என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து அதிகாரிகள், அறங்காவலர்கள், ஊழியர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக நேற்று எடுத்து சென்றனர்.
    சக்தி தலங்களில் மிகவும் புகழ் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். சமயபுரம் மாரியம்மன் தன்னை நாடிவருவோர் மட்டுமின்றி மண்ணுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்கவும், உலக நன்மைக்காகவும், அனைத்து மக்களும் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டுள்ளார்.

    பச்சை பட்டினி விரதத்தின் போது கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இதனால் அம்மன் உடல் உஷ்ணத்தில் கொதிப்பதை கட்டுப்படுத்தவே பூச்சொரிதல் விழாவின் போது பல்வேறு வகையிலான மலர்களை கொண்டு அம்மன் சிலை உள்ள கருவறை முழுவதும் நிரப்பி வைக்கப்படும்.

    இந்த பூச்சொரிதல் விழாவின் போது திருச்சி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவர்.

    இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊழியர்கள் சார்பில் நேற்று காலை கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து பூத்தட்டுகளை தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பூத்தட்டுகளை கையில் சுமந்து தெற்குவாசல் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கிருந்து 25-க்கும் மேற்பட்ட பூத்தட்டுகளை சமயபுரம் கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
    பண்ணாரி அம்மன் கோவிலில் எளிய முறையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    பண்ணாரியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் விழா நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக குண்டம் விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் குண்டம் விழா நடைபெறுமா? என்று பக்தர்களிடையே கவலை ஏற்பட்டது.

    இந்தநிலையில் குண்டம் விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

    இந்த கூட்டத்தில், குண்டத்தில் பூசாரி மட்டுமே இறங்க வேண்டும். அதன்பிறகு குண்டத்தை மூடிவிடவேண்டும். குண்டத்தில் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சிறப்பு பஸ்கள் இயங்காது உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூச்சாட்டு விழா மிக எளிமையாக நடைபெற்றது. வழக்கமாக பூச்சாட்டு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு நடந்த பூச்சாட்டு விழாவில் காளி திம்பத்தில் உள்ள 20 பேர் மட்டுமே பங்கேற்றார்கள்.

    இதையொட்டி கோவிலில் பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து குண்டம் விழா நடத்த அம்மனிடம் பூ வைத்து உத்தரவு கேட்கப்பட்டது. உத்தரவு கிடைத்ததால் குண்டம் விழாவை எளிமையாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 22-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்துக்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    நேற்று முன்தினம் இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கென நேற்று அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து தனுர் லக்னத்தில் அதிகாலை 2.30 மணியளவில் பிரியாவிடையுடன் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் எழுந்தருளிய சிறிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து நிலையில் சேர்த்தனர். பின்னர் காலை 8.05 மணிக்கு சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

    மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் காலை 9.20 மணிக்கு மேல் உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது. பின்னர் காலை 9.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    அம்மன் தேர் மதியம் 2 மணிக்கு சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார். மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் மதியம் 2.15 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு மதியம் 2.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் மதியம் 3.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தின் போது மேளதாளம், சங்குநாதம், அதிர்வேட்டுகள் முழங்க “சிவ...சிவ...”, “ஓம் சக்தி” என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தலைமையிலான கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.

    அதைத்தொடர்ந்து எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதற்காக காலை நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பூமாலை சடங்கு, வில்லுப்பாட்டு, உச்சிகால பூஜை, பஜனை, தீபாராதனை ஆகியவை நடந்தது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்்கள் கடலில் குளித்து விட்டு, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மண்டைக்காடுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இன்று (புதன்கிழமை) மீன பரணி கொடை விழா நடக்கிறது. விழாவில் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பூமாலை, குத்தியோட்டம், பஜனை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகா பூஜையும் நடக்கிறது.
    புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
    யோகினி என்றால் யார்? இவர்கள், அம்பிகையான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் தேவதைகள் ஆவர்.

    முன்னொரு காலத்தில் மகிஷாசுரன், அரக்கர்களுக்கே உரிய கொடூரத்துடன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியை வேண்டி தங்களைக் காத்தருளும்படி வேண்டினர்.

    ஆதிசக்தியும் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய உடலிலிருந்து துர்க்கை என்னும் சக்தியைத் தோற்றுவித்தார். இந்த துர்க்கை தன் உடலிலிருந்து எட்டு சக்தியரைத் தோற்றுவித்தாள். அவர்களே யோகினிகள் ஆவர்.

    இப்படித் தோன்றிய ஒவ்வொரு யோகினியும் எட்டு எட்டு யோகினிகளாகப் பிரிந்தனர். இந்த 64 யோகினிகளும் மகிஷாசுரவதத்துக்கு உதவி செய்து மகிஷாசுரனின் சகோதரர்கள், கம்பன், நிசும்பன் மற்றும் அரக்கர் சேனை அழிவுக்குக் காரணமாய் இருந்தார்கள்.

    இவர்கள் மிகவும் அதீதமான சக்தி படைத்தவர்கள். இவர்களை வழிபடுவதன் மூலம் மனிதர்களுக்கு அபாரமான சித்திகள் கிடைத்தன என்று புராணங்கள் விவரிக்கின்றன.

    இந்த யோகினி விரத வழிபாட்டை, தாந்த்ரீக வழிபாடு என்று குறிப்பிடுவார்கள். இதில் அதிகமாக பெண்களே ஈடுபட்டனர். புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து ஆண்களும் பெண்களும், இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இந்த யோகினி வழிபாடு வட இந்தியாவிலும், புத்த மதம் அதிகமாக பரவிய திபெத், சீனா, ஜப்பான், பர்மாவிலும் (இன்றைய மியான்மர்) காணப்பட்டது. இந்த 64 யோகினிகளுக்கும் வட இந்தியாவில் தனித்தனியாக கோவில்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    விருத்தாசலம் சந்தை தோப்பில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் இரவில் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்தும், 60 அடி அலகு குத்தியும், விமான அலகில் வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடந்து தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று(புதன்கிழமை) திருவிளக்கு பூஜையும், அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் ராஜா, பாலசுப்பிரமணியன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 3-வது நாளான நேற்று தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் படி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். அதன்படி, மாசி மாத பூஜைக்காக கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 5 நாட்கள் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17-ந் தேதி நடை அடைக்கப்பட்டது.

    இந்த நிலையில், பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாத பூஜையை முன்னிட்டு 18-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 3-வது நாளான நேற்று தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் படி பூஜை நடைபெற்றது.

    மாத பூஜையின் தொடர்ச்சியாக 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது. அன்று காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும். 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். அத்துடன் இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

    சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 14-ந் தேதி விஷு பண்டிகை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். மாத பூஜைக்கு பின் ஏப்ரல் 18-ந் தேதி இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.
    ஸ்ரீமுஷ்ணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம் சந்தைத்தோப்பில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. மேலும் மயானக்கொள்ளை, இருள்முக உற்சவம், பஞ்சமுக உற்சவம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது.

    இதையொட்டி காலை 5 மணிக்கு தாண்டவராயசாமிக்கும், அங்காளபரமேஸ்வரிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதையடுத்து 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம் பிளாஞ்சேரி கைலாசநாதர் ஆலயமாகும்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தி்ல் இருந்து வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிளாஞ்சேரி. இங்கு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டு இருக்கிறார் அருள்மிகு கைலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிகொண்டிருக்கிறாள்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பழமையான சிவாலயம் பிளாஞ்சேரி கைலாசநாதர் திருக்கோவில். இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.

    அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இதுவாகும். அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை ஆறு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!

    இந்த கோவிலில் பவுர்ணமிதோறும் மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம் அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பெருவிழா, கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் இரவு சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    தொடர்ந்து மறுநாள் காலை மயானக்கொள்ளை உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 14-ந்தேதி காலை தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடந்தது.

    நேற்று முன்தினம் காலை தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. 5-ம் நாள் விழாவாக நேற்று, தீ மிதி திருவிழா நடந்தது. இதைமுன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பிற்பகல் 1 மணிக்கு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று, பல்லக்கில் அக்னி குளத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு அம்மனுக்கு கையில் வேப்பிலை மற்றும் தீச்சட்டி ஏந்தியவாறு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு முக்கிய வீதிகள் வழியாக பம்பை மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து 4.45 மணிக்கு அக்னி குண்டம் முன்பு எழுந்தருளினார்.

    அங்கு அம்மனுக்கும், பூக்குழிக்கும் தலைமை பூசாரி பரமகுரு தீபாராதனை காண்பித்தார். அதை தொடர்ந்து, அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் ஒவ்வொருவராக பூக்குழிக்குள் இறங்கி தீ மிதித்தனர். மேலும் பக்தர்கள் சிலர் முதுகில் அலகு குத்தி லாரியை இழுத்தும், அதன் மீது தொங்கியவாறு, பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    விழாவில் 6-ம் நாள் திருவிழாவான இன்று (புதன் கிழமை) காலை தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து நாளை(வியாழக்கிழமை) சிகர திருவிழாவான தேரோட்டம் நடைபெற உள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடைபெற்றுவரும் சிவராத்திரி விழாவின் 11-வது நாளில் கேடிக வாகனங்களில் சாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.
    ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 11-வது நாளான நேற்று காலை கேடிக வாகனங்களில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    அதைத் தொடர்ந்து ஜெல விநாயகர் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் வசந்த உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மகாசிவராத்திரி நிறைவு விழாவாக கருதும் கொடி இறக்குதல் நிகழ்ச்சி கோவிலில் நடை பெறுவதையொட்டி வசந்த மண்டபத்தில் தீர்த்தவாரி வசந்த உற்சவம் நடந்தது.

