என் மலர்tooltip icon

    வழிபாடு

    • நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம்.
    • தோஷம் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது.

    சிலர் ஜோதிடரை சந்தித்து 10 -ல் எது முக்கிய பொருத்தம் என்று கேட்பது உண்டு. ஆனால், ராமர் சீதைக்கு கூட எனது கணக்கில் எட்டு பொருத்தம் தான் காட்டுகிறது. ஆக நாம் யாருக்குமே பத்து பொருத்தம் என்பது அதிர்ஷ்டம்தான். ஆனால் குறைந்தது நான்கு பொருத்தமாவது இருத்தல் அவசியமாம். நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம். பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம்.

    எனினும் ஏன் பல திருமணங்கள் வெற்றி அடைவது இல்லை?

    அனைத்து பொருத்தங்களும் பார்த்து தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எனினும் திருமணம் நிலைக்காமல் போக பல காரணங்கள் உண்டு. நிறைய பேர் என்ன செய்கிறார்கள் என்றால், ஒரு ஜோதிடரை அணுகி நட்சத்திர அடிப்படையில் பொருத்தம் உள்ளதா என்று மட்டும் பார்த்து விட்டு அவசர கதியில் திருமணத்தை முடித்து விடுகிறார்கள். ஆனால் ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தை ஆராய மறந்து விடுகிறார்கள்.

    ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் லக்கனம் மற்றும் இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த வரனை எடுப்பதை விட எடுக்காமல் இருப்பது நல்லது. காரணம் அது ராகு-கேது தோஷம். இந்த மாதிரி தோஷம் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது. திருமண வாழ்க்கை அதிக சோதனை நிறைந்து இருக்கும். அதே போல ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் இருத்தல் நல்லது அல்ல. ஆக இவை எல்லாம் ஒரு காரணம்.

    இன்னொரு காரணம் திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நாளில் சந்திராஷ்டமம் இருத்தல் கூடாது. அதே போல ஒரு குறிப்பிட்ட சுப லக்கினத்தில் (நல்ல நேரத்தில்) திருமணம் செய்வார்கள். இந்நிலையில் அந்த நேரத்திற்கு உரிய லக்கினத்திற்கு அதிபதி நீச்சம் அல்லது லக்னத்திற்கு 6,8,12 இல் மறைந்தோ அல்லது வக்கிரம் அடைந்தோ இருக்கக் கூடாது. இது ரொம்ப முக்கியம்.

    இதேபோல ராகு தசையில் திருமணம் செய்வது, முடிந்தவரை ஆண், பெண் இருவரில் யாருக்கு ராகு தசை இருந்தாலும் அல்லது நடந்தாலும் சம்மந்தியாக வரும் நபரை பற்றி நன்கு விசாரித்து பின் திருமணம் செய்யவும். ஆக, இனி பெற்றோர்கள் மேற்படி இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பிள்ளைகளின் இல்லறம் என்றும் இனிக்கும்.

    • கணப் பொருத்தம் - மங்களம் உண்டு.
    • மகேந்திரப் பொருத்தம் - செல்வம் விருத்தியாகும்.

    திருமணப் பொருத்தம் என்பது ஆண், பெண் என இரு பாலரின் நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டு அவை இரண்டிற்கும் எந்த அளவிற்கு ஒத்துப்போகும் என்பதை கணக்கிடுவதே ஆகும்.

    ஒரு காலத்தில் 22 பொருத்தங்கள் பார்க்கப்பட்டது பிறகு காலத்தின் மாற்றதால் 22 என்ற இந்த எண்ணிக்கை மெல்லக் குறைந்து 12 பொருத்தம் பார்த்தால் போதும் என்ற நிலை வந்தது இன்றைய காலத்தில் 10 பொருத்தங்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது.

    பத்து பொருத்தங்கள்

    1. தினப் பொருத்தம் - ஆயுள், ஆரோக்கியம் மேம்படும்.

    2. கணப் பொருத்தம் - மங்களம் உண்டு.

