search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "63 Nayanmars"

    • ஏகாலியர் மரபிலே தோன்றிய சிவத் தொண்டர் தான் திருக்குறிப்புத் தொண்டர்.
    • சிவனடியார்களின், குறிப்பறிந்து தொண்டாற்றும் ஆற்றல்மிக்கவர்.

    மாதேவியார், முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து சிவபெருமானை வழிபட்ட பெருமைமிக்க காஞ்சி என்னும் திருத்தலத்திலே ஏகாலியர் மரபிலே தோன்றிய சிவத் தொண்டர் தான் திருக்குறிப்புத் தொண்டர். சிவனடியார்களின், குறிப்பறிந்து தொண்டாற்றும் ஆற்றல் மிக்கவர் ஆகையால் இவர் இச்சிறப்புப்பெயர் பெற்றார்.

    அடியார் ஆடையின் மாசுகழப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசுகழியும் என்ற தத்துவத்தை உணர்ந்த இப்பெரியார், தொண்டர்களின் துணிகளைதுவைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அடியார்களின் பக்தியையும்,புகழையும், அன்பையும் உலகறியச் செய்யும் இறைவன் திருக்குறிப்புத்தொண்டரின் பெருமையையும் உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார்.

    ஒருநாள் இறைவன் கந்தல் உடுத்துக்கொண்டு மேனியிலே திருநீறு விளங்க,திருக்குறிப்புத் தொண்டர் இல்லத்திற்கு எழுந்தருளினார்.

    அப்பொழுதுகுளிர்காலம்! குளிரினால் நடுங்கிக் கொண்டே வந்தார் எம்பெருமான்! அடியாரின் வருகையைக் கண்ட தொண்டர் விரைந்து சென்று அடியாரின் அடிபணிந்து அவரை வரவேற்று அமரச் செய்தார்.

    மெலி்ந்த உடல், திருவெண்ணீற்று பிரகாசம், அழுக்கடைந்த கந்தல் துணி இவற்றைக் கண்டு மனம் வருந்தினார் திருக்குறிப்புத்தொண்டர். அடியாரைநோக்கி, ஐயனே! தங்கள் திருமேனி சொல்ல முடியாத அளவிற்கு இளைத்திருப்பதற்கு யாது காரணமோ? என்று வினவினார் இறைவன் குறுநகைபுரிந்தார்.

    அதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியாத திருக்குறிப்புத்தொண்டர் தேவரீர் எம் இல்லத்திலே எழுந்தருளியது எமது பாக்கியம் தான்.

    மேலும் எனக்குப் புண்ணியம் தரக்கூடியது அடியாரின் ஆடையைச் சுத்தம் செய்துதருவதற்கு எமக்கு ஐயன் இடும் கட்டளைதான். அதனால் தங்கள் ஆடையை என்னிடம் தாருங்கள். தங்கள் மேனியில் உள்ள திருநீறு போல் சுத்தமாக வெளுத்துத்தருகிறேன் என்று பணிவோடு கேட்டார்.

    அன்பின் அமுதமொழி கேட்டு சிவனார்பெரும் அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்தார். ஐயையோ! இக்கந்தலை உம்மிடம் கொடுத்துவிட்டு யாம் என்ன செய்வது? தாங்க முடியாத இந்தக் குளிர் காலத்தில் இத்துணியையும் வெளுப்பதற்காக உம்மிடம் கொடுத்துவிட்டால் என் பாடு திண்டாட்டம் தான் என்றார்.

    திருக்குறிப்புத்தொண்டர் முகத்தில் வேதனை படர்ந்தது! தொண்டர் கவலையும், கலக்கமும்மேலிட மீண்டும் தேவரீர் அங்ஙனம் இயம்பலாகாது என்றார். சங்கரர் சற்றுநேரம் சிந்திப்பவர் போல் பாவனை செய்தார். மாலை மயங்குவதற்குள் துவைத்து சுத்தமாக உலர்த்தி எம்மிடம் சேர்ப்பிக்க வேண்டும்.

