என் மலர்
பெண்கள் உலகம்
- கைபேசி உபயோகிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
- வீட்டின் மொட்டை மாடியில் நடக்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி செய்வது மிக அவசியம். 8 வடிவம் என்பது கணிதத்தில் இன்பினிட்டியைக் குறிக்கும் குறியீடு. இந்த வடிவத்தின் மீது தொடர்ச்சியாக நடப்பதே 8 வடிவ நடைப்பயிற்சி ஆகும். ஆங்கிலத்தில் இது 'இன்பினிட்டி வாக்கிங்' எனப்படுகிறது.
8 வடிவத்தில் உள்ள மாறுபட்ட திருப்பங்கள் மற்றும் வளைவுகளில் நடப்பதால் இடுப்பு, வயிறு மற்றும் கால்களில் இருக்கும் பல்வேறு தசைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒட்டுமொத்த உடல் வலிமையும் மேம்பட உதவுகிறது.

பொதுவாக நாம் நடக்கும்போது எலும்புகளுக்கு மேலிருந்து கீழ் அழுத்தம் வரும். ஆனால் 8 என்ற வடிவில் நடக்கும்போது நாம் வளைந்து நடப்பதால் நடக்கும் திசை மாறி வெவ்வேறு திசைகளில் இருந்து எலும்புகள் மற்றும் தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.
8 என்ற எண்ணின் வடிவில் நடக்கும் போது காலை நேரத்தில் முடிந்தவரை வெளியிடங்களை தேர்வு செய்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. வெளியிடங்களில் நடக்க முடியாத சூழலில் வீட்டின் மொட்டை மாடியில் நடக்கலாம்.

மேலும் செருப்பு அல்லது ஷூக்கள் அணியாமல் வெறும் கால்களில் நடந்தாலே முழுமையான பலன்களை கொடுக்கும். 8 எண் வடிவில் நடக்கும் போது கீழ்க்கண்ட ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகிறது:-
உடல் எடை குறைதல், ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் வருதல், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகள் குறைகிறது. இளமையான தோற்றம் தருவதுடன் கண் பார்வைத்திறன் மேம்படுகிறது, மனஅழுத்தத்தை குறைக்கிறது, மூட்டுகளுக்கு வலு சேர்க்கிறது. 8 போன்ற வடிவில் நடக்கும்போது உடன் நடப்பவர்களிடம் பேசுவதும், கைபேசி உபயோகிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
அதிக மூட்டு வலி அல்லது கால்களில் சுளுக்கு பாதிப்புள்ளவர்கள், தலைசுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், புற்றுநோயாளிகள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆகியோர் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் 8 போன்ற வடிவில் நடக்க கூடாது.
- எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் இருக்கிறது.
- உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் பச்சை ஆப்பிளை உட்கொள்வது நல்லது.
ஆப்பிள் என்றதுமே சிவப்பு நிறம்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆப்பிள்களில் விதவிதமான வண்ணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சிவப்பு ஆப்பிளுக்கு அடுத்தபடியாக பச்சை ஆப்பிள் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. இதுவும் சிவப்பு ஆப்பிளை போல் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கக்கூடியதுதான். சிவப்பு ஆப்பிளை ருசிக்க விரும்பாத குழந்தைகளுக்கு மாற்றுத்தேர்வாக பச்சை ஆப்பிளை கொடுக்கலாம். இந்த ஆப்பிளை ஏன் சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
* சிறு வயதிலேயே குழந்தைகள் பலர் பார்வை குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். பச்சை ஆப்பிளில் பார்வைத்திறனை பலப்படுத்த உதவிடும் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. கண்களின் ஆரோக்கியத்தையும் காக்கக்கூடியது. சிவப்பு ஆப்பிளை போலவே இந்த ஆப்பிளின் வெளிப்புற தோல் பகுதியை தவிர்க்கக்கூடாது. நன்கு கழுவிவிட்டு உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மெருகேற்றும் தன்மையும் பச்சை ஆப்பிளுக்கு உண்டு.
* எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் இருக்கிறது. குறிப்பாக இந்த ஆப்பிள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை தடுக்கக்கூடியது. இதனுடன் பிற ஊட்டச்சத்து உணவுகளையும் உட்கொள்வது எலும்புகளை வலிமையாக்கும்.
* தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரல் தொடர்பான நோய் அபாயங்களை குறைக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் ஆஸ்துமா அபாயத்தையும் குறைக்கும். நோய்த்தொற்று பரவும் காலத்தில் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரலுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.
* பச்சை ஆப்பிளில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து கொழுப்பு அளவைக் குறைக்க உதவிடும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும். பச்சை ஆப்பிள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்பது அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷன் நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
* உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் பச்சை ஆப்பிளை உட்கொள்வது நல்லது. ரத்த அழுத்த பிரச்சனை கொண்டவர்களுக்கும் பச்சை ஆப்பிள் சிறந்த நண்பனாக விளங்கும்.
*பச்சை ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. அது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவிடும். செரிமான செயல்பாட்டுக்கும் துணை புரியும். வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்தும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திடவும் உதவிடும்.
பச்சை ஆப்பிளை காலை மற்றும் மதிய உணவுக்கு இடையே சாப்பிடலாம். இரவில் சாப்பிடுவது குடல் இயக்க செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடும். வாயு தொல்லை ஏற்படவும் வழிவகுத்துவிடும்.
- அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அறிவுத்திறனை மேம்படுத்துவதாக அமைந்தால் பாதகமில்லை.
- டி.வி. முன்பு அமர்ந்து நேரத்தை செலவிடும்போது குழந்தைகளின் கவனம் ஓரிடத்தில் குவிக்கப்படும்.
செல்போன், வீடியோ கேமுக்கு அடுத்தபடியாக குழந்தைகளின் விருப்பமான பொழுதுபோக்காக தொலைக்காட்சிதான் விளங்குகிறது. அதிலும் விடுமுறை நாட்களில் மணிக்கணக்கில் டி.வி.யில் மூழ்கிவிடும் குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். கார்ட்டூன், விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகள்தான் அவர்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது.
குழந்தைகள் டி.வி. பார்ப்பது தவறல்ல. ஆனால் அதிலேயே மூழ்கி விடுவதுதான் நல்லதல்ல. அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அறிவுத்திறனை மேம்படுத்துவதாக அமைந்தால் பாதகமில்லை. வெவ்வேறு கலாசாரங்கள், பாரம்பரிய இடங்கள், உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், அங்குள்ள புகழ்பெற்ற இடங்கள் என பொது அறிவையும், சிந்தனை திறனையும் விசாலப்படுத்த வித்திடும் நிகழ்ச்சிகளை பார்ப்பது நல்லது.

