என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல், கவுதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் படங்களின் ரிலீஸ் தேதிகளை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் மாற்றி புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. #MrLocal #Devarattam
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ்டர்.லோக்கல். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதேபோல் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவராட்டம் படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் மே 17-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி புதிய ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


    அதன்படி, கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் வருகிற மே 1-ந் தேதியும், சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் மே 17-ந் தேதியும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #MrLocal #Devarattam #Sivakarthikeyan #GauthamKarthik

    இயக்குநர் பா.இரஞ்சித்திடம் பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தை ரஞ்சித் தயாரிக்க, நாயகனாக நடிக்க கலையரசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Kalaiyarasan #AravindAkash
    நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகிய பரியேறும் பெருமாள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்துள்ளார்.

    இந்த நிலையில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஷரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.


    இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார். கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். #Kalaiyarasan #AravindAkash #SureshMari #PaRanjith

    எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில், படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். #Raangi #Trisha
    ‘எங்கேயும் எப்போதும்‘ பட இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது.

    ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். தமிழில் ராங்கி என்றால் அடங்காத பெண் என்று பொருள். அந்த வகையில், தைரியமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் திரிஷா வருவார் என்பதில் சந்தேகமில்லை.


    திரிஷா தற்போது சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷாவின் அக்காவாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா நடிப்பில் அடுத்ததாக கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. #Raangi #Trisha #MSaravanan #ARMurugadoss

    விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்காக தான் வருத்தப்படுவதாகவும், சமூக வலைதளங்களில் யாரையாவது புண்படுத்தும்படி பேசியிருந்தால் மன்னிக்கும்படியும் கருணாகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #Vijay #Karunakarn
    `கலகலப்பு', `பீட்சா', `சூதுகவ்வும்' உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் கருணாகரன்.

    சர்கார் ஆடியோ வெளியீட்டு விழா சமயத்தில் விஜய் ரசிகர்களுக்கும், கருணாகரனுக்கும் ட்விட்டரில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.

    இதில் ரசிகர்கள் சிலர் அவரை ஒருமையில் பேச அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் குட்டிக்கதையா என கேட்டு கருணாகரனும் விஜய்யை விமர்சித்தார். இந்த விவகாரம் கொலை மிரட்டல், கமி‌ஷனரிடம் புகார் என்று பரபரப்பானது. கருணாகரன் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க, காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்ததை அடுத்து சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளை விஜய் ரசிகர்கள் நீக்கினார்கள்.


    கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த சம்பவத்தில் தான் யாரையும் தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் ’நான் எப்போதும் யாரையும் வெறுப்பது இல்லை. எனக்கு ரொம்ப பிடித்த விஜய் அண்ணாவை வெறுக்கிறேன் என்று சொல்லியிருக்கக்கூடாது. அதற்கு வருத்தப்படுகிறேன்.

    அவர் எனக்குப் பிடித்தமான நடிகர், அது அவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் யாரையாவது புண்படுத்தும்படி பேசியிருந்தால் உண்மையிலேயே மன்னிப்பு வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். #Vijay #Karunakarn

    ராகவா லாரன்ஸ் இயக்கி, அவருடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி நடிப்பில் வெளியாகி இருக்கும் `காஞ்சனா 3' படத்தின் விமர்சனம். #Kanchana3 #Kanchana3Review #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீமன், தாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இவர்களது மகள் என அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்கிறார்கள்.

    போகும் வழியில் மரம் ஒன்றில் அடிக்கப்பட்ட ஆணி ஒன்றை லாரன்ஸ் பிடுங்கி விடுகிறார். அதன்பின்னர் அதில் இருக்கும் பேய், அவர்களுடன் சேர்ந்து வருகிறது.



    தாத்தா வீட்டிற்கு ராகவா லாரன்சின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸ் மீது காதலலுடன் அவரையே சுற்றி வருகிறார்கள். அவரும் மூன்று பேரிடமும் நெருக்கமாக பழகி வருகிறார்.

