என் மலர்tooltip icon

    வழிபாடு

    • ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் காலை தந்தப்பல்லக்கில், முத்துக் குமாரசுவாமி வள்ளி-தெய்வானை வீதி உலா நடைபெறும். அதேபோல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான 23-ந்தேதி இரவு 7.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்ச்சியானதேரோட்டம் 24-ந்தேதி மாலை 4 மணிக்கு கிரிவீதியில் நடைபெறுகிறது. 27-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று முதலே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷம் முழங்க பழனி கோவிலுக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பழனி கோவில் அடிவாரம், கிரி வீதி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரகங்களின் சஞ்சாரத்தின் படி ராசுபலன் கணிக்கப்படும்.
    • 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும்.

    ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

    அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொருள் இழப்பு ஏற்படுவதற்கும், நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பேருந்தில் ஆட்டோவில் பயணம் செல்லும் போது உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி செய்யும் வேலை நல்லபடியாக செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். எந்த பிரச்சனையும் இல்லை.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மன பயம் இருக்கும். எடுக்கக்கூடிய முடிவில் தடுமாற்றம் இருக்கும். முயற்சி முழுமையாக வெற்றியை கொடுக்காது. ஆகவே, எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மனதில் உள்ள பிரச்சனையை வெளிப்படையாக பேசுங்கள். வெளிப்படையாக பேசும் போது தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழிலில் பார்ட்னரை முழுசாக நம்பாதீங்க. பண பரிவர்த்தனை கணக்கு வழக்குகளை நீங்களும் கொஞ்சம் பாருங்க.

    மிதுனம்

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான கடன் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. வங்கிகளில் கடன் வாங்க முயற்சி செய்யுங்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை தரும்.

    கடகம்

    கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக கற்பனை செய்து வந்திருந்த விஷயங்கள் இன்று நிஜத்திலும் நடக்கும். மனது சந்தோஷம் அடையும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை சுப செலவை ஏற்படுத்தும். செலவை சமாளிக்க முடியாத சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சண்டை சச்சரவுகள் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் போட்டி பொறாமைகளும் இருக்கும். நண்பர்களும் எதிரிகளாக மாற வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபரை முழுசாக நம்பாதீர்கள். மேலதிகாரிகளிடம் கொஞ்சம் பணிவாக பேசுவது நல்லது.

    கன்னி

    கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மாணவர்களுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். உங்களுடைய செயலை பாராட்டி பரிசுகளும் வழங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கலைஞர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள்.

    துலாம்

    துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்க போகின்றது. மனசு ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இறையருளை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் வந்த பிரச்சனைகள் குறையும். நல்ல முன்னேற்றம் இருக்கும் கடன் பிரச்சனை தீரும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில், வியாபாரம் செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில் கூட உங்களுக்கு பிரச்சனை கொடுக்க சில பேர் இருப்பார்கள். அதையெல்லாம் சமாளிக்க தேவையான திறமை உங்களிடத்தில் இருந்தாலும், சின்ன சின்ன சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழல் உண்டாகும். முன் கோபப்படாதீங்க. பிரச்சனைகளை பொறுமையாக எதிர்கொள்ளுங்கள்.

    தனுசு

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது. நீண்ட நாட்களாக பிரச்சனை கொடுத்து வந்திருந்த சொந்த பந்தங்கள், சொத்து பிரச்சினைகள் கூட ஒரு முடிவுக்கு வரும். மாலை நேரம் குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.

    மகரம்

    மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. மாணவர்களின் திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாமியார் மருமகள் சண்டை பிரச்சனைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். குழப்பங்கள் தெளிவு பெறும்.

    கும்பம்

    கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட தொழிலில் திறமையாக செயல்பட்டு லாபத்தை ஈட்டுவீர்கள். பேச்சால் அடுத்தவர்களை கவரக்கூடிய வித்தையை இன்று வெளிகாட்டுவீர்கள். வெற்றி காண்பீர்கள்.

    மீனம்

    மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் பெருகும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகளும் உண்டு. நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து விடுபட தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இரவு நிம்மதியான தூக்கம் இருக்கும்.

    • பானக்காரம் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
    • பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    பங்குனி, சித்திரை மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருக்கும். அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் வெயிலின் உக்கிரம் அதிகரித்து அனல் காற்று வீசும். இந்த கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் இளநீர், நுங்கு, பானக்காரம், மோர், கரும்பு ஜூஸ், குளிர் பானம் போன்றவற்றை குடித்து சூட்டை தணித்துக் கொள்வார்கள்.

