என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கத்தேர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சிறப்பு தீபாராதனை பூஜைக்கு பின்னர் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் முதன் முதலாக தங்கத் தேர் இழுக்கப்பட்டது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்த கோவில் அலுவலகத்தில் ரூ.2000 செலுத்தி தங்கத்தேரை 3-ம் பிரகாரத்தை சுற்றி இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    மேலும் ராமேசுவரம் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கத்தேர் முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் தங்கத் தேரை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பலமுறை சுட்டிக்காட்டப்பட்டது.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் தங்கத்தேர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதற்காக நேற்று தங்கத்தேர் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு 3-ம் பிரகாரத்தின் மைய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்கத்தேரில் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜைக்கு பின்னர் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் முதன் முதலாக நேற்று தங்கத் தேர் இழுக்கப்பட்டது.

    பிரகாரத்தின் மையப் பகுதியில் இருந்து இழுக்கப்பட்ட தங்கத்தேர் 3-ம் பிரகாரத்தை சுற்றி வந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்தது. தங்க தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் உள்ளிட்ட திருக்கோவில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பயன்பாட்டிற்கு வந்திருப்பது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது. தங்கதேர் இழுப்பதற்கு ரூ. 2000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    திருச்சி மகாமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க யானை மீது வைத்தபடியும், தலையில் சுமந்தபடியும், திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
    திருச்சி கம்பரசம்பேட்டை, பெரியார்நகரில் உள்ள மகாமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றில் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து மேளதாளங்கள் முழங்க யானை மீது வைத்தபடியும், தலையில் சுமந்தபடியும், திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்தனர். அதனைத்தொடர்ந்து இரவு கரகம் வீதி உலா சென்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து இருந்தனர்.
    கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை விழா இன்று நடக்கிறது. கோவில் நிர்வாகத்தினர் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கும், தூக்கக்காரர்களுக்கும் விதித்து உள்ளனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று, கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில். இங்கு தூக்கத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான தூக்கத்திருவிழா கடந்த 9-ந்தேதி தேவஸ்தான தந்திரி கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான வரலாற்று சிறப்பு மிக்க தூக்க நேர்ச்சை விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. 1,092 குழந்தைகளின் தூக்க நேர்ச்சைநடைபெறுகிறது. அதற்கு முன் தூக்கக்காரர்கள் குளித்து முடித்துவிட்டு கோவிலுக்கு வந்து கோவிலை சுற்றி முட்டுகுத்தி நமஸ்காரத்தில் ஈடுபடுகின்றனர்.

    அதனை தொடர்ந்து அம்மன்கள் இருவரும் கோவில் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் பச்சைபந்தலில் எழுந்தருளுகின்றனர். முதலில் 4 அம்மன் தூக்கம் நடக்கிறது. அதன்பிறகு 1,092 பச்சிளம் குழந்தைகளின் தூக்கக்காரர்கள் தூக்கவில்லில் குழந்தைகளை தூக்கி கோவிலை சுற்றி வலம் வந்து குழந்தைகளின் நேர்ச்சை கடனை முடித்து வைக்கின்றனர்.

    அதைத்தொடர்ந்து தூக்கக்காரர்கள் உடலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கச்சேரிநடையில் இருந்து ஊர்வலமாக திருவிழா நடைபெறும் கோவிலுக்கு வருகின்றனர். தூக்க நேர்ச்சை தொடர்ச்சியாக நடக்கிறது. கொரோனா காரணமாக கோவில் நிர்வாகத்தினர் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கும், தூக்கக்காரர்களுக்கும் விதித்து உள்ளனர். கோவில் வளாகத்திற்குள் வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்,

    கோவில் வளாகத்திற்குள் கூட்டமாக நிற்க கூடாது, கோவிலில் தரிசனம் முடித்த உடன் கோவிலை விட்டு வெளியேற வேண்டும், மேலும் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை கட்டாயம், மேலும் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தும் தூக்கக்காரர்கள் பாதுகாப்பாக தங்கி இருக்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
    எந்தெந்த கிழமையில் வரும் சிவராத்திரிகளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திங்கள்: சோம்பேறியாகத் திரியும் பிறவி எடுக்க மாட்டார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள்.கோவில் கட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கும்;

    செவ்வாய்: அரசாங்க வேலை கிடைக்கும்;சட்டமன்ற உறுப்பினர்,பாராளுமன்ற உறுப்பினர்,மாநில அரசின் மந்திரி அல்லது மத்திய அரசின் மந்திரி பதவி கிடைக்கும்;(இப்பிறவியில் இப்பதவிகளில் இருப்பவர்கள் கடந்த ஐந்து பிறவிகளாக தொடர்ந்து இந்தக் கிழமையில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தவர்களே!!!)

