என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • நடைப்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள் இந்த பயிற்சியை எளிமையாகவே செய்துவிடலாம்.
    • ஒரே இடத்தில் நின்றபடி இந்த பயிற்சியை இன்னும் எளிமையாக செய்யலாம்.

    யோகா, நடைப்பயிற்சி இவை இரண்டும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியவை என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இவை இரண்டின் கலவையாக விளங்கும் 'நடைப்பயிற்சி யோகா?' பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை முயற்சித்து பார்க்க ஆர்வம் காட்டுவதுமில்லை. நடைப்பயிற்சியின் எளிமையையும், யோகாவின் நினைவாற்றலையும் இணைக்கும் அழகான பயிற்சியாக நடைப்பயிற்சி யோகா அமைந்திருக்கிறது. அது பற்றி அறிந்து கொள்வோமா?

    யோகாவில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது?

    யோகாவை வழக்கமாக ஓரிடத்தில் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நடைப்பயிற்சி யோகாவை அதன் பெயருக்கேற்ப சற்று உடல் அசைவுகளுடனோ, நடந்த நிலையிலோ மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது பாயில் அமர்ந்து பயிற்சி செய்யும் பாரம்பரிய யோகாவை போல் அல்லாமல் நடைப்பயிற்சி யோகா என்பது 'மனதுடன் கூடிய இயக்கம்' பற்றியதாக அமைந்திருக்கும். அதாவது நடைப்பயிற்சியின்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஏற்ப சுவாசத்தின் செயல்பாட்டையும் நிர்வகித்து இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

    எப்படி செய்வது?

    நடைப்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள் இந்த பயிற்சியை எளிமையாகவே செய்துவிடலாம். இந்த நடைப்பயிற்சி யோகாவை தொடங்கும்போது மனம் அமைதி நிலையில் இருக்க வேண்டும். எந்தவிதமான சிந்தனைக்கும் இடம் கொடுக்கக்கூடாது. நடக்க தொடங்கியதும் மூச்சை உள் இழுத்துக்கொள்ள வேண்டும். அதாவது நான்கு காலடிகள் எடுத்து வைத்ததும் மூச்சை உள் இழுத்துவிட்டு பிறகு நான்கு காலடிகள் நடந்த பிறகு மூச்சை வெளியே விடலாம். இப்படி நான்கு காலடிகளுக்கு ஒருமுறை மூச்சை உள் இழுத்தும், வெளியேற்றியும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். நடக்கும்போது கைகளை நன்றாக நீட்டிய நிலையிலும், தோள்பட்டையை நேர் நிலையிலும் வைத்தபடி பிடித்தமான யோகாசன போஸ்களை செய்தும் பயிற்சி மேற்கொள்ளலாம்.

    ஒரே இடத்தில் நின்றபடி இந்த பயிற்சியை இன்னும் எளிமையாக செய்யலாம். தரையில் நேர் நிலையில் நின்றபடி நன்றாக மூச்சை இழுத்து வெளியே விட வேண்டும். பின்பு குனிந்து கால் விரல்களுக்கு நேராக தலையை வைத்தபடி கைகளை ஊன்ற வேண்டும். அதைத்தொடர்ந்து கைகளை முன்னோக்கி எடுத்து வைத்து நடப்பது போல் தவழ்ந்து செல்ல வேண்டும். பின்பு பின்னோக்கி கைகளை கொண்டு வந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அப்போது மூச்சை நன்றாக இழுத்து அசைவுக்கு ஏற்ப சுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    நடைப்பயிற்சி யோகாவின் உடல் ரீதியான நன்மைகள்

    ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

    உடல் தசைகளை வலுப்படுத்தும்.

    மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தும்.

    உடல் எடை குறைவதற்கு உதவும்.

    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    மன ரீதியான நன்மைகள்

    மன அழுத்தத்தைக் குறைக்கும்.

    மன அமைதியை மேம்படுத்தும்.

    ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும்.

    மனத்தெளிவை உண்டாக்கும்.

    தேவையற்ற பதற்றத்தை கட்டுப்படுத்தும்.

    சுவாசம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

    நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

    • உடல் என்பது ஒருவகை எந்திரம் போன்று செயல்படுகிறது.
    • இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட இயற்கை பானங்களையும் அவ்வப்பொழுது பருக வேண்டும்.