    இதேபோல இறைவனுக்கும் கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியுடன் இருப்பதற்காக `பானக்காரம்' என்ற குளிர்பானம் மாலை நேரத்தில் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருப்பதற்காக பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களும் தினமும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்தவுடன் `பானக்காரம்' நிவேத்தியமாக படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தயாரிக்கப்படுவது தான் `பானக்காரம்' ஆகும். இந்த பானகாரத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும். இதனால் தான் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

    இந்த ஆண்டு பங்குனி மாத பிறப்பான இன்று முதல் 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு பகவதி அம்மனுக்கு பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும், அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இதனை அருந்தினால் வெப்பம் சம்மந்தமான நோய்கள் வராது என்பது ஐதீகம் ஆகும். இதனால் இந்த பானக்காரம் பிரசாதத்தை வாங்கி குடிக்க கோவிலில் தினமும் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    • ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பார்கள்.
    • சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம்.

    ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பார்கள். சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அனைவரும் அறிவோம். வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன.

    பூஜைக்கு பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது நல்லது. வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்கு பயன்படுத்தலாம். தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

    மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

     வில்வ வழிபாடும் பயன்களும்

    * சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச்சமமாகும்

    * வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.

    * வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் என பல பெயர்களால் சுட்டப்படுகிறது

    * மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும், நன்மைகளும் அடைவார்கள். வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள், புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாக கூறுகின்றன

    * வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் மூன்று குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் என சிறப்பு பெயர் பெற்றது.

    * சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் தணிக்க முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர். அத்துடன் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயமலையில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாக தனக்கு செய்யப்படும் பூஜைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டார்.

    * ஏனெனில் வில்வம் சளியால் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும், துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    * வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது. சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.

    * வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்து பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

    * வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது. நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.

    * கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

    * 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

    * சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாட்சத்தைப் பெறமுடியும்.

    * வில்வமரத்தை முறைப்படி விரதம் இருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    * வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை. மேலும் எமபயம் ஒரு போதும் வாராது.

    * ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது லட்சம் ஸ்வர்ண புஸ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்

    * வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்தி குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்து பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

     வில்வம் பறிக்கும் சொல்ல வேண்டிய மந்திரம்?

    சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

    நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

    ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

    ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:

    அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

    பொருள் விளக்கம்

    போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும்,லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக் கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

     வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்

    வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை "சிவமூலிகைகளின் சிகரம்" எனவும் அழைப்பர். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு வில்வம் ஒரு அருமருந்தாகும்.

    • எல்லாவற்றிலும் இயேசு நமக்கு ஆறுதல் அளிக்க வல்லவராய் இருக்கிறார்.
    • இஸ்ரவேலின் மிகப்பெரிய ராஜாவான தாவீது ராஜா பிறந்தார்.

    அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி கீழ்ப்படிந்து அவரிடம் நாம் சரணடையும் போது நமக்கு ஆறுதல் தரும் தேவனாக அவர் இருக்கிறார்.

    சிலநேரங்களில் நாம் பயணிக்கும் சூழ்நிலைகளில் போராட்டம் இருக்கும், வேதனைகள், கண்ணீர், கஷ்டங்கள் இருக்கும். ஆனாலும் இயேசுவை நம்பி பயணத்தை தொடரும் பொழுது, நிச்சயமாக நாம் கண்ணீர் விடும் காரியங்களில், வேதனைப்படும் காரியங்களில், பயப்படும் காரியங்களில் எல்லாவற்றிலும் இயேசு நமக்கு ஆறுதல் அளிக்க வல்லவராய் இருக்கிறார்.

    வேதாகமத்தில் ரூத் என்ற குணசாலியான பெண்மணி பற்றி கூறப்பட்டுள்ளது. இவள் மோவாப் என்ற தேசத்தில் தன் கணவன் மற்றும் மாமியாருடன் நன்றாக வாழ்ந்து வருகிறாள். இவளுடைய கணவர் திடீரென மரித்துப்போனார். இவளுடைய மாமியார் பெயர் நகோமி ஆகும். இந்த நகோமிக்கும் கணவர் இல்லை.

