search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனமும், உடலும் சோர்வடையாமல் காக்க தினமும் செய்ய வேண்டியவை
    X
    மனமும், உடலும் சோர்வடையாமல் காக்க தினமும் செய்ய வேண்டியவை

    மனமும், உடலும் சோர்வடையாமல் காக்க தினமும் செய்ய வேண்டியவை

    தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது எந்தவகையான பயிற்சியாகவும் இருக்கலாம். உடல் தசைகளை நன்றாக இயங்கவைத்தால் போதுமானது.
    ஒவ்வொரு நாளும் இனிமையாக, நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் ஒருசில நாட்கள் எதிர்பாராத விதத்தில் மோசமான நாளாகிவிடுவதுண்டு. அப்போது மனம் வேதனைக்குள்ளாகும். உடலும் சோர்ந்து போகும். தினசரி நாம் செய்யும் வேலைகளை போலவே அன்றாடம் நம்மை நாமே உற்சாகப்படுத்தவும் சிலவற்றை செய்தாகவேண்டும். அவைகளை செய்தால் எந்த பிரச்சினையும் நம்மை பாதிக்காது. எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைந்துவிடும்.

    தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது எந்தவகையான பயிற்சியாகவும் இருக்கலாம். உடல் தசைகளை நன்றாக இயங்கவைத்தால் போதுமானது.

    வார இறுதியில் தனிமையில் பயணம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். தொலைதூர இடங்களுக்கு செல்ல முடியாவிட்டாலுங்கூட மோட்டார் சைக்கிளிலோ, காரிலோ சில கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வரலாம்.

    பசுமையான பின்னணி கொண்ட இடங்களுக்கு சென்று இயற்கையை ரசிக்கலாம். அவ்வாறு இயற்கை சூழலில் நேரத்தை செலவிடுவது உடலில் வைட்டமின் டி கிடைப்பதற்கு வழிவகுக்கும்.

    தினமும் புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் பின்பற்றுங்கள். நேரம் கிடைக்காத சூழலில் இரவில் தூங்குவதற்கு முன்பு சில பக்கங்களையாவது படிக்கும் வழக்கத்தை கடை பிடியுங்கள்.

    மூச்சு பயிற்சிக்கும் சில நிமிடங்கள் செலவிட வேண்டும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி மனதுக்கும், உடலுக்கும் நல்லது.

    விடுமுறை நாட்களில் பிடித்தமான உணவை உங்கள் கைப்பக்குவத்தில் சமைத்து ருசிக்கலாம். நண்பர்களுடன் மதிய உணவை அருந்தலாம்.

    மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களை மனதுக்கு இதமளிக்கும் விதத்தில் செலவிட வேண்டும். பிடித்தமான இசையை ரசித்து கேட்கலாம். சுவாரசியம் நிறைந்த திரைப் படங்களை பார்க்கலாம். வாரத்தில் ஓரிரு நாட்களோ அல்லது வார இறுதி நாட்களிலோ சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கலாம்.

    வாரத்தில் ஒரு நாளாவது அறையை ஒழுங்கமைக்கும் பணியை செய்யலாம். அன்றாடம் சுத்தம் செய்தாலும் கூட பொருட்களை நேர்த்தியாக இடம் மாற்றி வைப்பது அறைக்கு புதிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும். உங்களுக்கு பிடித்தமான நபரிடம் வாரம் ஒருமுறையாவது அலைபேசியில் பேசுங்கள். அது நட்பையும், உறவையும் வலுப்படுத்திக்கொள்ள உதவும்.

    தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சமூக சேவை செய்யலாம். உதவி கேட்டு நாடி வருபவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம். உதவி செய்வது மனதுக்கு அதிக மகிழ்ச்சியையும், நிறைவையும் தரும்.

    உடலில் வைட்டமின் பி-12 சத்துக்களை தக்கவைத்துக்கொள்வது அவசியமானது. டாக்டரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் பி-12 மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.

    குழந்தைகளுடன் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடனும் நேரத்தை செலவிடலாம்.
    Next Story
    ×