என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ரவி ராகுல் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ‘சலாம்’ படத்தின் விமர்சனம்
    வெளியூரிலிருந்து தனது நண்பனின் ஊரான இராமேஸ்வரத்திற்கு வருகிறார் நாயகன். அந்த ஊரில் இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மதத்தால் வேறுபட்டாலும், எல்லோரும் மச்சான், மாப்பிள்ளை, அண்ணன், தம்பி என்று அனைவரும் ஒருவருக்கொருவர் உரிமையோடு பழகி வருகிறார்கள்.

    இந்நிலையில், அந்த ஊரிலேயே தன்னுடைய நண்பன் செய்யும் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் நாயகன். அவர் அந்த ஊரிலேயே இருக்கப்போகிறார் என்று ஊரில் உள்ள அனைவரிடமும் சொல்லி வருகிறார் நாயகனின் நண்பன். இதனால், நாயகனையும் தங்கள் வீட்டில் உள்ள ஒரு பையன்போலவே அனைவரும் அவரை நடத்தி வருகிறார்கள். ஆனால், நாயகனோ அந்த ஊரில் நடக்கும் சில விஷேசங்களையெல்லாம் ஏதோ காரணங்களுக்காக ஒதுக்கியே வருகிறார்.



    அதேஊரில், நாயகியை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் நாயகன். ஆனால், நாயகனை தவறாக புரிந்துகொண்ட நாயகி அவரை அடித்து விடுகிறார். ஒருகட்டத்தில் தன்மீது தான் தப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த நாயகிக்கு நாயகன் மீது காதல் வருகிறது.

    இதற்கிடையில் நாயகன் வசிக்கும் ஊருக்கும் வரும் சம்பத், நாயகனின் போட்டோவை அந்த ஊரில் உள்ள அனைவரிடமும் காட்டி அவரைப் பற்றிய விவரங்கள் கேட்கிறார். ஆனால், யாரும் நாயகனை தங்களுக்கு தெரியவில்லை என்றே சொல்கிறார்கள்.



    உண்மையில் நாயகன் அந்த ஊருக்கு வரக் காரணம் என்ன? நாயகனை தேடி வரும் சம்பத் யார்? எதற்காக நாயகனை தேடுகிறார்? நாயகி தனது காதலை நாயகனிடம் சொன்னாரா? இவர்களது காதலை அந்த ஊர் மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனான ரவி ராகுல் படம் முழுக்க ஏதோ சோகம் வழிந்த முகத்துடனே வந்து போகிறார். படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தும் கொஞ்சம் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்றாலும், கதைக்கு பொருத்தவரை அவருடைய நடிப்பு போதும் என்பதுபோல் தான் தோன்றுகிறது.

    நாயகிக்கும் படத்தில் ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் தனது கதாபாத்திரத்திற்குண்டான வலு தெரிந்து அதை மேலும் சிறப்பாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் நிறைய பார்த்த முகங்கள் இருந்தாலும் அவரவர் தங்கள் கதாபாத்திரக்குண்டான நடிப்பை கொடுத்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.



    இயக்குனர் ரவி ராகுல், இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு கருத்தை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் அனைவரும் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவருக்குள்ளும் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், சொல்லவேண்டிய கருத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    தருண் ஆண்டனியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை ஓகே சொல்ல வைக்கிறது. மகிபாலன் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘சலாம்’ சலாம் போடலாம்.
    மாராட்டிய மாநிலத்தில் உள்ள தியேட்டரில் நடிகர் சல்மான் கான் நடித்துள்ள டியூப் லைட் திரைப்படம் இன்று வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் பரவசமடைந்து ராக்கெட் வெடியை உள்ளேயே கொழுத்தியுள்ளனர்.
    மும்பை:

    நடிகர் சல்மான் கான் நடித்துள்ள ‘டியூப் லைட்’ திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியானது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் மேலகானில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று முதல்நாள் காட்சி பார்த்த ரசிகர்கள், சல்மான் கானை திரையில் கண்டதும் ஆர்வமிகுதியில் பெரிய சைஸ் ராக்கெட் வெடியை தியேட்டரின் உள்ளேயே வெடித்துள்ளனர்.



