என் மலர்
இந்தியா
- பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.
- உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள்-தைத்திருநாள்-உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பச்சரிசி, சர்க்கரை, தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை, 3,000 ரூபாய் ரொக்கம் என நமது திராவிட மாடல் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.
நானும், இன்று (ஜனவரி 14) சென்னை சங்கமம் கலைவிழா, ஜனவரி 17 அன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.
அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், தூய்மைப் பணியாளர்கள்-செவிலியர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றம் என இந்தப் பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையவேண்டும் என மக்களின் மனமறிந்து நமது அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம், அனைவரும் வெல்வோம் ஒன்றாக என நாள்தோறும் நலத்திட்டங்கள் தொடர்கின்றன.
அடுத்த 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளுக்கும் இப்போதே தயாராகும் வகையில், தமிழ் நாட்டு மக்களிடம் 'உங்க கனவ சொல்லுங்க' என அவர்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை 2030-க்குள் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளேன். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் இந்த நல்லாட்சி, திராவிட மாடல் 2.0 வடிவில் தொடர வேண்டும் என மக்களான நீங்களும் மனப்பூர்வமாக முடிவெடுத்துவிட்டீர்கள்.
பொங்கல் திருவிழாவிற்காக வெளியூர் சென்று திரும்புவோர் பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக்கோலம், உறவினர்களைச் சந்தித்து மகிழும் உற்சாகம், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
- பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தலைமைச் செயலக ஊழியர்களுடன் சமத்துவப் பொங்கல் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடெங்கும் பொங்கிடும் சமத்துவப் பொங்கலை, தலைமைச் செயலகத்திலும் கொண்டாடினோம்! #பொங்கல்2026 என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.
- நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
மெட்ரோ ரெயில் சேவை விவரங்கள்:
1. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.
2. காலை 5:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
3. நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
4. மேலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
- மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.
சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
* பொங்கல் பண்டிகை தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
* பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.
* பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
* கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.
* மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்றவர் அருண் பிரகாஷ்
- அருண் பிரகாஷ் 2004 முதல் 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார்
பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில் கோவாவின் SIR திருத்தத்தின் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷ் நேரில் ஆஜராகி தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 12 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கணினி பிழை காரணமாக முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து அருண் பிரகாஷ் அதிருப்தி தெரிவித்தார்.
1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்ற அருண் பிரகாஷ், ஜூலை 31, 2004 முதல் அக்டோபர் 31, 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார். பின்னர், அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மற்றும் தேசிய கடல்சார் அறக்கட்டளை ஆகியவற்றில் பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
புதுடெல்லி:
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.
இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துகள் என கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறி உள்ளது.
* தமிழக மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.
* விவசாயிகளுடனான உறவை பிரதிபலிக்கும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.
* கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் கொண்டாடப்பட்டது.
* விவசாயத்தை போற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.
* விவசாயிகளுக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொடர்பை பற்றி பேசுகிறது திருக்குறள்.
* விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
* விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* சுற்றுச்சூழலை பாதுகாப்பதே எங்களின் முதல் நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது.
- இளைஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.
ஊழலை கட்டுப்படுத்த நாட்டின் இளைஞர்கள் தங்கள் பெற்றோர்கள் ஊழல் வழிகளில் ஈட்டும் செல்வத்தைத் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.
2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பிரிவு 17A அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதி பி.வி. நாகரத்னா தீர்ப்பளித்தார். இருப்பினும், மற்றொரு நீதிபதி விஸ்வநாதன் இது அரசியலமைப்பிற்கு எதிராக வில்லை என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அப்போது பேசிய நாகரத்னா, "நம் நாட்டின் இளைஞர்களும் குழந்தைகளும் தங்கள் பெற்றோர்கள் வருமானத்திற்கு அப்பால் ஊழல் மூலம் சம்பாதிக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். அது தேசத்திற்கும் செய்யும் ஒரு சிறந்த சேவையாக இருக்கும்
ஒருவரின் பேராசை மற்றும் பொறாமை மனப்பான்மையைக் கட்டுப்படுத்தி, மனதிலிருந்து அழிக்க வேண்டும். இல்லையெனில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதற்கு வழிவகுக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது. இத்தகைய போக்குகளைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிகளில் ஒன்று, ஆன்மீக மனநிலையை வளர்த்து மேம்படுத்துவதாகும். இதன் விளைவாக பொருள் சார்ந்த ஆசையில் இருந்து விடுபட்டு தேசத்திற்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த வைக்கும்" என்று தெரிவித்தார்.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் கூட இதே போன்றதொரு கருத்தை தான் கூறியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும்போது உபரியாக கிடைக்கும் மொலாசஸ் திரவம் இங்கு பிரமாண்ட தொட்டியில் சேமித்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
- நேற்று இரவு பணியில் இருந்தபோது 2 பேரும் எதிர்பாராத விதமாக தவறி சேமிப்பு தொட்டியில் விழுந்து மூழ்கினர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் பகுதியில் தனியார் கரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 21-ந் தேதி கரும்பு அரைக்கும் பணி தொடங்கிய நிலையில், கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும்போது உபரியாக கிடைக்கும் மொலாசஸ் திரவம் இங்கு பிரமாண்ட தொட்டியில் சேமித்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மொலாசஸ் திரவம் சேமிப்பு தொட்டியின் பராமரிப்பு பணியில் சிவகங்கை அருகே உள்ள கரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (வயது 35) மற்றும் சிவகங்கை, மதுரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பொன்னழகு (59) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று இரவு பணியில் இருந்தபோது 2 பேரும் எதிர்பாராத விதமாக தவறி சேமிப்பு தொட்டியில் விழுந்து மூழ்கினர். சிறிது நேரத்தில் அவர்கள் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தொட்டியில் சிக்கியிருந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆலையில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? பராமரிப்பு பணியின்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.
கல்வித் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இடைநிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
- மனித உழைப்பிற்கு இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை.
- உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
* மனித உழைப்பிற்கு இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை.
* உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
* வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளத்தை பொங்கல் பண்டிகை திகழ்கிறது.
* இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
* பொங்கல் பண்டிகை சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது.
- தங்கம், வெள்ளி விலை உயர்ந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது.
28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருக்கிறது.அதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 170-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது. இதன்மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.307-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,360
12-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,960
11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200
10-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200
9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-1-2026- ஒரு கிராம் ரூ.292
12-1-2026- ஒரு கிராம் ரூ.287
11-1-2026- ஒரு கிராம் ரூ.275
10-1-2026- ஒரு கிராம் ரூ.275
9-1-2026- ஒரு கிராம் ரூ.268
- பொங்கல் பண்டிகையின்போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
- 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையில் 20 இடங்களில் 40 வகையான கலைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையின்போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக சென்னையில், கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டின் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா மாபெரும் கலைவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
15-ந்தேதி (நாளை) முதல் 18-ந்தேதி வரையில் (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) 20 இடங்களில் 40 வகையான கலைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது.
சென்னை சங்கமத்தில் முதன்முறையாக 'கோ- ஆப்டெக்ஸ்' மற்றும் கலை பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி காணும் பொங்கலான 17-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை அருங்காட்சியகத்தின் வளாகத்தில் தேசிய கலைக்கூடம் முன்புறம் மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இசைக்கல்லூரி, எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர்கோட்டம், மெரினா கடற்கரை, தியாகராயநகர் நடேசன் பூங்கா எதிரே உள்ள மைதானம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, கிண்டி கத்திபாரா பூங்கா, ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலை வளாகம், தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளைப் பறைசாற்றும்படி, இந்த ஆண்டும் நடைபெறவுள்ள 'சென்னை சங்கமம் - 2026' கலைவிழாவை, இன்று இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
தமிழர் திருநாளை மண்ணின் கலைஞர்களோடு வண்ணமயமாக கொண்டாடிட, தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






