என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தியுள்ளார்.
    அம்மா கிரியே‌ஷன்ஸ் டி.சிவாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. இதன் இசை வெளியீட்டு விழாவில் அதர்வா முரளி, சூரி, ரெஜினா, இசையமைப்பாளர் டி.இமான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது....

    “இந்த படத்துக்கு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற மிகச்சிறப்பான தலைப்பு தமிழில் உள்ளது. தமிழ் மேல் பற்றோடு நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும். தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

    எனக்கு முதல் படம் கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா கிரியே‌ஷன் சிவா தான். அவர் தான் தயாரிப்பாளர் ராவுத்தரிடம் பேசி எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார். அவருக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்” என்றார்.

    நாசர், “திரை உலகினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்துக்கு இசையமைக்கும் பிரேம்ஜி, சத்யராஜ் , ரம்யா கிருஷ்ணன், சிவா, கயல் சந்திரன், ரெஜினா, நிவேதா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப், டைரக்டர் நாதிர்ஷா, திலீப்பின் மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக ஏ.டி.ஜி.பி. சந்தியா கொச்சி குற்றப்பிரிவு ஐ.ஜி. தினேந்திர கஷ்யப் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதலில் பணம் கேட்டு மிரட்டுவதற்காகவே பாவனா கடத்தல் நடந்ததாக பல்சர் சுனில் தெரிவித்தார். பிறகு பாவனா கடத்தல் பின்னணியில் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பதாக கூறியதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அந்த நடிகர் திலீப்பாக இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதை திலீப் மறுத்தார்.

    இதற்கிடையில் நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்சர்சுனில் இந்த வழக்கில் தனது பெயரை போலீசாரிடம் சொல்லாமல் இருக்க ரூ.1½ கோடி கேட்டு மிரட்டியதாக நடிகர் திலீப் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

    இதைதொடர்ந்து நடிகர் திலீப் அவரது நண்பரும் டைரக்டருமான நாதிர்ஷா மற்றும் திலீப்பின் மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடம் போலீசார் ஏற்கனவே 13 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக மீண்டும் பொறுப்பேற்று உள்ள லோக்நாத்பெக்ரா இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டு உள்ளார். மேலும் அவர் ஐ.ஜி. தினேந்திர கஷ்யப் மற்றும் விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் படி அவர் உத்தரவிட்டு உள்ளார்.

    இதன் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. போலீஸ் விசாரணையில் பல்சர் சுனில் பாவனா கடத்தல் சம்பவம் நடப்பதற்கு முன்பும், கடத்தப்பட்ட பின்பும் பல்வேறு நபர்களுடன் போனில் பேசி உள்ளார். அவர் அடிக்கடி பேசிய போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த போன் நம்பர் நடிகர் திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    மேலும் ஜெயிலில் இருந்தபடி சுனில் டைரக்டர் நாதிர்ஷாவை 3 முறை போனில் தொடர்புகொண்டு பேசிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. சுனிலுடன் ஜெயிலில் இருந்த சக கைதியான ஜின்சன் என்பவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இதை தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் திலீப் நடித்த சினிமா சூட்டிங் ஒன்றின் போது படப்பிடிப்பு தளத்தில் சுனில் நிற்பது போன்ற புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளது.

    இதன் அடிப்படையில் நடிகர் திலீப், டைரக்டர் நாதிர்ஷா, திலீப்பின் மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


    நடிகர் திலீப்பின் 2-வது மனைவி நடிகை காவ்யா மாதவன். இவருக்கு சொந்தமான ஆன்லைன் ஜவுளிக்கடை கொச்சி காக்கநாட்டில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஜவுளிக் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

