என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூர்யவம்சம்’.
    • இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

    கடந்த 1997- ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'சூர்யவம்சம்'. இந்த படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    இதில், வில்லனாக நடித்திருந்த ஆனந்த்ராஜின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும், அவர் பயன்படுத்திய மரிக்கொழுந்து வாசனை திரவியம் அந்த காலத்தில் அவ்வளவு பேமஸாக இருந்தது. இந்த படத்தில் சரத்குமார் சக்திவேல் கவுண்டர் மற்றும் சின்ராசு என்ற இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.

    மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் 'நட்சத்திர ஜன்னலில்' பாடல் இன்று வரை அனைவரும் கொண்டாடும் ஒரு பாடலாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தேவயானி செய்த இட்லி உப்புமா தாக்கம் இன்றுவரை உள்ளது.


    இந்நிலையில், 'சூர்யவம்சம்' திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!

    விரைவில் சூர்யவம்சம் - 2!..." என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 'சூர்யவம்சம்' இரண்டாம் பாகம் வருவதை சரத்குமார் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பல படங்களில் நடித்துள்ளார்.
    • சிவகார்த்திகேயன் தன் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது தந்தையின் 70-வது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி.தாஸ் அவர்களின் மகன் சிவகார்திகேயன் என்று சொல்வது தான் பேரழகு. மேல புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில், என்னிடம் அவரின் கதைகளை கதைத்தார். அந்த நபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி.தாஸ்.


    ஜி.தாஸ்

    கோயம்பத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி.தாஸ் அவர்கள் சுப்ரெண்ட்டாக பணிபுரிந்த பொழுது, சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார். என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலை செய்து, சிறைவாசத்தை அனுபவித்தார். சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை, ஆனால் விடுதலை ஆன பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது, முதுகலை பட்டம் பெற்றிதிருந்தார். அதற்குக் காரணம் ஜி.தாஸ் அவர்கள்.

    சிறைப்பறவைகளை என்றும் அடிக்க கூடாது. சிறைப்பறவைகளுக்கு நல்ல உணவும் நீரும் கொடுக்க வேண்டும். சிறைப்பறவைகளுக்கு கல்வியை புகுத்த வேண்டும். இவை அனைத்தையும் செய்தார் ஜி.தாஸ். எல்லா தவறுகளுக்கும் இங்கு மன்னிப்புண்டு, அந்த மன்னிப்போடும் அன்பையும் கருணையும் அள்ளி அள்ளி கொடுத்தார் ஜி.தாஸ்.


    சிவகார்த்திகேயன் பகிர்ந்த பதிவு

    கர்நாடக மாநிலம் நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காக, சிறைச்சிட்டுகள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். சிறைச்சிட்டுகளின் செயலை பார்த்து அவர்களை பாராட்டி, அன்றிரவு சிறைச்சிட்டுகளுக்கு பிரியாணி உணவை கொடுத்து மகிந்தவர். இதில் முக்கியமான விசியம் என்னவென்றால் சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில், ஏதேனும் கஷ்டம், கல்விக்கு பணம் வேண்டும், மருத்துவ செலவு வந்தால், ஜி. தாஸ் அவர்கள் அந்த குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து உதவுவர். இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா" என்று தன் தந்தைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

    மேலும், "'அப்பா.... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே'. நான் இன்றைக்கு என்ன செய்தாலும் அதற்குக் காரணம் நீங்கள்தான். நம் கையில் என்ன இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் அமைதியாக மற்றவர்களை ஆதரித்து வாழ்வது எப்படி என்பதை வாழ்ந்து காட்டியதற்கு ஒரு மகனாக நான் பெருமை படுகிறேன். என்றென்றும் நினைவில் இருப்பாய் அப்பா" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.



    • தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    கேப்டன் மில்லர் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    • நடிகர் பிரித்விராஜ் 'விலயாத் புத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் இயக்குனர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் 'விலயாத் புத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, மறையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படம் சந்தனக் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.


    சமீபத்தில் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் பிரித்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து அவர் உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


    பிரித்விராஜ் பதிவு

    இந்நிலையில், நடிகர் பிரித்விராஜ் இந்த அறுவை சிகிச்சை குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "'விலயாத் புத்தா' படத்தின் சண்டைக்காட்சியின் போது காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறி வருகிறேன். இரண்டு மாதங்களுக்கு ஓய்வு மற்றும் பிசியோதெரபி தான். அந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். மேலும், முழுமையாக குணமடையவும் விரைவில் செயலில் இறங்கவும் வலியுடன் போராடுவேன் என்று உறுதியளிக்கிறேன். அன்பு மற்றும் அக்கறையை தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். 


