என் மலர்tooltip icon

    கார்

    • ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைகிறது.
    • ரூ.10 லட்சத்திற்குள் சக்தி வாய்ந்த மற்றும் நவீன அம்சங்கள் நிறைந்த கார்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

    மத்திய அரசு வசூலித்து வரும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 22-ந்தேதிக்கு பின் ஜி.எஸ்.டி. 2.0 சீர்திருத்தங்கள் அமலுக்கு வரவிருக்கிறது. இதன் பிறகு, இந்தியாவில் சிறிய ரக கார்களின் விலை குறைய உள்ளது.

    ஜி.எஸ்.டி. மாற்றத்தின் படி, 4 மீட்டருக்கும் குறைவான நீளமும், 1200 சி.சி. பெட்ரோல் அல்லது 1500 சி.சி. டீசல் எஞ்ஜினுக்கு இணையாகவோ அல்லது அதனை காட்டிலும் குறைந்த சி.சி. எஞ்ஜின் கொண்ட பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. மற்றும் எல்.பி.ஜி. வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைகிறது.

    இந்நிலையில் ரூ.10 லட்சத்திற்குள் பாதுகாப்பிற்கும், எரிபொருள் சிக்கனத்திற்கும், செயல்திறனுக்கும் பிரபலமான கார்கள், எவ்வளவு விலை குறைய இருக்கின்றன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    டாடா பன்ச்

    இந்தியாவின் பாதுகாப்பான மற்றும் பிரபலமான மைக்ரோ-எஸ்.யூ.வி. கார்களில் ஒன்று டாடா பன்ச். 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்ஜின் (87 எச்.பி.) இதில் உள்ளது. ஜி.எஸ்.டி. குறைப்பிற்குபிறகு சுமார் ரூ. 85 ஆயிரம் வரை இந்த காரில் சலுகை கிடைக்கும். சிறிய அளவிலான இந்த எஸ்.யூ.வி. கார் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு சிறந்த தேர்வு ஆகும்.

    மாருதி சுசுகி வேகன்ஆர்

    இது குடும்பங்களிடையே மிகவும் பிரபலமான கார். எரிபொருள் சிக்கனத்திற்கு பிரபலமானது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.57 ஆயிரம் வரை விலை குறைப்பை பெற இருக்கும் வேகன்ஆர் கார், அதிக இடவசதி மற்றும் மிகக் குறைந்த இயக்கச் செலவுகளை விரும்பும் பெரிய குடும்பங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.



    மஹிந்திரா XUV 3XO

    சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் காம்பாக்ட் எஸ்.யூ.வி. காரான இது, ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.1.40 லட்சம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. ரூ.10 லட்சத்திற்குள் சக்தி வாய்ந்த மற்றும் நவீன அம்சங்கள் நிறைந்த கார்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

    மாருதி சுசுகி பலேனோ

    இது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் பிரிவில் உள்ளது. விசாலமான மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த கேபினுக்கு இது பிரபலமானது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை குறைய இருக்கிறது. நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த மற்றும் விசாலமான ஹேட்ச்பேக் கார் தேவைப்படும் குடும்பங்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

    டாடா அல்ட்ரோஸ்

    குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர ரேட்டிங் பெற்ற டாடா நிறுவனத்தின் மற்றொரு கார் அல்ட்ரோஸ். ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.1.10 லட்சம் வரை விலை குறைப்பை பெற உள்ளது. பன்முக எஞ்ஜின் தேர்வுகள் கொண்ட பிரீமியம் மற்றும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

    ஹூண்டாய் எக்ஸ்டர்

    டாடா பன்ச்-க்கு போட்டியாக களமிறங்கிய ஹூண்டாயின் மைக்ரோ-எஸ்.யூ.வி. கார் இது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.89 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. நவீன அம்சங்கள் கொண்ட உயரமான எஸ்.யூ.வி. காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

    மாருதி சுசுகி ஸ்விப்ட்

    இது ஹேட்ச்பேக் கார் பிரிவில் நீண்டகாலமாகவே பிரபலமான மாடலாகும். ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.58,000 வரை ஸ்விப்ட் காரின் விலை குறைக்கப்பட உள்ளது. தினசரி நகரப் பயன்பாட்டிற்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

    டாடா டியாகோ

    பாதுகாப்பான எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஜி.எஸ்.டி சலுகைக்கு பிறகு சுமார் ரூ.75 ஆயிரம் வரையில் டியாகோ காரின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் உறுதியான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான காரை தேடுபவர்களுக்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வு.