    3. மகேந்திரப் பொருத்தம் - செல்வம் விருத்தியாகும்.

    4. ஸ்த்ரீ தீர்க்கம் - செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும்.

    5. யோனி கூடம் - கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும்.

    6. ராசிப் பொருத்தம் - வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும்.

    7. ராசி அதிபதி பொருத்தம் - கரு சீக்கிரத்தில் உண்டாகும்.

    8. வசியப் பொருத்தம் - கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள்.

    9. ரஜ்ஜுப் பொருத்தம் - கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள்.

    10. வேதை பொருத்தம் - தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.

    • வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று முன்தினம் காலை கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    மதியம் 12.30 மணியளவில் கோவிலில் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரே கொடிமரத்தில் கொடியிறக்கம், இரவு சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து 12-வது நாளான நேற்று இரவு 10 மணியளவில் பல்லக்கு சேவை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    13-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரே உள்ள பள்ளியறையில் சாமி-அம்பாளுக்கு ஏகாந்த சேவை நடத்தப்படுகிறது.

    • 74-வது திருஏடு வாசிப்பு விழா.
    • நாளை மறுநாள் பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை நெட்டியான்விளையில் அய்யா வைகுண்டர் பதி உள்ளது. இங்கு 192-வது அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 74-வது திருஏடு வாசிப்பு விழா ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் திருஏடு வாசிப்பு, விளக்கவுரை, உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்து வருகிறது.

    8-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, விளக்க உரை, இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, சுருள் வைப்பும் சாமிதோப்பு தலைமை பதியை சேர்ந்த பால் பையன் தலைமையில் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு சமய வகுப்பு மாணவ மாணவிகளின் நாடகம் நடக்கிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பால் வைப்பு, 3.30 மணிக்கு பணிவிடை, 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடை, 8.30 மணிக்கு உகப்படிப்பும் நடக்கிறது.

    18-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு பள்ளி உணர்த்தல் 9.30 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
    • தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவாக வந்து அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அங்காளம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன், சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதனைத்தொடர்ந்து பனை, புளி, காட்டுவாகை, சவுக்கு உள்ளிட்ட மரங்களைக்கொண்டு புதிதாக கோவிலின் மேற்கு வாசலில் தேர் வடிவமைக்கப்பட்டது. அந்த தேருக்கு பலவித பூக்களால் ஆன மாலைகள், பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, வாழை மரங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.

    பின்னர் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் பம்பை, மேள, தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினர். அதன் பிறகு ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்தவுடன் அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோவிந்தா... அங்காளம்மா... ஈஸ்வரி தாயே என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்களின் வெள்ளத்தில் கோவிலைச்சுற்றி அசைந்தாடியபடி நிலைக்கு வந்தது.

    தேர் சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     அதுமட்டுமின்றி சில பக்தர்கள், திருநங்கைகள் பலவித அம்மன் மற்றும் சித்தாங்கு வேடமணிந்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும், நாக்கு, தாடைகளில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மன், வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது.
    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்த சுவாமி நெல்லையப்பர் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது.

    இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று பங்குனி மாதம் பிறந்ததை யொட்டி அதன் ஒரு நிகழ்வாக இன்று பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடி மரத்துக்கு மாப்பொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    விழாவில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளன்று ஆலயம் உருவான வரலாற்றுத் திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வும், 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது.
    • பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார்.

    சேர மன்னர் ஒருவரின் ஆட்சிக் காலத்தில், அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது. அப்போது காவல் பணியில் இருந்த காவலர் ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை சிறையில் அடைத்து விட்டனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட அந்த காவலாளிக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் அதே அரண்மனையில் அரசியின் தோழிகளில் ஒருத்தி ஆவாள். அவள் அரசியிடம் ஓடிச்சென்று, `நான் தான் குற்றவாளி. என் காதலருக்கு பதிலாக என்னை சிறையில் அடைத்து விட்டு, அவரை விடுதலை செய்யுங்கள்' என்றாள்.