குழந்தைகள் வாசிப்பதிலோ, எழுதுவதிலோ தடுமாற்றத்தையோ, சிரமங்களையோ எதிர்கொண்டால் அவர்களை டி.வி., செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் திரைகளின் முன்பு சிறிது நேரம் செலவிட வைக்கலாம். அப்படி டி.வி. முன்பு அமர்ந்து நேரத்தை செலவிடும்போது குழந்தைகளின் கவனம் ஓரிடத்தில் குவிக்கப்படும்.
வாசிப்பதில் தடுமாற்றம், எழுதுவதில் சிரமம் கொண்ட குழந்தைகளை பள்ளிக்கூடத்திலோ, வீட்டிலோ டி.வி. திரைகள் முன்பு சிறிது நேரம் அமர வைக்கலாம். அதில் தென்படும் காட்சியும், ஒலியும் அதன் மீது கவனம் செலுத்த வைக்கும். அந்த காட்சிகள் குழந்தைகள் விரும்பும் விளையாட்டு, கார்டூன் சார்ந்த காட்சிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் அம்சங்களை கொண்டதாக அவை அமைந்திருக்க வேண்டும். வெஸ்டர்ன் நார்வே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் வாசிப்பதிலோ, எழுதுவதிலோ சிரமங்களை எதிர்கொண்டால் ஒளிரும் திரைகள் முன்பு சிறிது நேரத்தை செலவிட வைக்கலாம் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
- எல்லோருக்குமே ஜிம்முக்குப் போக நேரமோ, பொருளாதார சூழலோ இருக்காது.
- எடுத்த எடுப்பில் அதிகமாக செய்ய ஆரம்பித்தால் அதுவே உடல் வலியை உண்டாக்கக் கூடும்!
பிட்னசுக்கான சில உடற்பயிற்சிகளை ஜிம்முக்கு சென்றுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து உடலை தகுதியாக்கிக் கொள்ள முடியும். நிபுணர்கள் பரிந்துரைக்கும் எளிய உடற்பயிற்சிகள் இவை... இந்த உடற்பயிற்சிக்கு எந்தக் கருவிகளும் தேவையில்லை என்பதால் இவற்றை சுய உடற்பயிற்சிகள் (Own body exercise) என்றே பயிற்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை வேகமாகத்தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. உங்களால் எவ்வளவு முடிகிறதோ அந்த வேகத்தில் ஆரம்பிக்கலாம். இந்தப் பயிற்சிகளை செய்வது உடல் தசைகளை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மூட்டு எலும்புகளை வலுவாக்கவும் செய்கிறது. ஏற்கனவே மூட்டு இணைப்புகளில் வலி, உடல் வலி இருப்பவர்கள் சைக்கிளிங் பயிற்சியை தாராளமாக செய்யலாம். எல்லா வயதினரும் எளிதாக செய்யக்கூடிய மற்றும் அடிப்படையான உடற்பயிற்சிகள் இவை.
எல்லோருக்குமே ஜிம்முக்குப் போக நேரமோ, பொருளாதார சூழலோ இருக்காது. ஆனால், உடலை வலுவாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் எந்தவொரு சிறப்பு உபகரணங்களும் இல்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்குவாட் (Squats), புஷ் அப்ஸ் (Push-Ups), சிட் அப்ஸ் (Sit-Ups), யோகா போன்ற சுய உடற்பயிற்சிகளை பின்பற்றலாம். சுவரை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுவது, பந்துகளை வைத்துச் செய்யும் பயிற்சிகள், நாற்காலியில் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை உடல் தசைகளையும், நரம்புகளையும் ஒருங்கிணைப்பதால் முழு உடலுக்கும் வலு கிடைக்கும்.

