என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    ‘ஒரு எதிர்மறை செய்தியை பார்த்தாலோ, படித்தாலோ அதில் இருக்கும் தகவலை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவற்றை அப்படியே மறந்துவிடவேண்டும்’ .
    பயம் நிறைந்த வாழ்க்கை மக்களுக்கு பழக்கமாகிக்கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் பயம் கொள்கிறார்கள். கண்டதையும் நினைத்து காரணமில்லாமல் கவலைப்படுகிறார்கள். சாதாரண பிரச்சினைகளைகூட எதிர்கொள்ள முடியாமல் அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க ஓடுகிறார்கள். இதனால் உருவாகும் பதற்றமும், பரபரப்பும் அவர்களது மனநிலையில் பெரும் மாற்றங்களை உருவாக்கி, மன அழுத்தத்தை தோற்றுவிக்கிறது. அது அவர்களது அன்றாட வாழ்க்கையில் சிக்கலையும், பணியில் பாதிப்பையும், உறவில் நெருக்கடியையும் உருவாக்குகிறது. அத்தகைய பயம் தொடர்புடைய இரண்டு சம்பவங்கள்.

    இன்று மக்கள் எது எதற்கோ பயப்படுகிறார்கள். பயணம் செய்ய பயப்படுகிறார்கள். பணத்தை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல பயப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தையை யாரேனும் கடத்திச் சென்று விடுவார்களோ என்ற பயமும், கல்லூரிக்குச் செல்லும் மகள் யாரையேனும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொள்வாளோ என்றும் பயப்படுகிறார்கள். குடும்பத்தில் நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும், முன்பு எங்கோ, யாருக்கோ நடந்த எதிர்மறையான சம்பவத்தோடு முடிச்சுப்போட்டு சிந்தித்து, ‘அதுபோல் தன் வீட்டிலும் நடந்துவிடுமோ!’ என்று காரணமில்லாமல் கவலை கொள்கிறார்கள்.

    வாழ்க்கையில் பயம் ஏற்படுவதற்கு மூளையில் பதிவாகியிருக்கும் எதிர்மறையான சம்பவங்களே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. நாம் கண்களையும், காதுகளையும் பயன்படுத்தி எப்போதும் ஏராளமான செய்திகளை பார்க்கவும், கேட்கவும் செய்கிறோம். பொதுவாக எதிர்மறையான செய்திகள் மீதுதான் எப்போதும் நம் கவனம் அதிகம் பதியும். ‘நமக்கும் அப்படி நடந்துவிடக்கூடாதே’, என்ற எண்ணத்திலும் ‘நாம் அந்த சம்பவத்தில் இருந்து விழிப்புணர்வு பெற முடியும்’ என்ற நோக்கத்திலும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அந்த எதிர்மறை சம்பவத்தை அப்படியே மனதில் பதியவைத்துவிடுகிறோம். பின்பு அந்த சம்பவத்தை நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களிடம் கூறி, ‘இப்படி எல்லாம் நடக்கிறது. நாம் கவனமாக இருந்துக்கணும்’ என்றும் சொல்வோம்.

    ‘ஒரு எதிர்மறை செய்தியை பார்த்தாலோ, படித்தாலோ அதில் இருக்கும் தகவலை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவற்றை அப்படியே மறந்துவிடவேண்டும்’ என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டு, அந்த எதிர்மறை செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டால், அது அப்படியே நமது மூளையில் பதிவாகிவிடும். அப்படி பதிய இடம்கொடுத்துவிட்டால், நமது குடும்பத்தில் என்ன பிரச்சினை நடந்தாலும் உடனே அந்த சம்பவம் நினைவுக்கு வந்து ‘அதுபோல் ஆகிவிடுமோ!’ என்ற கருத்தை பரப்பி பயத்தை உருவாக்கிவிடும். அந்த பயத்தால் விரும்பத்தகாத விளைவுகள் உருவாகும். விபரீதங்கள் கூட நடந்துவிடும். அப்படிப்பட்ட தேவையற்ற பயம்தான் இப்போது சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

    இந்த மாதிரியான தேவையற்ற பயம் உங்களை வாட்டாமல் இருக்கவேண்டும் என்றால், எதிர்மறையான சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அத்தகைய சம்பவங்களை கேட்பது, பார்ப்பது, பேசுவது, விவாதிப்பது போன்றவைகளை தவிர்க்கவேண்டும். அதே நேரத்தில் பாசிட்டிவ்வான செய்திகளை பற்றி திரும்பத் திரும்ப பேசி, விவாதித்து அவைகளை மூளையில் பதியவிட வேண்டும். இந்த இரண்டும் சரியாக நடைபெறவேண்டும் என்றால் முதலில் சராசரி மனிதர்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் ஒழுக்கமும், நம்பிக்கையும் கொண்டிருக்கவேண்டும். மனோசக்தியை மேம்படுத்தவேண்டும். அதற்கு தியானம் நன்றாக கைகொடுக்கும். கூடவே குடும்ப உறவுகளை சீர்படுத்தி சிறப்பாக வாழவும் வேண்டும்.

