என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு.
    • நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.

    ஆபரேஷனுக்கு பிறகு 5 முதல் 10 ஆண்டுகள் கழித்து இடுப்பு வலி வருகிறது என்றால் அது இடுப்பு எலும்பு, குருத்தெலும்புகளின் தேய்மானம், அதிக உடல் எடை, கடின உழைப்பு, வயதுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் போன்றவை கூட இடுப்பு வலியை ஏற்படுத்தலாம்.

    கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு. ஆனால் இந்த அதிகரிக்கும் உடல் எடை உங்கள் தோற்ற நிலையை மாற்றி முதுகு பக்கம் வளைந்து உங்களது வயிற்றுப்பகுதி தசைகளை வலுவிழந்ததாக ஆக்கிவிடுகிறது.


    இதனால் உங்கள் இடுப்பெலும்புக்கும், குருத்தெலும்புக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் பின்பக்கமுள்ள தசைகளும், எலும்பு இணைப்புகளும் அதிக எடையினால், அதிக பளுவை பல மாதங்கள் சுமக்க நேரிடுகிறது.

    பிரசவத்துக்குப் பிறகு சில பேருக்கு சில காலங்களுக்கு இடுப்பு வலி வந்து பின்பு பூரண குணமாகிவிடுகிறது. ஆனால் சில பேருக்கு இந்த இடுப்பு வலி ஓரிரு ஆண்டுகள் இருந்து பின் சரியாகிவிடுகிறது.

    இடுப்பு தசைப்பிடிப்பு, தசை பிறழ்தல், ஜவ்வு இறுக்கம், குருத்தெலும்பு வரிசை சீராக இல்லாமலிருப்பது, கீல் வாத நோய், எலும்பு வலு இழப்பு நோய், மடங்காநிலை முதுகெலும்பு வீக்கம், விபத்து, சதைப்பிடிப்பு, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் பிறழ்தல், நீண்டு, கிழிந்து போதல் போன்றவைகளினாலும் இடுப்பு வலி ஏற்படலாம்.


    அதிக எடை தூக்காமல் இருப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடப்பது, முறையாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை கடைப்பிடித்து வருவது நல்லது.


    மேலும் இடுப்பு வலி மறைய மருத்துவர் மற்றும் பிசியோதெரபி நிபுணர் ஆலோசனையின் பேரில் அவர்கள் அளிக்கும் மருத்துவம் மற்றும் உடல் இயக்க பயிற்சிகளை செய்வது பலன் தரும்.

    • தினசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம்.
    • உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட ‘லிப் பாம்' பூசவும்.

    சுற்றுச்சூழலில் உள்ள மாசு, பருவநிலை மாறுபாடு, ரசாயனங்களின் பயன்பாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற பல்வேறு காரணங்களால் உதடுகள் வறட்சி அடைவது, உதட்டில் தோல் உரிவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். உதடுகள் மென்மையாகவும், பொலிவோடும் இருக்க அவற்றை தினசரி பராமரிப்பது அவசியமாகும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    * உதடுகள் அதிகமாக கருமை அடைவது ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகும். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கருமையை போக்க முடியும்.

    * உதட்டுச்சாயம் பூசிய பிறகு அடிக்கடி கைகளால் உதடுகளை தொட்டுப்பார்ப்பதை தவிர்க்கவும். உதட்டுச் சாயத்தில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இருக்காது. நீங்கள் உதடுகளை தொடும்போது கைகளில் உள்ள கிருமிகள் உதடுகளில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும்.

    * உதடுகள் வறட்சி அடையும்போது அடிக்கடி நாக்கினால் ஈரப்படுத்துவதைத் தவிர்க்கவும். உமிழ்நீர் உலர்ந்தவுடன் உதடுகள் மேலும் அதிகமாக வறட்சி அடையும். உமிழ்நீரில் உள்ள நொதிகள் உதடுகளின் மென்மையான தோலில் பாதிப்புகளை உண்டாக்கும்.

    * தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்தோடு வைத்திருப்பதோடு, உதடுகளையும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.

    * இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்குவது முழு உடலுக்கும் தேவையான ஓய்வு அளித்து புத்துணர்ச்சியாக்கும். தூங்க செல்வதற்கு முன்பு உதடுகளில் பூசியுள்ள உதட்டுச்சாயத்தை நீக்குவது முக்கியமானது.

    * உதடுகளை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க அவற்றில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். இதற்கு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மென்மையான லிப் ஸ்கிரப்பர்களை பயன்படுத்துவது நல்லது.

    * தோல் உரிவதால் உதடுகளில் உண்டாகும் காயங்களை குணப்படுத்த தேன் மெழுகு உதவும். சிறிதளவு தேன் மெழுகை உதட்டில் சீராக பூசவும். அது உலர்ந்த பின்பு மீண்டும் ஒரு படலமாக தேன் மெழுகை பூசவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து அதைக்கொண்டு உதடுகளை சுத்தமாக துடைக்கவும். தேன் மெழுகில் உள்ள ஊட்டச்சத்துகள் உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைத்து, தோல் உரிவதால் ஏற்பட்ட காயங்களை எளிதில் குணமாக்கும்.

    * தினசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம். இது உதட்டில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்துவதோடு, உதடுகள் விரைவில் வறட்சி அடைவதில் இருந்து பாதுகாக்கும்.

    * சிறிதளவு கோகோ, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உதட்டில் பூசவும். இது கடினமான உதட்டின் தோலை மென்மையாக்கி, உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கும்.

    * உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட 'லிப் பாம்' பூசவும். வெளியில் செல்லும்போது புறஊதாக்கதிர் தாக்கத்தை தடுக்கும் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்ட லிப் மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தவும்.

    * உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட 'லிப் பாம்' பூசவும்.

    • கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்னும் சூரை மீன்கள்தான் மாசிக் கருவாடாக மாற்றப்படுகின்றன.
    • உடலின் வாத, பித்த, கப மாறுபாடுகளை சமன் செய்யவும் உதவுகிறது.

    கருவாடு என்பது குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்தும் உணவாக மருத்துவ உலகம் கூறுகிறது. கருவாடுகளில் பல வகை இருந்தாலும், அதில் குறிப்பிடத்தக்கது, மாசி கருவாடு.

    கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்னும் சூரை மீன்கள்தான் மாசிக் கருவாடாக மாற்றப்படுகின்றன. பொதுவாக, மற்ற மீன்களை கருவாடு ஆக்க அவற்றை சுத்தம் செய்து உப்பு தடவி வெயிலில் உலர்த்துவது வழக்கம். ஆனால், சூரை மீன்களை கருவாடாக மாற்ற அவற்றை அவித்து காயவைத்து கருவாடாக மாற்றுகின்றனர். இவ்வாறு கருவாடாக மாற்றும்போது அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பளிங்கு போன்ற கண்ணாடி போல மாறி விடுகிறது. கருவாட்டு மணமும் இருக்காது. இது உடல் உறுப்புகள், தசைகளை பலமாக்கும் என்று கூறுகின்றனர்.

    பொதுவாக, திருமணமான ஆண், பெண் இருவருக்கும் மாசி கருவாடு உணவு கொடுப்பது வழக்கமாகும். தற்போது இந்த வழக்கம் மறைந்து வருகிறது. மாசி மீன் கருவாடு உணவை சாப்பிடுவதால் பெண்களுக்கு சினைப்பை, கருப்பை பலப்படும் என்று பாரம்பரிய வைத்தியத்தை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். உடலின் வாத, பித்த, கப மாறுபாடுகளை சமன் செய்யவும் உதவுகிறது.

    திருமணமான ஆண்களுக்கு மாசிக்கருவாடு உணவை கொடுப்பதால் இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்தி ஆரோக்கியமான உயிரணுக்கள் உருவாக உதவும் என்றும் கூறப்படுகிறது.

    • செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள்
    • செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

    குழந்தைகளுக்கு எப்போதும் விளையாடத் துணை தேவை. பெரும்பாலும் தன் வயதை ஒத்தவர்களிடமும், தன்னைவிட வயது குறைந்தவர்களிடமுமே அதிக நேரம் விளையாட விரும்புவார்கள். அதுபோல் வளர்ப்பு பிராணிகளிடமும் அதிக பாசம்காட்டி விளையாட விரும்புவார்கள். குழந்தைகள் விரும்பும் செல்லப்பிராணிகளை, வீட்டில் வளர்க்கிறீர்கள் என்றால் சில விஷயங்களில் கவனமாக இருங்கள். அவை இதோ...

    * குழந்தைகள் வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளின் காதைப் பிடித்து இழுக்கும். வாலைப் பிடித்து கடிக்கும். இந்த இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் செல்லப்பிராணிகள் திருப்பி கடித்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் எவ்வளவுதான் நல்ல பிராணியாக இருந்தாலும் குழந்தைகளிடமிருந்து அவைகளை சற்று விலக்கி வையுங்கள்.

    * குழந்தைகளுக்கும்-செல்லப்பிராணிகளுக்கும் இடையே எப்போதும் தேவையான இடைவெளி இருக்கவேண்டும். பிராணிகளிடம் எப்படி பழகவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உடனிருந்து கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளின் கண்களை நோண்டுவது, கையில் கிடைத்ததை அதன் மீது தூக்கி எறிந்து விளையாடுவது, அவைகளை பயமுறுத்துவது போன்றவைகளில் ஈடுபட குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.



    * நாய்கள் மனிதர்களிடம் மிக அன்போடு, நன்றியோடு பழகக்கூடியவை. அவைகளுக்கும் குழந்தைகளைப் போல் அன்பு தேவை. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செல்லப்பிராணிகளை விலக்கி வைக்கும் போது அவைகள் மனதுக்குள் வருத்தப்படும். அதுவே குழந்தைகள் மீது அவைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் வளர்ப்பு பிராணிகள் மீதும் பாசம் செலுத்துங்கள்.

