search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.
    • தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.

    மதுரை:

    தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    முதலமைச்சரின் தனிப்பட்ட பயணமாக இது இருந்ததால் அவரை வரவேற்க கட்சியினர் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் விமான நிலைய வரவேற்பு பகுதியில் தனி நபராக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற அவனியாபுரம் உதவி போலீஸ் கமிஷனர் செல்வக்குமார், இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோர் விசாரித்தனர். அவர் மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர்பாண்டி என்பது தெரியவந்தது. மேலும் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார். போலீசார் அதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரிடம் மனுவை தருமாறு போலீசார் கேட்டனர். தரமறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவரிடம் இருந்து மனுவை போலீசார் கைப்பற்றினர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்களின் நலன் கருதி, துரித நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பு: இத்துடன் தமிழகத்தில் எளிதில் கிடைக்கும் கஞ்சா பொட்டலம் இணைத்துள்ளேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இதையடுத்து சங்கர்பாண்டியை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர் மற்றும் தற்போதைய பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கு எதிராக முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்றும் தெரியவந்தது. இதற்கிடையே விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.

    • வெயிலின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு ஏற்ப மின்சார தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகபட்சமாக 35 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவானது. மேலும், கடல் காற்றால் காற்றின் ஈரப்பதம் அளவு 70 சதவீதம் வரை உள்ளது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    குறைந்தபட்ச வெப்ப நிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும், அதிகபட்சமாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும் காணப்படும். கடற்கரையோர மாவட்டங்களில் 50 முதல் 80 சதவீதம் வரை காற்றில் ஈரப்பதம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் மே 2-ந்தேதி வரை தமிழக வட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். ஏனைய தமிழக மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 102 டிகிரி வரையும் வெப்பம் இருக்கும்.

    மேலும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் மிக கடுமையான வெப்ப அலை வீசும்" என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை மறுநாள் (புதன்கிழமை) மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மே 1-ந்தேதிக்கு ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அன்றைய தினம் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை கூடுதல் வெப்ப தாக்குதல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் மே 1-ந்தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இதற்கிடையே தமிழ்நாட்டில் வெப்ப அலை மே 1 முதல் 4-ந்தேதி வரை அதன் உச்சத்தை அடைய வாய்ப் புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


    இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "மே 1 முதல் 4-ந்தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் உள்மாவட்டங்களில் மே 5-ந்தேதிக்குப் பின் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்து உள்ளார். இதனால், மே தொடக்கத்தில் வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், வெப்பத்தில் இருந்து மக்களைக் காக்க ஆங்காங்கே அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் தண்ணீர், மோர், ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மாநில அரசு சார்பில் கூட்டு குடிநீர் திட்டம் நீரேற்று நிலையங்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

    வெயிலின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு ஏற்ப மின்சார தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இரவில் மின் நுகர்வு அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பகலிலும் அதிக அளவில் மின்சாரம் செலவிடப்படுகிறது. வீடு, அலுவலகங்களில் ஏ.சி. பயன்பாடு, விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் மின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 20,583 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் மாற்றிகள், மின்சார வயர்களில் மின் சேதம் ஏற்படுவதைத் தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வழக்கமான வளர்ச்சித் திட்ட பணிகளை முழுமையாக செய்ய இயலாது
    • சென்னை விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசினார். தேர்தல் முடிந்து வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதை அறிந்ததும் கூட்டணி கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், வேட்பாளர்களை சந்தித்து பேசினார்.

    கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வழக்கமான வளர்ச்சித் திட்ட பணிகளை முழுமையாக செய்ய இயலாது என்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் பயணமாக இன்று காலை கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தனி விமானம் மூலம் குடும்பத்துடன் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றுள்ளார். 5 நாள் பயணமாக குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்றுள்ள அவர் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம்.
    • விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5-6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர்.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். அப்போது காவேரி கூக்குரல் சார்பில் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று முன் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

    சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, பொள்ளாச்சி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சரை வரவேற்றுப் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், "தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டு இருப்பதால், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

    கருத்தரங்கை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "2018 கஜா புயலுக்கு பின் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்த பகுதி விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5-6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என பெருமிதத்துடன் கூறினார். அத்துடன் பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம். மேலும் காவேரி கூக்குரல் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் " என உறுதியளித்தார்.

    இந்த மிளகு சாகுபடி கருத்தரங்குகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் எனப் பலர் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல்வேறு தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

    குறிப்பாக ஒவ்வொரு இடத்திலும் வல்லுனர்கள் பேசியது மற்ற மூன்று மாவட்டங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அந்தவகையில் பொள்ளாச்சியில் நடந்த கருத்தரங்கில் 'மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது எப்படி' என்பதை குறித்து, ஈரோடு - இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் தலைவர் கனக திலீபன் விரிவாக பேசினார்.

    அதை போலவே புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் சிமந்தா சைக்கியா, 'மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது எப்படி' என்பது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    அதுமட்டுமின்றி, 'பெப்பர் தெக்கன் ஒரு திரியில் 800-1000 மிளகு மணிகள் கண்ட' கேரளாவை சேர்ந்த டி.டி. தாமஸ், மிளகில் 'அஸ்வினி, ஸ்வர்னா ப்ரீத்தி' மூன்று புதிய ரகங்களை கண்டுபிடித்த முன்னோடி விவசாயி ஏ. பாலகிருஷ்ணன், அகளி மிளகு காப்புரிமை பெற்ற விவசாயி கே.வி. ஜார்ஜ், இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர். கண்டிஅண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் ஆகியோர் மிளகு சாகுபடி குறித்தும் அதில் ஏற்படும் நோய்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் பேசினர். இவர்களோடு இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் ந. சிமந்தா சைக்கியா மிளகு ஏற்றுமதி குறித்து பேசினார்.

    மேலும், சமவெளியில் மிளகு சாகுபடி மூலம் வெற்றி கண்டிருக்கும் முன்னோடி விவசாயிகளான பாலுசாமி, ராஜாகண்ணு, செந்தமிழ் செல்வன், பாக்கியராஜ், வளர்மதி, காமராசு, பூமாலை மற்றும் நாகரத்தினம் உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்களை விளக்கி கூறினர்.

    இது மட்டுமின்றி, கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பஸ்களை அறிமுகம் செய்கிறது.
    • டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப் படும் பஸ்களுக்கு டீசல் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் டீசலில் 5.7 கி.மீ.தூரம் பஸ்களை இயக்கி சிக்கனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டாலும் 5.68 கி.மீ. இதுவரை இயக்கப்படுகிறது.

    டீசலுக்கு பதிலாக இயற்கை கியாசை பயன்படுத்தி பஸ்களை இயக்கி னால் 'மைலேஜ்' கூடுதலாக கிடைக்கும் என்ற ஆய்வின் படி வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களை இயற்கை கியாசுக்கு மாற்றி இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்தன. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பஸ்களை அறிமுகம் செய்கிறது. இது வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் அனைத்து போக்குவரத்து கழகத்திலும் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றப்படும்.

    டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் சோதனை முறையில் இயற்கை எரிவாயு பஸ்களை இயக்க அரசிடம் இருந்து அனுமதி வந்ததும் பரீட்சார்ந்த செயல்பாடு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

    டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இயற்கை எரிவாயுவுக்கு மாற்றுவதன் மூலம் பயணமும் வசதியாக இருக்கும். இயற்கை எரிவாயு சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் அதிக எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றப்படும். மேலும் டீசலினால் ஏற்படும் காற்று மாசுவை விட இயற்கை எரிவாயு பயன்படுத்தினால் மிக குறைவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
    • கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 5-ந்தேதி நடை பெறவுள்ளது.

    இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 969 மாணவா்களும், சென்னையில் 827 மாணவா்களும், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 730 மாணவா்களும் விண்ணப்பித்துள்ளனா்.

    அவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீா் மற்றும் மதிய உணவு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெறுகின்றன.

    • நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை கேமராக்கள் இயங்கவில்லை.
    • ஸ்ட்ராங் ரூமில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நீலகிரியை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு பகுதியில் உள்ள ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி மன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை சில கேமராக்கள் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஸ்ட்ராங் ரூமில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு, மற்றொரு மாவட்டத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்பதற்கு மாற்றம் செய்ய முடியாது.
    • பணியிடங்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே நடத்தப்படும்.


    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 329 காலி பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு ஐகோர்ட்டு மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த இணையதளத்தில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விவரம் மற்றும் எண்ணிக்கை, கல்வித்தகுதிகள், முன்னுரிமைகள் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தனித்தனி அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

    எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி ஏதாவது ஒரு மாவட்டத்தில் தங்களுக்கு ஏற்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏனென்றால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒரே விதமான பதவிக்கான பொது எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு ஆகியவை அந்தந்த மாவட்டங்கள் அல்லது வேறு இடங்களில் ஒரே நாளில் நடைபெறும்.

    எனவே விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு, மற்றொரு மாவட்டத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்பதற்கு மாற்றம் செய்ய முடியாது. அதே போல் தேர்வு செய்யப்படுவர்கள் விண்ணப்பித்த மாவட்டத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் மிக கவனமாக மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் (நீதித்துறை) செல்வநாதன் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு நேரடியாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்பு, விண்ணப்பத்தாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை ஐகோர்ட்டின் ஆட்சேர்ப்பு இணையதளமான https://www.mhc.tn.gov.in பார்த்து கொள்ளலாம்.

    இந்த பணியிடங்கள் மற்றும் காலி இடங்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    நகல் பரிசோதகர் -60 பணியிடங்கள், நகல் வாசிப்பாளர் - 11, முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 100, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 242, கட்டளை எழுத்தர் - 1, ஒளிப்பட நகல் எடுப்பவர் - 53, டிரைவர்கள் - 27, நகல் பிரிவு உதவியாளர் - 16, அலுவலக உதவியாளர் - 638, தூய்மை பணியாளர் - 202, தோட்ட பணியாளர் - 12, காவலர் - 459, இரவு காவலர் மற்றும் மசால்ஜி - 85, காவலர் மற்றும் மசால்ஜி - 18, தூய்மை பணியாளர் மற்றும் மசால்ஜி- 1, வாட்டர் ஆண் - வாட்டர் பெண் - 2, மசால்ஜி - 402 ஆகும்.

    இந்த பணியிடங்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே நடத்தப்படும். நேர்மையற்ற முறையில் வேலை வாங்கித்தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் மோசடியாளர்கள் மற்றும் தரகர்களிடம் இருந்து விண்ணப்பதாரர்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 27-ந் தேதி கடைசி நாளாகும். தேர்வு கட்டணத்தை (மே) 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    • படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். மேலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சத்திற்கான ஊக்கத்தொகைக்கான காசாலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

    மிக இளம் வயதில் 'பிடே' கேன்டிடேட்ஸ் தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது குகேசுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.

    கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்.

    இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும் என பதிவிட்டுள்ளார்.

    • மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடத்தியது.
    • கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறையில் இன்று (28-04-2024) நடைபெற்றது. இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. வீ. மெய்யநாதன் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என்று பெருமிதத்துடன் கூறினார்.

    மலை சார்ந்த இடங்களில் மட்டுமே விளையும் என்று அனைவராலும் அறியப்பட்ட மசாலா பயிர் வகையான மிளகு, சமவெளியிலும் சிறப்பாக விளையும் என்பதை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடத்தியது.

    இக்கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஆலங்குடி தாலுக்கா, அனவயலில் அமைந்துள்ள முன்னோடி மிளகு விவசாயி திரு. ராஜாகண்ணு அவர்களின் பண்ணையிலும், மயிலாடுதுறையில் அரையபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் வீரமணி அவர்களின் தோட்டத்திலும் நடைபெற்றது.


    இக்கருத்தரங்கில் அமைச்சரை வரவேற்றுப் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் "தற்சமயம் தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சம வெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியம் என்று நிருபிக்கபட்டுள்ளதால், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

    கருத்தரங்கை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பேசுகையில் "2018 கஜா புயலுக்கு பின் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்த பகுதி விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5 - 6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என பெருமிதத்துடன் கூறினார்.

    அத்துடன் பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம். மேலும் காவேரி கூக்குரல் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் " என உறுதியளித்தார்.

    இந்த மிளகு சாகுபடி கருத்தரங்குகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல்வேறு தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.


    குறிப்பாக மிளகு சாகுபடியில் முன்னோடி விவசாயியான ஆசிரியர் திரு. ராஜாகண்ணு அவர்கள் பேசுகையில் " மிளகு என்பது மனிதர்களின் உணவில் தவிர்க்க முடியாத அருமருந்து, அது மலை பிரதேசங்களில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை மாறி இன்று சமவெளியிலும் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். இரண்டு தலைமுறை பயிர் என்றழைக்கப்படும் மிளகை பயிர் செய்த 6 வருடங்களுக்கு பிறகு ஒரு செடியில் இருந்து 3 - 5 கிலோ வரை மகசூல் எடுக்க முடியும். மேலும் ஒரு ஏக்கரில் 500 - 1000 கிலோ வரை காய்ந்த மிளகை எடுக்கலாம். எனவே சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் நல்ல மகசூலுக்கான வாய்ப்பு சமவெளியிலும் உண்டு" என தெரிவித்தார்.

    மேலும் இக்கருத்தரங்கில் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர். கண்டிஅண்ணன் மற்றும் டாக்டர் . முகமது பைசல் அவர்கள் மிளகு சாகுபடி குறித்தும், அதில் ஏற்படும் நோய்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் பேசினர். இவர்களோடு இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் ந. சிமந்தா சைக்கியா அவர்கள் மிளகு ஏற்றுமதி குறித்து விளக்கினார்.

    மேலும், சமவெளியில் மிளகு சாகுபடி மூலம் வெற்றி கண்டிருக்கும் முன்னோடி விவசாயிகளான திரு. பாலுசாமி, திரு. ராஜாகண்ணு, திரு. செந்தமிழ் செல்வன், திரு. பாக்கியராஜ், வளர்மதி மற்றும் தனித்தன்மை வாய்ந்த பெப்பர் தெக்கன்-1 மிளகு, காப்புரிமை பெற்ற 50 வருட அனுபவ விவசாயி திரு. டி.டி. தாமஸ் உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்களை விளக்கி கூறினர்.


    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய முன்னோடி விவசாயி, ஆசிரியர் ந.வீரமணி அவர்கள் சரியான சூழலை ஏற்படுத்தினால் டெல்டாவிலும் மிளகு விவசாயம் சாத்தியம் என்பதை தன் அனுபவத்தில் இருந்து பகிர்ந்து கொண்டார்.

    இது மட்டுமின்றி, கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.
    • அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.

    மதுரை:

    மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்தவர் விஜய் நாராயணன். ஐ.டி. ஊழியரான இவர் கடந்த சில ஆண்டு களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கற்று தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் டேக் வாண்டோ மூலம் கற்களை குறைந்த நிமிடத்தில் கை யால் உடைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.

    இந்நிலையில் புதிய முயற்சியாக விஜய் நாராயணன் தனது வீட்டின் மாடியில் எரியும் 29 சிமெண்ட் கான்கிரீட் கற்களை 30 விநாடிகளில் அடுத்தடுத்து உடைத்து சாதனை படைத்து உள்ளார். இவரது சாதனையை கின்னஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.

    இதன் மூலம் இந்தியாவில் குறைந்த வினாடியில் அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்பு இந்த சாதனையை பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் 25 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை செய்திருந்தார். தற்போது விஜய் நாராயணன் மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.

    • வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.
    • தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மிட்டப்பள்ளி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சிவா-விஜய பிரியா தம்பதியரின் 10 வயது குழந்தை வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதி செய்தனர்.

    தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதையடுத்து குறித்த நேரத்தில் சிறுவன் முழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினார்.

    இந்த சிகிச்சையில் மருத்துவர்கள் மதன்குமார், காது மூக்கு, தொண்டை மருத்துவர் செந்தில், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோருக்கு சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    ×