    இன்று இயந்திரமயமான வாழ்க்கையைதான் எல்லோரும் வாழ்கிறார்கள். படிப்பு, வேலை, பணம் சம்பாதித்தல், வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ளுதல் என்று வேகவேகமாக ஓடுகிறார்கள். அவர்கள், ஐம்பது வயதை தொடும்போதுதான், ‘வாழ்க்கையின் வெற்றி அவைகளில் இல்லை.. மகிழ்ச்சி என்பதில் இருக்கிறது’ என்பதை கண்டறிகிறார்கள். ‘மகிழ்ச்சி என்பதை பதவியாலோ, பணத்தாலோ, செல்வாக்காலோ பெற முடியாது’ என்ற உண்மையும் அப்போதுதான் அவர்களுக்கு புரிகிறது.

    அப்படியானால் மகிழ்ச்சியை எப்படி அனுபவிப்பது? எது மகிழ்ச்சி? ரொம்ப சிம்பிள். இரவில் படுத்து நன்றாக தூங்க முடிந்தால் அது மகிழ்ச்சி. மறுநாள் காலையில் விழித்து சூரியனை பார்க்க முடிந்தால் அது மகிழ்ச்சி. பசிக்கு ருசியாக சாப்பிட முடிந்தால் அது மகிழ்ச்சி. ஆரோக்கியமாக வாழ்ந்தால் அது மகிழ்ச்சி. அதற்கு மேல் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா கஷ்டங்களையும், அனுபவங்களாக எடுத்துக்கொள்ளத் தெரிந்தால் அதுவும் மகிழ்ச்சிதான்.

    ஒருவருக்கு வியாபாரத்தில் திடீரென்று ஒருகோடி ரூபாய் நஷ்டம் வந்துவிட்டது. அதை அறிந்த மனைவி கவலையோடு கணவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவரோ சிரித்தபடி வீட்டிற்கு வந்தார். ‘ஏன் சிரித்துக்கொண்டே வருகிறீர்கள்?’ என்று மனைவி காரணம் கேட்டார். அதற்கு அவர் ‘நான் ஒருகோடி ரூபாய் செலவு செய்து உயர்ந்த பாடம் ஒன்றை படித்து வந்திருக்கிறேன். அது இனிமேல் என்னை தோல்வியடைய விடாது. காலம் முழுக்க நான் லாபம் சம்பாதிக்கவும் உதவும்’ என்றார். இப்படி தோல்வியை பாடமாகவும், அனுபவமாகவும் எடுத்துக்கொள்ள முடிந்தால் அது மகிழ்ச்சி!

    தம்பதிகள் அனைவருமே குடும்ப உறவுகளை சீராக வைத்துக்கொள்ளவேண்டும். மனம்விட்டுப்பேசி எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும். ஒருவரை ஒருவர் நம்பவேண்டும். ஒழுக்கமாக வாழ வேண்டும். இவை எல்லாம் இருந்தால் கவலை இருக்காது. நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை இருந்தால் பயம் இருக்காது. வாழ்க்கை இனிக்கும்.

    -விஜயலட்சுமி பந்தையன்.
    தினமும் உடல் இயக்கத்தை தூண்டும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும், ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.

    இந்தியாவில் 54 சதவீத பெண்கள் முழுமையான உடல் இயக்கம் இன்றி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் குறைந்தபட்சம் 376 கலோரிகளையாவது செலவிட வேண்டும். ஆனால் பெரும்பான்மையான பெண்கள் 165 கலோரிகளே செலவிடுகிறார்கள். இது சராசரி கலோரி அளவைவிட 44 சதவீதம் குறைவாகும்.

    அதேபோல் ஆண்கள் சராசரியாக தினமும் 476 கலோரிகள் செலவிட வேண்டும். ஆனால் பெரும்பான்மையானவர்கள் 262 கலோரிகளே செலவிடுகிறார்கள். அதேவேளையில் 30 சதவீத ஆண்கள் முழு உடல் இயக்கத்துடன் இயங்குகிறார்கள். 80 சதவீதத்துக்கும் அதிகமாக அளவு கலோரிகளை செலவிட்டுவிடுகிறார்கள். பெண்களில் 24 சதவீதம் பேர்களே முழு உடல் இயக்கம் கொண்டிருக்கிறார்கள். 22 சதவீதம் பேர் மென்மையான உடல் செயல்பாடுகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

    இதுபற்றிய ஆய்வை மேற்கொண்ட அதிகாரி ‘‘ஆண்களும், பெண்களும் 50 சதவீதத்துக்கும் குறைவாக கலோரிகளை செலவிடுவதும், உடல் ரீதியாக செயல்பாடு இல்லாமல் இருப்பதும் கவலைக்குரிய விஷயம். செயலற்ற தன்மை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவைகளால் குறைவான அளவிலேயே கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

    அதனால் உடல் பருமன், கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. 30 வயதை கடந்தவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். தினமும் உடல் இயக்கத்தை தூண்டும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும், ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் நோய் பாதிப்புகளை தடுக்க உதவும். இன்றைய காலகட்டத்தில் உடல் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்’’ என்றார்..

