என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தேவராட்டம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கார்த்திக், அவருடன் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்று கூறியுள்ளார். #Devarattam #GauthamKarthik
    முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேவராட்டம்’. இதில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

    இதில் கவுதம் கார்த்தி பேசும்போது, "இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. 



    என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறார்" என்றார்.
    கோவத்தின் வெளிப்பாடுதான் ஹீரோ கேரக்டர் என்று தேவராட்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் முத்தையா கூறியுள்ளார். #Devarattam
    முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேவராட்டம்’. இதில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

    இதில் இயக்குனர் முத்தையா பேசும்போது, "நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். 

    அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அது தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. 



    ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது. வெளியில் வந்தால் தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவு தான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம். 

    கோவத்தின் வெளிப்பாடு தான் ஹீரோவின் கேரக்டர். பணம் என்பது சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். அதனால் தான் கமர்சியல் விசயங்களை படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன். தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள். இந்தப்படத்தை இவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடிந்ததிற்கு படத்தில் உழைத்த அனைவரும் காரணம். இந்தப்படத்தை முழுதும் பார்த்துவிட்டு ஞானவேல்ராஜா சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்" என்றார். 
    சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கூர்கா’ பட டீசரை நடிகர் தனுஷ் வெளியிட இருக்கிறார். #GurkhaTeaser #YogiBabu #Dhanush
    சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.



    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் நாளை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார். இப்படம் கோடை விருந்தாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #GurkhaTeaser #YogiBabu #Dhanush
    நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டியில், சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். #Kasthuri
    கஸ்தூரி, சலங்கை துரை இயக்கத்தில் இ.பி.கோ 302 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி:

    முதல் முறையாக போலீஸ் வேட அனுபவம்? 

    நான் பல்வேறு வேடங்களில் நடித்து இருந்தாலும் போலீஸ் உடை அணிவது இதுதான் முதல் முறை. முதலில் சலங்கை துரை கதையை சொன்னபோது என் வேடம் சின்னதாக இருந்தது. 4 நாட்கள் தான் கால்ஷீட் கேட்டார்கள். பின்னர் எனக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் கதை மாற்றப்பட்டது. தொடர் கொலைகளை விசாரிக்கும் மர்மங்கள் நிறைந்த படம். துர்கா ஐபிஎஸ் என்ற துணிச்சலான போலீஸ் அதிகாரியாக வருகிறேன். 

    தொடர்ந்து அதிரடியான கருத்துகளை கூறி வருகிறீர்கள். அரசியலுக்கு வருவீர்களா?

    என்னை பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய நிறைய கட்சிகள் அழைப்பு விடுத்தன. கட்சி சார்ந்த அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை. சமீபகாலங்களில் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசியலுக்கு வந்ததாகவோ அல்லது அரசியலில் இருப்பவர்கள் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவோ என் கண்ணுக்கு அகப்படவில்லை. அரசியலை பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கே இந்த தேர்தல் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. நான் களம் இறங்கி இருக்கலாமோ என்று எண்ண தோன்றியது. எனக்கு பிரபலம், பின்புலம், மக்கள் சேவை அனுபவம் என சில தகுதிகள் இருக்கின்றன. நான் உள்ளே நுழைந்தால் நிறைய நல்லவர்களும் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உண்டு.



    சில கட்சிகளில் இணைந்ததாக செய்தி வந்ததே?

    சினிமாவில் நடித்தபோது என்னுடன் நடித்த நடிகர்களுடன் இணைத்து பேசினார்கள். இப்போது அரசியல் கருத்துகளை கூறும்போது யாரை விமர்சிக்கிறேனோ அவர்களுக்கு எதிர்க் கட்சியில் இணைந்ததாக பரப்புகிறார்கள். கொட்டாங்கச்சி, என் ஆசை தங்கச்சி தவிர மற்ற எல்லா கட்சிகளிலும் என்னை சேர்த்துவிட்டார்கள்.

    சுயேச்சையாக போட்டியிடுவீர்களா?

    சுயேச்சையாக நிற்கும் அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை. சுயேச்சையை மதித்து ஓட்டு போடும் அளவுக்கு தமிழக மக்கள் இன்னும் மாறவில்லை. எனவே தனித்தோ சுயேச்சையாகவோ களம் இறங்க மாட்டேன்.
    நடிகை ராதிகா தயாரிக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமியும் சிம்புவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ArvindSwamy #STR #Simbu #Radhika
    அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் பயோபிக் படங்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க சில இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

    ஜெயலலிதா வாழ்க்கை படத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. ராதிகா சரத்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். எம்.ஆர்.ராதாவின் பேரனான ஐக் இயக்குகிறார்.



    இவர் ஏற்கனவே ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்துக்கு அரவிந்த்சாமியிடமும் எம்.ஆர்.ராதாவாக நடிக்க சிம்புவிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வருகிறது.

    எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் மோதல் ஏற்பட்டதும் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள். இந்த சம்பவங்கள் படத்தில் முக்கிய காட்சிகளாக இடம்பெறும் என்று தெரிகிறது.
    தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வராஜை நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். #Vijay #Thalapathy63
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் கிரேனில் தொங்கவிடப்பட்டிருந்த போக்கஸ் லைட் கீழே விழுந்ததில், அங்கிருந்த தொழிலாளி செல்வராஜ் (52) என்பவருக்கு காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் எலக்ட்ரீசன் செல்வராஜை நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். 



    அட்லி இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். #Thalapathy63 #Vijay #Nayanthara
    நடிகைகள் பலர் விளம்பரங்களில் நடிப்பது மற்றும் விழாக்களுக்கு செல்வது போல், நடிகை காஜல் அகர்வால் சூதாட்ட கிளப்பிற்கு சென்றுள்ளார். #KajalAggarwal
    நடிகைகள் சினிமாவில் நடிப்பது மட்டும் அல்லாமல் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். விளம்பரங்களில் நடிப்பதில் சமந்தா, காஜல் அகர்வால் இருவருக்கும் இடையில்தான் தற்போது போட்டி நிலவுகிறது. சில ஆண்டுகளாக காஜல் நடித்து வந்த ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்தை சமந்தா கைப்பற்றினார்.

    விளம்பரம் மட்டும் அல்லாது வேறு வகையிலும் ஹீரோயின்கள் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். இந்தி கதாநாயகிகள் பெரிய பணக்காரர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வாங்குகின்றனர்.



    தற்போது சூதாட்ட கிளப்பிற்கு வருவதற்கும் அவர்களுக்கு பணம் கொடுக்கும் வி‌ஷயம் வெளியாகி உள்ளது. இலங்கையில் பிரபலமான கேசினோ (சூதாட்ட கிளப்) உள்ளது. இந்த கிளப்பிற்கு வந்து வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு பாலிவுட் நடிகைகளுக்கு கோடிகளில் கொட்டித் தரப்படுகிறது. சமீபத்தில் இந்த சூதாட்ட கிளப்புக்கு காஜல் அகர்வால் சென்று வந்து இருக்கிறார்.
    வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #SatyabrataSahoo #sivakarthikeyan

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் போது நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் குட்ஷெப் பர்டு பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.

    அவரது பெயர் எப்படி பட்டியலில் இல்லாமல் போனது என்பது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறோம். அவரை எப்படி ஓட்டு போட அனுமதித்தார்கள் என்பது பற்றியும் அறிக்கை கேட்டு இருக்கிறோம்.

    இதில் யார் தவறு செய்தார்கள் என்பது கண்டறியப்பட்டு தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே சிவகார்த்திகேயன் வாக்கு அளித்த விவரத்தை தேர்தல் கமி‌ஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம்.

     


     

    ஓட்டு எண்ணிக்கையின் போது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க ஒரு ஓட்டு தேவை என்ற நிலை வந்தால் இவருடைய ஓட்டு கணக்கில் எடுக்கப்படாது. இதுபோல் நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு அளித்த விவகாரம் குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம்.

    மதுரையில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு தாசில்தார் சென்ற விவகாரம் தொடர்பாக சிறப்பு தேர்தல் அதிகாரி பாலாஜி விரிவான அறிக்கை தந்துள்ளார். அதை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    மாவட்ட தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் மீது நடவடிக்கை இருக்குமா? இல்லையா? என்பதை தேர்தல் கமி‌ஷன் தான் முடிவு செய்யும்.

    கரூர் தொகுதியிலும் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி விசாரித்து அறிக்கை தர சிறப்பு தேர்தல் அதிகாரி ராஜாராம் சென்றுள்ளார். அவர் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார்.

    தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும் இன்னும் பறக்கும் படை கண்காணிப்பு குழு தொகுதிக்கு ஒன்று வீதம் செயல்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் தலா 3 பறக்கும் படைகளும், கண்காணிப்பு குழுக்களும் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #sivakarthikeyan

    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இதுகுறித்து விநியோகஸ்தர் சிங்காரவேலன் விளக்கம் அளித்துள்ளார். #Kalavani2 #Vemal
    விமல், ஓவியா நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி 2’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

    இந்த நிலையில் விநியோகஸ்தரும். தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே உள்ள பணப் பிரச்சினை தொடர்பாக, ‘களவாணி 2’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிங்கார வேலன் இடைக்கால தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

    ‘விமல் சொந்தமாகத் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் பைனான்ஸ் பெற்றிருந்தார். மூன்று கோடியில் அவரால் படத்தை முடிக்க முடியவில்லை.



    இன்னும் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால்தான் படத்தை முடித்து வெளியிட முடியும் என்றும், இல்லை என்றால் இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவேன் என்கிற ரீதியில் ஒரு மறைமுகமான மிரட்டல் விடுத்தார். நான் மேற்கொண்டு பணம் கொடுக்கவில்லை.