    விசாரணை மன்னன் முன்பாக வந்தது. அப்போது காதலனோ, `அவள் மீது எந்த தவறும் இல்லை. நான்தான் குற்றவாளி. எனக்கு தண்டனை கொடுங்கள். அவளை விட்டு விடுங்கள்" என்றான்.

    காதலர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர், இப்படிச் சொன்னதால் `யார் குற்றவாளி?' என்பதை முடிவு செய்வதில் மன்னன் தடுமாறினான். பின்னர் அமைச்சர் ஒருவரின் ஆலோசனைப்படி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முற்பட்டான்.

    அதன்படி கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வித்து, உண்மையை கண்டுபிடிக்கலாம் என்று கருதினர். பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார் என்பது நிச்சயம் என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அரண்மனைக் காவலனும், அவனது காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர ஆடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதி முன்பாக வந்து நின்றனர். அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள். அவள் அங்கிருந்த அரசன் மற்றும் அரசியின் முன்பாக நின்று, `சலவைக்கு போடப்பட்ட துணியில் அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். அப்போது விண்ணில் இருந்து, 'இந்த காதணியை என் ஆலயத்தில் இருக்கும் அரசனிடம் கொண்டு போய் கொடு' என்ற கரிக்ககம் சாமுண்டி தேவியின் வாக்கு ஒலித்தது. அதனால் இங்கே ஓடி வந்தேன்" என்று கூறி அந்த காதணியை மன்னனிடம் கொடுத்தாள்.

    தன் தவறுக்கு வருந்திய மன்னன், அரண்மனைக் காவலனையும், அவனது காதலியையும் விடுவித்து அவர்களிடம் மன்னிப்பும் கேட்டான். அரசியோ, தன்னுடைய இரண்டு காதணிகளையும், கரிக்ககம் சாமுண்டி தேவிக்கே அர்ப்பணம் செய்துவிட்டாள்.

    • ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது கோவிலின் தனிச்சிறப்பு.
    • வாழ்வில் அமைதி நிலவவும் இந்த அன்னையை வழிபடுகிறார்கள்.

    கோவில் தோற்றம்

    சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் பலரும், தாங்கள் ஆட்சி புரிந்த பகுதிகளில் தெய்வங்களுக்கான வழிபாட்டு தலங்களை அமைத்தனர். அதற்கு முன்பாக மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் பரசுராமர், ஒரு மலைப் பிரதேசத்தில் 108 சிவன் கோவில்களையும், 108 அம்பாள் கோவில்களையும் நிறுவினார். அந்த தேசம்தான் தற்போதைய கேரளம். கேரள நாட்டை ஆட்சி செய்த சேர மன்னர்கள், சிவன் கோவில்களுடன், அன்னை பராசக்தியை பகவதியாக, அம்மனாக, சாமுண்டிதேவியாக பல இடங்களில் நிறுவி, அந்த அம்மன்களை, அந்தந்த ஊர்களின் பெயருடன் இணைத்து அழைத்து வழிபட்டு வந்தனர்.

    இப்படி கரிக்ககம் என்ற இடத்தில் உருவானதுதான், `தேவி கரிக்கத்தம்மா' என்று அழைக்கப்படும், கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில். சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயம், பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இவ்வாலயத்தில் உக்கிர சொரூபிணியாக வீற்றிருக்கும் ரத்த சாமுண்டி அம்மன், சத்தியத்தை நிலைநாட்டும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.

     தல வரலாறு

    வேதங்களைக் கற்றறிந்த ஞானி ஒருவர், யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடனாக ஏற்று, அவருக்கு பல போதனைகளையும், அருள்வாக்கையும் அருளினார். தன் குருவைப் போல யோகீஸ்வரனும், பராசக்தியை வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை யோகீஸ்வரனின் முன்பு, ஒரு சிறுமி வடிவத்தில் பராசக்தி தோன்றினாள். அந்த சிறுமியை, குருவும் சீடனுமாக சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, பச்சைப் பந்தல் அமைத்து குடியமர்த்தினர்.