    நடிகை பாவனா காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது அதை செல்போனில் படம் பிடித்த காட்சி அடங்கிய மெமரிகார்டை நடிகை காவ்யா மாதவனின் ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஒருவரிடம் ஒப்படைத்ததாக போலீசாரிடம் பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் பல்சர் சுனிலின் வக்கீல் பேனி பாலகிருஷ்ணனிடம் போலீசார் பாவனா கடத்தல் பற்றி விசாரித்த போது சுனிலுக்கு ஜாமீன் பெற்றுத்தருவது தொடர்பாக வக்கீல் உள்பட 2 பேர் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர்கள் ‘மேடத்திடம்’ பேசி விட்டு மீண்டும் வருவதாக கூறிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    ‘மேடம்’ என்று அவர்கள் குறிப்பிட்டது நடிகை காவ்யா மாதவனாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் காவ்யா மாதவன் தனது தாயார் ஷியாமளாவுடன் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 11 மணி அளவில் காரில் வெளியில் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் தனது தாயாருடன் தலைமறைவாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அடுத்தடுத்து நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோருக்கு எதிரான ஆவணங்கள் வெளியாகி உள்ளதால் அவர்கள் இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
    லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் 3-வது முறையாக ஆர்யாவும், ஜீவாவும் இணைகிறார்கள். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...
    ‘கடம்பன்’ படத்தையடுத்து அமீர் இயக்கும் ‘சந்தனதேவன்’ படத்தில் ஆர்யா நடிக்கிறார். அவரது தம்பி சத்யாவும் இதில் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். அடுத்து சுந்தர் சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் மற்றொரு நாயகனாக ஜெயம்ரவி நடிக்கிறார்.

    அடுத்து ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்திலும் 2 நாயகர்களில் ஒருவராக ஆர்யா நடிக்கிறார். இதில் மற்றொரு ஹீரோ ஜீவா. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

    ஏற்கனவே ஆர்யா நடித்த ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ ஆகிய படங்களில் சிறப்பு வேடத்தில் ஜீவா நடித்தார். இப்போது நடிக்கும் புதிய படத்தில் 2 பேருமே ஹீரோக்களாக வருகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.
    கேளிக்கை வரி பிரச்சனையில் திரை உலகினர் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும் என்று கமலஹாசன் கூறினார். இதுகுறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்...
    சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 1000 சினிமா தியேட்டர்கள் காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் இன்று 2-வது நாளாக மூடப்பட்டுள்ளன.

    சினிமாவுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க நடிகர் கமலஹாசன் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று தியேட்டர் அதிபர்கள் போராட்டம் பற்றி கமலஹாசனிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி., கேளிக்கை வரி பிரச்சனையில் சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும், நாம் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் 1,000 தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் ஒரே நாளில் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    ஜி.எஸ்.டி. வரியுடன் தமிழக அரசின் கேளிக்கை வரியையும் சேர்த்து இரட்டை வரி செலுத்த முடியாது என்று தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கேளிக்கை வரியை ரத்து செய்ய வற்புறுத்தி சினிமா தியேட்டர்களை காலவரையின்றி மூடுவதாக அறிவித்து நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    தியேட்டர்களை மூட வேண்டாம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்த வேண்டுகோளையும் அவர்கள் ஏற்கவில்லை. திருத்தணியில் இருந்து கன்னியாகுமரி வரை மொத்தம் 1,000 தியேட்டர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் மட்டும் வணிக வளாகங்களில் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் உள்ளன.

    அனைத்து திரையரங்குகளிலும் தினமும் காலை, மதியம், மாலை, இரவு என்று 4 காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 காட்சிகள் திரையிடப்பட்டன. நேற்று 4 காட்சிகளையும் ரத்து செய்துவிட்டனர்.



    தியேட்டர்களை இழுத்து மூடி அதன் முன்னால் தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று போர்டில் எழுதி ஒட்டி இருந்தனர். படம் பார்க்கும் ஆவலில் வந்த ரசிகர்கள் பலர் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள்.

    இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால் நேற்று ஒரே நாளில் மட்டும் டிக்கெட் கட்டணமாக வசூலாக வேண்டிய ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தியேட்டர் கேண்டீன், மற்றும் வாகனங்கள் ‘பார்க்கிங்’ கட்டணம் மூலம் சராசரியாக தினமும் ரூ.5 கோடி வசூலாகும்.

    அதையும் சேர்த்து மொத்தம் ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. 1,000 திரையரங்குகளிலும் ஆபரேட்டர்கள், டிக்கெட் கொடுப்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், கேண்டீன், பார்க்கிங் ஊழியர்கள், என்று 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அவர்கள் வேலை இழந்துள்ளனர்” என்றார்.
    நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நகைச்சுவை நடிகர் பாலாஜி. ஒருசில சினிமா படங்களில் நடித்த இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

    திரை உலகில் பாலாஜி என்ற பெயரில் பல நடிகர்கள் இருப்பதால் இவர் தாடி பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.

    கொளத்தூரில் வசிக்கும் இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் நித்யா போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் நடிகர் பாலாஜிக்கும் 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு வந்து என்னை சித்ரவதை செய்வார்.

    அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதை மறைத்து என்னை திருமணம் செய்தார். நான் தினமும் ஜிம்முக்கு போவேன். இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டார்.

    தினமும் நான் வேலைக்கு செல்லும் போதும், ஜிம்முக்கு செல்லும் போதும் என்னை ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணிப்பார். நான் பணிபுரியும் அலுவலகத்துக்கு குடிபோதையில் வந்து என்னைப் பற்றி பேசி அவமானப்படுத்தினார். இது உயர் அதிகாரிகள் மத்தியில் எனக்கு அவமானமாக இருந்தது.

    சமீபத்தில் என்னை அவர் தாக்கினார். இதனால் நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகாரில் கூறி இருந்தார். இது தொடர்பாக கமி‌ஷனர் அலுவலகத்தில் கணவர் மீது புகார் கூறி நித்யா பேட்டியும் அளித்து இருந்தார்.

    நான் இது தொடர்பாக போலீசில் பலமுறை புகார் செய்தும் உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருக்கிறேன் என்றார்.

    கமி‌ஷனர் உத்தரவின் பேரில் நித்யாவின் புகார் மாதவரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் போலீசார் தாடி பாலாஜி மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    தமிழக முதல்-அமைச்சரை தலைமை செயலகத்தில் நடிகர் விஷால் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், கேளிக்கை வரி பிரச்சினையில் நல்ல முடிவு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் நம்பிக்கை அளித்ததாக அவர் தெரிவித்தார்.
    தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷால் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு பெறுவது குறித்து விஷால் வேண்டுகோள் விடுத்தார். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை சந்தித்து தற்போது உள்ள சூழ்நிலை குறித்து பேசினோம். ஜி.எஸ்.டி. வரி தவிர 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது குறித்தும், அதனை மறுபரிசீலனை செய்யும்படியும் பேசினோம்.

    மாநில அரசிடம் இருந்து நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

    நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே வரி விதிப்பு முறை வந்துள்ளது. அதன்படி 50 சதவீதம் மாநில அரசுக்கு வரியாக கிடைக்கும். உள்ளாட்சிக்கான வரியை ரத்துசெய்ய வேண்டும் என கூறியுள்ளோம்.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட வர்த்தக சபை தலைவர் எல்.சுரேஷ், ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறித்து கோரிக்கை மனு அளித்தபோது எடுத்த படம்.

    மேலும் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளோம். தயாரிப்பாளர்களுக்கு அதிகளவிலான பளுவை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

    பிற மாநிலங்களில் உள்ளது போல் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்த வேண்டும். ஒரே வரிவிதிப்பு முறையில் அதிக பட்ஜெட் கொண்ட படத்திற்கு வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

    கர்நாடகா, மேற்கு வங்காளம், தெலுங்கானாவில் வரியை மீண்டும் சினிமாத்துறைக்கு அளிக்கின்றனர். அதுபோல் எதுவும் நாங்கள் கேட்கவில்லை. கேளிக்கை வரிக்கான பிரச்சினைக்கு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதனும் முதல்-அமைச்சரை சந்தித்து கேளிக்கை வரி குறித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அரசுத்துறை செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். சினிமாத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இதுகுறித்து நல்ல முடிவு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அபுதாபியில் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டது.
    அபுதாபி சுற்றுலா ஆணையத்தின் ஆதரவில் இந்த ஆண்டின் (2017) தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மறுநாள் நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இதில் சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பாடகருக்காக அனிருத், சிறந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி, சிறந்த எதிர்மறை கதாபாத்திரம் திரிஷா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த பாடகி சித்ரா, சிறந்த விமர்சனம் செய்யப்பட்ட நடிகர் மாதவன் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது எஸ்.பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கப்பட்டது.

    அதேபோல் மலையாளத்தில் மோகன் லால், நிவின் பாலி, லட்சுமி ராமகிருஷ்ணன், ஆஷா சரத் ஆகியோருக்கு சிறந்த நடிகர், நடிகை விருது வழங்கப்பட்டது.



    இந்த நிகழ்ச்சிக்கு மோகன்லால், சித்ரா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வரவில்லை. அவர்களுக்கான விருதுகளை அவர்கள் சார்பில் வந்தவர்கள் பெற்றுக்கொண்டனர்.

