என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது எந்தவகையான பயிற்சியாகவும் இருக்கலாம். உடல் தசைகளை நன்றாக இயங்கவைத்தால் போதுமானது.
    ஒவ்வொரு நாளும் இனிமையாக, நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் ஒருசில நாட்கள் எதிர்பாராத விதத்தில் மோசமான நாளாகிவிடுவதுண்டு. அப்போது மனம் வேதனைக்குள்ளாகும். உடலும் சோர்ந்து போகும். தினசரி நாம் செய்யும் வேலைகளை போலவே அன்றாடம் நம்மை நாமே உற்சாகப்படுத்தவும் சிலவற்றை செய்தாகவேண்டும். அவைகளை செய்தால் எந்த பிரச்சினையும் நம்மை பாதிக்காது. எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைந்துவிடும்.

    தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது எந்தவகையான பயிற்சியாகவும் இருக்கலாம். உடல் தசைகளை நன்றாக இயங்கவைத்தால் போதுமானது.

    வார இறுதியில் தனிமையில் பயணம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். தொலைதூர இடங்களுக்கு செல்ல முடியாவிட்டாலுங்கூட மோட்டார் சைக்கிளிலோ, காரிலோ சில கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வரலாம்.

    பசுமையான பின்னணி கொண்ட இடங்களுக்கு சென்று இயற்கையை ரசிக்கலாம். அவ்வாறு இயற்கை சூழலில் நேரத்தை செலவிடுவது உடலில் வைட்டமின் டி கிடைப்பதற்கு வழிவகுக்கும்.

    தினமும் புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் பின்பற்றுங்கள். நேரம் கிடைக்காத சூழலில் இரவில் தூங்குவதற்கு முன்பு சில பக்கங்களையாவது படிக்கும் வழக்கத்தை கடை பிடியுங்கள்.

    மூச்சு பயிற்சிக்கும் சில நிமிடங்கள் செலவிட வேண்டும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி மனதுக்கும், உடலுக்கும் நல்லது.

    விடுமுறை நாட்களில் பிடித்தமான உணவை உங்கள் கைப்பக்குவத்தில் சமைத்து ருசிக்கலாம். நண்பர்களுடன் மதிய உணவை அருந்தலாம்.

    மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களை மனதுக்கு இதமளிக்கும் விதத்தில் செலவிட வேண்டும். பிடித்தமான இசையை ரசித்து கேட்கலாம். சுவாரசியம் நிறைந்த திரைப் படங்களை பார்க்கலாம். வாரத்தில் ஓரிரு நாட்களோ அல்லது வார இறுதி நாட்களிலோ சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கலாம்.

    வாரத்தில் ஒரு நாளாவது அறையை ஒழுங்கமைக்கும் பணியை செய்யலாம். அன்றாடம் சுத்தம் செய்தாலும் கூட பொருட்களை நேர்த்தியாக இடம் மாற்றி வைப்பது அறைக்கு புதிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும். உங்களுக்கு பிடித்தமான நபரிடம் வாரம் ஒருமுறையாவது அலைபேசியில் பேசுங்கள். அது நட்பையும், உறவையும் வலுப்படுத்திக்கொள்ள உதவும்.

    தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சமூக சேவை செய்யலாம். உதவி கேட்டு நாடி வருபவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம். உதவி செய்வது மனதுக்கு அதிக மகிழ்ச்சியையும், நிறைவையும் தரும்.

    உடலில் வைட்டமின் பி-12 சத்துக்களை தக்கவைத்துக்கொள்வது அவசியமானது. டாக்டரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் பி-12 மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.

    குழந்தைகளுடன் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடனும் நேரத்தை செலவிடலாம்.
    பூசணிக்காயில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
    தேவையான பொருட்கள்:

    பூசணிக்காய் - 1 துண்டு
    கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 4
    புளி - நெல்லிக்காய் அளவு
    தேங்காய் - அரை மூடி
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

    தாளிக்க

    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

    செய்முறை:

    பூசணிக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.

    தேங்காயை பூப்போல துருவி வைக்கவும்.

    பின் துருவிய பூசணி துருவலில் உப்பு சேர்த்து பிசறி ஒரு தட்டில் அமுக்கி தட்டை சாய்த்தார் போல் வைத்தால் நீரெல்லாம் வடிந்துவிடும். இப்படி செய்து சமைப்பதால் சளி பிடிக்காது. (பூசணியில் இருந்து வரும் நீரில் மிளகுதூள் சேர்த்து பழச்சாறாகக் குடிக்கலாம்)

    வாணலியை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் அதில் கடலைபருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் மணம் வர வறுத்து, பின் பூசணி துருவல், சிவப்பு மிளகாய், புளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

    ஆறியதும் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக நைசாக அரைக்கவும்.

    பூசணி துவையல் தயார்.

    மணமும் ருசியும் சத்தும் உள்ளது. நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் கலந்து சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கும் அருமையான சைட் டிஷ்.
    ரத்த ஓட்டம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தின் பளபளப்பு தன்மையை மீட்டெடுப்பதற்கும், கருவளையங்களை குறைப்பதற்கும் வைட்டமின் சி உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
    கண்களுக்கு அடியில் தோன்றும் கருவளையங்கள் சோர்வையும், மந்தமான உணர்வையும் மட்டும் தோற்றுவிப்பதில்லை. சருமத்தின் இயற்கையான அழகையும் பாழ்படுத்திவிடும். கருவளையம் படர்ந்த பின்னர்தான் அதனை போக்குவதற்கான வழிமுறைகளை பலரும் நாடுகிறார்கள். ஒருசில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே கருவளைய பாதிப்பு நேராமல் நிரந்தரமாக தற்காத்துக்கொள்ளலாம். அதற்கு பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்:

    1. நீர்ச்சத்து: தினசரி போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் கருவளைய பாதிப்பையும் தவிர்த்துவிடலாம். தினமும் குறைந்தபட்சம் மூன்றரை லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுத்துவிடும். தண்ணீர் அதிகம் பருகுவது கண்களில் படிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். கண் பகுதியில் சூழ்ந்திருக்கும் உப்பு செறிவின் அளவும் குறையும். அதனால் கருவளையம் எட்டிப்பார்க்காது.