    * குழந்தைகள் சாப்பிடும் தட்டில் வாய் வைக்கவோ, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை முகர்ந்து பார்க்கவோ வாய்ப்பளிக்கவேண்டாம். செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள். அதேநேரம் குழந்தைக்கு ஆபத்து நேராமலும் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தையால் அவைகளுக்கும் ஆபத்து வரக்கூடாது. ஒருபோதும் செல்லப்பிராணியையும் குழந்தையையும் தனியாக பழக அனுமதித்து விடக்கூடாது.

    * செல்லப்பிராணியோடு குழந்தை எவ்வளவுதான் அன்போடு பழகினாலும் உங்கள் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே ஆபத்துகளை தவிர்க்கலாம். வெளியில் வாக்கிங் போகும்போது செல்லப்பிராணி, குழந்தை இரண்டையும் அழைத்துச் செல்லலாம். அப்படி செய்தால் வளர்ப்பு பிராணிகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அவை புரிந்துகொள்ளும். குழந்தைக்கும்-வளர்ப்பு பிராணிக்கும் இடையே நல்ல புரிதலும் உருவாகும்.

    * குழந்தைக்கு உணவூட்டும்போது வளர்ப்பு பிராணிகளை அருகில் சேர்க்கவேண்டாம். அதன் உரோமம் உணவுப் பொருளில் உதிரக்கூடும். குழந்தைகள் வீறிட்டு அழுவதும், கத்துவதும் பிராணிகளுக்கு திகிலை ஏற்படுத்தும். அப்போது அவைகளின் அச்சத்தை போக்கவேண்டும். நாளடைவில் பழகிவிடும். குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்துவதை பார்த்து சில நேரங்களில் நாய்கள் பொறாமைப்படுவதுமுண்டு.

    குழந்தைகளோடு நாய்களை விளையாட அனுமதிக்கலாம். ஆனால் அப்போது பெற்றோர் அருகில் இருக்கவேண்டும். செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். படிப்படியாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள். பிராணிகள், குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க நீங்கள் செயல்கள் மூலம் சொல்லிக் கொடுங்கள். அவைகளும் புரிந்துகொள்ளும்.

    • குழந்தைக்கு பால் ஊட்டும் போதெல்லாம், தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.
    • ஒரே நேரத்தில் குழந்தைக்கு அதிக பால் கொடுக்க வேண்டாம்.

    குழந்தைக்கு சில நேரங்களில் திடீரென குடித்த பால் அவர்களின் மூக்கு மற்றும் வாய் வழியாக மீண்டும் வரக்கூடும். சிலர் இதை எதுக்களித்தல், ஓங்கரித்தல் என குறிப்பிடுவதுண்டு. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.

    கர்ப்ப காலம் மட்டுமின்றி ஒரு குழந்தை குறிப்பிட்ட வயது வரை பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் வரை பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். காரணம், குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என அவர்களால் சொல்ல முடியாது, அதை பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.


    தாயின் பால் குடித்த பிறகு குழந்தைகள் வாந்தி எடுப்பதை அடிக்கடி கவனித்திருப்போம். இது பலவீனமான செரிமான செயல்முறையின் அறிகுறியாகும்.

    பல சமயங்களில் குழந்தைகள் அளவு தெரியாமல் தேவைக்கு அதிகமாக பால் குடித்துவிடுகிறது. அந்த குழந்தையின் சிறிய வயிற்றில் அதிகமான பாலை கையாள முடியாததால் கூடுதலான பால் தானாகவே வெளியேறிவிடுகிறது.


    GERD எனப்படும் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் என்பது உணவுக் குழாயில் மீண்டும் குடித்த பால் வெளியேறும் நிலையாகும். இதன் காரணமாகவே மூக்கு மற்றும் வாய் வழியாக பால் வெளியேறுகிறது.

    குழந்தைக்கு பால் குடிக்கும் போது அவர்களின் தலை கீழ்நோக்கி இருந்தாலோ அல்லது சரியாக பிடிக்கப்படாமல் இருந்தாலோ பால் தொண்டையிலேயே சிக்கி நிற்கிறது. இது சமயங்களில் மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறுகிறது.

    குழந்தையின் செரிமான அமைப்பு என்பது சரியாக வளர்ச்சியடையவில்லை என்றாலும் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. குழந்தைகள் குடித்த பால் தானாகவே மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறுகிறது.


    * குழந்தைக்கு சரியான நிலையில் உணவளிக்க வேண்டும்.

    * குழந்தைக்கு பால் ஊட்டும் போதெல்லாம், தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.

    * கொஞ்சம் கொஞ்சமாக பால் கொடுங்கள். ஒரே நேரத்தில் குழந்தைக்கு அதிக பால் கொடுக்க வேண்டாம்.

    * ஒவ்வொரு முறையும் உணவளித்த பிறகு குழந்தையுடன் சற்று விளையாடுங்கள், அதேபோல் நன்றாக தூங்குகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • கர்ப்பிணிப் பெண்களில் பால் உற்பத்தி குறைதல்.
    • ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் ரத்தத்தை இழப்பதால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது அவர்களுக்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படலாம். இரும்புச்சத்து குறைபாடு பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எந்தவொரு பெண்ணும் தங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளை அனுபவித்தால் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    உடலில் இரும்புச்சத்து இல்லாததால் ரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படுகிறது. இந்த இரும்புச்சத்து குறைபாடு ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.


    இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் பிரச்சனைகள்:

    * இரும்புச்சத்து குறைபாட்டால் பெண்கள் தொடர்ந்து சோர்வு மற்றும் பலவீனத்தை அனுபவிக்கலாம்.

    * உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்.

    * இரும்புச்சத்து குறைபாட்டால் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும்.

    * ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    * கர்ப்பிணிப் பெண்களில் பால் உற்பத்தி குறைதல்.


    * முடி உதிர்தல்.

    * குழந்தை குறைந்த எடையில் பிறக்கும் நிலை போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது.

    இரும்புச்சத்து குறைவதற்கான காரணங்கள்:

    * மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பு இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.


    * கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது.

    * பெண்களுக்கு ஏற்படும் செலியாக் நோய், கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற நோய்கள் இரும்பு உறிஞ்சுதலில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

    *அதிகப்படியான ரத்தப்போக்கு, புண்கள் அல்லது புற்றுநோய் போன்றவையும் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும்.


    தடுப்பதற்கான வழிமுறைகள்:

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். சிவப்பு இறைச்சி, மீன், முட்டை, பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள். உலர்ந்த விதைகள், ஆரஞ்சு, பேரிக்காய், தக்காளி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.

    மாதவிடாய் காலத்தில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அல்லது இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    • மாதவிடாய் சுழற்சியுடன் மாறிக்கொண்டே இருக்கும்.
    • எண்டோமெட்ரியத்தின் தடிமனை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

    எண்டோமெட்ரியம் என்பது பெண்ணின் கருப்பையின் உட்புற பகுதி ஆகும். ஒரு பெண்ணின் சாதாரண நாட்களில் இதன் வளர்ச்சி மாறிக்கொண்டே இருக்கும் உறுப்புகளில் இதுவும் ஒன்று.


    ஒவ்வொரு மாதமும் இந்த எண்டோமெட்ரியல் லைனிங் மாதவிடாய் சுழற்சியுடன் மாறிக்கொண்டே இருக்கும். இது இனப்பெருக்க ஹார்மோன்களான புரோஸ்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றுக்கு ஏற்ப அதன் தடிமன் மாறுபடும்.

    சிலநேரங்களில் எண்டோமெட்ரியல் லைனிங் தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருக்கும் போது மாதவிடாய் காலங்களில் ஒழுங்கற்ற ரத்தப்போக்கு ஏற்படுகிறது.

    எண்டோமெட்ரியத்தின் பயன்பாடு:

    ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஆரோக்கியமான எண்டோமெட்ரியம் மிகவும் முக்கியமானது. வெற்றிகரமான கர்ப்பத்திற்கு இது மிகவும் மெல்லியதாகவோ அல்லது மிகவும் தடிமனாகவோ இருக்கக்கூடாது.

    ஒரு வெற்றிகரமான கர்ப்பத்திற்கு, உங்கள் ஃபோலிகுலர் ஆய்வின் போது 7 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட எண்டோமெட்ரியல் தடிமன் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த அளவு தடிமன் கருவை உள்வைப்பதற்கும் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்கும் போதுமானதாக இருக்கும்.

    எண்டோமெட்ரியத்தின் முதன்மை செயல்பாடு ஒரு பெண்ணின் இனப்பெருக்க நாட்களில் ஆகும்.


    ஒரு பெண்ணின் ஃபலோபியன் குழாயிலிருந்து முட்டையை வெளியிடுவதற்கு சற்று முன்பு, எண்டோமெட்ரியத்தின் செயல்பாட்டு அடுக்கு குறிப்பிட்ட மாற்றங்களுக்கு உட்படுகிறது.

    கருப்பையின் உட்புறப் புறணி தடிமனாகத் தொடங்குகிறது மற்றும் கருவை மற்றும் நஞ்சுக்கொடியை ஆதரிக்க தன்னை தயார்படுத்துகிறது.

    மாதவிடாய் சுழற்சிக்கு பின்னர் கருத்தரித்தல் நடக்கவில்லை என்றால் இந்த எண்டோமெட்ரியல் லைனிங் மாதவிடாய் எனப்படும் செயல்பாட்டில் தன்னைத்தானே உதிர்த்துவிடும்.

    எனவே எண்டோமெட்ரியத்தின் தடிமனை சரிபார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் கருப்பையின் புறணி கர்ப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு நுண்ணறை அளவுடன் பொருந்த வேண்டும்.

    எண்டோமெட்ரியத்தின் தடிமன் மெல்லியதாக இருந்தால் அது கர்ப்பம் தரிக்க சாதகமாக இருக்காது.

    • ரசத்தின் சுவை கூட தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.
    • நெய் மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.

    * தேங்காய் மூடியை தண்ணீரில் மூழ்க வைத்திருந்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

    *கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை வாழை இலையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

    * பயிறு வகைகளை புழு, பூச்சி சேதப்படுத்தாமல் இருக்க விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைக்கவும்.

    * எந்த சட்னி செய்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணம் கமகமக்கும்.

    * ரசத்தின் சுவை கூட தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.

    * தோசை சுடும்போது வாசனையால் ஊரையே ஈர்க்க வேண்டுமா? தோசை வார்க்கும் முன் தோசைக்கல்லில் சிறிது நல்லெண்ணெய் தேய்க்கவும்.

    * நெய் 'கமகம'வென மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.

    * முறுக்கு, சீடைக்கு மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்து பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

    * இட்லி மல்லிகைப்பூ போல் இருக்க இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் சேர்க்கவும்.

    * வாடிய கொத்தமல்லித் தழையை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் புதிது போல் மாறிவிடும்.

    * வாணலியை சூடாக்கி பின்பு அதில் சாம்பார் வெங்காயத்தை போட்டு சூடு வர புரட்டினால் அதன் தோலினை சுலபமாக உரிக்க இயலும்.

    * தோசை தயாரிக்கும்போது உளுத்தம் பருப்புடன் ஒரு கப் ஜவ்வரிசியையும் கலந்து அரைத்தால் தோசை நன்கு வார்க்க வருவதுடன் மெல்லியதாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * தேங்காய் துவையல் அரைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * குழம்புக்கோ, கூட்டிற்கோ துருவிய தேங்காயில் ஒரு ஸ்பூன் தேங்காய் பால் எடுத்து அடுப்பில் இருந்து இறக்கும்போது அதில் விடுங்கள். ருசியோ ருசி தான்.

    * அவியல் செய்யும்போது அரைத்த தேங்காய் விழுதை தயிரில் கலக்காமல் வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து பிறகு தயிர் சேர்க்க வேண்டும். இதனால் அவியல் நீர்த்துப் போவதை தவிர்க்கலாம்.

    * தயிரில் தக்காளி துண்டுகள், சர்க்கரை ஏலத்தூள், சிறிது உப்பு சேர்த்து ஸ்வீட் பச்சடி செய்யலாம். விருப்பமானால் வாழைப்பழம், ஆப்பிள் துண்டுகளையும் சேர்க்கலாம்.

    * மஞ்சள் பூசணி வாங்கினால் அதை சமைத்து விட்டு நடுவில் உள்ள குடல் போன்ற பாகத்தை வீணாக்காமல் அதை எண்ணெய் விட்டு வதக்கி அத்துடன் வறுத்த பருப்பு, மிளகாய், புளி, உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிடலாம். மிகவும் ருசியாவும் மணமாகவும் இருக்கும்.

    * மழை, குளிர் காலங்களில் வடகம் சரியாகப் பொரியாது, அவ்வாறு நமத்து விட்டால் பொரிப்பதற்கு முன் வாணலியை சூடாக்கி அதில் வடகத்தை போட்டு சற்று புரட்டி எடுத்துக் கொண்டு பிறகு எண்ணெய்யில் பொரித்தால் நன்கு பொரியும்.

    * பச்சரிசி தோசை அரைக்கும் போது கூடவே நாலைந்து ஓம இலைகளையும் சேர்த்து அரைத்தால் தோசை வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். ஓமம் குளிர் காலத்தில் நல்ல மருந்தும் கூட.

    * தேங்காய் துவையலுக்கு தேவையான பொருட்களை தாளித்து எடுக்கும் போது சிறிது தனியாவையும் சேர்த்து வறுத்து அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.

    * கடலைப்பருப்பை போளி பூரணம் செய்யும்போது அதற்கு தேவையான பூரணத்திற்கு வெல்லத்துக்கு பதில் பொடித்த சர்க்கரையை பயன்படுத்தினால் போளி சுவையாக இருக்கும். போளி மெல்லியதாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.

    * சாம்பார், மோர், குழம்பு ஆகியவற்றிற்கு பருப்பு உருண்டை செய்து போடும் பொழுது ஒரு டீஸ்பூன் அரிசி மாவை உருண்டைக் கலவைடன் கலந்து உருட்டி செய்தால் அவை கரைந்து போகாமல் முழுசாக இருக்கும்.

    • தினசரி குழந்தை தூங்கப் போகும் முன் ஒர் புத்தகத்தை படித்து காட்ட வேண்டும்.
    • குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதை சொல்ல வேண்டும்.

    குழந்தைகளிடம் சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் அறிவை விரிவாக்கும், உலகம் பற்றிய தெளிவான பார்வையை ஏற்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஊடக பிடியில் இருந்து அவர்களை விடுவிக்கும். சரி பெற்றோர்கள் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

    குழந்தைகளின் மழலைப் பருவத்தில் இருந்தே அவர்களை புத்தக வாசகராக பெற்றோர் வளர்க்க முடியம். தினசரி குழந்தை தூங்கப் போகும் முன் ஒரு சிறுவர் கதை புத்தகத்தை அவர்களுக்கு படித்துக்காட்ட வேண்டும். அல்லது பெற்றோர் தாம் படித்த கதையை கூற வேண்டும்.


    குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வகையிலும் கதை சொல்ல முயல வேண்டும். இப்படிச் செய்யும் போது, குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்தகங்கள் மீது ஆர்வம் பிறக்கும்.