    அதிக கலோரிகளை எரிப்பதற்கு உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீச்சல், ஜாக்கிங், சைக்கிளிங், கயிறு தாண்டுதல், யோகா, குத்துச் சண்டை போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். நடைப்பயிற்சியும் மிக நல்லது.
    செல்போன்களை உபயோகப்படுத்துவதற்கே பெரும்பாலான பிள்ளைகள் ஆர்வம் காட்டுகிறார்கள். செல்போன்களை நீண்ட நேரம் கைகளிலேயே வைத்திருப்பது கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
    புத்தகங்கள், பென்சில்களை கையாள்வதைவிட செல்போன்களை உபயோகப்படுத்துவதற்கே பெரும்பாலான சிறுவர்-சிறுமியர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். செல்போன்களை நீண்ட நேரம் கைகளிலேயே வைத்திருப்பது கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பிற்காலத்தில் தங்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு கைகளை பயன்படுத்துவதற்கு சிரமங்களை சந்திக்க நேரிடும்.

    ஒருசில அறிகுறிகளை கொண்டே அவர்களின் கைகள் பலவீனமாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாகவே எழுதுவது, ஓவியம் வரைவது, அதில் வண்ணங்கள் தீட்டுவது போன்ற செயல்களை சிறுவர்கள் ஈடுபாட்டோடு செய்வார்கள். அவர்களது கைகள் பலவீனமாக இருந்தால் பென்சில்களை சீராக கையாள்வதற்கு சிரமப்படுவார்கள். நோட்டில் எழுதும்போது அவர்களது கையெழுத்தை வைத்தே கைகளின் வலிமையை கண்டறிந்துவிடலாம். கைவிரல்கள் வலியாகவோ, பலவீனமாகவோ இருந்தால் அவர்கள் எழுதும் எழுத்துக்கள் அழுத்தமாக இருக்காது. மெல்லிய கோடுகளை போல தென்படும்.

    அவர்கள் சாப்பிடும் வழக்கத்தை கொண்டும் கைகளின் செயல்திறனை அளவிட்டு விடலாம். சாப்பிடும் டிபன் பாக்ஸ்களை திறப்பதற்கு சிரமப்படுவார்கள். தண்ணீர் பாட்டிலை திறக்கவும் கைவிரல்கள் சிரமப்படும்.

    சாப்பிடும்போது உணவுகளை சிந்திக்கொண்டிருப்பார்கள். ஷூக்கள் அணியும்போது கால்களை அதற்குள் நுழைப்பதற்கு சிரமப்படுவார்கள். ஷூக்களை கைவிரல்களை கொண்டு கட்டுவதற்கும் தடுமாறுவார்கள். அதுபோல் சட்டையில் பட்டன்களை மாட்டுவதற்கும் திணறுவார்கள். விளையாட்டு பொருட்களை பயன்படுத்தி விளையாடும் ஆர்வம் குறைந்து போய்விடும். சோப்பு போட்டு கைகளை கழுவுவதற்கும் தடுமாறுவார்கள்.
    உண்மையில் கவலையை களைவதற்குப் பதிலாக அதை சேர்த்துக் கொள்வதால்தான் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) உருவாகிறது. இது தொடர்ந்து நிகழ்வது நமது வாழ்க்கைச் சூழலையே மாற்றுகிறது.
    நான் ரொம்ப டென்ஷனாக இருக்கிறேன், என்ற சொற்றொடரை இப்போது நிறைய பேர் உச்சரிக்கிறார்கள். வீடுகளிலும், பள்ளி களிலும், அலுவலகங்களிலும் அதிகமாக இந்த வார்த்தைகளை கேட்கமுடிகிறது. இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் 1930-ம் ஆண்டுக்கு முன்பு இப்படி ஒரு வார்த்தையை உலக மக்கள் உச்சரித்ததில்லை என்கிறார், ஆஸ்திரியாவைச் சேர்ந்த மனஅழுத்த நோய் நிபுணர் டாக்டர் கான் செல்லி.

    மனஅழுத்தம் இப்போது உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மொழிகளில் மனஅழுத்தத்தைக் குறிக்கும் சொல்லே வழக்கில் இல்லை என்று கான் செல்லி கூறுகிறார். பிற்காலத்தில்தான் பிரான்சில் ‘லி ஸ்ட்ரெஸ்’ என்றும், ஜெர்மனில் ‘டெர் ஸ்ட்ரெஸ்’ என்றும் புதிய வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

    உண்மையில் கவலையை களைவதற்குப் பதிலாக அதை சேர்த்துக் கொள்வதால்தான் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) உருவாகிறது. இது தொடர்ந்து நிகழ்வது நமது வாழ்க்கைச் சூழலையே மாற்றுகிறது. உடலிலும், உள்ளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி விபரீத வியாதிகளில் தள்ளுகிறது. நீங்கள் நினைத்தால் மனஅழுத்தத்தை எளிதாக விரட்ட முடியும். ஏனெனில் மனஅழுத்தம் என்பது உடல் சார்ந்ததல்ல. மனம் சம்பந்தப்பட்டதுதான்.

    தற்போது ஆண், பெண் எல்லோருமே லட்சியத்தின் பின்னால் ஓடு கிறார்கள். அந்த லட்சியங்கள் எளிதில் அடைய முடியாததாகவும், போட்டி நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் தோல்விகள், பின்தங்குதல் போன்றவை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது கவலை, ஏக்கம், மனக்கசப்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி மனஅழுத்தத்திற்கு வழி வகுக்கிறது.

    ‘மனஅழுத்தம் என்பது மனிதனுக்கு ஆற்றலை வழங்கும் உயர்ந்த சக்தி’ என்று ஓசோ குறிப்பிடுகிறார். ‘மன அழுத்தம் வரும்வேளைகளில் உடல் மற்றும் மனதை தளர்வுறச் செய்யும் வேலையில் இறங்காதீர்கள். மாறாக அதை பயனுள்ள ஆற்றலாக மாற்றும் வேலையில் இறங்குங்கள்’ என்று அவர் கூறுகிறார்.

    மனஅழுத்தத்தை எப்படிப் பயனுள்ளதாக மாற்றுவது என்கிறீர்களா? இதற்கு வேறு எங்கும் சென்று பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே நீங்களும் அதைச் செய்துவிட முடியும்.

    நீங்கள் மனஅழுத்தத்தால் தூக்கமின்றி தவிக்கிறீர்களா? அதற்காக கவலைகொள்ள வேண்டாம். சிறிது தூரம் நடந்தாலே மனஅழுத்தம் மாறத் தொடங்கிவிடும். சிறிது தூரம் ‘ஜாகிங்’ செல்வது, நீண்டதூரம் நடப்பது, மாடிப்படிகளில் சில முறை ஏறி இறங்குவது போன்ற ஏதாவது ஒன்றை செய்யுங்கள்.

    உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேட்டு ரசியுங்கள். முடிந்தால், உங்களுக்கு எப்படி முடியுமோ அப்படி அந்த பாடலுக்கு ஆடுங்கள். அப்போது உங்கள் மனது மற்றவர்களுக்கு தொந்தரவு தராத விதத்தில் எதை செய்யச்சொல்கிறதோ அதை செய்யுங்கள். தூங்கச் செல்லலாம் என்று தோன்றினால் தூங்குங்கள், நிம்மதியாக உறக்கம் வரும்.

    மனம் எப்போதுமே பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டேதான் இருக்கும். நீங்கள் மாற்றுச்செயலில் இறங்கும்போது மனமும் கவலையை மறந்து வேறு திசைக்குத் திரும்பி விடும். உடலில் எங்காவது வலியை உணர்ந்தால் வெளிச்சம் குறைந்த, சவுகரியமான அறையில் உங்களுக்கு பிடித்தமான இருக்கையில் அமருங்கள். எந்தப் பகுதியில் வலி தெரிகிறதோ அந்த பகுதியை கையால் தொடுங்கள். ‘பிளீஸ் ரிலாக்ஸ்’, ‘போய்விடு வலியே... போய்விடு...’ என்று சொல்லியவாறு மிதமாக வருடுங்கள். 5 நிமிடங்கள் இப்படிச் செய்யுங்கள். நல்ல மாற்றத்தை உங்களால் உணரமுடியும்.

    மன அழுத்தம் எப்போதும் உங்களை தேடி வரத்தான் செய்யும். அது மனதிற்குள் சிம்மா சனம்போட்டு அமர்ந்துவிட வாய்ப்பு கொடுக்காமல், அப்படியே கையை குலுக்கி அதனை வழியனுப்பிவைத்துவிடுங்கள்.
    நலமாக வாழ தானிய உணவுகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தானியத்திலும் என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன. அறிந்து கொள்ளலாமா...
    நவதானியங்கள், சிறுதானியங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை. நலமாக வாழ இத்தகைய தானிய உணவுகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தானியத்திலும் என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன. அறிந்து கொள்ளலாமா...

    நெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. நாம் உமியை நீக்கி அரிசியை உணவாக சமைத்து சாப்பிடுகிறோம். அரிசியானது பச்சரிசியாகவும், புழுங்கல் அரிசியாகவும் புழக்கத்தில் உள்ளது. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.

    பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

    புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. இதனை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா, ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை தூண்டவும் செய்யும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிடுவதற்கு ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.

    சோளம்:- சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். அதேவேளையில் மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

    எள்:- கருப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. சுண்ணாம்புச்சத்தும் அதில் அதிகம் நிறைந்துள்ளது. எள்ளை லேசாக வறுத்து பொடி செய்து நெய் கலந்து சாப்பிட்டுவந்தால் மூல நோய் பாதிப்பில் இருந்துவிடுபடலாம். எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய்யுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து உடலில் தடவி குளித்து வந்தால் சரும நோய்கள் அணுகாது.

    கோதுமை:- அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் கோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணெய், நெய் பயன்படுத்தாமல் சப்பாத்தி தயார் செய்து சாப்பிடுவது நல்லது. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த உணவாகும். இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் உண்டாகாது.

    வரகு:- இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் வரகை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    சாமை:- சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இது மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

    கம்பு:- பழங்காலத்தில் கம்பங்கஞ்சியும், கம்பஞ்சோளமும் சாப்பிட்டவர்கள்தான் அதிகம். இதனை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடலாம். இது பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. உடல் வலிமையையும் கூட்டும். கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு இது. ஜீரண சக்தியையும் அதிகப்படுத்தும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும். கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கவும் துணை புரியும்.