    பேய் அந்த வீட்டிற்கு வந்த பிறகு சில விரும்பத் தகாத விஷயங்கள் அங்கு நடக்க ஆரம்பிக்கிறது. மேலும் வீட்டில் இருக்கும் அனைவரும் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறார்கள். இதையடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை போட செல்ல அங்குள்ள அகோரி ஒருவர், அவர்கள் வீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறி, சில சோதனைகளை செய்யச் சொல்கிறார். அவர்களும் அதனை செய்ய, வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பது உறுதியாகிறது.



    ஒரு கட்டத்தில் அந்த பேய் லாரன்சின் உடலை பயன்படுத்திக் கொள்ள, வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரிய வருகிறது. 
    கடைசியில், லாரன்ஸ் உடலில் பேயாய் வந்தவரின் முன்கதை என்ன? எதற்காக லாரன்ஸ் உடலில் புகுந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே காமெடி கலந்த திகிலான மீதிக்கதை.

    இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் தனது வழக்கமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ஆக்‌ஷன், நடனம், மாஸ் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். காஞ்சனா முதல் பாகத்திற்கு பிறகு கோவை சரளா - தேவதர்ஷினி கூட்டணி இதிலும் கலக்கியிருக்கிறது. கோவை சரளா தனது பாதி ஆங்கிலம் கலந்த பேச்சால் அனைவரையும் கவர்கிறார். அதேபோல் கணவன், மனைவியாக வரும் ஸ்ரீமன் - தேவதர்ஷினி கூட்டணியின் வழக்கமான காமெடியால் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.



    வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகிய மூன்று நாயகிகளுக்கும் லாரன்சை காதலிப்பது மட்டுமே வேலை. கவர்ச்சியுடன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். டெல்லி கணேஷ், அனுபமா குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, சூரி தான் வரும் காட்சிகளில் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார். சாய் தீனா, கபீர் துஹான் சிங் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒரு இயக்குநராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா முதல் பாகத்தை போலவே இந்த பாகத்தையும் இயக்கியிருப்பது பெரிய பலம். படத்தில் எந்த அளவுக்கு திகில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு காமெடியையும் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார். காஞ்சனா 2-க்கு ஓரளவுக்கு மட்டுமே வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படம் காஞ்சனா முதல் பாகத்தை நியாபகப்படுத்தும்படி உருவாகி இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனலாம்.



    திரைக்கதையின் வேகத்திற்கு படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் வேகத்தடையாக அமைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் சென்டிமெண்ட் காட்சிகளும் போரடிக்க வைக்கிறது. மற்றபடி படம் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக உருவாகி இருக்கிறது. படத்தின் முடிவில் காஞ்சனா 4-ஆம் வரும் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

    தமனின் பின்னணி இசையும், வெற்றியின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

    மொத்தத்தில் `காஞ்சனா 3' கலகல பேய் கதை. #Kanchana3 #Kanchana3Review #RaghavaLawrence #Vedhika #Oviya #NikkiTamboli #KovaiSarala

    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என்றும், படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறும்பட இயக்குனர் செல்வா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Thalapathy63 #Vijay
    பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அட்லி ‘தளபதி 63’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், குறும்பட இயக்குநர் செல்வா, தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன். அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தேன். இந்நிலையில் அட்லி இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே அந்த படத்தின் படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.



    கதை திருட்டு குறித்த இந்த வழக்கு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    செல்வா தொடர்ந்துள்ள இந்த வழக்கில் இயக்குநர் அட்லி, தயாரிப்பு நிறுவனம் மற்றும் எழுத்தாளர் சங்கத்தை எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளார். #Thalapathy63 #Vijay

    சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - சுவேதா திரிபாதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் விமர்சனம். #MehandiCircus #MehandiCircusReview
    தீவிர ஜாதி வெறியரான மாரிமுத்துவின் மகன் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ். கொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார். காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு இளையராஜா பாடல்கள் மூலமாக உதவி வருகிறார்.