    இதற்காக வசந்த மண்டபத்தில் சுவாமி, அம்பாள் உற்சவ மூர்த்திகளை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜூ தம்பதியினர் உள்பட ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி மற்றும் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் கோவில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு கலச பூஜை செய்து, கலசத்தில் உள்ள புனித நீரால் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து பால், பன்னீர், தயிர், சந்தனம், மஞ்சள் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்த பின்னர் திரிசூலம் ஸ்நானம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நெய் வேத்தியங்கள் சமர்ப்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமார் 20 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பெரிய புற்றே அம்மனாக வணங்கப்படுகிறது. இங்கு பகவதி அம்மன் வடக்கு முகமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அதாவது தெற்கில் கடலும், கிழக்கு மற்றும் மேற்கில் ஏராளமான தென்னை, பலா மரங்களும் உள்ளன. இங்கு பகவதி அம்மன் வடக்கு முகமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுமார் 20 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பெரிய புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது.

    புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர் சன்னதியும் உள்ளது.

    புற்று உடைந்து ரத்தம் வெளியேறியது

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்போது பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடுவார்கள். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது பட்டது. புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அதில் ஒருவர் சாமி ஆடினார்.

    அப்போது இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் புற்றில் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசப்பட்டது. உடனே ரத்தம் வருவது நின்றது. தொடர்ந்து சோழி ஜோதிடம் பார்ப்பவர்களை அழைத்து பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது சாமி ஆடியவர் கூறிய அனைத்தும் உண்மை என்றும், புற்றில் தோன்றியது அம்மன்தான் என்றும் பிரசன்னம் பார்த்தவர்கள் கூறியதாக கோவில் தொடர்பான புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது.

    பக்தர்களின் நம்பிக்கை

    குமரி மற்றும் கேரள மக்கள் பகவதி அம்மனை, தொடக்கத்தில் காளி தேவியாக வழிபட்டனர். நாளடைவில் கேரள மக்கள் வழக்கப்படி பகவதி அம்மனாக வழிபடுகின்றனர். அப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியமாக அளித்தால் தலைநோய் குணமாகும். 27 நெய் தீபம் ஏற்றி அம்மன் சன்னதியை வலம் வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கழுத்துக்கு மேல் நோய்வாய்ப்பட்டவர்கள் அம்மனுக்கு மண்டையப்பமும், அம்மை நோய் வந்தவர்கள் முத்தப்பமும் படைத்து வழிபடுகின்றனர். எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.

    கோவிலில் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனை மகிழ்விக்கும் சடங்கு ஒன்று செய்யப்படும். அதாவது மல்லி பூ, கனகாம்பரம் உள்ளிட்ட அனைத்து வகையான மலர்கள், மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை உள்பட அனைத்து விதமான பழங்கள், அடை மாவில் செய்த பலகாரங்கள், வடை, அப்பம் முதலானவற்றை செய்து கொண்டுபோய் கோவில் நடையில் வைக்கிறார்கள். இது தேவர்களை மகிழ்விக்கும் சடங்கு என்றும், அம்மனின் பரிவாரங்களை மகிழ்விப்பதற்காக செய்யப்படும் சடங்கு என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    அரசின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்த பிறகு கோவிலின் ஓலைகூரை ஓடாக மாறியுள்ளது. கோவில் பரப்பளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் வடக்கு பக்கம் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் மேடை, பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    பொங்கல் வழிபாடு

    கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பானது மாசி கொடை விழாவில் பொங்கலிடுவதுதான். லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடுவர். இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பக்தர்கள் கூட்டம் கோவிலில் நிரம்பி வழியும். வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி கொடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ம் நாள் வலிய படுக்கையும், அதன் பின்னர் மஹா ஒடுக்கு பூஜையும் நடைபெறும். இதுதவிர ஆவணி அஸ்வதி பொங்கல், தங்கதேர் பவனி, பங்குனி மாதத்தில் பரணி கொடை விழா நடக்கிறது. மேலும் பரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்றும் வலிய படுக்கை நிகழ்ச்சி நடக்கின்றது.
    ×