    • நடிகர் சல்மான்கானுக்கு சில மாதங்களாக தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
    • இவருக்கு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான்கான் தொடர்ந்து கொலை மிரட்டலை சந்தித்து வருகிறார். அண்மையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்ததையடுத்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


    கோல்டி பிரார்- சல்மான்கான்

    இந்த நிலையில், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி பிரார் தற்போது நடிகர் சல்மான்கானுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "நாங்கள் சல்மான்கானை நிச்சயமாக கொல்வோம். லாரன்ஸ் பாய் தான் விரும்பினால் மட்டுமே கருணை காட்டுவார். நாங்கள் முன்பே கூறியதுபோல் சல்மான் கான் மட்டுமல்ல, நாங்கள் உயிருடன் இருக்கும்வரை எங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக எங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்" என்று கூறினார்.

    • உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படம் உதயநிதியின் கடைசி படமாக அறிவித்துள்ளார்.

    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன்பின்னர் நண்பேன்டா, கெத்து, மனிதன், சைக்கோ, கலகத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உதயநிதியின் கடைசி படமாக அறிவித்துள்ளார்.



    இந்நிலையில் உதயநிதி சமீபத்திய பேட்டியில், கமல் புரொடக்ஷன்ஸில் நான் நடிக்கவிருந்த கடைசி படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுத வேண்டியதாக இருந்தது. எதிர்பாராத விதமாக அது நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    • நடிகை சுஜா வருணி ஒரு சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார்.
    • இவர் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வருபவர் சுஜா வருணி. ஒரு சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மிளகா, கிடாரி, பென்சில் போன்ற படங்களில் நடித்த சுஜா வருணி நடிகர் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 90 நாட்கள் இருந்து பிரபலம் அடைந்தார்.


    14 வயதிலேயே சினிமாவில் நடித்த சுஜா வருணி பிளஸ்-2 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுக மானார். திருவண்ணாமலை, வாத்தியார் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அசத்தினார்.சுஜா வருணிக்கும், சிவாஜி பேரனுக்கும் நடந்த காதல் திருமணத்தில் அத்வைத் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்த சுஜாவருணி நடனமாடிய போது கரு கலைந்தது.



    சோசியல் மீடியாவில் தீவிரமாக இருக்கும் சுஜா வருணி அடிக்கடி தன்னுடைய குடும்ப படங்களையும், தனது படங்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்ற படங்களை வெளியிட்டுள்ளார். சென்னையில் இருந்து இலங்கைக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள கார்டி லியா குருஸ் என்கிற கப்பலில் பயணம் செய்து அவர் கவர்ச்சி உடை யில் நடத்திய போட்டோ சூட் படங்கள் வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.


    • நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

    அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியிட்டு விழா ஜுலை 23ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பல கருத்துகள் உலாவிக் கொண்டிருக்கிறது.
    • சமீபத்தில் விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது விஜய் அரசியல் வருகையின் முன்னோட்டம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து, விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், "பொது வாழ்க்கைக்கு வரக் கூடியவர்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக சினிமாவில் இருக்கும் அனைவரும் சினிமா புகழ் இருந்தால் போதும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு இருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் திரையுலகினர் அவர்களுடைய வேலையை மட்டுமே செய்கின்றனர்.

    தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமாவில் இருப்பவர்கள் எல்லா வேலையும் முடிந்து மார்கெட் போனதும் அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து எளிய முறையில் மக்களை கவர்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த மாதிரியான எண்ணத்தோடு இல்லாமல், தொண்டு உள்ளத்தோடு விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். ஒரு முற்போக்கு கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். இது தான் இன்று தமிழ்நாட்டில் தேவையான ஒன்றாக இருக்கிறது" என்று கூறினார்.

    இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எதிராக நான் பேசவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, நான் யாரையும் காழ்ப்புணர்வோடு விமர்சிக்கவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று சொன்னபோது நான் வரவேற்றேன். தற்போது விஜய் அரசியலுக்கு வருவார் என்று யூகங்களால் எழுதியபோதும் அதை நான் வரவேற்றேன். ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல மேடைகளில் கலைஞர்கள் கூட பாடியிருக்கிறார்கள். 'தமிழர்கள் தங்கள் முதல்வர்களை திரையரங்குகளில் தேடுகிறார்கள்' என்று. அதற்கு காரணம் தமிழக அரசியல் நீண்ட காலமாகவே திரையுலகத்தை சார்ந்ததாக இருக்கிறது.

