என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் மகாபூர்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. யாக நிகழ்ச்சிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் ஏகாந்தமாக நடந்து முடிந்தது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதியில் இருந்து நேற்று வரை 7 நாட்கள் ஸ்ரீயாகம் நடந்தது. இந்த ஸ்ரீயாகம் உலக அமைதிக்காகவும், உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும், நாடு செழிக்க வேண்டும், என்பதற்காகவும் நடத்தப்பட்டது.ஸ்ரீயாகத்தின் நிறைவு நாளான நேற்று மகாபூர்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. யாக நிகழ்ச்சிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் அர்ச்சகர் வேம்பள்ளி சீனிவாசன் தலைமையில் ஏகாந்தமாக நடந்து முடிந்தது.

    நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஹோமம், மஹா பிரயச்சித்த ஹோமம், மகாசாந்தி ஹோமம், காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை மகாபூர்ணாஹுதி, அபிஷேகம் ஆகியவை நடந்தது.ஸ்ரீயாகத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று முடித்து வைத்தார். அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் போகலா அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
    முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக்கூடிய ஆற்றல் பெற்ற நரசிம்மரைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம்.
    நரசிம்மரை பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவர் எளிதானவர். முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக்கூடிய ஆற்றல் பெற்ற நரசிம்மரைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாக பலனும் காண முடியும்.

    தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து, நெய் தீபம் ஏற்றிக் குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு வெல்லத்தினால் செய்த பானகம் நைவேத்தியம் வேண்டும்.

    48 நாள்களாவது விரதம் இருந்து பூஜித்து வர வேண்டும். மாலை நேரத்தில் செய்வது விசேஷப் பலன் தரும். ஏனெனில் அவர் நரசிங்கமாக அவதரித்தது மாலை நேரத்தில்தான்.

    ஆனால் ஒன்று, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மட்டுமின்றி, தெய்வத்தின் எந்த உருவையும், தோஷப் பரிகாரமாகப் பூஜித்து வரும் காலத்தில், அசைவ உணவைத் தவிர்த்து, நீராடி, நியமத்துடனும், தூய்மையான உள்ளத்துடனும் நம்பிக்கை, பக்தியுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    ஸ்ரீநரசிம்மரை பிரதோஷத்தன்று விரதம் இருந்து வழிபடுவது சிறப்பாகும். அன்று மாலை லட்சுமி நரசிம்மர் போட்டோவை வீட்டில் வைத்து சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபடவும்.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் வழிபடலாம். நரசிம்மர் துதியை தினமும் சொல்லி தியானித்து வர ஏவல், பில்லி சூனியம், காரிய தடை, கடன் தொல்லை இவைகள் நீங்கி சுகம் பெறலாம்.

    திருமண தடை உள்ளவர்கள் விரதம் இருந்து பிரதோஷ தினத்தன்று பானகம் வைத்து நரசிம்மரை வழிபட்டு வர வேண்டும். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் கண்டு சுவாமியை வணங்கி 18-ம் படி ஏறுவதன் மூலம் ஐயப்ப பக்தர்களின் விரதம் பூரணம் அடைகிறது.
    சபரிமலை கோவிலை சுற்றி 18 மலைகளும், அங்கு 18 தெய்வங்களும் உள்ளன. அந்த மலைகள் சபரிமலை, பொன்னம்பலமேடு, கவுண்டன்மலை, நாகமலை, சுந்தரமலை, மயிலாடும்மேடு, ஸ்ரீபாதமலை, சிற்றம்பலமேடு, கர்கிமலை, மதாங்கமலை, தேவர்மலை, நிலைக்கல்மலை, தலப்பாறமலை, நீலிமலை, இஞ்சிப்பாறை மலை, காள கெட்டிமலை, கரிமலை, பூதுச்சேரிமலை ஆகியவை ஆகும்.