    2. வைட்டமின்கள்: கொலாஜன் அளவு குறைவது கருவளையங்கள் தோன்றுவதற்கான மற்றொரு காரணமாகும். கண்களின் அடிப்புற இமை பகுதியில் வீக்கம் தோன்றுவதற்கும் வழிவகுத்துவிடும். கொலாஜன் அமினோ அமிலங்களால் ஆனது என்பதால், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உதவும். வைட்டமின் ஏ, அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை கொண்டது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நிறமிகளின் செயல்பாடுகளை குறைக்கும் திறன் கொண்டது. அதன் காரணமாக கருவளையம் தோன்றுவது கட்டுப்படுத்தப்படும். ரத்த ஓட்டம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தின் பளபளப்பு தன்மையை மீட்டெடுப்பதற்கும், கருவளையங்களை குறைப்பதற்கும் வைட்டமின் சி உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தக்கூடியவை.

    3. தூக்கம்: சரியான தூக்க சுழற்சி அழகை மேம்படுத்தும் சக்தி கொண்டது. தூங்கும்போது சருமம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள தொடங்கிவிடும். புதிய செல்களை உருவாக்குவதுடன் ஆக்சிஜன் சுழற்சிக்கும் வழிவகை செய்யும். போதுமான தூக்கம் இல்லாதபோது சருமம் தன்னை புதுப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். ஆக்சிஜன் சுழற்சியும் குறைந்துவிடும். அதன் காரணமாக கண்களுக்கு அடிப்பகுதியில் இருக்கும் மென்மையான தன்மை கொண்ட சரும அடுக்கில் ரத்த ஓட்டத்தின் அளவு மாறுபடும். அந்த பகுதியில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தம் அதிகமாகத் தெரியும். அவை கருவளைய வட்டங்கள் தோன்றுவதற்கு காரணமாகிவிடும்.

    4. சன்ஸ் கிரீன்: வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெளியே சென்றாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மட்டுமின்றி ஸ்மார்ட் சாதனங்கள், கணினிகள், டி.வி.களில் இருந்து நீல ஒளி கதிர்களும் சருமத்தை சேதப்படுத்துகின்றன. புற ஊதாக்கதிர்கள் வயதான அறிகுறிகளை தோற்றுவித்துவிடும். சருமம் நெகிழ்வு தன்மையை இழந்து சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்ளும்.

    மெலனின் என்பது சரும நிறம், கண், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை நிறமியாகும். உடலில் இருக்கும் மெலனின் அளவு சருமத்தின் நிறத்தை தீர்மானிக்கும். சூரிய கதிர்கள் மற்றும் நீல ஒளியின் வெளிப்பாடு, மெலனின் அளவை அதிகரிப்பதால் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக கண்களின் அடிப்பகுதி பாதிப்புக்குள்ளாகி கருவளையம் தோன்றக்கூடும். கடுமையான சூரிய கதிர்கள், கணினி, மொபைல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு எஸ்.பி.எப் 35-க்கும் அதிகமாக இருக்கும் சன்ஸ்கிரீனை உபயோகிக்க வேண்டும்.

    5. கிரீம்: கருவளையத்தை போக்குவதற்கு கிரீம்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அத்தகைய கிரீம்களில் வைட்டமின் சி, ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் இருக்க வேண்டும்.  ஆரம்ப நிலையிலேயே கிரீம்கள் பயன்படுத்துவதன் மூலம் கருவளைய பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    பிள்ளைகள் சிறிது நேரம் ஸ்மார்ட் போனில் விளையாடினால் கூட கண்டித்த நாம் கல்விக்காக அவர்கள் பல மணிநேரம் ஸ்மார்ட் போனில் மூழ்கி இருக்கும் போது வேறு வழியில்லாமல் அனுமதித்து கொண்டு இருக்கிறோம்.
    கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நம் இயல்பு வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. அதற்கு தீர்வாக அமைந்தது தான் ஆன்லைன் வழிக்கல்வி. அதில் வகுப்புகள் ஆன்லைன் தளங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. வீட்டுப்பாங்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டன. பிள்ளைகள் சிறிது நேரம் ஸ்மார்ட் போனில் விளையாடினால் கூட கண்டித்த நாம் கல்விக்காக அவர்கள் பல மணிநேரம் ஸ்மார்ட் போனில் மூழ்கி இருக்கும் போது வேறு வழியில்லாமல் அனுமதித்து கொண்டு இருக்கிறோம்.

    ஆன்லைன் வழி கற்றல் முறையால் மாணவர்களின் கல்வி தடையில்லாமல் தொடர்வது மகிழ்ச்சியே அதே சமயல் இந்த செயல்முறையால் உடல் நலத்தில் பாதிப்பு மன அழுத்தம் போன்ற சில எதிர்மறை தாக்கங்களில் இருந்து அவர்களை காக்கும் கடமையும் பெற்றோருக்கு இருக்கிறது. இதற்காக பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

    அன்றாட நடைமுறை

    பள்ளி செல்லும் நாட்களிலேயே காலை வேளையில் பிள்ளைகளை சரியான நேரத்தில் கிளம்ப செய்வது பல பெற்றோருக்கு போராட்டமாக இருக்கும்ஃகொண்டே ஆன்லைன் மூலம் சரியான நேரத்தில் வகுப்பில் கலந்து கொள்ள செய்வதை பற்றி கேட்கவா வேண்டும். இதை தவிர்க்க தினமும் இரவில் சரியான நேரத்தில் தூங்கி காலையில் சீக்கிரம் எழும் வழக்கத்தை கடைப்பிடிக்க பழக்க வேண்டும். இதனால் ஆன்லைன் வகுப்பிற்கு சரியான நேரத்தில் தயாராக முடியும். வீட்டிலேயே இருந்தாலும முறையான நேரப்பட்டியலை பின்பற்றும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    தேவையான வசதிகள்

    பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் போது பென்சில், பேனா நோட்டுப்புத்தகம் போன்றவை இருக்கிறதா என்று சரிபார்ப்போம். அதேபோல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் முன்பும் அதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கிறதா என்பதை ஒரு முறை சரிபார்ப்பது நல்லது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வீட்டில் சரியான இடத்தை ஏற்படுத்தி கொடுப்பது முக்கியம். கவனம் சிதறும்படியான இடங்களை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் பிள்ளைகள் எப்போதும் நம் கண்காணிப்பில் இருக்குமாறு பார்த்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

    பாதுகாப்பு வழிமுறைகள்

    இணைய தொழில்நுட்பம் சில நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. சரியான முறையில் தொழில்நுட்பத்தை கையாளும் போது அவற்றை தவிர்க்க முடியும். மாணவர்கள் வலைத்தளத்தில் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் தனிப்பட்டவையாகவும், மற்றவர்கள் எளிதில் கண்டறியாத வகையிலும் இருக்க வேண்டும். தேவையற்ற மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப் தகவல்கள், முகநூலில் நண்பர் ஆவதற்கான கோரிக்கைகளை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற தகவல்கள் வந்தால் உடனே பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் வெப்கேமராவை மூடி வைக்க வேண்டும். மடிக்கணினியில் உள்ள கேமராவை சிறிய வெள்ளைத்தாளை ஓட்டி மறைக்கலாம். ஆன்டி வைரஸ் போன்ற கணினி பாதுகாப்பு மென்பொருள்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

    இவையெல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெற்றோருடன் மனம் விட்டு பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் ஏதேனும் அஞ்சத்தகுந்த செயல்கள்நடைபெறும்போது அவை உடனே நம் கவனத்துக்கு வரும். நாமும் பிள்ளைகளை பாதுகாப்பாக வழிநடத்த முடியும்.
    மனதை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுவது முக்கியம். நம்பகமான நண்பர்களிடம் சிக்கலான பிரச்சினைகள், மனதை வாட்டும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம்.
    இன்றைய காலகட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மனச்சோர்வுக்கு ஆளாகுபவர்கள் அதிகரித்து வருவதாக உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களிடம் மன அழுத்த பாதிப்பு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிலரே அது பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள்.

    விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது தவறாமல் உடற்பயிற்சி செய்வது மனச்சோர்வை போக்கும் மிகச்சிறந்த வழிமுறையாகும். ஒருவர் மனச்சோர்வடையும் போது உடல் இயக்க செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவது மனநிலையை மேம்படுத்த உதவும். உடற்பயிற்சி தவிர யோகாசனமும் செய்யலாம். ஆன்மிக வழிகாட்டுதலையும் பின் தொடரலாம்.

    மனதை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுவது முக்கியம். நம்பகமான நண்பர்களிடம் சிக்கலான பிரச்சினைகள், மனதை வாட்டும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம். அப்படி விவாதிப்பது மனதை காயப்படுத்தும் எண்ணங் களில் இருந்து விடுபட உதவும். மன ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் வழி வகை செய்யும். நெருங்கிய நண்பர்கள் இல்லாதபட்சத்தில் மனநல ஆலோசகர்களை நாடலாம்.

    பசிக்கும், மனநிலைக்கும் இடையே விசித்திரமான தொடர்பு இருக்கிறது. மனச்சோர்வுக்குள்ளாகும்போது சிலர் சாப்பிடமாட்டார்கள். சிலர் வழக்கத்தைவிட அதிகமாக சாப்பிடுவார்கள். அதேவேளையில் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது நல்லது. பசி எடுக்காவிட்டாலும் தேவைக்கு சாப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

    மனச்சோர்வுக்குள்ளாகும்போது மனதை திசை திருப்பும் செயல்பாடுகளில் ஈடுபடலாம். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடலாம். அது உள்உணர்வுகளை கட்டுப்படுத்த துணைபுரியும். மனதை வருத்திக்கொண்டிருக்கும் பிரச்சினையின் வீரியத்தை குறைக்கவும் வழிவகை செய்யும்.

    முக்கியமான செயல்களை செய்து முடிக்க முடியாமல் போகும்போது மனம் சோர்வுக்குள்ளாகும். அப்படிப்பட்டவர்கள் ‘என்னால் இதை செய்ய இயலாது’ என்ற எண்ணத்துடன் களம் இறங்குவதற்கு பதிலாக ‘அதில் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்’ என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் மனச்சோர்வு ஏற்படாது.
    பொறுமை, புரிந்துக்கொள்ளும் தன்மை, கொஞ்சம் கலைத்திறன் போன்றவை இருந்தால் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே போரட்டமே இல்லாமல் எளிதில் நன்றாக உணவு அளித்து ஆரோக்கியத்துடன் வளர்க்கலாம்.
    ஆறு மாதத்தில் இருந்து ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது ஒரு கலை. பொறுமை, புரிந்துக்கொள்ளும் தன்மை, கொஞ்சம் கலைத்திறன் போன்றவை இருந்தால் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே போரட்டமே இல்லாமல் எளிதில் நன்றாக உணவு அளித்து ஆரோக்கியத்துடன் வளர்க்கலாம்.

    ஒரு நாளைக்கு ஒரு புதிய உணவு தான் தரலாம். வீட்டில் சமைக்கும் அனைத்து வகை உணவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக பழக்கப்படுத்தலாம். புது உணவுகளை ஆரம்பிக்கும்பொழுது அதில் உப்பு, இனிப்பு, காரம் போன்ற எதையும் சேர்க்கத்தேவையில்லை.பெரும்பாலும் இனிப்பு சேர்க்கப்படுவதால் பல குழந்தைகள் இனிப்பு சுவைக்கு அடிமையாகின்றன. இதை தவிர்க்க இணை உணவு ஆரம்பிக்கும் காலகட்டத்தில் அந்த உணவின் ஒரிஜினல் சுவையோடு கொடுப்பதே நன்மை பயக்கும். மசித்த காய்கறிகள், கீரைகளும் குழந்தையின் ஏழாவது மாதத்திலிருந்து கொடுக்கலாம்.

    வாழை, பப்பாளி, மாம்பழம் போன்ற அனைத்து வகை பழங்கள் நன்கு மசித்து சிறிதளவு ஊட்டலாம்.பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பல பேர் பயப்படுகிறார்கள்.அதில் உண்மை ஏதும் இல்லை.குழந்தைகளுக்கு கண்டிப்பாக பழங்களை ஊட்டலாம்.

    எந்த உணவையும் மிக்சியில் அரைத்து ஊட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.அவ்வாறு ஊட்டுவது குழந்தையின் பல் வளர்ச்சியையும் மென்று சாப்பிடும் பழக்கத்தையும் வெகுவாக பாதிக்கிறது. கரண்டியிலோ/மத்தினாலோ/கையாலோ நன்கு பிசைந்து ஊட்டுவதே மிகவும் சரியானது.பல பெற்றோர்கள் “எங்கள் குழந்தை எதையுமே மென்று சாப்பிட விரும்புவதில்லை” என்று கூறுவதிற்கு இதுவே காரணம்.

    பிஸ்கட்டை பாலில் மசித்து தருவது சரியான இணை உணவு அல்ல. பெரும்பாலான பெற்றொர்களும் தாத்தா பாட்டிகளும் பிஸ்கட் ஊட்டுவதை ஆரோக்கியம் என்று நம்புகிறார்கள்.ஆனால், பிஸ்க்ட் கொடுப்பதினால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் அது பசியின்மையை ஏற்படுத்தும். பிஸ்கட் ருசி கண்ட குழந்தை வேறு எந்த உணவையும் எளிதில் ஏற்காது அடம் பிடிக்கும்.

    நம் வீட்டில் சமைக்கும் பாரம்பரிய உணவை தருவதற்கு பயப்படும் பெற்றோர்கள் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பிஸ்கட்டுகளை எப்படி நம்புகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது! அதே போல் டின்களில் அடைத்து விற்கப்படும் குழந்தையின் பிரத்தியேக உணவுகள் தர வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. குழந்தை வளர வளர வடை, சப்பாத்தி, பூரி போன்றவையும் பருப்பு/சாம்பார்/தயிர் போன்றவற்றில் நன்கு ஊறவைத்து, மசித்து ஊட்டலாம்.

    வேகவைத்து மசித்த சுண்டல் வகைகள், பொரி, அவல், உலர்ந்த திராட்சை, எள்ளுருண்டை, பொடித்த பொட்டுக்டலை/வேர்கடலை, பேரீச்சம்பழம் ஆகிய வகைகள் நல்லதொரு ஸ்நாக்சாகும். அசைவ உணவு வகைகள் குழந்தையின் ஒன்பது (அ) பத்து மாதத்திலிருந்து தர ஆரம்பிக்கலாம்.முட்டையின் மஞ்சள் கரு முதலில் தரலாம். பின்னர் ஒவ்வொரு வகையான அசைவ உணவைத் தொடரலாம்.

    “என் குழந்தை வாயில் எதையும் வாங்குவதில்லை, வாயில் வைத்தவுடனே துப்புகிறது” என்று பல தாய்மார்கள் கூறுவார்கள். அதன் அடிப்படை என்னவென்றால் பால் உறிஞ்சி குடித்தக் குழந்தைக்கு உணவை நாக்கை மடித்து உள்செலுத்த இன்னும் பழகவில்லை, புதிய உணவு, புதிய சாப்பிடும் முறை, இவை இரண்டும் பழகுவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனை உணவு ஊட்டுபவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். மேலும் குழந்தை சாப்பிடுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும், இதற்கு தாய்க்கு மிகுந்த பொறுமை அவசியம்.

    முற்காலத்தில் அம்மா, பாட்டி உணவு ஊட்டும் பொழுது காக்கா நரிக்கதை, நீதிக்கதைகள் சொல்லி உணவு ஊட்டுவார்கள்.இதனால் சிந்திக்கும் திறன், கவனிக்கும் ஆற்றல், கூடி வாழும் கலை, நற்பண்புகள் ஆகியவை உணவுடன் சேர்த்து ஊட்டப்பட்டது.ஆனால் தற்காலத்தில் மொபைல் / டீவி / லேப்டாப் கார்ட்டூன்கள் காட்டி உணவு கொடுக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.இதனால் குழந்தைக்கு உணவின் ருசி, அதை சாப்பிடும் முறை போன்றவை தெரியாமலே போகிறது, இதே பழக்கம் வளர்ந்த பின்னும் தொடர்கிறது.இந்த பழக்கத்தால் சிறு குழந்தையிலிருந்தே உடல் பருமன் உண்டாகிறது என்ற உண்மை நிறைய பேர் உணர்வதில்லை.

    சாப்பிடும் பொழுது வேறு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதால் வயிற்றிலிருந்து “ போதும் சாப்பிடுவதை நிறுத்து“ என மூளைக்கு செல்லும் நுண்ணிய சிக்னல் அறியப்படாமலேயே போகிறது, அதனால் சாப்பிடும் அளவு நம்மையறியாமலேயே அதிகரிக்கிறது. இதன் விளைவு உடல் பருமன்.இனை உணவு சாப்பிடும் பொழுது ஏற்பட்ட பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்து பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை” எனும் பழமொழி இதற்கும் பொருந்தும்!!

    சத்துணவு நிபுணர்கள் எப்பொழுதும் கூறுவது “சத்தான எந்த உணவை கொடுக்கவேண்டும்” என முடிவு செய்வது தாயின் கடமை.தரப்படும் உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என முடிவு செய்வது குழந்தையின் உரிமை. இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.குழந்தைக்கு பசி இல்லாத பொழுது மற்றும் குழந்தை போதும் என்று சொன்னபிறகு வலுக்கட்டாயமாக ஊட்டினால் வாந்தி எடுக்கும்.இதை தாய்மார்கள் குழந்தைக்கு உணவு பிடிக்கவில்லை அதனால் தான் வாந்தி எடுக்கிறது என்று நினைக்கக்கூடும்.
    கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பிறகும் சிலருக்கு பாதிப்பு உண்டாகலாம். அதற்கான காரணங்கள் குறித்தும், அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.
    கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களில் சிலர் உடல் சோர்வு, தசை வலி, மூளை சோர்வு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். இவை தவிர கூந்தல் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சினைகளும் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. இந்த பாதிப்புகள் 6 முதல் 9 மாதங்கள் வரை கூட நீடிக்கக்கூடும். அதற்கான காரணங்கள் குறித்தும், அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.