    அப்போது அந்த சிறுமி, அவர்களுக்கு அம்பிகையாக காட்சியளித்து, "நான் இங்கேயே குடிகொள்வேன்" என்று கூறி மறைந்தாள்.

    இதையடுத்து குருவின் ஆலோசனைப்படி யோகீஸ்வரன், ஒரு அம்மன் சிலையை சிறுமி மறைந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே தற்போது 'கரிக்ககம் சாமுண்டி'யாக அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை 'பராசக்தி' என்றும், 'பகவதி' என்றும், `பரமேஸ்வரி' என்றும் அழைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

    ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச் சிறப்பு. அதன்படி சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக இத்தல அம்மனை, பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி இருவரும் சுவர் சித்திரங்களாக உள்ளனர். இவர்களின் சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை. ஆலய கருவறையில் சாமுண்டி தேவியை விக்கிரகமாக வழிபாடு செய்கின்றனர்.

    தீராத நோய் நீங்கவும், வாழ்வில் அமைதி நிலவவும் இந்த அன்னையை வழிபடுகிறார்கள். இந்த அம்மனுக்கு `கடும் பாயசம்' நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை போன்றவை செய்யப்படுகிறது. பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்வார்கள்.

    காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு நடத்தப்படும் வழிபாடு பஞ்சாமிர்த்த அபிஷேகம் ஆகும். நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ச்சியாக 13 வெள்ளிக்கிழமைகள், சாமுண்டி தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுவது ஐதீகமாக உள்ளது. உடல் நலன் வேண்டியும், பயம் விலகவும் இந்த ஆலயத்தில் `கருப்பு கயிறு' மந்திரித்து கட்டப்படுகிறது. இந்த தாயத்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் வைத்து பூஜை செய்து கொடுக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி, உக்கிரமான வடிவத்தில் சுவர் சித்திரமாக இருந்து அருள்பாலித்து வருகிறார். முன் காலத்தில் இருந்தே, இந்த அன்னையின் சன்னிதியில் சத்தியம் செய்வது ஒரு சடங்காக இருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் அரசாங்கம், காவலர்களுக்கு பயப்படாதவர்கள் கூட, தெய்வங்களுக்கு பயந்து நடந்தனர் என்பது உண்மை. அதை அடிப்படையாகக் கொண்டே, ஆலயத்தில் சத்தியம் வாங்கும் நடைமுறை வழக்கத்தில் வந்திருக்கிறது.

    இந்த சன்னிதியில் நடைபெறும் பூஜைகளில் முக்கியமானது, `சத்ரு சம்கார பூஜை'. பகைமையை அழிக்கும் பூஜை என்பது இதன் பொருள். தோஷங்கள், தடைகள் அகலவும், புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை தோஷம் அகலவும், பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கவும் ரத்த சாமுண்டி தேவி சன்னிதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

    பால சாமுண்டி தேவி, சாந்த சொரூபிணியாக சுவர் சித்திரமாக இருந்து அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இந்த அம்மன் சன்னிதியில் வழிபாடு செய்யலாம்.

    இந்த ஆலயத்தில் மகா கணபதி, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி நாகர்வனம், சாஸ்தா, குரு பகவான், யோகீஸ்வரன், அன்ன பூர்ணேஸ்வரி ஆகிய உப சன்னிதிகளும், நவக்கிரகங்களும் காணப்படுகின்றன. இங்கு ஆண்டுதோறும் தேவியின் நட்சத்திரமான பங்குனி மாதம் மக நட்சத்திர தினத்தில் பொங்கல் விழா நடைபெறும். விழாவின் 7-ம் நாளில் பொங்கல் விழா நடத்தப்படும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அன்னையை வழிபாடு செய்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (16-ந் தேதி) சனிக்கிழமை தொடங்கி, வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. விழாவின் இறுதி நாளில் பொங்கல் விழா நடைபெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவிதாங்கூர் மன்னனின் படையில் களரி சண்டை பயின்ற நிபுணர்களின் களரிக் களமாக இந்த இடம் விளங்கி இருக்கிறது. களரிக்களம் என்பதே மருவி, `கரிக்ககம்' என்றானதாகவும் சொல்கிறார்கள். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதிபுத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, கரிக்ககம் சாமுண்டி கோவில். திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    • ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
    • ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    ரமலானில் திறக்கப்படும் வானின் கதவுகள்

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    புனித ரமலானில் நோன்பாளிகளுக்காக வானத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்களின் நோன்பும், மாண்பும், வணக்கமும், வழிபாடும், வானம் வரைக்கும் கடந்து, பிறகு இறைவனிடம் சென்றடைந்து விடுகிறது.

    ரமலான் அல்லாத மாதங்களிலும், நோன்பு அல்லாத வணக்கங்களுக்காகவும் வானங்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:-

    நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் 'அல் லாஹூ அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வசுப்ஹானல்லாஹி புக்ரத்தன் வஅஸீலா (இறைவன் மிகப்பெரியவன் என்று பெருமைப்படுத்துகின்றேன்.

    எல்லாப்புகழும் இறைவனுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகின்றேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கின்றேன்)' என்று கூறினார்.

    நபி (ஸல்) அவர்கள் 'இந்த வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், 'நான் தான்' என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் இதைக்கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன' என்று கூறினார்கள். இவ்வாறு கூறக் கேட்டதில் இருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.' (நூல்: முஸ்லிம்)

    மேலும், ஒவ்வொரு நாளும் மனிதர்களின் செயல்களை கண்காணிக்கும் பொறுப்புவானவர்களுக்கு சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் இரு பிரிவினராக செயல்படுகின்றனர். மனிதனின் பகல் நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் அதிகாலை நேரத்தில் வருகை புரிவர். இரவு நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் மாலை நேரம் வருகை புரிவர். அப்போது இந்த இரண்டு நேரங்களிலும் வானங்கள் திறக்கப்படுகின்றன.

    மனித செயல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன . 'ஐந்து இரவுகளில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அப்போது வானத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. அவை: வெள்ளி இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு, ரஜப் மாதத்தில் முதல் இரவு, ஷஃபான் மாதத்தின் 15-ம் இரவு ஆகும் என இமாம் ஷாபி (ரஹ்) கூறுகிறார்.

    'ஒருவர் மனத்தூய்மையுடன் 'லாயிலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினால், அவருக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அவர் பெரும்பாவம் புரிவதை தவிர்த்திருந்தால்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப் பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    'ஒருவர் தொழுகையின் மூலம் பாவமீட்சி பெற்றாலும் வானத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. மேலும் அவரின் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்:அஹ்மது)

    'இரவின் மூன்றாம் பகுதியின் நிறைவான நேரத்தில் இறைவன் முதல் வானத்தின் பக்கம் இறங்கி வருவான். அப்போது வானத்தின் வாசல்களை திறப்பான். பிறகு இறைவன் தமது திருக்கரத்தை விரித்து வைத்து என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு கேட்டது வழங்கப்படும்' என்று கூறுவான். இது அதிகாலை உதயமாகும் வரை நீடிக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: அஹ்மது).

    வானத்தின் வாசல்கள் திறந்திருக்கும் இந்த ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    • பக்தர்கள் தவறாமல் இருக்கும் நட்சத்திர விரதம் கிருத்திகை விரதம்.
    • கந்தர் அனுபூதிப் பாடலை பாராயணம் செய்வது சிறப்பு.

    முருகப்பெருமானை எண்ணி வணங்கும் பக்தர்கள் தவறாமல் இருக்கும் நட்சத்திர விரதம் கிருத்திகை விரதம். இது மாதம் ஒரு முறை வரும். சில மாதங்களில் இரண்டு முறையும் வரலாம். அதே போலவே திதியின் அடிப்படையில் முருகப்பெருமானை எண்ணி உபவாசம் இருந்து வழிபடும் நாள் ஆறாவது திதியான சஷ்டி நாள்.