    விழாவில் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும், பாடகர் மனோ, பாடகி உஷா உதூப் ஆகியோர் நடத்திய இசை நிகழ்ச்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தி நடிகர் ரன்பீர் கபூர், நடிகை கத்ரினா கைப் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி, அபுதாபி சுற்றுலா ஆணையத்தின் பொது இயக்குனர் சைப் சயீத் கோபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திரைப்பட விருது வழங்கும் விழாவில் துபாய், சார்ஜா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    நிகழ்ச்சிகளை நகைச்சுவை நடிகர் சதீஷ், நடிகை தன்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
    வீட்டை விட்டு வெளியேறும் இளம் ஜோடியின் கதையான ‘காதல் பிரதேசம்’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீமுத்தமிழ் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் ‘காதல் பிரதேசம்’.

    இதில் புதுமுக நாயகன், நாயகியாக பிரசாத் - சயானா நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, ‘ஈரமான ரோஜாவே’ சிவா, சத்யா ஆனந்த், விஜய் ஆர்.ஆனந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - கலை, இசை - எஸ்.ஆர்.இந்திரன், பின்னணி இசை - சாஸ்தா, இணை இயக்கம் - பி.கலை மணி, தயாரிப்பு - ஆர்.பாலச்சந்தர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.வடிவேல்.

    “கதாநாயகனின் தந்தை தன் ஒரே மகன் அருணை ராணுவத்தில் சேர்க்க ஆசைப்படுகிறார். ஆனால் அருண் அதே ஊரில் நர்சுக்கு படிக்கும் ஆதித்யாவை காதலிக்கிறான். பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக இருவரும் ஒரு மலைப்பிரதேசத்திற்கு சென்று விடுகின்றனர்.

    மூன்று நாட்கள் தங்கிவிட்டு பிறகு பெற்றோர்களை சந்தித்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் போகிறார்கள். அங்கு அவர்கள் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்தார்களா? பிரச்சினைகளை எதிர்கொண்டு மீண்டும் பெற்றோர்களை சந்தித்தார்களா? என்பது கதை” என்றார்.
    "செம்பருத்தி'' படத்தில், கதாநாயகியாக ரோஜா அறிமுகமானார். அதற்குக்காரணமாக இருந்தது ஒரு புகைப்படம்.
    "செம்பருத்தி'' படத்தில், கதாநாயகியாக ரோஜா அறிமுகமானார். அதற்குக்காரணமாக இருந்தது ஒரு புகைப்படம்.

    விஜயகாந்த் நடிப்பில் "கேப்டன் பிரபாகரன்'' வெற்றி பெற்றிருந்த நேரம். படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி, புகழின் உச்சியில் இருந்தார்.

    அதிரடிப்படமாக "கேப்டன் பிரபாகரன்'' வந்திருந்ததால், அடுத்து ஒரு காதல் கதையை இயக்க விரும்பினார், செல்வமணி. அப்படி அவர் முடிவு செய்த படம்தான் "செம்பருத்தி.''

    படத்தின் நாயகனாக பிரசாந்த். அவரது பாட்டியாக `அஷ்டாவதானி' நடிகை பானுமதி என தேர்வு செய்தவருக்கு, `நாயகி' கிடைப்பதில்தான் சிக்கல் இருந்தது. கதைக்கு புதுமுக நடிகையை போட்டால் சரியாக இருக்கும் என்று கருதினார் அவர். அதற்கேற்ப நாயகி தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டார்.

    இதில் ரோஜா எப்படி சிக்கினார்? ரோஜாவே கூறுகிறார்:

    "அப்போது என் புகைப்படம் ஒரு சினிமா பத்திரிகையின் அட்டையில் வந்தது. தெலுங்குப் படத்துக்காக அப்பாவின் நண்பர் எடுத்த படங்களில் ஒன்றுதான் இப்படி பத்திரிகையில் வந்துவிட்டது. இதை யாரோ டைரக்டர் செல்வமணியின் கண்களில் காட்டியிருக்கிறார்கள். உடனே அவரும் இப்படியொரு புதுமுகத்தைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்'' என்று கூறியிருக்கிறார்.

    உண்மையில், போட்டோவில் பார்த்ததுமே எனது பெரிய கண்களும், புன்னகை முகமும் அவருக்குப் பிடித்து விட்டன. அதனால் என்னை கதாநாயகியாக தேர்வு செய்தார்.''

    இவ்வாறு ரோஜா கூறினார்.

    புது நாயகியை செல்வமணி முடிவு செய்ததும் திருப்பதியில் அவர் வீட்டுக்கு சினிமா ஆட்கள் போய்த் தேடியிருக்கிறார்கள். ரோஜாவோ (அப்போது ஸ்ரீலதா) தனது பெற்றோருடன் அதே நேரத்தில் சென்னையில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்திருக்கிறார். சென்னை தி.நகரில் உள்ள "ரோகிணி இன்டர் நேஷனல்'' ஓட்டலில்தான் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு ஆட்கள் இதைத் தெரிந்து கொண்டார்கள்.

    வேகவேகமாக ரோகிணி இன்டர்நேஷனல் ஓட்டலுக்குப் போனவர்கள், ரோஜாவின் குடும்பம் பத்து நிமிடம் முன்புதான் அறையை காலி செய்துவிட்டு காரில் திருப்பதிக்கு புறப்பட்டார்கள் என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.

    ரோஜாவை தேடி வந்திருந்த செல்வமணியின் நண்பர் ராமநாதன், உடனே செயலில் இறங்கினார். சினிமாவில் `கார் சேஸிங்' காட்சிகள் வருகிற மாதிரி காரை வேகமாக ஓட்டச்செய்து, சென்னை பாரிமுனை சந்திப்பில், ரோஜாவின் காரை மடக்கிவிட்டார். அதன் பிறகு நடந்ததை ரோஜாவே கூறுகிறார்:

    "எங்கள் காரை மடக்கிய அதே வேகத்தில் "செம்பருத்தி'' படக்கம்பெனிக்கு அழைத்துப் போனார்கள். அப்போது கேப்டன் பிரபாகரன் படம் `ஓஹோ' என ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய டைரக்டர் படத்தில் நடிக்க நமக்கு அழைப்பா என்று எனக்கு திகைப்பாகக்கூட இருந்தது. அப்போது கூட நடிக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இல்லாதிருந்ததால், நடிக்க வந்த அழைப்பு என்னை பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தவில்லை.''

    இவ்வாறு ரோஜா கூறினார்.

    இதன் பிறகு ரோஜாவின் அப்பாவிடம், திரைக்கதையை செல்வமணி சொல்லி, ரோஜாவை நடிக்க வைக்க அனுமதி கேட்டிருக்கிறார். இப்போதும் ரோஜாவின் அப்பா மட்டுமே "ஓ.கே'' சொல்லியிருக்கிறார். ரோஜா தரப்பில் அப்போது மவுனமே பதிலாக இருந்திருக்கிறது.

    மறுநாள் அழைத்து வரச்சொல்லி ரோஜாவின் அப்பாவிடம் டைரக்டர் செல்வமணி சொல்ல, மறுநாளே மேக்கப் டெஸ்ட் நடந்திருக்கிறது. அதன் பிறகு ஊருக்கும் வந்துவிட்டார்கள்.

    அப்போது நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது என்றே எண்ணியிருக்கிறார் ரோஜா. அதுபற்றி அவர் சொல்லும்போது:

    "நானெல்லாம் கறுப்பு. அப்போது படங்களில் நடிக்க வந்த நடிகைகள் எவ்வளவு கலராக இருந்தார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் நடித்த சினிமாவில் என்னை எங்கே அழைக்கப் போகிறார்கள்? அதுவும், செல்வமணி போன்ற பெரிய டைரக்டர்கள் நிச்சயம் என்னை அழைக்கமாட்டார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.

    ஆனால் நான் எதிர்பார்த்தே இராத அந்த தகவல் 10-வது நாளில் வந்துவிட்டது. நடிக்க வருமாறு, தகவல் அனுப்பினார்கள். வீட்டில் மகா சந்தோஷம். இப்போது அப்பா வழியில் அம்மாவும் நான் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அப்போது கூட நடிப்பில் சாதனை செய்த `அஷ்டாவதானி' பானுமதியம்மாவுடன் நடிக்கப் போகிறோம் என்றதும் எனக்கு பயமாகிவிட்டது'' என்றார், ரோஜா.

    தமிழில் நடிக்க வந்து விட்டாரே தவிர, தமிழில் ஒரு வார்த்தை கூட ரோஜாவுக்குத் தெரியாது. டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை செய்தார். மற்ற நேரங்களில் அண்ணனுடன்தான் தெலுங்கில் `மாட்லாடிக்' கொண்டிருப்பார். படம் ஒரு வருடம் தயாரிப்பில் இருந்ததால் அவ்வப்போது கிடைத்த இடைவெளியில் ரோஜா தெலுங்கில் 3 படங்கள் நடித்து முடித்து விட்டார். முதல் படம் "பிரேம தப்பர்சு'' தோல்விப்படம் என்றாலும், அடுத்தடுத்து வந்த 2 படங்கள் வெற்றி பெற்று ரோஜாவுக்கு தெலுங்குப்பட உலகில் நிலையான மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.