    நகோமி தன்னுடைய மகன் இறந்ததும் தன் மருமகளை பார்த்து 'நீ உன் தாய் வீட்டுக்கு சென்று விடு, அங்கு கர்த்தர் உனக்குத் தரும் புருஷனுடன் சுகமாய் வாழ்ந்திரு' என்று சொல்லி மருமகளை வாழ்த்தி முத்தமிட்டாள்.

    அப்பொழுது ரூத் சத்தமிட்டு அழுது அவளைப்பார்த்து 'உன் கூடவே நானும் வருவேன்' என்றாள். `நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன், நீர் தங்குமிடத்திலே நானும் தங்குவேன், உம்முடைய தேவன் என்னுடைய தேவன், மரணமே அல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னை பிரிக்காது', என்று கூறி மாமியாருடன் செல்வதில் மன உறுதியாய் இருந்தாள்.

    பின்னர் இருவரும் இஸ்ரவேல் தேசத்தில் உள்ள நகோமியின் சொந்த ஊரான பெத்லகேமுக்கு வந்தார்கள். நகோமியைப் பார்த்த பெத்லேகம் ஊர் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் பேசினார்கள். நகோமி அவர்களிடம், `நான் நிறைவுள்ளவளாக இங்கிருந்து போனேன். கர்த்தர் என்னை வெறுமையாய் திரும்பி வரப்பண்ணினார். சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார். கர்த்தர் என்னை சிறுமைப்படுத்தினார்', என்று மிகுந்த வேதனையுடன் அவர்களிடம் தனக்கு நடந்ததை எல்லாம் கூறினாள்.

    அதன்பின்னர் ரூத் பிழைப்பிற்காக தோட்டத்தில் வேலை செய்வதற்கு சென்றாள். அவள் வேலை செய்யச் சென்ற வயல்வெளி போவாஸ் என்பவருடையது. இவர் நகோமியின் உறவுக்காரர். போவாஸ் ரூத்தைப் பார்த்து தன் தோட்ட மேலாளரிடம் 'இந்தபெண் எந்த இடத்தைச் சார்ந்தவள்' என்று கேட்டான்? அதற்கு அவன்' இவள் மோவாப் தேசத்தில் இருந்து நகோமி கூட வந்த மோவாபிய தேசத்துப்பெண்' என்று கூறி அவளுடைய எல்லா விவரத்தையும் தெரிவித்தான்.

    போவாஸ் ரூத்தைப் பார்த்து, `மகளே நீ வேறு வயலில் வேலைக்குப் போகாமலும், இந்த இடத்தை விட்டு போகாமலும், இங்கேயே என் ஊழியக்கார பெண்களோடு இருந்து வேலை செய். ஒருவரும் உனக்கு தீங்கிழைக்காதபடி வேலைக்காரருக்கு கட்டளையிட்டு இருக்கிறேன்' என்றார்.

    அப்பொழுது ரூத் தரையிலே முகம் குப்புற விழுந்து வணங்கி 'நான் அந்நிய தேசத்தவளாயிருக்க நீர் என்னை விசாரிக்கும்படி, எனக்கு எதனால் உம்முடைய கண்களில் தயை கிடைத்தது' என்றாள்.

    அதற்கு போவாஸ் `உன் புருஷன் மரணம் அடைந்தபின்பு நீ உன் மாமியாருக்காக செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் சொந்த தேசத்தையும் விட்டு முன்பின் அறியாத ஜனங்கள் இடத்தில் வந்தது எல்லாம் எனக்கு விவரமாய் தெரிவிக்கப்பட்டது. உன் செய்கைக்கு தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளை இடுவார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக' என்றார்.

    பின்னர், போவாஸ் தன்னுடைய வாழ்க்கைத்துணையாக இந்த குணசாலியான ரூத்தைத் தெரிந்து கொண்டார். இவர்களுடைய வம்சத்தில் தான் இஸ்ரவேலின் மிகப்பெரிய ராஜாவான தாவீது ராஜா பிறந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வம்சத்தில் தான் இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் பிறந்தார். என்ன ஒரு ஆனந்தம் பாருங்கள்.

