என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை உணவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை மாவில் ஜாலர் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்
    தேங்காய் பால் - ஒரு கப்
    தண்ணீர் - தேவைக்கு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    முட்டை - 1

    கோதுமை ஜாலர் தோசை

    செய்முறை:

    கோதுமை மாவை சலித்து வைத்து அத்துடன் முட்டை சேர்த்து தேங்காய் பால் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து வைத்து வடிகட்டி வைக்கவும்.

    இந்த மாவை ஒரு விரும்பிய மாடலில் கோனில் ஊற்றி கொள்ளவும்.

    நான் ஸ்டிக் பேனில் பட்டர் அல்லது நெய் தடவி விரும்பிய மாடலில் கோனில் வைத்து ஊற்றி விடவும். திருப்பிப் போட தேவையில்லை.

    சுவையான ஜாலர் தோசை ரெடி...

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    யோகம் என்றால் மனதை ஒருநிலைப்படுத்துதல். யோகா தெரபி மூலம் ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ், வயிற்றுவலி ஆகிய நோய்களை குணப்படுத்தலாம்.
    யோகம் என்றால் மனதை ஒருநிலைப்படுத்துதல். ஆசனம் என்ற சொல்லுக்கு இருக்கை என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிப்பதே யோகாசனம். தினமும் 10 நிமிடம் சூர்ய நமஸ்காரம் செய்தால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம். யோகா தெரபி மூலம் ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ், வயிற்றுவலி ஆகிய நோய்களை குணப்படுத்தலாம்.

    ஆசனம் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, அல்சர் ஆகிய நோய்களை கட்டுப்படுத்தலாம். வாதம், பித்தம், கபம் என 3 பிரிவுகளை உள்ளடக்கியது இந்த யோக வைத்திய முறை. வாதப்பிரச்னை உள்ளவர்கள் மதியவேளைகளிலும், பித்த பிரச்னை உள்ளவர்கள் காலையிலும், கபம் பிரச்னை உள்ளவர்கள் மாலையிலும் ஆசனம் செய்வது அவசியம். பிராணாயாம முறைகளை கடைப்பிடித்தால் வயதானாலும் இளமையுடன் இருக்கலாம்.

    இதற்கு 16-64-32 என்ற சூத்திரத்தை பின்பற்ற வேண்டும். 16 நொடிகள் மூச்சை உள்ளே இழுக்க வேண்டும், 64 நொடிகள் மூச்சை அப்படியே நிறுத்தவேண்டும், 32 நொடிகள் மூச்சை வெளியேற்ற வேண்டும். 3 வயது முதல் 85 வயது வரை இருபாலரும் யோகாசனம் செய்யலாம். நோயின் தன்மைக்கு ஏற்ப சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள், அல்சர், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யலாம்.

    பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, பி.சி.ஓ.டி குறைபாட்டை போக்க உத்தான பாதாசனம், புஜங்காசனம் போன்ற ஆசனங்கள் உள்ளன. ஆசனங்களை பயிற்சியாளர் இன்றி செய்யக்கூடாது. அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலி, கால்வலி, கால்வீக்கம் ஆகியவற்றையும் ஆசனங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். இயற்கையான பிரசவத்துக்கும் ஆசனங்கள் உள்ளன.
    பெரிய வெங்காயம் சமையலுக்கு மட்டுமல்ல முடி வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வெங்காயத்தை கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
    பெரிய வெங்காயம் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல. முடி வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது.

    வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது முடியின் பளபளப்பு அதிகமாகிறது. தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது. பேன் தொல்லை குறைகிறது. வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

    வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின் மிக்ஸியில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு துணியில் நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின் வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும். விரல்களால் சுழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும். வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலையை நன்றாக அலசவும். வாரம் 1 முறை 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.