    அதிலும் கூட இரண்டாவது தெலுங்குப்படத்தை விடவும், மூன்றாவது தெலுங்குப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரோஜாவை தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக நிலை நிறுத்தியது.

    தயாரிப்பில் ஒரு வருடம் நீடித்த "செம்பருத்தி'' ரிலீஸ் ஆகி அதுவும் வெற்றிப்படமானதில் ரோஜா தமிழிலும் முன்னணி நடிகையானார்.

    திரையில் தனது (கறுப்பு) நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ரோஜாவின் அழகுத்தோற்றம் வெளிப்பட்டதில் ரோஜாவுக்கு நம்ப முடியாத ஆச்சரியம்.

    "நல்ல கலராக இருப்பவர்கள்தான் சினிமாவில் ஹீரோயினாக முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதனால்தான் நடிக்க அழைக்கப்பட்ட புதிதில் என் மீதே எனக்கு நம்பிக்கையில்லை. நானும் படத்தில் நடித்து அது திரையிலும் வந்த பிறகுதான், முன்னர் நடித்த பல பிரபல நடிகைகள் கூட மேக்கப் உபயத்தில்தான் கலர் கலராக காட்சியளித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு `நிறம்' ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை'' என்கிறார், ரோஜா.

    தெலுங்கில்படங்கள் தொடர்ந்து கொண்டிருக்க, தமிழிலோ "செம்பருத்தி'' படத்துக்குப் பிறகு உடனடி வாய்ப்பு வரவில்லை, ரோஜாவுக்கு. கொஞ்சம் இடைவெளி விட்டு அதன் பிறகு வந்த படமே `சூரியன்.' இதில் சரத்குமார் ஜோடியாகி இருந்தார் ரோஜா.

    இந்தப்படமும் வெற்றி பெற, தமிழில் ராசியான நடிகை என்ற பெயரும் ரோஜாவுக்கு கிடைத்தது.

    "செம்பருத்தி'' படத்திலேயே ரோஜாவின் குழந்தைக் குணமும், யதார்த்தமான போக்கும் டைரக்டர் செல்வமணியை கவர்ந்து இருக்கிறது. ரோஜா மாதிரியான வெள்ளை மனம் கொண்ட பெண்கள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிய அவர், அடுத்து எடுத்த அஸ்திரம்தான் "ரோஜாவுடன் திருமணம்.''
    வரிவிதிப்பு விவகாரத்தில் மறு சீரமைப்பு வரும்வரை சம்பளத்தில் 15 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக மதன் கார்க்கி அறிவித்துள்ளார்.
    மத்திய அரசு விதித்த 28 சதவீத ஜிஎஸ்டி வரிக்கு மேலே தமிழக அரசு விதித்த 30 சதவீதம் கேளிக்கை வரி தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளத. தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி இன்று தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழக திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலரும் தங்களுடைய பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாடலாசிரியர் மதன் கார்க்கி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.



    அவர் கூறும்போது, திரையரங்குகள் மூடியிருப்பதை பார்க்கும்போது மனது வலிக்கிறது. கேளிக்கை வரி திரும்ப பெறப்பட்டு மீண்டும் சரியான பாதையில் செல்லும் என நம்புகிறேன். வரி மறு சீரமைப்பு ஆகும் வரை பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு நான் வாங்கும் சம்பளத்தில் 15 சதவீதத்தை குறைத்துக் கொள்கிறேன். இது துறைக்கு உதவும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மதன் கார்க்கியின் இந்த அறிவிப்புக்கு, ட்விட்டர் தளத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்து அவரை பாராட்டி வருகிறார்கள்.
    ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியை எதிர்த்து நடிகர் டி.ராஜேந்தர் நாளை போராட்டம் நடத்தவுள்ளார்.
    மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. சி.எஸ்.டியில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.



    இந்த இரட்டை வரி விதிப்புக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர், இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10.30 மணிக்கு பிலிம்சேம்பரில் போராட்டம் நடத்தவிருக்கிறார். இதில் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளுமாறு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ×