என் மலர்
கணினி
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தில் புதிதாக பாதுகாப்பு குறைபாட்டினை பாதுகாப்பு வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
டேட்டா பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை பாதுகாப்பதில் பெயர்பெற்ற நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. தொழில்நுட்ப சந்தையில் மற்ற இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது, ஐ.ஒ.எஸ். அதிக பாதுகாப்பானதாக விளங்குகிறது.
இந்நிலையில், ஐ.ஒ.எஸ். தளத்தில் புதிதாக பாதுகாப்பு குறைபாடு ஒன்றை கண்டறிந்து இருப்பதாக இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ஆப்பிள் ஐபேட் மற்றும் ஐபோன் சாதனங்களில் உள்ள தகவல்களை இடைமறிக்க முடியும் என தெரிவித்து இருக்கின்றனர்.

இது குறித்து பாதுகாப்பு வல்லுநர்களான டலால் ஹஜ் பக்ரி மற்றும் டாமி மிஸ்க் கூறும் போது, ‘பயனர் தங்களின் தனிப்பட்ட தகவல்களை காப்பி செய்யும் போது, அது ஆப்பிள் நிறுவனத்தின் பொதுவான பேஸ்ட்போர்டில் சேமிக்கப்படுகிறது. இந்த தகவலினை அனைத்து செயலிகளாலும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் பயனரின் விவரங்கள் அம்பலமாகும் அபாயம் அதிகம்’ என தெரிவித்துள்ளனர்.
ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் இயங்குதள செயலிகளுக்கு பேஸ்ட்போர்ட் தளத்தை இயக்க வரம்பற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் அவர்களை அறியாமலேயே தங்களது விவரங்களை வெளியிடும் சூழல் நிலவுகிறது. இது எப்படி சாத்தியமாகும் என்பதை பாதுகாப்பு வல்லுநர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் விளக்கி இருக்கின்றனர்.
இத்துடன், ஆப்பிள் நிறுவனம் பயனர் அனுமதியின்றி, பேஸ்ட்போர்டு தளத்தை மற்றவர்கள் இயக்கும் வசதி நீக்கப்பட வேண்டும். பயனர் காப்பி செய்யும் தரவுகளை பேஸ்ட் செய்யும் போது சம்மந்தப்பட்ட செயலிக்கு மட்டுமே பேஸ்ட்போர்டு இயக்குவதற்கான அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபாலோவர்களை அதிரடியாக நீக்க வழிவகை செய்யும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் தங்களின் ஃபாலோவர்களை நீக்கும் அம்சத்தினை அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதை ஜேன் மன்சுன் வொங் எனும் குறியீட்டாளர் கண்டறிந்தார்.
ஐ.ஒ.எஸ். தளத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு பதிப்பிலும் சோதனை செய்யப்படுகிறது. புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகியுள்ள போதும், இன்ஸ்டாகிராம் தரப்பில் புதிய அம்சம் பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
இந்த அம்சத்தை இயக்க, ஃபாளோவரின் ப்ரோஃபைல் சென்று, செங்குத்தாக இருக்கும் மெனு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பின் ஃபாளோவரை நீக்கக்கோரும் (Remove Follower) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
Instagram is working on the ability to remove followers on their profiles pic.twitter.com/VGBxO0oA1H
— Jane Manchun Wong (@wongmjane) February 22, 2020
தற்சமயம் இந்த அம்சத்தினை இயக்க சொந்த ஃபாலோவர்கள் பட்டியலை க்ளிக் செய்து, நீக்க வேண்டிய நபரை தேர்வு செய்து பின் நீக்கவோ அல்லது பிளாக் மற்றும் அன்பிளாக் செய்யலாம்.
இவைதவிர இன்ஸ்டாகிராம் சமீபத்தில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் கொண்டு எந்த அக்கவுண்ட்கள் பயனர் ஃபீடில் அதிகம் தோன்றுகிறது என்பதையும், எவை குறைந்தளவு தோன்றுகிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
இதற்கு ஃபாலோயிங் டேப் சென்றாலே போதுமானது. அங்கு ஃபீடில் அதிகம் பார்க்கப்பட்டவை மற்று்ம குறைவாக பார்க்கப்பட்ட அக்கவுண்ட் விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 மற்றும் ரூ. 69 விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 மற்றும் ரூ. 69 விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இரு சலுகைகளின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும்.
