வீட்டில் உபயோகிக்கும் மின்சாரம் போன்றது நம் உடலில் சர்க்கரை.

    வீட்டில் எப்படி மின்சாரம் பல வகைகளில் தேவைப்படுகிறதோ அதைப்போல் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலைகளை செய்ய சர்க்கரை (குளுக்கோஸ்) தேவைப்படுகிறது.

    மின்சார சப்ளையில் ஏற்ற, இறக்கம் இருந்தால் ஏசி, டிவி, பிரிட்ஜ் போன்றவை பழுதாகிவிடும். அதைப்போலவே, நம் உடலில் குளுக்கோஸின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டால், உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. இதனாலேயே சர்க்கரை கட்டுப்பாடு தேவைப்படுகிறது.

    இதற்கு முக்கியமான தீர்வு சரியான நேரத்திற்கு, சரியான உணவு சாப்பிடுவது தான். ஏனென்றால், நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் ஜீரணமாகி, பின் மாவுச்சத்தாகத்தான் அதாவது குளுக்கோஸாகத்தான் உடலுக்கு உபயோகப்படுகிறது. எனவே தான், உணவுக்கட்டுப்பாடு வலியுறுத்தப்படுகிறது.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரிசி சாப்பிடக்கூடாதா? சப்பாத்தி தான் சாப்பிடணுமா?

    நமது நாட்டில் தென் மாநிலங்களில் முக்கியமாகத் தமிழ்நாட்டில் அரிசி தான் பிரதான உணவு. வட மாநிலங்களில் தான் கோதுமை புழக்கம் அதிகம்.

    கோதுமைக்கு மாறியவர்களுடைய சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளதா? சர்க்கரை நோயால் ஏற்படும் எந்த மற்ற நோய்களும் இல்லாமல் இருக்கிறார்களா? என்று யோசிக்கவேண்டும்.

    தென்னகத்தில், நம் சீதோஷ்ண நிலைக்கும், நம் வயிற்று ஜீரணத்திற்கும் பழக்கமான அரிசியே சாப்பிடலாம். கோதுமைக்குத் தாவ வேண்டிய கட்டாயம் இல்லை.

    பின் ஏன் கோதுமையை பரிந்துரைக்கிறார்கள்?

    அரிசி சாதம், இட்லி, தோசை, பொங்கல் போன்றவை நம் பாரம்பரிய உணவுகள். இவற்றை சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரியாமல் சாப்பிடுகிறோம். ருசியாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஆனால் அதுவே சப்பாத்தி, கோதுமை உப்புமா போன்றவை நம்மையறியாமல் ஒரு அளவோடு சாப்பிடுகிறோம். ஆகவே இங்கு அளவு தான் முக்கியமே தவிர அரிசியா, கோதுமையா என்பது அல்ல.

    மேலும் கோதுமையில் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது. அரிசியில் இல்லை. ஆனால் அரிசியில் சமைத்த உணவுகளை பருப்பு காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டால் நார்ச்சத்து எளிதில் கிடைத்து விடும். அப்படியென்றால் வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாதா? அளவுடன் தான் சாப்பிட வேண்டுமா?

    இங்கு தான் பெரும்பாலானவர்கள் “டயட் கன்ட்ரோல்” என்பதை தவறாக புரிந்து கொள்கிறார்கள், பயப்படுகிறார்கள். அளவு என்பது முக்கியம். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது ஊரறிந்தது.

    ஒவ்வொருவருடைய எடை, வேலையமைப்பு, வயது போன்றவற்றை வைத்து ஒரு சத்துணவு நிபுணர் கலோரி அளவை நிர்ணயித்து, அதற்கேற்றார்போல் உணவு அட்டவணை தருவார். இவ்வாறு செய்யும் பொழுது பத்து இட்லி சாப்பிட்டு பழகியவர்களுக்கு மூன்று அல்லது நான்கு இட்லி என்று நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு இட்லியின் எண்ணிக்கை குறைவுதான்.ஆனால், இட்லியுடன் திடமான சாம்பார், காய்கறி போன்றவை வலியுறுத்தப்படும். இரண்டு கப் சாம்பாருடன் நான்கு இட்லி என்பது, பெரும்பாலும் போதுமானதாகவே இருக்கும். வெறும் மிளகாய்ப்பொடி என்றால் கண்டிப்பாக பத்தாது.

    இன்னொன்று கவனத்தில் கொள்வதென்றால் ஒவ்வொரு வேளை உணவுக்குமிடையே நீண்ட இடைவேளை இருத்தல் கூடாது. மூன்று அல்லது நான்கு மணி நேர இடைவெளியில் சிறிதாக எதையாவது சாப்பிட வேண்டும். அப்படியென்றால் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா என்று சிலர் கேட்பார்கள். யோசித்துப் பார்த்தால் அதைத்தான் இப்பொழுதும் செய்துக்கொண்டிருப்பார்கள்.

    காலை சிற்றுண்டிக்குப்பின் 11-11.30 மணியளவில் காபி-டீ பிஸ்கட் என்று எதையாவது மனம் நாடுகிறது. அதேபோல் மதிய உணவுக்குப் பிறகு 4-5 மணியளவில் மீண்டும் காபி-டீ, பஜ்ஜி, போண்டா, வடை போன்றவை சாப்பிட்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். இந்த நேர இடைவெளியினைத்தான் உணவியல் வல்லுனர்களும் வலியுறுத்துகிறார்கள். தேர்ந்தெடுத்து சாப்பிடும் உணவு வகைகளை மாற்றத்தான் சில வழிமுறைகளை கூறுகிறார்கள்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் பூமிக்கடியில் விளைந்த காய்களை குறிப்பாக உருளைக்கிழங்கை சாப்பிடக்கூடாதா?