நெகிழ்வு பயிற்சிகள்: இடுப்பு, தொடைப் பகுதிகள்தான் மேல் மற்றும் கீழ் உடலை இணைக்கும் பாலமாக இருப்பவை. இவை இறுக்கமடையும்போது முதுகுவலி, இடுப்புவலி, கீழ் இடுப்பு வலிகள் தோன்றும். உடலின் மேல், கீழ் பாகங்களின் நெகிழ்வுத் தன்மைக்காக தரையில் உட்கார்ந்து கால்களை நீட்டி மடக்கி செய்யும் பிளாங்க் (Plank), மல்லாந்து படுத்து கால்களை மடக்கி செய்யும் யோகா பயிற்சிகள் போன்றவற்றை செய்யலாம். தோள்பட்டை, கழுத்து, கை, கால், விரல்கள் என அனைத்து இணைப்புகளுக்கும் நெகிழ்வு தரக்கூடிய பயிற்சிகளைச் செய்யலாம்.
தீவிரப் பயிற்சிகள்: அடிவயிற்றுத் தசைகள் இறுக்கம், புஜ வலிமைக்காக தம்பிள்ஸ், பளு தூக்குதல், கிரெஞ்சஸ் போன்ற கடுமையான பயிற்சிகளை இளைஞர்கள் வீட்டில் செய்யலாம். மேற்சொன்ன பயிற்சிகளை குறைந்த எண்ணிக்கைகளில் செய்ய ஆரம்பித்து படிப்படியாக எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும். எடுத்த எடுப்பில் அதிகமாக செய்ய ஆரம்பித்தால் அதுவே உடல் வலியை உண்டாக்கக் கூடும்!
- ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் சராசரியாக அருந்த வேண்டும்.
- பச்சைக் காய்கறிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
டீன் ஏஜ் என்பது பல்வேறு ஹார்மோன் மாற்றங்களை கடந்து வருகிற பருவம். நம்முடைய உடலில் மட்டுமல்லாது, தோற்றத்திலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பருவம். சிலருக்கு பருக்கள் நிறைய வரும். சிலருக்கு வேறு சில சருமப் பிரச்சனைகள் உண்டாகும். இதுபோன்ற விஷயங்களைத் தவிர்த்து, சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள என்ன மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
* ஆழ்ந்த உறக்கம்
நல்ல ஆரோக்கியமான சருமத்திற்கு நீங்கள் இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வது அவசியம். நல்ல தரமான தூக்கம் உங்களுக்கு முகப்பொலிவினைக் கொடுக்கும். அதேசமயம் அதிகாலையில் சீக்கிரமாக எழுவதும் அவசியம். ஒருவர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு குறைந்தது 8 மணி நேர தூக்கம் அவசியம் என்பது நாம் அறிந்ததே. இரவு நேரத்தில் தேவையில்லாமல் கண் விழித்து சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு நிம்மதியான உறக்கத்தை பெற்றால் உங்கள் சருமத்திற்கு எந்த விதமான கேடும் வராது.

* தண்ணீரும், முகப்பருவும்
ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் சராசரியாக அருந்த வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் உடலிலுள்ள அசுத்தங்களை சுத்திகரித்து வெளியேற்றுகிறது. அதனால் சரும அழுக்குகளும் வெளியேறி முகம் பொலிவாகக் காட்சியளிக்கும். போதுமான அளவு தண்ணீர் அருந்தாதபோது நமது உடலில் உள்ள அசுத்தங்கள் வெளியேறாமல் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.
* சன் ஸ்கிரீன்
வெயில் காலம் மட்டுமல்ல, எல்லா காலத்துக்கும் சன் ஸ்கிரீன் மிக அவசியம். வீட்டை விட்டு வெளியே சென்றாலே மறக்காமல் செய்யக்கூடிய ஒரு விஷயம், சன் ஸ்கிரீனை உங்களுடன் எடுத்துச் செல்வதுதான். பருவ நிலைகளுக்கு ஏற்ப நல்ல தரமான சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்தத் தொடங்குங்கள். இது சூரிய வெப்பத்தில் இருந்து மட்டுமல்ல, காற்று, மாசுக்கள் போன்றவற்றில் இருந்தும் உங்களுடைய சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
* ஆரோக்கிய டயட்
பச்சைக் காய்கறிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சருமம் வறண்டு போகும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே இதுபோன்ற காலகட்டங்களில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அவை நீரேற்றத்துடன் வைத்திருக்கச் செய்வதோடு, சருமத்திற்கு கூடுதல் பொலிவும் சேர்க்கும்.
அதேபோல சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், சோடா ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, இயற்கையாக நமக்குக் கிடைக்கும் பழங்களை அப்படியே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
காரணம்..?
டீன் ஏஜ் காலகட்டங்களில் இளைஞர்களுக்கு வரும் பருக்கள் மற்றும் சருமத் தடிப்புகள், கருந்திட்டுக்கள் போன்றவை நீண்ட நாட்கள் வரை சருமத்தில் அப்படியே நிலைத்திருக்கும். அந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு, சருமப் பிரச்சனைகளை வரும் முன்பே தடுப்பது தான் சிறந்த வழியாக இருக்கும்.
- இது தண்ணீரை சேமிப்பதற்கு மட்டுமல்ல...
- தாவரங்களுக்கு ரசாயனங்கள் இல்லாமல் ஊட்டமளிக்கும் இயற்கையான, பயனுள்ள உரத்தை உருவாக்குகிறது.
பொதுவாக நாம் முட்டைகளை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அந்த தண்ணீரில் உள்ள நன்மை குறித்து நாம் சிந்தித்தது இல்லை. ஆம், முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தலாம்.
இது தண்ணீரை சேமிப்பதற்கு மட்டுமல்ல... முட்டை வேக வைக்கும் போது தண்ணீர் கொதித்த பிறகு வரும் திரவத்தில் உள்ள சிறப்பால் நம்மை சுற்றி பசுமையாக்கலாம்.
வேகவைத்த முட்டை நீர் உங்கள் தாவரங்களுக்கு ஒரு கனிம வளமான விருந்தாகும்! கொதிக்கும் போது, முட்டை ஓடுகள் தண்ணீரில் கால்சியத்தை வெளியிடுகின்றன, இது தாவரங்களுக்கு ரசாயனங்கள் இல்லாமல் ஊட்டமளிக்கும் இயற்கையான, பயனுள்ள உரத்தை உருவாக்குகிறது.