    18 மலைகளின் நடுவில் 148.48 மீட்டர் உயரத்தில் சபரிமலை உள்ளது. இங்கு கிழக்கு முகதரிசனமாக சுவாமி ஐயப்பன் அமர்ந்துள்ளார். 18 மலை நாயகனுக்கு உகந்தது 18 படிகள். இந்த படிகள் 18 வகை புராணங்களை தெரிவிக்கிறது. இருமுடிகட்டி வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே தங்கத்தகடு வேய்ந்த 18-ம் படியில் ஏறஅனுமதிக்கப்படுவார்கள். நெய் அபிஷேகம் கண்டு சுவாமியை வணங்கி 18-ம் படி ஏறுவதன் மூலம் ஐயப்ப பக்தர்களின் விரதம் பூரணம் அடைகிறது.
    வேளாங்கண்ணி செபஸ்தியார் ஆலய பெரிய தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.இதில் குறைந்த அளவிலான கிறிஸ்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த பேராலயம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு சொந்தமானது. புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இரவு நடந்தது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி பிரார்த்தனை நடந்தது.

    அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செபஸ்தியார் சொரூபம் வைக்கப்பட்டு பவனி நடந்தது. தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.இதில் குறைந்த அளவிலான கிறிஸ்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    ஆண்டு தோறும் செபஸ்தியார், மைக்கேல் சம்மனசு, புனித அந்தோணியார் ஆகிய 3 தேர்பவனி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக செபஸ்தியார் தேர்பவனி மட்டும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க முக்குலத்தோர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
    வால்பாறையில் தூய இருதய ஆலய திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    வால்பாறையில் தூய இருதய ஆலயத்தின் தேர்த்திருவிழாவும், புனித செபஸ்தியாரின் திருவிழாவும் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு கோவை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையிலும், பங்கு குரு மரியஜோசப் முன்னிலையிலும் கூட்டு பாடல் தேர்த் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.திருப்பலியின் தொடர்ச்சியாக தேவாலயத்தை சுற்றி புனித செபஸ்தியாரின் அம்பு நேர்ச்சிக்கடன் பவனி ஒவ்வொரு குடும்பத்தினர் சார்பிலும் நடைபெற்றது. பின்னர் அன்பின் விருந்தும் நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பங்கு மக்களின் சார்பில் முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையிலும், சமூக சேவாமையத்தின் இயக்குனர் குரு அருண் முன்னிலையிலும் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தை சுற்றி தூய இருதய ஆண்டவர் மற்றும் புனித செபஸ்தியாரின் உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். இதையடுத்து வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிற்றாலயம் மந்தரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் பங்கு மக்கள், வாழைத்தோட்டம் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்-அவுஸ் இருசப்ப தெருவில் உள்ள எட்டாம்படை முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்-அவுஸ் இருசப்ப தெருவில் எட்டாம்படை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, நவகிரக சாந்தி ஹோமம், கும்ப அலங்காரம், யாக சால பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று 4-ம் கால யாக பூஜையும், கடம் புறப்பாடும், அதன் பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கும், அதைதொடர்ந்து மூலவர் முருகனுக்கும் மகா கும்பாபிஷேகம், மகாஅபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

    மாலையில் திருக்கல்யாண விழாவும், இரவு சாமி புறப்பாடும் நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் முன்னிலையில் ஆலய நிர்வாகி கே.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
    உப்பில்லாத நைவேத்தியங்களை ஏற்பதால், ‘உப்பிலியப்பன்’என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ‘ஒப்பிலியப்பன்’ என்றும் இத்தல பெருமாளுக்கு பெயர் வந்தது.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்குள்ள நாகநாதசுவாமி ஆலயத்தின் அருகில், உப்பிலியப்பன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பை இங்கே பார்க்கலாம்.

    சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 13-வது தலமாக திகழ்கிறது.

    நம்மாழ்வாருக்கு இந்த ஆலயத்தில், திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் ஆகிய ஐந்து கோலங்களில் பெருமாள் காட்சி தந்தருளினார். இதில் முத்தப்பன் சன்னிதி இப்போது இல்லை.

    உப்பில்லாத நைவேத்தியங்களை ஏற்பதால், ‘உப்பிலியப்பன்’என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ‘ஒப்பிலியப்பன்’ என்றும் இத்தல பெருமாளுக்கு பெயர் வந்தது.

    இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, 12 ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவர்களான, நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    கருவறையில் நின்ற கோலத்தில் உப்பிலியப்பனை தரிசிக்கலாம். அவருக்குவலது புறத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பூமாதேவியும், இடதுபுறத்தில் மார்க்கண்டேயரும் காட்சி தருகின்றனர்.

    பாதம் நோக்கியபடி இருக்கும் மூலவரின் வலது கரத்தில் ‘மாம் ஏகம் சரணம் விரஜ’ என்று எழுதப்பட்டிருக்கும். கீதை உபதேசமான இதற்கு, ‘என்னை சரணடைபவர்களை காப்பேன்’ என்பது பொருள்.

    பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு இடதுபுறத்தில்தான் பூமாதேவி இருப்பார். பூமாதேவியை பெருமாள் மணம் முடித்த தலம் இது என்பதால், இறைவனுக்கு வலதுபுறத்தில் தாயார் இருக்கிறார். தன் மகளாக அவதரித்த பூமாதேவியை, பெருமாளுக்கு மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது, ‘மகளை ஒருபோதும் பிரியக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தார். எனவே உற்சவ காலங்களில் கூட, பெருமாள் தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.

    திருமால், மார்க்கண்டேயரிடம் பெண் கேட்டுவந்தது ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரம் ஆகும். பெருமாள், பூமாதேவி திருமணம், ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் நடந்தது. எனவே இந்த ஆலயத்தில் ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் இறைவனுக்கு, சாம்பிராணிதூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை தரிசித்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    திருப்பதி வெங்கடாஜலபதிக்கு இருப்பது போல, தனி சுப்ரபாதம் இத்தல உப்பிலியப்ப பெருமாளுக்கு உண்டு.

    மார்க்கண்டேயர் வழிபாடு செய்த திருத்தலம் என்பதால், இங்கு ஆயுள் விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் ஆகியவை நடத்தப்படுகிறது.

    ஆவணி திருவோண நட்சத்திரம் அன்று, காலையில் பெருமாள்கருட வாகனத்தில் ‘உதய கருட சேவை’ புரிவார். பின் ‘தட்சிண கங்கை’ என்று அழைக்கப்படும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுவார். தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெறும்.
    தல வரலாறு

    மார்க்கண்டேய மகரிஷிக்கு மகளாக துளசி செடியின் கீழ் பூமாதேவி அவதரித்தாள். அவளுக்கு ‘துளசி’ என்று பெயரிட்டு வளர்த்தார், மார்க்கண்டேயர். திருமண வயது வந்ததும், திருமால் ஒரு வயோதிகர் வடிவில் வந்து துளசியை பெண் கேட்டார். மார்க்கண்டேயர் மறுத்துவிட்டார். ஆனாலும் முதியவர் வேடத்தில் வந்த பெருமாள் விடவில்லை. அப்போது மார்கண்டேயர் “என் மகள் சிறு பெண். அவளுக்கு உணவில் சரியாக உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது. அப்படிப்பட்ட பெண்ணை நீங்கள் மணம் முடிப்பது சரியாக இருக்காது” என்றார். அதற்கு முதியவராக வந்த பெருமாள், “உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக்கொள்கிறேன்” என்றார். அவரது உறுதியைக் கண்டு, வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தனது மகளை பெருமாளுக்கு மணம் முடித்துக் கொடுத்ததாக தல வரலாறு சொல்கிறது.
    சபரிமலையில் பூக்கள் அலங்காரம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.50 ஆயிரம் செலுத்தி புஷ்ப அலங்காரத்திற்கான அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் படிபூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    படிபூஜைக்கு ரூ.75 ஆயிரம் கட்டணம் பக்தர்கள் செலுத்த வேண்டும். தற்போது 2040-ம்ஆண்டு வரை பக்தர்கள் படிபூஜைக்கு முன்பதிவு செய்துள்ளனர். இதில் இருந்தே படிபூஜையின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