    வெங்காய சாறுடன் ஆலிவ் எண்ணெயை கலக்கவும். பின் தலையில் நன்றாக இந்த சாறை தடவி மசாஜ் செய்யவும். 2 மணி நேரத்திற்கு பிறகு கூந்தலை அலசவும். இதனை தொடர்ந்து செய்வதால் வலிமையான மற்றும் பொடுகு இல்லாத கூந்தலை பெறலாம்.
    சமூக சூழலும் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது.
    கிராமங்களில் வசிக்கும் பெண்களைவிட நகர்ப்புற பெண்களுக்கு பணிச்சுமை சற்று குறைவாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். நகரில் வசிக்கும் பெண்கள், வேலை அதிகமாக இருந்தால் பணியாளர்களை வைத்துக் கொள்கிறார்கள். நகரப் பெண்கள் செய்யும் வேலையில் முழு உடலும் இயங்குவதில்லை.

    முழு உடலும் இயங்கி, இதய துடிப்பு அதிகரிக்காதபோது, அதை முழுமையான இயக்கமாக, சுறுசுறுப்பான செயலாக கருதமுடியாது. இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அண்மை ஆய்வறிக்கையிலும் மக்களின் சுறுசுறுப்பு, மந்தத்தன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஆண்களைவிட பெண்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. செல்வ வளம் கொண்ட நாடுகளைவிட, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அதிக செயல்திறன் கொண்டுள்ளதாகவும், சுறுசுறுப்பாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. அதிகம் செயல்படாதவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

    நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்பதோடு, சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாவதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்ல, குறைந்த அளவே செயல்படுபவர்களின் மூளையின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    இந்தியாவில் 43 சதவீத பெண்களும், 23 சதவீத ஆண்களும் செயல்படுவது குறைவாக இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, உலகில் மந்தமாக செயல்படுபவர்கள் குவைத் நாட்டு மக்கள் என்றும், அதிக சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் உகாண்டா நாட்டு மக்கள் என்றும் கூறுகிறது. உடல் செயல்பாடு என்பது உடலால் செய்யப்படும் அனைத்து செயலுமே என்று சொன்னாலும், சுறுசுறுப்பான செயல் என்பது, முழு உடலையும் இயக்குவதாக இருக்க வேண்டும். உதாரணமாக, வேகமான நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுவது டென்னிஸ் விளையாடுவது, நீச்சல் போன்றவற்றில் முழு உடலும் செயல்படுகிறது என்று கூறலாம்.

    வயதுவந்த ஒருவர், வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்தால், உடல் சரியாக செயல்பாட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வதால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, சுவாசம் வேகமாகிறது, உடல் சூடாகிறது, உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது, இவை மூன்றும் நடைபெறும். ஷாப்பிங் செல்வது, சமையல் செய்வது அல்லது மேலே கூறிய மூன்றும் ஒன்றிணையாத வேலைகளை எத்தனை மணி நேரம் செய்தாலும் அது உடல் செயல்பாட்டிற்கான பலன்களை கொடுத்துவிடாது. முழு உடலும் செயல்படும்போதுதான், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஆண்களைவிட பெண்கள் சற்று மந்தமாகவே செயல்படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருப்பதாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, பொதுவாக வீடுகளில் குழந்தைகளை கவனித்துக்கொள்வது தாயின் பொறுப்பு. இவற்றுக்கான வேலைகளில் உடலின் இயக்கம் குறைவு. வெளி வேலைகளை செய்வது ஆணின் பொறுப்பாக கருதப்படுகிறது, இதில் உடல் இயக்கம் அதிகமாக தேவைப்படுகிறது. இதைத்தவிர, சமூக சூழலும் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது. எனவே ஆண்களை விட பெண்கள் சற்று மந்தமாகவே இருக்கிறார்கள்.
    சப்பாத்தி, நாண், பூரி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 5
    பட்டாணி - 100 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 3
    சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    முட்டை பட்டாணி பொரியல்

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறவும்.  