முட்டை ஓடுகளிலிருந்து வரும் கால்சியம் மண்ணின் pH ஐ சமப்படுத்த உதவுகிறது. இதனால் தாவரங்கள் ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக உறிஞ்சுகின்றன. தக்காளி மற்றும் மிளகு போன்ற கால்சியம் விரும்பும் தாவரங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீரை குளிர்வித்து, உங்கள் தோட்டத்திலோ அல்லது உட்புற தாவரங்களிலோ பயன்படுத்தவும், அவை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவும். வேகவைத்த முட்டை நீர் தோட்டக்கலைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது யாருக்கு தெரியும்? முயற்சித்து தான் பாருங்கள்...
- சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும்.
- ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் பல நேரங்களில் இந்த மகிழ்ச்சி எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. சில காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியமான உடல் எடை
ஆரோக்கியமான உடல் எடை இல்லாமல் இருந்தால் அவை முட்டைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் கர்ப்பமடையும் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக எடை கொண்ட பெண்கள் தான் குறிப்பாக கர்ப்பம் அடைய மிகவும் சிரமம் அடைகிறர்கள்.
அதேபோல் ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுமுறையுடன் தொடர்ந்து உடல் எடையை பராமரிக்கலாம்.

சரியான மாதவிடாய் சுழற்சி
சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். உங்களின் அதிகபட்ச மாதவிடாய் நாட்கள் 3 நாட்கள் ஆகும்.
தைராய்டு பிரச்சனைகள்
தைராய்டு ஹார்மோன்களில், T3 மற்றும் T4 ஆகியவையே இனபெருக்கத்துடன் தொடர்புடையவை. உணவு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஆகியவற்றின் மீது இவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
தைராய்டு ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். கர்ப்பங்கள் மற்றும் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும்.

பி.சி.ஓ.ஸ் பரிசோதனை
பி.சி.ஓ.எஸ் என்பது சினைப்பை நீர்க்கட்டி ஆகும். இதனால் ஹார்மோன் குறைபாடு, கருத்தரித்தலில் பிரச்சனை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
பி.சி.ஒ.எஸ் இருந்தால் உங்கள் சினைப்பையில் சிறிது சிறிதாக நீர்கட்டிகள் உருவாகும். அப்படி நடந்தால் கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதனால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படும். சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
ஹார்மோன் குறைபாடு
பெண்களின் ஹார்மோன் அளவுகளில் மிகக் குறைந்த அளவில் மாறுதல் ஏற்பட்டால் கூட எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
விந்தணுக்கள் பரிசோதனை
தம்பதிகள் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும்போது விந்து பகுப்பாய்வு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பகுப்பாய்வு குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணு செயலிழப்பு கருவுறாமைக்கு காரணமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் இந்த சோதனை செய்து கொள்வதன் மூலம் உங்கள் குறைகளை கண்டறிந்து அதனை சரிசெய்து விடலாம்.

ஃபோலிக் அமிலம்
கருவுற்ற முதலில் குழந்தையின் முதுகெலும்பு மூளை, மற்றும் நரம்புக் குழாய் போன்றவைகள் உருவாகும். அதற்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து குழந்தையின் அதிகபட்ச பாதுகாப்பிற்காக ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் சோதனை
நீங்கள் 35 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருந்து கர்ப்பத்தை திட்டமிட்டால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கர்ப்பம் தரிப்பதற்கு முன் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

உடற்பயிற்சி
கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை உடற்பயிற்சி செய்தல் தான். லேசானது முதல் மிதமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சரிசெய்து, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை சீராக்கும்.
- நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை.
- உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம்.
உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை. நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம்.
இயற்கையில் விளைந்த பழங்களிலும், காய்கறிகளிலும், மூலிகைகளிலும் கொட்டிகிடக்கிறது ஊட்டசத்துக்கள். உடலில் தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முதலிடம் வகிப்பது வைட்டமின் சி, அடுத்தது வைட்டமின் ஏ மற்றும் பி.

