என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கடந்த வார தொடர் விடுமுறையில், பழனி முருகன் கோவிலில் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.2 கோடி வருவாய் கிடைத்தது.
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி உலக புகழ்பெற்றது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இதேபோல் வாரவிடுமுறை, முகூர்த்தம், மாத கிருத்திகை உள்ளிட்ட நாட்களிலும் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக இருக்கும். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவர்.

    மேலும் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதேபோல் தரிசன டிக்கெட், ரோப்கார், மின்இழுவை ரெயில் கட்டணம் மூலமும் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.

    இந்தநிலையில் கடந்த வாரம் தமிழ்ப்புத்தாண்டு, புனிதவெள்ளி என 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த காலக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த வார தொடர் விடுமுறையான 4 நாட்களில் மட்டும் சுமார் 6 லட்சம் பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். தரிசன டிக்கெட் மூலம் மட்டும் ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல் பஞ்சாமிர்த விற்பனை, ரோப்கார், மின்இழுவை ரெயில் கட்டணம் ஆகியவற்றின் மூலம் ரூ.1 கோடி என மொத்தம் ரூ.2 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்றார்.
    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை பூர்த்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 14-ந்தேதி குருபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு பெயர்ச்சியடைந்ததையொட்டி இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. குருப்பெயர்ச்சியையொட்டி குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா கடந்த 6-ந்தேதி   தொடங்கி 10-ந்்தேதி வரை முதல்கட்டமாக நடைபெற்றது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் 2-வது கட்டமாக லட்சார்ச்சனை விழா கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கி  நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். லட்சார்ச்சனையை ரமேஷ்சாமிநாதசிவாச்சாரியார், சுரேஷ்ஞானஸ்கந்தன் சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

    லட்சார்ச்சனை பூர்த்தி விழாவையொட்டி குருபகவானுக்கும், உற்சவர்  தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் தக்கார்- அறநிலைய உதவிஆணையர் ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையர்- செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாகவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார்.
    மூலவர்:    வைகுந்தநாதன் (நின்ற திருக்கோலம்)
    உற்சவர்:    கள்ளபிரான் ,ஸ்ரீசோரநாதர்
    தாயார்:    வைகுண்டவல்லி, பூதேவி
    உற்சவர் தாயார்: ஸ்ரீசோரநாயகி
    தீர்த்தம்:    பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி

    வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.

    கோவில் அமைப்பு

    9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது இக்கோவிலின் ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர்; கோவிலுக்குள் இவர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் வைகுண்டநாச்சியார்.

    உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்; தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதியும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளன.

    தல புராணம்

    பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.

    சிறப்பு

    இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை , ஐப்பசி மாதங்களில் 6 ஆம் நாளன்று சூரிய ஒளி வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற்போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோவில் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.

    திருவிழாக்கள்

    இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும். இவ்விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம். நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்னவாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த தலங்களில், அந்தந்த தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும்.

    இந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது.


    கர்ணன் இயல்பாகவே வில் வித்தை கற்று சிறந்து விளங்கினாலும் அவனுக்கு குரு வேண்டும் என்பதற்காக துரோணாச்சாரியாரை அணுகினான்.
    கர்ணன் தேரோட்டியின் மகனாக வளர்ந்தவன். அவன் இயல்பாகவே வில் வித்தை கற்று சிறந்து விளங்கினாலும் அவனுக்கு குரு வேண்டும் என்பதற்காக துரோணாச்சாரியாரை அணுகினான். அவர் மறுத்துவிட்டார். கிருபாச்சாரியாரிடம் சென்று, தனக்கு குருவாக இருக்க கேட்டான். அது ஒரு அதிகாலை நேரம். கிருபா், வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொன்னார்.

    கர்ணனும் தன்னுடைய அம்பை வில்லில் பூட்டினான். எய்த வேண்டிய நேரத்தில் வில்லை தாழ்த்தினான். கிருபர் “என்னவாயிற்று?” என்றார்.

    அதற்கு கர்ணன், “குருவே இது அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவை தேடித்தான் செல்லும். என்னுடைய திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்தப் பறவையின் குஞ்சுகள், அனாதைகளாகிவிடும்” என்றான்.

