என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ராமேசுவரம் கோவிலில் சுமார் 1 லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் நடராஜர் -சிவகாமி அம்பாளுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 9-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் தினந்தோறும் ராமநாத சுவாமி, மாணிக்கவாசகர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலில் உள்ள 3-ம் பிரகாரத்தை வலம் வந்தனர்.

    கடைசி நாளான இன்று அதிகாலையில் ராமநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடராஜர் -சிவகாமி அம்பாள் ஆகியோர் தங்க கேடயத்தில் 3-ம் பிரகாரத்தில் எழுந்தருளினர். அங்கு சுமார் 1 லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் நடராஜர் -சிவகாமி அம்பாளுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக 7 திரைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு ஒவ்வொரு திரை திறப்பின்போது சிறப்பு பூஜை நடந்தது.

    7-வது திரையான வெண்திரை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீப கொப்பரையிலிருந்து சேமிக்கப்பட்ட தீப மை நடராஜருக்கு திலகமிட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெற்று வந்தது.

    இதன் நிறைவாக நேற்று மாலை நடராஜர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி - அம்மன் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கோவில் ராஜ கோபுரம் அருகில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இன்று அதிகாலை நடராஜர் -சிவகாமி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதன்பின்னர் ராகுகாலம் தொடங்கியதால் 7.30 முதல் 9 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற ஆருத்ரா சிறப்பு வழிபாடுகள் நிறுத்தப்பட்டது.ஆயிரங்கால் மண்டபத்தின் நடை மூடப்பட்டது.

    இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    இதனால் தொடர்ந்து நடைபெறும் அலங்கார தீபாராதனையை காண உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபம் முன்பு 9மணிவரை காத்திருந்தனர். ஏராளமான.போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் 9 மணிக்கு மீண்டும் ஆயிரங்கால் மண்டபத்தின் நடை திறக்கப்பட்டு நடராஜர் -சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளின் போது மாணிக்கவாசகர் பாடல்கள் ஓதுவார்கள் மூலம் பாடப்பட்டது.

    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீப கொப்பரையிலிருந்து சேமிக்கப்பட்ட தீப மை நடராஜருக்கு திலகமிட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

    அங்கு வழிபாடுகள் நிறைவு பெற்றதும் நடராஜர் சிவகாமியம்மன் நடனமாடி வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது பஞ்ச வாத்தியங்கள் முழங்க பட்டன.

    பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் -சிவகாமி அம்மன் மாணிக்கவாசகர் மாட வீதியில் உலா வந்தனர்.அங்கு திரண்ட பக்தர்கள் சுவாமி -அம்மனுக்கு புத்தாடைகள் வழங்கியும், அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்தனர்.
    13 வகையான சாபங்கள் இருக்கின்றன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த சாபங்களால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
    13 வகையான சாபங்கள் இருக்கின்றன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அவை: 1. பெண் சாபம் 2. பிரேத சாபம் 3. பிரம்ம சாபம் 4. சர்ப்ப சாபம் 5. பித்ரு சாபம் 6. கோ சாபம் 7. பூமி சாபம் 8. கங்கா சாபம் 9. விருட்ச சாபம் 10. தேவ சாபம் 11. ரிஷி சாபம் 12. முனி சாபம் 13. குலதெய்வ சாபம்.

    1. பெண் சாபம்:

    பெண்களை ஏமாற்றுவதாலும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் இந்த சாபம் ஏற்படக்கூடும். இந்த சாபத்தால் வம்சம் அழியும்.

    2. பிரேத சாபம்:

    இறந்த மனிதரின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவது, அவருடைய உடலை தாண்டுவது, இறுதி சடங்கு காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் நெருங்கிய உறவுகளை பார்க்க அனுமதி மறுப்பது பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

    3. பிரம்ம சாபம்:

    தமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, அந்த வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் அந்த வித்தையை மறைப்பது பிரம்ம சாபத்துக்கு வழிவகுக்கும். இதனால் படிப்பு தடைபடும்.

    4. சர்ப்ப சாபம்:

    பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்படும்.

    5. பித்ரு சாபம்:

    முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை, தாத்தா-பாட்டி போன்றவர்களை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்.