வைட்டமின் சி பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, குடைமிளகாய், போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. புற்று நோயை கூட கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. திசுக்களின் வளர்ச்சிக்கும், உயிரணுக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது.
வைட்டமி சி
வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சை பழச்சாறு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது. அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியுறும்.
மேலும் நன்மை செய்யும் பாக்டீரிக்கள் வாழ்வதற்கு வெப்பமான சூழ்நிலையை பராமரிக்க எலுமிச்சைபழச்சாறு உதவுகிறது. சாலட், அசைவ உணவுகள் போன்றவற்றில் எலுமிச்சை பழச்சாறு கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

கொய்யாப்பழம், சுலபமாக எல்லோராலூம் வாங்கக்கூடிய பழம். ஆனால் அளப்பறிய வைட்டமின்களை தன்னகத்தே கொண்டது. வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், போன்ற ஊட்டச்சத்துக்களை நிறைந்துள்ளது.
எலும்புகள் வளர்ச்சிக்கும், உடலுக்கு உறுதியையும் தருகிறது. பொட்டாசியம் சத்து கொய்யப்பழத்தில் அதிகம் உள்ளது. கொய்யாப்பழத்திலிருக்கும் மெக்னீஷியம் பிற உணவுகளிலிருந்து சத்துக்களை உறிஞ்சு எடுத்து உடலுக்கு அளிக்கிறது.
இதன் காரணமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள முழு ஊட்டச்சத்தும் உடலுக்கு சென்றடைகிறது. நோய் காரணிகளை எதிர்த்து போராடுவதோடு, நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.
வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ அகத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை, முருங்கைகீரை, கேரட், சக்கரை வள்ளி கிழங்கு, முட்டை, பப்பாளி பழம், மாம்பழம், பசலைக்கீரை, ஆட்டிறைச்சி, கோழி, மாட்டிறைச்சி இவற்றின் ஈரல், வெண்ணெய், நெய் ஆகிவற்றில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் பி
வைட்டமின் பி- நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உயிரி ரசாயன விளைவுகளுக்கு உதவுகிறது. பாதாம், புரோக்கோலி, பால், முட்டை, சிறு தானியங்கள், கீரை வகைகளில் அதிகம் காணப்படுகிறது.
ஒமேகா 3
ஓமேகா 3 பாலி அன்ச்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் இதயத்தின் வளர்ச்சிதை மாற்றம், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற திறனை மேம்படுத்துகிறது. சால்மன் மீன், ஆளிவிதை, அவகேடோ, வால்நட், முட்டை, ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. பூசணி விதைகளில் ஆளிவிதைகளுக்கு அடுத்தபடியாக ஓமேகா 3 உள்ளது. இதனையும் சாலட் போன்ற உணவுகளோடு சேர்த்து எடுத்து கொள்ளலாம்.

தயிர்
தயிரிலுள்ள நல்ல பாக்டிரியாக்கள் (புரோபயாடிக்) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலுக்கு நல்ல சக்தியையும் அளிக்கிறது. தயிராக இல்லாமல் மோராக தினமும் எடுத்துக்கொள்ளலாம். உடல்எடையை குறைப்பதிலும், உடலை குளிர்ச்சியாக வைப்பதிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் மிக முக்கிய இடம் வகிக்கிறது மோர்.
மக்னீஷயம், சிறுநீரகச் செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமானது. நட்ஸ், கீரைகள், கோதுமை, விதைகள் இவற்றில் காணப்படுகிறது. துத்தநாகம்-பீன்ஸ், தேங்காய், கடலை பருப்பு, சிப்பி வகை மீன்கள், பருப்புக்கள், எள், தயிர், பால்பொருட்கள் இவற்றில் காணப்படுகிறது.
புராக்கோலியில் மினரல்ஸ், வைட்டமின் சி, ஏ அடங்கியுள்ளது. இதனை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மஞ்சள், இஞ்சி, சோம்பு, மிளகு இவை போன்ற மூலிகைகள் பல்வேறுவகையான நோய்களை அண்டவிடாமல் ஆரம்பத்திலே அழிக்கிறது.
பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ,சி,பி1,பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாய் உள்ளது கராட்டினாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

வைட்டமின் ஈ அடங்கிய பாதாம் அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது. இரும்பு சத்து, கால்சியம், நார்ச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. புரதமும், நார் சத்துக்களும் நிறைந்த பருப்புக்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, சுண்டல் வகைகள், தானியங்கள் இவற்றில் எதேனும் ஒன்றை தினமும் எடுத்து கொள்ளலாம். நாளொன்றிற்கு முப்பது கிராம் வரை பருப்புகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
தண்ணீர், காலையில் வெறும் வயிற்றில் காபி, தேநீர் குடிப்பதை தவிர்த்து, தண்ணீரை குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம் சீராகி, நச்சுக்கள் அகற்றபட்டு, உடல் ஆரோக்கியம் பெறும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதில் இயற்கை உணவுகள், இயற்கையில் விளைந்த பழங்கள், காய்கறிகள் இவற்றிற்கே முதலிடம்.
இயற்கை உணவுகளினால் உடலுக்கு முழுமையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே ரெடிமேட் உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
உணவுகள் மட்டுமே ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்துவிடாது. போதுமான அளவு உடற்பயிற்சியும் அவசியம். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது.
உணவு இடைவெளியே இல்லாமல் சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடாது. உணவு நன்றாக செரிமானம் அடைந்த பிறகே, செரிமானம் அடைவதற்கு இடைவெளி தந்து, அடுத்தவேளை உணவை உண்ண வேண்டும். இவ்வாறு பழக்கமாக்கிக் கொண்டால், உடலுக்கு வேறெந்த மருந்தும் தேவையே இல்லை.
- வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள்.
- பிரண்டையில் ஏராளமான சத்துகள் காணப்படுகின்றன.
பிரண்டை எனும் தாவரம், வேலி ஓரங்களில் படர்ந்து வளரும் ஒரு கொடி வகையாகும். இது, தண்ணீர் இன்றி வெப்பத்தை தாங்கி வளரும். மழைக்காலங்களில் துளிர் விட ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் பிரண்டையை பறித்து உணவாக உண்பது வழக்கம்.
பழங்காலத்தில் இருந்து பிரண்டை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனித எலும்பு மண்டலத்தை இரும்பு போல் வலுவாக வைக்கும் திறன் பிரண்டைக்கு உண்டு. இதனால் இதை வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள்.

