search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாநகராட்சி பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொடுக்கும் பெண் கவுன்சிலர்
    X

    மாநகராட்சி பள்ளியில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்றுக் கொடுக்கும் பெண் கவுன்சிலர்

    • கவுன்சிலராகி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வது திருப்தியாக உள்ளது.
    • பள்ளியில் பாடம் நடத்துவதால் என்னை பார்த்ததும் குழந்தைகள் ‘மிஸ்’ என்று அன்போடு அழைக்கிறார்கள்.

    கவுன்சிலர் என்றாலே தனி கெத்து தான்! தெருவில் இறங்கி நடந்தால் சுற்றி வரும் தொண்டர் படை பரிவாரம்! பிரச்சினைக்கு தீர்வை தேடி வரும் மக்கள் கூட்டம்! இப்படி ஒரு பந்தாவான பதவிக்காலம் அது.

    அதிலும் ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்தால் அவர்கள் லெவலே வேறு. ஆனால் இவை எல்லாவற்றிலும் இருந்து மாறுபட்டு காட்சி தருகிறார் சென்னை மாநகராட்சி 44-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சர்ப ஜயாதாஸ். மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவராகவும் இருக்கிறார்.

    இவர் தெருவில் வந்தால் 'கவுன்சிலரம்மா... வணக்கம்' என்கிறார்கள் பெரியவர்கள். அவர்களுக்கு அக்மார்க் அரசியல்வாதியை போல் இரு கைகளையும் கூப்பி சிரித்தபடியே வணக்கம் போட்டு நகர்கிறார்....

    அந்த வழியாக வரும் வாண்டுகள் 'குட் மார்னிங் மிஸ்' என்கிறார்கள். அவர்களை பார்த்ததும் 'குட் மார்னிங்' என்றபடியே அவர்களை தட்டிக் கொடுத்து சாட்சாத் பள்ளி ஆசிரியை போலவே மாறி விடுகிறார்.

    புரியாமல் புருவம் உயர்த்திய நம்மிடம் ஆசிரியையும் நானே. கவுன்சிலரும் நானே என்றார் சிரித்த படியே.

    அது எப்படி...?

    வாரம் தோறும் சனிக்கிழமை என் வார்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்துகிறேன் என்றார்.

    ஒரு கவுன்சிலர் டீச்சராகவும் மாறியது எப்படி என்பது பற்றிய சுவையான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். எனக்கு டீச்சர் வேலைன்னா ரொம்ப பிடிக்கும். கல்யாணத்துக்கு முன்பு டீச்சராக வேலை பார்த்து இருக்கிறேன்.

    கவுன்சிலர் வேலையும், அனுபவமும் எனக்கு புதியது. எனது கணவர் நரேந்திரன் தி.மு.க.வில் இருக்கிறார். எங்கள் வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு. எனவே என்னை தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தார்.

    இப்போது கவுன்சிலராகி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வது திருப்தியாக உள்ளது. கவுன்சிலர் பணி நிமித்தமாக ஒரு நாள் எங்கள் பகுதி மாநகராட்சி பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அது நடுநிலைப் பள்ளிதான்.

    குழந்தைகள் ஸ்மார்ட்டாக இருந்தார்கள். ஆனால் ஆங்கிலம் பேசுவதில் அவர்களிடம் தயக்கம் இருந்ததை பார்த்தேன். எனவே நானே அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க ஆசைப்பட்டு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டேன்.

    கவுன்சிலர் பள்ளியில் வந்து கற்று தர போகிறாரா? என்று அவர்களும் யோசிக்கத்தான் செய்தார்கள். வாரம்தோறும் சனிக்கிழமையில் கற்றுக் கொடுக்க தயார் என்றேன். அதற்காக பெற்றோரிடமும் அனுமதி பெற்று வகுப்பு எடுக்க தொடங்கினேன். கடந்த ஆண்டு 45 குழந்தைகள் கலந்து கொண்டனர். சொல்லிக் கொடுத்தால் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். பேச்சு வழக்கில் பேசும் வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்து தினமும் என்னிடம் 15 நிமிடங்கள் ஆங்கிலத்திலேயே பேச வைப்பேன்.

    கொஞ்சம் கொஞ்சமாக தயக்கத்தை விட்டு பேச தொடங்கி இருக்கிறார்கள். இந்த ஆண்டு இன்னும் தொடங்க வில்லை.

    பள்ளியில் பாடம் நடத்துவதால் என்னை பார்த்ததும் குழந்தைகள் 'மிஸ்' என்று அன்போடு அழைக்கிறார்கள். அதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உண்மையை சொல்லப் போனால் பள்ளியில் பாடம் நடத்தும் ஒவ்வொரு நாளும் நான் மன அழுத்தம் எதுவும் இல்லாமல் மிகவும் உற்சாகமாகி விடுவேன் என்றார்.

    ஆசிரியர் தொழிலை ஏன் விட்டீர்கள்? அரசியலுக்குள் எப்படி வந்தீர்கள்? என்றதும் தனது வாழ்க்கை பயணத்தின் இனிமையான அனுபவங்களை நினைவு கூர்ந்தார். "எனது பூர்வீகம் மேற்கு வங்காளம். வங்காளிதான் தாய்மொழி. நான் புனே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு படித்து கொண்டிருந்த போது எனது கணவர் அங்கு நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது எங்களுக்குள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நட்பு காதலாகி, திருமணத்தில் முடிந்தது. திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது மூத்த மகன் 9-ம் வகுப்பும், இளையவன் 4-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.

    திருமணத்துக்கு முன்பு சென்னை எங்கு இருக்கிறது? எப்படி இருக்கும்? என்றே தெரியாது. தமிழ்மொழியை பற்றியும் தெரியாது. இப்போது தமிழ் பேசவும் தெரியும், எழுத, படிக்கவும் தெரியும்.

    தமிழ் மட்டுமல்ல இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஆங்கிலம், வங்காளி ஆகிய 6 மொழிகள் நன்கு தெரியும். திருமணத்துக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் கேந்திரிய பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்தேன். எனக்கு ஆசிரியை பணி ரொம்ப பிடிக்கும். எனவே பெரம்பூரில் ஒரு தனியார் பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியர் வேலை பார்த்தேன். அதன் பிறகு எனது ஆர்வத்தை பார்த்து எனது கணவர் 'பிளே ஸ்கூல்' தொடங்கி நடத்த ஊக்கம் அளித்தார்.

    இப்போது அந்த பள்ளியையும் நடத்துகிறோம். ஒன்று மாணவர்களுக்கு கற்று கொடுப்பது இன்னொன்று பொது மக்களுக்கு சேவை செய்வது. ஆக, இரண்டு பணிகளும் இப்போது எனக்கு பிடித்த பணிகளாகி விட்டன" என்றார் வங்காளத்து தமிழ் மருமகள்.

    Next Story
    ×