என் மலர்
சினிமா செய்திகள்
- அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.
காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் இன்று வெளியானது. படம் வெளியான நிலையில், வித் லவ் படக்குழுவினர் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றிற்கு படத்தின் முதல் காட்சியை காண சென்றனர். அப்போது ரசிகர்களிடம் உரையாடிய நடிகை அனஸ்வரா ராஜன், மேடையில் கண்கலங்கினார்.
திரையரங்கில் பேசிய அன்ஸ்வரா ராஜன், "எல்லோருக்கும் வணக்கம், ரொம்ப சந்தோஷமா இருக்கு, என்ன சொல்றதுனு தெரியல. என்னால சொல்ல முடியல. இந்தப் படத்தின் முதல் நாள், முதல் காட்சியை காண வந்த உங்களுக்கு நன்றி. இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுங்க," என்று கூறும் போதே கண்கலங்கினார். உடனே திரையரங்கில் இருந்த ரசிகர்கள் அவரது பெயரை கூறி ஆரவாரம் செய்தனர்.
- ஒரு குடியிருப்பு தளத்தில் நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்களே கதைக்கருவாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
- தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் ஆரி அர்ஜூனன். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் பிரபலமும் ஆனார். இவர் தற்போது நடித்துள்ள படம் 'போர்த் ப்ளோர்' (Fourth Floor).
எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கி மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக ஆரி அர்ஜுனன் நடிக்க, கதாநாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். மேலும், பவித்ரா, இயக்குனர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு குடியிருப்பு தளத்தில் நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்களே கதைக்கருவாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை வருகிற 27-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், 'போர்த் ப்ளோர்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தற்கொலைகளை சுற்றி நிகழும் சம்பவங்களே திரில்லராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- நீலகண்டா திரைப்படம் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
- இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, "மாஸ்டர் மகேந்திரன்" என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்றியுள்ளார்.

இதுதவிர, சமீப காலங்களில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய அளவில் மற்ற மொழி திரைப்படங்களிலும் மகேந்திரன் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் "நீலகண்டா" திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
நீலகண்டா திரைப்படத்தை ஸ்ரீனிவாசுலு மற்றும் வேணு கோபால் சார்பில் எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அனில் இனமடுகு நிர்வாக தயாரிப்பும், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரவன் ஜி குமார் மேற்கொண்டுள்ளார். நீலகண்டா திரைப்படத்திற்கு மார்க் பிரசாந்த் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு மற்றும் சிவகார்த்திக் தன்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை மற்றும் அவனது வாழ்க்கையை புரட்டி போடும் எதிரியை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையமாக கொண்ட அதிரடி ஆக்ஷன் ஜானரில் சொல்லும் கதையம்சம் கொண்டிருக்கிறது.
நடிகர் மகேந்திரனின் திரைப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று வெளியாவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை.
- அபராதத்தை ரத்து செய்வது தொடர்பாக தீர்ப்பாயத்தை அணுக அனுமதி.
நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது.
இந்தநிலையில், கடந்த 2015-2016ம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று விஜய் கணக்கு காட்டியிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 2015-ம் ஆண்டு கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்று கண்டு பிடித்தனர்.
இவ்வாறு வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தை அபராதம் விதித்து கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
அபராதம் விதித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு இறுதி விசாரணைக்காக வந்தது.
அப்போது விஜய் தரப்பில், ஆஜரான நிலையில் சட்டப்படி அபராத உத்தரவை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக, சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது சட்டப்படி தவறு. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
வருமான வரித்துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், 6 மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இன்று தீர்ப்பு அளித்தார். அதில், அபராதம் விதித்ததில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இதில் இந்த ஐகோர்ட்டு தலையிடவும் விரும்பவில்லை. எனவே, விஜய் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, நீதிபதி உத்தரவை வாசித்த பின்னர் விஜய் தரப்பினர் தீர்ப்பாயத்தை அணுக அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி, அபராதத்தை ரத்து செய்வது தொடர்பாக தீர்ப்பாயத்தை அணுக அனுமதி வழங்கினார்.
- இப்படம் பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.
- இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிர்களின் கவனத்தை பெற்றது.
'அசுரன்', 'விடுதலை 2' படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் தற்போது இயக்குநராக அறிமுகமாகும் படம் 'யூத்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், 'யூத்' படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 'முட்ட கலக்கி' என தொடங்கும் இப்பாடலை கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட மேக்கிங் வீடியோடிவில், கென் தான் எழுதிய பாடலை ஜி.வி.பிரகாஷை பாட கூறுகிறார். ' முட்ட கலக்கி ' என்ற முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
'யூத்' படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிர்களின் கவனத்தை பெற்றது.
- நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் ஆள்.
- எந்த சூழலிலும் தடுமாற்றம் இல்லாதவளாய் மாற ஆசைப்படுகிறேன்.