    இன்றைய அவசரமான நகர வாழ்க்கை முறைகளால், உண்பது மற்றும் உறங்குவது ஆகிய அத்தியாவசிய செயல்கள் கூட காலநேரப்படி அமையாமல் நேரம் தவறி அமைந்து விடுகிறது. அதனால் தான் பல்வேறு நோய்களுக்கு மனித உடல் ஆளாகி நிற்கிறது. இந்த சீரற்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு அனைவரும் உணவு முறைகளில் சீராக செயல்பட உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அந்த வகையில் உணவு முறைகளை சீர்படுத்தி, வாழ்வில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் நலத்தை போனஸ் ஆக பெற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவ்வகையில் உடல் நலனுக்கு ஏற்ற முக்கியமான குறிப்புகளை தீங்கு பார்க்கலாம்.

    உடல் என்பது ஒருவகை எந்திரம் போன்று செயல்படுகிறது. அதற்கு எரிபொருளாக உணவு அவசியம். அந்த எரிபொருளை நமது உடல் உள்ளார்ந்த கடிகாரம் மூலம் நேர்த்தியாக அதற்கான பசியை உணரச் செய்கிறது. அதனால் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் சரியான உணவு, சரியான நேரம், சரியான அளவு ஆகிய மூன்று அடிப்படை விஷயங்கள் அத்தியாவசியமானதாகும்.

    சரியான உணவு என்பது ஆரோக்கியமான உணவு முறையின் அடிப்படையாக அமைவதாகும். அந்த வகையில் காய்கறி வகைகளை அதிகமாக உணவில் நாம் அனைவருமே சேர்த்துக் கொள்ள வேண்டும். முளைகட்டிய தானியங்கள், அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தவறாமல் உட்கொள்வது அவசியம். அத்துடன் இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட இயற்கை பானங்களையும் அவ்வப்பொழுது பருக வேண்டும்.

    சித்திரை போன்ற வெயில் காலங்களில் செயற்கையான குளிர் பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவற்றை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

    * காலை உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து கொண்ட உணவு வகைகளை உண்ண வேண்டும். அந்த வகையில் நம்முடைய பாரம்பரிய உணவு, முழு தானிய உணவு ஆகியவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    * மதிய உணவைப் பொறுத்தவரை கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு ஆகியவை அடங்கிய உணவை எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் காய்கறி, கீரைகள், பயிறு வகை, மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றையும் உண்பதற்கான காலம் மதிய நேரமே.

    * இரவு நேரத்தில் எளிதில் செரிக்க கூடிய உணவு வகைகளை குறைந்த அளவில் உட்கொள்வதே எப்பொழுதும் நன்மையை ஏற்படுத்தும்.

    நம்முடைய இந்திய பாரம்பரிய முறைப்படி உணவு பழக்கம் என்பது மூன்று வேலைகளாக காலை, இரவு என அமைந்துள்ளது. அத்துடன் காலை, மதியம் மற்றும் மதியம், இரவு வேலைகளுக்கு இடையில் சிற்றுண்டிகளையும் தேவைக்கு ஏற்ப அளவாக உட்கொள்ளலாம்.

    ஒவ்வொரு நேர உணவை உட்கொண்டு முடித்ததும் அடுத்த உணவுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இடைவெளி அவசியம். எப்பொழுதுமே காலை உணவை உறங்கி எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் உண்பதே நல்லது. ஏனென்றால் இரவு சாப்பிட்டு முடித்தவுடன் நீண்ட நேரம் கழித்து காலை உணவு உண்பதால் அதை தாமதம் செய்வது கூடாது. அதனால் தான் அதை பிரேக் பாஸ்ட் அதாவது உண்ணா நோன்பை உடைப்பது என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.

    * காலை உணவு என்பது காலை 7 முதல் 9 மணிக்குள்ளாகவும்,

    * மதிய உணவை அதிகபட்சமாக நண்பகல் 2 மணிக்குள்ளாகவும்,

    * இரவு உணவை 8.30 மணிக்குள்ளாகவும் உண்பதே சிறந்தது.

    இரவு உணவைப் பொறுத்தவரை உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே உண்பது நல்லது. அப்பொழுதுதான் தூக்கத்திற்கான ஹார்மோன் சரியாக வெளிப்பட்டு நல்ல தூக்கம் ஏற்படும். இரவில் மனித உடலினுடைய வளர்ச்சிதை மாற்றம் குறைவாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவின் அளவை அவசியம் இல்லாமல் குறைக்கக்கூடாது. நாம் உண்பதில் ஒருவேளை உணவாவது காய்கறி, பழங்கள், தானியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.

    • கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.
    • மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.

    மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே இல்லை. இந்த மண்ணுக்கும், குழந்தைகளுக்குமான உறவு என்பது மிக நெருக்கமானது. மண்ணை கண்டால் ஆரவாரம் செய்து விளையாடும் குழந்தைகள் ஏராளம். இன்று பெரியவர்களாய் இருக்கும் பலரும் மண்ணோடு உருண்டு புரண்டு விளையாடிய மகிழ்ச்சியான அனுபவத்தை கொண்டு இருப்போம். எத்தனை விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் இருந்தாலும் இயற்கையின் இலவசமான விளையாட்டுப் பொருள் என்றால் அது மண்தான். அதில் விளையாடுவதற்கு குழந்தைகளுக்கு அனுமதி கொடுங்கள். குழந்தைகள் மண், மணலில் விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்!

     

    * கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.

    * மண்ணில் வீடுகட்டி விளையாடுதல், கோபுரம் கட்டுதல், குச்சியை மறைத்து வைத்து கண்டு பிடித்தல், எலிவளை அமைத்தல், குகைகள் அமைத்தல் போன்ற பல விளையாட்டுகளை விளையாடுவதால் குழந்தைகளின் உடல் தசைகள் வலிமை பெறுகின்றன.

    * குழந்தைகள் மணலில் விளையாடுவதால் அவர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒற்றுமை மலர்கிறது. விட்டுக்கொடுக்கும் பழக்கம் வளர்கிறது.

    * மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.

    * ஈரமணல், உலர்ந்த மணல், நீர் சேர்த்து குழைத்த மணல், களிமண் என பலவித மணல்களில் விளையாடும் போது குழந்தைகளின் பிரித்தறியும் திறன் வளர்கிறது.

    * பெற்றோர் மணல் விளையாட்டுகள் மூலம் பெற்ற பசுமையான அனுபவங்களை குழந்தைகளுக்கும் கொடுத்திட வேண்டும். குழந்தைகளுக்கு மணல் விளையாட்டுகளின் மகிமையை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * இன்றைக்கு எத்தனையோ விளையாட்டுப் பொருட்கள் உருவெடுத்தாலும் அடிப்படையில் மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வாழ வித்திடுகின்றன.

    எனவே பெற்றோரே! குழந்தைகளுக்கு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுங்கள். மண் உண்டியலை வாங்கி கொடுத்து சேமிக்க சொல்லிக்கொடுங்கள். வீடுகளில் மணல் தரைகள் இல்லாத இந்த காலச்சூழலில் குழந்தைகளை பூங்காக்களுக்கும், கடற்கரைக்கும் அழைத்துச் சென்று விளையாட விடுங்கள்.

    இயற்கையின் கொடையான மண்ணை நேசியுங்கள்.

    • குங்குமப்பூவுக்கும் சிவப்பு நிறத்துக்கும் தொடர்பே கிடையாது.
    • குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

    'சிவப்பு தங்கம்' என பிரபலமாக அறியப்படும் குங்குமப்பூ, உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாகும். இது, குரோகஸ் சட்டிவஸ் எனப்படும் மலரில் இருந்து கிடைக்கிறது.

    நமக்கு தெரிந்த இந்த குங்குமப்பூ, குரோகஸ் பூக்களின் உலர்ந்த ஆரஞ்சு-சிவப்பு சூலகமுடி ஆகும். குங்குமப்பூ செடி, மத்திய தரை கடல் பகுதிகளில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

    குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். கர்ப்பிணிகளுக்கு குங்குமப்பூவை ஏன் தருகிறார்கள் தெரியுமா?

    குங்குமப்பூவுக்கும் சிவப்பு நிறத்துக்கும் தொடர்பே கிடையாது. பாலில் குங்குமப் பூவைப் போடும்போது பாலின் நிறம் மாறுகிறது என்பதற்காக, அதைச் சாப்பிடுவதால் குழந்தையும் அந்த நிறத்தில் பிறக்கும் என்பது அர்த்தமில்லை. இது முற்றிலும் தவறான நம்பிக்கை.

    ஆனால், குங்குமப்பூவுக்கு ஒரு வாசனைப் பொருளாக நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக, இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

    இனிப்புச் சுவையுள்ள நறுமணப் பொருட்களான குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவை குழந்தையின் வளர்ச்சிக்கு துணைபுரியக் கூடியவை. குங்குமப்பூ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் மனஅழுத்தம் குறையும். எனவேதான், கர்ப்பிணிப் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க குங்குமப் பூவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இப்படி பல காரணங்களுக்காகவே, கருவுற்ற பெண்ணுக்கு குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவற்றை வழங்கும் சடங்கு இன்றும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவிடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

    குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால் குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

    குங்குமப்பூ உபயோகப்படுத்தும் முறை:

    குங்குமப்பூவை சிறிதளவு சூடான பாலில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கையால் நசுக்கிவிட்டு பாலோடு கலந்து குடிக்கலாம்.