    திரையுலக நட்சத்திரங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. அந்திராவில் என்.டி.ஆர் அரசியலுக்கு வந்தார். மற்ற மாநிலங்களில் சூப்பர் ஸ்டார்கள், யாரும் கடைசி காலத்தில் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் கிடைத்த செல்வாக்கு மூலம் அரசியலுக்கு வரலாம், அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்கிற கணக்குகளில் மற்ற மாநிலங்களில் யாரும் செயல்படவில்லை. இந்த விமர்சனங்களைத்தான் நான் முன்வைத்தேன். இது நடிகர் விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் இல்லை. பொதுவான விமர்சனம்.

    நல்லகண்ணு போன்ற தலைவர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர் விடுதலை போராட்ட காலத்தில் சந்தித்த கொடுமைகள் மற்றும் சிறைச்சாலை சென்றது பற்றி நாம் அறிவோம். 98 வயதிலும் அரசியல் மேடைகளில் பேசுகிறார். அவர் தொடாத பிரச்சனை இல்லை. அவர் போராடாத களங்கள் இல்லை. இதுபோன்ற எந்த பங்களிப்பும் இல்லாமலேயே ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற உளவியலை நான் சுட்டிக்காட்டுகிறேன்" என்று கூறினார்.

    • சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஏழாம் அறிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    கடந்த 2011-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஏழாம் அறிவு'. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


    மேலும், இப்படத்தில் கதாநாயகியான ஸ்ருதி ஹாசன் ஒரு காட்சியில் இட ஒதுக்கீட்டால் திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு பறி போவதாக வசனம் ஒன்று பேசியிருப்பார். இந்த கருத்து அப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

    இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "'ஏழாம் அறிவு' படத்தில் இட ஒதுக்கீட்டை விமர்சித்து ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. அப்போது எனக்கு அரசியல் புரிதல் இல்லை. படப்பிடிப்பிலும், சீன் பேப்பரிலும் அதனை நான் பார்க்கவில்லை. இதற்காக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அது அவரோட அரசியல் நிலைபாடாக இருக்கலாம். அந்த காட்சி படமாக்கப்பட்ட போது சூர்யாவும் இல்லை.


    டப்பிங்கிலும் இப்படி ஒரு வசனம் இருப்பது சூர்யாவுக்கு தெரியாது. ஆனால், படம் பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் செய்து இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்து ஒரு காட்சி வருகிறது, அது வேண்டாம் எடுத்துவிடலாம் என்று கூறினார். ஆனால், நான் சின்ன விஷயம் தான் விட்டு விடுங்கள் என்று கூறினேன். அந்த சமயத்துல என்னோட அரசியல் புரிதல் அவ்வளவு தான் இருந்தது" என்று கூறினார்.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

    நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் லால்சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், லால்சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் நடந்தது. அதில், நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தோன்றும் முக்கிய காட்சிகள் திருவண்ணாமலையை சுற்றி உள்ள சில பகுதிகளிலும், செஞ்சி சுற்று வட்டார கிராமங்களிலும் படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.



    அதற்காக, நடிகர் ரஜினிகாந்த் நேற்று திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். தனியார் விருந்தினர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் தங்கி இருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள ஊத்தாம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.



    ரஜினியின் படபிடிப்பு நடப்பதால் அங்கு ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது தீவிர பக்தியும் ஈடுபாடும் கொண்ட ரஜினிகாந்த், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கு மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார். எனவே, லால்சலாம் படபிடிப்பு முடியும் போது அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்வார் எனவும், கிரிவலம் செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

    • ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக அரூத்ரா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்திருந்தனர். ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காததாலேயே ஆருத்ரா நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியது.



    இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா நிறுவனம் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த ரூசோ என்பவரிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வரையில் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வெளிநாட்டில் இருக்கும் ஆர்.கே. சுரேஷ் கடந்த 5 மாதமாக சென்னை திரும்பாமலேயே உள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் அங்கேயே தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து ஆர்.கே.சுரேசின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்துள்ளனர். அப்போது ஆருத்ரா நிதி நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதே போன்று மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் அனைத்தையும் விரைந்து முடிக்க பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.ஆசியம்மாள் தலைமையிலான போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×