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்

    பிரீமியம் உணர்வையும், சவுகரியமான பயண அனுபவத்தையும் வழங்கும் இந்த காரில் 1.2 லிட்டர் காபா பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.74 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. ஆடம்பரமான கேபின் உடன் மென்மையாக, நகரத்திற்குள் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

    • புதிய மாருதி சுசுகி விக்டோரிஸ் காரில் 1.5 லிட்டர், NA பெட்ரோல் எஞ்சின், மைல்ட்-ஹைப்ரிட், ஸ்டிராங்-ஹைப்ரிட் மற்றும் CNG வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • இந்த யூனிட் லிட்டருக்கு 28.65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. புதிய விக்டோரிஸ் மாடலின் அறிமுக விலை ரூ. 10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இந்த மாடல் BNCAP மற்றும் GNCAP சோதனைகள் இரண்டிலும் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

    வெளிப்புறத்தில், மாருதி சுசுகி விக்டோரிஸ் புதிய எல்இடி டிஆர்எல்-கள், புதிய முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள், முழு எல்இடி லைட்கள், புதிய 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், டெயில்கேட்டில் எல்இடி லைட் பார் மற்றும் சில்வர் நிற ரூஃப் ரெயில்களைப் பெறுகிறது. இந்த கார் பத்து விதமான நிறங்கள் மற்றும் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய விக்டோரிஸ் மாடலின் உள்புறத்தில், லெவல் 2 ADAS சூட், புதிய 10.1-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டால்பி அட்மோஸ் மியூசிக் சிஸ்டம், வென்டிலேட்டெட் முன்புற இருக்கைகள், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் உடன் இயங்கும் டெயில்கேட், அண்டர்பாடி CNG டேங்க், பனோரமிக் சன்ரூஃப், 60W மற்றும் 45W USB டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், HUD, சரவுண்ட் லைட்கள் மற்றும் 10.25-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.



    புதிய மாருதி சுசுகி விக்டோரிஸ் காரில் 1.5 லிட்டர், NA பெட்ரோல் எஞ்சின், மைல்ட்-ஹைப்ரிட், ஸ்டிராங்-ஹைப்ரிட் மற்றும் CNG வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் e-CVT யூனிட்கள் அடங்கும். இந்த யூனிட் லிட்டருக்கு 28.65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    இந்திய சந்தையில் மாருதி விக்டோரிஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், டாடா ஹரியர், ஃபோக்ஸ்வாகன் டைகுன், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷக் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.

    மாருதி சுசுகி விக்டோரிஸ் மாடலின் 1.5 MT LXi வேரியண்ட் விலை ரூ. 10.50 லட்சம் என துவங்கி, டாப் எண்ட் மாருதி விக்டோரிஸ் 1.5 e-CVT ZXi+ (O) விலை ரூ. 19.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • ஐந்து முறை இலவச சர்வீஸ் செஷன்கள், ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, கார்ப்பரேட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும்.
    • செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வரவிருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் நவராத்திரியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும், அதன் கார்களுக்கு முழு ஜிஎஸ்டி 2.0 சலுகைகளையும் வழங்கியுள்ளது.

    "இப்போதே வாங்கி 2026 இல் பணம் செலுத்துங்கள்" என்று அழைக்கப்படும் இந்த பிரச்சாரம் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் கோவாவை உள்ளடக்கிய மேற்கு பிராந்தியத்தில் கிடைக்கிறது. மேலும் இது செப்டம்பர் 30, 2025 வரை செல்லுபடியாகும்.

    இந்தத் திட்டம், டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிஸர் ஹைரைடர், கிளான்ஸா மற்றும் டைசர் போன்ற மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை ஒருங்கிணைந்த பலன்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் டிசம்பர் 2025 வரை மாதத்திற்கு ரூ. 99 மட்டுமே செலுத்தி மூன்று மாத EMI சலுகையை பெறலாம். இத்துடன் ஐந்து முறை இலவச சர்வீஸ் செஷன்கள், ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, கார்ப்பரேட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும்.

    செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில், பண்டிகை கால தேவை மற்றும் பலன்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் டொயோட்டா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • மெர்சிடிஸ் பென்ஸ்-இன் எலெக்ட்ரிக் GLC-இன் உள்புறம் புதிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் உள்ளது.
    • இது மேட்ரிக்ஸ் பேக்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

    புதிய மின்சார மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் 2027ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். முதற்கட்டமாக, இந்த மாடல் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட CBU வடிவில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெறும் மின்மயமாக்கப்பட்ட மாடல்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் GLC பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக்-ஃபர்ஸ்ட் தளத்தின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் டூயல்-மோட்டார் டிரைவ் டிரெய்ன் கொண்டிருக்கிறது.

    மிகவும் விலையுயர்ந்த மாடலாக GLC 400 4MATIC இருக்கும். இதில் உள்ள இரண்டு மோட்டார்கள் 360kW டார்க் உற்பத்தி செய்கிறது. பின்புற மோட்டார் 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் முன்புற ஆக்சிலில் டிஸ்கனெக்ட் யூனிட் கொண்டுள்ளது. இது நிலைமைகள் அனுமதிக்கும் போதெல்லாம் துண்டிக்க முடியும், இதன் மூலம் செயல்திறன் அதிகரிக்கும்.

    இந்த யூனிட் மணிக்கு 0-100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த காரில் புதிய 94kWh லித்தியம்-அயன் பேட்டரி யூனிட் உள்ளது. புதிய 800-வோல்ட் மின் கட்டமைப்போடு இணைந்து, இந்த பேட்டரி 571 முதல் 713 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று WLTP சோதனைகளில் தெரியவந்துள்ளது. இத்துடன் 330kW வரை அதிவேக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.



    மெர்சிடிஸ் பென்ஸ்-இன் எலெக்ட்ரிக் GLC-இன் உள்புறம் புதிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் உள்ளது. இது ஒரு ஆப்ஷனாக கிடைக்கிறது. இதில் 39.1 இன்ச் அளவில் டேஷ்போர்டு முழுக்க நீள்கிறது. இது மெர்சிடிஸ் பென்ஸில் இதுவரை நிறுவப்பட்ட மிகப்பெரிய ஸ்கிரீனாக அமைகிறது. இது மேட்ரிக்ஸ் பேக்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

    பவர்டிரெய்ன் மற்றும் டிஜிட்டல் இன்டீரியர் இரண்டிற்கும் அடித்தளமாக இருப்பது, GLC-இன் இந்த தலைமுறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய எலெக்ட்ரிக்-ஃபர்ஸ்ட் பிளாட்ஃபார்ம் ஆகும். இந்த கார் அளவீடுகளில் 4,845 மில்லிமீட்டர் நீளம் மற்றும் 2,972 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த காரில் முன் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு கால் வைக்க அதிக இடவசதி உள்ளது. மேலும் அதிக ஹெட்ரூம் உள்ளது.

    புதிய எலெக்ட்ரிக் GLC-இன் உற்பத்தி ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் பிரெமன் ஆலையில், வழக்கமான முறையில் இயங்கும் வேரியண்ட்களுடன், நிகர கார்பன்-நடுநிலை அடிப்படையில் நடைபெறும்.

    • கியா மாடல்களில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும்.
    • டாப் எண்ட் மாடல்களில் கூட வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்காத சில நிறுவனங்களில் கியா ஒன்றாகும்.

    கியா நிறுவனம் வயர்லெஸ் போன் மிரரிங் அடாப்டர் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 344 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது வயர்லெஸ் போன் மிரரிங் கொண்ட அனைத்து கியா மாடல்களிலும் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் இந்த சாதனத்தை கியா டீலர்ஷிப்கள் மற்றும் சேவை மையங்களில் வாங்கி பொருத்தலாம்.



    பல்வேறு கியா மாடல்களில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும். ஏனெனில் அதன் டாப் எண்ட் மாடல்களில் கூட வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்காத சில நிறுவனங்களில் கியா ஒன்றாகும். கியா நிறுவனம் ஏற்கனவே அதன் முழுமையான கார்களின் டாப் எண்ட் மற்றும் மிட் ரேஞ்ச் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜர்களை வழங்குகிறது.