    இந்த நாளில் காலை முதல் உணவு ஏதும் அருந்தாமல் அல்லது எளிதான பால், பழம் மட்டும் அருந்தி, முருகப்பெருமானுடைய தோத்திரங்களையும், திருப்புகழ் முதலிய நூல் களையும் பாராயணம் செய்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றி, முருகப்பெருமான் படத்திற்கு மலர் மாலைகள் சாற்றி, தூபதீபம், நிவேதனம் செய்து, இயன்றால் அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். விசாகம் குருவின் உடைய நட்சத்திரம் அல்லவா. இன்றைய தினம் கீழ்க்காணும் கந்தர் அனுபூதிப் பாடலை பாராயணம் செய்வது சிறப்பு.

    "உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே''.

    வைணவத்தில் திருமங்கையாழ்வார் அவதார நட்சத்திரம் கார்த்திகை (கிருத்திகை). பெரும்பாலான பெருமாள் கோயில்களில் திருமங்கை யாழ்வார் சந்நதி இருக்கும். அங்கே இன்று திருமங்கை யாழ்வாருக்கு திருமஞ்சனமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும். இன்றைய தினம் இந்த திருமங்கையாழ்வார் பாசுரத்தை பூஜை வேளையில் சேவிக்க நற்பலன்கள் விளையும்.

    "மின்னுமா மழை தவழும் மேகவண்ணா

    விண்ணவர்தம் பெருமானே அருளாய் என்று

    அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த

    அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை

    மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்

    மானவேல் பரகாலன் கலியன் சொன்ன

    பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்

    பழ வினையை முதலரிய வல்லார் தாமே''

    108 திவ்ய தேசங்களில் ஒன்று, மதுரையில் பிரசித்தி பெற்ற கூடலழகர் கோவில். அங்கே இன்றைய தினம் கூடல் அழகர் பெருமாள் ஆண்டாள் கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.

    • இன்று சஷ்டி விரதம், கார்த்திகை விரதம்.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 2 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி நாளை விடியற்காலை 4.11 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.46 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பத்ரசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-பயிற்சி

    கடகம்-வரவு

    சிம்மம்-லாபம்

    கன்னி-பரிவு

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்-கடமை

    தனுசு- கண்ணியம்

    மகரம்-கட்டுப்பாடு

    கும்பம்-நன்மை

    மீனம்-பணிவு

    • திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது.
    • பங்குனி திருவிழா 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    சோழிங்கநல்லூர்:

    திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 26-ந்தேதி வரை 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவைமுன்னிட்டு தினந்தோறும் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 20-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் தொட்டி விழா எமதர்மனுக்கு அருளல், இரவு விடையூர்திக் காட்சி (ரிஷபவாகனம்), பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை சந்திரசேகரர் தேர் திரு விழாவும், பிரம்மனுக்கு காட்சி அருளலும் நடைபெற உள்ளது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் 4 மறைகளுக்கு அருளல், மாலை 6 மணிக்கு பரிவேட்டை விழா, இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெறுகிறது.

    24-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடை பெறுகிறது. மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி, வன்னி மரக்காட்சி நடைபெறுகிறது. 25-ந்தேதி திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் சந்திர சேகரர் கடல் நீராடல், இரவு 8 மணிக்கு திரிபுர சுந்தரி, தியாகராஜர் சுவாமி திருமண விழா, இரவு 10.30 மணிக்கு கொடியிறக்கம், தொடர்ந்து வால்மீகி முனிவருக்கு 18 திருநடன காட்சி அருளி வீடுபேறு அளித்தல் நடக்கிறது.

    தெப்பத்திருவிழா

    26-ந்தேதி மாலை சந்திர சேகரர் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இரவு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, தியாகராஜர், திரிபுரசுந்தரி அம்மனுக்கு அருளல், அதிகாலை 4.30 மணிக்கு பந்தம்பரி 18 திருநடன காட்சி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    ×