'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கிய கயாடு லோஹர், இளம் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக மாறிப் போயுள்ளார்.
அதர்வா ஜோடியாக 'இதயம் முரளி, ஜி.வி.பிரகாஷ் உடன் 'இம்மார்டல்' படங்களில் நடிக்கும் கயாடு லோஹர், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், 'உங்களிடம் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம் எது?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு "நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் ஆள். அதுதான் என் பிரச்சினையாகவே நினைக்கிறேன். அதனால் எளிதில் மனம் உடைகிறேன். எனவே அந்த போக்கை மாற்றிக்கொண்டு இன்னும் உறுதி மிக்கவளாய், எந்த சூழலிலும் தடுமாற்றம் இல்லாதவளாய் மாற ஆசைப்படுகிறேன்". என்று அவர் பதிலளித்தார்.
- பிரியா வாரியர் சின்ன ரோல்களில் நடித்தே காலத்தை தள்ளப் பார்க்கிறார்.
- கவர்ச்சி தான் அவரை காப்பாற்றுகிறது.
'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தின் மூலமாக அறிமுகமாகி, இந்திய ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் பிரியா வாரியர். மலையாளம் தாண்டி இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'குட் பேட் அக்லி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தலை காட்டி வரும் பிரியா வாரியர் குறித்து இணையத்தில் சில கமெண்ட்டுகள் வெளியானது. 'பிரியா வாரியர் சின்ன ரோல்களில் நடித்தே காலத்தை தள்ளப் பார்க்கிறார். கவர்ச்சி தான் அவரை காப்பாற்றுகிறது. ஜூனியர் ஆர்டிஸ்ட். கூட்டத்தில் ஒருவர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இதையடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பிரியா வாரியர் காட்டம் தெரிவித்துள்ளார். "உண்மைக்கு புறம்பான செய்திகள் கமெண்ட்டுகள் என்ற பெயரில் சுற்றுகின்றன. இதுபோல மோசமான பேர்வழிகளை எதுவுமே செய்யமுடியாது. லைக்குகளுக்காக இப்படி செய்வதால் என்ன ஆகிவிட போகிறது. இந்த நிலை மாறத்தான் வேண்டும்", என்று குறிப்பிட்டுள்ளார்.
- புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என குற்றச்சாட்டு.
- நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்.
வருமான வரித்துறையின் அபராத நோட்டீசுக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு விஜய் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளது.
வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில், நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என விஜய்க்கு வருமான வரித்துறை அபராதம் விதித்திருந்தது
இந்நிலையில், நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்.
- திரைப்படங்களுக்கு தணிக்கை சான்று வழங்க முடியாது என்று சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.
- சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்று வழங்க முடியாது என்று சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.
லட்சுமி- லாரன்ஸ் காதல் படத்திற்கு தணிக்கை சான்று மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்சார் போர்டு விளக்கம் அளித்துள்ளது.
லட்சுமி-லாரன்ஸ் காதல் திரைப்படத்தில் குறிப்பிட்ட பிரிவினரை இழுிவுபடுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக அமைதியின்மையை தூண்டக்கூடிய படைப்புகளை கருத்து சுதந்திரம் என அனுமதிக்க முடியாது என நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய தணிக்கை வாரியம் தரப்பு வாதத்தை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காதலர் தினத்தை ஒட்டி வரும் பிப்ரவரி 13 அன்று வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'.
த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

- 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.
- 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இதனை தொடர்ந்து 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது. 'தாய் கிழவி' படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. தளம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 'தாய் கிழவி' படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.
இந்நிலையில், தாய் கிழவி படத்தின் "தாய் கிழவி வாரா.." பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
- ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார்.
நடிகர் ஜீவாவின் 45ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவான 'தலைவர் தம்பி தலைமையில்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வருகிற 7ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிமி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் "தலைவர் தம்பி தலைமையில்" படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு வேட்டி-சட்டை மற்றும் பட்டுப்புடவை பரிசாக வழங்கப்படும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து படத்தை தயாரித்த "கண்ணன் ரவி க்ரூப்ஸ்" தனது அதிகாரப்பூர்வ X தளப்பதிவில், "25வது நாள் சிறப்பு, TTT படக்குழு, கிடைத்திருக்கும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. எங்கள் மனமார்ந்த நன்றியின் அடையாளமாக, பிப்ரவரி 7ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள ரோகிணி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் எந்தக் காட்சியில் படம் பார்க்கும் அனைவருக்கும், ஆண்களுக்கு வேட்டி-சட்டை மற்றும் பெண்களுக்கு பட்டுப் புடவை பரிசளிக்கப்படும்.," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் தம்பி தலைமையில் படம் வெளியான 25வது நாளை கொண்டாடும் வகையில், படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட வெற்றியை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு புத்தாடை வழங்கும் படத்தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்புக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