    குங்குமப்பூவை பொடி செய்யும் முறை:

    ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். நன்கு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும். அந்த வாணலியில் குங்குமப்பூவை போட்டு வைக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து கையால் நசுக்கி பொடி செய்யவும். இதை ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

    • எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
    • பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.

    * பக்கோடா, வடை முதலியவை செய்யும் பொழுது சிறிது சோம்பு அதிகமாக சேர்த்தால் ருசி தூக்கலாக இருக்கும்.

    * வெங்காயம் வதக்கும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் நன்கு வதங்கும். சர்க்கரை வெங்காயத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மென்மைப்படுத்தும்.

    * எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.

    * பால்கோவா செய்யும்போது இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை துணியில் கட்டி பாலில் வைத்தால் பால்கோவாவின் நிறம் கிரீம் போல் கிடைக்கும்.

    * இரண்டு ஐஸ் கட்டிகள் மற்றும் கல் உப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பிளேடு கூர்மையாக மாறும்.

    * பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.

    * இட்லிக்கு மாவு அரைக்கும்போது சிறிது பழைய சாதம் மற்றும் அவல் சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.

    * சேமியா பாயசம் செய்யும்போது சேமியா குழைந்து விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்தால் சேமியா தனித்தனியாக பிரிந்து விடும்.

    * எண்ணெய் பலகாரங்களை வைக்கும் டப்பாவில் உப்பை ஒரு துணியில் முடிச்சு போட்டு வைத்தால் காரல் வாடை வராது. நீண்ட நாட்களுக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

    * தேங்காயை தண்ணீரில் நனைத்து உடைத்தால் தேங்காய் சரிபாதியாக உடையும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசையும்பொழுது சிறிது வெதுவெதுப்பான நீர் மற்றும் பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும்.

    * தயிர் மிகவும் புளித்து விட்டால் ஒரு டம்ளர் நீர் ஊற்றி 10 நிமிடம் கழித்து அந்த நீரை வடித்து விட்டால், புளிப்பு நீருடன் சென்று விடும். புளிப்பில்லாத தயிர் கிடைக்கும்.

    * மீன் குழம்பு செய்யும்போது சிறிது கடுகை வறுத்து அரைத்து மீனில் தடவி ஐந்து நிமிடம் கழித்து குழம்பில் சேர்த்தால் மீன் உடைந்து போகாது.

    • காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது.
    • உணர்ச்சிகளை அடக்குவது தேவையற்ற மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம்.

    இன்றைய அவசர உலகில் சிலர் பின்பற்றும் பழக்கங்கள் மெதுவாக கொல்லும் விஷமாக மாறக்கூடியது. குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடியது. அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பார்போம்.

    மன அழுத்தம்

    நாள்பட்ட மன அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' (அமைதியான கொலையாளி) என்று சித்தரிக்கப்படுவதுண்டு. மன அழுத்தம் சில நிமிடங்களோ, சில நாட்களோ நீடிப்பதே சிக்கலானது. ஆனால் நாள் கணக்கில் மன அழுத்தத்துடனே இருப்பது இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் மன அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திவிட வேண்டும்.

    வேலை

    எந்த வேலையையும் ஆர்வமுடன் செய்ய வேண்டும். வெறுப்புடனோ, அதிருப்தியுடனோ அந்த வேலையை செய்யக்கூடாது. ஆர்வம் இல்லாமல் இருந்தால் அந்த வேலையை தொடரக்கூடாது. சிறிது ஓய்வுக்கு பிறகோ, அந்த வேலை மீது ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொண்டோ பின் செய்யலாம். ஆனால் வெறுப்புடன் வேலை செய்வது உடல் நலத்துக்கும், மன நலனுக்கும் கேடு விளைவிக்கும். தொடர் அதிருப்தியுடன் வேலை செய்வது தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதே நிலை தொடர்ந்தால் உடலை கொல்லும் மெதுவான விஷமாக மாறிவிடும்.

    நல்லெண்ணம் இன்மை

    நீங்கள் பழகும் நபர்கள், உங்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்கள் உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களாக இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியை பாராட்டும் நல் மனம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி அல்லாமல் உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்களாகவோ, உங்களின் செயல்பாடுகளை குறை கூறுபவர்களாகவோ, உங்கள் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவோ இருந்தால் அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். ஏனெனில் அவர்களின் செயல்பாடுகள் உங்கள் மன ஆரோக்கியத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    துரித உணவு

    துரித உணவை தொடர்ந்து உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இந்த உணவுகளில் பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகள், சோடியம் மற்றும் சர்க்கரை அதிகமாக கலந்திருக்கும். இவை உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு வித்திடக்கூடும்.