    6. கோ சாபம்:

    பசுவை வதைப்பது, பால் சுரப்பு நின்ற பசுவை இறைச்சிக்கு வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவை பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ, வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

    7. பூமி சாபம்:

    ஆத்திரத்தில் பூமியை காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

    8. கங்கா சாபம்:

    பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் படுத்துவதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் நேரும். இந்த சாபத்தால் சொந்த நிலத்தில் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

    9. விருட்ச சாபம்:

    மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீட்டு மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

    10. தேவ சாபம்:

    தெய்வங்களின் பூஜையை பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

    11. ரிஷி சாபம்:

    கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் இந்த சாபம் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

    12. முனி சாபம்:

    எல்லை தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

    13. குலதெய்வ சாபம்:

    நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை வழிபடாமல் இருப்பதால் இந்த சாபம் நேரும். குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
    ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கோவில் வளாகத்துக்குள் தேர் மற்றும் தரிசன விழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றாலும் திருவிழா நடத்த அனுமதிகோரி பக்தர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.

    அதன்படி கடந்த 11-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமிகள் வீதிஉலா நடத்தப்பட்டது. தற்போது ஒமைக்ரான் பரவி வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேர் மற்றும் தரிசன விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    இதனையறிந்த சிவனடியார்கள், பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேர்த்திருவிழா, ஆருத்ரா தரிசன விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அனுமதி வழங்கினார்.

    அதன் பின்னர் நேற்று காலை பக்தர்கள் புடைசூழ நடராஜர் கோவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 4 ரதவீதிகளில் வலம் வந்த தேர் மாலையில் கீழரத வீதியில் நிலையை அடைந்தது.

    நேற்று இரவு முழுவதும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று (20-ந் தேதி) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.

    காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா காட்சி நடந்தது.

    இன்று மாலை 3 மணியளவில் ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. இதையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளிப்பார்கள்.

    இதனையடுத்து நடன பந்தல் வழியாக சுவாமிகள் கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    நாளை (21-ந் தேதி) முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
    பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவில் ஆகும்.
    மிக புகழ் பெற்ற இந்த கோவில் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தொடங்குகிறது.

    மகரிஷிகள், துறவியர்கள், சுற்று வட்டாரத்தை ஆண்ட சிற்றரசர்கள், முன்கால சேர, சோழ, பாண்டிய நாட்டு அரசர்கள், வேணாட்டு அரசர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியாளர்கள், பிற்கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள், திருவிதாங்கூர் மன்னர்கள், முன்னாள் கோவில் நிர்வாகிகளாக இருந்த யோகஸ்தானிகர்கள், ஊர் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரால் இந்த அழகான கோவிலின் பல பாகங்கள் பல காலங்களில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

    கல்வெட்டுகள்

    கொன்றையடி மிகவும் பழமை வாய்ந்தது. அங்குள்ள கொன்றை மரம் 2000 வருடங்களுக்கு முன் உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியில் அறியப்பட்டது. ஆலயத்தின் உள் கருவான இந்த மையத்தை வைத்துதான் இந்த கோவில் எழுந்துள்ளது. முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது. வடகேடம் என்ற அதில் தாணு மாலய மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். தெக்கேடம் என்ற மகாவிஷ்ணு திருவெங்கிடபெருமாளாக காட்சி தருகிறார். பாறையின் மேல் உயரமாக அமைந்துள்ள கைலாய நாதர் கோவில் மண்டபம் 5-ம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாக கல்வெட்டுகள் சாட்சியம் அளிக்கிறது.

    மணிமண்டபம்

    1238-ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் கண்டியூர் உண்ணி என்பவரால் கட்டப்பட்டு அதன் நித்திய செலவுக்கு உள்ள வஸ்து வகைகள் விட்டுக் கொடுக்கப் பட்டதற்கு ஆதாரம் உள்ளது. அறம் வளர்த்தம்மன் கோவில் 1444-ம் ஆண்டு தேரூரில் உள்ள பள்ளியறை நாச்சியார் குடும்பத்தாரால் கட்டப்பட்டதாகும். வீர பாண்டியன் மணி மண்டபத்திற்கு முன்பாக மிகப்பெரிய அரிய வகை கலை சிற்பங்கள் நிறைந்த செண்பக ராமன் மண்டபம் வேணாட்டு ராஜாவான ராமவர்ம ராஜாவால் 1471-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    ராஜகோபுரம்

    1545-ம் ஆண்டு மிகவும் எழில்மிக்க ராஜகோபுரம் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 1888-ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் கோபுரம் சீர் செய்யப்பட்டது. 1587-ம் ஆண்டு கோவில் நிர்வாகிகளான யோகஸ் தானிகர் தெற்கு மண்டபத்தில் புருஷோத்தமரு நீலகண்டரு என்பவரால் பெரிய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. முக்குறுணி பிள்ளையார் என்று கூறும் அந்த கணபதியின் நித்திய செலவுக்கு தேவையான வஸ்து வகைகளையும் விட்டுக் கொடுத்துள்ளார்.

    அதனால் அது “நீலகண்ட விநாயகர்” என்று இப்போதும் அழைக்கப்படுகிறது. அவரது செயல்களை பெருமைப்படுத்த கோவில் மேலாளர் அலுவலகத்திற்கு முன்னால் தெற்கு பக்கமாக அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.
    வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும். அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
    உத்தரகோசமங்கையில் உள்ள நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆனது. அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.

    ஒளிவெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும். அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பதைக் காணலாம். எனவே இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.

    இந்த நடராஜர் விக்ரகம் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது. எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை. எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.

    வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும். அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    அதனைத்தொடர்ந்து நடராஜர் சிலைமீது சந்தனாதி தைலம் பூசப்பட்ட பின்னர் வெண்ணெய், சந்தனம், குங்குமம், மஞ்சள் திரவியம், தேன், பால், தயிர், இளநீர் உள்பட 32 வகையான அபிஷேகம் நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். மேலும் நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதனை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இதையடுத்து அன்று இரவு சரியாக 12 மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.
    திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் வருடாந்திர தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர்களான சண்டிகேஸ்வரர், சந்திரசேகர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் நடந்து வந்தது. அதன் நிறைவு நாளான நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் மண்டபத்தில் ஏகாந்தமாக உற்சவர்களான சண்டிகேஸ்வரர், சந்திரசேகர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேவஸ்தான வேத பண்டிதர்கள் கோவிலில் வேத பாராயணம் செய்தனர். தேவஸ்தான அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்களின் சங்கீர்த்தனம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    உற்சவத்தில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கோவில் கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர் மற்றும் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    நடராஜரின் அருளை பெற இந்த 108 நடராஜர் போற்றியை (Natarajar 108 Potri) தினமும் சொல்லி, பிரதி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் படிக்கவும்.
    1. ஓம் நடராஜனே போற்றி…
    2. ஓம் நடனகாந்தனே போற்றி…
    3. ஓம் அழகனே போற்றி…
    4. ஓம் அபயகரனே போற்றி…
    5. ஓம் அகத்தாடுபவனே போற்றி…
    6. ஓம் அஜபா நடனனே போற்றி…
    7. ஓம் அம்பல வாணனே போற்றி…
    8. ஓம் அம்ச பாத நடனனே போற்றி…
    9. ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி…
    10. ஓம் அர்க்கமலர்ப் பிரியனே போற்றி…
    11. ஓம் அருள் தாண்டவனே போற்றி…
    12. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி…
    13. ஓம் ஆடலரசனே போற்றி…
    14. ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி…
    15. ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி…
    16. ஓம் ஆடியடக்குபவனே போற்றி…
    17. ஓம் ஆபத்பாந்தவனே போற்றி…
    18. ஓம் ஆதிசேஷனுக்கு அருளியவனே போற்றி…
    19. ஓம் இசையரசனே போற்றி…
    20. ஓம் இன்னிசைப்பிரியனே போற்றி…
    21. ஓம் ஈரெண் கரனே போற்றி…
    22. ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி…
    23. ஓம் உடுக்கையனே போற்றி…
    24. ஓம் உன்மத்த நடனனே போற்றி…
    25. ஓம் உண்மைப் பொருளே போற்றி…

    26. ஓம் உமாதாண்டவனே போற்றி…
    27. ஓம் ஊழித் தாண்டவனே போற்றி…
    28. ஓம் ஊர்த்துவ தாண்டவனே போற்றி…
    29. ஓம் கலையரசனே போற்றி…
    30. ஓம் கங்காதரனே போற்றி…
    31. ஓம் கமல நடனனே போற்றி…
    32. ஓம் கனக சபையனே போற்றி…
    33. ஓம் கருணாமூர்த்தியே போற்றி…
    34. ஓம் கங்கை அணிந்தவா போற்றி…
    35. ஓம் கால்மாறியாடியவனே போற்றி…
    36. ஓம் காளிகா பங்க தாண்டவனே போற்றி…
    37. ஓம் கிங்கிணி பாதனே போற்றி…
    38. ஓம் குக்குட நடனனே போற்றி…
    39. ஓம் கூத்தனே போற்றி…
    40. ஓம் கூழ் ஏற்றவனே போற்றி…
    41. ஓம் கவுரி தாண்டவனே போற்றி…
    42. ஓம் கவுமாரப் பிரியனே போற்றி…
    43. ஓம் சடை முடியனே போற்றி…
    44. ஓம் சத்ரு நாசகனே போற்றி…
    45. ஓம் சமர்த்தனே போற்றி…
    46. ஓம் சதுர தாண்டவனே போற்றி…
    47. ஓம் சந்தியா தாண்டவனே போற்றி…
    48. ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி…
    49. ஓம் சித் சபையனே போற்றி…
    50. ஓம் சிவசக்தி ரூபனே போற்றி…

    51. ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி…
    52. ஓம் சுந்தர தாண்டவனே போற்றி…
    53. ஓம் சூலதாரியே போற்றி…
    54. ஓம் சூழ்ஒளியனே போற்றி…
    55. ஓம் ஞான தாயகனே போற்றி…
    56. ஓம் ஞான சுந்தர தாண்டவனே போற்றி…
    57. ஓம் திரிபுராந்தகனே போற்றி…
    58. ஓம் திரிபுர தாண்டவனே போற்றி…
    59. ஓம் திருக்கூத்தனே போற்றி…
    60. ஓம் திருவாதிரைத் தேவனே போற்றி…
    61. ஓம் திருவடிவனே போற்றி…
    62. ஓம் தில்லை வாணனே போற்றி…
    63. ஓம் துர்தூரப்ரியனே போற்றி…
    64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி…
    65. ஓம் தேவசபையனே போற்றி…
    66. ஓம் தேவாதி தேவனே போற்றி…
    67. ஓம் நாத ரூபனே போற்றி…
    68. ஓம் நாகராஜனே போற்றி…
    69. ஓம் நாகாபரணனே போற்றி…
    70. ஓம் நாதாந்த நடனனே போற்றி…
    71. ஓம் நிலவணியனே போற்றி…
    72. ஓம் நீறணிந்தவனே போற்றி…
    73. ஓம் நிருத்த சபையனே போற்றி…
    74. ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி…
    75. ஓம் பக்தர்க்கு எளியவனே போற்றி…

    76. ஓம் பரம தாண்டவனே போற்றி…
    77. ஓம் பஞ்ச சபையனே போற்றி…
    78. ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி…
    79. ஓம் பஞ்சாட்சர ரூபனே போற்றி…
    80. ஓம் பாண்டியனுக்கு இரங்கியவனே போற்றி…
    81. ஓம் பிழை பொறுப்பவனே போற்றி…
    82. ஒம் பிருங்கி நடனனே போற்றி…
    83. ஓம் பிரம்படிபட்டவனே போற்றி…
    84. ஓம் பிழம்பேந்தியவனே போற்றி…
    85. ஓம் புலித்தோலனே போற்றி…
    86. ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி…
    87. ஓம் பிரச்னரூபனே போற்றி…
    88. ஓம் பிரதோஷத் தாண்டவனே போற்றி…
    89. ஓம் மண்சுமந்தவனே போற்றி…
    90. ஓம் மணியணியனே போற்றி…
    91. ஓம் மான்கரனே போற்றி…
    92. ஓம் மழுவேந்தியவனே போற்றி…
    93. ஓம் முக்கண்ணனே போற்றி…
    94. ஓம் முனிதாண்டவனே போற்றி…
    95. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி…
    96. ஓம் முயலக சம்காரனே போற்றி…
    97. ஒம் முக்தியருள்பவனே போற்றி…
    98. ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி…
    99. ஓம் ராஜசபையனே போற்றி…
    100. ஓம் ரட்சக தாண்டவனே போற்றி…

    101. ஓம் ருத்ர தாண்டவனே போற்றி…
    102. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி…
    103. ஓம் ருண விமோசனனே போற்றி…
    104. ஓம் லயிக்க வைப்பவனே போற்றி…
    105. ஓம் லலிதா நாயகனே போற்றி…
    106. ஓம் விரிசடையனே போற்றி…
    107. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி…
    108. ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி… போற்றி…
    ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையப்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் அருள்பாலிக்கும் மரகத நடராஜர் தமிழகத்தில் நடராஜருக்குரிய பஞ்ச சபைகளுக்கு ஈடாக முக்கியத்துவம் பெறுகிறார்.

    இங்குள்ள நடராஜர் சிலை பச்சை மரகத கல்லினால் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை ஒலி-ஒளி அதிர்வு ஏற்பட்டால்கூட சேதம் அடைந்துவிடும். இதன் காரணமாக வருடம் முழுவதும் பச்சை மரகத நடராஜர் சிலைக்கு சந்தனம் பூசப்பட்டு இருக்கும். இந்த சந்தனம் ஒவ்வொரு வருடமும் ஆருத்ரா தரிசனத்தன்று களையப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் சில மணி நேரங்களிலேயே மீண்டும் சந்தனம் சாத்தப்படும். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா காப்புகட்டுதலுடன் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. நேற்று மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைப்பு, மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவில் கூத்தர்பெருமான் கல்தேர் மண்டபத்தில் எழுந்தருளினார். களையப் பட்ட சந்தனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இரவு முழுவதும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    இன்று அதிகாலை மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சந்தனம் சாத்துதலும், தீபாராதனையும் நடந்தது. உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மரகத நடராஜரை தரிசித்தனர்.

    இன்று காலையில் கூத்தபெருமாள் திருவீதி உலா நடந்தது. இதைத் தொடர்ந்து இரவு மாணிக்கவாசகர் சாமிகளுக்கு காட்சி கொடுத்து, சிறப்பு நாதஸ்வரத்தோடு வெள்ளி ரிஷிப வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் ஆருத்ரா விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் கோவில் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    திருவாதிரை தினத்தையொட்டி திருச்சி அருகே உள்ள திருநெடுங்களநாதர், உத்தமர், திருவாசி கோவில்களில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    துவாக்குடியிலுள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன வழிபாடுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

    அதன்படி திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது.

    அப்போது உற்சவர்களான நடராஜர், சிவகாமி சுந்தரி, மாணிக்கவாசகர் ஆகியோ ருக்கு பால், தயிர், இளநீர், தேன் பஞ்சாமிர்தம், பழங்கள், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, தேவ வாத்தியம் இசைக்க மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி நடராஜரை வழிபட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாக அலுவலர் வெற்றிவேல் மற்றும் அர்ச்சகர்கள் சோமசுந்தர சிவாச்சாரியார், ரமேஷ், கணேஷ் சிவாச்சாரியர் சிறப்பாக செய்திருந்தனர்.

    திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக விநாயகர் பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து உற்சவர் நடராஜருக்கு பால், தயிர், தேங்காய் துருவல், தேன், இளநீர், மாதுளை, பன்னீர் உள்ளிட்ட 36 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு கண்டு கோவில் பிரகாரத்தை வலம் வந்து நடராஜருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோன்று திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு பால், தயிர், மஞ்சள்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    பழனி முருகன் கோவிலின் உப. கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாத திருவாதிரை 10 நாட்கள் கொண்டாடப்படும். கடந்த 11-ந் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி நேற்று இரவு பெரியநாயகி அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னூஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிவகாமி அம்மன், சிவபெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது.

    10ம் நாளான இன்று நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடத்தப்பப்டது.

    பின்னர் சிவபூதகண வாத்தியங்கள் முழங்க நடராஜர், சிவகாமியம்மன் 4 ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கொரோனா விதிகளை கடைபிடித்து பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    அதிகாலை 4 மணி முதல் நடந்த இந்த பூஜையில் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருக்கைத்தல சேவையும், நாளை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடக்கிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 3-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 13-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 14-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அன்றையதினம் நம்பெருமாள் ரத்தினஅங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெறுகிறது. அப்போது உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குச நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டுவார்கள். அர்ச்சகர்களின் கைகளில் இருந்து நம்பெருமாள் சேவை சாதிப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு திருக்கைத்தல சேவை என்று பெயர்.

    இதனையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடப்பார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைவார். அங்கு மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணிவரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெறும். மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெறும். இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பரமபதவாசல் திறப்பு கிடையாது. வேடுபறி நிகழ்ச்சியையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணிமுதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ×