search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீ மிதி விழாவில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    தீ மிதி விழாவில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களை படத்தில் காணலாம்.

    மேல்மலையனூர் கோவிலில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பெருவிழா, கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் இரவு சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    தொடர்ந்து மறுநாள் காலை மயானக்கொள்ளை உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 14-ந்தேதி காலை தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடந்தது.

    நேற்று முன்தினம் காலை தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. 5-ம் நாள் விழாவாக நேற்று, தீ மிதி திருவிழா நடந்தது. இதைமுன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பிற்பகல் 1 மணிக்கு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று, பல்லக்கில் அக்னி குளத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு அம்மனுக்கு கையில் வேப்பிலை மற்றும் தீச்சட்டி ஏந்தியவாறு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு முக்கிய வீதிகள் வழியாக பம்பை மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து 4.45 மணிக்கு அக்னி குண்டம் முன்பு எழுந்தருளினார்.

    அங்கு அம்மனுக்கும், பூக்குழிக்கும் தலைமை பூசாரி பரமகுரு தீபாராதனை காண்பித்தார். அதை தொடர்ந்து, அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் ஒவ்வொருவராக பூக்குழிக்குள் இறங்கி தீ மிதித்தனர். மேலும் பக்தர்கள் சிலர் முதுகில் அலகு குத்தி லாரியை இழுத்தும், அதன் மீது தொங்கியவாறு, பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    விழாவில் 6-ம் நாள் திருவிழாவான இன்று (புதன் கிழமை) காலை தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து நாளை(வியாழக்கிழமை) சிகர திருவிழாவான தேரோட்டம் நடைபெற உள்ளது.
    Next Story
    ×