ரூ. 49 விலை சலுகை புதிய சலுகை இல்லை. இந்த சலுகையினை கடந்த டிசம்பர் மாதம் கட்டண உயர்வின் போது ரிலையன்ஸ் ஜியோ தனது வலைதளத்தில் இருந்து நீக்கியது. அந்த வகையில் தற்சமயம் பழைய சலுகை மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 49 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 2 ஜி.பி.டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்பட்டு விடும். இதுதவிர 25 எஸ்.எம்.எஸ்., ஜியோ எண்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

ரூ. 69 ஜியோபோன் சலுகையிலும் ஜியோ எண்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 25 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2121 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஜியோ ரூ. 2121 சலுகையில் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகளை இலவசமாக வழங்குகிறது.
இதில் லேண்ட்லைன் வாய்ஸ் காலிங் சலுகையையும் வழங்குகிறது. இத்துடன் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
ரியல்மி பிராண்டு விரைவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்திருக்கிறார்.
ரியல்மி தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சிஸ் வாங் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய ரியல்மி பிராண்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தார். எனினும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவினை ஜி.எஸ்.எம்.ஏ. ரத்து செய்தது.
இந்நிலையில், ரியல்மி பிராண்டு ஆன்லைனில் விழாவை நடத்துகிறது. வரும் மாதங்களில் ரியல்மி பிராண்டு பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்திருக்கிறார். இவற்றுடன் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக ரியல்மி லிண்க் எனும் செயலியை ரியல்மி பிராண்டு அறிமுகம் செய்தது. இந்த செயலி ரியல்மி ஐ.ஒ.டி. சாதனங்களை இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி பிராண்டு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ரியல்மி பேண்ட் பற்றிய விவரங்களையும் மாதவ் சேத் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி இதய துடிப்பு சென்சார் கொண்ட குறைந்த விலை ஃபிட்னஸ் பேண்ட் சாதனங்களில் ஒன்றாக ரியல்மி பேண்ட் இருக்கும் என அவர் தெரிவித்தார். இதில் கலர் AMOLED ஸ்கிரீன், பில்ட்-இன் சார்ஜிங் போர்ட், மூன்று நிறங்களில் ஸ்டிராப்கள் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
ட்விட்டர் சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்களை வாடிக்கையாளர்களே சுட்டிக்காட்ட புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.
ட்விட்டர் தளத்தில் பரப்பப்படும் போலி தகவல்களை பயனர்களே சுட்டிக்காட்டும் புதிய அம்சத்தினை அந்நிறுவனம் சோதனை செய்கிறது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் போலி தகவல்களை பிரகாசமான நிறங்களை கொண்டு சுட்டிக்காட்ட முடியும்.
"ஆயிரக்கணக்கான ட்வீட்களில் பரவும் போலி தகவல்களை கண்டறிய பல்வேறு வழிமுறைகளை ட்விட்டர் தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. அந்த வரிசையில் பயனர் வழங்கும் தகவல்களை கொண்டு இயங்கும் வகையில் புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. போலி தகவல்கள் மிக முக்கிய பிரச்சனை ஆகும், இதனை எதிர்கொள்ள பல்வேறு வழிமுறைகளை தொடர்ந்து சோதனை செய்வோம்." என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதள நிறுவனங்கள் போலி தகவல்கள் மற்றும் செய்திகளை தங்களது தளங்களில் இருந்து நீக்க கடும் அழத்தத்தை பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் இந்நிறுவனங்கள் போலி செய்திகளை எதிர்கொள்ள புதிய அம்சங்களை தங்களது தளங்களில் அறிமுகம் செய்து வருகின்றன.
