search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஷ்டி"

    • சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
    • திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரகதகல்லால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    சிறுவாபுரி கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மேலும் இந்த கோவில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோவில் என்றும் கூறப்படுகிறது. இதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்களின் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிக்கி திணறி வருகிறார்கள்.

    இதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்தி ருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவிவருகிறது. ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்கிறார்கள்.

    இதேபோல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதிலும், வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிறுவாபுரி-புதுரோடு சாலையிலும், சிறுவாபுரி-அகரம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே செவ்வாய்க்கி ழமை மற்றும் விழா காலங்களில் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரையில் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

    சிறுவாபுரி கோவிலில் முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் விடியற்காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி, நிழல் தரும் பந்தல் வசதி, தேவையான கழிவறை வசதி தேவையான அளவு இல்லை.

    மேலும், கோவிலுக்கு செல்லும் வழியையும், தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியையும் ஒவ்வொரு வாரமும் மாற்றி, மாற்றி அமைப்பதால் பக்தர்கள், முதியவர்கள், பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்வதிலும், வெளியே வருவதிலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    சாலையின் இருபுறமும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர். காவல்துறையினரும், வருவாய் துறையினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒருவருக்கு, ஒருவர் ஒத்துழைப்பு இல்லாததால் சாலை ஓரம் உள்ள கடைகளை அப்புறப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

    இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் விழா காலங்களில் பக்தர்கள் தரிசன நேரத்தை அதிகரித்தால் கூட்ட நெரிசல் ஏற்படாது. வாகன நெரிசலை தவிர்க்க கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்து போக்கு வரத்தை சரிசெய்யவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சஷ்டி விரதமும், வெள்ளிக்கிழமையும் இணைந்து வருவது சிறப்பு.
    • பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும்.

    சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப் பெற "சஷ்டி விரதம்" அனுஷ்டிக்கும் முறையையும், அதன் பலன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    சஷ்டி தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும், பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்க வேண்டும்.

    காலையில் இருந்து உணவேதும் அருந்தாமல் பூஜையறையில் அமர்ந்து "கந்த சஷ்டி கவசத்தையோ" வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள். ஓம் முருகா என்று மனதிற்குள் ஜெபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம்.

    இந்த சஷ்டி விரத நாட்களில் புலால் உணவுகளையோ, போதை வஸ்துக்களையோ விரதமிருப்பவர் உண்ணக்கூடாது. மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த சஷ்டி விரதத்தை உணவருந்தாமலும், அப்படியில்லையெனில் ஒன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

    சஷ்டி தினத்தன்று குழந்தை இல்லாத பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகப்பெருமானின் அருளால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ஆரோகியம் மேம்படும்.

    மேலும் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு எல்லா செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் வாய்க்கும்.

    சஷ்டி விரதமும், வெள்ளிக்கிழமையும் இணைந்து வருவது சிறப்பு. தொடர்ந்து சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு அறிவுக் கூர்மையும், ஆற்றலும், செயல்திறனும் கூடும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும்.

    சஷ்டி விரதம் இருப்பவர்கள், முதல் நாளான பஞ்சமி மதியம் முதலே விரதம் இருப்பது நல்லது. அன்று இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, அடுத்த நாள் காலை நீராடி, சங்கல்பம் செய்து கொண்டு முருகப்பெருமானுடைய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும்.

    மாலை பூஜை அறையில் விளக்கேற்றி, முருகப் பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைத்துப் படைக்க வேண்டும். தூப தீபங்கள் காட்டி வணங்கி உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜாசாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில், மோகனூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெரு மானுக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி
    • இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.

    விநாயகருக்கான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இது தவிர மாதம் தோறும் தேய்பிறை சதுர்த்தி திதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் வரும் கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை திதி வரையில் 21 நாட்கள் விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம்.

    `ஓம்' என்பதின் அர்த்தம்

    `ஓம்'-என்பதற்கு நூறுக்கு அதிகமான அர்த்தங்கள் இருக்கின்றன. `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி பிற மந்திரங்களின் முன்னோடியாக வரும் பீஜமந்திரம் இந்த சொல்லில் இருந்து தான் மற்ற மந்திரங்கள் பிறந்தன. இது படைப்புக்கடவுள் பிரம்மனின் நாத வடிவம். ஓம் என்பது முழுமையை குறிக்கிறது.