    குழந்தைகளை என்னதான் சொல்லி வளர்த்தாலும், பெற்றோர்கள் செய்யும் செயலைப் பார்த்துதான் அவர்கள் வளர்கின்றனர். அதைத்தான் மீண்டும் செய்கின்றனர். அந்த வகையில் பெற்றோர், புத்தகம், நாளிதழ் படிப்பதாக இருந்தால் குழந்தைகளின் கண் முன் வாசிக்க வேண்டும்.

    தினமும் பெற்றோர்களின் வாசிப்பு பழக்கத்தை பார்க்கும் குழந்தைகள், தாமாகவே புத்தகத்தை எடுத்து புரட்டத் தொடங்குவார்கள்.

    குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்துச் சென்றால், நிறைய புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது அவர்களுக்கு ஆச்சரியமாகவும், ஆசையாகவும் இருக்கும். வீட்டுக்கு அருகே உள்ள நூலகத்துக்கு பெற்றோர் தமது குழந்தையை வாரத்துக்கு ஒருமுறையாவது கூட்டிச் சென்றால், நூலகத்தில் அமர்ந்து படிப்பவர்களை பார்த்தும் புத்தகங்களை பார்த்தும் வாசிப்பு பழக்கம் வரத் தொடங்கும்.


    புத்தகத்தில் ஒரே கதையை மீண்டும் மீண்டும் படித்து காட்டுவது பெற்றோருக்கு அயர்வை ஏற்ப ஏற்படுத்தலாம். ஆனால் குழந்தை அதை விரும்பிக் கேட்க வாய்ப்பு உள்ளது. எப்படி ஒரு பாடலை திரும்பத் திரும்ப கேட்டு குழந்தைகள் உற்சாகம் அடைகிறார்களோ அதைப் போலத்தான் இதுவும் குழந்தைகள் கதையிலோ, படங்களிலோ முதன்முதலில் தவறவிட்ட விஷயங்களை கண்டுபிடிக்க விரும்புவார்கள்.

    அதனால், அவர்களின் கவனத்தை பெறவும், புத்தக வாசிப்பில் சலிப்பு தட்டாமல் இருக்கவும், அவர்களுக்கு பிடித்த கதைகளை மீண்டும் சொல்லிக் காட்ட அல்லது வாசிக்க வைக்க வேண்டும்.


    குழந்தைகளுக்கு எந்த மாதிரியான புத்தகங்களை கொடுக்கிறோம் என்பதை போல, எந்த இடத்தில் புத்தகம் படிக்கிறோம் என்பதும் முக்கியம். புத்தகம் வாசிக்கும்போதோ அல்லது குழந்தைக்கு கதை சொல்லும்போதோ, அறையில் விளையாட்டுப் பொருட்கள், இரைச்சல் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கவனம் முழுவதும் புத்தகத்தின் மேல் இருப்பது போன்ற சூழலை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்.

    குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற எளிய, பெரிய எழுத்தில், படங்கள் அதிகம் கொண்ட புத்தகங்களை ஆரம்பத்தில் அவர்களுக்கு பெற்றோர் படிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தால் அதை பாராட்டி, பரிசு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

    • தனிமையில் இருப்பவர்களுக்கு அல்சைமர் நோய் உருவாகும்.
    • மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    தனிமையும்.. இறப்பும்.. தனிமையால் நேரடியாக மரணத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், தனிமையில் இருப்பவர்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தனிமை, இறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக கூறுகின்றன.


    தனிமையின் அறிகுறிகள்

    * தோழமையாக பழகும் நபர்கள் யாருமே இல்லாதது போன்ற உணர்வு

    * தாம் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு

    * தங்கள் உறவினர்கள், குடும்பத்தினருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பது போன்ற உணர்வு

    * நட்பு வட்டம் இல்லை அல்லது குறைந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு

    * உரிமையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்கள் இல்லை என்ற உணர்வு

    பணி, படிப்பு, தொழில் ரீதியாக பலரும் குடும்பத்தினர், நட்பு வட்டத்தினரை பிரிந்து தனிமையில் வசிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

    முதியவர்கள்தான் தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள் என்ற நிலை மாறி இளம் தலைமுறையினரும் தனிமையில் காலத்தை கழிக்கும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

    அப்படி தம் மீது அன்பு, அக்கறை செலுத்துபவர்களிடம் இருந்து பிரிந்து வாழ்வது மனத்துயரம், அசவுகரியம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    நீண்டகாலமாக தனிமையை அனுபவிப்பது மன ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிமை ஏற்படுத்தும் மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    தனிமையில் இருப்பவர்களுக்கு மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோய் உருவாகும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாகும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நாள்பட்ட தனிமைக்கு ஆளாகுவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்துவிடும்.

    தூக்க சுழற்சியை பாதிப்படைய வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடைய செய்துவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் தனிமையை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் உதவும் விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்....