ஆபத்தை ஏற்படுத்தும் தகவல்கள் மற்றும் மீடியா ஃபைல்கள் அடங்கிய ட்விட்களில் எச்சரிக்கை தகவல் இடம்பெற செய்வதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் சர்ஃபேஸ் ப்ரோ 7 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் சர்ஃபேஸ் ப்ரோ 7 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய சர்ஃபேஸ் ப்ரோ 7 மாடலில் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே, 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்புடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் ப்ரோ எக்ஸ் மாடலையும் அறிமுகம் செய்தது. இதில் மைக்ரோசாஃப்ட் எஸ்.கியூ.1 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சர்ஃபேஸ் ப்ரோ 7 பல்வேறு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் இந்தியாவில் தற்சமயம் அறிமுகமாகி இருக்கிறது. சர்ஃபேஸ் ப்ரோ 7 இன்டெல் கோர் ஐ7 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரிக்களில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை சர்ஃபேஸ் ப்ரோ 7 மாடலில் 12.3 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, 2736x1824 பிக்சல் 10 பாயிண்ட் மல்டிடச் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர், இன்டெல் ஐரிஸ் பிளஸ் / இன்டெல் யு.ஹெச்.டி. கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மெமரியை பொருத்தவரை 4 ஜி.பி. / 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR4X ரேம், 128 / 256 / 512 அல்லது 1000 ஜி.பி. எஸ்.எஸ்.டி. வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சர்ஃபேஸ் பென், வைபை 6, ப்ளூடூத் 5.0 எல்.இ. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10.5 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7 சிறப்பம்சங்கள்:
- 12.3- இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே 2736x1824 பிக்சல்
- சர்ஃபேஸ் பென்
- குவாட்கோர் 10-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7-1065G7 பிராசஸர்
- கோர் ஐ3 மாடலில் இன்டெல் யு.ஹெச்.டி. கிராஃபிக்ஸ்
- கோர் ஐ5 மற்றும் ஐ7 மாடல்களில் இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ்
- அதிகபட்சம் 16 ஜி.பி. LPDDR4X ரேம், அதிகபட்சம் 256 ஜி.பி. SSD
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, 1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. வீடியோ ரெக்கார்டிங்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. வீடியோ ரெக்கார்டிங்
- 1.6 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ பிரீமியம், டூயல் ஃபார் ஃபீல்டு ஸ்டூடியோ மைக்
- வைபை 6 a/b/g/n/ac/ax, ப்ளூடூத் 5.0 LE
- யு.எஸ்.பி. டைப்-ஏ, யு.எஸ்.பி. டைப்-சி
- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், மினி டிஸ்ப்ளே போர்ட்
- சர்ஃபேஸ் கனெக்ட், சர்ஃபேஸ் டைப் கவர் போர்ட்
- மைக்ரோ எஸ்.டி.எக்ஸ்.சி. கார்டு ரீடர்
- 13 மணி நேர பேட்டரி பேக்கப்
- பிளாட்டினம், மேட் பிளாக் நிறங்கள்
விலை விவரங்கள்:
இன்டெல் கோர் ஐ3 10-ம் தலைமுறை 4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி. விலை ரூ. 70,990
இன்டெல் கோர் ஐ5 10-ம் தலைமுறை 8 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி. விலை ரூ. 85,990
இன்டெல் கோர் ஐ5 10-ம் தலைமுறை 8 ஜி.பி. ரேம் + 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. விலை ரூ. 1,13,990
இன்டெல் கோர் ஐ7 10-ம் தலைமுறை 16 ஜி.பி. ரேம் + 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. விலை ரூ. 1,37,990
அக்சஸரீக்கள்
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7 சிக்னேச்சர் டைப் கவர் ரூ. 15,389
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் பென் ரூ. 9139
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஆர்க் மவுஸ் ரூ. 6950
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டாக் ரூ. 18,890
அனைத்து வேரியண்ட்களும் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்பட்ஸ் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அன்பேக்டு 2020 நிகழ்வில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் அறிமுகமான நிலையில், இந்தியாவில் இதன் முன்பதிவு துவங்கியிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் விலை ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கிய நிலையில், இதன் விநியோகம் மார்ச் 6-ம் தேதி துவங்குகிறது. புதிய இயர்பட்ஸ் புளூ, பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு புதிய இயர்பட்ஸ் ரூ. 1990 விலையில் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 2-வழி டைனமிக் ஸ்பீக்கர்
- 3 மைக்குகள்
- மேம்பட்ட ஆம்பியன்ட் சவுண்ட் அம்சம்
- ப்ளூடூத் 5
- ஆண்ட்ராய்டு 5.0
- அக்செல்லோமீட்டர், ஐ.ஆர்., ஹால், டச்
- சார்ஜிங் கேஸ் அளவீடு: 38.8 x 70 x 26.5எம்.எம்.; எடை: 39.6 கிராம்
- 85 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 11 மணி நேர பிளேபேக்
- 270 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சார்ஜிங் கேஸ்
- 3 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 60 நிமிடங்களுக்கு பிளேபேக்
- Qi சான்று பெற்ற வயர்லெஸ் சார்ஜிங்
ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெயிட் இணைப்பில் ஆட் ஆன் கனெக்ஷன் சலுகைக்கான விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சலுகையை அறிமுகம் செய்தது. இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது சலுகையிலேயே குடும்பத்தாரை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இரண்டாவது இணைப்பாக சேர்த்து கொள்ள முடியும்.
ஏர்டெல் ஆட் ஆன் சலுகை துவக்க விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் விலை உயர்வை அடுத்து இதன் விலை ரூ. 249 என மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

போஸ்ட்பெயிட் இணைப்பினை பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர் தங்களது குடும்பத்தார் அல்லது நண்பரை தங்களது சலுகையில் சற்றே குறைந்த விலையில் இணைத்துக் கொள்ள முடியும். அதாவது ரூ. 499 மாத சலுகையை பயன்படுத்துவோர் தங்களது நண்பரை அதே சலுகையில் இணைக்கும் போது இரண்டாவது இணைப்பிற்கு ரூ. 249 மட்டும் செலுத்தினால் போதும்.
ஏர்டெல் ஆட் ஆன் சலுகையின் விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இதற்கான கட்டணம் ரூ. 249 என மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர டேட்டாவுக்கு மட்டும் ரூ. 99 விலையில் ஆட் ஆன் சலுகையை ஏர்டெல் வழங்கி வருகிறது.
மத்திய தொலைதொடர்பு துறைக்கு ஏர்டெல் வழங்க வேண்டிய நிலைவை தொகையில் ரூ. 10,000 கோடியை அந்நிறுவனம் செலுத்தியது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு உரிமம் கட்டணம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம் உள்பட கிட்டத்தட்ட ரூ.35,586 கோடி நிலுவை தொகையை பாக்கி வைத்திருக்கிறது. நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு தொலைதொடர்புதுறை கடந்த 14-ந்தேதி உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து பிப்ரவரி 20-ந்தேதிக்குள் ரூ.10,000 கோடியையும் மீதுமுள்ள நிலுவை தொகையை மார்ச் 17-ந்தேதிக்குள் செலுத்துவதாக ஏர்டெல் பதில் அளித்து இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு விதித்த காலக்கெடு மீது சுப்ரீம் கோர்ட்டு எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் தொலைதொடர்பு துறைக்கு ரூ.10,000 கோடி நிலுவை தொகையை ஏர்டெல் நிறுவனம் இன்று செலுத்தியது.

மத்திய அரசுக்கு பாரதி ஏர்டெல், பாரதி ஹெக்ஸ்காம் மற்றும் டெலினார் சார்பாக மொத்தம் ரூ.10,000 கோடி செலுத்தப்பட்டது. பாரதி ஏர்டெல் (டெலினார் உள்பட) ரூ.9,500 கோடியையும், ஹெக்ஸ்காம் ரூ.500 கோடியை அளித்தது.
நிறுவனத்தின் சுய மதிப்பீட்டு கணக்கை விரைவாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த விசாரணைக்கு முன்னர் அல்லது விசாரணை முடிந்தவுடன் மீதமுள்ள நிலுவை தொகையை செலுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் ஏர்டெல் தெரிவித்து உள்ளது.
இதுதவிர நிறுவனத்தின் சுய மதிப்பீட்டு கணக்கை முடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த வோடபோன், இன்று ரூ. 2500 கோடியையும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் (பிப்ரவரி 21) ரூ. 1000 கோடியை செலுத்துவதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. எனினும், வோடபோன் நிறுவன கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய ஆடியோ சார்ந்த சாதனத்தை பிப்ரவரி 17-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. பெரும்பாலும் இந்த சாதனம் போர்ட்டபிள் ஸ்மார்ட் ஸ்பீக்கராக இருக்கும் என சியோமி வெளியிட்டுள்ள டீசர்களின் மூலம் தெரியவந்துள்ளது.
புதிய சாதனம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், சியோமி டீசர்களுடன் #CarryYourSound எனும் ஹேஷ்டேக் இடம்பெற்று இருப்பதை கொண்டு இது ஸ்மார்ட் ஸ்பீக்கராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. மேலும் டீசரில் உள்ள புகைப்படம் ஸ்பீக்கர் போன்ற வரைபடம் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் புதிய சாதனம் போர்ட்டபில் ஸ்பீக்கராக இருக்கும் என தெரிகிறது. புதிய சாதனம் பற்றி சியோமி வெளியிட்டுள்ள வீடியோ டீசரில் இதில் ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என்பதை உணர்த்துகிறது.
முன்னதாக சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 8ஏ டூயல், 10,000 மற்றும் 20,000 எம்.ஏ.ஹெச். பவர் பேங்க் சாதனங்களை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து சியோமியின் புதிய ஆடியோ சாதனம் இந்திய சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது.
சோனி நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சோனி நிறுவனத்தின் புதிய ஏ.என்.சி. (ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்) வசதி கொண்ட வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹெட்போன் சோனி WH-H910N எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. இதில் ப்ளூடூத் 5, ஹை-ரெஸ் ஆடியோ, LDAC, DSEE-HX, டச் கண்ட்ரோல்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய WH-H910N ஹெட்போனில் டூயல் நாய்ஸ் சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுப்புற சத்தத்தை சிறப்பான முறையில் குறைக்கிறது. இத்துடன் சோனியின் சென்ஸ் என்ஜின் தொழில்நுட்பம் ஹெட்போனில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் வசதியை வழங்குகிறது.

இது பயனர் இருக்கும் பகுதிக்கு ஏற்ப ஹெட்போன் சவுண்ட் மற்றும் செட்டிங்களை மாற்றியமைக்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் குவிக் அடென்ஷன் மோட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது உரையாடல்களின் போது உடனடியாக சத்தத்தை குறைக்க செய்கிறது.
வழக்கமான சோனி ஹெட்போன்களில் இருப்பதை போன்று இதன் வலது புற இயர் கப் டச் சென்சார் கொண்டிருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் அழைப்புகளை ஏற்பது, மியூசிக் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சத்தை இயக்குவது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
இந்த ஹெட்போனினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 35 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி மூலம் வெறும் பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 2.5 மணி நேரம் பயன்படுத்த முடியும். இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் சோனி Wh-H910N வயர்லெஸ் ஹெட்போன் விலை ரூ. 21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் சர்வதேச சந்தையில் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. கிளாம்ஷெல் வடிவமைப்பில் உருவாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் சாதனங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த டிஸ்ப்ளேவினை இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கிறது. இதில் மிக மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை 200,000 அதிக முறை மடிக்க முடியும்.

கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300x112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலை போன்றே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இதில் பிரத்யேக ஃபிளெக்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் செயலிகளை பாதியாக பிரித்து, கீழ்புறம் கண்ட்ரோல்கள் கொண்டது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டுள்ளது.
இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் சிறப்பம்சங்கள்:
- 6.7 இன்ச் FHD+ 2636x1080 பிக்சல் 21.5:9 டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே
- வெளிப்புறம் 1.1 இன்ச் 300x112 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- இசிம் மற்றும் நானோ சிம்
- 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 1.4μm
- 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2, 1.22μm, எல்.இ.டி. ஃபிளாஷ், ஹெச்.டி.ஆர்.10 பிளஸ், OIS
- 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- பைவை, ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. டைப்-சி
- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 9 வாட் கியூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், விற்பனை விவரம் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனையும் சாம்சங் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மாடலின் ஆடியோ தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென புதிய இயர்போனில் ஏ.கே.ஜி. டியூன் செய்யப்பட்டுள்ளது.

புதிய பட்ஸ் பிளஸ் இயர்போனின் வெளிப்புறம் இரண்டு மைக்குகளும், உள்புறம் ஒரு மைக் என மொத்தம் மூன்று மைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அழைப்புகளின் போது சீரான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதன் ஆம்பியன்ட் சவுண்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டு பயனர்கள் நான்கு நிலைகளில் வெளிப்புற ஆடியோவினை கட்டுப்படுத்த முடியும்.
85 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளதால் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போன் 11 மணி நேரத்திற்கு மியூசிக் பிளேபேக் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் பயன்படுத்தினால் 22 மணி நேர பேக்கப் பெற முடியும்.

இத்துடன் குவிக் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பட்ஸ் பிளஸ் இயர்போனில் பிளே/பாஸ், ஸ்கிப், அழைப்புகளை ஏற்பது மட்டுமின்றி பயனர் விரும்பும் அம்சங்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போன் வைட், பிளாக் மற்றும் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.