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.  

    சூப்பரான முட்டை பட்டாணி பொரியல் ரெடி.

    சப்பாத்திக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மனிதர்கள் இப்போது பெரும்பாலும் பதற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். சிலவகை உணவுகளை சாப்பிட்டால், பதற்றம் குறையும்.
    மனிதர்கள் இப்போது பெரும்பாலும் பதற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பதற்றம் தென்படுகிறது. சிலவகை உணவுகளை சாப்பிட்டால், பதற்றம் குறையும்.

    முட்டை: பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முட்டை உதவும். மேலும் இதில் இருக்கும் டிரைப்டோபன், செரோடானின் போன்றவை தூக்கம், மனநிலை, நடத்தை ஆகியவைகளை சீராக்கும்.

    பூசணி விதை: இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது. ரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கவும் உதவுகிறது.

    சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் இருக்கும் கோகோ மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்கவும் செய்யும். இதில் பாலிபினால்கள், பிளாவோனோய்டுகள் அதிகமிருக்கிறது. அவை நரம்பு அழற்சியை கட்டுப்படுத்துவதற்கும், மூளையில் செல்கள் இறப்பு குறைவதற்கும் உதவுகின்றன. அத்துடன் சாக்லேட்டில் இருக்கும் டிரைப்டோபன் மன நிலையை மேம்படுத்தவும், நரம்பியல் கடத்திகளின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவுகிறது. டார்க் சாக்லேட் வாங்கும்போது அதில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக கோகோ கலந்திருக்க வேண்டும்.

    தயிர்: பதற்றமான மனநிலை கொண்டவர்கள் உணவில் தயிரை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. மனநிலையை மேம்படுத்தவும் உதவும். மூளையின் இயக்கம் சீராக நடக்கவும் தயிர் துணைபுரியும். நான்கு வாரங்கள் தொடர்ந்து தினமும் இரண்டு முறை தயிர் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழைப் பழங்கள், ஓட்ஸ், சியா விதைகள், சிட்ரஸ் பழங்கள், குடை மிளகாய் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிடுவதும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    கோடை காலம் மட்டுமின்றி மற்ற பருவ காலங்களிலும் சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், சருமம் பொலிவோடும் இருக்கும்.
    மழைக்காலம் தொடங்கிவிட்டால் நிறைய பேர் பருகும் தண்ணீர் அளவை குறைத்துவிடுகிறார்கள். எல்லா சீதோஷண நிலைகளிலும் போதுமான அளவு தண்ணீர் அதிகம் பருக வேண்டியது அவசியமானது. நாள் முழுவதும் சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், சருமம் பொலிவோடும் இருக்கும்.

    கோடை காலம் மட்டுமின்றி மற்ற பருவ காலங்களிலும் நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும். அதிலும் மழைக்காலத்தில் சாப்பிடுவது தலைவலி, தொற்றுநோய் பாதிப்புகளை தடுக்க உதவும். சருமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் பயன்படும். மழைக்காலத்தில் முகத்தில் அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். முகத்தில் அதிகபடியான எண்ணெய் படிவதும் கூடாது. பாலை கொண்டு முகத்தை சுத்தப்படுத்தலாம். அது சருமத்தை சுத்தமாக பராமரிக்க உதவும்.

    மழைக்காலங்களில் ‘சன்ஸ்கிரீன்’ பூசுவதை நிறைய பேர் தவிர்த்துவிடுகிறார்கள். புறஊதாக் கதிர்களின் ஆதிக்கம் கோடை காலம் மட்டுமின்றி மழைக்காலத்திலும் பரவலாக இருக்கும். அதில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் பூசுவது நல்லது.

    மழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பில் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. வாரத்திற்கு மூன்று முறையாவது கூந்தலை தண்ணீரில் அலசுவதோடு கண்டிஷனரையும் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கூந்தலுக்கு மசாஜ் செய்து வருவதும் நல்லது. அது தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். உச்சந்தலையில் எண்ணெய் மசாஜ் செய்து வருவதும் சிறப்பானது. அது தலைப்பகுதி உலர்வடைவதை தவிர்க்க உதவும். ஈரப்பதத்தை தக்க வைக்கவும் வழிவகை செய்யும். அதேவேளையில் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்த கூடாது. மழைக்காலத்தில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    மழைக்காலத்துக்கு ஏற்ற ஆடைகளை உடுத்த வேண்டும். எளிதில் வியர்வையை உறிஞ்சும் ஆடைகள்தான் மழைக்காலத்திற்கு ஏற்றது. அதுபோல் வெளியே செல்வதற்கு சவுகரியமான காலணிகளையும் பயன்படுத்த வேண்டும்.

    பழங்கள் மற்றும் காய்கறிகளை நறுக்கினால் உடனே பயன்படுத்த வேண்டும். வெட்டி வைத்துவிட்டு வெகுநேரம் கழித்து சாப்பிடக்கூடாது. அதில் பாக்டீரியாக்கள் எளிதில் ஊடுருவிவிடும். அதுபோல் திறந்தவெளியில் பரிமாறப்படும் உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    மழைக்காலத்தில் நீரிழப்பு பிரச்சினையும் உருவாகும். அதனை தவிர்க்க நிறைய திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். இளநீர், எலுமிச்சை ஜூஸ், பழ சாறுகள், காய்கறி சூப் போன்றவைகளை பருகலாம். அதேவேளையில் சோடா வகைகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை பருகக்கூடாது.

    கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நீர்ச்சத்து கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அது சருமத்திற்கு புது பொலிவு தரும்.

    உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் முன்கூட்டியே தூங்க செல்ல வேண்டும். அது உடல், மன ஆரோக்கியத்திற்கு உதவும்.
    கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்தும், போதிய ஓய்வும் அவசியம். கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்தும், போதிய ஓய்வும் அவசியம். கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள். கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

    புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். எதாவது ஒரு கை புறமாக படுப்பதே நல்ல படுக்கை முறை. அதிலும் இடது கைப்புறமாக படுப்பது மிகவும் சிறந்தது. மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்க கூடாது. இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும்.

    இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கும் வைத்து உறங்குவதன் மூலம் கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம். இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

    பெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், செரிமான கோளாறுகளினால் சிரமப்படுவார்கள். இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. இதுவே நெஞ்செரிச்சல் ஏற்பட காரணமாகிறது. எனவே எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும். அதே சமயம் குளிர்பானங்கள், காபி போன்றவைகளை இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள் குறிப்பாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க யோகா, மனதிற்கு இதம் தரும் பாடல்கள் போன்றவற்றை கேட்கலாம். அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கம் வரும் கரு வளர்ச்சியும் சீராக இருக்கும்.
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியம் காக்கும் கூழ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து பருகலாம். அந்த வகையில் இன்று ஜவ்வரிசி கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - அரை கப்
    பச்சை மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    தண்ணீர் - 1 கப்

    ஜவ்வரிசி கூழ்

    செய்முறை:

    ஜவ்வரிசியை கழுவி இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.

    ப.மிளகாய், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அது கொதிக்க தொடங்கியதும் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    பச்சை வாசம் நீங்கியதும் ஜவ்வரிசியை கொட்டி சிறு தீயில் கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து ருசிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலும்பு தேய்மானம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாங்க முடியாத வலி இவற்றிலிருந்து விடுபட இந்த ஆசனம் துணைப்புரியும்.
    அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களும், தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களும் அதிகம் பாதிக்கப்படுவது முதுகு தண்டு. எலும்பு தேய்மானம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாங்க முடியாத வலி இவற்றிலிருந்து விடுபட இந்த ஆசனம் துணைப்புரியும்.

    செய்முறை

    விரிப்பின் மீது மல்லாந்து படுத்து இரு கால்களை முட்டி வரை குத்துக்காலிட்டு மடக்கவும். தலை, கழுத்து, தோள், பாதங்கள் தரையிலிருக்கும் படி செய்யவும். இடுப்பு, முதுகு, இருதொடைகள் உயர்த்தி, கைகளால் இடுப்பை தாங்கி கொள்ளவும். காலை வேளையில் இயல்பான மூச்சுடன் இரண்டு தடவை 15 வினாடிகள் செய்யவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்

    அதிக உடல் எடை கொண்டவர்களும், தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களும் இதை செய்யலாம். இதனால் ஏற்படும் இடுப்பெலும்பு தேய்மானம், முதுகு தண்டு தேய்மானம், அதனால் ஏற்படும் வலி ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தரும். இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்துப்பட்டை மற்றும் இடுப்பு பட்டை அணிவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
    பச்சிளம் குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. பலர் குழந்தை பிறந்ததுமே சர்க்கரை தண்ணீர் கொடுப்பார்கள். இது தவறான பழக்கம். இதனால், கலோரி அதிகமாவதோடு, குழந்தைக்கு இன்பெக்‌ஷனும் வரக்கூடும். தாய்ப்பாலிலேயே தேவையான நீர்ச்சத்து உள்ளது. அதனால் தண்ணீர் தர தேவை இல்லை. ஏழாவது மாதத்தில் திட உணவை கொடுக்க தொடங்கலாம். பலர் செரிமானம் எளிதாக, நன்கு குழைத்த மோர், தயிர்சாதம் மட்டும் கொடுப்பார்கள். குழந்தைக்கு பருப்பு சாதமும் கொடுக்கலாம். இதனால், உடலில் புரதம், விட்டமின் பி, நார்ச்சத்து ஆகியவை சேரும்.

    வேலைக்கு போகும் தாய்மார்கள் தாய்ப்பாலை சுத்தமான எவர்சில்வர் கிண்ணத்தில் பிடித்து, இறுக்கமான மூடி போட்டு, ப்ரிட்ஜில் வைத்துவிடலாம். தேவைப்படும்போது (12 மணி நேரத்துக்குள்) எடுத்துப் புகட்டலாம். ப்ரிட்ஜில் வைத்த பாலை கொதிக்க வைக்கக் கூடாது. ப்ரிட்ஜிலிருந்து எடுத்து, ஒரு மணி நேரம் வெளியே வைத்து, குளிர்ச்சி குறைந்ததும் குழந்தைக்கு புகட்ட வேண்டும். குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது, பால் வழிந்து கழுத்து, தோள்பட்டைமேல் பட வாய்ப்புள்ளது. இதை உடனுக்குடன் துடைக்காமல் விட்டால், சருமத்தில் சிறு ஒவ்வாமை ஏற்படலாம்.

    முதல் 3 மாதங்கள் வரை, குழந்தை 18 முதல் 20 மணி நேரம் தூங்கும். பிறகு, தூக்கம் படிப்படியாக குறையும். குழந்தை தூங்கும் இடத்தில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலை பயன்படுத்துவது நல்லது. ரசாயன கொசுவத்திகளை தவிர்க்க வேண்டும். ஹெபடைட்டிஸ் பி, போலியோ தடுப்பூசிகளை, குழந்தை பிறந்த ஆறாவது, ஒன்பதாவது மற்றும் பதின்மூன்றாவது மாதங்களில் அவசியம் போட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த ஊசிகள் போடப்படுகின்றன.