    புதன்: திருமாலை பார்த்த பலன் கிட்டும்;அதாவது,திருமால் சங்கு சக்கரத்துடன் சாம கானம் ஓத, காட்சி அளித்து ஆசி கொடுப்பார்;

    வியாழன்: குரு கிட்டுவார்;குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வாய்ப்பு கிட்டும்;சித்தர்கள் அனைவரும் ஆசி கூறுவார்கள்.

    வெள்ளி: ஆத்மவிசாரம் செய்வார்கள்;தான் யார் என்பதை உணர வெள்ளிக்கிழமைகளில் வரும் சிவராத்திரியன்று பூஜை+விரதம் இருக்க வேண்டும்;
    வெள்ளிக்கிழமையும் சிவராத்திரியும் வரும் இரவில் தனியாக அண்ணாமலை கிரிவலம் வந்தால் ஆத்மவிசாரம்(நான் யார்? என்பதற்கான விடை) கிட்டும்;

    சனி: சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்; சனிக்கிழமையன்று வரும் சிவராத்திரி விரதம்+பூஜை செய்தால் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனியால் வரும் துயரம் சிறிதும் வராது;நெருங்காது;

    ஞாயிறு: சூரியதேவனாகப் பிறக்கலாம்;சூரியப் பதவி கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான அதிசயம்
    ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவம் திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்றைய தினம் இரவு சூரிய பிரபை வாகனத்தில் சாமி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். விழாவையொட்டி தினமும் சிம்மவாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், ஹம்ச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருட சேவை நிகழ்ச்சி 23-ந் தேதியும், 28-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழா வருகிற 31-ந் தேதி உற்சவ சாந்தியுடன் நிறைவு பெறுகின்றது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு, பேஸ்கார் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான 11 நாட்கள் பங்குனி திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேசுவரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில். இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற புலவர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் நடைபெற்றது இக்கோவிலின் சிறப்பாகும்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். கடந்த வருடம் கொரோனா தாக்குதலால் திருவிழா கோவிலுக்குள் மட்டும் நடைபெற்றது. இந்த ஆண்டு திருவிழா வருகிற 19-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ம் தேதி காலை 9.45 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியும், மறுநாள் 9-ம் திருவிழாவாக தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருப்புவனம் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது.
    குமரியின் குருவாயூர் ஆகவும், தங்கக் கொடிமரம் உடைய கோவிலாகவும் திகழும் பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு பூ பந்தல் வாகனத்தில் சுவாமி பவனி வருதல் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனியும், பக்தி பஜனையும், இன்னிசை கச்சேரியும், தோல்பாவைக்கூத்து, சமய சொற்பொழிவு போன்றவை நடைபெறுகிறது.

    23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7மணிக்கு கருடனுக்கு கண்திறந்து பெருமாள் காட்சி அருளும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. அன்று இரவு 9மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளலும் நடைபெறுகிறது. 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், .மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
    திருமால் அவதாரங்களில் முக்கியமான நரசிம்ம அவதாரத்திற்கு உகந்த மந்திரங்களை சொல்லி வந்தால் எங்கும் எதிலும் வெற்றி பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே நடத்துவார்கள்.
    தியான ஸ்லோகம்

    வாமங்கஸ்த ஸ்ரியாயுக்தம் சக்ர ஸங்காப்ஜத்ருக்கரம்
    பீதாம்பரம் ஸர்வபூஷம் ப்ரஸந்நம் ந்ருஹரிம் பஜே.

    மூலமந்திரம்

    ஓம் ஹ்ரீம் ஜய ஜய லக்ஷ்மீப்ரியாய நித்யப்ரமுதீதசேதஸே
    லக்ஷ்மீஸ்ரிதார்த தேஹாய க்ஷ்ரெளம் ஹ்ரீம் நமஹ.

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் பக்தர்கள் குறைவற்ற செல்வத்தை அடைவர். எங்கும் எதிலும் வெற்றி பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே
    நடத்துவார்கள்.
    திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி பங்குனி அஸ்வினி நட்சத்திரமான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து தீர்த்தவாரி நடைபெற்றது.
    மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமெய்ஞானத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி பங்குனி அஸ்வினி நட்சத்திரமான நேற்று காலை பிரம்மபுரீஸ்வருக்கு கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து தீர்த்தவாரி நடைபெற்றது.

