என் மலர்
வழிபாடு

குழந்தை பாக்கியம் அருளும் சஷ்டி தேவதை
- திதி தேவதை பிரம்ம தேவனின் மானச புத்ரி.
- முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது.
சஷ்டி என்பவள் ஒரு திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். சஷ்டி எனும் திதி தேவதையானவள் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள்.
இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை. மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிருந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள்.
திதி தேவதை பிரம்ம தேவனின் மானச புத்ரி. முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்ததால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தெய்வானை என்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியாகத் திகழ்ந்த (தேவசேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள். அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது.