பிரண்டையில் ஏராளமான சத்துகள் காணப்படுகின்றன. குறிப்பாக, வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்துகள், பிளவனாய்டு, டேனின், கரோட்டீன் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக எலும்பு தொடர்பான பாதிப்புகளை சரிசெய்வதில் பிரண்டைக்கு இணை எதுவும் இல்லை என்கிறார்கள் இயற்கை மருத்துவ நிபுணர்கள்.
எலும்பு முறிவு, எலும்பு மூட்டு நகர்வு, எலும்பு தேய்மானம், எலும்பு புரை ஆகியவற்றை சரிசெய்யவும் எலும்புகளை வலிமையாக்கவும் பிரண்டையை மருந்தாக பயன்படுத்தலாம், என்கிறார்கள்.
இதே போல, வயிற்றில் பாக்டீரியா மற்றும் பிற கிருமித் தொற்றுகளின் பாதிப்பினால் ஏற்படும் குடல் புண், வாய்ப்புண், அமிலத்தன்மை குடலில் அதிகரிப்பதால் ஏற்படும் குடல் பாதிப்புகள் ஆகியவற்றையும் குணப்படுத்தும் தன்மை பிரண்டைக்கு உண்டு. தற்போது இந்த பிரண்டை அனைத்து இடங்களிலும் செழிப்பாக வளர்ந்து கிடக்கிறது.
பிரண்டையின் மருத்துவ பயன்கள்:
பிரண்டை எலும்பு வளர்ச்சி, பசியின்மை, சுளுக்கு, செரிமானம், வயிறு உப்பிசம், முதுகு வலி, கழுத்து வலி, வாந்தி, பேதி, வாய்ப்புண், வயிற்றுப்புண், உடல் பருமன், பசியின்மை, மலச்சிக்கல், போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது.
துவையல் செய்து சாப்பிடுவதால், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வாயுப் பிடிப்பு, தீராத வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது.

மேலும் உடல் சுறுசுறுப்பை அதிகரித்து ஞாபக சக்தியை பெருகச் செய்கிறது. மற்றும் மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு அதிக சக்தி தருகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துகிறது.
வாயு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அச்சூழலில் பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியைத் தூண்டி, அஜீரணக் கோளாறைப் போக்குகிறது.
மேலும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் கொழுப்பைக் கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் பிரண்டை துவையல் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் தரும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையின் இளந்தண்டை அரைத்து பற்றுப் போட்டால் எலும்பு முறிவு, அடிப்பட்ட வீக்கம், வலி நிவாரணம் கிடைக்கும். பிரண்டையை பறித்து காயவைத்து அம்மியில் வைத்து அரைத்து, தூள் செய்து நீர்விட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள பகுதியில் தினமும் பூசி வர, எலும்பு முறிவு சரியாகி எலும்புகள் கூடி வலுப்பெறும்.
பிரண்டையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அந்த சாற்றை ஒரு தேக்கரண்டியுடன், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து தினமும் காலை வேளையில் ஏழு நாட்கள் சாப்பிட்டு வர பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிரச்சனை சரியாகி ஒழுங்காக மாதவிடாய் ஏற்படக்கூடும்.

பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள, பூச்சிகள் அழியும். . பசியைத் உண்டு பண்ணும். வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் நீங்குவதற்கு மருந்தாக சிறந்து விளங்குகிறது. பிரண்டை, சுளுக்கிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, மோரில் சிறிது உப்புத்தூள் சேர்த்து ஊறவைத்து, காயவைத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை, நாக்கில் சுவையின்மை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
பிரண்டைத் துவையல் வயிற்றுப்புண், வாய்ப்புண், ஊளைச்சதை இவற்றைத் குணமாக்குகிறது. பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கும்.
- மூக்கைச் சுற்றி வெள்ளையாக சொரசொரவென்று இருக்கும்.
- கரும்புள்ளியை அகற்றுவதற்கான வீட்டுக்குறிப்புகள்.
சிலருக்கு மூக்கைச் சுற்றி வெள்ளையாக சொரசொரவென்று இருக்கும். இதனை வெள்ளைப்புள்ளிகள் அல்லது ஒயிட் ஹெட்ஸ் என அழைக்கிறோம். இதே போல் சிலருக்கு கருமையாக இருக்கும். இதை கரும்புள்ளிகள் அல்லது பிளாக் ஹெட்ஸ் என்கிறோம்.
இதனால் சருமத்தின் மென்மைத்தன்மையை இழப்பதோடு, அந்த இடமும் அசிங்கமாக காணப்படும். பலரும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்க குளித்து முடித்ததும், காட்டன் ஈரத்துணியைக் கொண்டு தேய்ப்பார்கள்.