    வயர்டு போன் மிரரிங் கொண்ட அனைத்து மாடல்களுக்கும் ஹூண்டாய் இதை வழங்கத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த ஆப்ஷன் வருகிறது.

    • இந்த யூனிட் 143bhp பவர் மற்றும் 215Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களில் ADAS ஆப்ஷன் பொருத்தப்பட்ட வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய வேரியண்ட்களின் விலை ரூ. 17.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

    இந்த கார் தற்போது எம்பவர்டு +A 45, எம்பவர்டு +A 45 டார்க், மற்றும் எம்பவர்டு +A 45 ரெட் டார்க் உள்ளிட்ட மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ. 17.29 லட்சம், ரூ. 17.49 லட்சம் மற்றும் ரூ. 17.49 லட்சம் (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ADAS உடன் கூடிய நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் சென்டரிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

    நெக்சான் எலெக்ட்ரிக் மாடலின் டார்க் மற்றும் ரெட் டார்க் மாடல்களைப் பொறுத்தவரை, இந்த வேரியண்ட்களில் பிளாக் பெயின்ட் ஃபினிஷ் மற்றும் பிளாக்டு அவுட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. உள்புறத்தில் ஃபுல் பிளாக் தீம் (டார்க் எடிஷன்) அல்லது பிளாக் மற்றும் ரெட் தீம் (ரெட் டார்க் எடிஷன்) ஆகியவை அடங்கும்.



    இத்துடன் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புறம் சன் ப்ளைண்டுகள், சரவுண்ட் லைட்கள், V2V மற்றும் V2L தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

    ADAS கொண்ட புதிய டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 45kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 143bhp பவர் மற்றும் 215Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    • ஐரோப்பாவில் ஸ்கோடாவின் மின்சார மாடல்களுக்கு மிகவும் அணுகக்கூடிய என்ட்ரி லெவல் ஆப்ஷனை வழங்குகிறது.
    • புதிய எபிக் மாடல் கிளாஸ் பிளாக் அம்சங்கள் கொண்ட மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கான்செப்ட் மாடல் "எபிக்" காரை அறிமுகம் செய்துள்ளது. எபிக் காரின் உற்பத்தி மாடல் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு வாக்கில் உலகளவில் அறிமுகமாக உள்ளது. மேலும் இது நிறுவனத்தின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

    ஸ்கோடாவின் அதிநவீன வடிவமைப்பு மொழியை முழுமையாக ஏற்றுக்கொண்ட முதல் மாடல் எபிக் ஆகும். இது மினிமலிஸ்ட் ஸ்டைலிங் மற்றும் காம்பேக்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. 4.1 மீட்டர் நீளத்தில், இந்த காம்பாக்ட் எஸ்யூவி ஐந்து பயணிகளை அமர வைக்க முடியும் மற்றும் விசாலமான 475 லிட்டர் பூட் இடவசதியை வழங்குகிறது. ஸ்கோடா நிறுவனம் புதிய எபிக் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் WLTP-தரத்தில் 425 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குவதாக கூறப்படுகிறது.

    விலையை பொறுத்தவரை, புதிய எபிக் அதன் ICE வெர்ஷனான காமிக் அருகில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐரோப்பாவில் ஸ்கோடாவின் மின்சார மாடல்களுக்கு மிகவும் அணுகக்கூடிய என்ட்ரி லெவல் ஆப்ஷனை வழங்குகிறது.

    வெளிப்புறத்தில், புதிய எபிக் மாடல் கிளாஸ் பிளாக் அம்சங்கள் கொண்ட மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய T-வடிவ LED DRLகள் மற்றும் லோ-செட் ஹெட்லேம்ப்கள் மற்றும் கிரே நிற ஸ்பாய்லருடன் ஒரு வலுவான பம்பர் வழங்கப்பட்டுள்ளன.

    உள்புற கேபினில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், பல்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் ஹாப்டிக் ஸ்க்ரோல் வீல்களுடன் கூடிய பொத்தான்கள் உள்ளன. ஸ்கோடா எபிக் மாடல் ஃபோக்ஸ்வாகனின் நவர்ரா ஆலையில், குழுவின் எலெக்ட்ரிக் அர்பன் கார் ஃபேமிலி திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்படும். ஸ்கோடாவின் உலகளாவிய மின்சார வாகன வரிசையில் எபிக் மாடல் எல்ராக் மற்றும் என்யக் எலெக்ட்ரிக் மாடல்களுடன் இணைந்து, நிறுவனத்தின் உத்தியில் முக்கிய பங்கு வகிக்கும்.