    உணர்ச்சிகளை அடக்குதல்

    உணர்ச்சிகளை அடக்குவது தேவையற்ற மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் கட்டுப்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். மனதுக்கு பிடித்தமானவர்களின் செயல்பாடோ, நெருங்கிய நண்பர்களின் செயல்பாடோ வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலோ, விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தாலோ தயங்காமல் அதுபற்றி விவாதித்துவிட வேண்டும். அதைவிடுத்து உணர்ச்சிகளை அடக்குவது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து மன நோயாக மாறக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது முக்கியம்.

    காலை உணவைத் தவிர்த்தல்

    காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதனை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு, அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    கவலையாக இருத்தல்

    நாள்பட்ட பதற்றம் என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான மனக்கவலை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அடிக்கடி கவலையில் ஆழ்ந்திருப்பது மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் அளவை உயர்த்த வழிவகுக்கும். காலப்போக்கில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பது உடல் பருமன், ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டுபண்ணும்.

    சோர்வாக இருத்தல்

    சுய பராமரிப்பு முக்கியமானது. தினமும் குளிப்பது, முகம் கழுவுவது, கை, கால்களை கழுவுவது என உடலை எந்த அளவுக்கு சுத்தமாக பராமரிக்கிறோமோ அதுபோல் மன ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் மற்றும் உணர்வு இரண்டும் சோர்வுக்குள்ளாகிவிடும். இத்தகைய நாள்பட்ட சோர்வு இதய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

    வெகுமதி அளிக்காதிருத்தல்

    ஏதேனும் ஒரு செயலை நீங்கள் சிறப்பாக செய்து முடித்துவிட்டதாக தோன்றினால் மற்றவர்கள்தான் உங்களை பாராட்ட வேண்டும், வெகுமதி அளிக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது. உங்களை நீங்களே பாராட்டி வெகுமதி அளித்துவிட வேண்டும். உங்களுக்கு பிடித்தமான பொருளை பரிசாக உங்களுக்கே வழங்கி ஆனந்தப்படலாம். உங்கள் செயல்பாடுகளை பாராட்டாமல் கடந்து செல்வதும் சோர்வையும், வாழ்க்கை மீது ஈர்ப்பு இல்லாத நிலையையும் ஏற்படுத்தலாம். நாளடைவில் மெதுவாக கொல்லும் விஷம் போல் மாறி விரக்தியை ஏற்படுத்திவிடும். உடல்நல பிரச்சனைகளையும் உண்டுபண்ணும்.

    • பொதுவாக இந்த பிரச்சனை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம்.

    பொதுவாக ஆண்-பெண் யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் போது சற்று வெளிறிய மஞ்சள் நிறத்துடன் எந்தவித நுரையும் இல்லாமல்தான் சிறுநீர் வெளிவரும். நுரையுடன் எப்பொழுதாவது வந்தால் பிரச்சனை இல்லை. பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். ஆனால் எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் வெள்ளை நிறத்தில் நுரைநுரையாக வருகிறதென்றால் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான்.

    சிறுநீரில் நுரை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. சிறுநீரில் அதிக அளவில் சில புரதங்கள் கலந்திருப்பது, உடலுக்கு தினமும் தேவைப்படும் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது முக்கிய காரணமாகும். இது தவிர சிறுநீரக நோய்கள், நாள்பட்ட சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், புராஸ்டேட் சுரப்பி பிரச்சனை நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மருந்துகள் எடுக்கும் போதும் சிலருக்கு சிறுநீர் நுரையுடன் வரலாம்.

    இருப்பினும் கை, கால், முகம், வயிறு வீக்கம், உடல் தளர்வு, பசியின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு, சரியான தூக்கமின்மை, சிறுநீரின் அளவு கூடுதல் மற்றும் குறைதல், மேக நிறத்தில் கலங்கிய நிலையில் சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    சிறுநீரில் அல்புமின் அளவு, ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு, சிறுநீரக ஸ்கேன் பரிசோதனை போன்றவை மூலம் சிறுநீரகம் எவ்வளவு துல்லியமாக செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

    பொதுவாக இந்த பிரச்சனை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். தினமும் உடலுழைப்பு, உடற்பயிற்சி இருக்க வேண்டும். சரிவிகித சத்துணவு சாப்பிட வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.

    உணவில் புரதத்தை சரியான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை நுரையுடன் சிறுநீர் கழிக்கிறீர்கள், உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை பொறுத்து பாதிப்புகளை அறியமுடியும். எனவே பயம் வேண்டாம். குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.