    அந்தி நீங்குவதற்குள் தங்கள் துணியை சுத்தமாக வெளுத்துக்கொண்டு வந்து தருகிறேன். அப்படி என்றால் நன்று! ஏனென்றால் இது குளிர் காலம். எம்மால் குளிரைச் சற்று கூட பொறுக்க முடியாது. தொண்டரை சோதிக்க வந்த அம்பலவாணர், கந்தல் துணியைக் கொடுத்தார். அவரும் கந்தலைக் கண்களில் ஒற்றிக்கொண்டு நீர்த்துறை நோக்கி களிப்போடு புறப்பட்டார்.

    நீர்த்துறையை அடைந்த தொண்டர், ஆடையைத் துவைக்கத் தொடங்கினார். இறைவர் வருணனுக்கு கட்டளையிட்டார். உடனே வருண பகவான் பூலோகத்திற்கு புறப்பட்டார். அனல்சூழ்ந்த வானம், திடீரென்று கார் மேகங்களால் மூழ்கியது! எங்கும் கும்மிருட்டு கவ்விக் கொண்டது.

    தொண்டரின் இதயத்திலும் இருள் சூழ்ந்தது. கண் கலங்கினார். மழை பயங்கரமாக பெய்யத் தொடங்கியது. இடியும் மின்னலும் ஒன்றொடொன்று கலந்து பயங்கரமாக மாறியது. பேய் மழை அடிக்கத்தொடங்கியது. தொண்டரோ செய்வதறியாது திகைத்தார்.

    மழை நின்றுவிடும் என்று எண்ணி ஏமாந்தார். மழை நின்றபாடில்லை. பொழுது மட்டும் போய்க்கொண்டே இருந்தது. கங்கையை பெருக்க விட்டவன் இப்பொழுது வருணனை பெருகவிட்டான். அடியார் இடி சாய்ந்த மரம் போல் நிலை தளர்ந்தார்.

    அவர் உடல் மழையாலோ அன்றிக் குளிராலோ நடுங்கவில்லை; அடியார் மீதுகொண்டுள்ள பக்தியாலும், பாசத்தால் ஏற்பட்டுள்ள பயத்தாலும் நடுங்கியது. அவரது கண்களில் நீர் மல்கியது. மனம் துடிதுடித்துப் புலம்பினார். ஐயோ! ஏழை நான் என் செய்வேன்? தொண்டருக்குச் செய்யும் திருப்பணியில் இப்படியொரு பேரிடி வீழ்ந்து விட்டதே!

    மழை ஆரம்பித்தபோது வீட்டிற்குச்சென்று காற்றாட உலர்த்தியிருந்தால் கூட இந்நேரம் உலர்ந்திருக்குமோ! அவ்வாறு செய்யாமல் மழை நின்றுவிடும், நின்றுவிடும் என்று காலந் தாழ்த்திஇப்பொழுது ஈரத்துணியோடு நிற்கிறேன்! என் அய்யனுக்கு என்ன பதில்கூறுவேன்?

    பாவம் அவர் இந்நேரம் குளிரால் நடுநடுங்கிக் கொண்டிருப்பாரே! தள்ளாத வயதில் அப்பெரியவருக்கு இந்த அளவிற்கு பொல்லாத கொடுமையை செய்த பாவியாகி விட்டேனே! வெளுத்துத் தருகிறேன் என்று வீரம் பேசிய நான், வெறும் வீணாகி விட்டேனே!

    அடியார்க்குத் துரோகியாக மாறிய பின்னும் இந்தப்பாவி உயிரை வைத்துக் கொண்டு உலகில் வாழ்வதா? ஆகாது, ஆகவே திருக்குறிப்புத்தொண்டர், துணி துவைக்கும் கருங்கல்லை நோக்கினார்.

    தம் தலையைப் பாறையில் மோதி உடைத்துக் கொள்ளப் போனார். அதற்குமேல் அன்புத் தொண்டனை சோதனை செய்து புண்படுத்த விரும்பவில்லை எம்பெருமான்! தொண்டரைக் காக்க திருவுள்ளம் பற்றினார்.