    கேழ்வரகு:- தானியங்களில் அதிக சத்து கொண்டது கேழ்வரகு. இதனை ராகி என்றும் அழைப்பார்கள். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகளும் கேழ்வரகால் செய்த பலகாரங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டு தயாரிக்கப்படும் ராகி மால்ட் பலதரப்பினரும் விரும்பி ருசிக்கும் பானம்.

    பார்லி:- குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோய் பாதிப்புக்கு ஆளானவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி பருகலாம். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்க உதவும். உடல் வறட்சியை போக்கவும் செய்யும். காய்ச்சல் வராமல் தடுக்கும். மலச்சிக்கல் பாதிப்புக்கு ஆளானவர்கள் பார்லியை சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
    பேபி கார்னில் குறைவான கலோரி உள்ளது மற்றும் கொழுப்பு என்பது சுத்தமாக இல்லை. பேபி கார்னில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
    தேவையான பொருட்கள் :

    பேபி கார்ன் - 10
    மைசூர் பருப்பு - அரை கப்
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - 2
    பட்டை - சிறு துண்டு
    இலவங்கம் - 2
    எலுமிச்சம்பழச்சாறு - 1 ஸ்பூன்
    கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    வெண்ணெய் - 2 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    செய்முறை :

    பேபி கார்னை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்

    கடாயில் வெண்ணெய் போட்டு பட்டை, இலவங்கம் தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி அதனுடன் பேபி கார்னையும் சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் சேர்ந்து நன்கு வதங்கியதும் வெந்த பருப்பையும், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி மிளகு தூள், எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

    சுவையான சத்தான பேபி கார்ன் சூப் ரெடி.
    அணியும் ஆடைகளுக்கேற்ற வகையில் பிராவை தேர்வு செய்வது முக்கியமானது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டீ-ஷர்ட் என ஆடைகளுக்கு தகுத்த பிராக்கள் சந்தையில் கிடைக்கின்றன.
    விதவிதமான ஆடைகள் அணிவதில் கவனம் செலுத்தும் பல பெண்கள் உள்ளாடைகளில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. அதிலும் பெண்களின் மார்பகங்களை பராமரிக்க உதவும் பிராவை தேர்ந்தெடுப்பதில் பலருக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது. 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு பொருத்தமில்லாத பிராவையே அணிகின்றனர் என ஆடை வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். தவறான அளவுள்ள பிரா அணிவதால் தோள்பட்டை, மார்பு, கழுத்து, முதுகெலும்பு போன்றவற்றில் வலி ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

    பொருத்தமான பிராவை தேர்ந்தெடுப்பதற்கான சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

    * பிராவின் அண்டர்பேண்ட், விலா எலும்பை சுற்ற உறுதியாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

    * தோள்பட்டை ஸ்ட்ராப் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. அவை உங்கள் தோள்களில் அழுத்தத்திற்கான அடையாளத்தை பதிக்கக்கூடாது.

    * மார்பகங்களை தாங்குவதில் 80 சதவீத ஆதரவு அண்டர்பேண்டிலிருந்து வர வேண்டும். 20 சதவீத ஆதரவு ஸ்ட்ராப்பிலிருந்து வர வேண்டும். பிரா ஸ்ட்ராப்கள் மிகவும் இறுக்கமாக இருந்தால் தோள்பட்டை, முதுகெலும்பு போன்றவற்றில் வலியை ஏற்படுத்தக்கூடும்.

    * மார்பகங்கள், பிராவில் இரண்டு பக்கங்களிலும் முழுவதுமாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கப் அளவு மிகவும் இறுக்கமாக இருந்தால் மார்பக தசைகள் பக்கவாட்டில் வெளிப்படக்கூடும்.

    * உட்காரும் போதும், நடக்கும்போதும், நிற்கும் போதும், சரியான தோரணையை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கலாம்.

    * அணியும் ஆடைகளுக்கேற்ற வகையில் பிராவை தேர்வு செய்வது முக்கியமானது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டீ-ஷர்ட் என ஆடைகளுக்கு தகுத்த பிராக்கள் சந்தையில் கிடைக்கின்றன.

    * பெண்களின் தேவைகளுக்கேற்ப சரியான பிராக்களை தேர்ந்தெடுப்பதும் அவசியமானது. விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்ற வகையில், ஸ்போர்ட்ஸ் பிராக்களை அணிய வேண்டும். தளர்ந்த மார்பகங்களை உடைய பெண்களுக்கு சரியாக பொருந்தும் வகையில் அண்டர் ஒயர் பிராக்கள் அமையும். இதன் மூலம் மார்பகங்கள் மேலும் தளராமல் பார்த்துக்கொள்ளலாம். பாலூட்டும் பெண்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பு பிராக்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால் பாலூட்டும் போது சிரமமில்லாமல் கையாளலாம்.
    விரும்பிய வண்ணம் நீளமாக நகம் வளர்ப்பது சாத்தியமானதுதான். ஒருசில எளிமையான வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அவை என்னவென்று பார்ப்போமா?
    நகங்கள் கைகளை அழகாகக் காண்பிக்கக்கூடியவை. பெரும்பாலான பெண்கள் நீண்ட, வலுவான நகங்கள் தங்கள் கைகளை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி நகங்கள் வளர்க்க ஆசைப்பட்டாலும் அது சாத்தியமாவதில்லை. ஆசை ஆசையாய் வளர்க்கும் நகங்கள் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ உடைந்துபோய்விடுவதை பார்த்து வேதனை அடைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். விரும்பிய வண்ணம் நீளமாக நகம் வளர்ப்பது சாத்தியமானதுதான். ஒருசில எளிமையான வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அவை என்னவென்று பார்ப்போமா?

    உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மட்டுமல்ல நகங்களின் வளர்ச்சிக்கும் உதவும். இளநீர், பழ ஜூஸ்கள் உள்ளிட்ட திரவ உணவுகளை உட்கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைக்க முடியாத சூழலில் நகங்களுக்கு ஈரப்பதமூட்டும் கிரீம்களை உபயோகிக்கலாம்.

    நகங்கள் எளிதில் உடையக்கூடிய வகையில் பலவீனமாக இருந்தால் புரதம் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டியிருக்கும். நீண்ட மற்றும் வலிமையான நகங்களை பெறுவதற்கு போதுமான அளவு புரதச்சத்துள்ள உணவை உட்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காலை உணவில் முட்டை மற்றும் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.

    நகங்களின் அடி விளிம்பு பகுதியில் அமைந்துள்ள தோல் அடுக்கான கியூடிக்கிள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமானது. ஆணி படுக்கை என்று அழைக்கப்படும் இது நகங்களின் வேர் பகுதியில் இருந்து வளரும் புதிய நக அடுக்கை பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். கியூட்டிக்கிள் பகுதியை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கு கியூட்டிக்கிள் ஆயில் உபயோகிக்கலாம். அது நகம் உடைவதை தடுக்கும். எனினும் இதனை அதிகம் உபயோகிக்கக்கூடாது.

    நகங்களை வட்ட வடிவில் வளர்ப்பதே சிறப்பானது. மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில் வட்ட வடிவ நகங்கள்தான் எளிதில் உடைந்து போகாது. மேலும் நகங்களை நீளமாக வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும். ஒருவேளை உடையக்கூடிய நகங்களாக இருந்தால் அவற்றை அடிக்கடி வெட்டி ஒழுங்குபடுத்தி வரலாம். அப்படி வெட்டி ஒழுங்கமைப்பது நகங்கள் வலுவாக வளர்வதற்கு உதவும்.

    நகங்களுக்கு அடிக்கடி விதவிதமான வண்ணங்களில் நெயில் பாலிஷ் செய்ய விரும்புபவர்கள் ரசாயனம் கலக்காத இயற்கை நெயில் பாலீஷ் ரிமூவர்களை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் நகங்களில் இருந்து நெயில் பாலீஷை எளிதாக அகற்றுவதற்கு ஏதுவாக நெயில் பாலிஷ் ரிமூவரில் கலக்கப்படும் அசிட்டோன் என்னும் ரசாயனம் நகங்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நகங்களின் வளர்ச்சியையும் தடுக்கும். குறிப்பாக நகங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அசிட்டோன் அகற்றிவிடும்.
    பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும். சில குணங்களும் உடல் மொழியும் அவர்கள் பொய் கூறுகிறார்களா என்பதை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடும்.
    பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதன் மீது ஒரு கண் வைக்க வேண்டும். அப்படி பொய் சொல்கிறார்கள் என ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால், இந்த தீய பழக்கத்தை சுலபமாக மாற்றி விடும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் வளர்க்க மற்ற விஷயங்களில் தேவைப்படும் பொறுமை இதற்கும் தேவைப்படும். உங்கள் குழந்தை பொய் பேசுகிறார்களா என்பதை கண்டறிய அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழக வேண்டும்.

    ஆனால் இது ஒன்றே இதனை தீர்ப்பதற்கான வழியல்ல. சில தாய்மார்களுக்கு சரியாக இருக்கும் இந்த முறை சிலருக்கு சரியாக அமைவதில்லை. குழந்தைகள் சந்திக்கும் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் பல பல. அதனால் இதற்கான தீர்வுகளும் ஒன்றாக இருப்பதில்லை. அதனை புரிந்து கொண்டு அதற்கேற்ப நீங்கள் செயல்பட வேண்டும். பொய் சொல்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள, இதோ உங்களுக்காக சில வழிகள். சில குணங்களும் உடல் மொழியும் அவர்கள் பொய் கூறுகிறார்களா என்பதை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடும்.

    கண் தொடர்பு

    உங்கள் குழந்தை பொய் சொன்னால், கண் தொடர்பை அவர்கள் தவிர்ப்பார்கள். இது அவர்கள் பொய் பேச தொடங்கும் ஆரம்ப நிலையாகும். ஆனால் அவர்கள் வளர வளர இதனை சமாளிக்க அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அதன் பின் எந்த ஒரு பயமும் இல்லாமல் உங்கள் கண்களை பார்த்தே அவர்கள் பொய் கூற ஆரம்பித்து விடுவார்கள். ஆரம்ப கட்டத்திலேயே இதனை கண்டு பிடித்து விட்டால் இதனை தவிர்த்து விடலாம். பொய் சொல்வது தவறு என்பதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அதே போல் அவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
    சொன்னதையே சொல்லுதல் மற்றும் முகத்தை தொடுதல்

    உடல் மொழியை வைத்தும் கூட பொய் சொல்லுபவர்களை கண்டு கொள்ளலாம். சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அவர்கள் மேல் தாராளமாக சந்தேகிக்கலாம். அதே போல் முகத்தை அரித்து கொள்ளுதல், மூக்கு அல்லது தலையை தொடுதல் ஆகியவைகளும் கூட அவர்கள் பொய் சொல்வதற்கான அறிகுறிகளாகும்.

    முரண்பாடுகள்

    அவர்கள் கூறும் கதைகளில் முரண்பாடுகள் இருந்து, சொன்னதையே திரும்பி திரும்பி சொல்வதை போன்ற உணர்வை நீங்கள் அடைந்தால், கண்டிப்பாக அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். உண்மையை ஒத்துக் கொள்ள உங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் நீங்கள் திடமாக இருந்து, இந்த தீய பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்க முயற்சிக்க வேண்டும்.

    தற்காப்பு எதிர்வினைகள்

    குழந்தைகள் பொய் சொல்லும் போது அதனை நீங்கள் நம்பவில்லை என்பதை அவர்கள் அறிந்தால், இதனை நீங்கள் சாதாரணமாக கவனிக்கலாம். பெற்றோர்கள் எது செய்தாலும் தவறு என எதற்கெடுத்தாலும் சண்டை போடும் விடலை வயதுடையவர்களிடம் இதனை பொதுவாக காணலாம். அன்பும் பாசமும் எப்போதுமே அவர்களை நம் வசமாக்கி விடும். காலப்போக்கில் அவர்களிடம் மாற்றத்தையும் காணலாம்.

    பதற்றம் மற்றும் குழப்பம்

    பொய் சொல்லும் போது குழந்தைகளிடம் காணப்படும் மற்றொரு குணமிது. ஏதாவது கதை கூறும் போது அவர்கள் பதற்றத்துடன் அல்லது நெளிந்து கொண்டே கூறினால், உங்களிடம் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அதே போல் உங்கள் குழந்தை அதிகமாக பேசாமல் கமுக்கமாக இருந்தாலும் ஏதோ பொய் சொல்வதற்கான அறிகுறியே.
    நடன சிகிச்சை அதாவது டான்ஸ் தெரபி மேற்கொண்ட பிறகு உடல் சமநிலை, நடை, உடல் வலிமை என ஒட்டுமொத்த உடல் செயல்திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    மாதவிடாய் நின்ற பிறகு, எடை அதிகரிப்பு, ஒட்டுமொத்தமாக உடலில் கொழுப்பு அதிகரிப்பு, வளர்சிதை மாற்றக் கோளாறு போன்ற பிரச்சினைகளை பெண்கள்

    அனுபவிக்க வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் இறுதியில் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. நடனம் ஆடுவதன் மூலம் கொழுப்பு

    அளவை திறம்பட குறைக்கலாம். உடல் அமைப்பை மேம்படுத்தலாம் என்று புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

    பெண்கள் பெரும்பாலும் குறைந்த உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மாதவிடாய் நின்ற பிறகு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை

    எதிர்கொள்கிறார்கள். மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள். இந்த நிலையில் மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை

    எதிர்கொள்ளும் பெண்களின் உடல் அமைப்பு, சுய மரியாதை உணர்வு, வளர்சிதை மாற்றம், உடற்பயிற்சி போன்றவற்றுடன் நடன பயிற்சியை ஒப்பிட்டு ஆய்வு

    மேற்கொள்ளப்பட்டது.

    வாரத்திற்கு மூன்று நாட்கள் நடன பயிற்சி மேற்கொள்ளுமாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பெண்களிடம் அறிவுறுத்தப்பட்டது. நடன சிகிச்சை அதாவது டான்ஸ்

    தெரபி மேற்கொண்ட பிறகு உடல் சமநிலை, நடை, உடல் வலிமை என ஒட்டுமொத்த உடல் செயல்திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது ஆய்வில்

    தெரியவந்துள்ளது.

    "இந்த ஆய்வு வாரத்திற்கு மூன்று முறை நடனம் போன்ற எளிமையான செயல்முறையை எடுத்துக்காட்டுகிறது. நடன பயிற்சி மாதவிடாய் நின்ற பெண்களின்

