என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அமாவாசை தினத்தையடுத்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நோன்பு சாட்டப்பட்டு, அன்றிலிருந்து 17-வது நாளில் தேரோட்டம் நடைபெறும்.
    இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய 2ஆண்டுகள் தேர்த்திருவிழா நடைபெறவில்லை.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

    பக்தர்கள் எதிர்பார்த்தபடி இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு கடந்த 5-ந் தேதி நோன்பு சாட்டப்பட்டது. 12-ந் தேதி கம்பம் நடுதல் விழா நடந்தது. 15-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி தினசரி அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம்  மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு மயில் வாகனத்தில் சுவாமி, அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது.

    தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று காலை ஸ்ரீீ மகாசக்தி மாரியம்மன் சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பிற்பகலில் கோவில் வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள், அரசு துறை அலுவலர்கள், மண்டகபடிதாரர்கள் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீீதர், செயல் அலுவலர் வெ.பி.சீனிவாசன், யு.எஸ்.சஞ்சீவ் சுந்தரம் உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    தேருக்கு முன்னால் தண்ணீர் லாரிகள் வரிசையாக ஊர்வலம் போன்று அணிவகுத்து சென்றன. அந்த லாரிகளில் இருந்து சாலைகளில், குளிர்ச்சிக்காக தண்ணீர் ஊற்றிச்செல்லப்பட்டது. தேரை பக்தர்கள் முன்னால் இருந்து இழுத்து சென்றனர். பின்னால் இருந்து பக்தர்கள் தேரை தள்ளி சென்றனர். தேரை திருப்பங்களில் திருப்புவதற்காக ஜே.சி.பி.வாகனமும் கொண்டு செல்லப்பட்டது. தேர் தளி சாலை, வடக்கு குட்டை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி, பொள்ளாச்சி சாலை வழியாக சென்றது. பின்னர் இரவு 9.45 மணிக்கு தேர்நிலைக்கு வந்து சேர்ந்தது.

    தேரோட்டத்தைக்காண உடுமலை மற்றும் சுற்று வட்டார கிராமப்புறங்களைச்சேர்ந்தவர்கள் பிற்பகல் முதலே சாரை, சாரையாக வந்து, தேரோட்டம் நடைபெறும் சாலையோரங்களில் இடம்பிடித்து காத்திருந்து தேர் வந்ததும் வழிபட்டனர். சுட்டெரித்த வெயிலிலும் தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, தேர் வந்ததும் தேரில் சுவாமியுடன் வந்த மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். பக்தர்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மொட்டைமாடிகளிலும் நின்று, தேர் வந்ததும் வழிபட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நேற்று நடந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
    வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டு திருவிழா நாளை( 23-ந் தேதி) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை பிச்சைமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வில்லியனூரில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற தூய லூர்து அன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி 145-வது ஆண்டு திருவிழா நாளை (ஏப்ரல் 23-ந் தேதி )(சனிக்கிழமை) கொடியேற்றதுடன் தொடங்குகிறது.

    அன்று காலை 5.30 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்திருக்கும்  ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் திருத்தல  முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி ஆண்டு திருவிழாவினை தொடங்கி வைக்கிறார்.

    முன்னதாக ஆலயத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடி யேற்றப்படுகிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள் மற்றும் தேர் பவனி நடைபெறுகிறது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் சவரிமுத்து ஆரோக்கியராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.

    மே 1-ந் தேதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
     
    காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு புதுவை&கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்  தலைமையில் திருவிழா, மாலை திருப்பலி, இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது.