    இது பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் பொதுவானது.

    `ஓம்' என்பது சுற்றிக் கொண்டேயிருக்கும் பூமி கடவுளின் சங்கீத சுருதியுடன் சேர்ந்த ஒலி. இந்த `ஓம்' என்ற சொல் மனதை ஒருமுகப்படுத்தும் வித்தையைச் செய்கிறது. `ஓம்' என்ற நாதத்தில் கணபதி முழுமையாக இருக்கிறார். `ஓம்' என்பது ஆத்மாவின் இருப்பிடமான இதயத்தில் இருந்து 108 நாடிகளை இயக்குகிறது. இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.

    விநாயகரை துதிக்க மந்திரம்

    ஓம் சுமுகாய நம

    ஓம் ஏக தந்தாய நம

    ஓம் கபிலாய நம

    ஓம் கஜகர்ணகாய நம

    ஓம் லம்போதராய நம

    ஓம் விநாயகாய நம

    ஓம் விக்னராஜாய நம

    ஓம் கணாத்பதியே நம

    ஓம் தூமகேதுவே நம

    ஓம் கணாத்ய சசாய நம

    ஓம் பால சந்திராய நம

    ஓம் கஜானனாய நம

    ஓம் வக்ரதுண்டாய நம

    ஓம் சூர்ப்ப கன்னாய நம

    ஓம் ஏரம்பாய நம

    ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம

    மேலே உள்ள மந்திரத்தைச் சொன்னாலே, கஷ்டங்கள் நீங்கி வாழ்வு மலர்ந்து மணம் வீசும்.

    • நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன.
    • பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை.

    திதி என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்பதம் `நிலவின் பிறை தினம்' என பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு திதிக்குமான வடமொழி பெயருக்கு நிகரான தமிழ் பெயர்கள் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதற்கான தகவல் அதில் இல்லை.

    அவை முறையே...

    பிரதமை - ஒருமை

    துதியை - இருமை

    திரிதியை - மும்மை

    சதுர்த்தி - நான்மை

    பஞ்சமி - ஐம்மை

    சஷ்டி - அறுமை

    சப்தமி - எழுமை

    அஷ்டமி - எண்மை

    நவமி - தொண்மை

    தசமி - பதின்மை

    ஏகாதசி - பதிற்றொருமை

    துவாதசி - பதிற்றிருமை

    திரையோதசி - பதின்மும்மை

    சதுர்த்தசி - பதினான்மை

    பவுர்ணமி - நிறைமதி

    அமாவாசை - மறைமதி

    என்பனவாகும்.

    பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை. அவை முறையே "நத்தை திதி", "பத்ரை திதி", "சபை திதி", "இருத்தை திதி", "பூரணை திதி" என அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் மூன்று திதிகளை உள்ளடக்கியது. இதன் படியே பொதுப் பலன்கள் கூறப்படுகிறது.

    • திதி என்பதே காலப்போக்கில் மருவி தேதி ஆகி இருக்கலாம்.
    • பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பர்.

    பிரதமை, துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும், கூர்ந்த அறிவுடையவர்களாகவும், பொருளுடையவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், எந்த செயலையும் சிந்தித்து சிறப்பாக செய்பவர்களாகவும், எந்த திசை நோக்கி சென்றாலும் அங்கு புகழ் பெற்றவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் சாதுவாகவும் இருப்பார்கள்.

    துவிதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    துதியை திதியில் பிறந்தவர்கள் வாய்மை தவறாதவர்களாகவும், பொய் சொல்லாதவர்களாகவும், புகழுடையவர்களாகவும், சொன்ன சொல்லைத் தவறாதவர்களாகவும், தன்னுடைய இனத்தவர்களகளை ரட்சிப்பவர்களாகவும், எவ்வித முயற்சியாலும் பொருள் தேடி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

    திரிதியை, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    திரிதியை திதியில் பிறந்தவர்கள் நற்குணமுடையவர்களாகவும், தீயசெயல்கள் செய்ய அஞ்சுபவர்களாகவும், சுத்தமுடையவர்களாகவும், எந்த ஒரு செயலையும் யோசித்து முடிக்க வல்லவர்களாகவும், பிரபு என்று புகழ் பெறுபவர்களாகவும், பலசாலியாகவும், தேவாலயங்களைத் தேடித்தேடி தருமம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் பூமியில் உள்ளவர்கள் யாவரும் புகழும் மணிமந்திரவாதியாகி பலருடைய நட்பையும் பெற்றவர்களாகவும். எந்த காரியங்களையும் முடிக்க வல்லவர்களாகவும். சித்தியுள்ளவர்களாகவும், பல நாடுகளுக்கு பயணம் செய்து புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