    அன்புக்குரியவர்களுடன் இணையுங்கள்

    தொலை தூரத்தில் இருந்தாலும் செல்போன் உரையாடல், வீடியோ அழைப்புகள் மூலம் உங்கள் மீது அன்பு செலுத்துபவர்களுடன் இணையுங்கள். 10 நிமிடம் தொடர்ந்தால் கூட போதும். அந்த தொடர்பும், மனமார்ந்த உரையாடலும் உங்கள் மன நிலையை திறம்பட மேம்படுத்த உதவிடும்.


    நன்றி கூறுங்கள்

    வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களின் உயர்வுக்கு ஏதாவதொரு வகையில் சிலர் காரணமாக இருப்பார்கள். அவர்களுக்கு மனமார நன்றி கூறுங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனிமையில் இருக்கும் சூழலிலும் மீண்டும் நினைவு கூர்ந்து மனதுக்குள் நன்றி செலுத்துங்கள்.

    தனியாக இருக்கும்போது நேர்மறையான எண்ணங்களை மனதில் நிழலாட செய்யுங்கள். விருப்பமான உணவுகளை ருசியுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்த உதவிடும் சூழலை கட்டமையுங்கள்.


    இசையை ரசியுங்கள்

    தனிமையை விரட்டி மனதை சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமல் நிலை நிறுத்தக்கூடிய அபார சக்தி இசைக்கு உண்டு. விருப்பமான இசையை கேட்டு ரசியுங்கள். அவை கவனச்சிதறலை தடுக்கும். நேர்மறையான எண்ணங்களை, சூழலை நிரப்ப உதவிடும்.


    இயற்கையோடு இணையுங்கள்

    வீடு, அறைக்குள் முடங்கியே கிடப்பது தனிமை உணர்வை அதிகரிக்க செய்துவிடும். விரக்தியான மன நிலைக்கு வித்திடும். அலுவலக பணி, தொழில், படிப்பு இவற்றை தவிர்த்து வெளியிடங்களில் சில மணி நேரத்தை செலவிட வேண்டும். அது காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதாக இருக்கலாம்.

    இயற்கை சூழ்ந்த இடங்கள், பூங்காக்களில் நேரம் செலவிடுவதாக இருக்கலாம். நண்பர்களுடன் பொழுதை போக்குவதாக இருக்கலாம். இயற்கையோடு செலவிடும் நேரம் மன நலத்திற்கு கூடுதல் நன்மைகளை சேர்க்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உணர்வுகளை வழிநடத்துங்கள்

    கலை, இசை அல்லது எழுத்து என உணர்ச்சிகளை வழிநடத்தி செல்லும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவை படைப்பாற்றல் திறனை அதிகரிக்கவும், தேவையற்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்வதை தவிர்க்கவும், கவனச்சிதறலை கட்டுப்படுத்தவும் வழிவகை செய்யும்.


    செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள்

    செல்லப்பிராணிகள் தோழமை உணர்வை கொடுக்கக்கூடியவை. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுபவை. உங்களிடம் செல்லப்பிராணி இல்லையென்றால் தெரு நாய்களிடம் நேசம் காட்டுங்கள். விலங்குகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அது மனதுக்கு இதமளிக்கும்.


    உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்

    உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது அவற்றின் தீவிரத்தைக் குறைக்கும். உங்களின் உணர்ச்சிகளை அன்புக்குரியவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது மனதில் பதிந்த விஷயங்கள், எண்ணங்களை டைரியில் எழுதும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். இத்தகைய செயல்பாடுகள் நல்வாழ்வுக்கு வித்திடக்கூடியவை.

    • அனைத்து மணிக்கட்டு வலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை.
    • பொதுவாக ஒற்றடம், ஓய்வு மற்றும் வலி நிவாரணி எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

    மணிக்கட்டு வலி பெரும்பாலும் சுளுக்கு அல்லது திடீர் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் கீல்வாதம், கார்பல் டன்னல் சிண்ட்ரோம், எலும்பு தேய்மானம், நரம்பு பலவீனம் போன்றவற்றாலும் ஏற்படலாம்.

    கம்ப்யூட்டர்களில் நீண்ட நேரம் பணிபுரிபவர்கள், தட்டச்சு பணிகளை செய்பவர்கள், நீண்ட தூரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோருக்கும் மணிக்கட்டு வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வலிக்கான சரியான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுப்பது அவசியம்.

    கார்பல் டன்னல் சிண்ட்ரோம்:

    மணிக்கட்டின் உள்ளங்கை பகுதி கார்பல் டன்னல் ஆகும். இதன் வழியாக செல்லும் மீடியன் நரம்பு மீது அழுத்தம் அதிகரிக்கும் போது வலி ஏற்படும்.

    கேங்க்லியன் நீர்க்கட்டிகள்:

    இந்த மென்மையான திசு நீர்க்கட்டிகள் பெரும்பாலும் உள்ளங்கைக்கு பின்புறம் உள்ள மணிக்கட்டின் பகுதியில் ஏற்படும்.

    கீன்பாக் நோய்:

    இந்த கோளாறு பொதுவாக இளம் வயதினரை பாதிக்கிறது. மணிக்கட்டில் உள்ள சிறிய எலும்புகளில் ஒன்றான லூனேட் எலும்பிற்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லாததால் கீன்பாக் நோய் ஏற்படுகிறது.


    ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்:

    இது கைகள், கால்கள் மற்றும் உடலின் பல மூட்டுகளை பாதிக்கும் நாள்பட்ட அழற்சி நோயாகும். இந்நோயில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மூட்டுகள் மற்றும் சொந்த திசுக்களை தாக்குவதால் இது ஏற்படுகிறது.

    டெனோசினோவிடிஸ்:

    இது மணிக்கட்டில் உள்ள தசை நாண்களைப் பாதுகாக்கும் இணைப்பு திசுக்களின் வீக்கம் ஆகும்.


    மணிக்கட்டு பகுதியில் ஏற்படும் காயங்கள், சுளுக்குகள், எலும்பு முறிவுகள், எலும்பு பிறழ்தல் போன்ற பல காரணங்களால் மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்படுகிறது. எந்த வகையான நோய் என்பதை ரத்த பரிசோதனைகள், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவை மூலம் கண்டுபிடிக்கலாம்.

    அனைத்து மணிக்கட்டு வலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை. சிறு சுளுக்கு மற்றும் வலிகளுக்கு பொதுவாக ஒற்றடம், ஓய்வு மற்றும் வலி நிவாரணி எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஆனால் வலி மற்றும் வீக்கம் சில நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது மோசமாக இருந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

    • ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான கிருமிகள் அற்ற குடிநீர் மிகமிக முக்கியம்.
    • குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டு பாக்டீரியா வளர வாய்ப்புண்டு.

    நீரின்றி அமையாது உலகம் என்ற சொல்லுக்கேற்ப தண்ணீர் இல்லாமல் உலகமும் இயங்காது, உடலும் இயங்காது. நமது உடல் எடையில் சுமார் 60 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான கிருமிகள் அற்ற குடிநீர் மிகமிக முக்கியம்.


    நல்ல குடிநீருக்கென்று ஒரு சுவை, மணம், தரம் உண்டு. அதிக வெப்பம் உள்ள இடத்தில் இருக்கும் குடிநீரில் பாக்டீரியாக் கிருமிகள் வளரவும், நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் இருக்கும் குடிநீரில் பாசி படரவும் வாய்ப்பு அதிகம். குளிர்ச்சியான இடத்தில் வைக்கப்படும் குடிநீரில் கிருமிகள், பாசிகள் வளர வாய்ப்பு குறைவு.

    வீட்டினுள் சாதாரண இடத்தில் நாம் குடிநீரை பாத்திரத்தில் வைத்திருக்கிறோம் என்றால் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் காலி பண்ணிவிடுவது நல்லது. வீட்டிற்குள் பிரிட்ஜில் வைக்கப்படும் வடிகட்டிய குடிநீரை சுமார் நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளலாம்.

    குடிநீர் வைத்திருக்கும் பாத்திரம் நன்றாக மூடி வைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் பிரிட்ஜின் உள்ளே இருக்கும் உணவுப் பொருட்கள் மூலம் பூஞ்சைக் காளான் படர வாய்ப்புண்டு.

    அதிக நாட்களுக்கு வடிகட்டிய குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என்றால் நன்றாக மூடப்பட்ட, சீல் வைக்கப்பட்ட பெரிய பெரிய பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும். அத்துடன் இந்த பாத்திரங்கள் குளிர்ந்த, இருட்டான பகுதியில் தான் பாதுகாக்கப்பட வேண்டும்.


    சூரிய ஒளி நேராக படக்கூடாது. வெப்பமும் அருகில் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் நுண்ணுயிர்க் கிருமிகள் வளரும் வாய்ப்பில்லாமல் தடுக்கப்படும்.

    பிளாஸ்டிக் பாட்டில்களில் கேன்களில், வைக்கப்படும் குடிநீர் வெப்பத்திலும், சூரிய வெளிச்சத்திலும் அதிக நேரம் இருந்தால் பிளாஸ்டிக்கில் உள்ள கண்ணுக்குத் தெரியாத ரசாயனப் பொருட்கள் சிதைந்து குடிநீரில் கலந்துவிட வாய்ப்புண்டு. எனவே உயர்தரமான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கேன்களில் தண்ணீரை வைத்து பாதுகாப்பது நல்லது.

    நமது வீட்டு வெப்ப சூழ்நிலையில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் குடிநீரை சேமித்து வைக்க முடியும். மிகப் பழைய குடிநீரை குடிப்பது நல்லதல்ல. பாட்டிலை திறந்து விட்டால் அந்தத் தண்ணீர், நமது அறையில் இருக்கும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொள்ளும். அதனால் சுவை மாறிவிடும்.

    பாட்டிலைத் திறந்து விட்டால் ஓரிரு நாட்களுக்குள் குடித்து முடித்து விடுவது நல்லது. காரில் வைக்கப்படும் குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டு பாக்டீரியா வளர வாய்ப்புண்டு. தினமும் கண்ணாடி டம்ளரை உபயோகித்து தண்ணீர் குடிப்பது, குடித்த பின் அவ்வப்பொழுது கழுவி வைப்பது மிகவும் நல்லது.

    ×