search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "breastfeeding mothers"

    • தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.
    • நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கலாம்?

    ஆரோக்கியமாக, தற்போது எவ்வித மருந்துகளும் (வைட்டமின்கள், இன்சுலின், ஆஸ்துமா இன்ஹேலர்கள், தைராய்டு மாத்திரை, கண் சொட்டு மருந்துகளைத் தவிர்த்து) உட்கொள்ளாத தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.

    குறிப்பாக, அவர்கள், தங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும். அவர்களின் பச்சிளங்குழந்தைகள், ஆரோக்கியமாக போதுமான அளவு எடை அதிகரிப்புடன் இருக்க வேண்டும்; குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, போதுமான அளவு தாய்ப்பால் சுரத்தல் இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கக் கூடாது?

    புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகையிலைப் பொருள்களை உபயோகிப்பவர்கள் மற்றும் நிகோட்டின் மாற்று சிகிச்சையில் (Nicotinereplacement therapy) உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, HTLV அல்லது சிபிலிஸ் நோய்த்தொற்று உள்ளவர்கள், கடந்த 12 மாதங்களில் உறுப்புதானம் அல்லது ரத்ததானம் பெற்றவர்கள், மார்பகங்களில் முலையழற்சி (mastitis), பூஞ்சைத் தொற்று, ஹெர்பெஸ் (herpes simplex) அல்லது வேரிசெல்லா (varicella zoster) நோய்த்தொற்று உள்ளவர்கள் தாய்ப்பால் தானம் அளிக்கக் கூடாது.

    தாய்ப்பால் தானமளிப்பவர்களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என்று ரத்தப் பரிசோதனை எடுத்த பிறகு, தாய்ப்பால் சேகரிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கே, தாய்மார்கள் தங்கள் விரல்களைக் கொண்டு Manual எஸ்பிரஸின் முறையிலோ, பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தியோ, தாய்ப்பாலை அதற்குரிய கொள்கலனில் சேகரிப்பர். கொள்கலன் லேபிள் ஒட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேகரிக்கப்படும்.

    தானமளித்தவருக்கு ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் சிபிலிஸ் நோய்த்தொற்று இல்லை என்று ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்த பிறகு, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால், Pasteurization-க்கு உட்படுத்தப்படும்.

     பாஸ்டுரைசேஷன் செய்வதற்கு முன்பும் பின்பும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலில் நுண்ணுயிர்க்கிருமிகள் உள்ளனவா என்பதை அறிய வளர்சோதனை (culture) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, தாய்ப்பால் கொள்கலனில் அதன் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு, உறைவிப்பானில் 20 டிகிரி செல்சியசில் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 3 - 6 மாதங்கள் வரை, இவ்வாறு உறைய வைக்கப்பட்ட தாய்ப்பாலை உபயோகப்படுத்தலாம்.

    தீவிர பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படும்போது, உறைய வைக்கபட்ட தாய்ப்பாலுடைய கொள்கலன், குழாயின் மிதமான சுடுநீரில் காட்டப்பட்டு, நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தாய்ப்பால், மூன்று மணி நேரத்துக்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

    சென்ற அத்தியாயத்தில், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் நோய்த்தொற்று ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தாய்ப்பால் வழியாக ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று ஏற்படக் கூடுமென்ற காரணத்தால்தான், தாய்ப்பால் தானமளிப்பவர்கள் இந்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

     இந்த பரிசோதனைகள் நெகட்டிவ்வாக இருப்பின் மட்டுமே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பாஸ்டுரைசேஷன் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு உறைய வைக்கப்படும். பாஸ்டுரைசேஷன் செயல்முறையில், தாய்ப்பாலில் வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் இருந்தால், கொல்லப்பட்டுவிடும். அதன்பிறகு, வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது, உறுதியான பிறகுதான், தாய்ப்பால் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    எனவே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலின் மூலம் பச்சிளங்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைவு. பவுடர் பாலைவிட, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பலமடங்கு மேலானதாகும். எனவே கண்டிப்பாக, பச்சிளங்குழந்தைகளுக்கு தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம்.

    ×