    • 'காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்' என்று ஆங்கில பொன்மொழி உள்ளது.
    • புத்திசாலிகள் பெரும்பாலும் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும், இப்படிதான் செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

    காதல் என்பது ஆழமான மற்றும் சிக்கலான உணர்ச்சிகளின் சங்கமம். காதலில் எப்போதும் லாஜிக் பார்க்கக்கூடாது. மேஜிக் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் என்னவோ திறமைசாலிகளும், புத்திசாலிகளும் எப்போதும் காதலில் போராடுகிறார்கள்.

    'காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்' என்று ஆங்கில பொன்மொழி உள்ளது.

    பொதுவாக புத்திசாலித்தனம் சிறப்பான குணமாக கருதப்பட்டாலும், அது சில நேரங்களில் காதல் விஷயங்களில் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். விமர்சன சிந்தனை, பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவர்கள் அதே பகுப்பாய்வு மனநிலையுடன் காதலையும் அணுகலாம்.

    இது அவர்களின் உறவுகளில் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தலாம். சரி..! புத்திசாலித்தனமாக செயல்படுபவர்கள், காதலில் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.

    ஆழமான சிந்தனை

    புத்திசாலி நபர்கள் சூழ்நிலைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்கிறார்கள். பெரும்பாலும் துணையின் மனநிலை, காதல் கை கூடுவதற்கான வாய்ப்புகள், காதல் உண்டாக்க இருக்கும் சிக்கல்கள், இருதரப்பு குடும்ப புரிதல் இப்படி நீளமாக சிந்தித்த பின்னரே, காதல் உறவில் அடியெடுத்து வைக்கிறார்கள். அப்படி காதலிக்க ஆரம்பித்தாலும், தன்னுடைய துணையுடன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தேவையானதை மட்டும், அதுவும் அவர்களை பாதிக்காத விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். இவை, காதலன்-காதலிக்குள் வெளிப்படை தன்மை குறித்த சர்ச்சைகளை, பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

    பர்பெக்ட்

    புத்திசாலிகள் பெரும்பாலும் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும், இப்படிதான் செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். கலந்துரையாடல், புரிதல், காதல் இப்படி எல்லாவற்றிலும் ஒரு முதிர்ச்சியை (மெச்சூரிட்டி) எதிர்பார்க்கிறார்கள். இந்த பெர்பெக்ஷனை எல்லா சமயங்களிலும் எதிர்பார்ப்பது கடினம். ஆனாலும் ஒரு சிலர் எதிர்பார்ப்பதால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    பயம்

    புத்திசாலித்தனமான நபர்கள் காதலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு அதன் நீண்டகால தாக்கங்களை பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் நிதி நிலை, காதல் உறவின் வெற்றி-தோல்வி வாய்ப்புகள் இப்படி எல்லாவற்றையும் அதிகமாக கணக்கிடுவதால், காதல் உறவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு தயங்குகிறார்கள்.

    உற்ற துணை

    தங்களுடைய புரிதல், புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப துணைத்தேடுவதுதான், இவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். எல்லா மனிதர்களும், எல்லா விஷயங்களிலும் சிறப்பானவர்களாக இருப்பர் என்று சொல்லிவிட முடியாது. சிலருக்கு சில விஷயங்களில் ஆழ்ந்த புரிதல் இருக்கலாம். ஆனால் எல்லா விஷயங்களிலும் அதை எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் இந்த விஷயத்தில்தான், பலருக்கும் சிக்கல் உண்டாகிறது. தங்களைபோலவே, ஆழ்ந்த சிந்தனை, ஆழ்ந்த புரிதல் கொண்ட துணையை தேடி பலரும் ஏமாந்துவிடுகிறார்கள்.

    • கண்ணின் மேற்பரப்பு பகுதி சரியாக செயல்பட வேண்டுமெனில் அந்தப் பகுதியில் உடலில் தகுந்த அளவு நீரேற்றம் இருக்க வேண்டும்.
    • அடிக்கடி கண் சிமிட்டுவதன் மூலம் வறண்ட கண்களை தவிர்க்க முடியும்.

    அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண் எரிச்சல் மட்டுமல்ல, கண் சிவப்பாக மாறுதல், கண்களில் அரிப்பு உணர்வு ஏற்படுதல்... இப்படி பல பிரச்சினைகளை சந்தித்திருப்போம். இதை கண் உலர் பாதிப்பு என்கிறார்கள். ஆரம்பத்தில் நடுத்தர வயதினரிடம் தென்பட்ட இந்த பாதிப்பு, இப்போது கல்லூரி, அலுவலகம் செல்லும் இளைஞர்களையும், கணினி அதிகமாக உபயோகிப்பவர்களையும் பாதிக்கிறது.

    ஏன் ஏற்படுகிறது?