    பூமிக்கடியில் வெங்காயம், முள்ளங்கி, நூக்கல், கேரட், பீட்ரூட், உருளை போன்றவை விளைகிறது. வெங்காயம், முள்ளங்கி தவிர மற்றவைகளில் மாவுச்சத்து கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் அது நல்ல நார்சத்து மற்றும் பல மினரல், வைட்டமின் நிறைந்ததாகவும் இருக்கும். இவற்றை சாப்பிடுவதால் சுகர் ஏறாது. கேரட், பீட்ரூட்டில் கேன்சரைத் தடுக்கக்கூடிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கு ஒன்றையே காயென நினைத்து அதையே வழக்கமாக சாப்பிடுபவர்கள் அதிகம். மற்ற காய்கறிகளையும் சேர்க்கவேண்டும் என்பது அவசியம். மேலும் உருளைக்கிழங்கை மொறுமொறு என்று நிறைய எண்ணெய் ஊற்றி வறுவலாக்கி ருசியாக சாப்பிடுவதே வழக்கம். இதனால் எண்ணெய், உப்பு சத்து கூடுகிறது. அதனால் தீமைகள் அதிகம். எனவேதான் உருளைகிழங்கைத் தவிருங்கள் என கூறுகிறார்கள். வாரத்தில் ஏதேனும் ஓரிரு நாட்கள் உருளைக்கிழங்கை வறுக்காமல் வேகவைத்து தாளித்து சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். பூரி உருளைக்கிழங்குக்கூட ருசிக்கலாம் அளவோடு.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் வடை, போண்டா பஜ்ஜி போன்றவை சாப்பிடலாமா?

    கண்டிப்பாக சாப்பிடலாம். ஆனால் வாரத்தில் ஒரு முறை, பண்டிகை நாட்களில் இரண்டு (அ) மூன்று வடை, போண்டா, பஜ்ஜி சாம்பார் (அ) சட்னி சேர்த்து சாப்பிடலாம். தினமும் தேனீர் வேளையில் இவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். சுண்டல், பயறு வகைகள், சாலட், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பட்டாணி, பொரி போன்றவை ஸ்னாக்ஸாக இந்த நேரத்தில் சாப்பிடலாம். சில நேரங்களில் தோசை, பிரட் சாண்ட்விச், அவித்த முட்டையின் வெள்ளைக்கரு, ஓட்ஸ், சோளம் போன்றவையும் சேர்க்கலாம்.

    பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் போன்ற கொட்டை வகைகள் ஒரு கைப்பிடியளவு ஸ்னாக்ஸாக சாப்பிடலாம். இதில் நல்ல வகை கொழுப்புதான் உளளது. பயப்படத் தேவையில்லை.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்களே தொடக்கூடாதா?

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைத்து வகை பழங்களையும் சாப்பிடலாம்! பழங்களில் இனிப்பு அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் அதை சர்க்கரை என்று எண்ணி பயப்படுகிறார்கள். உண்மையில் பழங்களில் உள்ள இனிப்பு நார்சத்துடன் கூடிய நீரில் கரையாத இனிப்பு, அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றாது.

    நாம் சாப்பிடும் பீர்க்கங்காய், புடலை, பூசணி, சுரைக்காய் போன்றவை “லோகிளை சீமிக்” உணவுகள். இவற்றை அதிகமாக உண்ணலாம். அதே போல கொய்யா, சப்போட்டா, பப்பாளி, தர்பூசணி, கிர்னி, நாவல்பழம், பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற அனைத்து வகை பழங்களும் 50 (அ) 60 கிராம் வரை ஒரு நாளில் ஒரு வேளை உண்ணலாம். காலை 11 மணி (அ) மாலை 4-5 மணியளவில் பழங்களை சாப்பிடுவது சிறந்தது. ஏனென்றால் இந்த உணவு இடைவெளியின் பொழுது, உடலுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது, அதே நேரத் தில் சர்க்கரை அதிக மாகவும் கூடாது. பழங்களில் உள்ள நார்சத்துடன் கூடிய சர்க்கரை இந்த வேலையை கச்சிதமாக செய்கிறது.

    ஆனால் மா, பலா, வாழை இந்த லிஸ்டில் இடம் பெறவில்லையே என்று நினைக்க வேண்டாம். இம்முக்கனிகளும் கூட கட்டாயம் சாப்பிடலாம். ஆனால் அளவு என்பது முக்கியமாக கவனிக்க வேண்டும். சில சமயங்களில் பழ சாலட்டாகக் கூட 50 கிராம் அளவு சாப்பிடலாம். 50 கிராம் என்றால் எவ்வளவு என்ற சந்தேகம் உள்ளவர்கள் ஒரு சிறிய (அ) மீடியம் சைஸ் பழத்தை தேர்ந்தெடுத்து முழுசாக சாப்பிடலாம். பெரிய சைஸ் என்றால் பாதி சாப்பிட்டு பாதியை யாருடனாவது ஷேர் செய்து விடலாம்.

    அசைவ உணவு சாப்பிடலாமா?

    முட்டையின் வெள்ளைக்கரு ஒருநாளைக்கு மூன்று வேளையும் சாப்பிடலாம். மஞ்சள் கருவுடன் கூடிய முழு முட்டை வாரத்தில் ஓரிரு நாட்கள் சாப்பிடலாம். சிக்கன், மட்டன், நண்டு, இறால் போன்ற மற்ற அசைவ உணவுகளும் வாரத்தில் ஓரிரு நாட்கள் சாப்பிடலாம். வறுக்காமல் சாப்பிடுவது நல்லது.

    அசைவம் சமைக்கும் நாட்களிலும் காய், கீரை வகைகள் கண்டிப்பாக இருப்பது உணவில் நார் சத்தை அதிகப்படுத்தி சர்க்கரையை சீராக வைக்க உதவும்.