ஆனால் இப்படி செய்வதால் மட்டும் மூக்கை சுற்றி வரும் புள்ளிகளை நீக்க முடியாது.
சருமம் வறட்சி அடைந்து உங்கள் மூக்கைச் சுற்றி சொரசொரப்பாக இருப்பதற்கு சரும துளைகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது தான் முக்கிய காரணம் . சில ஃபேஸ் பேக்குகள் உங்கள் சருமத்துளைகளை சுத்தம் செய்வதோடு, உங்கள் சரும ஆரோக்கியத்தையும், பொலிவையும் மேம்படுத்தும்.
கரும்புள்ளியை அகற்றுவதற்கான வீட்டுக்குறிப்புகள்:
* ஒரு கையளவு வால்நட்சை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில், ஒரு டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின்னர் தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.

* ஸ்ட்ராபெர்ரி பழத்தை வெட்டி அதனைக் கொண்டு நேரடியாக முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.

* பச்சை பயறை அரைத்து மாவு செய்து, அந்த மாவைக் கொண்டு தினமும் முகத்தை தேய்த்து கழுவி வர, மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.
* க்ரீன் டீயின் பையில் உள்ள பொடியைக் கொண்டும் கரும்புள்ளிகளை அகற்றலாம். அதற்கு க்ரீன் டீ பொடியில் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* வேர்க்கடலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, மூக்கின் மேல் தடவி மென்மையாக 10 நிமிடம் ஸ்கரப் செய்து, பின்னர் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கி, பொலிவோடு காணப்படும்.
* 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து ஒன்றாக கலந்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பட்டை சருமத்துளைகளை விரிவடையச் செய்து, சுத்தம் செய்து, வெள்ளைப்புள்ளிகளை எளிதில் அகற்ற உதவும்.

* ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், வெள்ளைப்புள்ளிகள் மட்டுமின்றி, சருமத்துளைகளும் சுத்தமாகும்.
* எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலம், சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, வெள்ளைப்புள்ளிகள் வருவதைக் குறைக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை காட்டனில் நனைத்து, வெள்ளைப்புள்ளிகள் வரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் வெள்ளைப்புள்ளிகள் அகலும்.
ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோலின் பொடியை எடுத்துக் கொண்டு, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ , மூக்கில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும்.
* மஞ்சள் மற்றும் வேப்பிலையில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், வெள்ளைப்புள்ளிகளை நீக்கும். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

* வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தேனைத் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் வெள்ளைப்புள்ளிகள் நீங்கி, சருமம் பட்டுப்போன்று மென்மையாகும்.
* ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன், சம அளவில் மஞ்சள் தூள், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஸ்க்ரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை அவ்விடத்தில் தெளித்து மீண்டும் ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், வெள்ளைப்புள்ளிகள் அகலும்.
- 40 வயதிலும் பல பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள்.
- குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது.
முதல் குழந்தைக்கு பிறகு உடனடியாக அடுத்த குழந்தையா அல்லது சில வருடங்கள் காத்திருக்க வேண்டுமா? நீண்ட வருடங்கள் ஆகிவிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி தம்பதிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதோடு உடல்நலம், பொருளாதார சூழ்நிலை போன்ற பல காரணங்கள் இதில் அடங்கும்.
ஆனால் 40 வயதிலும் பல பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள். சில பெண்களுக்கு குடும்ப அரவணைப்பு முழுமையாக கிடைக்கும் போது இரண்டு குழந்தைகளை வெற்றிகரமாக வளர்க்க முடியும்.
முதல் குழந்தைக்கு பிறகு மீண்டும் இரண்டாவது கர்ப்பம் தரிக்க விரும்பினால் பின்வரும் காரணங்களை கவனித்து முடிவு செய்யலாம்.

உடல் ஆரோக்கியம்:
முதல் கர்ப்பம் சிக்கல் இல்லாமல் ஆரோக்கியமானதா அல்லது சிக்கல் நிறைந்ததா என்பதை யோசிக்க வேண்டும். முதல் குழந்தைக்கு எடைகுறைப்பு, வேறு குறைபாடுகள் இருந்தால் 2-வது குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் திட்டமிடலாம்.
வயது:
கருத்தரிக்க பெண்களின் வயது மிகவும் முக்கியம். 2-வது குழந்தை பெற்றுக்கொள்வதிலும் வயது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் பெண்கள் வளர வளர அவர்களின் மாதவிடாய் சுழற்சி முறையிலும், கருமுட்டை உற்பத்தி அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படும்.
மேலும் கருத்தரிக்க பெண்ணின் வயது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஆண்களின் வயதும் மிகவும் முக்கியம். ஏனென்றால் 35 வயதை கடந்தவுடன் ஆண்களுக்கு விந்தணுக்களின் தரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.

திட்டமிடுதல்:
இன்றைய சூழலில் 2-வது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு நிதியும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் செலவுகள் இரட்டிப்பாகும். நீங்களும், உங்கள் துணையும் பொருள் ஈட்டினாலும் இரண்டு குழந்தைகளின் கல்வி, மருத்துவம் போன்ற இதர செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கணவன் -மனைவி இருவரும் இணைந்து பரஸ்பரமாக ஒருவருக்கொருவர் பேசிய பிறகு இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கலாம். இல்லை என்றால் கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குழந்தை பராமரிப்பு:
குழந்தையை பராமரிப்பதில் முதல் குழந்தைக்கு நேரத்தை ஒதுக்குவது மற்றும் குழந்தையை கவனிக்க குடும்ப உறுப்பினர்கள் உள்ளனரா என்பதையும் கவனிக்க வேண்டும். இல்லை என்றால் இரண்டு குழந்தைகளை பராமரிப்பதிலும் சிரமம் ஏற்படும்.
வயது இடைவெளி என்பது முதல் குழந்தைக்கும் 2-வது குழந்தைக்கும் இடையே உள்ள வயது இடைவெளியை கவனிக்க வேண்டும்.