    தரையிலிருந்து சீறிப்பாய்ந்த ராக்கெட் வெடியானது தியேட்டரின் கூரையை பதம்பார்த்துள்ளது. தீவிபத்து ஏற்படும் அபாயம் நிலவியதால் காட்சி நிறுத்தப்பட்டது. பின்னர், வெடி அணைக்கப்பட்ட பின் மீண்டும் காட்சி திரையிடப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
    பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி தான் கர்ப்பமாக இருப்பதை நீச்சல் உடை அணிந்த புகைப்படம் எடுத்து தம்பட்டம் அடித்துள்ளார்.

    இந்தி பட உலகில் நீச்சல் உடை அணிந்து அந்த படங்களை இணையதளத்தில் வெளியிடும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது அவர்களைவிட ஒரு படி மேலே போய் கர்ப்பமாக இருக்கும் வயிறை ரசிகர்களிடம் காட்டுவதற்காக ஒரு இந்தி நடிகை டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து அந்த கோலத்தை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் பெயர் செலினா ஜெட்லி.

    இவருக்கு முதல் பிரசவத்தில் வின்ஸ்டன் ,விராஜ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தன. இப்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதை நீச்சல் உடையுடன் படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு அறிவித்து இருக்கிறார். இப்போதும் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    காலா படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் கூறியுள்ளார்.
    கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், இந்தி நடிகை கஜோல் நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி-2’. ஷான்ரோல்டன் இசை அமைக்கிறார். மும்பையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி பட பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, “சவுந்தர்யா, தனுசுக்கு இது வெற்றிப்படமாக அமையும். 20 ஆண்டுகளுக்குப்பின் தமிழில் கஜோல் நடித்தது மகிழ்ச்சி” என்றார். இயக்குனர் சவுந்தர்யா, “தயாரிப்பாளர் தாணுவுக்கு நன்றி. இந்த படத்தை என்னை நம்பி ஒப்படைத்த, என் நண்பர், வழிகாட்டி தனுசுக்கு நன்றி. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

    விழாவில் பேசிய தனுஷ், “விஜபி என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். தமிழில் மட்டுமல்ல. தெலுங்கிலும் அது பெரிய ஹிட். ‘கொடி’ படப்பிடிப்பில் பொள்ளாச்சியில் இருந்த போது திடீரென ‘விஐபி2’ கதைக்கான ஐடியா வந்தது. நானே கதை எழுதினேன்.



    பாலிவுட் நடிகை கஜோல் ‘வசுந்தரா’ என்ற முக்கியமான வேடத்தில் நடிக்க ஓ.கே.சென்னது பெரிய பிளஸ். அது வில்லி வேடம் அல்ல. பெண்களை பற்றி படத்தில் உயர்வாக சொல்லியிருக்கிறோம். இன்னமும் 14 வயது பெண் மாதிரி உற்சாகமாக இருக்கிறார் கஜோல். சின்ன வயதில் பார்த்து வியந்த கஜோல் போன்ற நடிகையுடன் நடிப்பது சந்தோ‌ஷம்.

    ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தை தயாரிக்கிறேன். அந்த படத்தில் சின்ன வயது ரஜினியாக நான் நடிக்கிறேன் என செய்திகள் வருகின்றன. ஹானஸ்டாக சொல்கிறேன். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை இருக்கிறது. இன்னும் எதுவும் முடிவாகவில்லை” என்றார்.
    தன்னுடைய முதல் படத்திலேயே நீளமான வசனம் பேசி நடித்துள்ளதாக அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
    கவுதம் கார்த்திக் ஜோடியாக ‌ஷரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் ‘இவன் தந்திரன்’. இதை கண்ணன் இயக்கி இருக்கிறார். இதில் நடித்தது குறித்து கூறிய நாயகி ‌ஷரத்தா கூறும்போது, “இயக்குனர் கண்ணன் படம் எனக்கு தமிழில் நாயகியாக நடிக்கும் முதல் படமாக அமைந்திருப்பது பெருமைக்குரியது. இவன் தந்திரனில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் வித்தியாசமான பாத்திரம்.

    இதில் நான் கடினமாக உழைத்து முன்னேறிய மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். இங்கே உள்ள கல்வி முறையும் அதில் இருக்கும் அரசியலும் என்னை எப்படி பாதிக்கிறது என்பது போல் கதை நகரும். கவுதம் கார்த்திக் மிகச்சிறந்த நடிகர். அவர் மிகவும் அமைதியானவர், நல்ல மனிதர், எளிதில் யாருடனும் பழகிவிட மாட்டார். அப்படி பழகிவிட்டால் உண்மையான நண்பராக இருப்பார்.