    சில நாட்கள் கழித்து என்னை அழைத்து பேசிய விமல், ‘களவாணி 2’ படத்தைத் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை பைனான்ஸ் செய்து உதவுமாறும் அந்தத் தொகையை வைத்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தை முடித்து வெளியிட்டு விடுவோம் என்றும் ‘களவாணி 2’ படத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் மன்னர் வகையறா படத்துக்காக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வந்துவிடும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நானும் அதற்கு ஒப்புக் கொண்டு மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து என்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பிற்கு களவாணி 2 படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விமலிடம் கூறி அதை அக்டோபர் 17-ந் தேதி ஒப்பந்தமாகவும் பதிவு செய்து கொண்டேன்.

    இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி ரூபாய் தர வேண்டி இருக்கிறது. இந்தநிலையில் தான் ‘களவாணி 2’ படம் வர்மன்ஸ் புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது.



    நான் இயக்குநர் சற்குணத்திடமும். விமலிடமும் ஏற்கனவே காப்பிரைட் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பல முறை கூறியும் அவர்களிடம் இருந்து பதில் இல்லாததால் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கேயும் அவர்கள் ஆஜராகவில்லை. எங்கள் தரப்பு வாதங்களையும். ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ‘களவாணி 2’ படத்துக்கான காப்பிரைட் உரிமை எங்களுக்குத்தான் என்று கூறி தீர்ப்பு வழங்கியதுடன், களவாணி 2 படத்தை வேறு யாரும் வெளியிடக் கூடாது என ஆறு வார கால இடைக்கால தடையும் விதித்துள்ளது.

    நீதிமன்றம் நல்ல தீர்ப்பைத் தரும் என இயக்குநர் சற்குணம் கூறியிருக்கிறார். உண்மையிலேயே நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பைத்தான் கொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூன் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது’.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Kalavani2 #Vemal #Oviyaa #Sargunam #Singaravelan

    பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா - கார்த்தி அக்கா, தம்பியாக நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்தில் அவர்களுக்கு அப்பாக சத்யராஜ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Karthi #Jyothika
    பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார். 

    மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் கார்த்தி - ஜோதிகாவின் அப்பாவாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Karthi #Jyothika #JeethuJoseph

    தன்னுடைய சினிமா வாழ்க்கை மோசமாக இருந்ததாக கூறிய நடிகை ரிச்சா, நடிக்க வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் படுக்கைக்கு அழைத்ததாலேயே தான் சினிமாவை விட்டு விலகியதாக கூறியுள்ளார். #MeToo #RichaBhadra
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. 

    இந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் பலர் இந்த புகாரில் சிக்கி உள்ளனர். நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    தமிழ், தெலுங்கு பட உலகிலும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ரிச்சா பத்ராவும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். இவர் 2002-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.



    அதிக படங்களில் நடித்துக்கொண்டு இருந்தபோதே திடீரென சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். சினிமா வாழ்க்கை குறித்து ரிச்சா கூறியதாவது:-

    “என் சினிமா வாழ்க்கை மோசமாக இருந்தது. நடிக்க வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் படுக்கைக்கு அழைத்தனர். இதனால்தான் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. எனவே மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடினேன்.

    அப்போதும் என்னை படுக்கைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் சினிமா துறையே வேண்டாம் என்று முடிவு கட்டி இப்போது முழுமையாக ஒதுங்கி விட்டேன்.”

    இவ்வாறு ரிச்சா கூறியுள்ளார். #MeToo #RichaBhadra

    தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுயகவுரவம் இவற்றின் பாதுகாப்பு கருதி தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. #MeToo #NadigarSangam
    பெண்கள் தங்கள் துறைகளில் தங்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளிப்படுத்த சர்வதேச அளவில் உருவான இயக்கம் மீடூ.

    இந்த இயக்கம் சார்பில் தமிழ் சினிமாவில் நடிகைகள், பாடகிகள் என சில பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை வெளிக்கொண்டு வந்தனர். அப்போதே நடிகர் சங்கம் சார்பில் இந்த பிரச்சினைகளை கையாள ஒரு குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் அறிவித்தார்.

    கடந்த மாதம் நயன்தாராவை ராதாரவி மேடையில் விமர்சித்த சம்பவம் பரபரப்பானது. அப்போது நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சங்கம் சார்பில் விஷாகா கமிட்டி அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் இது போல பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயம் வழங்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுயகவுரவம் இவற்றின் பாதுகாப்பு கருதி தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், குழு அமைப்பாளர்கள் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், லலிதாகுமாரி, நடிகைகள் சுகாசினி, ரோகிணி, நடிகர் கிட்டி, பொருளாளர் கார்த்தி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த சிறப்புக் குழு மூலம் நடிகர், நடிகைகளின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MeToo #NadigarSangam

    ×