    • இது தோராயமாக 24 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் சார்ஜ் செய்ய உதவுகிறது.
    • வெளிப்புறத்தில் 942 லைட்-அப் பிக்சல்கள் கொண்ட ஒரு பெரிய ஒளிரும் கிரில் உள்ளது.

    மியூனிக் IAA மொபிலிட்டி 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை GLC மின்சார SUVயை மெரிசிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. EQC-யின் வாரிசாக நிலைநிறுத்தப்பட்ட இந்த மாடல், நிறுவனத்தின் முழு-மின்சார MB.EA தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது வடிவமைப்பு மற்றும் பொறியியல் கவனத்தில் மாற்றத்தைக் குறிக்கிறது.

    இது இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும். இவை 369bhp பவர் மற்றும் 504Nm டூயல் மோட்டார், ரியர் டிரைவ் GLC300+, மற்றும் 483bhp மற்றும் 808Nm வழங்கும் இரட்டை மோட்டார் GLC400 4MATIC என அழைக்கப்படுகின்றன. இரண்டும் 94kWh பேட்டரியைப் பயன்படுத்துகின்றன மற்றும் 800-வோல்ட் மின் அமைப்பில் இயங்குகின்றன. இது தோராயமாக 24 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் சார்ஜ் செய்ய உதவுகிறது.

    அதன் மின்சார இயல்பு இருந்தபோதிலும், புதிய GLC அதன் வம்சாவளிக்கு உண்மையாகவே உள்ளது மற்றும் ICE மாடலை விட சுமார் ஐந்து அங்குல நீளம் கொண்டது. இந்த மின்சார கார் முழு சார்ஜ் செய்தால் 713 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று WLTP-மதிப்பிட்டுள்ளது.

    வெளிப்புறத்தில் 942 லைட்-அப் பிக்சல்கள் கொண்ட ஒரு பெரிய ஒளிரும் கிரில் உள்ளது. உள்புறத்தில் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் கொண்டுள்ளது. 39.1-இன்ச் டிஸ்ப்ளே A-பில்லர் முதல் A-பில்லர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட், ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடுகள் மற்றும் பயணிகள் இடைமுகத்தை ஒரு யூனிட்டாக ஒருங்கிணைக்கிறது.

    • கார்களின் மாடல்களுக்கு ஏற்ப விலை குறைக்கப்படுகிறது.
    • பண்டிகை காலம் நெருங்குவதால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

    ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களில் ஏராளமான பொருட்களுக்கு வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கார்களும் அடங்கும். வரி குறைப்பு 22-ந்தேதி அமலுக்கு வருகிறது.

    இதற்கிடையே, வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக, ஜெர்மனி சொகுசு காரான ஆடி கார்கள் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    கார்களின் மாடல்களுக்கு ஏற்ப ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம்வரை விலை குறைக்கப்படுவதாக கூறியுள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால், விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

    • இந்த கார் லிட்டருக்கு 28.65 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது.
    • புதிய விக்டோரிஸ் மாடலில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ALLGRIP செலக்ட் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விக்டோரிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று பரந்த அளவிலான பவர்டிரெய்ன் விருப்பங்கள் ஆகும். பெட்ரோல், ஸ்டிராங் ஹைப்ரிட், CNG மற்றும் AWD உடன் கூட, விக்டோரிஸ் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது.

    புதிய விக்டோரிஸ் 1.5 லிட்டர், K15C பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இது 103bhp பவர், 139Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த யூனிட் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் (டார்க் கன்வெர்ட்டர்) டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை e-CVT உடன் இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலைத் தேர்வுசெய்யலாம்.

    இந்த கார் இகோ, பவர் மற்றும் நார்மல் ஆகிய டிரைவ் மோட்களுடன் வருகிறது. மேலும் குறுகிய தூர பயணங்களுக்கு பியூர் EV மோட் ஆகியவை உள்ளன. இந்த கார் லிட்டருக்கு 28.65 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது. இது அதன் வகுப்பில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.