    நன்கு மென்று சாப்பிடுவது அவசியம். “நொறுங்கத்தின்றால் நூறு வாழ்வு” என்பதன் பொருள் இதுதான். வாயில் வைத்த உணவை உமிழ்நீருடன் சேர்த்து, நன்கு நொறுங்க மென்று விழுங்குவதால் வயிறு நிரம்பிய உணர்வு சீக்கிரம் வரும், அதிகமாக சாப்பிடத்தோன்றாது. இதன் மூலம் சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

    அன்றாட நடைபயிற்சி (30-45 நிமிடங்கள்), உடல் திசுக்களில் உபயோகப்படாமல் தேங்கியிருக்கும் சர்க்கரை கரைய உதவுகிறது. அதனால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை எது?

    “ஒரு மாத்திரை அதிகம் போட்டுக்கொண்டு, இரண்டு மடங்கு உணவு (அ) இனிப்பு சாப்பிடலாம்” என்று சிலர் நினைத்துக் கொள்வதுண்டு. அது மிகவும் தவறு. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பொருத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. கூறப்பட்ட மருந்தின் அளவு கூடினாலும் குறைந்தாலும் சர்க்கரையின் அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தும். அதனால் உடலின் பல உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். எனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளும், அதன் அளவும் சரியாக பயன்படுத்துவது அவசியம்.

    காபி-டீ போன்ற பானங்களில் அரை சர்க்கரை, கால் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

    பண்டிகை நாட்களிலும் இனிப்பை தவிர்ப்பது நலம். பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, ஆப்ரிகாட்ஸ் போன்ற ‘ட்ரை புருட்ஸ்’ தவிர்க்கபடவேண்டும்.

    ஊறுகாய், வறுத்த உணவுகள், மைதா மாவினால் செய்த தின்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. பழ ரசம் அருந்தக்கூடாது.
    சர்க்கரை, கருப்பட்டி வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் என அனைத்தும் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றக்கூடியவை. எனவே கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

    சாப்பிடுவது வாழ்வதற்கே தவிர, வாழ்வது சாப்பிடுவதற்காக கிடையாதல்லவா? எனவே ஒவ்வொரு வேளை உணவும் ருசியறிந்து அளவறிந்து உண்டு வந்தால் கண்டிப்பாக எல்லா உணவும் சர்க்கரைக்கு இனிய உணவு தான்.
    நமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம் பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். சமையல் எண்ணெய் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.
    நமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம் பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். எப்போதும் ஒரே பிராண்ட் எண்ணெயை வாங்குவது சிலரின் வழக்கம். சிலர் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரைத்த எண்ணெயை வாங்குவார்கள். சிலர் எந்த எண்ணெய் தள்ளுபடியில் கிடைக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். சிலர் சன்ஃப்ளவர் ஆயில், சிலர் ஆமணக்கு எண்ணெய், சிலர் ரைஸ் பிராண்ட் எனும் தவிட்டு எண்ணெய், சிலர் இவை அனைத்தையும் கலந்து வாங்குவார்கள்.

    ஆனால், எல்லோருடைய தேர்வும் ஏதோவொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாகவே (ரீஃபைண்ட் ஆயில்) இருக்கும். விதைகளில் இருந்துவரும் எண்ணெய், கருப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், பலர் கண்ணாடி போல இருக்கும் தூய எண்ணெய்களையே விரும்புகிறோம். எண்ணெயின் நிறத்தை மாற்றுவதற்காக சுத்திகரிக்கின்றனர்.

    பிரஷ்ஷாகப் பிழியப்படும் எண்ணெய் ஒருவித நாற்றத்துடன் இருக்கும். அந்த நாற்றத்தைப் போக்க சில கெமிக்கல்களைப் போட்டு சுத்திகரிக்கப்படுகிறது. விதைகளிலிருந்து நசுக்கி எடுக்கப்படும் எண்ணெய் சீக்கிரமே கெட்டுவிடும். அதாவது இயற்கையாக அந்த எண்ணெயின் ஆயுள் சில நாள்களே. அதனால் சில கெமிக்கல்கள் சேர்த்து பிராசஸிங் செய்கிறார்கள்.

    எண்ணெய்

    ஒவ்வோர் எண்ணெயையும் அதன் தன்மைக்கேற்ப ஓரளவுக்கே சூடு செய்ய முடியும். எல்லாவித எண்ணெய்களையும் புதிதாக எடுத்துத் தனித்தனியாகச் சட்டியில் வைத்துக் கொதிக்க விடுங்கள். சில நிமிடங்களிலேயே அனைத்திலிருந்தும் கரும்புகை வரும். ஏனென்றால், அந்த எண்ணெயின் தன்மை அப்படி. அதனால், தன்மையை மாற்ற ஒரு ஹைட்ரஜன் அணுவை உள்ளே ஏற்றுகிறார்கள். இவ்விஷயங்களுக்காகவே சுத்திகரித்தல் நடைபெறுகிறது.

    கொலஸ்ட்ரால் என்பது மிருகங்களால் உற்பத்தி செய்யப்படுவது. அதைத் தாவரங்களால் உற்பத்தி செய்ய முடியாது. அதனால், மார்க்கெட்டில் இருக்கும் எந்த விதை எண்ணெய்களிலும் கொலஸ்ட்ரால் இருக்காது. ஆனால், ஒமேகா6 எனும் ஒருவகை கொழுப்பு இந்த விதை எண்ணெய்களில் மிகுந்திருக்கும். இந்த ஒமேகா6, நம் ரத்தக் குழாய்களின் செல்களை பாதிக்கும்.