    கண்ணில் உள்ள கண்ணீர் சுரப்பிகளில் கண்ணீர் போதுமான அளவு உற்பத்தி ஆகாதது மற்றும் வேகமாக ஆவி ஆவதால் இந்த கண் உலர் பாதிப்பு ஏற்படுகிறது. இது கண்களில் அசவுகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும். குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருத்தல், கணினித் திரையை அதிக நேரம் பார்த்தல், மோசமான வெளிச்சம் அல்லது அதிக வெளிச்சம் போன்றவற்றால் கண்களில் ஈரப்பதம் இருக்காது.

    இவை மட்டுமின்றி, ஒரு சில மருத்துவக் காரணங்களான ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அலர்ஜி மற்றும் முதுமை போன்றவை கூட கண்ணின் வறட்சிக்கு காரணமாக அமையும். இந்த பிரச்சினை நீண்ட நாட்கள் இருந்தால் அது உங்கள் கண்களில் வலியை ஏற்படுத்துவதோடு, உங்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பார்வைத் திறனையும் பாதிக்கும்.

    தற்காப்பு வழிமுறைகள்

    கண்ணின் மேற்பரப்பு பகுதி சரியாக செயல்பட வேண்டுமெனில் அந்தப் பகுதியில் உடலில் தகுந்த அளவு நீரேற்றம் இருக்க வேண்டும். கண்களைச் சுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் தேவையான திரவங்களை வெளியிடும் லாக்ரிமல் சுரப்பி சரியாக செயல்பட வேண்டுமெனில் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். தேவையான அளவு தண்ணீரைக் குடிப்பதன் மூலம் தான் கண்களால் கண்ணீர் மற்றும் எண்ணெய்களை உற்பத்தி செய்ய முடியும். தர்பூசணி, பீச், வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். இது கண்கள் வறட்சியாவதை தடுக்கும்.

    கண் சிமிட்டுவது

    அடிக்கடி கண் சிமிட்டுவதன் மூலம் வறண்ட கண்களை தவிர்க்க முடியும். கணினி திரை மற்றும் டிஜிட்டல் சார்ந்த வேலைகளில் உள்ளவர்கள் கண் சிமிட்டுவது என்பது குறைவாகத் தான் இருக்கும். அதனால், கண் சிமிட்டுவதை ஒழுங்குப்படுத்த வேண்டும். ஒருவர் நிமிடத்திற்கு 15 முதல் 30 முறை கண்களை சிமிட்ட வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 வினாடிகள் கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அதேபோல், டிஜிட்டல் திரை போன்றவற்றால் ஏற்படும் கண் அழுத்தத்தை சமாளிக்க அதற்குரிய கண்ணாடிகளை அணிந்து கொள்ளவும்.

    • வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிவைத்துக் கொள்ளவும்.
    • தர்பூசணி காய் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    தர்பூசணி கீற்று -3

    பாசிப் பருப்பு - 100 கிராம்

    சிறிய வெங்காயம் - 4

    தேங்காய் - 1/2 மூடி

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    கடுகு - சிறிதளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கடலை எண்ணெய்- சிறிதளவு

    உப்பு தேவையான அளவு

    செய்முறை:

    தர்பூசணி கீற்றுகளின் பழுத்த பகுதிகளை நீக்கி விட்டு, பச்சைப்பகுதிகளை சீவி விட்டு இடைப்பட்ட சதைப்பகுதிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிவைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை ஊறவைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை உருவிவைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    அத்துடன், வெட்டி வைத்துள்ள தர்பூசணித் துண்டுகள், ஊற வைத்துள்ள பாசிப்பருப்பு, மஞ் சள்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.

    தர்பூசணி காய் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    தர்பூசணி பாசிப்பருப்பு கூட்டு தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    • உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது.
    • மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.

    தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கனிகளில் மாம்பழம் முக்கியமான ஒன்று. வெப்ப மண்டலங்களில் பயிராகி, குளிர் பிரதேசங்களில் இருக்கும் மக்களை கூட கவர்ந்து இழுக்கும் பழம் என்றால் அது மாம்பழம் தான். எனவே இது 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது.

    உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது. அது மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சி உள்பட பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பி காணப்படுகிறது. மாம்பழம் உண்பதால் இதயம் நன்கு இயங்கும், கண் பார்வை தெளிவாகும், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த மாம்பழம் உதவுகிறது. இதில் காணப்படும் மாங்கிபெரின் எனப்படும் ஒரு வகை பாலிபீனால் இதயத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.

    இது தவிர, மாம்பழத்தில் அமைந்துள்ள பீட்டா கரோட்டின் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். கோடைக்காலங்களில் இயற்கை தரும் பழங்களில் தவிர்க்காமல் உண்ண வேண்டிய ஒன்று மாம்பழம் ஆகும்.