    ‘இவன் தந்திரன்’ கதாநாயகியாக நான் நடிக்கும் முதல் தமிழ்படம். எனவே நீளமான வசனம், உணர்வு பூர்வமான காட்சிகள் சவாலாக இருந்தன. இதில் தமிழ் பேசும் லோக்கல் பெண்ணாக நடித்து நிறைய கற்றுக்கொண்டேன். உழைப்பு என்றால் அது இயக்குநர் கண்ணன் தான். ‘இவன் தந்திரன்’ கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடிக்கும் ஒரு படமாக இருக்கும்” என்றார்.
    ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.ஒ’ படத்தின் புரோமோஷன்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு சென்றுள்ளது.
    ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் புதிய படம் ‘2.ஓ’.  இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இப்படத்தில் பாலிவுட் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, 100 அடி உயர வெப்பக்காற்று பலூன்களில் இப்படத்தின் புரோமோஷன்களை செய்யவும் முடிவு செய்தனர். அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியிருந்தனர்.



    இந்நிலையில், வெப்பக்காற்று பலூனில் 2.ஓ படத்தின் விளம்பரங்களை அச்சடிக்கும் பணி முடிவடைந்து, பலூனும் பறப்பதற்கு தயாராகிவிட்டது. தற்போது, பலூனை பறக்கவிடுவதற்கு முன்பாக ஒரு முன்னோட்டம் நடத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தற்போது, இப்பலூன்களை பறக்கவிட வானிலை மையத்தின் அனுமதிக்காக படக்குழுவினர் காத்துக் கொண்டிருப்பதாகவும், அனுமதி கிடைத்த பின்னர், இப்பலூன்களை பறக்கவிட ஏற்பாடுகள் நடக்கும் என்றும் தெரிகிறது. ‘2.ஓ’ படத்தை ஜனவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    சிவகார்த்திகேயன் படம் ஒன்று படப்பிடிப்பு முடியும் முன்பே வியாபாரமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வேலைக்காரன்’ படம் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். நெப்போலியன், சிம்ரன், சூரி, லால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார்.



    இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி வாங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். பெயரிடப்படாத இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனையானது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
    பல்சர் சுனிலுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக அவதூறு கிளப்பியதாக பாவனா, திலீப்பை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பிரபல மலையாள நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.

    இது தொடர்பாக பல்சர் சுனில் மற்றும் பாவனாவின் கார் டிரைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே நடிகை பாவனா கடத்தலில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் கிளம்பியது.

    இதை நடிகர் திலீப் மறுத்தார். மேலும்இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் தனக்கு மிரட்டல் கடிதம் எழுதியதாகவும் கோடிக்கணக்கில் பணம் கேட்டதாகவும், போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் நடிகர் திலீப் ஒரு தனியார் டெலிவி‌ஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகை பாவனாவுக்கும், அவரை கடத்தியதாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கும் ஏற்கனவே பழக்கம் உண்டு. இருவரும் நண்பர்கள். கோவாவில் தனியாக தங்கி உள்ளனர் என்று கூறினார்.


    திலீப்பின் பேட்டி வெளியானதும் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோல பாவனாவின் நெருங்கிய நண்பரும், டைரக்டருமான லாலும் இந்த பேட்டிக்கு கண்டனம் தெரிவித்தார். பாவனாவையும், பல்சர் சுனிலையும் சேர்த்து வெளி யான தகவல்கள் பொய்யானது. இதில் உண்மை இல்லை என்று கூறினார்.

    இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த பாவனா, நேற்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

    என்னைப்பற்றி சமீபத்தில் வெளியான கருத்துக்கள் என்னை வேதனைப்படுத்தி உள்ளது. என்னை கடத்திய பல்சர் சுனிலும், நானும் நண்பர்களாக இருந்தோம் என்று கூறி இருப்பது என்னை காயப்படுத்தி விட்டது. இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். எந்த விசாரணையை சந்திக்கவும் தயாராக இருக்கிறேன்.

    வழக்கு விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது. போலீசார் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    நடிகை பாவனாவுக்கு மலையாள பெண் கலைஞர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் மஞ்சுவாரியார் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மஞ்சுவாரியார், நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். சமீபத்தில் தான் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.

    இரண்டு இசை மேதைகள் சேர்ந்து இசை அமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம். ஏவி.எம். தயாரித்த "மெல்லத் திறந்தது கதவு'' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்தார்கள்.
    இரண்டு இசை மேதைகள் சேர்ந்து இசை அமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம். ஏவி.எம். தயாரித்த "மெல்லத் திறந்தது கதவு'' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்தார்கள்.