    அந்தப் பாதிப்பைச் சரிசெய்ய நமது கல்லீரல், கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும். அதனால், இந்த விதை எண்ணெய்கள் நம் கொலஸ்ட்ராலை அதிகரிக்கவே செய்யும். விதை எண்ணெய்களில் கொலஸ்ட்ரால் இல்லை. ஆனால், அவற்றைப் பயன்படுத்திச் சமைத்துச் சாப்பிடும்போது நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது. எந்த எண்ணெயில் பொரித்தாலும் அது, டிரான்ஸ் ஃபேட் உருவாக்கி விடுகிறது. பொரித்த உணவுகளில் இக்கொழுப்பு உள்ளது. இது நேரடியாக நம் இதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும்.

    இன்று நீங்கள் டிரான்ஸ் ஃபேட் எடுப்பதை நிறுத்தினால்கூட, உங்கள் உடலில் உள்ள எல்லா டிரான்ஸ் ஃபேட்களும் இல்லாமல் போக மூன்று ஆண்டு ஆகும். நீங்கள் எந்த உணவுப் பொருளை வாங்கினாலும் இந்த டிரான்ஸ் ஃபேட் அளவைப் பாருங்கள். இது கொஞ்சமே இருந்தாலும்கூட, அதை வாங்கவே கூடாது.

     
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான மீன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் துண்டுகள் - 500 கிராம்
    முட்டை - 1
    உருளைக்கிழங்கு - 100 கிராம்
    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    பச்சைமிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க

    மீன் வடை

    செய்முறை :

    மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அதை எடுத்து முள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் கலவையில் சிறிது எடுத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

    ருசியான மீன் வடை தயார்.

    இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பு குறைப்பு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும்.
    டிராகன் பழம்..., நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் இதுவும் ஒன்று. இப்பொழுது பரவலாக பழச் சந்தைகளில் கிடைக்கும் ஒரு பழம். பார்ப்பதற்கு இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா தான் இதன் தாயகம். உலகம் முழுவதும் மக்களின் இடப்பெயற்சியால் இது தெற்கு ஆசிய நாடுகளுக்கும் குடி புகுந்தது. அங்கு அவர்களின் உணவு பொருட்களில் முக்கிய இடத்தை பிடித்தது. டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம். உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பு குறைப்பு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும். மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் பழம் இந்த டிராகன் பழம்.

    பல வித வளங்களை உடலுக்கு கொடுப்பதால் இதனை "சூப்பர் புட்" என்று அழைக்கலாம். ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கும்போதிலும் மற்ற புகழ் பெற்ற பழங்களுக்கு மத்தியில் அதிக வரவேற்பை பெறாமல் இருக்கிறது. டிராகன் பழத்தில் 3 வகை உள்ளன. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம். சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.

    டிராகன் பழம்

    இனம், அளவு மற்றும் உருவத்தை கொண்டு இதன் சுவைகளில் வேறுபாடு இருக்கும். பொதுவாக இனிப்பு மற்றும் புளிப்பு சுவையில் இருக்கும். இதனை வெட்டி உட்புறத்தை பார்க்கும்போது கிவி பழத்தை போல் இருக்கும். சதையில் கறுப்பு புள்ளிகளாக விதைகள் இருக்கும். இந்த விதைகள் செரிமானத்திற்கு நல்லது. ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிப்பதில் இந்த பழத்தை பயன்படுத்துவர். இதன் இலைகளை கொண்டு ஆரோக்கியமான டீயை தயாரிக்கலாம். இதன் தோலில் ஊட்டச்சத்துகள் குறைந்து காணப்படுகிறது. பொதுவாக இதனை யாரும் பயன்படுத்துவது இல்லை.

    நார்ச்சத்து அதிகமாக டிராகன் பழத்தில் இருக்கின்றது. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமான பகுதி சிறந்த செயலாற்றலுடன் இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது. கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது. நீங்கள் சோர்வாக இருக்கும் போதும், அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போதும், பருவ நிலை மாற்றத்தால் உடலில்மாற்றங்கள் ஏற்படும்போதும், புற்று நோய்க்கான அறிகுறிகள் தோன்றும்போதும் இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
    கணவன் - மனைவிக்குள் பணம், பதவி என எத்தனை விஷயங்களில் வேண்டுமானாலும் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் இருவரில் ஒருவர் காணாமல் போகக் காரணமாகிவிடக்கூடாது.
    திருமண உறவில் தன்னைத் தொலைக்கிற பெண்கள் சகஜம். கணவன் - மனைவிக்குள் பணம், பதவி என எத்தனை விஷயங்களில் வேண்டுமானாலும் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் இருவரில் ஒருவர் காணாமல் போகக் காரணமாகிவிடக்கூடாது. வேலையை விட்டோ, வேறு தியாகங்கள் செய்தோதான் தன்னைச் சிறந்த இணையாக நிரூபிக்க வேண்டும் எனப் பெண்கள் நினைக்க வேண்டாம். இருவரும் சமம் என நம்பி வாழ்வதில்தான் வாழ்க்கையின் அர்த்தமே அடங்கி இருக்கிறது

    சிறு வயது முதல் அம்மா அல்லது அப்பாவுடன் நெருக்கம்மில்லாமலேயே வளர்வது, பெற்றோரில் இருவரின் அல்லது ஒருவரின் அருகாமை கிடைக்காமல் வளர்வது, விவாகரத்து அல்லது இறப்பின் காரணமாக ஒற்றைப் பெற்றோருடன் வாழ்வது, பெற்றோரின் தகாத உறவு,பெற்றோர் தனக்காக நேரம் ஒதுக்காதது, அதிக உணர்ச்சி வசப்படுகிற, கொடூரமாக நடந்துகொள்கிற பெற்றோரின் அணுகுமுறை, தவறான முன்னுதாரணமாக வாழ்கிற பெற்றோரின் வளர்ப்பு, எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டும்,கடிந்து கொண்டும் இருக்கும் பெற்றோரின் மனப்போக்கு…இப்படி வளர்ப்புமுறையில் நிகழ்கிற தவறுகள், ஒரு பெண்ணின் பிற்கால வாழ்க்கையை, உறவைப் பெரிதும் பாதிக்கலாம்.