    நாயனார் தலை, கல்லில் மோதி சிதையுறுவதற்குள் எம்பெருமானின் மலர்க்கை பாறையினின்றும் வெளிப்பட்டு அவரது சிரத்தைத் தாங்கிக் காத்தது. அருட்கரம் ஒன்று தம் தலையைத் தடுத்தது கண்டு திருக்குறிப்புத் தொண்டர் திகைத்தார். அப்பொழுது வானத்திலே பேரொளி பிறந்தது. உமையாளுடன் விடையின் மீது காட்சியளித்தார் சிவபெருமான்.

    திருக்குறிப்புத் தொண்டர் கீழே விழுந்து எழுந்து அரனாரை வணங்கினார். எம்பெருமான், அடியவரைத் திருமுகம் மலர நோக்கி, மூன்று உலகத்திற்கும் உம்முடைய பெருமையையும், புகழையும் வெளிப்படுத்தினோம். இனிமேல் கயிலைக்கு வந்து எம்முடனே இருப்பீராக என்று பேரருள்பாலித்தார்.

    திருக்குறிப்புத்தொண்ட நாயனார் பல காலம் உலகில் வாழ்ந்து, திருத்தொண்டுகள் பல செய்தார். இறுதியில் இறைவன் மலரடி அணைந்து மகிழும் பேரின்பத்தைப் பெற்றார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.

    திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் சுவாதிநட்சத்திரத்தில் அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.

    • சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர்.
    • சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.

    விறன்மிண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அடியார்கள் மீது அன்பும், பக்தியும் விறன்மிண்ட நாயனார் கொண்டிருந்ததால், சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.

    சேரநாடு என்று அழைக்கப்படும் மலைநாட்டில் திருச்செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளராக அவதரித்தவர் விறல்மிண்ட நாயனார். திருச்செங்குன்றூர் நீர் வளமும், நில வளமும், மலை வளமும் நிரம்பி வேளாண்மைக்கு சிறந்ததாக விளங்கியது.

    விறன்மிண்டர் திருநீறும், உருத்திராக்கமும் அணிந்த சிவப்பரம்பொருளிடம் மாறாத பக்தி கொண்டிருந்தார். சிவனிடத்தில் மட்டுமில்லாது சிவனடியார்களிடத்தும் பெரும் பக்தியும், மரியாதையையும் கொண்டிருந்தார்.

    அவர் இறைவழிபாட்டிற்கு சிவாலயம் செல்லும்போது ஆலயத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் சிவனடியார்களை வணங்கி, பின்னர் ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இறைவனுடைய திருவருள் சிறப்பை எல்லோரும் உணரும்படி தம்முடைய ஒழுக்கத்தின் சிறப்பால் வெளிப்படுத்துபவர்கள் சிவனடியார்கள். ஆதலால் அரனின் அடியார்களின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் விறல்மிண்டர்.

    ஒருசமயம் சேரநாட்டு திருத்தலங்களை வணங்கியபின், சோழநாட்டு திருதலங்களை வழிபடும் நோக்கில் சோழநாட்டிற்கு வந்திருந்தார் விறன்மிண்டர்.

    ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டு வந்த நிலையில் திருவாரூரை அடைந்தார் விறன்மிண்டர்.

    திருவாரூரில் சிவனடியார்கள் குழுமி இருக்கும் இடத்திற்குப் பெயர் தேவாசிரியர் மண்டபம். அம்மண்டபம் தியாகேசர் கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்தது.

    திருவாரூரை அடைந்த விறன்மிண்டர் முதலில் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கி மரியாதை செய்துவிட்டு கோவிலுக்குள் சென்று தியாகேசரை வழிபட்டார்.

    பின்னர் மீண்டும் தேவாசிரிய மண்டபத்திற்குள் வந்து சிவனடியார்களிடம் அளாவிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வன்தொண்டரான சுந்தரர் வீதிவிடங்கரை வழிபட வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை மனதினால் வழிபட்டுவிட்டு ஒதுங்கி சென்றார்.