    • தலையணை இல்லாமல் தூங்குவது கழுத்தில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கும்.
    • உயரமான தலையணையை பயன்படுத்துவது முதுகெலும்புக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

    தூக்கத்திற்கு இதமளிப்பது தலையணைதான். அதில் தலைவைத்து தூங்குவதுதான் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்யும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. தலையணை இல்லை என்றால் சரியாக தூங்க முடியாமல் தவிப்புக்கு உள்ளாகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தலையணையை அறவே தவிர்த்து நிம்மதியாக தூங்கி எழுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தலையணை இன்றி தூங்குவது நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தலையணை இன்றி தூங்குவது முதுகு தண்டுவடத்துக்கு நன்மை சேர்க்குமா? தீமை விளைவிக்குமா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அது குறித்து பார்ப்போம்.

    தலையணை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

    இயற்கை தோரணை

    தலையணை இல்லாமல் தூங்குவது இயற்கையாக உடல் தோரணையை பராமரிக்க உதவும். முதுகெலும்பின் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் தடிமனான தலையணையை பயன்படுத்தி தூங்கும்போது கழுத்தை மேல்நோக்கி சாய்த்துவைக்க வேண்டியிருக்கும். அது உடல் தோரணைக்கு இடையூறாக அமையும். தலையணை ஏதும் இல்லாமல் தரையிலோ, மெத்தையிலோ உடலை வளைக்காமல் நேர் நிலையில் தூங்குவது முதுகெலும்பை நடுநிலையில் வைத்திருக்கும். முதுகெலும்புக்கு அழுத்தத்தையோ, வலியையோ ஏற்படுத்தாது.

    கழுத்து-முதுகு வலி குறையும்

    தலையணை இல்லாமல் தூங்குவது கழுத்தில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கும். உயரமான தலையணையை பயன்படுத்துவது முதுகெலும்புக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தும். கழுத்துக்கும் அழுத்தத்தை உண்டாக்கும். சரியாக தூங்காமல் நாள்பட்ட கழுத்து வலியை அனுபவிப்பவர்கள் தலையணை பயன்பாட்டை குறைப்பது நல்லது.



    தலையணை இல்லாமல் தூங்குவதால் உண்டாகும் தீமைகள்

    தலையணை உபயோகிக்காமல் பக்கவாட்டு பகுதியில் படுத்து தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் தூக்கத்தில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் அவர்களின் தலை பகுதிக்கும், முதுகெலும்பு பகுதிக்கும் ஆதரவு தேவைப்படும். அவை இரண்டும் சவுகரியமான தோரணையில் இருந்தால்தான் தூக்கம் சீராக நடைபெறும். அவ்வாறு ஆதரவு இல்லாமல் இருந்தால் கழுத்து, தோள்பட்டைகளில் வலி, தசைப்பிடிப்பு ஏற்படலாம். அப்படி நேர்ந்தால் காலையில் தூங்கி எழும்போது கழுத்து, தோள்பட்டை வலியால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

    நிறைய பேர் முகத்தையும், வயிற்றையும் பாய், மெத்தையில் அழுத்திய நிலையில் குப்புறப்படுத்து தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். சிலர் அன்னார்ந்து பார்த்தபடி தூங்கும் வழக்கத்தை கடைப்பிடிப்பார்கள். சிலர் கால்களை வளைத்து தலையணைக்குள் புதைத்தபடி தூங்குவார்கள். எந்த முறையில் தூங்கினாலும் முதுகெலும்பு, கழுத்து பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும். முதுகெலும்பு பகுதியை பராமரிக்க ஏதுவான மெத்தையை பயன்படுத்தவும்.

    தலையணை பயன்படுத்தாமல் உறங்கும் வழக்கத்தை பின்பற்றும்போது கழுத்து பகுதி அசவுகரியமாக இருப்பதாக உணர்ந்தால், கழுத்துக்கு அடியில் துண்டை உருண்டை வடிவில் உருட்டிய நிலையில் வைக்கலாம். தொடர்ந்து தலையணை இல்லாமல் தூங்குவது அசவுகரியத்தையோ, வலியையோ ஏற்படுத்தினால் தலையையும், கழுத்தையும் தாங்கிப்பிடிக்கும் வகையில் வளைவுகளுடன் அமைந்திருக்கும் தலையணையை பயன்படுத்தலாம். கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி, தலைவலி, குறட்டை உள்ளிட்ட பிரச்சனை கொண்டவர்களுக்கு ஏதுவாக பல்வேறு விதமான தலையணைகள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சவுகரியமான தலையணையை உபயோகப்படுத்துவது குறித்து அது சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது நல்லது.

    ×