    கிருபர் கண்கள் கலங்கிப்போனார். அவர் கர்ணனைப் பார்த்து, “நீ சிறந்த வித்தையை கற்றிருக்கிறாயா என்று எனக்கு தெரியாது. ஆனால் வேதத்தைக் கற்றிருக்கிறாய்” என்று பாராட்டினார்.
    கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன.
    1. ஓம் அனுமனே போற்றி
    2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
    3. ஓம் அறக்காவலனே போற்றி
    4. ஓம் அவதார புருஷனே போற்றி
    5. ஓம் அறிஞனே போற்றி

    6. ஓம் அடக்கவடிவே போற்றி
    7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
    8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
    9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
    10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி

    11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
    12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
    15. ஓம் இசை ஞானியே போற்றி

    16. ஓம் இறை வடிவே போற்றி
    17. ஓம் ஒப்பிலானே போற்றி
    18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
    19. ஓம் கதாயுதனே போற்றி
    20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
    22. ஓம் கர்மயோகியே போற்றி
    23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
    24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
    25. ஓம் கடல் தாவியவனே போற்றி

    26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
    28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
    29. ஓம் கூப்பிய கரனே போற்றி
    30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி

    31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
    32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
    33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
    35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி

    36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
    37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
    39. ஓம் சூராதி சூரனே போற்றி
    40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

    41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
    42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
    43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
    44. ஓம் சோக நாசகனே போற்றி
    45. ஓம் தவயோகியே போற்றி

    46. ஓம் தத்துவஞானியே போற்றி
    47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
    48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
    49. ஓம் தீதழிப்பவனே போற்றி
    50. ஓம் தீயும் சுடானே போற்றி

    51. ஓம் நரஹரியானவனே போற்றி
    52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
    53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
    54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
    55. ஓம் பண்டிதனே போற்றி

    56. ஓம் பஞ்சமுகனே போற்றி
    57. ஓம் பக்தி வடிவனே போற்றி
    58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
    59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
    60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி

    லட்சுமி தேவி நமது இல்லத்தில் குடியேற!!

    61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
    62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
    63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
    64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
    65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

    66. ஓம் பீம சோதரனே போற்றி
    67. ஓம் புலனை வென்றவனே போற்றி
    68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    69. ஓம் புண்ணியனே போற்றி
    70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி

    71. ஓம் மதி மந்திரியே போற்றி
    72. ஓம் மனோவேகனே போற்றி
    73. ஓம் மாவீரனே போற்றி
    74. ஓம் மாருதியே போற்றி
    75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி

    76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
    77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
    78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
    79. ஓம் ராமதாசனே போற்றி
    80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி

    81. ஓம் ராமதூதனே போற்றி
    82. ஓம் ராம சோதரனே போற்றி
    83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
    84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
    85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி

    86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
    87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
    88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
    89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
    90. ஓம் ருத்ர வடிவனே போற்றி

    91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
    92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
    93. ஓம் லங்கா தகனனே போற்றி
    94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
    95. ஓம் வஜ்ர தேகனே போற்றி

    96. ஓம் வாயுகுமாரனே போற்றி
    97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
    99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
    100. ஓம் விளையாடும் வானரனே போற்றி

    101. ஓம் விஸ்வரூபனே போற்றி
    102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
    103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
    104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
    105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
    106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
    107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

    மதுரையில் மீனாட்சி அம்மனின் கையில் இருப்பது போல, முருகப்பெருமானின் தண்டாயுதத்திலும் கிளி ஒன்று இருக்கிறது. இந்த கிளி, அருணகிரிநாதரின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது.
    முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தனித்துவம் உண்டு. போகர் என்னும் தலைசிறந்த சித்தரால் நவபாஷாணத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது, இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானின் சிலை. இதற்கு செய்யப்படும் அபிஷேக நீர் அருமருந்தாக இருப்பதாக சொல்கிறார்கள்.

    நவபாஷாண சிலையைச் செய்ய, சுமார் 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம், போகர். இந்த சிலையின் நெற்றியில் உள்ள ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் அனைத்தும் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன.