    பெண்களைப் பற்றிய சமுதாயத்தில் பார்வையிலும் பாரபட்சங்களுக்குப் பஞ்சமில்லை. 50 சதவிகித பெண்கள், தங்கள் குழந்தைப் பருவத்தில் யாரேனும் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளவர்களாகவே இருக்கிறர்கள். உலக அளவில் 50 சதவிகித திருமணங்கள் விவகாரத்தில் முடிகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? எல்லோரையும் நம்பிவிடுவது… கண்டதும் காதல் கொள்வது… இப்படிப் பட்ட மனநிலையில் இருக்கும் பெண்கள்தான் பின்னாளில் திருமண உறவில் சிக்கலை சந்திக்கிறார்கள். இத்தகைய பெண்களிடம் சில அறிகுறிகளைக் காணலாம்.

    காதல் என்பதை யதார்த்தமான உணர்வாகப் புரிந்துகொள்ளாமல், அதை ஒரு மாயையான, கற்பனையான உணர்வாகவே நினைத்துக் கொள்வார்கள்.

    திருமண உறவில் தன்னைத் தொலைக்கிற பெண்கள்

    மோசமாக நடந்தும் பெற்றோரிடமிருந்து விடுதலையாக, கண்டதும் காதலில் விழுந்துவிடுவார்கள். அதாவது, ஒரு இழப்பை ஈடுகட்ட, இன்னொரு உறவைத் தேடிக்கொள்வார்கள்.

    காதலோ, திருமணமோ தோல்வியடைந்திருந்தால், அந்தச் சோகத்திலிருந்து மீட்டுக் கொள்ளவும் சட்டென இன்னொரு காதலில் விழுவார்கள்.தனிமையில் உழல்கிற பலரும், அதிலிருந்து தப்பிக்க இப்படிப் பொருந்தாத காதல் அல்லது உறவில் புதைந்து போவதுண்டு.

    சரி… இதையெல்லாம் மாற்ற முடியுமா ? முடியும். அதற்கு ஒரே தீர்வு… உங்கள் வாழ்க்கையின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வதுதான் ! அதெப்படி ?

    கண்டதும் காதல் கொள்ளத் துணியாதீர்கள், எவ்வளவு தான் அருமையான நபராக இருந்தாலும், அவர் மீது கொண்ட நல்லெண்ணத்தால் உடனே அவருடன் காதல் கொள்வதோ, உறவில் இணைவதோ வேண்டாம்.

    உங்களுக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறதா ? அவரை அடிக்கடி சந்தித்துப்பேசுங்கள். அவர் உங்களை எப்படி நடத்துகிறார் எனப் பாருங்கள். பொதுவாக பெண்களைப் பற்றிய அவரது அபிப்ராயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். பெண்களை மதிக்காதவர் என்றால், உங்களை மட்டும் மதிப்பார் எனத் தவறான நம்பிக்கை கொள்ள வேண்டாம். அதே நிலைதான் பின்னாளில் உங்களுக்கும் வரும்.

    தான் மிகவும் அழகானவர்… மற்றவரைப் கவரக்கூடியவர் என்கிற எண்ணம் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் மிகச்சுலபமாக ஓர் உறவுக்குள் சிக்குகிறார்கள். தன்னைப் பற்றிப் உயர்வு மனப்பான்மையும் அதிக நம்பிக்கையும், வேறு எதைப் பற்றியும் யோசிக்க விடாமல், உடனடியாக ஒரு திருமணத்திலோ, உறவிலோ ஈடுபடச் செய்துவிடுகிறது.

    ஒருசில சந்திப்புகளிலேயே உங்களைப் பற்றிய எல்லா உண்மைகளையும் எதிராளியிடம் பகிர்ந்துகொள்வதும், நெருக்கமாவதும், பழைய காதல்,உறவுகளைப் பற்றிய விவரங்களைச் சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

    மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
    வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்று அடிக்கடி செல்பேசியை திறந்து பார்ப்பதே ஒரு கட்டாயச் செயலாகிவிட்டது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாது போலிருக்கிறது.

    கடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில் நிலையம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. பள்ளிகளில் செல்பேசியை எடுத்துச்செல்ல தடை உள்ளது. ஆனாலும் சில மாணவர்களிடம் செல்பேசிகள் உள்ளன. சிறைச்சாலைக்குள் கைப்பேசிகள் இருப்பதைப் போலத்தான் தடை செய்யப்பட்ட பள்ளி விடுதியிலும் கைப்பேசிகள் உள்ளன. சில வேளைகளில் பெற்றோர்களே ரகசியமாக பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள்.

    மாணவர்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டரில் விளையாடிய விளையாட்டை இப்போது கைப்பேசியில் விளையாட வசதி வந்துவிட்டது. இதனால் இளைஞர்கள் கைப்பேசியில் தீவிரமாக புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். இது ஒரு வகை போதை. இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு தினசரி கடமைகளை செய்து முடிக்க முடியாமல் போய்விடுகிறது. காலப்போக்கில் எந்த தொழிலையும் செய்து முடிக்கும் திறமையும், மனமும் இல்லாமல் போய்விடுவதால் அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது.

    கைப்பேசி விளையாட்டுகள் சிலிர்ப்பையும், நடுக்கத்தையும், திகிலையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்துகிறது. இளைஞர்களை கவர்ந்து ஈர்க்கும் விதமாகத்தான் விளையாட்டுகளை சுவாரசியமாக வடிவமைத்திருக்கிறார்கள். வளர் இளம் பருவத்தினர் தேடும் புதுமை, சாகசம், திரில், வெற்றியுணர்வு போன்றவை இந்த விளையாட்டில் கிடைக்கிறது. பாலியல் உணர்வு, பலாத்கார உணர்வு போன்றவை தூண்டப்பட்டு மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு உடல் முழுவதும் அது உற்சாக தீயாக பரவுகிறது.

    எனவேதான் இந்த கம்யூட்டர் விளையாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் மாணவர்கள் பல மணிநேரம் அதிலே விழுந்துகிடக்கிறார்கள். இவர்கள் இரவு முழுவதும் இந்த மாய விளையாட்டில் முடங்கிக் கிடப்பதால் பகலில் அவர்களால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல முடிவதில்லை. சென்றாலும் அங்கேயே தூங்கிவிடுகிறார்கள். பாடங்களில் இவர்கள் சாதாரணமாக தோற்றுவிடுகிறார்கள். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் பெரும்பாலும் பெற்றோர்கள் விழித்துக்கொள்கிறார்கள்.

    கல்லூரிகளிலிருந்தும் பெற்றோர்களுக்கு தகவல் வந்துள்ளது. அதில் இப்போது ‘பப்ஜி’ என்ற ஆன்லைன் விளையாட்டுதான் பெருவாரியாக மாணவர்கள் விளையாடும் கம்ப்யூட்டர் விளையாட்டு என்றும், 40 கோடி இளைஞர்கள் உலகளவில் விளையாடுகிறார்கள் என்றும், அதில் 8 கோடி பேர் இந்தியர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இது தடை செய்யப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு. ஆனால் இளைஞர்கள் எந்த தடையுமின்றி விளையாடுகிறார்கள். இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட ‘ப்ளு வேல்’ என்ற விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதையும் சிலர் பெற்றோர்களை கூட கொலை செய்ததையும் நாம் கேள்விப்பட்டோம்.

    இன்று கிட்டத்தட்ட எல்லா கைப்பேசியிலும் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். சராசரி இந்தியன் ஒரு மணி நேரம் விளையாடும் அளவிற்கு கைப்பேசி விளையாட்டு வளர்ந்துவிட்டது. அதாவது எல்லாரும் விளையாடவில்லை என்றாலும் ஒரு சிலர் பல மணிநேரங்கள் விளையாடுகிறார்கள் என்பது அதன் பொருள். விளையாடும் நபர் தினமும் 2 முறையாவது விளையாடுகிறார்கள். இந்தியாவில் 25 கோடி மக்கள் இந்த கைப்பேசி வீடியோ விளையாட்டு விளையாடி உலகில் முதல் ஐந்து இடத்தில் நாம் இருக்கிறோம்.

    நான் குறிப்பிட்ட பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டு கடந்த மார்ச் மாதம் தான் கைப்பேசியில் அறிமுகமாகி இருக்கிறது. அதற்குள் அத்தனை பேர் பதிவிறக்கம் செய்துவிட்டார்கள்.

    இந்த பப்ஜி விளையாட்டில் விமானத்திலிருந்து பாராசூட்டில் குதித்து ஒரு தீவில் இறங்க வேண்டும். அங்கு கவசத்தையும் வாங்கிக்கொண்டு துப்பாக்கியையும், எதிரிகளையும் எதிர்கொள்ள வேண்டும். பின்னர் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு ஒரு கமாண்டோ வீரர்போல எதிரிகளைச் சுட்டுக்கொல்ல வேண்டும். அனைத்து எதிரிகளையும் ஒழித்த பின்னர் இறுதியில் நாம் மிஞ்சியிருந்தால் நாம்தான் வெற்றியாளர். நாம் சுடப்பட்டால் போர்க்களத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்.

    குழந்தைகளின் கைப்பேசி விளையாட்டு போதை

    ஒரு ரவுண்டு விளையாட 30 நிமிடம் என்று பத்து ரவுண்டு விளையாடினால் என்னவாகும்? கிட்டத்தட்ட ஒரு 20 மதிப்பெண் பாடம் படித்து முடிக்கும் நேரம் வீணாகிவிடும். ஆனால் பாடம் படிக்கும் ஒரு அயற்ச்சியோ இதில் இல்லை. இங்கு உலக மக்களை எதிர்கொள்ளவும், ராணுவப் போர் புரியவும் வாய்ப்பு கிடைக்கிறது. வாய்மொழி உத்தரவு பிறப்பித்துக்கூட எதிரியை சாகடிக்கலாம். இதில் போட்டிகள் உண்டு. அதில் பதக்கங்கள் வேறு கிடைத்துவிடுகிறது. எனவே மாணவர்கள் இதனால் கவரப்பட்டும், கவ்வப்பட்டும், விளையாடியும், தோற்றும், ஜெயித்தும் அடிமையாகி விடுகின்றனர். தொடர்ந்து விளையாடுவது அவர்களின் உயிரியல் தேவையாக மாறிவிடுகிறது. அதாவது விளையாடவில்லை என்றால் குடிகாரர்களைப் போல கை உதறல் ஏற்படும்.

    கைப்பேசி விளையாட்டு போதைக்கு அடிமையான மாணவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இரவு முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது கைப்பேசியுடன் உறவாடிக்கொண்டிருப்பார்கள். பெற்றோர் பார்த்ததும் சுதாரித்துக்கொண்டு பள்ளி அசைன்மெண்ட் என்று சொல்லிவிடுகிறார்கள். காலையில் எழமாட்டார்கள், கல்லூரிக்கும் வழக்கமாக போகமாட்டார்கள். பகலிலும் தூங்கிவழிவார்கள்.