    கொப்புளம்: கொரோனா தொற்றின்போது தடிப்பு, கொப்புளம் போன்றவை ஏற்படுவது பொதுவானது. சிலருக்கு நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த பிறகும் பாதிப்பு உண்டாகலாம்.

    முடி உதிர்தல்: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 2 முதல் 3 மாதங்களுக்கு பிறகு முடி உதிர்தல் பிரச்சினையை எதிர்கொள்வதாக பலர் புகார் அளித்திருக்கிறார்கள். கூந்தலை அலசும் போது, தலை சீவும்போது, குளிக்கும்போது அடர்த்தியாக முடி உதிர்வதை கண்கூடாக காண நேரிடும். இந்த வகையான முடி உதிர்தல் ‘டெலோஜென் எபுவியம்’ என்று அழைக்கப்படுகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒன்றரை மாதங்களில் இந்த பிரச்சினை தொடங்கலாம். கடுமையான மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வரும்போது இந்த பாதிப்பு நிகழும்.

    பொதுவாக பிரசவம், மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் ‘டெலோஜென் எபுவியம்’ பிரச்சினையை எதிர்கொள்வார்கள். அந்த வரிசையில் கொரோனாவும் இணைந்திருக்கிறது. கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் சமயத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். அதனை தவிர்க்க இயலாதது.

    கொரோனா தொற்றும், கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும். பிற வகையான டெலோஜன் எபுவியத்துடன் கொரோனா பாதிப்பை ஒப்பிடும்போது இந்த வகையான முடி உதிர்தல் தீவிரமாக இருக்கும். சிலருக்கு வழுக்கை தலை பிரச்சினை ஏற்படக்கூடும்.

    புண்கள்: ‘கோவிட் பீட்’ எனப்படும் இது பொதுவாக கைகளிலும், கால்களிலும் காணப்படும். இந்த பிரச்சினையை எதிர்கொள்பவர்களின் விரல்கள் நீலம் அல்லது சிவப்பு கலந்த நீல நிறத்தில் காணப்படும். பெரும்பாலும் வெளி நாடுகளில் இத்தகைய அறிகுறிகள் தென்படுகிறது. இந்தியாவில் இத்தகைய அறிகுறிகள் இல்லை.

    வறட்சி: தைராய்டு அல்லது நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் ஏற்கனவே சில சரும பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள். சரும வறட்சியும் எட்டிப்பார்க்கும். நோய்த்தாக்குதலின் போது சாப்பிடும் மருந்து, மாத்திரைகளும் சரும வறட்சிக்கு வித்திடலாம்.

    சரும அரிப்பு: கொரோனா நோய் பாதிப்புக்குள்ளான சமயத்தில் இந்த பிரச்சினையை அனுபவிக்கக்கூடும். நமைச்சல், அரிப்பு போன்றவை உடலின் எந்த பகுதியிலும், எந்த நேரத்திலும் தோன்றும். சில நேரங்களில் சிவப்பு நிறத்தில் தடிப்பு, சரும ஒவ்வாமை பிரச்சினைகள் உண்டாகும். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் இத்தகைய பாதிப்புகள் நீடிக்கலாம்.

    இத்தகைய சருமம், முடி சார்ந்த பிரச்சினைகளை தடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும் போதுமான ஊட்டச்சத்துக்களை சாப்பிடுவதும், சருமத்தை ஈரப்பதமாக பராமரிப்பதும் பாதிப்பின் வீரியத்தை தடுக்க உதவும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ ஆலோசனை பெறுவது பலன் தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் பிரச்சினைகளை களையலாம்.
    குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு அடம் பிடிக்கும் போது வேறு வழியில்லாமல் வாங்கி கொடுத்து விட்டு நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம்.
    நம்முடைய உணவுமுறையில் ஒரு நாளுக்கு மூன்று வேளை உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். மூன்று வேளை உணவை 5 அல்லது வேளையாக பிரித்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதுஎன்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனால் உடலில் சேரும் கலோரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இந்த வழிமுறை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பலருக்கும் 3 வேளையும் வயிறு நிறைய சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் நொறுக்குத்தீனி சாப்பிடவில்லை என்றால் அந்த நாளே முழுடையடையாதது போல் இருக்கும். மாலை மேகங்களை பார்க்கும் போது குளிர்ந்த காற்றை உணரும் போது காரசாரமாக பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் வேலைக்கு நடுவே ஏலக்காய் சேர்ந்த சூடான டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றும். குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு அடம் பிடிக்கும் போது வேறு வழியில்லாமல் வாங்கி கொடுத்து விட்டு நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம். இவற்றை தவிர்த்து மாலை நேர சிற்றுண்டியை ஆரோக்கியமானதாக மாற்றி கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும்.

    மாலையில் டீ, காபிக்கு பதிலாக மோர், கிரீன் டீ, முலிகை டீ, பாதாம் பால் குடிக்கலாம். நார்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிடலாம்.

    புரதச்சத்து நிறைந்த நட்ஸ், உலர்பழங்கள் சாப்பிடலாம்.

    காய்கறி சாண்ட்விச், காய்கறி சாலட் உடன் அக்ரூட் பருப்பு, பேரீச்சம் பழம் சேர்த்து கொள்ளலாம்.

    பழங்கள் சேர்த்த ஸ்மூர்த்தி, லஸ்ஸி பருகலாம்.

    சிறுதானிய புட்டு, பணியாரம், காய்கறி சூப் குடிக்கலாம்.

    இந்திய உணவு கலாசாரத்தை பொறுத்தவரை வீட்டில் சமைக்கும் உணவுகளுக்க உடல் உடையை குறைக்கும் தன்மை உள்ளது, காரணம், ஆரோக்கியமான சமையல் முறை மற்றும் சமையல் பொருட்கள்.