    முருகப்பெருமானின் விக்கிரகத்துக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய நான்கு பொருட்களால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர், அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருட்களில் சந்தனமும், பன்னீரும் மட்டும்தான் முருகப்பெருமானின் தலை முதல் அடி வரை முழுவதுமாக அபிஷேகம் செய்யப்படும். மற்றவை அனைத்தும் தலையில் வைத்து உடனடியாக அகற்றப்பட்டு விடும்.

    ஒரு நாளுக்கு ஆறு முறை இத்தல இறைவன், அபிஷேகம்- அலங்காரம் காண்கிறார். ஒரு முறை அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யப்பட்டு விட்டால், அடுத்த அபிஷேக நேரம் வரை, முருகப்பெருமானுக்கு மாலை சாற்றுவது, பூக்களால் அச்சனை செய்வது என்று எதுவும் செய்யப்படுவது இல்லை.

    முருகப்பெருமானின் புகழ் பாடியவர்களில் முக்கியமானவர், அருணகிரிநாதர். இவர் ஆரம்ப காலத்தில் தவறான வழியில் சென்று, அதில் இருந்து மீள முடியாமல் மனம் வருந்தினார். பின்னர் தற்கொலை செய்து கொள்வதற்காக திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரை தடுத்தாட்கொண்டு காப்பாற்றி, தன்னைப் பற்றி பாடல்கள் பாடும்படி செய்தார். முருகப்பெருமானைப் பற்றி, அருணகிரிநாதர் பாடிய பாடல்கள், ‘திருப்புகழ்’ என்ற பெயரில் புகழ்பெற்று விளங்குகிறது.

    பழனி முருகனின் கையில் ஒரு தண்டாயுதம் இருக்கும். மதுரையில் மீனாட்சி அம்மனின் கையில் இருப்பது போல, முருகப்பெருமானின் தண்டாயுதத்திலும் கிளி ஒன்று இருக்கிறது. இந்த கிளி, அருணகிரிநாதரின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. முருகனால் புகழ்பெற்று விளங்கிய அருணகிரிநாதரின் மீது, சம்பந்தாண்டான் என்ற புலவன் பொறாமை கொண்டான். ஒரு முறை பிரபுடதேவராய மன்னனுக்கு ஏற்பட்ட நோயை தீர்க்க யாராலும் முடியவில்லை. அப்போது சம்பந்தாண்டான் நயவஞ்சகமாக, தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை பறிந்து வந்தால்தான், மன்னனின் நோயை குணப்படுத்த முடியும் என்றான். அருணகிரிநாதரால் மட்டுமே இது முடியும் என்று கூறினான்.

    அதைக் கேட்டதும் அருணகிரிநாதர், திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை மூலமாக தன்னுடைய உடலில் இருந்து உயிரை ஒரு கிளி மீது செலுத்தி, விண்ணுலகம் சென்றார். அவர் வருவதற்கு முன்பாக சம்பந்தாண்டான், கோபுரத்தின் மீது இருந்த அருணகிரிநாதரின் உடலை எடுத்து எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர், கிளி ரூபத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அருள் செய்து, கிளி உருவத்தில் இருந்த அவரை தன்னுடைய தண்டத்திலேயே இருத்திக்கொண்டாராம்.
    வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம்.
    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது தேய்பிறை சஷ்டி. இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட மன மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

    நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கி விடும். இத்துடன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும்.இந்த நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம்.

    வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கவும் சஷ்டிவிரதத்தை கடைப்பிடிக்கலாம். முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தொடர்ந்து விரதம் இருந்திட முருகப்பெருமானின் அருளால் மேலான செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும் என்பது ஐதிகம்.

    இந்த 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்’ எனப்படுகின்றன. அவற்றைக் காணலாம்...
    பெருமாள் கோவில் கொண்டிருக்கும் ஆலயங்களில், 12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 சிவாலயங்கள், ‘திவ்ய தேசங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்’ எனப்படுகின்றன. அவற்றைக் காணலாம்...

    * திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாள் கோவில்.

    * ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகப் பெருமாள் கோவில்.

    * திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோவில்.

    * திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.

    * பத்ரிநாத்தில் உள்ள பத்ரிநாராயணர் கோவில்.

    * நேபாளத்தில் சாளக்கிராமம் என்ற இடத்தில் உள்ள முக்தி நாராயணர் கோவில்.

    * புஷ்கரம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீபெருமாள் ஆலயம்.

    * நைமிசாரண்யத்தில் உள்ள தேவராஜன் திருக்கோவில்.

    திருப்பதியில் ஜூலை மாதத்திற்கான ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வரும் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.

    இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதனால் தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வரும் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதேபோல் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை கல்யாண உற்சவம், உள்ளிட்ட ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 61,278 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,585 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.32 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    ஜோதிடத்தில் பன்னிரண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ, அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம்.

    அஸ்வினி - சரஸ்வதி தேவி

    பரணி - துர்கா தேவி (அஸ்ட புஜம்)

    கார்த்திகை - முருகப்பெருமான்

    ரோகிணி - கிருஷ்ணன்

    மிருகசீரிஷம் - சிவபெருமான்

    திருவாதிரை - சிவபெருமான்

    புனர்பூசம் - ராமர்

    பூசம் - தட்சிணாமூர்த்தி

    ஆயில்யம் - ஆதிசேஷன்

    மகம் - சூரிய பகவான்

    பூரம் - ஆண்டாள்

    உத்திரம் - மகாலட்சுமி

    ஹஸ்தம் - காயத்திரி தேவி

    சித்திரை - சக்கரத்தாழ்வார்

    சுவாதி - நரசிம்மமூர்த்தி

    விசாகம் - முருகப்பெருமான்

    அனுசம் - லட்சுமி நாராயணர்

    கேட்டை - வராஹ பெருமாள்

    மூலம் - ஆஞ்சநேயர்

    பூராடம் - ஜம்புகேஸ்வரர்

    உத்திராடம் - விநாயகப் பெருமான்

    திருவோணம் - ஹயக்ரீவர்

    அவிட்டம் - அனந்த சயனப் பெருமாள்

    சதயம் - மிருத்யுஞ்ஜேஸ்வரர்

    பூரட்டாதி - ஏகபாதர்

    உத்திரட்டாதி - மகா ஈஸ்வரர்

    ரேவதி - அரங்கநாதன்

    அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    27 நட்சத்திரங்களில் முதலாவதாக வரும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
    அஸ்வினி நட்சத்திரம் நவகிரகங்களில் கேது பகவானுக்குரிய நட்சத்திரமாக இருக்கிறது. அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்த குழந்தைகளால் அவர்களின் தந்தைக்கு தோஷம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் வரை பொருள் ரீதியான கஷ்டங்களை உருவாக்கும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு சிறிய அளவில் தோஷங்கள் உண்டு.

    இந்த தோஷங்கள் அனைத்தும் நீங்க உங்கள் சக்திக்கேற்ப வருடமொரு முறை வசதி குறைந்தவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும். அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் குதிரைகளுக்கு கொள்ளு தானியங்களை உணவாக தர வேண்டும். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதியாக கேது பகவான் இருப்பதால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கேது பகவானை வழிபட்டு வரவேண்டும். மருந்துகள் வாங்க வசதியற்ற ஏழைகளுக்கு மருந்துகளை வாங்கி தருவது சிறந்த பரிகாரமாகும்.

    அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்று எட்டி மரம் தலவிருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அந்த எட்டி மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது, அந்த எட்டி மரத்திற்கு அடியில் அமர்ந்து தியானம் செய்வதாலும் அவர்களின் தோஷங்கள் நீங்கப் பெறும். தினந்தோறும் சரஸ்வதி தேவி மந்திரத்தை கூறி வழிபடுவது அவர்களுக்கு பல நன்மைகளை தரும். விநாயகரை வழிபடுவது அவர்களுக்கு அனைத்து காரியங்களும் தடையின்றி முடிய உதவி புரியும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் தொடக்கமாக நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு கொடி மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.30 மணி முதல் காலை 5.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
    இதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது. பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு இன்று (22-ந்தேதி) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    விழாவின் இரண்டாம் நாளான இன்று (22-ந்தேதி) மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 23-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 24-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 25-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 26-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    27-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 28-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. 30-ந் தேதி சப்தாவரணம், 1-ந்தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. அப்போது கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பின்னர் காலை 9.45 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ×