search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மரகத நடராஜர் சிலையில் சந்தனகாப்பு களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    மரகத நடராஜர் சிலையில் சந்தனகாப்பு களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    சந்தனகாப்பு களையப்பட்டு பச்சை மரகத மேனியில் காட்சியளித்த அபூர்வ நடராஜர்

    ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையப்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் அருள்பாலிக்கும் மரகத நடராஜர் தமிழகத்தில் நடராஜருக்குரிய பஞ்ச சபைகளுக்கு ஈடாக முக்கியத்துவம் பெறுகிறார்.

    இங்குள்ள நடராஜர் சிலை பச்சை மரகத கல்லினால் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை ஒலி-ஒளி அதிர்வு ஏற்பட்டால்கூட சேதம் அடைந்துவிடும். இதன் காரணமாக வருடம் முழுவதும் பச்சை மரகத நடராஜர் சிலைக்கு சந்தனம் பூசப்பட்டு இருக்கும். இந்த சந்தனம் ஒவ்வொரு வருடமும் ஆருத்ரா தரிசனத்தன்று களையப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் சில மணி நேரங்களிலேயே மீண்டும் சந்தனம் சாத்தப்படும். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா காப்புகட்டுதலுடன் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. நேற்று மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைப்பு, மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவில் கூத்தர்பெருமான் கல்தேர் மண்டபத்தில் எழுந்தருளினார். களையப் பட்ட சந்தனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இரவு முழுவதும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    இன்று அதிகாலை மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சந்தனம் சாத்துதலும், தீபாராதனையும் நடந்தது. உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மரகத நடராஜரை தரிசித்தனர்.

    இன்று காலையில் கூத்தபெருமாள் திருவீதி உலா நடந்தது. இதைத் தொடர்ந்து இரவு மாணிக்கவாசகர் சாமிகளுக்கு காட்சி கொடுத்து, சிறப்பு நாதஸ்வரத்தோடு வெள்ளி ரிஷிப வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் ஆருத்ரா விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் கோவில் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×