    "மெல்லத் திறந்தது கதவு'' படம் 1986 செப்டம்பர் 12-ந்தேதி வெளியாயிற்று. இதை ஆர்.சுந்தரராஜன் இயக்கினார். மோகன், ராதா, அமலா ஆகியோர் நடித்தனர்.

    இதில் இடம் பெற்ற முக்கிய பாடல்கள்:-

    1. "ஊரு சனம் தூங்கிருச்சு... ஊதக்காத்தும் அடிச்சிருச்சு!''

    2. "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா?''

    3. "தேடும் கண் பார்வை தவிக்க...''

    4. "வா வெண்ணிலா... உன்னைத்தானே வானம் தேடுது!''

    5. "தில் தில் தில்... மனதில் ஒரு தல் தல் தல் காதல்''

    "மெல்லத் திறந்தது கதவு'' படத்தை ஏவி.எம். தயாரிக்க நேர்ந்ததே ஒரு சுவையான கதை.

    அதுபற்றி ஏவி.எம். சரவணன் ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

    "1985-ம் ஆண்டு ஒரு நாள் எனக்கு திடீரென்று பாரதிராஜா டெலிபோன் செய்தார். "சார்... நானும் இளையராஜாவும் உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாம் என்றிருக்கிறோம்'' என்றார்.

    "எம்.எஸ்.விஸ்வநாதன் இப்போது கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு படம் எடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்'' என்று யோசனை சொன்னார்கள். அப்போது நாங்கள் நிறையப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த யோசனையை நான் உடனே ஏற்றுக்கொண்டேன்.

    என் தந்தையாருக்கு மெல்லிசை மன்னரின் பாட்டுகள் மட்டுமல்ல, அவரது பண்புகளும் மிகவும் பிடிக்கும். அவரது மனதில் நிறைந்திருந்த மனிதர்களில் எம்.எஸ்.வியும் ஒருவர்.

    ஒருமுறை அப்பச்சி (ஏவி.எம்) என்னை அழைத்து "விஸ்வநாதனை மட்டும் என்றைக்கும் விட்டு விடாதே. அவருக்கு எப்போது எந்தச் சிரமம் ஏற்பட்டு அது உனக்குத் தெரிய வந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தயங்காதே'' என்று சொன்னார். மெல்லிசை மன்னரை எனக்கும் பிடிக்கும். அவர் மீது எனக்கு என்றும் மரியாதை உண்டு.

    பாரதிராஜாவும், இளையராஜாவும் சொன்னதும், எம்.எஸ்.வி.க்கு உதவ வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் "மெல்லத்திறந்தது கதவு.''

    இளையராஜாதான் அந்தப் படத்துக்கு இசையமைப்பதாக இருந்தது. "நானும் எம்.எஸ்.வி.யும் சேர்ந்து இப்படத்துக்கு மிïசிக் பண்றோமே'' என்று ராஜா கேட்டபோது எனக்கு அந்த ஐடியா பிடித்திருந்தது. இரண்டு இசை மேதைகளும் இணைந்து அந்தப் படத்தில் பணியாற்றினார்கள் என்பது ஒரு தனிச்சிறப்பாக அமைந்தது.

    பாடல்களுக்கான டிïனை எம்.எஸ்.வி. அவர்கள் போட்டார். ஆர்க்கெஸ்ட்ராவை இளையராஜா நடத்தினார்.

    பாடல்கள் மிக இனிமையாக அமைந்தன. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மதித்துப் பணியாற்றிய விதமும் இனிமையாக இருந்தது.

    படம் வெளியானதும் முதலில் சுமாராகத்தான் போயிற்று. நாட்கள் ஆக ஆகத்தான் பிக் அப் ஆயிற்று.

    நடுவில் ஒரு தமாஷ் நடந்தது.

    மதுரையில் எங்கள் வினியோகஸ்தர் நாகராஜ ராஜா என்பவர் அங்கே சினிப்ரியா தியேட்டரில் அந்தப் படத்தை, இடைவேளைக்கு பிந்தைய பகுதியை முன்னதாகவும், முந்தைய பகுதியை பின்னாலும் போட்டால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று கருதி அப்படியே மாற்றிப்போட ஏற்பாடு செய்தார். ஆனால் இப்படி மாற்றிப் போட்டது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. அப்படிப்போட்டபோது அது ஒரிஜினல் படத்தைவிட அதிகமாக ரசிக்கப்பட்டதாகத் தெரிந்தது. எங்களுக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    மதுரையில் இப்படி படத்தை முன்னும் பின்னுமாக மாற்றிப்போட்டு அது வரவேற்பைப் பெற்றது என்ற விவரம் தியேட்டர் வட்டாரங்களில் வேகமாக கசிந்து, மற்ற தியேட்டர்காரர்களும் அப்படியே செய்யத் தொடங்கி விட்டார்கள்.

    இதனால் பின்னர் பிரச்சினை ஏதும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தியேட்டரில் காண்பித்துக் கொண்டிருந்த மாதிரியே மாற்றிப்போட்டு படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினோம்.

    "இது தேவைதானா'' என்று அதிகாரிகளே கேட்டார்கள்.

    "படத்துக்குத்தான் சர்டிபிகேட் ஏற்கனவே கொடுத்தாயிற்றே. எப்படிக் காட்டினால் என்ன?'' என்று அவர்கள்

    அபிப்பிராயப்பட்டார்கள்.நாங்கள்தான் வற்புறுத்தி மீண்டும் ஒரு சர்டிபிகேட் வாங்கினோம்.

    அப்போது குறும்புக்கார அதிகாரி ஒருவர், "தலைப்பு எப்படி? `மெல்லத் திறந்தது கதவு' என்றுதான் இருக்கப் போகிறதா? இல்லை, `கதவு திறந்தது மெல்ல' என்று மாற்றப் போகிறீர்களா?'' என்று கிண்டலடித்தார்.''

    இவ்வாறு சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

    புகைப்படத்தை பார்த்து எல்லாம் சுத்தப் பொய் என்று ஒரு நடிகை பதறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    உலக நாயகர் பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றும் நடிகர், நடிகைகள் விவரங்களும் அறிவிக்கப்பட்டு, அவர்களையும் ஒரு வீட்டுக்குள் போட்டு அடைத்து விட்டார்கள்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னேர லட்சுமிகரமான ஒரு நடிகை இந்த பட்டியலில் இடம்பிடித்திருப்பதாக ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த புகைப்படத்தில் தன்னுடைய படமும் இடம்பெற்றிருப்பதை பார்த்தத அந்த லட்சுமிகரமான நடிகை ரொம்பவும் பதறிப் போய்விட்டாராம்.



    அந்த நிகழ்ச்சியில் நான் கிடையவே கிடையாது. அந்த செய்தியில் சொல்வதெல்லாம் சுத்தப் பொய். உண்மை கிடையாது என்று உடனடியாக விளக்கமும் கொடுத்தாராம். ஏன் அந்த நடிகை அப்படி பதறினார்? இதை சாதாரணமாகவே சொல்லியிருக்கலாம், ஏன் நடிகை பதற்றத்துடன் கூறவேண்டும்? என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியே எழுந்துள்ளதாம்.

    இதுகுறித்து வாய் திறக்காவிட்டால் தன்னைப் பற்றி ஏதாவது புரளியை கிளப்பி விட்டுவிட்டார்கள் என்று பயந்துதான் அப்படி பதற்றத்துடன் நடிகை கூறியதாகவும் கூறப்படுகிறது.
    அமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘தங்கல்’ படம் ரூ.2000 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து படைத்துள்ளது.
    அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான ‘தங்கல்’ படம் ரூ.800 கோடியை வசூலித்திருந்தது. இந்நிலையில், இப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த மே மாதம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. சீனாவில் இப்படம் எதிர்பார்த்ததைவிட வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

    சீனாவில் வெளியான இரண்டு வாரத்தில் அப்படம் ரூ.550 கோடி வசூல் செய்து ரூ.1000 கோடியை தாண்டியது. தொடர்ந்து சீன மக்கள் கொடுத்த வரவேற்பால் அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், இப்படம் தற்போது ரூ.2000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    இந்திய திரைப்படங்களில் ரூ.2000 கோடி வசூலை எட்டிய முதல் படம் என்ற பெருமையை ‘தங்கல்’ பெற்றுள்ளது. இப்படத்திற்கு அடுத்த இடத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘தங்கல்’ படத்தை நித்தேஷ் திவாரி என்பவர் இயக்கியிருந்தார். மல்யுத்தத்தை மையப்படுத்திய படம் என்பதால் இப்படத்திற்கு சீனாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை இப்படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கட்டணம் உயரும் என்று திரைப்பட வர்த்தக சங்க தலைவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரி விதிப்பால் சினிமா துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவரும், பட தயாரிப்பாளருமான ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் கூறியதாவது:-

    இதுவரை தமிழ்நாட்டில் ‘ஏ’ சான்றிதழ், ‘யு ஏ’ சான்றிதழ் பெற்ற தமிழ் படங்களுக்கும், இந்தி, ஆங்கில படங்களுக்கும் தியேட்டர்களில் 30 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. தமிழ் படங்கள் ‘யு’ சான்றிதழ் பெற்றால் வரி சலுகை உண்டு.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை வந்தால் இந்த வரி சலுகை கிடைக்காது. எல்லா படங்களுக்கும் வரி விதிப்பதால் வரியுடன் சேர்த்துதான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதனால் சினிமா கட்டணம் உயரும்.

    ஆரம்பத்தில் சினிமா டிக்கெட் அனைத்துக்கும் 28 சதவீதம் வரி என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு திரைப்படத் துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்டுக்கு 28 சதவீதமும், 100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீதமும் வரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு படம் ரூ.10 கோடியில் தயாரிக்கப்பட்டால், சம்பளம் மற்றும் செலவுக்காக தயாரிப்பாளர் 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் கூடுதல் செலவு ஆகும்.

    இந்த படத்தை லாபம் சேர்த்து விற்பார்கள். அதை வாங்கும் பட வினியோகஸ்தர்களிடம் தயாரிப்பாளர் 12 சதவீத வரியை பெறலாம். இதன் மூலம் கூடுதல் செலவை சரிகட்டிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறுகிறது.

    இந்த செலவை சினிமா டிக்கெட் மூலம் சரி செய்வதற்காக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சுமை அதிகரிக்கிறது. படத் தயாரிப்பாளர்களை இந்த வரி விதிப்பு முறை பெரிதும் பாதிக்கும்.

    தமிழ்நாட்டில் வருடத்துக்கு சுமார் 220 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் 10 சதவீத படங்கள் கூட வெற்றி பெறுவது இல்லை. தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 150 படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. இதில் 4, 5 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன. 90 சதவீத படங்கள் தோல்வி அடைகின்றன.

    தயாரித்த படம் வெற்றி பெற்றால் போட்ட பணம் கிடைக்கும். தோல்வி அடைந்தால் படம் எடுத்த செலவு மற்றும் கொடுத்த வரி எதுவும் திரும்ப வராது. எனவே, அடுத்த படம் தயாரிக்க முடியாத நிலை ஏற்படும்.

    இந்தி படங்கள் வெளியாகும் மாநிலங்களில் சினிமா டிக்கெட்டுக்கு 40 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கும் முறை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 30 சதவீதம், கேரளாவில் 15 சதவீதம், ஆந்திராவில் 12 சதவீதம் வரி உள்ளது. கர்நாடகத்தில் வரி இல்லை. ஆனால் இப்போது அனைத்து மாநில வரிகளையும் சராசரியாக்கி 28 சதவீதம், 18 சதவீதம் என சினிமா டிக்கெட்டுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைப்போல் வரி விலக்கு பெற்ற, குறைந்த வரி விதித்த மாநிலங்களில் டிக்கெட் விலை உயரும்.

    இதுதவிர மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் சினிமாவுக்கு கேளிக்கை வரி விதிக்கலாம் என்று புதிய சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமா டிக்கெட் மேலும் உயரும். இதனால் திரைப்பட தொழில் முழுமையாக முடங்கும் நிலை உருவாகும்.

    இது குதிரை குழி பறித்து அதில் குதிரையை தள்ளி மண் போட்ட கதையாக வாய்ப்பு உள்ளது. இதை தான் நடிகர் கமல்ஹாசன் “நிலைமை இப்படியே போனால் எல்லோரும் சினிமாவையே விட்டு ஓட வேண்டியது வரும்“ என்று எச்சரித்தார்.

    இன்னும் ஒரு மாதம் நிலைமை எப்படி இருக்கும் என்று பார்ப்போம். குறைக்க முயற்சி செய்வோம். முடியவில்லை என்றால் தியேட்டர்களை மூடுவது தவிர வேறு வழி இருக்காது. முழுமையாக ஜி.எஸ்.டி. முறை அமல்படுத்தப்படும் போது சினிமா தயாரிப்பு முடங்கும். எனவே இந்த பிரச்சினை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் திரைப்படத் துறையை காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு சுரேஷ் கூறினார்.

    ×