    உடற்தகுதி, உருவத்தை மாற்றுகிறது’’ என்பது ஆய்வு குழுவினரின் கருத்தாக இருக்கிறது.
    குடும்பத்தினருடன் எவ்வளவு அன்பாக பழகுகிறார், எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கிறார் என்பதை வைத்தே அவருடைய சுபாவத்தை மதிப்பீடு செய்துவிடலாம்.
    ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களது வருங்கால கணவரைப் பற்றி நிறைய கனவுகள் இருக்கும். தனது துணைவர் அழகானவராகவும், வசதி படைத்தவராகவும் இருக்க வேண்டும் என்பதை விட நல்ல குணம் படைத்தவராக இருக்க வேண்டும் என்பதே இன்றைய தலைமுறை இளம் பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒரு ஆண் பார்ப்பதற்கு ஒழுக்கமானவராக இருக்கலாம். ஆனால் அவருடைய குணத்தை பார்த்த உடனேயே மதிப்பிட்டு விட முடியாது. அதனால் தன்னுடைய எதிர்கால கணவர் எப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியமானது. எதிர்கால துணையை தேர்ந்தெடுக்கும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    * திருமணத்திற்கு முன்பு ஆண்களுக்கு ஒருசில குடும்ப கடமைகள் இருக்கும். அதனையெல்லாம் நிறைவேற்றிவைத்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மன நிலையில் இருப்பார்கள். குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் கடமைகளை நிவர்த்தி செய்துவிட்டு திருமணத்திற்கு தயாராகிவிடுவார்கள். ஒருசிலர் குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கலாம். அப்படி கட்டாயத்தின் காரணமாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தால் அவரை விட்டு விலகுவது நல்லது. திருமணம் என்பது இரு மனங்கள் உணர்வுப்பூர்வமாக சங்கமிக்கும் பந்தமாகும். அதன் புனிதம் காக்கப்பட வேண்டும். அதனை அறிந்தவராக துணைவர் இருப்பது அவசியம்.

    * திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை முறை வேறு. திருமணத்திற்கு பிறகு பொறுப்புள்ள குடும்ப தலைவனாக மாற வேண்டியிருக்கும். அவரின் பேச்சில் அதன் தாக்கம் பிரதிபலிக்க வேண்டும். அதைவிடுத்து திருமண பந்தம், குடும்ப கட்டமைப்பு மீது ஈர்ப்பு இல்லாதவராக இருந்தால் அவரை தேர்ந்தெடுப்பதை தவிர்த்துவிடுவது நல்லது.

    * இரக்கம், கருணை, நேர்மை, நம்பகத்தன்மை, கடின உழைப்பு, அமைதியான சுபாவம் உள்ளிட்ட அறநெறிகளை கடைப்பிடிக்கும் நபராக இருக்கிறாரா? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இவைதான் குடும்ப பந்தத்தில் ஒருவரை நிலைநிறுத்தும் முக்கிய குணாதிசயங்கள். இந்த வழக்கங்களை கடைப்பிடிப்பவர்கள் நல்லது எது? கெட்டது எது? என்பதை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். கெட்ட பழக்கவழக்கங்களை கொண்டிருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை முழுமையாக நம்பலாம். அவருக்கு குடும்ப தலைவராகும் தகுதி உண்டு. உங்கள் மனம் கவர்ந்த அன்பான நபராகவும் இருப்பார்.

    * குடும்பத்துக்கும், அவருக்கும் இடையேயான நெருக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதும் அவசியமானது. குடும்பத்தினருடன் எவ்வளவு அன்பாக பழகுகிறார், எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கிறார் என்பதை வைத்தே அவருடைய சுபாவத்தை மதிப்பீடு செய்துவிடலாம். ஒரு சிலர் குடும்பத்தினருடன் அவ்வளவாக பழகமாட்டார்கள். குடும்பத்தினர் மீது பாசம் கொண்டிருந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள். அவர்களுடைய சுபாவம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது அவசியமானது. நல்ல வாழ்க்கை துணையை கண்டறிவது எளிதான காரியம் கிடையாது. சற்று சிரமப்பட்டுத்தான் ஆக வேண்டும். குடும்பத்துடன் அன்பாகவும், பாசமாகவும் இருந்தால் உங்கள் மீதும் பாசமாகத்தான் இருப்பார். ஒருசில குணங்களை கண்டறிந்து விட்டாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

    * வருங்கால கணவரிடம் தன்னலமின்மை, உண்மையாக இருத்தல், உங்கள் நலனில் அக்கறை கொண்டிருத்தல் போன்ற குணாதிசயங்களையும் எதிர்பார்க்கலாம். அப்படிப்பட்ட கணவர் அமைந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

    *உறவில் உறுதியாக இருப்பது மிகவும் முக்கியமான குணமாக கருதப்படுகிறது. எத்தகைய சூழ்நிலையிலும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்வாவரா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர் குடும்பத்துடன் எத்தகைய உறவை பேணுகிறார் என்பதை ஆராய்ந்து பாருங்கள். அதுவே அவருடைய குணத்தை அடையாளம் காட்டிவிடும்.
    ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
    தேவையான பொருள்கள்:

    ஆரஞ்சு பழம் -2
    பருப்பு தண்ணீர் - 2 கப்
    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
    ப.மிளகாய் -2
    கொத்தமல்லி - சிறிதளவு
    பெருங்காயம், மஞ்சள் தூள் - தாளிக்க
    மிளகு சீரகம் - 1 ஸ்பூன் (பொடித்தது)
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆரஞ்சு பழ சுளைகளை உரித்து 4 சுளைகளை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதியை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.

    பருப்பு தண்ணீருடன் கொத்தமல்லி, ஆரஞ்சு சுளைகள், ப.மிளகாய், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
     
    சிறிது நேரம் கழித்து தீயை குறைத்து ஆரஞ்சு சாறை விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து செய்து வைத்துள்ள ரசத்தில் கொட்டவும்

    சூப்பரான ஆரஞ்சு ரசம் ரெடி.

    ×