    குழந்தையின் உடலை முற்றிலுமாக மூடும் இறுக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான பருத்தி உடைகள் சிறந்தவை. காலை 7 முதல் 9 மணி வரை புற ஊதாக்கதிர்கள் இல்லாத சூரிய ஒளியில், குழந்தையை சூரிய ஒளிக்குளியல் எடுக்க வைப்பதால், விட்டமின் டி சத்து கிடைக்கும். இப்போது குழந்தைகளை, முதுகில் சுமக்கும் சிந்தெடிக் பேக்குகளில் தூக்கிக் கொண்டு போவது நாகரிகமாகி விட்டது. இது தவறு. சிந்தெடிக் ரப்பர் மற்றும் கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பேக்குகள் குழந்தையின் தோலை உறுத்தும்.

    குழந்தைகளுக்கான டயப்பரை ஒருமுறை சிறுநீர், மலம் கழித்த உடனே அகற்றிவிட வேண்டும். இல்லை என்றால் பிறப்புறுப்பு, தொடை இடுக்குகளில் படை, அரிப்பு ஏற்படலாம். தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் டயப்பர் பொருத்தியபடியே இருப்பதும் குழந்தைகளின் மென்மையான சருமத்தை பாதிக்கும் என்பதால், சிறிது நேரமாவது காற்றோட்டமாக விடுவது நல்லது. குழந்தைகளுக்கு டால்கம் பவுடர் போடக் கூடாது. ஏனெனில், குழந்தைகளுக்கு வியர்வை துளைகள் திறந்திருக்காது. இதனால், பவுடர் படியும் மடிப்புப் பகுதிகளில் சரும ஒவ்வாமை, தடிப்பு, அரிப்பு ஏற்படலாம்.

    இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. முடிந்தவரை பீடிங் பாட்டிலை குழந்தைக்குப் பழக்க வேண்டாம். இதனால், 3 வயதில் டம்ளரில் பால் குடிக்கப் பழக்குவது சிரமமாகிவிடும். குழந்தைக்கு ஒரு வயது நிறைவடையும் வரை, பசும்பாலை தவிர்ப்பது நல்லது. குழந்தையின் கை, கால், உடலில் மஞ்சள் தடவிக் குளிக்க வைப்பதால், மருத்துவ ரீதியாக எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், அது கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    ஒரு பேருந்தில் பயணம், அலுவலக பணி, கணவன்-மனைவி உரையாடல், பதவி உயர்வு, பரம்பரைச் சொத்து விவகாரங்கள் என்று எதில் வேண்டுமானாலும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு.
    இரண்டு தனி மனிதர்கள் அல்லது இரண்டு குழுவினர்களுக்கு இடையில் ஏதேனும் ஒரு பொருள் குறித்து ஏற்படும் கருத்து வேறுபாடுகள்தான் கற்பனைக்கு எட்டாத மோதல்களை ஏற்படுத்துகின்றன. சின்னஞ்சிறிய அல்லது மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் பெரும் மோதல்களை ஏற்படுத்தி விடுவது அன்றாடம் நாம் வாழ்வில் காணக் கூடிய காட்சியாகும். ஒரு பேருந்தில் பயணம், அலுவலக பணி, கணவன்-மனைவி உரையாடல், பதவி உயர்வு, பரம்பரைச் சொத்து விவகாரங்கள் என்று எதில் வேண்டுமானாலும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு.

    தான் பேச விரும்பிய செய்தியும், பேசுவதற்கு தேர்ந்து கொண்ட மனிதர்களும் சரியானவர்கள்தானா என்பதை நன்கு உறுதி செய்து கொண்ட பின்னரே பேச வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்; அத்தகைய பேச்சில் தான் முரண்பாடுகள், மோதல்கள் ஏற்படாது என்பது திருவள்ளுவர் கருத்து. முரண்பாடான எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் இருக்கும் அவைகளில் பேசாமல் இருப்பதே நல்லது என்ற கருத்து தோன்றும்படி, “புல்லவையில் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். மோதல்களைப் பேச்சின் மூலம் உருவாக்குவதை விட பேசாமல் இருப்பதே நல்லதல்லவா?

    மோதல்கள் ஏற்படுவதை தடுப்பது குறித்து மேலை நாடுகளில் பல அறிஞர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர்களான கென்னத் தாமஸ், ரால்ப் கில்மன் ஆகியோர் மோதல்களைத் தவிர்க்கும் முறைகள் பற்றி கூறியுள்ளனர். அவை வருமாறு:-

    முரண்பட்டு நிற்பவர்களிடம் திறந்த மனதுடன் நியாயமாக பேசி பார்க்க வேண்டும். விட்டுக்கொடுப்பதன் மூலமாக சமரசம் செய்துகொள்ள வேண்டும். முரண்பாடு கொண்டவர்களிடம் மோதி பார்த்து இறுதி முடிவை எட்ட வேண்டும். இணங்கிப்போய் விடுதல். இணைந்து செயல்படுவதன் மூலம் முரண்பட்டு நிற்பவர்களிடையே பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்து விட வேண்டும். இந்த முடிவுகள் அமெரிக்க அறிஞர்கள் இன்றைய நாட்களில் கூறியுள்ளவை; ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் இந்த செய்திகள் கூறப்பட்டு இருப்பது மாபெரும் அதிசயமாக தோன்றுகிறது.

    திருவள்ளுவர்,

    “இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லாத்
    தாவில் விளக்கம் தரும்”

    என்று கூறுவது மோதல்களைத் தவிர்க்கும் முறை பற்றியதாகும் என்பதில் ஐயம் இல்லை. முரண்பாடு தோன்றியிருக்கும் நிலையில் மிக்க கரிசனத்துடன் ஒருவர் பேசுவதே மற்றவரை கேட்க செய்யும். தமிழ் காப்பியமான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், சேரன் செங்குட்டுவன் கண்ணகி தெய்வத்திற்கு கோவில் கட்ட வடதிசை மன்னர்களைப் போரில் வென்று கல்லைக் கொணர்கிறான். தோற்ற வடதிசை மன்னர்களை ஏனைய தமிழ் மன்னர்களிடம் காட்டி வருமாறு அனுப்புகிறான்; சேரனின் வீரத்தை பாராட்டாமல் அவர்கள் கேலியாக பேசிய செய்தியை அறிந்த செங்குட்டுவன் கோபம் கொண்டு போர் தொடுக்க நினைக்கிறான். அப்போது மாடல மறையோன் என்னும் அந்தணன் பேசுகிறான்.

    “அரசர் ஏறே அமைக நின் சீற்றம்
    இகழாது என் சொற் கேட்டால் வேண்டும்”

    என்று தொடங்கி இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, உயிரின் நிலையாமை, யாக்கை நிலையாமை போன்றவற்றை கூறி அறச்செயல்கள் செய்வதே நிலைத்த பயன் தரும் என்பதை கூறுகிறான். செங்குட்டுவனின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுகிறது. நடைபெறவிருந்த பெரும்போர் தவிர்க்கப்படுகிறது. முறையான கருத்தை கூறவேண்டிய முறையில் கூறினால் மோதல்கள் தவிர்க்கப்படலாம் என்பதற்கு இது நல்ல சான்றாகும். மோதல்களைத் தவிர்ப்பதில் இரண்டாவது முறை, விட்டுக்கொடுத்துச் செல்வதாகும். விட்டுக்கொடுத்து போவதை பற்றி திருவள்ளுவர், “திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று” என்று கூறுகிறார்.

    ஒரு சிங்கம், கரடி, நரி மூன்றும் இணைந்து செயல்படுவதென முடிவு செய்து வேட்டைக்கு சென்று ஒரு விலங்கினை அடித்துக்கொண்டு வருகின்றன. விலங்கின் தசையைச் சமமான மூன்று பங்காக கரடி பிரிக்க சிங்கம் கோபம் கொண்டு கரடியை அடித்துக்கொன்றது. பின்னர் நரி பங்கு பிரித்தது. சிங்கத்திற்கு பெரிய பகுதியை ஒதுக்கி தனக்கு சிறிய துண்டினை எடுத்துக்கொண்டது. சிங்கம் மிக மகிழ்ந்து “இப்படி சரியாக பங்கு போட எங்கே கற்றுக்கொண்டாய்?” என்று கேட்க நரி “இப்போதுதான்! கரடிக்கு ஏற்பட்டதை கண்டு பங்கு போடுவது எப்படி என்று கற்றுக்கொண்டேன்” என்று பதில் கூறியது. இந்த கதை தேவைப்படும் சூழலில் விட்டுக்கொடுத்து போவதே சிறப்பு என்பதை கூறுகிறது.

    மோதல் தவிர்ப்பதில் மூன்றாவது முறை போட்டியிட்டு வெல்வதாகும். போட்டியில் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் இந்த முறையை தேர்வு செய்வார்கள். இதற்கும் பண்டைத்தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன. சோழன் நலங்கிள்ளி என்ற மன்னனுடன் போரிடுவதற்காக பகைவர்கள் வந்தபோது சோழன், “மெதுவாக வந்து என் பாதங்களில் வீழ்ந்து வணங்கினால் இரக்கப்பட்டு என் நாட்டையே கூட வழங்கி விடுவேன்; ஆனால் எனது வலிமையை உணராமல் போருக்கு வந்தவர்கள் தூங்கும் புலியைக் காலால் இடறியவர்கள் அழிவதைப் போல துன்புறுவது உறுதி” என்று கூறுகிறான்.

    இதை வஞ்சினம் கூறுதல் என்று இலக்கியங்கள் அழைக்கின்றன. மோதல்களைத் தவிர்ப்பதில் நான்காவது முறை ஒருவரின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகும். முரண்பட்ட இருவருக்கு இடையில் சீரான உறவு எப்போதும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த அணுகுமுறையைக் கையாள்வார்கள். இந்த அணுகுமுறையில் சிக்கல் தீர்க்கப்படும்போது பிடிவாதமுடையவர்கள் வெற்றி பெறும் நிலை ஏற்படும்.

    கம்பராமாயணத்தில் கைகேயி ராமனை காட்டுக்கு போகுமாறு கூறியபோது ராமன் கூறிய பதிலில், “ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறை” செயல்படுகிறது. ராமன், “மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பெனோ” என்று பதில் கூறுவதானது சிக்கல் தீர்க்கும் அணுகுமுறைக்கு தக்க சான்றாகும். இலக்குவன் கோபம் மூண்டு, “கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவேன் ?.... முதல் வானவர்க்கும் வலீஇது ஆம், விதிக்கும் விதி ஆம் என் வில் தொழில் காண்டி” என்று கூறுவது மோதி பார்க்கும் மனநிலையைக் காட்டும் பேச்சு.

    ராமனின் பேச்சு மற்றவர் நியாயத்தை ஏற்கும் பேச்சு. மோதல்களைத் தவிர்ப்பதில் ஐந்தாவது முறை இணைந்து பணியாற்றுவதாகும். முரண்பட்டு கொண்டிருக்கும் இரு தரப்பினரிடமும் பேசி சிலவற்றை ஒருவர் பெறவும் மற்றவர் சிலவற்றை பெறவும் வழிவகை செய்தல். இதனால் இரு தரப்பினருக்கும் நன்மையையும், இழப்பும் சமமாக இருக்கும்; அவரவர் பொறுப்புகளைப் பிரித்துக்கொடுத்து பணிகளில் ஈடுபடுத்துதல்; இதனால் இது என் வேலை; இது அவர் வேலை என்ற வேறுபாடு இல்லாமல் அவரவர் பணியைச் செய்ய வழி ஏற்படும். முரண்படுபவரைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு பணிசெய்ய இது உதவும்.

    முனைவர் ம.திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்.
    ×