பரிசோதனை:
முதல் குழந்தை சிசேரியனாக இருந்தால் குறைந்தது 2 வருடங்களாவது இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்க வேண்டும். ஏனெனில் சிசேரியனுக்கு பிறகு மருத்துவரின் அறிவுரையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வழக்கமான பரிசோதனையை கணவன் - மனைவி இருவரும் செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே இரும்புச்சத்து குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் பிரசவித்த பின்னர் ஏராளமான பெண்கள் ரத்த சோகை சிக்கலை சந்திக்கிறார்கள்.
- கருப்பு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதன் மூலம் நச்சு ரசாயனங்கள் உணவில் சேரும்.
- நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.
ஆன்லைன் மூலமாக எல்லாவிதமான பொருட்களையும் வாங்கும் நிலைமை தற்போது காணப்படுகிறது. வீடுகளில் சமையல் செய்வதற்கு பதிலாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
உணவுகள் கருப்பு பிளாஸ்டிக் பாக்ஸ்கள் மற்றும் டப்பாக்களில் வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. இதை சேமித்து மீண்டும் பயன்படுத்துவது பலருக்கு வசதியாகவும் இருக்கிறது.

கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் (உணவு தட்டுகள், கரண்டிகள், கொள்கலன்கள்) அன்றாட பயன்பாட்டில் இருக்கிறது. கருப்பு பிளாஸ்டிக் பெரும்பாலும் பழைய எலக்ட்ரானிக்ஸ் உள்பட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
சமீபத்திய ஆய்வில் கருப்பு பிளாஸ்டிக் பொருட்களில் 85 சதவீதத்தில் நச்சு தீப்பிழம்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது புற்றுநோய் அபாயங்களுடன் தொடர்புடையது. கருப்பு பிளாஸ்டிக்கில் உணவை சூடாக்குவது அல்லது கருப்பு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் நச்சு ரசாயனங்கள் உணவில் சேரும். இதனால் கருப்பு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இது குறித்து புற்றுநோய் டாக்டர்கள், நிபுணர்கள் கூறியதாவது:-

கருப்பு பிளாஸ்டிக் பாத்திரங்கள், பொருட்களில் புற்றுநோய் அபாயங்களுடன் தொடர்புடைய நச்சு தீப்பிழம்புகள் இருக்கின்றன. இந்த ரசாயனங்கள் உணவில் கலந்து காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தும்.
டெகாபிடி மற்றும் இதேபோன்ற கலவைகள் ஹார்மோன்களில் தலையிடலாம். கருப்பு பிளாஸ்டிக்கில் பெரும்பாலும் பிஸ்பெனால் ஏ(பிபிஏ) மற்றும் பித்தலேட்டுகள் போன்ற பொருட்கள் உள்ளன. அவை இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் இனப்பெருக்க பிரச்சினைகளுடன் தொடர்புடையவை.
கருப்பு பிளாஸ்டிக்கில் இருந்து மைக்ரோ பிளாஸ்டிக்கள், தேநீர் பைகள், பாட்டில் தண்ணீர் போன்ற அன்றாடப் பொருட்களின் மூலம் அடிக்கடி உட்கொள்வதால், உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கிறது.

கருப்பு பிளாஸ்டிக்கை புற்றுநோயுடன் நேரடியாக இணைக்கும் உறுதியான சான்றுகள் இல்லை என்றாலும் அதன் ரசாயன கலவை எச்சரிக்கையாக இருக்க போதுமான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.
உணவு சேமிப்பு மற்றும் தயாரிப்புக்காக கருப்பு பிளாஸ்டிக்கை தவிர்ப்பதோடு கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எக்கு போன்ற பாதுகாப்பான, பாதிப்பை ஏற்படுத்தாத ரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
மைக்ரோவேவ் அல்லது வேறு வகையில் கருப்பு பிளாஸ்டிக்கில் உணவை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும். சூடுபடுத்துவதால் நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பி.பி.ஏ. மற்றும் பித்தலேட்டுகள் போன்ற கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இனப்பெருக்க சுகாதார பிரச்சனைகள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள சில சேர்க்கைகளால் வளர்ச்சி மற்றும் நரம்பியல் விளைவு ஏற்படுவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
கருப்பு பிளாஸ்டிக்கில் இருந்து வரும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உணவு, நீர் மற்றும் காற்றில் ஊடுருவி வீக்கம், ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் செல்கள் சேதத்தை மனித உடலில் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருப்பு பிளாஸ்டிக்குகளுக்கும், புற்றுநோய்க்கும் இடையே உள்ள நேரடி தொடர்பு இன்னும் ஆராய்ச்சியில் இருந்தாலும், அவற்றின் வேதியியல் கலவை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்துடன் தொடர்புடைய அபாயங்கள் அதிகமானவை.
கருப்பு பிளாஸ்டிக்கில் உணவை சூடாக்குவதை தவிர்ப்பது ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான விவேகமான முடிவாகும்.






