search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arivataya Nayanar Gurupuja"

    • 63 நாயன்மார்களின் ஒருவர் அரிவாட்டாய நாயனார்.
    • நெல்லைக் கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார்.

    சைவசமய நாயன்மார்கள் 63 பேர். அதில் ஒருவர் அரிவாட்டாய நாயனார். இவர் கணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். கணமங்கலம் தற்போது தண்டலைச்சேரி என்றழைக்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத சிவ பக்தியில் திளைத்தவர்கள்.

    அரி வாட்டாய நாயனார் தினசரி செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் வைத்து கணமங்கலத்தில் கோவில் கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு அமுது செய்விப்பார்.

    செல்வந்தரான அவருடைய பெருமையை உலகுக்குக் காட்ட எண்ணிய சிவபெருமான், அவருடைய செல்வத்தை நீக்கி வறுமையை உண்டாக்கினார். கூலிக்கு வேலை செய்தாலும், நெல் வயலில் கிடைத்த நெல்லைக் கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார்.

    ஒரு நாள் அவர் தன் வயலில் விளைந்த செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு மண் கலயத்தில் சுமந்து சிவபெருமானுக்கு சமர்ப்பிக்கச் செல்லுகின்ற போது கீழே விழுந்து கலயம் உடைந்து, எல்லா உணவுகளும் சிந்தியதைக் கண்டு மனம் நொந்தார். `இனி சிவ பெருமானுக்கு எப்படி அமுது செய்விப்பது? இன்றைய பூஜை வீணாயிற்றே? இனி உயிரோடு இருந்து என்ன பலன்?' என்று தம்மை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

    அப்பொழுது சிவபெருமான் அவர் முன் தோன்றி தடுத்தாட்கொண்டு, அவருக்கு நற்பதம் அளித்தார். தன் கழுத்தை அரிவாள் பூட்டி அறுக்க முயன்ற காரணத்தால், அரிவாட்டாய நாயனார் என்ற திருநாமத்தைப் பெற்றார்.

    தவறாது கடைபிடித்து வந்த சிவபாட்டிற்குரிய பொருட்களை தவற விட்டதால், தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த அரிவாட்டாய நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் `எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்' என்று வியக்கிறார். அவருடைய குருபூஜை நாள் தை மாதம் திருவாதிரை. அந்த நாள் இன்று.

    ×