    வீடியோ விளையாட்டிற்கு அடிமையானவர்கள் கம்ப்யூட்டர் விளையாட்டு உலகத்தில் மட்டும் இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு தன்னை சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவர்கள் விளையாட தேவையான நபர்கள் வரும் நேரத்திற்காக காத்திருப்பார்கள். அந்த நேரம் வந்ததும் துரிதமாக ஓடிச்சென்று அவர்கள் விளையாட்டைத் தொடர்வார்கள்.

    செய்ய வேண்டிய தினசரி கடமைகளையும் புறக்கணித்து இந்த கம்யூட்டர் விளையாட்டில் மூழ்கிக் கிடப்பதால் இந்த இளைஞன் பெரிய உடல்நலப்பாதிப்பிற்கும், மனநல பாதிப்பிலும், சமூக நல பாதிப்பிற்கும், அவமதிப்பிற்கும் உள்ளாகி விடுகிறார்கள்.

    இப்படிப்பட்ட நிலையை கண்டதும் உடனே மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர், உறவினர் என்று தனித்தனியாகவும் கூட்டாகவும் இவனது செயல்பாட்டில் தலையிட்டு இந்த விபரீத விளையாட்டை நிறுத்த முயற்சிக்கலாம். மாணவர்கள் மதிக்கும் ரோல்மாடல்கள் உண்டு. அவர்களிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெறலாம். ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச்சென்று இந்த விளையாட்டிற்கு இடைவெளி ஏற்படும் ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம். உடலால் விளையாடும் ஓடுதல், சைக்கிள், கைப்பந்து, கால்பந்து என்ற விளையாட்டுகளில் தினமும் 2 மணி நேரமாவது ஈடுபடுத்தலாம். பெற்றோர்களாகிய நீங்களே பிள்ளைகளுடன் நடைபயணம் செல்லலாம். விளையாட்டிற்காக ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பு வீணானாலும் பரவாயில்லை. இது ஒரு சிகிச்சை என்றே எடுத்துக்கொள்ளலாம்.

    1996-ம் ஆண்டு முதல் போக்கிமேன் விளையாட்டை பல மாணவர்கள் விளையாடி நேரத்தை வீணடித்து பள்ளி கல்வியை தவறவிட்டார்கள். அதில் சிலர் சுதாரித்துக்கொண்டு பின்னர் தங்களை திருத்திக்கொண்டார்கள்.

    உணவு போதை, சினிமா போதை, கிரிக்கெட் போதை, புகை போதை, மது போதை, பாலியல் போதை என்ற வரிசையில் இன்று இளைஞன் சீரழிவது இந்த கைப்பேசி போதையால்தான். மற்ற எல்லா போதைகளையும் விட கொடிய ஒரு நோய் இது என்று சந்தேகமின்றி கூறிவிடலாம்.

    மாணவர்கள் கைப்பேசி விளையாட்டிற்கு அடிமையாயிருப்பதை அறிந்த தயாரிப்பு நிறுவனங்கள் 700 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே இன்னும் அதிகமாக போதை தரும் கவர்ச்சி விளையாட்டுகள் சந்தையில் விரைவில் வெளிவந்துவிடும். எனவே பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள். கஜா புயல் எச்சரிக்கை, ஆசிய சுனாமி எச்சரிக்கை போன்று இந்த கைப்பேசி விளையாட்டு போதையின் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை சீரியசாக எடுத்து கொள்ளுங்கள்.

    மாணவர்களே இது வேண்டாம் நீங்கள் விளையாட வேண்டியது கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், நீச்சல் போன்ற நிஜமான விளையாட்டுகள். மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

    முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., காவல்துறை இயக்குனர்.
    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - ஒரு கப்,
    வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
    பச்சைப் பட்டாணி - அரை கப்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    தினை அரிசி வெஜிடபிள் உப்புமா

    செய்முறை :

    வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதித்ததும் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் வேக வைக்கவும்.

    தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தினை அரிசி வெஜிடபிள் உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தலைமுடி பராமரிப்பில் கண்டிஷ்னரின் தேவை குறித்து ஒரு புரிதல் வேண்டும். தலைமுடிக்கான பராமரிப்பில் கண்டிஷ்னரின் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.
    ஹேர் கண்டிஷனர் என்பது இன்றைய நாட்களில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாக மாறியுள்ளது. ஆனால் கண்டிஷனர் ஏன் பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அதனைப் பற்றிய சந்தேகம் இன்றும் நம்மில் பலருக்கு உண்டு. தலைமுடி பராமரிப்பில் கண்டிஷ்னரின் தேவை குறித்து ஒரு புரிதல் வேண்டும். தலைமுடிக்கான பராமரிப்பில் கண்டிஷ்னரின் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.

    தலைமுடியை கவனமாக பராமரிக்க கண்டிஷனர் மிகவும் அவசியம். தலைமுடியை மென்மையாக மாற்றி அதனை எளிதில் நிர்வகிக்கக் கூடிய வகையில் அமைத்துக் கொடுப்பது கண்டிஷனர் ஆகும். தலையில் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, கூந்தல் உடையாமல் பாதுகாக்க உதவுகிறது கண்டிஷனர்.

    முடியை ஈரப்பதத்துடன் சரியான நிலையில் வைக்க உதவி முடி வளர்ச்சிக்கு உதவுவது கண்டிஷனர் ஆகும். உங்கள் கூந்தல் எந்த வகையாக இருந்தாலும் கூந்தலுக்கு கண்டிஷனர் அவசியம் தேவை. உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை பூட்டி கூந்தலுக்கு புத்துணர்ச்சியைத் தருவது கண்டிஷனர் ஆகும். கண்டிஷனர் உங்கள் கூந்தலை சுத்தம் செய்யும் முயற்சியின் முடிவாக உள்ளது. சில நேரங்களில் ஷாம்பூ பயன்படுத்தும்போது, உங்கள் கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெய்த்தன்மை குறைந்து, முடி சேதமடையும் வாய்ப்பு உண்டாகும். கண்டிஷனர் பயன்படுத்துவதால், முடியில் ஈரப்பதம் அதிகரித்து, முடி உடையும் வாய்ப்பு தடுக்கப்படும்.

    கண்டிஷனர் பயன்படுத்துவதால் உங்கள் கூந்தலின் தன்மை மற்றும் தோற்றத்தை அது மேம்படுத்துகிறது. சுருண்ட அல்லது வறண்ட தலைமுடியை எளிதாக நிர்வகிக்கும் வகையில் முடியை செம்மைப்படுத்துகிறது. தலைமுடியில் உள்ள சிக்கை எளிதில் போக்கி, கூந்தல் உடைவதைத் தடுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தலைமுடியை எளிதாகவும் விரைவாகவும் அலங்கரிக்க உதவுகிறது.
    அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காபி அதிகமாக குடிப்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கூறுவார்கள்.
    குழந்தை பிறந்து அவர்களுக்கு பாலூட்டும் காலம் முடியும்வரை அம்மாக்கள் அவர்களின் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில் அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காபி அதிகமாக குடிப்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கூறுவார்கள்.

    கர்ப்ப காலத்தில் காபி குடிப்பதை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நிறுத்தி விடவோ பெண்கள் அறிவுறுத்தப்படுவார்கள். ஏனெனில் காபியில் இருக்கும் காஃபைன் தொப்புள்கொடியை கடந்து கருவில் இருக்கும் குழந்தை மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான். அதனால் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் காபி பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிக்கலாமா?

    காஃபினுடைய பக்கவிளைவுகளால் பாலூட்டும் போது காபி குடிக்கலாமா? வேண்டாமா? என்று பெண்கள் பயப்பட தேவையில்லை. ஏனெனில் பாலூட்டும் காலத்தில் காபி குடிப்பது அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதுதான். மிதமான அளவில் நீங்கள் குடிக்கும் காபியில் இருக்கும் காஃபைன் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு செல்லும்போது அது அவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 300 மிகி அளவிற்கு காஃபைன் எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு மேலும் குடிக்க வேண்டுமென்று ஆசை இருந்தால் காஃபைன் குறைவாக இருக்கும் வேறு பானங்களை குடிப்பது நல்லது.
    பட்டாம்பூச்சி உடற்பயிற்சி தித்லி ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தை எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் செய்யலாம்.
    செய்முறை :

    தரையில் உங்கள் கால்களை நேராக முன்னோக்கி நீட்டி அமரவேண்டும். உங்கள் பின்பகுதியும் முதுகுத் தண்டும் நேராக இருக்க வேண்டும். உங்கள் இடுப்பு (பெல்விக்) எலும்புகளை நோக்கி உங்கள் பாதம் வருமாறு முழங்கால்களை மெதுவாக மடக்க வேண்டும். இரண்டு பாதங்களை ஒன்று சேர்க்க வேண்டும். உங்களுடைய இடுப்பு பகுதியை நோக்கி எவ்வளவு தூரம் உங்களால் கொண்டுவர முடியுமா அவ்வள்வு தூரம் கொண்டு வாருங்கள்.

    உங்களை ஒருபோதும் அதிக சிரமத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளாதீர்கள் உங்கள் கைகளால் இருபாதங்களையும் பிடித்து முழங்காலுக்கு எதிர்திசையில் இருக்குமாறு செய்ய வேண்டும் உங்கள் முழங்காலை மெதுவாக தரையை நோக்கி நகர்த்தவும். உங்கள் வசதிக்கு ஏற்றவாறு மட்டும் செய்யவும். உங்கள் முழங்கால்களை மெதுவாக அமுக்கவும். ஆனால் கடுமையான திடீர் மாற்றங்களை எதையும் செய்ய வேண்டாம். தரையை தொட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எவ்வளவும் பொருமையாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பொருமையாக செய்யுங்கள். உங்கள் முழங்களை மெதுவாக மேலே தூக்கவும்.

    பயன்கள்

    இந்த உடற்பயிற்சியின் மிக முக்கியமான பயனாக உஙகள் உள் தொடைகள், இடுப்பும் தொடையும் சேருமிடம் மற்றும் இடுப்பு ஆகியவற்றை ஸ்ட்ரெட்ச் செய்கிறது. பிரசவத்திற்கு உதவும் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான பெல்விக் பகுதியை உறுதியாக்கி பிரசவத்தை எளிமையாக்குகிறது. வயிறு சார்ந்த உறுப்புகள், கருப்பை மற்றும் புரோஸ்டேட் சுரப்பிகளின் செயல்திறனை தூண்டுகிறது. உடலின் சுழற்சி மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் குடல் அசைவுகளை எளிதாக்குவதற்கும், திரவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் இது உதவுகிறது. கால் மற்றும் அடிவயிற்று பிடிப்புகளில் இருந்து மிகச்சிறந்த தீர்வுகளை அளிக்கிறது.
    காலை உணவான இட்லியை எப்படி மறுபடியும் சுவையான மற்றும் புதுமையான முறையில் மாலை நேர சிற்றுண்டியாக மாற்றுவது என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஒரு கப் நறுக்கிய தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
    கடுகு
    கடலைபருப்பு
    மஞ்சள் தூள் - அரை டேபிள்ஸ்பூன்
    இட்லி - 5
    கொத்தமல்லி - தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

    மசாலா இட்லி

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

    அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து பிறகு அரை ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்த பின்பு அந்தக் கலவையை சிறிது நேரம் நன்கு வேக வைக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து இட்லி துண்டுகள் அந்த மசாலா கலவையில் சேரும் வரை கவனமாக உடையாமல் கிளறி விடவும்.

    கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    சூடான சுவையான மசாலா இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×