    அதேபோல ரூ.40ஆயிரம் கட்டணத்தில் நடத்தப்படும் உதயாஸ்தமன பூஜைக்கு 2026-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். திருவிழாவின் போது நடத்தப்படும் உத்சவபலி பூஜைக்கு கட்டணம் ரூ.30 ஆயிரம் ஆகும். சபரிமலையில் பூக்கள் அலங்காரம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.50 ஆயிரம் செலுத்தி புஷ்ப அலங்காரத்திற்கான அனுமதி பெற்றுக்கொள்ளலாம். களபாபிஷேகம் செய்ய விரும்பும் ஐயப்ப பக்தர்கள் ரூ.8 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
    கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றிணையவும், குழந்தை இன்றி தவிப்பவர்களுக்கு தீர்வாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
    திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் உள்ளது, காருகுறிச்சி என்ற ஊர். கன்னடியன் கால்வாயின் வடகரையில் அமைந்திருக்கும் வளம்மிக்க ஊர் இது.

    இங்கு பழமையும், பெருமையும் வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனாய குலசேகரநாத சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றிணையவும், குழந்தை இன்றி தவிப்பவர்களுக்கு தீர்வாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.

    களத்திர தோஷம் இருப்பவர்கள், இத்தலத்திற்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இன்றி தவிப்பவர்கள், தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், இறைவன், இறைவியின் பரிபூரண அருளால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியரும், விரைவிலேயே ஒன்றாக இணைந்துவிடுவர்.

    இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, திரயோதசி திதிகளில் ‘துளசி விவாக உற்சவம்’ நடத்தப்படுகிறது. திருமண பந்தத்தில் இணையும் தம்பதியர், மனம் ஒத்து இணைந்து வாழவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்கள், மீண்டும் ஒன்றாக கூடி வாழவும் பரிகார விழாவாக இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.

    திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையில் 26 கிலோமீட்டர் தூரத்தில் காருகுறிச்சி திருத்தலம் உள்ளது.
    கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவிலில் கேது பகவானுக்கு பால், வாசனை திரவியங்கள், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. கேது பகவானுக்கு ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று கேது பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு ஹோமம் நடந்தது. இதனைத்தொடர்ந்து கேது பகவானுக்கு பால், வாசனை திரவியங்கள், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் செய்திருந்தார்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு மாசித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. காலை 6.45 மணிக்கு மேளதாளங்கள் முழங்க முத்துராமன் வல்லவராயர் மாசித்திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரம் தர்ப்பைப்புல், வண்ண மலர்கள் மற்றும் பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு கொடி மரத்திற்கு மகா தீபாராதனை நடந்தது.

    நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் பணியாளர்கள் பிச்சையா, மணியம் பாஸ்கர், நாகராஜன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி தினசரி அம்மன் உலா கோவில் உள்பிரகாரத்தில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி ஏற்கனவே கும்பாபிஷேகம் நடந்து முடிந்தன. ஆனால் ராஜகோபுரம் கட்டு்ம் பணி நடைபெறாமல் இருந்தன. எனவே விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த பொன்னர் -சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தார். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில், 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது.

    அதைத் தொடர்ந்து, ராஜகோபுரத்தின் 7 நிலைகளிலும் உள்ள மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற வேண்டி இருந்தது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலாளர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். இதன் காரணமாக வர்ணம் பூசும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சர் சேகர்பாபு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று கோவில் இணை ஆணையரிம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்கு தரமான வர்ணம் தீட்ட வேண்டும் என்றும் காலதாமதமின்றி நடைபெறவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமி சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணியில்10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?

    தற்போது, இந்த பணி நிறைவு அடையும் தருவாயில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இக்கோவிலில் உள்ள தங்கரதம் கடந்த மாதம் ஓட்டப்பட்டது. இது பக்தர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் கோவில் கும்பாபிஷேகத்தையும் விரைவில் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். பிப்ரவரி மாத இறுதிக்குள் வர்ணம் தீட்டும் பணி முழுமையாக முடிந்தவுடன் ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×