    இந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது. அதில் முக்கிய பங்காக நாயகி சுவாதி திரிபாதியின் சாகசம் பார்க்கப்படுகிறது. சுவாதி சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து நிற்கிறார். சுவாதியை பார்க்கும் ரங்கராஜுக்கு அவர் மீது காதல் வருகிறது. சுவாதியை கரம்பிடிக்க ஆசைப்படுகிறார்.



    நாயகி மீது ரங்கராஜ் பைத்தியமாக திரிய, சுவாதியும் ரங்கராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களது காதல் சுவாதியின் அப்பாவுக்கு தெரிய வர, அவர் ரங்கராஜுக்கு ஒரு போட்டி வைக்கிறார். இதற்கிடையே இவர்களது காதல் மாரிமுத்துவுக்கும் தெரிய வருகிறது. அனைத்திற்கும் ஜாதி பார்க்கும் மாரிமுத்து தனது மகனின் காதலுக்கு தடையாக நிற்கிறார்.

    கடைசியில், இவர்களது காதல் சேர்ந்ததா? அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே எளிமையான மீதி காதல் கதை.



    இரண்டு மூன்று கெட்அப்களில் வரும் ரங்கராஜ் புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். சுவாதி அலட்டல் இல்லாமல் அழகாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். விக்னேஷ்காந்த் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. மாரிமுத்து ஜாதி வெறி பிடித்தவராகவும், வேலராமமூர்த்தி பாதிரியரராகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

    கட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகர்கிறது. சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான காதலை புகுத்தி இதை உருவாக்கி இருக்கிறார் சரவண ராஜேந்திரன். படம் முழுக்க இளையராஜாவின் பாடல்களாலேயே நகர்கிறது. இளையராஜின் புகழை சொல்லும்படியாக பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இளையராஜாவின் நினைவுகளை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.



    எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.

    மொத்தத்தில் `மெஹந்தி சர்க்கஸ்' இனிமை. #MehandiCircus #MehandiCircusReview #SaravanaRajendran #MadhampattyRangaraj #ShwetaTripathi

    அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் 50-வது நாளை கடந்ததையொட்டி, திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார் அருண் விஜய். #ArunVijay
    நடிகர் அருண் விஜய் நடித்த தடம் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் அருண் விஜய்க்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.

    தடம் திரைப்படம் தற்போது 50வது நாளை கடந்துள்ளது. இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் அருண் விஜய், திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு தரிசனம் செய்து, கிரிவலம் சென்றிருக்கிறார். 



    இதன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் அருண் விஜய் பதிவு செய்திருக்கிறார். தடம் வெற்றிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதி ஹாசன், சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். #ShrutiHaasan
    ஸ்ருதி ஹாசன் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பில் நுழைய முடிவு செய்திருக்கிறார்.

    ஒரு கட்டத்தில் லண்டன் காதலன் மைக்கேல் கோர்சேலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவார் என்று கூட பரபரப்பு எழுந்தது. ஆனால் அந்த செய்தியை மறுத்துள்ளார். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போது நினைக்கிறேனோ அப்போது திருமணம் செய்துகொள்வேன் என திருமணம் பற்றிய முடிவை தெரிவித்திருக்கிறார்.



    ஸ்ருதிக்கு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணமிருப்பதால் புதுப்படங்களை ஒப்புக்கொள்ள விருக்கிறார். விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளேன். எனது தந்தை கமல்ஹாசன் கட்சியில் சேர்வீர்களா என்கிறார்கள். அரசியலில் எனக்கு இப்போதைக்கு ஆர்வம் இல்லை. ஆனால் எனது தந்தை மக்கள் வாழ்வு வளம் பெறுவதற்காக தனது கடினமான உழைப்பை தொடர்ந்து தருவார்’ என்றார்.
    டேவிட் ஹார்பர் நடிப்பில் நெய்ல் மார்ஷல் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஹெல்பாய்’ படத்தின் விமர்சனம். #Hellboy #HellboyReview
    517 ஆம் ஆண்டு, மரணமில்லாத பெண்ணாகவும், ரத்தத்தின் மகாராணி என்று அழைக்கப்படும் நிமோ மனிதர்களை அழித்து வருகிறார். இதை தடுப்பதற்காக கிங் ஆர்த்தர் நிமோவை தன்னுடைய சக்தி மிகுந்த வாளால் ஆறு பாகங்களாக வெட்டி மந்திரம் செய்த பெட்டியால் அடைத்து, தன்னுடைய தளபதிகள் மூலம் அந்த பெட்டியை யாரும் கண்டுபிடிக்க முடியாதளவிற்கு அனுப்பி வைக்கிறார். 

    நிகழ் காலத்தில் சீக்ரெட் ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார் ஹெல்பாய். இந்நிலையில், பூமியில் வேற்று கிரகவாசிகள் உலாவுவதாக தகவல் கிடைக்கிறது. இதன் பின்னணியில் நிமோவின் பாகங்களை கண்டுபிடிப்பதற்காக அவை செயல்பட்டு வருவதாகவும், மொத்த பாகங்களை ஒன்று சேர்த்தால் நிமோ உயிர் பெற்று உலகில் உள்ள மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி விடுவாள் என்பதையும் ஹெல்பாய் அறிகிறார். 



    இறுதியில் நிமோ உயிர்தெழுந்தாரா? ஹெல்பாய் தடுத்தாரா? என்பதே படத்தின் கதை.

    ‘ஹெல்பாய்’ கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு மூன்றாவதாகத் திரைக்கு வந்திருக்கிறது இப்படம். ராட்ஷச தேகம், சிவந்த நிறம், முன் நெற்றியில் அறுபட்ட கொம்புகள், பாறை வலது கரம் எனப் பயமுறுத்தும் தோற்றத்துடன் முன்கோபியாகவும் எதிரிகளை அதிரடியாகத் தாக்கும் தோரணையுமாக வலம் வருகிறார் ஹெல்பாய்.

    ஹெல்பாயாக நடித்திருக்கும் டேவிட் ஹார்பரும், ரத்த மகாராணியாக நடித்திருக்கும் நிமோவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 



    சூனியக்கார ரத்த ராணியான நிமோவை ஹெல்பாய் எதிர்கொள்வதும் இருவருக்கும் இடையிலான இதுவரை வெளிப்படாத உறவும் சொல்லப்பட்டிருக்கிறது. பயமுறுத்தும் உயிரினங்களும், மனிதர்களுக்கும் உதவுவதற்காக ஹெல்பாயின் சாகசங்களும் ரசிக்க வைக்கிறது.

    முதலிரு ‘ஹெல்பாய்’ படங்களை இயக்கிய கியர்மோ டெல் டோராவுக்குப் பதிலாக மூன்றாவது ‘ஹெல்பாய்’ படத்தை நெய்ல் மார்ஷல் இயக்கியுள்ளார். பெஞ்சமினின் இசையும், லாரென்சோ செனடோரின் ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஹெல்பாய்’ குட்பாய்.
    மருத்துவ துறையின் ஊழல்களை சித்தரிக்கும் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். #AishwaryaRajesh
    டைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார்.

    ‘மெய்’  படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் எஸ்.ஏ.பாஸ்கரன் சொல்கிறார்:-

    ‘‘இந்த படத்தின் கதாநாயகன் நிக்கி சுந்தரம், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். படத்துக்கு தேவையான வகையில் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். கதை, கதாபாத்திரம் மற்றும் தன் நடிப்பு திறமை ஆகியவற்றின் மூலம் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதை மற்றும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு புதுமுக நாயகனுடன் இணைந்து நடிக்கிறார்.



    வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

    ‘‘மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவ துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும். சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்’’ என்று கூறுகிறார், டைரக்டர் எஸ்.ஏ.பாஸ்கரன்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தின் பாணியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வாக்களித்திருக்கிறார். #Sarkar
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால், 49 பி தேர்தல் விதிப்படி, தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.

    இந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48-ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து, மணிகண்டனுக்கு 49 பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 



    இது இப்படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

    ×