search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கவுன்சிலர்"

    • கூட்டத்திற்கு நகராட்சிமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வகித்தார்.
    • அடிப்படை வசதிகள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அதை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி மன்ற அறையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி மன்றகூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சிமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் பாலசுப்பிரமணியம், பா.ம.க. உறுப்பினர்கள் தனபால், குமரேசன், தி.மு.க. உறுப்பினர் வேதாச்சலம் ஆகியோர் தங்களின் வார்டுகளில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

    அதனைத் தொடர்ந்து பேசிய 4-வது வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் போடப்பட்ட தார் சாலைகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளதாக ஆணையாளரிடம் புகார் தெரிவித்தார். மேலும் குடிநீர் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அதை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி மன்ற அறையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    அதனைத் தொடர்ந்து தங்களின் வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தருவதாக தலைவர் உறுதி அளித்ததின் பேரில் மீண்டும் எழுந்து தனது இருக்கையில் அமர்ந்தார். இந்த கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வார்டில் உள்ள சாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்
    • சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    மதுரை மாநகராட்சியின் 79-வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த லக்சிகாஸ்ரீ என்பவர் உள்ளார். ஜீவா நகர், ராமையா தெரு, ஓம்சக்தி கோவில் தெரு, சுந்தராஜ புரம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் கடந்த 6 மாதங்களாக அடிக்கடி சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதனால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சில நாட்கள் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதாக பொது மக்கள் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீயிடம் புகார் தெரிவித்தனர். அவரும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு வார்டில் உள்ள சாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் மீண்டும் ஜீவாநகர் பகுதியில் கழிவுநீர் வெளியேறும் பிரச்சினை தலைதூக்கியது. இதனால் அதிருப்தி அடைந்த பொது மக்கள் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீயை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினர். இந்த முறையும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது.

    மாநகராட்சி அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கை கண்டித்தும், 79-வது வார்டில் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை ஜீவாநகர் மெயின்ரோடு சந்திப்பில் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ தலைமையில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. பகுதி செயலாளர் முருகானந்தம் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மாநகராட்சி நிர்வாகத்தை ஆளும் கட்சி பெண் கவுன்சிலர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ கூறுகையில், வார்டு பிரச்சினை குறித்து பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் பேசினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக மேயர், கமிஷனர் சந்தித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது வார்டை புறக்கணிக்கிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி வார்டு பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

    • குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம்

    கோவை:

    கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 44). தி.மு.க.வை சேர்ந்த இவர் மலுமச்சம்பட்டி ஊராட்சியில் கவுன்சிலராக உள்ளார்.

    இவர்களது மகன் மோகன் (24). நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ரவிக்குமார், கவுன்சிலர் சித்ரா, மோகன் ஆகியோரை தலை மற்றும் உடலில் அரிவாளால் வெட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தி.மு.க. கவுன்சிலரை வீடு புகுந்து வெட்டிய மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ராஜன் என்ற ராஜா (23), பிச்சைபாண்டி (23), வைசியாள் வீதியை சேர்ந்த முத்துப்பாண்டி (24), அம்மா நகரை சேர்ந்த மகேஷ் கண்ணன் (22), தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஸ்ரீரக்சித் (18) ஆகியோரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜன், பிச்சைபாண்டி, முத்துப்பாண்டி ஆகியோர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    5 பேரிடம் தி.மு.க. கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், மகனை வீடு புகுந்து வெட்டியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாங்கள் 5 பேரும் கவுன்சிலர் வீட்டின் பின் புறத்தில் உள்ள காலி இடத்தில் இரவு நேரத்தில் மது அருந்துவோம். அப்போது கஞ்சாவும் பிடிப்போம். இதனை பார்த்த சித்ரா எங்களை போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டி வந்தார். மேலும் இங்கு வைத்து கஞ்சா மது அடிக்க கூடாது என எச்சரித்து வந்தார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை வீடு புகுந்து கொலை செய்வது என முடிவு செய்தோம்.

    சம்பவத்தன்று இரவு நாங்கள் 5 பேரும் ஒன்றாக சேர்ந்து கஞ்சா குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம். எங்களை பார்த்த கவுன்சிலரின் கணவர் ரவிக்குமார் சத்தம் போட்டார். அப்போது அவரை நாங்கள் வெட்டினோம். கணவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த கவுன்சிலர் சித்ராவையும் வெட்டினோம். இதனை தடுக்க வந்த அவரது மகனையும் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கவுன்சிலராகி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வது திருப்தியாக உள்ளது.
    • பள்ளியில் பாடம் நடத்துவதால் என்னை பார்த்ததும் குழந்தைகள் ‘மிஸ்’ என்று அன்போடு அழைக்கிறார்கள்.

    கவுன்சிலர் என்றாலே தனி கெத்து தான்! தெருவில் இறங்கி நடந்தால் சுற்றி வரும் தொண்டர் படை பரிவாரம்! பிரச்சினைக்கு தீர்வை தேடி வரும் மக்கள் கூட்டம்! இப்படி ஒரு பந்தாவான பதவிக்காலம் அது.

    அதிலும் ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்தால் அவர்கள் லெவலே வேறு. ஆனால் இவை எல்லாவற்றிலும் இருந்து மாறுபட்டு காட்சி தருகிறார் சென்னை மாநகராட்சி 44-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சர்ப ஜயாதாஸ். மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவராகவும் இருக்கிறார்.

    இவர் தெருவில் வந்தால் 'கவுன்சிலரம்மா... வணக்கம்' என்கிறார்கள் பெரியவர்கள். அவர்களுக்கு அக்மார்க் அரசியல்வாதியை போல் இரு கைகளையும் கூப்பி சிரித்தபடியே வணக்கம் போட்டு நகர்கிறார்....

    அந்த வழியாக வரும் வாண்டுகள் 'குட் மார்னிங் மிஸ்' என்கிறார்கள். அவர்களை பார்த்ததும் 'குட் மார்னிங்' என்றபடியே அவர்களை தட்டிக் கொடுத்து சாட்சாத் பள்ளி ஆசிரியை போலவே மாறி விடுகிறார்.

    புரியாமல் புருவம் உயர்த்திய நம்மிடம் ஆசிரியையும் நானே. கவுன்சிலரும் நானே என்றார் சிரித்த படியே.

    அது எப்படி...?

    வாரம் தோறும் சனிக்கிழமை என் வார்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்துகிறேன் என்றார்.

    ஒரு கவுன்சிலர் டீச்சராகவும் மாறியது எப்படி என்பது பற்றிய சுவையான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். எனக்கு டீச்சர் வேலைன்னா ரொம்ப பிடிக்கும். கல்யாணத்துக்கு முன்பு டீச்சராக வேலை பார்த்து இருக்கிறேன்.

    கவுன்சிலர் வேலையும், அனுபவமும் எனக்கு புதியது. எனது கணவர் நரேந்திரன் தி.மு.க.வில் இருக்கிறார். எங்கள் வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு. எனவே என்னை தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தார்.

    இப்போது கவுன்சிலராகி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வது திருப்தியாக உள்ளது. கவுன்சிலர் பணி நிமித்தமாக ஒரு நாள் எங்கள் பகுதி மாநகராட்சி பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அது நடுநிலைப் பள்ளிதான்.

    குழந்தைகள் ஸ்மார்ட்டாக இருந்தார்கள். ஆனால் ஆங்கிலம் பேசுவதில் அவர்களிடம் தயக்கம் இருந்ததை பார்த்தேன். எனவே நானே அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க ஆசைப்பட்டு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டேன்.

    கவுன்சிலர் பள்ளியில் வந்து கற்று தர போகிறாரா? என்று அவர்களும் யோசிக்கத்தான் செய்தார்கள். வாரம்தோறும் சனிக்கிழமையில் கற்றுக் கொடுக்க தயார் என்றேன். அதற்காக பெற்றோரிடமும் அனுமதி பெற்று வகுப்பு எடுக்க தொடங்கினேன். கடந்த ஆண்டு 45 குழந்தைகள் கலந்து கொண்டனர். சொல்லிக் கொடுத்தால் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். பேச்சு வழக்கில் பேசும் வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்து தினமும் என்னிடம் 15 நிமிடங்கள் ஆங்கிலத்திலேயே பேச வைப்பேன்.

    கொஞ்சம் கொஞ்சமாக தயக்கத்தை விட்டு பேச தொடங்கி இருக்கிறார்கள். இந்த ஆண்டு இன்னும் தொடங்க வில்லை.

    பள்ளியில் பாடம் நடத்துவதால் என்னை பார்த்ததும் குழந்தைகள் 'மிஸ்' என்று அன்போடு அழைக்கிறார்கள். அதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உண்மையை சொல்லப் போனால் பள்ளியில் பாடம் நடத்தும் ஒவ்வொரு நாளும் நான் மன அழுத்தம் எதுவும் இல்லாமல் மிகவும் உற்சாகமாகி விடுவேன் என்றார்.

    ஆசிரியர் தொழிலை ஏன் விட்டீர்கள்? அரசியலுக்குள் எப்படி வந்தீர்கள்? என்றதும் தனது வாழ்க்கை பயணத்தின் இனிமையான அனுபவங்களை நினைவு கூர்ந்தார். "எனது பூர்வீகம் மேற்கு வங்காளம். வங்காளிதான் தாய்மொழி. நான் புனே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு படித்து கொண்டிருந்த போது எனது கணவர் அங்கு நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது எங்களுக்குள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நட்பு காதலாகி, திருமணத்தில் முடிந்தது. திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது மூத்த மகன் 9-ம் வகுப்பும், இளையவன் 4-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.

    திருமணத்துக்கு முன்பு சென்னை எங்கு இருக்கிறது? எப்படி இருக்கும்? என்றே தெரியாது. தமிழ்மொழியை பற்றியும் தெரியாது. இப்போது தமிழ் பேசவும் தெரியும், எழுத, படிக்கவும் தெரியும்.

    தமிழ் மட்டுமல்ல இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஆங்கிலம், வங்காளி ஆகிய 6 மொழிகள் நன்கு தெரியும். திருமணத்துக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் கேந்திரிய பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்தேன். எனக்கு ஆசிரியை பணி ரொம்ப பிடிக்கும். எனவே பெரம்பூரில் ஒரு தனியார் பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியர் வேலை பார்த்தேன். அதன் பிறகு எனது ஆர்வத்தை பார்த்து எனது கணவர் 'பிளே ஸ்கூல்' தொடங்கி நடத்த ஊக்கம் அளித்தார்.

    இப்போது அந்த பள்ளியையும் நடத்துகிறோம். ஒன்று மாணவர்களுக்கு கற்று கொடுப்பது இன்னொன்று பொது மக்களுக்கு சேவை செய்வது. ஆக, இரண்டு பணிகளும் இப்போது எனக்கு பிடித்த பணிகளாகி விட்டன" என்றார் வங்காளத்து தமிழ் மருமகள்.

    • இளையான்குடி அருகே பெண் கவுன்சிலரின் பெயர் இல்லாததால் கல்வெட்டு உடைத்து நொறுக்கப்பட்டது.
    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் சமையலறை கட்டிட திறப்பு விழா நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் விஜயன்குடி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சமையலறைக் கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி பங்கேற்று சமையலறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    விழா தொடங்குவதற்கு முன்பு அந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு வந்த அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரியின் கணவர் செல்வராஜ் விழா கல்வெட்டில் மனைவி பெயர் இல்லாததைக்கண்டு ஆத்திரம் அடைந்தார்.

    அதன் பின்னர் அவர் அந்த கல்வெட்டை உடைத்து நொறுக்கினார். இதுகுறித்து விஜயன்குடி ஊராட்சி மன்ற தலைவர் மாரி லோகராஜ் இளையான்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்னதானம் வழங்குவதற்கு கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று இருந்தேன்.
    • மின் மயானம் அமைப்பதில் இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஸ். இவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்குவதற்கு கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று இருந்தேன். தற்போது, என்னையும், எனது கணவரையும், கோவிலுக்குள் வரவேண்டாம் என்றும் அன்னதானத்தை வேறு நபர் வழங்குவதாகவும் கூறுகின்றனர். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறும்போது " அந்தப் பகுதியில் மின் மயானம் அமைப்பதில் இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. தற்போது கோவில் வழிபாட்டில் எதிரொலிக்கிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

    ×