    பஞ்சமி, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ணுபவர்களாகவும், நுட்ப தேகமுடையவர்களாகவும், பெண்களின் மீது விருப்பமுடையவர்களாகவும், மண்ணாசை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

    சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சஷ்டி திதியில் பிறந்தவர்கள் சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவர்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவர்களாகவும், பிரபுக்களின் உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள்.

    திதி - பலன்கள்

    பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை `தேய்பிறை திதி' என்றும், பின்னர் அமாவாசை முதல் பௌர்ணமி வரையான பதினைந்து நாட்களை `வளர்பிறை திதி' என்றும் குறிப்பிடுவர்.திதி என்பதே காலப் போக்கில் மருவி தேதி ஆகியிருக்கலாம். இதனை சமஸ்கிருதத்தில் `கிருஷ்ணபட்சம்', `சுக்கிலபட்சம்' என்பர்.

    இவை முறையே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகும்.

    • திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும்.
    • கிருஷ்ண எனும் சொல்லுக்கு ‘கருமை’ என்றும் பொருள்.

    திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும்.

    1. சுக்ல பட்சம் (அல்லது) பூர்வ பட்சம் : வளர்பிறை

    2. கிருஷ்ண பட்சம் (அல்லது) அமர் பட்சம் : தேய்பிறை என இரண்டு வகைப்படும். சுக்லம் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு 'வெண்மை' என்றும், கிருஷ்ண எனும் சொல்லுக்கு 'கருமை' என்றும் பொருள்.

    பிரதமை முதல் அமாவாசை வரை தேய்பிறை 'கிருஷ்ண பட்சம்' அல்லது அமர பட்சம். பிரதமை முதல் பௌர்ணமி வரை வளர்பிறை 'சுக்ல பட்சம்' அல்லது பூர்வ பட்சம்.

    1. பிரதமை, 2. துவதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பௌர்ணமி (அல்லது) அமாவாசை.

    சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் இருப்பது 'அமாவாசை' ஆகும். சூரியன் நின்ற காகைகளுக்கு நேராக 180 டிகிரி சந்திரன் இருந்தால் 'பௌர்ணமி' ஆகும். சூரியனில் இருந்து சந்திரன் நகர்ந்து செல்லச்செல்ல சந்திரனின் பிறை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக கண்ணுக்கு தெரிய வரும். இவ்வாறு தினமும் வளர்ந்து வருவது 'வளர்பிறை' காலம் ஆகும்.

    பௌர்ணமிக்கு பின் முழுமதியில் இருந்து தினம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தெரியவரும். இவ்வாறு தேய்வதால் 'தேய்பிறை' காலம் என்கிறோம். இவ்வாறு வளர்பிறை காலம் 15 நாட்களும், தேய்பிறை காலம் 15 நாட்களும் கொண்டது ஒரு மாதமாகும்.

    திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்:

    பிரதமை:- சந்தோஷ பிரியன், எதையும் யோசிக்கும் புத்தி உடையவன். செல்வந்தன்.

    துதியை:- கீர்த்தி உடையவன், சத்திவாசகன், பொய் சொல்லாதவன், பொருள் சேர்ப்பவன், தன் இனத்தாரை ரட்சிப்பவன்.

    திருதியை:- எண்ணியதை முடிப்பவன், தனவான், பயம் உள்ளவன், பராக்கிரமம் உடையவன், சுத்தமுடையோன், திருக்கோவில் கைங்கரியம் செய்பவன்.

    சதுர்த்தி:- அளவற்ற காரியங்களை சிந்திப்பவன். தேச சஞ்சாரம் செய்பவன், எல்லோருக்கும் நண்பன், அருள் மந்திரவாதி.

    பஞ்சமி:- வேத ஆராய்ச்சி உடையோன், பெண் மேல் அதிக பிரியமுள்ளவன், கருமி, துக்கம் உடையோன்.

    சஷ்டி:- பிரபுக்களால் விரும்பதக்கவன், செல்வன், மெலிந்தவன், முன் கோபி.

    சப்தமி:- செல்வம், தயாள சிந்தனை உடையோன், பராக்கிரமசாலி, எதிலும் கண்டிப்பு உடையவன்.

    அஷ்டமி:- புத்ர செல்வம் உடையோன், காமூகன், பிறவி செல்வம் உடையவன், லட்சுமி வாசம் உடையோன்.

    நவமி:- கீர்த்தி உடையவன், மனைவி மக்களை விரும்பாதவன், அதிக பெண் சிநேகம் உடையவன், கமனம் செய்பவன்.

    தசமி:- சீலம் உள்ளவன், தர்மவான், யோகியவான்.

    ஏகாதசி:- செல்வந்தன், நீதியுடன் இருப்பவன், அழகற்றவன், உதிதமானதை செய்பவன்.

    துவாதசி:- செல்வந்தன், தர்மவான், நூதன தொழில் செய்பவன், சீலம் உள்ளம் உள்ளவன்.

    திரயோதசி:- உறவினர் இல்லாதவன், மாந்தீரிகன், யோபி, கஞ்சன், கீர்த்திசாலி.

    சதுர்தசி:- குரோதம் உடையோன், பிறர் பொருளை அபகரிப்பதில் பிரியன், கோபி, பிறரை துஷ்டிப்பவன்.

    பௌர்ணமி:- புத்தி, விந்தை, பொறுமை, சத்யவான், தயாள சிந்தனை உடையோன், கலங்க முடையோன், உக்ரமுள்ள தேவதையை பூஜிப்பவன்.

    • சாப்பிடாமல் இறைவனை எண்ணி இருப்பது தான் விரதம் என்று பெயர்.
    • முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும்.

    பெரும்பாலும் குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர். ஆனால் அப்படி இல்லை பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்ல முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.

    குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம்.

    நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச்செய்வார்.

    சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

    பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் திருச்செந்தூரில் கோவிலிலேயே தங்கி விரதம் மேற்கொள்வது வழக்கம். இவர்கள் தினமும் காலையில் கடலில் குளித்து, பின்னர் அங்குள்ள நாழி கிணற்றிலும் குளித்து முருகப்பெருமானை தரிசித்து விரதத்தை தொடங்க வேண்டும். நெய் விளக்கேற்றி வழிபடலாம் கோவிலில் சென்று விரதம் இருக்க முடியாதவர்கள், வீட்டிலேயே விரதம் இருக்கலாம்.

    சாப்பிடாமல் இறைவனை எண்ணி இருப்பது தான் விரதம் என்று பெயர். அப்படி சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் கோவிலில் கொடுக்கப்படும் பால், பழம் சாப்பிடலாம். தேன், திணைமாவு என கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடலாம். காலை மற்றும் மாலையில் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும்.

    வீட்டின் அருகில் முருகன் கோவில் இல்லை அல்லது வெளிநாட்டில் இருக்கின்றீர்கள் என்றால் வீட்டிலேயே முருகனின் புகைப்படம், சிலையை வைத்து நெய் விளக்கு ஏற்றி வணங்கி விரதத்தை மேற்கொள்ளலாம்.

    • சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி.
    • ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும்.

    ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒருநாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது ஆடிப்பெருக்கில்...

    காவிரி நீர் அபிஷேகம்!

    நாமக்கல்லில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோகனூர். இந்த தலத்தில் உள்ள சுவாமியின் திருநாமம் ஸ்ரீ அசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் எப்போதும், அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம் தீபம்; ஆகவே இந்தத் திருநாமம் ஈசனுக்கு!

    இந்தத் தலத்தின் சிறப்பு... சுவாமியை தரிசித்தபடி அப்படியே திரும்பினால், காவிரித்தாயை தரிசிக்கலாம். காவிரி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது என்பர்! எனவே காசிக்கு நிகரான திருத்தலம் எனப்போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு, காவிரி நீரால் அபிஷேகித்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

    சூரிய பூஜை காணும் முருகன்

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.

    காவிரித் தாயாருக்கு சீர்வரிசை!

    ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும். இதனைக் காண அரங்கன், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!

    ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரித் தாயாருக்கு மாலை, தாலிப்பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.

    காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாகக் கூடி, பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

    • முருகன் என்றதுமே தமிழ் மக்களின் உள்ளமெல்லாம் உருகும்.
    • முருகன்பால் தமிழ் மக்களுக்கு எல்லை இல்லாத பக்தியுண்டு.

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..!

    முருகன் வீற்றிருக்கும் அத்தனை திருத்தலங்களும் வரும் திங்கட்கிழமை ஆடிக்கிருத்தியை முன்னிட்டு கோலாகல விழாவுக்கு தயாராகி கொண்டு இருக்கின்றன.

    தமிழகத்து மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வமான முருகன், கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்தி வருகின்றான்.

    முருகன் என்றதுமே தமிழ் மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன்பால் தமிழ் மக்களுக்கு எல்லை இல்லாத பக்தியுண்டு.

    தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைந்திருக்கின்றன. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள்.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

    கந்தவேல் முருகனுக்கு அரோகரா...

    • நிறைவாக தராகசுரனை எதிர்கொண்ட முருகப்பெருமான் திருப்போரூரில் அவனது ஆணவத்தை அடக்கினார்.
    • 16-ம் நூற்றாண்டில் சிதம்பர சாமிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.

    Thiruporur Kandaswamy temple

    தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் திருத்தலங்களில் எல்லாம் இன்று ''கந்தனுக்கு அரோகரா'', ''முருகனுக்கு அரோகரா'', ''வெற்றி வேல்'', ''வீரவேல்'' போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் கோஷங்கள் கேட்டபடி உள்ளன.

    முருகப்பெருமான் இப்பூலவுகில் அவதாரம் எடுத்ததன் நோக்கமே, அசுரர்களை சம்ஹாரம் செய்து அழிப்பதற்குதான். அந்த அவதார நோக்கம் நிறைவு பெறும் திருநாளாக இன்றைய தினம் திகழ்கிறது.

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதுவது போல முருகன் வீற்றிருக்கும் இடங்களில் எல்லாம் (திருத்தணி தவிர) இன்று சூரன் சம்ஹாரம் செய்யப்படுவான்.

    இந்த சூரன் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய 3 வடிவங்களில் தோன்றி கடும் அட்டகாசம் செய்து வந்தான்.

    திருச்செந்தூரில் சூரபத்மன் எனும் மாயையை முருகன் அடக்கினார். இந்த போர் திருச்செந்தூர் கடலில் நடந்தது. அடுத்து திருப்பரங்குன்றத்தில் அசுரர்களுடன் போரிட்ட முருகப்பெருமான் வினைப்பயன் எனும் கன்மத்தை அழித்தார். இந்த போர் நிலத்தில் நடந்தது.

    நிறைவாக தராகசுரனை எதிர்கொண்ட முருகப்பெருமான் திருப்போரூரில் அவனது ஆணவத்தை அடக்கினார். இந்த போர் விண்ணில் நடந்தது. இப்படி முருகப்பெருமான், தனது அவதார லட்சியத்தை திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகிய மூன்று தலங்களில் நிறைவேற்றினார்.

    இந்த மூன்று தலங்களில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் இரண்டும் அறுபடை வீடு தலங்களாகும். திருப்போரூர் தலம் படை வீடுகளில் ஒன்றாக இடம் பெறா விட்டாலும் அவற்றுக்கு நிகரான சிறப்பும், மகிமைகளும் கொண்டது. சென்னை அருகில் இருக்கும் இத்தலம், மிக மிக தொன்மையானது. பிரளயத்தால் 6 தடவை அழிந்த இத்தலம் 7-வது தடவையாக கட்டப்பட்டுள்ளது.

    முருகப்பெருமானே, சிதம்பரசாமி என்பவரை ஆட்கொண்டு, இங்கு தற்போதுள்ள கோவிலை கட்ட வைத்தார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அதிசயம் நடந்தது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    16-ம் நூற்றாண்டில் சிதம்பர சாமிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார். தண்டபாணி சுவாமிகள், சீரடி சாய்பாபா போன்றே இவரது பெற்றோர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

    மதுரை மீனாட்சி அம்மையின் குழந்தை போல இவர் வளர்ந்தார். ஒருநாள் இவர் தியானம் செய்தபோது மயில் ஒன்று தோகை விரித்தாடுவது போன்ற காட்சியைக் கண்டார்.

    அதற்கு விடை காண மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று 45 நாட்கள் கடும் தவம் செய்தார். பிறகு மதுரை மீனாட்சி கலி வெண்பா பாடினார்.

    இதனால் மனம் மகிழ்ந்த மீனாட்சியம்மை, சிதம்பரசாமிக்கு காட்சி கொடுத்து, ''வடக்கில் யுத்தபுரி என்று ஒரு ஊர் உள்ளது. அங்கு குமரனின் திருமேனியையும், பழைய ஆலயத்தையும் கண்டுபிடித்து புதிய கோவில்கட்டு'' என்று உத்தரவிட்டாள்.

    உடனே சிதம்பர சாமிகள் யுத்தபுரி எனப்படும் திருப்போரூருக்கு புறப்பட்டு வந்தார். அந்த காலக்கட்டத்தில் அந்த இடம் பனை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.

    அங்கு பெண் பனைமரம் ஒன்றின் கீழ் முருகப்பெருமான் ஒரு புற்றுக்குள் சுயம்பு உருவில் இருப்பதை கண்டுபிடித்தார். அதை எடுத்து சென்று தன் குடிலில் வைத்து பூஜை செய்து வந்தார்.

    ஒருநாள் அவர் கனவில் பழைய முருகன் கோவில் அமைப்பும், அது பூமியில் புதைந்துகிடக்கும் இடமும் தெரியவந்தது. சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் திருப்பணி செய்த அந்த இடத்திலேயே சிதம்பரசாமிகள் புதிய கோவிலை கட்ட முடிவு செய்தார்.

    அந்த இடம் அப்போது ஆற்காடு முஸ்லிம் நவாப் மன்னரின் சொத்தாக இருந்தது. மன்னரின் மகளுக்கு தீராத வயிற்று வலி இருந்தது.

    அந்த வியாதியை சிதம்பரசாமிகள் குணப்படுத்தினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆற்காடு நவாப், அங்கு முருகனுக்கு கோவில் கட்ட, 650 ஏக்கர் நிலத்தை கொடுத்து கோவில் கட்ட உதவிகள் செய்தார்.

    சிதம்பரசாமிகள் கோவில் கட்டும் தகவல் அறிந்ததும், நிறைய பேர் தாமாகவே முன் வந்து பொருள் உதவி செய்தனர். கோவிலை கட்டி முடித்த பிறகு, அந்த ஆலயத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிதம்பர சாமிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.

    அப்போது ஒரு சிறுவன் அவரிடம் வந்தான். ''என்ன பெயர் வைப்பதில் குழப்பமாக உள்ளதா?'' என்றான். சிதம்பரசாமிகள் ஆச்சரியத்துடன் அந்த சிறுவனை பார்க்க அவன், ''என் பெயர் கந்தன். உங்கள் பெயர் சிதம்பரசாமி. இரண்டையும் சேர்த்து ''கந்தசாமி கோவில்'' என்று வைக்கலாமே என்று கூறியபடி கோவில் கருவறைக்குள் சென்று மறைந்து விட்டான்.

    இதன் மூலம் இந்த கோவிலை கட்ட வைத்ததோடு, அதற்கு பெயர் சூட்டியதும் முருகப்பெருமானே என்பதை அறியலாம். இத்தலத்துக்கு ஆதிகாலத்தில் தாருகாபுரி, சமராபுரி, போரியூர், செருவூர், சமரப்பதி, சமதளப்பூர் என்றெல்லாம் பெயர்கள் இருந்தன. அந்த காலத்து மண்டபத் தூண்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் கி.பி.691-ல் இரண்டாம் நரசிம்ம பல்லவன், 1076-ல் முதலாம் குலோத்துங்க சோழன் இத்தலத்தில் திருப்பணிகள் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    மூலவர் சுயம்பு மூர்த்தி என்பதால், முக்கிய பூஜைகள் நடத்துவதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேல் உள்ள இந்த யந்திரத்தில் முருகனின் 300 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இந்த யந்திரத்துக்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும். வியாபாரம் பெருகும் என்பது ஐதீகம்.

    கோவில் சுற்றுச்சுவரில் முருகரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் எனும் சேவல் வடிவசிலை உள்ளது. இவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பாஸ்போர்ட், விசா தொடர்பான சிக்கல்கள் தீரும்.

    மூலவர் சுயம்பு என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டும் சாத்துகிறார்கள். இவர் பிரம்மன் போன்று அட்சரமாலை, கண்டிகை கொண்டும் சிவன் போன்று வலது கையால் ஆசீர்வதிக்கும் அபயஹஸ்த நிலை கொண்டும், விஷ்ணு போன்று இடது கையை தொடையில் வைத்து ஊரு ஹஸ்த நிலையிலும் என மும்மூர்த்திகளின் அம்சமாக உள்ளார்.

    இதனால் ஐப்பசி மாதம் முருகனுக்கு அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி நாளில் 4 காலை பூஜை நவராத்திரி 9 நாட்களும் வள்ளி, தெய்வானைக்கு 9 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் எந்த முருகர் தலத்திலும் இத்தகைய வழிபாடு நடத்தும் பழக்கம் இல்லை.

    இத்தலத்தில் பனை மரத்தில் செய்யப்பட்ட பாத்திரம் ஒன்றை புனிதமாக கருதி பாதுகாத்து வருகிறார்கள். முருகன் சிலையை கண்டெடுத்த சிதம்பர சுவாமிகள் இந்த பனை பாத்திரத்தில்தான் முருகன் சிலையை வைத்திருந்தாராம்.

    கோவில் பிரகாரத்தில் சிவபெருமான், வான்மீகநாதர் என்ற பெயரில் குடும்பத்தோடு உள்ளார். அங்குள்ள அம்பிகைக்கு புண்ணிய காரணியம்மன் என்று பெயர். தீபாவளிக்கு மறுநாள் வரும் விரதமான கேதார கவுரி விரத தினத்தன்று இந்த அம்மனுக்கு இளம்பெண்கள் அதிரசம் படைத்து வழிபட்டால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

    இத்தலத்தில்தான் அகத்திய முனிவர் பிரணவ பொருளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டார். இதனால் இத்தலத்து சன்னதிகள் ஓம் வடிவில் உள்ளன.

    ஒரு தடவை பெருமாள், லட்சுமி இருவருக்கும் கான்வ முனிவரால் சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தை பெருமாளும், லட்சுமியும் இத்தலத்துக்கு வந்து நிவர்த்தி பெற்றனர். இத்தகைய சிறப்புடைய இத்தலத்தில் விநாயகர் கிழக்கு நோக்கி உள்ளார். அவரை வழிபட்ட பிறகு ராஜகோபுரம் வழியே உள்ளே செல்ல வேண்டும். அதற்கு முன்பாகவே வட்ட வடிவிலான மண்டபத்தில் கொடி மரம், மயில் வாகனம், பலி பீடம் உள்ளது. பலி பீடம் முன்பு பக்தர்கள் உப்பு, மிளகு கொட்டி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    ராஜகோபுரத்தை கடந்து 24 கால் மண்டபம் வழியாக சென்றால் வலது பக்கம் தெய்வானை சன்னதி, இடது பக்கம் வள்ளி சன்னதியை காணலாம். தெய்வானை சன்னதி அருகில் கோவில் கட்ட நிலம் கொடுத்த ஆற்காடு நவாப் படம் வரையப்பட்டுள்ளது. கருவறை எதிரே வெள்ளை யானையான ஐராவதம் உள்ளது.

    பக்கத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. நமது மனக்கவலைகள் தீர நாம் மறக்காமல் இந்த யந்திரத்தை வழிட வேண்டும். இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஆனால் சூரியன், சனி ஆகிய இரு கிரகங்களுக்கு மட்டும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிய மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டும் பெண்கள் இந்த மரத்தில் தொட்டி கட்டி சென்றால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

    திருமணம் வரம் கோரியும் இந்த மரத்தில் மஞ்சள் கயிற்றால் முடிச்சுப்போட்டு கட்டுகிறார்கள். அந்த வகையில் இத்தலம் மிகச் சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது. கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில் கோவிலை கட்டிய சிதம்பர சாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது. திருப்போரூர் முருகன் மீது 726 பாடல்கள் பாடிய இவர், ஒரு வைகாசி விசாக தினத்தன்றுதான் முருகனோடு இரண்டற கலந்தார். எனவே வைகாசி விசாகத்தன்று முருகன் எதிரே, சிதம்பரசாமி சிலையை வைத்து, அவர் மூலவருடன் இரண்டற கலப்பது போல பாவனை செய்வார்கள்.

    ஆண்டு முழுவதும் விழா கோலமாக காணப்படும் இத்தலத்தில் சஷ்டி, கிருத்திகை, பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கந்த சஷ்டி மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வல்லவ விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷே கம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

    ×