    மே 2-ந் தேதி காலை 6.30 மணி திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல அருட்தந்தையர்கள் பிச்சைமுத்து, ஜோசப் சகாயராஜ், அருட்சகோதரர் ஜீவா,  அருட்சகோதரிகள் மற்றும் வில்லியனூர் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மராஜா சுவாமி கோவில் தேரோட்ட விழாவில் முறம், துடைப்பத்தால் பூசாரியிடம் அடி வாங்கி பக்தர்கள் ஆசிபெற்றனர்.
    தர்மராஜா கோவில் தேரோட்டத்தையொட்டி பூசாரி ஒருவர், துடைப்பத்தால் பக்தர்களை அடித்து ஆசீர்வதித்த போது எடுத்த படம்
    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த டீ கொத்த பள்ளி கிராமத்தில் திரவுபதி அம்மன், தர்மராஜ சுவாமி கோயில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா நேற்று மதியம் நடந்தது.

     கிராம மக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நிலையை அடைந்தது. முன்னதாக பக்தர்களுக்கு பிடித்த பில்லி சூனியம் ஏவல் போன்றவை நீங்க கோவில் பூசாரி பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் முறம் மற்றும் துடைப்பத்தால் அடித்தபடி ஓடினார். பக்தர்கள் அவரிடம் அடி வாங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். விழாவையொட்டி கடந்த 15&ந் தேதி இரவு தர்மராஜ சுவாமி திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சை கரகம், தீபாராதனை, பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான சூரியன் ஸ்தலமாக உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 7.15 மணிக்கு கோவில் கொடிப்பட்டம் நான்கு மாடவீதிகளில் சுற்றி வரப்பட்டது. இதனையடுத்து காலை 7.55 மணிக்கு கோவில் கொடிமரத்தில் அர்ச்சகர் ராமானுஜபட்டர் கொடியேற்றி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தங்கத்தோளுக்கினியானில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடந்தது. 2-ஆம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு,  மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெறும். நாளை காலை 7.30 மணிக்கு சுவாமி தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, காலை 11 மணிக்கு தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அனுமார் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.

    வரும் 24-ந்தேதி காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் சுவாமி வீதி உலா புறப்பாடு, மாலை 6 மணிக்கு ஷேச வாகனத்தில் சுவாமி வீதி உலா, 5-ஆம் திருவிழாவான 25-ந்தேதி காலை 9.30 மணிக்கு கள்ளபிரான் சுவாமி, காசினி வேந்தபெருமாள் சுவாமி, விஜயாசனப் பெருமாள், சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, இரவு 9 மணிக்கு குடவரை பெருவாயில் ஹம்ஸ வாகனத்தில் நம்மாழ்வாருக்கு எதிர்சேவை நான்கு கருடவகனத்தில் ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி, ஸ்ரீபொலிந்துநின்றபிரான் சுவாமி, ஸ்ரீ காசினி வேந்த பெருமாள் சுவாமி, ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் சுவாமிகளின் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.

    6-ஆம் திருவிழாவான 26-ந்தேதி காலை 5.30மணிக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம், காலை 7.30 மணிக்கு கள்ளபிரான் கோவிலுக்குள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டியும், மாலை 6 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 7-ஆம் திருவிழாவான 27-ந்தேதி காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதியுலா புறப்பாடு, காலை 11 மணிக்கு நாச்சியார் சன்னதியில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி, மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு வீதி புறப்பாடு, இரவு 7 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் ஆண்டாள் திருக்கோலம் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறும்.

    28-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடிமரம் சுற்றி எழுந்தருளல், இரவு 8.30மணிக்கு குதிரை வாகனத்தில் திருத்தேர் கடாச்ஷமும், 29-ந் தேதி காலை 4.30 மணிக்கு கொடிமரம் சுற்றி எழுந்தருளல், காலை 5மணிக்கு மேல் 5.45மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 7.15மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். நான்கு வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடையும்.  இரவு 9மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 30-ந்தேதி காலை 9 மணிக்கு சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரியும், இரவு 9 மணிக்கு சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், மே 1-ந் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளபிரான் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி சயன கொறட்டில்  நடைபெறும்.

    கோவில் திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத், பட்டர்கள் ரமேஷ், சீனு, வாசு, கோவில் ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, ஸ்ரீனிவான், சீனிவாசன். திருவேங்கடத்தான் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார்  செய்து வருகின்றனர். முன்னதாக கடந்த 20-ந் தேதி  காலை 7.20 மணிக்கு கோவிலில் தேங்காய் வாங்குதல், மற்றும் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருமுளைச் சாத்துதல், இரவு தோளுக்கினியானில் சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.
    கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர் ஆவார்.
    நடுநாடு என்று அழைக்கப்பட்ட கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது விருத்தகிரீஸ்வரர் கோவில். இங்குள்ள இறைவனுக்கு பழமலைநாதர் என்கிற மற்றொரு பெயரும் உண்டு. சமய குறவர்களால் பாடல் பெற்று இத்தலம் நடுநாட்டு சிவதலங்களில் 9-வது திருத்தலமாக விளங்குகிறது.

    பிரம்மனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது மேலும் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

    இங்கு எழுந்தருளி இருக்கும் பழமலைநாதர் என்னும் விருத்தகிரீஸ்வரர் முன்காலத்தில் மலையாய் காட்சி கொடுத்துள்ளார். இதனால் விருத்தாசலத்துக்கு திருமுதுகுன்றம் என்கிற பெயரும் உண்டு.

    மலையாய் காட்சி கொடுத்த இங்குள்ள மூர்த்திக்கு பழமலைநாதர், முதுகுன்றீஸ்வரர், பெரியநாயகர், விருத்தகிரீஸ்வரர் என பெயர் அமைந்துள்ளது. அம்மையை பெரியநாயகி, விருத்தாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். குருநமச்சிவாயத்துக்கு இளமையாக காட்சி கொடுத்ததால் பாலாம்பிகை என்றும் இளையநாயகி என்றும் அழைக்கின்றனர்.

    புண்ணிய தலம், முக்திதலம் என்று போற்றப்படும் இந்த தல புராணத்தில், ‘இத்தலம் விட்டுக் காசியில் ஏகினும் இல்லை, தவப்பயன் முத்தியும் இல்லையே’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் காசிக்கு மேல் வீசம் என்பதால் விருத்தகாசி எனவும் அழைக்கிறார்கள். இந்த தலத்தில் இறக்கின்ற எல்லா உயிர்களுக்கும் பழமலைநாதர் ஐந்தெழுத்து ஓதி முக்தி கொடுப்பதாகவும், பெரியநாயகி முந்தானையால் வீசி பிறப்பை அகற்றுவதாகவும் கச்சியப்பர் கந்தபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    நான்கு புறமும் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். கோவிலின் நான்கு புறங்களிலும் விண்ணை முட்டும் உயரத்தில் 7 நிலைகளை உடைய பெரிய கோபுரங்கள் நிற்கிறது. சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இதை விளக்கும் விதமாக 28 லிங்கங்களை இத்தலத்தில் முருகபெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த வரலாறு உண்டு. இந்த 28 லிங்கங்கள் தனி சன்னதியாக கோவிலில் அமைய பெற்றுள்ளது. இந்த லிங்கங்களுக்கு நடுவே விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகனும் காட்சி அளிக்கிறார்கள். உலகில் எந்த கோவிலிலும் இல்லாத பெருமையாக இது பார்க்கப்படுகிது. இக்கோவிலில் பலவித சிறப்புகளுக்கு உரியவர் பெரியநாயகர் என்று அழைக்கப்படும் விருத்தகிரீஸ்வரருக்கு பவுர்ணமி அன்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.

    கோவிலில் முதன் முதலில் திருப்பணி செய்த விபசித்து முனிவருக்காக காட்சி கொடுக்கும் ஐதீக பெருவிழா மாசி மகப்பெருவிழாவின் 6-ம் நாள் நடைபெறுகிறது.

    பஞ்சமூர்த்திகள் என்று கூறியவுடன் நினைவுக்கு வருவது விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேசுவரர் ஆவார்கள். மாசி மக பெருவிழாவின் போது இந்த உற்சவ மூர்த்திகள் காலை, மாலை இரு வேளையும் எட்டு வீதிகளிலும் உலாவருவதை தற்போதும் காணலாம்.

    கோவிலுக்கு உள்ளே பஞ்ச லிங்கமும் அமைந்துள்ளது. சிவபெருமான் பஞ்ச பூத வடிவில் உள்ளார் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டி இங்கு பஞ்ச லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காற்று-காளகஸ்தி, மண்-காஞ்சி, ஆகாயம்-சிதம்பரம், நீர் -திருவானைக்காவல், நெருப்பு - திருவண்ணாமலை ஆகும்.

    இந்த கோவில் வன்னியடி திருச்சுற்றின் தென்மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய 5 திருத்தலங்களும் சென்று வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து வழிப்பட்டால், ஒவ்வொரு தலத்திலும் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது பக்தர்கள் இடையே நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர் ஆவார். பைரவர் கையில் வில் உள்ளது மற்றொரு தனி சிறப்பு ஆகும். அருணகிரியாரால் 3 பாடல்கள் பாடப்பட்ட முருக பெருமான் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.

    இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட இந்த தலத்தை ஒருமுறையாவது சென்று தரிசித்து வாருங்கள்.
    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 9-ந்தேதி தொடங்குகிறது. தேரோட்டம் 3 நாட்கள் நடக்கிறது.
    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் - விநாயகர் கோவில் உள்ளது. இங்கு கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை.

    இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம் (மே) 9-ந் தேதி காலை 9.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் தொடங்குகிறது.

    மே10-ந் தேதி காலை 9 மணிக்கு வேல் புறப்பாடு மற்றும் பூச்சாட்டு விழா நடக்கிறது. 16-ந்தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது.

    17-ந்தேதி இரவு 9 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தினசரி காலை இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் திருவீதி உலா, பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    25-ந்தேதி காலை 6 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் மற்றும் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 26, 27, 28-ந் தேதிகளில் மாலை 4 மணிக்கு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது.

    29-ந் தேதி பகல் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது.

    விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும்அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
    இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள்.
    மதுரையம்பதியின் பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலம் என்றும், மதுரையில் சம்பந்தர் பெருமான் பாடிய 2-வது தலம் என்றும், பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட 4-வது கோவில் என்றும் போற்றப்படுகிறது திருவாப்புடையார் கோவில். மலைகளில் மேரு, பசுக்களில் காமதேனு, கொடையில் மேகம் என இருப்பதைவிட அளவிற் பெரிய திருவுளம் கொண்டவர் திருவாப்புடையார் என்பர். இவரைத் தரிசித்தால், மற்ற புண்ணிய தலங்களின் மூர்த்திகளைத் தரிசித்த பலன் உண்டு என்கிறது ஸ்தல புராணம். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை. ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீநடராஜர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர். ஸ்தல தீர்த்தம் இடப தீர்த்தம். ஸ்தல விருட்சம்- கொன்றைஎன்கிறது ஸ்தல புராணம்.

    வழிபாட்டுப் பலன்கள் :

    • இத்தலத்து இறைவனுக்கு ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் அது ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததால் கிடைக்கும் பலனுக்கு இணையானதாகும்.

    • இத்தலத்து இறைவனை இளநீர் கொண்டு நீராட்டி வழிபட்டால், அது நூறு அசுவமேத வேள்வி செய்வதால் கிடைக்கும் பலனைத் தரக்கூடியது.

    • தாங்கள் செய்த தவறுகளால் அனைத்தையும் இழந்து வறுமைக்குள்ளானவர்கள், தங்களது தவறுகளை உணர்ந்து, இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள்.

    • இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமானை செவ்வாய் தோஷமுடையவர்கள் வழிபட்டால், அவர்களுடைய தோஷம் நீங்கிச் சிறந்த பலன் கிடைக்கப் பெறுவார்கள்.

    • இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் திருவாப்புடையார் கோவிலில் சிறப்பு பூஜைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும். கார்த்திகை சோம வாரத்தில் (திங்கட்கிழமை) சிவனாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வேளிமலை குமாரசாமி கோவில் போன்ற கோவில்களில் கருங்கல் தரையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் செல்கிறார்கள். பெரும்பாலான கோவில் வளாகத்தில் தரையில் கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் மதிய வேளையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கருங்கல் தரையில் நடந்துசெல்லும் போது வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இதை கருத்தில் கொண்டு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கருங்கல் தரைகளில் ரப்பர் கலவை கலந்த வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.  

    குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்லும் பாதைகளில் கருங்கல் பதிக்கப்பட்ட தரைகளில் ரப்பர் கலவை கலந்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.

    அதன்படி, சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வேளிமலை குமாரசாமி கோவில் போன்ற கோவில்களில் கருங்கல் தரையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.60லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த பணிகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவிலில் மூன்று மாதங்களுக்குள் பணிகளை முடிக்கும் படி அரசு கூறி உள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    கோவிலில் வடக்கு-தெற்கு நுழைவு வழிகள் மூடி இருப்பது விரைவாக திறக்கப்படும். கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பது தெரிய வந்துள்ளது. பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிப்பிடம் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    முடிந்த அளவுக்கு பிறரை மன்னித்து அந்த மன்னிப்பு வழியாக இறைவனின் அருள் ஆசிரில் பங்கு பெறுகின்ற உயர்ந்த மனிதர்களாக நாம் மாறுவோம்.
    உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பி காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்து கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்து கொள்ளப்பார்த்தால் அவரை தடுக்காதீர்கள்(லூக்6:29)

    குற்றம் செய்கின்றவரை இரக்க உணர்வால் பொறுத்துகொள்கின்ற திறனே மன்னிப்பு. மற்றவர்கள் மீது நாம் இரக்கம் கொள்கின்ற பொழுது நாம் மன்னிக்கும் ஆற்றலை உணர்ந்து கொள்கிறோம். உலகத்தில் இயல்பாகவே இன்று எல்லோருக்கும் தவறு இழைத்த மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். நாம் மன்னிக்கின்ற போது மட்டும் தான் இறைபணியில் பங்கு பெறுகின்றவராக நாம் உருமாறுகிறோம். மன்னிப்பு அளிப்போர், பெறுவோர் ஆகிய இருவருக்கும் அது அருள் ஆசிரை கொண்டு வருகிறது.

    மன்னிப்பு முறிந்து போன உறவுகளை அன்போடும் அருள் இரக்கத்தோடும் சீராக்குகிறது. உள்ளத்தை குணமாக்குகிறது.

    புகழ்பெற்ற ஒவியர் லியோனாடாவின்ஸ் இயேசுவின் இரவு உணவு சித்திரத்தை வரைந்து கொண்டிருந்தார். அவர் வரைந்து கொண்டிருந்த போது அவருக்கு அங்கு இருந்த ஒரு மனிதர் மேல் அடங்காத கோபம். கோபம் பற்றி எரிந்தது. கடும் சொற்களால் அவரை அசைவாடினார். அவரை வெளியே அனுப்பி விட்டு மீண்டும் அவர் சித்திரம் தீட்டினார். இயேசுவின் முகத்தில் ஒரு மெல்லிய கோடை அவர் வரைய முனைந்தார். ஆனால் அவரால் இயலவில்லை. ஒவியம் வரைவதை விட்டுவிட்டு அந்த மனிதரிடம் சென்று மன்னிப்பு கேட்ட பிறகு தான் அவரால் படம் வரைய முடிந்தது என்று அவர் சொல்கிறார்.

    நாமும் பிறரை குறை கூறிக்கொண்டே இருந்தால் பல நேரங்களில் வாழ்வில் வெற்றியடைய முடியாது. நாம் மன்னித்து வாழ்வதற்கு தயாராக இருக்கின்ற பொழுது தான் பல சாதனைகளை நம்மால் இந்த உலகத்தில் படைக்க முடியும். எனவே முடிந்த அளவுக்கு பிறரை மன்னித்து அந்த மன்னிப்பு வழியாக இறைவனின் அருள் ஆசிரில் பங்கு பெறுகின்ற உயர்ந்த மனிதர்களாக நாம் மாறுவோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    இன்று (வியாழக்கிழமை) இரவு வாண வேடிக்கையுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
    சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் பழமையான தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மனின் அக்காள் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவுக்காக கடந்த 4-ந் தேதி பூச்சாட்டப்பட்டது. 7-ந் தேதி இரவு கோவிலின் முன்பு பெரிய கம்பம் நடப்பட்டது.
    அன்று முதல் ஒவ்வொரு நாள் இரவும் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கம்பம் ஆட்டம் ஆடி வருகிறார்கள். இதைக்காணவும் பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று குண்டம் விழா நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் பவானி ஆற்றுக்கு சென்று புனித நீராடினார்கள். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உற்சவ அம்மனை வணங்கிவிட்டு மேளதாளங்கள் முழங்க கையில் வேப்பிலையுடன் கோவிலை நோக்கி வந்தார்கள்.
    முன்னதாக கோவிலுக்கு முன்பு குண்டம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து தலைமை பூசாரி மல்லிகைப்பூ பந்தை உருட்டிவிட்டு, குண்டத்துக்கு பூஜை செய்தார். பின்னர் நெருப்பு துண்டுகளை 3 முறை கைகளால் அள்ளி வீசினார். இதையடுத்து மணியை ஒலித்தபடி குண்டம் இறங்கினார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் ‘அம்மா தண்டு மாரியே’ என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள்.

    தலைமை பூசாரியை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். ஒரு சிலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இறங்கியதையும் காணமுடிந்தது.

    இன்று (வியாழக்கிழமை) இரவு வாண வேடிக்கையுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) விளக்கு பூஜையும், நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
    புராதான சிறப்பு வாய்ந்த பழமை வாய்ந்த திருஉத்தரகோசமங்கை திருக்கோவில் கருங்கல் தூண்கள் புதுப்பிக்கப்பட்டு வருவது பக்தர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
    ராமநாதபுரம் அருகே உள்ளது புகழ்வாய்ந்த திருஉத்தர கோசமங்கை. இந்த ஊரில் மங்களநாதர் மங்களநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற புராதன சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதத்திலான ஆடும் திருக்கோலத்தில் அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தன்று அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். சிறப்பு வாய்ந்த இந்த கோவில் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க ராமநாதபுரம் சமஸ் தானம் தேவஸ்தானம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி இந்த கோவில் அம்பாள் சன்னதி மற்றும் நந்தி மண்டபம் பகுதியில் அமைந்துள்ள கல்தூண்கள் அனைத்தும் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த 2 பகுதியிலும் மொத்தம் உள்ள 275 தூண்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுண்ணாம்பு, பனங்கருப்பட்டி, ஆற்று மணல், கடுக்காய் போன்ற கலவை மூலம் கல்தூண்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூரை சேர்ந்த மதியழகன் ஸ்தபதி தலைமையிலான குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் ஒரு வருட காலத்தில் இந்த 275 தூண்களையும் புதுப்பித்து முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த பணிகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான பழனிவேல்பாண்டியன் நேரில் ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தின் புராதான சிறப்பு வாய்ந்த பழமை வாய்ந்த திருஉத்தரகோசமங்கை திருக்கோவில் கருங்கல் தூண்கள் புதுப்பிக்கப்பட்டு வருவது பக்தர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
    ×