    பிரியமானவர்களே, இந்த வேதாகம சம்பவத்தில் ஏராளமான காரியங்களை நாம் பார்க்கிறோம். மாமியாரிடம் உண்மையான அன்பு வைத்துள்ள மருமகள், மருமகளிடம் உண்மையான அன்பு வைத்துள்ள மாமியார். இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் நடந்துள்ள கசப்பான, கண்ணீர் சிந்தும் அனுபவங்கள். இவை எல்லாவற்றிலும் இருந்து கர்த்தர் இவர்களுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டி, மகிழ்ச்சியடைய பண்ணுகிறார்.

    இது போலத்தான் நம்முடைய வாழ்விலும் நமக்கு வருகின்ற வேதனைகள், கண்ணீர்கள், இழப்புகள் எல்லாவற்றிற்கும் பதிலாக நித்திய பேரின்ப மகிழ்ச்சி அளிக்க இயேசு வல்லவராய் இருக்கிறார். நம்முடைய துன்பத்துக்கும், அலைச்சல்களுக்கும், கண்ணீர்களுக்கும், சிறுமைப்பட்ட நாட்களுக்கும் சரியாய் நம்மை மகிழ்ச்சியாக இருக்கச்செய்வார், ஆமென்.

    • அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை வாஸ்து முன் வைக்கிறது.
    • வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம்.

    ஒரு வீடு அல்லது மனை அமைப்புக்கு வடகிழக்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் வாஸ்து ரீதியான குறைகள் இருக்கும்போது அதன் உரிமையாளருக்கு பல்வேறு சிக்கல்கள் வரலாம் என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். வங்கியில் கடனை வாங்கி வீடு அல்லது மனை வாங்குவது அப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கவா என்ற கேள்வி அனைவருக்கும் வரலாம்.

    அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை வாஸ்து முன் வைக்கிறது. அதனை அனுசரித்து வீடு அல்லது மனை அமைப்பை சரி செய்து, கட்டிடங்களை அமைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் உருவாகும் சிக்கல்களை சமாளிக்கலாம் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    வீடு என்பது மணலும் சிமெண்டும் கூடிய கட்டிடமாக இருப்பினும், இயற்கையின் சக்திகளும் இணைந்துதான் இருக்கிறது. இயங்கும் பூமியின் மீது அமைக்கப்படும் கட்டமைப்புகள் குறிப்பிட்ட வடிவத்தை அடையும்போது இயற்கையின் ஆற்றலால் தாக்கம் பெற்று அதற்கேற்ப செயல்படத் தொடங்கி விடும் என்ற வாஸ்துவின் உட்கருத்தை வல்லுனர்கள் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.

    பழமையான கட்டிட சாஸ்திர நூல்கள் வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளன. வீடுகள் இருட்டாக இருப்பது கூடாது. ஒரளவாவது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரவேண்டும். குறிப்பாக, சூரிய வெளிச்சம் வடகிழக்கு வழியாக வீட்டுக்குள் நுழையும்போது- பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு, சூரிய வெளிச்சம் நுழையாத வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது என்பதையும் வாஸ்து சாஸ்திர நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    ஒரு கட்டமைப்பை சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் காலி இடம் இருப்பது சிறப்பு என்பது பிரதான வாஸ்து விதியாகும். அதாவது, காம்பவுண்டு சுவரை ஒட்டியவாறு கட்டிடத்தை அமைக்காமல், சுற்றி வருவதற்கு ஏதுவாக காலியிடம் இருக்கவேண்டும். அதன் மூலம், நிலத்திலிருந்து வெளிப்படும் இயற்கை சக்தி ஓட்டத்துக்கு தடை ஏற்படாமல், மனை அல்லது கட்டிடத்தின் எட்டு பக்கங்களிலும் உள்ள அஷ்ட திசை அதிபதிகளின் நற்பலன்கள் கிடைக்க அது ஏதுவாக அமையும்.

    எந்த திசையை நோக்கிய மனையாக இருந்தாலும், அதற்குரிய திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டமைப்பை வடிவமைப்பது முக்கியம். கோண திசையில் உள்ள மனைகளுக்கும் இந்த விதி பொருந்தும். கிழக்கு திசைக்கு இந்திரன், மேற்கு திசைக்கு வருணன், வடக்கு திசைக்கு குபேரன் மற்றும் தெற்கு திசைக்கு எமதர்மன் ஆகியோர் அதிபதிகளாக அமைகிறார்கள்.

    • வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பொருளாதாரத்தின் பங்கு அளப்பரியது.
    • நவீன யுகத்தில் லேட்டஸ்ட் டிரெண்டிங்கான தொழில்கள் பல உள்ளது.

    ஒரு தனி மனிதனின் வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பொருளாதாரத்தின் பங்கு அளப்பரியது. ஆள்பாதி, ஆடை பாதி என்பது போல் ஒரு மனிதனின் கர்ம வினைப்படி அமையும் தொழிலே சமுதாய அங்கீகாரத்தையும் பொருளாதாரத்தையும் நிர்ணயம் செய்கிறது. நவீன யுகத்தில் லேட்டஸ்ட் டிரெண்டிங்கான தொழில்கள் பல உள்ளது.

    ஆனால் ஒருவரின் ஜாதக ரீதியான ஜீவன அமைப்பை தேர்வு செய்வதில் பல விதமான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஒருவரின் ஜாதகரீதியான தொழிலை 10-ம்மிடமான தொழில் ஸ்தானமும், சனி மற்றும் புத பகவானுமே நிர்ணயம் செய்கிறார்கள். 12 ராசியினருக்கும் பயன்படும் தொழில், உத்தியோகம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    மேஷம்

    மேஷ ராசியில் பிறந்தவர்கள் உணவு விடுதி, உணவுப் பொருட்கள் வியாபாரம். உர வியாபாரம், எண்ணை வியாபாரம், சுரங்கத்தொழில், சிறு பொருட்கள் விற்பனை, திரவப் பொருட்கள் விற்பனை, கழிவு பொருட்கள் விற்பனை, தோல் வியாபாரம், இரும்பு வியாபாரம்,விவசாயம், கட்டிட வேலை, மர வியாபாரம், கல், மண் வியாபாரம், கடினமான வேலைகள் கீழ்மட்ட ஊழியம் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

    ரிஷபம்

    ரிஷப ராசியினர் மனவியல் கலை, ஜோதிடம், ஆன்மீகம், ஆசிரியர் பணி, ஆராய்ச்சி துறை . நிர்வாகப் பொறுப்பு, ஆலோசனை வழங்குதல், வாயு பொருட்கள் விற்பனை, விமானத்துறை, விண்வெளி துறை, தீயணைப்புத்துறை, சிறைச்சாலை பணி, தொல்பொருள் ஆராய்ச்சி, பொறியியல் துறை, சுரங்கப்பாதை அமைத்தல், வெடிகுண்டு தயாரிப்பு, பொதுஜன வழிகாட்டி, சுங்க இலாகா பணி, இறைச்சி கடை உளவுத்துறை போன்ற தொழில், உத்தியோகத்தில் பணி செய்யலாம்.

    மிதுனம்

    மிதுன ராசியினர் கல்வித்துறை, ஆன்மீகம், மருத்துவம், நிதித்துறை, நீதித்துறை, தூதரகம், கடற்படை, நீர் நிலைகளில் வேலை செய்தல், ஆலயப் பணி, மத போதனை செய்தல், வங்கியில் பணி செய்தல்.ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல், சிற்பம் வடித்தல், சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திரம் , நுண்கலைகள். எழுத்தாளர், கவிஞர்கள், நகைச் சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கை துறை, அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், கல்வித்துறை, ஓவியர்கள் போன்ற தொழிலில் ஈடுபடலாம்.

    கடகம்

    கடக ராசியில் பிறந்தவர்கள் அரசு உத்தி யோகம், காவல்துறை ராணுவம், தீயணைப் புத்துறை, விளையாட்டுத்துறை, பொறியியல் துறை, தொழிற்சாலைகளில் பணி செய்தல், இரும்பு சம்பந்தமான தொழில், உழைக்கூடம் தொடர்பான தொழில், செங்கல் சூளை வைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், சுரங்கத் தொழில், அறுவை சிகிச்சை மருத்துவம், ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல், சமையல் கலை, பூமித்தொழில் விவசாயம் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    சிம்மம்

    சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், கால்நடை வளர்ப்பது, வட்டி தொழில், தரகுத்தொழில், நிதி நிறுவனங்களில் பணி செய்தல், கலைப் பொருட்கள், அழகு, பொருட் கள், ஆடம்பரப் பொருட் கள், அலங்காரப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், சுவையான உணவுப் பொருட்கள், சொகுசு பொருட்கள், மற்றும் இனிப்பான பானங்கள் விற்பனை செய்தல், இயல், இசை நாடகம், திரைப்படம், கவிதை, எழுதுதல், மற்றும் பாட்டு பாடுதல் போன்ற கலைத் தொழில்கள், தங்கும் விடுதி, மற்றும் கேளிக்கை விடுதிகள் நடத்துதல் கருவூலத்துறை போன்ற பணியில் ஈடுபடலாம்.

    கன்னி

    கன்னி ராசியை சார்ந்தவர்கள் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை, விண்வெளி துறை, கல்வித்துறை, தபால் துறை, தொலைபேசித் துறை, தந்தி துறை, புத்தகத் தொழில், கணிதத்துறை, கணக்கர், தணிக்கையாளர், போன்ற தொழில்கள் சட்டம் மற்றும் நீதித்துறை, ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், நவீன பொறியியல் துறை, எழுத்து துறை, மேடைப்பேச்சு, ஜோதிடம், பலவிதமான வியாபாரம் செய்தல் தூதரகம் போன்ற பணிகளில் ஈடுபடலாம்.

    துலாம்

    துலாம் ராசியினர் திரவப் பொருட்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல், ஏற்றுமதி இறக்குமதி செய்தல், கடல் கடந்து சென்று வியாபாரம் செய்தல், வேளாண்மை தொழில், மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம், போக்குவரத்து, கலைத்துறை, கல்வித்துறை போன்றவற்றில் ஆர்வம் செலுத்தலாம்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அரசு உத்தியோகம் ,அரசியல், பிரதம மந்திரி, முதல்-அமைச்சர், நிர்வாகப் பொறுப்பு, இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில், Extension துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சமூக சேவை செய்தல், தர்ம ஸ்தாபனம் நடத்துதல் சிறப்பான பலன் தரும்.

    தனுசு

    தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு கணக்கர் தொழில், தணிக்கையாளர், பலவிதமான வியாபாரம் செய்தல், ஆசிரியர், எழுத்தர், மளிகை கடை வைத்தல், சில்லரை வியாபாரம் ஆகியன பயன் தரும்.

    மகரம்

    மகர ராசியைச் சார்ந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், அழகு பொருட்கள், கலைப் பொருட்கள், சொகுசுப்பொருட்கள், வாசனை திரவியங்கள், மற்றும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்தல்,, வட்டி தொழில், தரகு தொழில், வங்கிப் பணி, நிதி நிறுவனங்களில் பணி செய்தல், நிதித்துறை, நீதித்துறை, தங்கும் விடுதி, கேளிக்கை விடுதி, மற்றும் அழகு நிலையங்கள் நடத்துதல் இயல், இசை, நாடகம், பாட்டு மற்றும் கலைத் தொழில்கள் பயன்தரும்.

    கும்பம்

    கும்ப ராசியினருக்கு நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, சுரங்கத் தொழில், விவசாயம், மின்னியல் துறை, மாந்திரீகம், ஜோதிடம், ஆன்மீகம், பூமித்தொழில், தாதுப் பொருட்கள் சம்பந்தமான தொழில், ஆராய்ச்சி செய்தல், உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில் பலன் தரும்.

    மீனம்

    மீன ராசியினர் மர வியாபாரம், ஆன்மீகத்துறை, வங்கித் தொழில் சட்டம், மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, ஆயுத சாலை, போற்பயிற்சி சமூக சேவை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தலாம். பெரும்பான்மையாக ஒருவரின் விதிப்படி அவரவரின் தொழில், உத்தியோகத்தை பிரபஞ்சமே நிர்ணயித்துவிடும். தொழில் சார்ந்த குழப்பம் இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை நல்ல பயன் தரும்.

    • மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) நினைவு கூரப்படுகிறார்கள்.
    • ரமலான் பிறை 3-வது தினத்தில் அன்னை இறைவனடி சேர்ந்தார்கள்.

    பாத்திமா (ரலி) அவர்களின் தியாகம்

    புனித ரமலான் மாதம் பிறந்துவிட்டால், அதன் மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். ஹிஜ்ரி 11-ம் ஆண்டில் ரமலான் பிறை 3-வது தினத்தில் புதன்கிழமை அன்று அன்னை அவர்கள் தமது 25-ம் வயதில் (கி.பி. 632 நவம்பர் 21) பூமியின் மடியிலிருந்து இறைவனடி சேர்ந்தார்கள்.

    அன்னை பாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர் களுக்கும் பிறந்த கடைக்குட்டி செல்லக் குழந்தை ஆவார். நபி (ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்த ஓராண்டிற்குப் பின் நபி (ஸல்) அவர்களின் 41-ம் வயதினிலே அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.