    கூடுதலாக, மாருதி நிறுவனம் எந்தவொரு மாருதி CNG தயாரிப்புக்கும் முதன்முறையாக அண்டர்பாடி CNG டேங்க் கொண்ட CNG மாடலை வழங்குகிறது. 27.02 கிமீ/கிலோ மைலேஜ் வழங்கும் விக்டோரிஸ் S-CNG, செலவில் சிக்கனம் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. புதிய விக்டோரிஸ் மாடலில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ALLGRIP செலக்ட் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி விக்டோரிஸ் மாடல் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது. இவை இரண்டும் பல பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களை வழங்குகின்றன.

    • ஹூண்டாய் நிறுவனம் நைட் எடிஷன் அம்சங்களை i20 N லைன் மாடலுக்கும் நீட்டித்துள்ளது.
    • இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது DCT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் நிறுவனம் i20 நைட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதன் நைட் எடிஷன் மாடல்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. ரூ. 9.15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கும் இந்த சிறப்பு மாடல், i20-யின் பிரபலத்தை அடிப்படையாகக் கொண்டு, இருண்ட, ஸ்போர்ட்டியர் தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய i20 நைட் எடிஷன் ஸ்போர்ட்ஸ் (O) மற்றும் அஸ்டா (O) வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இந்த எடிஷனில் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள், சைடு சில், வெளிப்புற கண்ணாடிகள், பின்புற ஸ்பாய்லர் மற்றும் மேட் பிளாக் நிறத்தில் ஹூண்டாய் லோகோ உள்ளிட்ட பல பிளாக்-அவுட் அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள், பிரத்யேக நைட் லோகோ மற்றும் ஸ்போர்ட் மெட்டல் பெடல்களை கொண்டுள்ளது. உள்புறம் கேபினில் பிரான்ஸ் இன்சர்ட்களுடன் ஃபுல் பிளாக் தீம் மற்றும் பிரான்ஸ் சிறப்பம்சங்களுடன் பிளாக் நிற இருக்கை மேற்கவர்கள் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் நைட் எடிஷன் அம்சங்களை i20 N லைன் மாடலுக்கும் நீட்டித்துள்ளது. அதன்படி N8 மற்றும் N10 வேரிண்ட்களில் கிடைக்கும், i20 N லைன் நைட் எடிஷனின் விலை ரூ. 11.43 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

    தோற்றம் தவிர்த்து மெக்கானிக்கல் அம்சங்களில், இரண்டு மாடல்களும் மாறாமல் உள்ளன. i20 அதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, i20 N லைன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது DCT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஹூண்டாயின் ஹேட்ச்பேக் வரிசையில் உள்ள ஸ்டாண்டர்ட் மற்றும் N லைன் மாடல்களுடன் i20 நைட் மாடல் இடம்பெறும்.

    • டெஸ்லா நிறுவனம் மும்​பை​யில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்​தது.
    • மகா​ராஷ்டிர முதல் மந்திரி தேவேந்​திர பட்​னா​விஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்​தார்.

    மும்பை:

    உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்தது.

    மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார். இது இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் டெஸ்லா ஷோ ரூம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பையை பொறுத்தவரை இந்தியாவின் நிதி மற்றும் வணிகத் தலைநகராக உள்ளது. மேலும், மும்பையில், உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுடன், மேம்பட்ட இவி சார்ஜிங் கட்டமைப்பும் உள்ளது.

    மின்சார வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக உள்ளதால், டெஸ்லா நிறுவனம் தனது முதல் கிளையை அமைக்க மும்பையை தேர்வு செய்தளது.

    மின்சாரத்தில் இயங்குவது, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், மேம்பட்ட பாதுகாப்பு போன்றவை டெஸ்லா கார்களின் சிறப்புகள் ஆகும்.

    இந்நிலையில், மும்பை பாந்தரா பகுதியில் உள்ள ஷோரூமில் கார் விற்பனையை இன்று தொடங்கிய டெஸ்லா நிறுவனம், முதல் காரை வாடிக்கையாளருக்கு வழங்கியது. முதல் கார் விற்பனையை மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர் நாயக் தொடங்கி வைத்தார்.

    ×