search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக் கல்வித்துறை"

    • ஒரே நாளில் 9 இணை இயக்குனர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • 6 துணை இயக்குனர்களுக்கு தற்காலிகமாக இணை இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறையில் இன்று ஒரே நாளில் 9 இணை இயக்குனர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 6 துணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழுள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்கள் நிர்வாக நலன்கருதி பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

    அதன்படி, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக்கல்வி) க.சசிகலா, பள்ளிக்கல்வி இணை இயக்குனராகவும் (நாட்டு நலப்பணிகள் திட்டம்), அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) சி.செல்வராஜ், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் செ.அமுதவல்லி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குனராகவும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனர் க.செல்வகுமார், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனராகவும் (மேல்நிலைக்கல்வி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குனர் பொ.பொன்னையா தொடக்கக்கல்வி இணை இயக்குனராகவும் (உதவிபெறும் பள்ளிகள்), தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இணை இயக்குனர் நா.ஆனந்தி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராகவும் (பாடத்திட்டம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் (பயிற்சி) வை.குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனராகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராக (பயிற்சி) இடமாற்றம்.

    தொடக்க கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (உதவிபெறும் பள்ளிகள்) செ.சாந்தி, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குனராக இடமாற்றம். அதேபோல், பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 6 துணை இயக்குனர்களுக்கு தற்காலிகமாக இணை இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து தகவல் சேகரிக்க வேண்டும்.
    • மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.

    சென்னை:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும்.

    மத்திய அரசின் திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நல சோதனை நடத்தப்படுகிறது.

    இதில் மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.

    ஆய்வின்போது மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

    • தவறு செய்யும் மாணவர்களை திருந்த செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • திருந்தாத மாணவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்ற பரிந்துரை

    சென்னை:

    மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பி, அவற்றை பள்ளிகளில் அமல்படுத்தவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அந்த தீர்மானங்களை பள்ளிகளில் அமல்படுத்தவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

    பள்ளிகளில் மாணவர்கள் புகைப் பிடிப்பது, பிற மாணவர்களை அடிப்பது, கேலி செய்வது, ஆசிரியர்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்வது என பலவிதமான தவறுகளை செய்கிறார்கள். அந்த மாணவர்களை திருந்த செய்வதற்கும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாணவர்கள் பள்ளி சொத்துக்களை சேதமடையச் செய்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ ஏற்க வேண்டும். அந்த சொத்துக்களை மாற்றி அமைத்து தரக்கூடிய பொறுப்பையும் அவர்கள் ஏற்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்து திருந்தாத மாணவர்களை, அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்றலாம்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.
    • ஆய்வின்போது செல்போன் பேசிக்கொண்டிருக்கும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை.

    மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னரே பள்ளிக்கு வரவேண்டும்.

    மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல் என பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.

    பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மை கல்வி அலுவலருக்கு செல்போன் மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். 10, 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் சரியாக பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தியிருக்கிறார்களா? என்பதை தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும்.

    அரசு பள்ளியில் தீத்தடுப்பு சாதனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.

    ஆசிரியர்கள் பள்ளியில் வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஆய்வின்போது செல்போன் பேசிக்கொண்டிருக்கும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியிலும் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது.

    மாணவர்கள் செல்போனை பள்ளிக்கு கொண்டுவருவதை முழுவதுமாக தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துக்குள் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடத்தி முடிக்கப்பட வேண்டும். சினிமா பாட்டு முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் பள்ளிக்கு மோதிரம், செயின் போன்றவைகளை கண்டிப்பாக அணிந்து வரக்கூடாது. மாணவர்கள் அவற்றை அணிந்து கொண்டு வந்தால், பெற்றோரை அழைத்து வரச்சொல்லி விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    இது போன்று 77 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    • தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம்.
    • ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும்.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். ஆனால், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்துள்ளது. பட்டதாரிகள், வீடு தேடி வரும் கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்களை எல்லாம் தற்காலிகமாக நியமிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்ட தகுதிகளை கொண்டவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

    ஆனால், பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பம் செய்தால், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்கக்கூடாது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

    அதில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்வு நடைமுறைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

    • மாணவர்களின் நிறைகுறைகளை அறிந்து கற்பிக்க வேண்டும் என கலெக்டர் அரவிந்த் பேச்சு
    • மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, தொடக்கநிலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எண்ணும் எழுத்தும் குறித்த அகஸ்தீஸ்வரம் தொடக்கநிலை ஆசிரியர்க ளுக்கான பயிற்சி முகாம் கொட்டாரம் அரசுமேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    ஒவ்வொரு மாணவ - மாணவியர்களுக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்கும் கல்வியே அடிப்படையாகும். பள்ளிக்கல்வியில் கணித பாடமென்பது மிகவும் முக்கியமானது.

    ஒவ்வொரு மாணவர்களும் கணிதம் நன்கு புரிந்து சுற்றாலே மற்ற பாடங்களையும் எளிதாக கற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் கணித பாடத்தினை கற்றுக்கொள்ளும்போது மிகவும் கடினமானது கிடையாது என்பதை ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துக் கூறி கணிதப் பாடத்தினை எளிதாக கற்க முடியும் என்பதை புரிய வைக்க வேண்டும்.

    கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கிடையே உள்ள திறமைகளை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவ மாணவியர்களின் நிறைகள் மற்றும்குறைகளை தெரிந்து கொள்வதோடு, அவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்பித்தால் நன்றாக படிப்பார்கள் என்பது தெரிந்துகொண்டு, அதன் வாயிலாக கல்வி கற்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் புரிந்து கொண்டாலே அதிக அளவு மதிப்பெண்கள் பெறுவார்கள். உயர் கல்வி பயில்வதற்கும் மாணவ, மாணவியர்க ளுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும். மாண வர்கள் வகுப்பறைகளின் செயல்பாடுகள் ஒழுக்க மாகவும் நற்பண்புகளை வளர்த்து கொள்வதற் கான முழு பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.

    விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கான நடவடிக்கையினை ஒவ் வொரு ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். எதிர்கால சமுதாயமான மாணவர்களை உருவாக்குவதில் ஆசி ரியர்களின் பணி இன்றி யமையாதது ஆகும். எனவே அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவ மாணவியர்களுக்கு அரப்பணிப்புடன் சிறந்த முறையில் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, தொடக்கநிலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 9-ம் வகுப்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
    • 9-ம் வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    9-ம் வகுப்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அவர்களால் 'ஆல்பாஸ்' பட்டியலில் சேர்ந்து 10-ம் வகுப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு 9-ம் வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அதிகாரிகளும், பள்ளி நிர்வாகத்தினரும் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×