    கடைகளில் தயாரிக்கும் உணவுகளில் இடம் பெறும் கொழுப்பு பொருட்கள், சோடா, கார்பனேட்டட் பானங்கள், அதிக கலோரி, சர்க்கரை சேர்த்த உணவுகள் உடலில் எடையை அதிகரிக்க செய்யும். மேலும் சர்க்கரைநோய், இதய நோய், உடல்பருமன் போன்ற  நோய்களை உண்டாக்கும். ஆகையால் மாலை சிற்றுண்டி பட்டியலில் நீக்க வேண்டியசில உணவுகள் இதோ...

    சோடா, கார்பனேட்டட்பானங்கள் அதிக சர்க்கரை மற்றும் நிறமிகள் சேர்த்த குளிர்பானங்கள்

    சாக்லேட், ஐஸ்கிரீம், மைதாவில் செய்த கேக், குக்கீஸ்,

    எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் மற்றும் இறைச்சி.

    வனஸ்பதி, வெண்ணெய், கனோலா எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கிராஸ்பீத் எண்ணெய் போன்றவற்றால் செய்யப்பட்ட உணவுகள்.

    இந்த சிற்றுண்டிகளின் பெயரை கேட்டவுடனேயே சுவைப்பதற்கு தூண்டும். ஆனால் மனதை கட்டுப்படுத்தி இவற்றை தவிர்த்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    இஞ்சியை துவையலாக அரைத்து சாப்பிட்டு வர வாந்தி, பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் ஆகியவை ஏற்படாது. அசைவ உணவு சாப்பிட்டவுடன் ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிட்டு வெந்நீர் அருந்தினால் உடனடியாக ஜீரணமாகிவிடும்.
    தேவையான பொருட்கள் :

    சுத்தம் செய்து, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் - ஒரு கப்,
    பூண்டு - 20 பல்,
    காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப),
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    வெல்லம் - சிறிய துண்டு,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் அதனை ஆற வைத்து உப்பு, வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும்.

    சத்தான இஞ்சி சட்னி ரெடி.

    இதை பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

    ஜீரண சக்தியைத் தூண்டும். பசியின்மை, மந்தம், வயிற்றுப் பொருமல் தீரும்.
    நெருக்கமானவர்களுடன் இருப்பது நட்பா? காதலா? குழப்பமாக இருக்கும் பெண்கள் இந்த நடைமுறையை கடைபிடித்து தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
    நட்புக்கும், காதலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. அதை புரிந்துகொள்ளாத சில பெண்கள் நட்பையும், காதலையும் ஒன்றாக்கி குழம்பிக்கொள்வார்கள். நீங்கள் தற்போது பழகிக்கொண்டிருக்கும் ஆண் யாரிடமாவது காதல் வசப்பட்டிருக்கிறீர்களா என்பதை தெரிந்துகொள்ள இது எளிய வழி முறை.

    கவனமாக படித்து, பதில் அளித்தால், நீங்கள் அந்த நபரிடம் காதல் வசப்பட்டிருக்கிறீர்களா என்பதை கண்டறிந்துவிடலாம்..!

    1. நீங்கள் நெருக்கமானவராக கருதும் அவரை, ‘வெளியே செல்லலாம்’ என்று அழைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவர் ஏதாவது காரணத்தை கூறி உங்களுடன் வர மறுத்தால்..?

    அ. எரிச்சலடைவேன். அவருடன் சண்டை போடுவேன்.

    ஆ. சில நாட்களுக்கு அவரிடம் வெறுப்பைக் காட்டுவேன்.

    இ. அதிருப்தியை வெளிப்படுத்துவேன். ஆனாலும் ‘உங்கள் நிலைமை புரிகிறது, இன்னொரு நாள் வெளியே செல்வோம்’ என்று சமாளிப்பேன்.

    2. அவருடன் இருக்கும்போது உங்கள் அலங்காரம் எப்படி இருக்கும்?

    அ. அலங்காரமின்றி நான் அவரோடு எங்கும் செல்லமாட்டேன்.

    ஆ. முகத்தில் பவுடர், உதட்டுச்சாயமாவது பூசிக்கொள்வேன்.

    இ. எப்படியிருந்தாலும் அவர் என்னை ரசிப்பார். அதில் சந்தேகமில்லை. அதனால் அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன்.

    3. கீழ்கண்டவைகளில் அவர் எதை பூர்த்தி செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    அ. மணிக்கொரு முறை பேச வேண்டும். தினமும் ஒருமுறையாவது என்னை பார்க்கவர வேண்டும்.

    ஆ. அவர் எங்கிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் என்ன செய்கிறார் என்பதை எனக்கு தெரிவித்துக்கொண்டிருக்கவேண்டும்.

    இ. அவரை முழுமையாக நம்புகிறேன். நேரமிருக்கும் போது அவர் எப்படியும் பேசுவார் என்பது எனக்கு தெரியும்.

    4. அவருக்காக எதை இழக்க தயாராக இருக்கிறீர்கள்?

    அ. எதையும் இழக்கமாட்டேன்.

    ஆ. அவர் எனக்காக எதையாவது விட்டுக்கொடுத்தால், நானும் விட்டுக்கொடுப்பேன்.

    இ. வேலையை விட்டுவிடுவது மற்றும் என் சுயமரியாதையை இழக்கும் விஷயங்களைத் தவிர, வேறு எதை வேண்டுமானாலும் அவருக்காக விட்டுக்கொடுப்பேன்.

    5. இருவரும் வாழ்க்கையில் இணைவது என்று முடிவு செய்துவிட்டீர்களா?

    அ. இல்லை. எனக்கு ஏற்றவரா என பரிசீலிக்கிறேன்.

    ஆ. மனதை வசீகரிக்கிறார். ஆனாலும் முடிவு செய்யவில்லை.

    இ. எல்லாவிதத்திலும் திருப்தி தரும் அவரை வாழ்க்கைத் துணையாக ஏற்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    உங்கள் விடைகள் பெரும்பாலும் ‘அ’ என்றால்...?

    மற்ற ஆண்களைப்போலவே அவருடனும் நட்புடன் பழகி வருகிறீர்கள். உங்கள் உறவு, வாழ்க்கையில் இணையும் அளவுக்கு நெருக்கமாக இல்லை. எனவே அவர் மீது உங்களுக்கு காதல் இல்லை. உங்களுக்கு அவர் மீது காதல் தோன்றுவது கடினம்.