    அதனைக் கண்ட விறன்மிண்டர் அருகில் இருந்தோரிடம் யார் என விசாரித்தார். அவரும் ஆரூர் பெருமானின் அருளால் பரவை நாச்சியாரை மணந்து இங்கே இருக்குமாறு பணிக்கப்பட்ட சுந்தரர். இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் செல்கிறார் என்று கூறினார்.

    "இவ்வளவு பெரியவர் அடியார் திருக்கூட்டத்தை வணங்காது செல்கிறாரே? இவரே இப்படிச் சென்றால் அடியார்களிடம் யார் மதிப்புடன் நடப்பார்கள்? அடியார்களை மதிக்காமல் செல்லும் வன்தொண்டரைப் புறக்கணிக்கிறேன்" என்றார் விறல்மிண்டர். "அவர் ஆரூரானின் அருளுக்குப் பாத்திரமானவர்" என்றனர் அருகில் இருந்தவர்கள்.

    விறன்மிண்டர் கூறியவை யாவற்றையும் கேட்ட சுந்தரர் 'இறைவனை வழிபடுவது எளிது. அடியர்களை வழிபடுவது அரிது.

    அடியவர்களை வழிபட தகுதி மிகுதியானதாக இருக்க வேண்டும். ஆதலால்தான் அடியவர்களை நான் மனதிற்குள் வழிபட்டு ஒதுங்கிச் சென்றேன்' என மனத்திற்குள் கவலை கொண்டவராக தியாகேசரரை அடைந்தார்.

    "இறைவா, நான் அடியர்களுக்கு அடியவானாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்" என்று மனதிற்குள் பிராத்தித்தார் சுந்தரர்.

    அதனைக் கண்ட விறன்மிண்ட நாயனார் மகிழ்ந்தார். பின் பலகாலம் சிவதொண்டுகள் புரிந்து இறுதியில் சிவனை அடைந்து சிவனாரின் பூதகணங்களின் தலைவரானார்.

    விறன்மிண்டர் சுந்தரரையும், வீதிவிடங்கரையும் புறக்கணித்தால் திருத்தொண்டர் தொகையை சுந்தரர் பாடினார். பெரியபுராணம் என்னும் மரத்திற்கு திருத்தொண்டர் தொகை விதை எனில் விறன்மிண்டரின் செயல் அதற்கு மழை என்றால் மிகையாகாது.

    விறல்மிண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரமான இன்று கொண்டாடப்படுகிறது.

    • ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர்.

    சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

    அனைத்து குழுவினரும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று மதியம் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து 63 நாயன்மார்களை தனி தனி பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் ஹரியானாவைச் சேர்ந்த மதுராந்தா என்ற இளைஞர் உத்தரபிரதேசம் மாநிலம் வாராணாசியில் தொடங்கி 41 நாட்கள் 2,300 கி.மீ பாத யாத்திரையாக பயணித்து ஆதியோகியை தரிசனம் செய்தார். இந்த யாத்திரை தொடர்பாக அவர் கூறுகையில், "சிவ பக்தியில் என்னை கரைத்து கொள்வதற்காக நான் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டேன். காசி முதல் கோவை வரையிலான இந்த யாத்திரை என்னுடைய நண்பர் ஒருவரும் என்னுடன் சேர்ந்து வருவதாக திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக யாத்திரை தொடங்குவதற்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி ஐ.சி.யூவில் அனுமதிக்கப்படும் சூழல் உருவானது. இருந்தபோதும், நான் என்னுடைய யாத்திரையை திட்டமிட்டப்படி தொடர்ந்தேன். ஆதியோகி சிவனின் அருளால் ஐ.சி.யூவில் இருந்து மீண்டு வந்த அந்த நண்பர் என்னுடைய யாத்திரையில் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்த்து" என கூறினார்.

    சென்னை குழுவினருடன் பாத யாத்திரை மேற்கொண்ட ஜனனி அவர்கள் கூறுகையில், "சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது. பல கிராமங்களில் அங்குள்ள மக்கள் ஆதியோகியை தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தரிசனம் செய்ததை பெரும் பாக்கியமாக கூறினர். உடல் அளவில் இந்த யாத்திரை எனக்கு சவாலாக இருந்தாலும், மனதளவில் பெரும் நிறைவை தருகிறது" என்றார்.

    இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மஹாசிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். தினமும் 2 வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.

    • 63 நாயன்மார்களின் ஒருவர் அரிவாட்டாய நாயனார்.
    • நெல்லைக் கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார்.

    சைவசமய நாயன்மார்கள் 63 பேர். அதில் ஒருவர் அரிவாட்டாய நாயனார். இவர் கணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். கணமங்கலம் தற்போது தண்டலைச்சேரி என்றழைக்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத சிவ பக்தியில் திளைத்தவர்கள்.

    அரி வாட்டாய நாயனார் தினசரி செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் வைத்து கணமங்கலத்தில் கோவில் கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு அமுது செய்விப்பார்.

    செல்வந்தரான அவருடைய பெருமையை உலகுக்குக் காட்ட எண்ணிய சிவபெருமான், அவருடைய செல்வத்தை நீக்கி வறுமையை உண்டாக்கினார். கூலிக்கு வேலை செய்தாலும், நெல் வயலில் கிடைத்த நெல்லைக் கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார்.

    ஒரு நாள் அவர் தன் வயலில் விளைந்த செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு மண் கலயத்தில் சுமந்து சிவபெருமானுக்கு சமர்ப்பிக்கச் செல்லுகின்ற போது கீழே விழுந்து கலயம் உடைந்து, எல்லா உணவுகளும் சிந்தியதைக் கண்டு மனம் நொந்தார். `இனி சிவ பெருமானுக்கு எப்படி அமுது செய்விப்பது? இன்றைய பூஜை வீணாயிற்றே? இனி உயிரோடு இருந்து என்ன பலன்?' என்று தம்மை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

    அப்பொழுது சிவபெருமான் அவர் முன் தோன்றி தடுத்தாட்கொண்டு, அவருக்கு நற்பதம் அளித்தார். தன் கழுத்தை அரிவாள் பூட்டி அறுக்க முயன்ற காரணத்தால், அரிவாட்டாய நாயனார் என்ற திருநாமத்தைப் பெற்றார்.

    தவறாது கடைபிடித்து வந்த சிவபாட்டிற்குரிய பொருட்களை தவற விட்டதால், தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த அரிவாட்டாய நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் `எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்' என்று வியக்கிறார். அவருடைய குருபூஜை நாள் தை மாதம் திருவாதிரை. அந்த நாள் இன்று.

    • திருவண்ணாமலை தீபதிருவிழாவையொட்டி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது. 6-வது நாளான இன்று விநாயகர், சந்திரசேகரர், மூஷிக வாகனம், வெள்ளி யானை வாகனத்தில் மாடவீதியில் உலா வந்தார். தொடர்ந்து 63 நாயன்மார்களும் மாட வீதியில் பவனி வந்தனர்.

    தொடர்ந்து இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளிரதம் வெள்ளி இந்திர விமானம் மற்றும் இதர வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.

    5-வது நாளான நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம் வெள்ளி மயில் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுடன் சாமி வீதி உலா நடைபெற்றது.
    • ஸ்ரீ மனோன்மணி அம்பிகா சமேத சந்திரசேகர் சாமிக்கும் விசேஷ சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 63 நாயன்மார்கள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் காலையில் பாடலீஸ்வரருக்கும், ஸ்ரீ மனோன்மணி அம்பிகா சமேத சந்திரசேகர் சாமிக்கும் விசேஷ சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாடலீஸ்வரர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெளியில் கொண்டுவரப்பட்டன. பின்னர் ரிஷப வாகனத்தில் பாடலீஸ்வரர், 63 நாயன்மார்களும் வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் ஊர்வலமாக பாடலீஸ்வரரும், 63 நாயன்மார்களும் முக்கிய மாடவீதியில் சென்றனர்.இந்த காட்சி பக்தி பரவசத்தை ஏற்படுத்தியதோடு ஏராளமான பொதுமக்கள் சாமி ஊர்வலத்துடன் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்‌ பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள், ராகேஷ் குருக்கள் மற்றும் பலர் செய்திருந்தனர்

    ×