    இந்த நாளில் இங்கு நீராடுவது சிறப்பாகும். எனவே ஏராளமானோர் கிணற்று தண்ணீரில் நீராடினர். இந்த நீர் காசிக்கு இணையாக புனித நீராக கருதப்படுகிறது. மேலும் பங்குனி அஸ்வினி நட்சத்திர நாளில் பிரம்மபுரீஸ்வரருக்கு இந்த நீரைக்கொண்டு தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டில் ஒரு நாள் மட்டுமே இந்த கிணற்றில் புனித நீராடுவதற்கு பொதுமக்களும், பக்தர்களுக்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதனையொட்டி பிரம்மபுரீஸ்வரருக்கு தீப வழிபாடும் பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடும் ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின்போது பக்தர்கள் முளைப்பாரி மற்றும் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்த விழா கடந்த 9-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக பால்குட திருவிழா இன்று நடைபெறுகிறது. முன்னதாக பால்குடம், அக்னிச்சட்டி, அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.

    முன்னதாக கடந்த 14-ந்தேதி விடுமுறை தினமாக இருந்ததால் ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் சில பக்தர்கள் அக்னி சட்டி, அலகு குத்துதல், பால்குடம் எடுத்து வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனும் செலுத்தினர். முத்தாலம்மன் கோவிலில் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அங்கிருந்து வந்து நகைக்கடை பஜார், கொப்புடையம்மன் கோவில் வீதி, 2-வது பீட் சாலை, செக்காலை சாலை வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று(புதன்கிழமை) நடைபெறும் பால்குட விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதையடுத்து கோவில் முன்பு பூக்குழி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார், உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கோவில் கணக்கர் அழகுபாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று (புதன்கிழமை) வண்டியோட்டம் (வெள்ளோட்டம்) நடக்கிறது. இதில் தூக்க ரதத்தில் இரண்டு பூசாரிகள் ஏற்றப்பட்டு கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வருவார்கள்.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் மீனபரணி தூக்க திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், அம்மன் எழுந்தருளுதல், தூக்கக்காரர்களின் நமஸ்காரம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் நடக்கிறது. இதையொட்டி முன்னோட்டமாக இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு வண்டியோட்டம் (வெள்ளோட்டம்) நடக்கிறது. இதில் தூக்க ரதத்தில் இரண்டு பூசாரிகள் ஏற்றப்பட்டு கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வருவார்கள்.

    இந்த நிகழ்வை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.
    இறைவன் நம் மீது காட்டும் மன்னிப்பும், இரக்கமும் நாம் அதை பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கே. ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அவருடைய நாஜி படை முகாமில் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு நண்பர்கள் இரு வேறுபட்ட மனநிலையில் இருந்தனர். அந்த இருவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகு பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்டனர்.

    அப்போது முதலாமவர் மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதற்கு காரணம், தன்னை கொடுமைப்படுத்தியவர்களை அவர் மன்னித்து விட்டார். அதனால் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. இரண்டாமவர், சோர்ந்து நோய்வாய்ப்பட்டு மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அவர், பகைவர்களை மன்னிக்கவில்லை.

    ‘மன்னிப்பு‘ என்ற மதிப்பீட்டிற்கு ‘உரு‘ கொடுத்தவர் இயேசு. இறைவன் நமக்குத்தரும் மன்னிப்பு அனுபவம் என்பது சுழற்சியானது. அவர் நமக்கு கொடுத்ததை நாமும் பிறருக்கு கொடுக்க வேண்டும். இந்த சுழற்சி நின்று விடும் போது மனிதநேயமும், பிறரன்பும் இல்லாமல் போய்விடும். நம்மில் பலர் உடலில், உள்ளத்தில், உறவுகளில் நோயாளிகளாக இருக்கின்றோம்.

    இந்த நோய்களுக்கு காரணிகளாக இருப்பது அறியாமை, பிடிவாதம், மனக்கசப்பு, பகை, வெறுப்பு, கோபம் ஆகியவையே. இதற்கு காரணமானவர்களை நாம் மன்னிக்கும் போது மன்னித்தவர்களை ஏற்று, அன்பு செய்து, அவர்களுக்கு உதவும்போது வானக தந்தையின் மக்களாக நாம் சான்று பகரமுடியும். (மத் 5:45)

    நண்பர்களையும், பகைவர்களையும் ஒரே விதமாக பார்க்கும் மனப்பக்குவம் மன்னிப்பின் முழுமையை காட்டுகிறது. மன்னிக்கும் போது மனதில் ஆற்றல் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மன்னிப்பு ஒரு அருமருந்து. நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்காத போது நம்மை இறைவன் மன்னிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? “பிதாவே, இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்“ (லூக் 23:34) என்றார் இயேசு.

    எனவே, பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். நாம் மாறினால் இந்த உலகமே மாற்றமடையும். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

    டி.செபாஸ்டின், வேதியர், புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல்.
    ×