    பெரும்பாலும் பதில்கள் ‘ஆ’ என்றால்...

    அவரை பிடித்திருக்கிறது. ஆனால் ஜோடி சேரும் அளவுக்கு நீங்கள் முழுமை அடையவில்லை. அவரை வாழ்க்கைத் துணையாக ஏற்க வேண்டுமென்றால் இன்னும் புரிதலும், இணக்கமும் அதிகரிக்க வேண்டும். நீங்கள், எதிர்காலத்தில் அவர் மீது காதல்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

    அதிக பதில்கள் ‘இ’ என்றால்...?

    நீங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் இருவர் மனமும் இணக்கமாக இருக்கிறது. நீங்கள் அவர் மீது காதல் கொண்டுவிட்டீர்கள். அவர் நல்லவராக இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் இணையலாம்!
    குளிக்கும் முன்னர் நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.
    இன்றைய நாகரிக உலகில் நாம் மறந்து விட்ட பாரம்பரிய பழக்கங்களில் ஒன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதாகும். உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடிய தன்மை கொண்டதால் அதை நல்ல எண்ணெய் என்றே முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.

    தீபாவளி பண்டிகையன்று அதிகாலையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது. குளிக்கும் முன்னர் நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பது தான் முறையான பழக்கம். அதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.

    குளியலுக்கான விதிமுறைகள்

    வார நாட்களில் ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமையிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் அதிகாலையில் நல்லெண்ணெய் குளியலை மேற்கொள்ள வேண்டும்.

    எண்ணெய் தேய்க்கும் முறை

    சுத்தமான நல்லெண்ணெய்யை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்றாக மசாஜ் செய்வது போல் தேய்க்க வேண்டும். முக்கியமாக தொப்புள், கை, கால் விரல் நகக்கண்களில் நன்றாக படியும் படி அழுத்தி தடவ வேண்டும். அதன் பின்னர் அரை மணிநேரம் ஊற விட்டு அரைத்த வெந்தயத்துடன் சிகைக்காய் கலந்து தேய்த்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.

    கண்களில் எண்ணெய் விடுதல்

    உடலுக்கு எண்ணெய் தேய்த்த பிறகு கண்களிலும் இரு துளிகள் நல்லெண்ணெய்யை விட்டு மேலிருந்து கீழாகவும். இடமிருந்து வலமாகவும் (பிளஸ் வடிவில்) தலா ஐந்து முறை கண்களை சுழற்ற வேண்டும். இதே போல் எக்ஸ் வடிவிலும் சுழற்றிய பின்னர் வட்ட வடிவத்தில் 5 முறை கடிகார சுற்றாகவும் அதற்கு எதிர்ப்புறமாகவும் சுழற்ற வேண்டும்.

    வாய் கொப்பளித்தல்

    10 மில்லி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். அதை உடனடியாக துப்பி விடாமல் கைகளால் பற்களை துலக்கிய பின்னர் மீண்டும் சில நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு குறைந்து தண்ணீர் போல மாறியவுடன் அதை கீழே துப்பி விட வேண்டும். இதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    அருந்தும் முறை

    இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்யை சிறிது சிறிதாக வாய்க்குள் உறிஞ்சி உமிழ் நீருடன் நன்றாக கலந்து விழுங்க வேண்டும். அதன் மூலம் மலம் எளிதாக வெளியேறி குடல் சுத்தமாகும்.

    நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள்

    உடலையும் கண்களையும் குளிர்ச்சியடைய செய்து பார்வை திறனை கூர்மையாக்குகிறது. இதில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சீரான செரிமானத்துக்கும், நீரிழிவுநோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
    அழகையும், ஆரோக்கியத்தையும் பிட்னெஸ் தரும் என்பது தெரிந்தபோதிலும் பெரும்பாலான பெண்கள் திடீரென்று ஒரு நாள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள்.
    `பிட்னெஸ்' எனப்படும் உடல்கட்டுக்கோப்பு, உடற்பயிற்சியால் கிடைக்கும் என்பது பெண்கள் அனைவருக்குமே தெரியும். அழகையும், ஆரோக்கியத்தையும் பிட்னெஸ் தரும் என்பது தெரிந்தபோதிலும் பெரும்பாலான பெண்கள் திடீரென்று ஒரு நாள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள். அதற்கான காரணத்தைக் கேட்டால் `உடற்பயிற்சி செய்ய நேரமில்லை' என்பார்கள் அல்லது `உடற்பயிற்சி செய்தும் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை' என்பார்கள். தங்குதடையின்றி பிட்னெஸ், டயட் போன்றவைகளை தொடர பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து விஷயங்கள்:

    1. இன்றே தொடங்குங்கள்

    உடற்பயிற்சியை `நாளை தொடங்கலாம்' என்று நீங்கள் நினைத்தால், தோல்வியின் முதல் படியை மிதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். நாளை என்பது தள்ளிப்போட கையாளக்கூடிய வழிமுறை. பிட்னெஸ் தேவை என்று நீங்கள் முடிவுசெய்துவிட்டால் இன்றே அதற்கான அடிப்படை வேலைகளை தொடங்கிவிடவேண்டும். உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் இருந்துகொண்டிருக்கும் சோம்பேறித்தனம்தான் நாளை என்று தள்ளிவைக்கும் `ஸ்டார்ட்டிங் டிரபிளை' உருவாக்கும். அதனால் தள்ளிவைக்காமல் இன்றே தொடங்கிவிடுங்கள்.

    2. பிடித்தமான பிட்னெஸ் கார்னர்

    வீட்டில் உங்களுக்கு பிடித்தமான இடம் ஒன்றை பிட்னெஸ் கார்னர் ஆக்கவேண்டும். அங்கு உங்களை உடற்பயிற்சிக்கு தூண்டும் படங்கள் இடம்பெறவேண்டும். உங்களுக்கு தன்னம்பிக்கை தந்து உற்சாகப்படுத்தும் வாசகங்களை அங்கு எழுதிவைக்கவேண்டும். உள்ளறை அலங்கார செடிகளை வைத்தும் அலங்காரப்படுத்தலாம்.

    டம்பல்ஸ் போன்ற எளிய உடற்பயிற்சி கருவிகளை உங்களது கைக்கு எட்டும்தூரத்தில் வைத்திருங்கள். இதர உபகரணங்களையும் கவரும் விதத்தில் அடுக்கிவைத்தால், அவைகளை பார்க்கும்போதெல்லாம் உடற் பயிற்சி செய்யும் உற்சாக மனநிலை வந்துவிடும். அந்த அறையில் போதுமான அளவு காற்றும் வெளிச்சமும் இருக்கவேண்டும். பால்கனி, வராந்தா வில்கூட பிட்னெஸ் கார்னர் அமைத்துக்கொள்ளலாம்.

    3. கண்ணாடியில் பாருங்கள்

    உடை அலங்காரத்தோடு பலமுறை உங்களை கண்ணாடியில் பார்த் திருப்பீர்கள். அப்படி எதுவும் இல்லாமல் ஒருமுறை உங்கள் உடலை கண்ணாடியில் பாருங்கள். அப்போதுதான் அதிக உடல் எடை, சில இடங்களில் தொளதொளவென்று இருத்தல் போன்ற குறைபாடுகள் அனைத்தும் உங்களுக்கு தெரியவரும். கண்ணாடியில் பார்க்கும் அந்த தருணத்தில்தான் பிட்னெஸ் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் உணருவீர்கள். உடல் கட்டுக்கோப்பாக இருப்பது வாழ்க்கையின் பரிசாக அமையும். கட்டுக் கோப்பான உடல் உருவானால் ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்கும்.

    4. ரிசல்ட்டுக்கு முக்கியத்துவம் வேண்டாம்

    ரிசல்ட் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்காக காட்டும் ஆர்வத்தைவிட, தொடங்கிய செயலை தொடர்ந்து செய்துகொண்டிருப்பதே சிறந்தது. உடல் எடையை குறைப்பது போன்ற செயல்களுக்கு உடனடி பலன் கிடைக்காது. அதே நேரத்தில், `பலன் தாமதமாகத்தான் கிடைக்கும்' என்ற எண்ணம், உடற்பயிற்சி மீது இருக்கும் ஆர்வத்தை குறைக்கவும் அனுமதித்துவிடக்கூடாது. உடல் எடையை குறைப்பதைவிட, ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து தொடர்ந்து பிட்னெஸ் செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும்.

    5. சரியானதை மட்டும் செய்யுங்கள்

    சில வகை உடற்பயிற்சிகள் செய்வதற்கு கடினமானதாக இருக்கும். ஆனால் அதனால் கிடைக்கும் பலன்கள் மிக குறைவாகவே இருக்கும். எல்லோருக்கும் எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் முழுபலனை தந்துவிடாது. அதனால் உங்கள் வயது, ஆரோக்கிய நிலை, உடல் அமைப்புக்கு பொருத்தமான பயிற்சிகளையே மேற்கொள்ளவேண்டும். அதற்கு ஜிம் பயிற்சியாளர் ஒருவரது ஆலோசனை உங்களுக்கு தேவைப்படும்.

    6. கலோரி கணக்கும் தேவை

    உடல் பருமன் கொண்டவர்கள் உடற்பயிற்சியால் மட்டும் அதை சாதித்துவிட முடியாது. உடல் இயக்கத்திற்கு தேவையான அளவு உட்கொள்ளும் உணவையும் குறைக்கவேண்டும். அதனால் அவர்கள் அன்றாட உணவில் விழிப்பாக இருக்கவேண்டும். அதோடு எந்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதையும் கணக்கிட்டு உண்பது அவசியம். இதை கணக்கிடுவதற்காகவே சில ஆப்கள் இருக்கின்றன. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

    7. ருசியாகும் உணவு

    நன்றாக உடற்பயிற்சி செய்த பின்பு உணவு சாப்பிட்டால் அது ருசி நிறைந்ததாக இருக்கும். ஏன்என்றால் அப்போது உடலுக்கு உணவின் தேவை அதிகமாக இருக்கும். ஜீரணமும் வேகமாக நடக்கும். அப்போது கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவு உடலுக்கு தேவைப்படும். அளவுக்கு மிகாமல் சாப்பிடவேண்டும்.

    8. உங்களுக்கான நேரம்

    வாழ்க்கையில் நாம் பொன், பொருள், பணம், பதவி போன்று பலவற்றையும் பெறுகிறோம். ஆனால் அவை அனைத்தையும் அனுபவிக்க ஆரோக்கியமான உடல் அவசியம். அதனை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம்தான் பெற முடியும் என்பதை உணர்ந்து, உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்குங்கள். அதனை தினமும் உங்களுக்கான நேரமாக கருதுங்கள்.

    9. விமர்சனத்தை ஒதுக்குங்கள்

    நீங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதை பார்த்துவிட்டு நண்பர்களில் யாராவது, `எந்த பயிற்சி செய்தும் உன் உடல் தோற்றத்தில் மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லையே' என்று சொல்லலாம். அது போன்ற கமெண்டுகளில் கவனத்தை செலுத்தாதீர்கள். உடற்பயிற்சியை தொடங்கும் நாளிலே `அதுபோன்ற எதிர்மறையான விமர்சனங்களுக்கு செவிசாய்க்கமாட்டேன்' என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிலர், உடற்பயிற்சி செய்யும் குண்டானவர்களை பார்த்து `உடற்பயிற்சி செய்ததும் உங்கள் உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டது' என்று வேண்டும் என்றே சொல்வார்கள். அதையும் நம்பிவிடக்கூடாது.

    10. அதிகம் வேண்டாம்

    விரைவாக பலன் கிடைக்கவேண்டும் என்பதற்காக வேகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடாதீர்கள். அதுபோல் அதிக நேரமும் உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டாம். அதிக நேர பயிற்சி உடலுக்கு சோர்வைத்தந்து, ஆர்வத்தை குறைத்துவிடும். அதோடு சிலருக்கு உடலில் எதிர் மறையான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.
    ×