    இவர்கள் சிறுவயதிலேயே தமது தந்தையின் மார்க்கக் கொள்கையை, ஓரிறைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு முஸ்லிம் பெண்மணியாக நடந்து கொண்டார்கள்.

    எல்லா சூழ்நிலைகளிலும் தந்தைக்கு துணையாக, தந்தையின் சொல்படி வாழ்ந்து வந்தார்கள். தந்தையின் சொல்லும், செயலுமே நல்வழி காட்டும் என்பதை உணர்ந்து அதன்படி நடந்தார்கள்.

    தமது தாயின் மரணத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் சோதனையான காலகட்டங்களில் தாய்க்கு நிகராக இருந்து ஆறுதல் அளித்து வந்தார்கள். நிழலாக இருந்து தந்தையை கவனித்துக்கொண்டார்கள்.

    உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் நடுப்பல் உடைக்கப்பட்டது. அவரது தலைக்கவசம் தலையின் மீது வைத்து நொறுக்கப்பட்டது. பாத்திமா (ரலி) தமது தந்தை நபி (ஸல்) அவர்களின் மேனியிலிருந்து வழிந்த ரத்தத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். பாத்திமாவின் கணவர் அலி (ரலி) ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தும் இன்னும் அது அதிகமாகிக் கொண்டே போனது. இதைப்பார்த்த பாத்திமா (ரலி) ஒரு பாயை எடுத்து, எரித்து சாம்பலாக்கி அதை நபியின் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, ரத்தப் போக்கு நின்று விட்டது. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)

    'ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். குரைஷிகளில் மோசமான ஒருவன், நபி (ஸல்) அவர்கள் சிரசை தாழ்த்தியபோது ஒட்டகத்தின் சாணத்தையும், ரத்தத்தையும், கருப்பையையும் எடுத்து வந்து அன்னாரின் இரு தோள் புஜத்தில் போட்டுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். இதைப்பார்த்து, குரைஷிகள் ஒருவர் மீது ஒரு வர்

    சாய்ந்துவிடும் அளவுக்கு சிரித்தார்கள். சிறுமியாக இருந்த பாத்திமா (ரலி) அவர் தான் அவற்றை அப்புறப்படுத்தினார். அப்புறம்தான் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். பாத்திமா (ரலி) குரைஷிகளை ஏச ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!' என்று மூன்று தடவை கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்:புகாரி)

    அலி (ரலி) அவர்களுக்கும், பாத்திமா (ரலி) அவர்களுக்கும், ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பாத்திமா(ரலி) அவர்களுக்கு 15 வயது 5 மாதங்கள் ஆகும். அலி (ரலி) அவர்களுக்கு 21 வயது 5 மாதங்கள் ஆகும்.

    பாத்திமா (ரலி) நபியின் மகள் என்பதனால் அவர்களுக்கென்று தனி சலுகைகளை நபி (ஸல்) அவர்கள் வழங்கவில்லை. 'முஹம்மதின் மகள் பாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! தருகிறேன். ஆனாலும், இறைவனின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது' என நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கனிவு, பாசம் காட்டினாலும், நீதி, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள்.

    • காரடையான் நோன்பை பெண்கள் கடைப்பிடிப்பார்கள்.
    • பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து இருக்கும்

    மாசி மாதமும், பங்குனி மாதமும் சேரும் நாளில் `காரடையான் நோன்பை' பெண்கள் கடைப்பிடிப்பார்கள். `கவுரி விரதம்', `காமாட்சி விரதம்', `சாவித்திரி விரதம்' என்று பல பெயர்களில் இந்த விரதம் அழைக்கப்படுகிறது. `மாசி கயிறு பாசி படரும்' என்பது சொல்வழக்கு. அதாவது இந்த விரதம் இருக்கும் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து இருக்கும் என்பது இதன் பொருள்.

    அஸ்வபதி என்ற மன்னர், மாலதி தேவி என்ற நல்ல குணங்கள் நிரம்பப்பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. இதையடுத்து கணவன்- மனைவி இருவரும், வசிஷ்ட மகரிஷியை சென்று பார்த்து, தங்கள் குறைகளை கூறினர். அந்த தம்பதியர்க்கு, சாவித்திரி தேவியின் மகா மந்திரத்தை வசிஷ்டர் உபதேசம் செய்தார்.

    சாவித்திரி தேவியின் அந்த மகா மந்திரத்தை மன்னனும், அவனது மனைவியும் தொடர்ந்து சொல்லி வந்தனர். இதன் பயனாக விரைவிலேயே அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    தங்கள் தெய்வத்தின் ஞாபகமாக அந்த பெண் குழந்தைக்கு `சாவித்திரி' என்று பெயர் வைத்தார்கள். சாவித்திரி வளர்ந்து வருகையில் சிறிது தூரத்தில் உள்ள தேசத்தில் துயுமத்சேனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சத்திய சேனன் என்ற மகன் இருந்தான். சத்தியசேனன் மிக உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தான்.

    சத்தியசேனன் அருமை பெருமைகளை கேள்விப்பட்ட சாவித்திரி, அவனையே தன் கணவனாக நினைத்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். அதே நேரத்தில் துயுமத்சேனன், தன்னுடைய பகைவர்களின் துரோகத்தால் ராஜ்ஜியத்தை இழந்து, தன் மனைவி, மகனுடன் ஒரு வனத்தை வந்தடைந்தான்.

    சாவித்திரி தன் தந்தையிடம் "சத்தியவானையே (சத்தியசேனன்) திருமணம் செய்வேன்" என்று கூறினாள். அப்பொழுது நாரத மகரிஷி அங்கு வந்து, "நீ நினைக்கும் சத்தியவான், தற்பொழுது நாட்டை இழந்து, கண்களை இழந்த தன் தந்தையுடன் காட்டில் வசித்து வருகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக, அவன் இன்னும் சரியாக 12 மாதத்தில் இறந்து விடுவான். அவனை நீ திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாயா?" என்றார்.

    அதற்கு சாவித்திரி "என் மனதால் நினைத்த சத்தியவானை, இனி நான் மறக்க மாட்டேன். என்ன நடந்தாலும் சத்தியவானை தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று உறுதி படக் கூறினாள்.

    இதையடுத்து சாவித்திரியின் தந்தையான அஸ்வபதி, தன் மகளை அழைத்துக் கொண்டு வனத்தை அடைந்தார். அங்கு வாழ்ந்து வந்த சத்தியவானுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்தார்.

     சரியாக 12 மாதம் முடியும் வேளையில், நடுக்காட்டில் விறகு வெட்டிக் கொண்டிந்த சத்யவான், திடீரென்று தன் மனைவி சாவித்திரியின் மடியில் சரிந்து விழுந்து தன் உயிரை இழந்தான்.

    அவனது ஆன்மாவை தன் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றார், எமதர்மன். சாவித்திரி மேற்கொண்ட பதிவிரதை மகிமையால், அவளது கண்ணுக்கு எமதர்மன் தெரிந்தார். சாவித்திரி, எமதர்மனை பின் தொடர்ந்து சென்றாள். அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட எமதர்மன், "உன்னுடைய கண்ணுக்கு என் உருவம் எப்படி தெரிகிறது? நீ திரும்பிச்செல். சரீரத்துடன் யாரும் என் பின்னால் எமலோகம் வர முடியாது. இறந்த பின் தான் வர முடியும்" என்றார்.

    எமதர்மன் சொன்னதைப் பொருட்படுத்தாமல், அவரைப் பின் தொடர்ந்தாள் சாவித்திரி. இதையடுத்து எமதர்மன், "சரி.. உனக்கு ஒரு வரம் தருகிறேன். நீ கேள்" என்றார். சாவித்திரியோ, "என் கணவனைத் திருப்பிக் கொடுங்கள்" என்று கேட்க, அதற்கு எமதர்மன், "பறித்த உயிரை திருப்பித் தர மாட்டேன். பதிவிரதையே, வேறு ஏதாவது வரம் கேள்" என்று கூறினார்.

    உடனே சாவித்திரி, "என் மாமனார் தன் கண்களால் அவரது 100 பேரக் குழந்தைகளைக் காண வேண்டும்" என்று வரம் கேட்டாள். (சத்தியவான் துயுமத்சேனனுக்கு ஒரே மகன்). சாவித்திரி கேட்ட வரத்தை தருவதாக எமதர்மனும் வாக்கு கொடுத்தார்.

    பின்னர் சாவித்திரி, "என் கணவனின் உயிரை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டால், எப்படி எனக்கு குழந்தை உண்டாகும்" என்றாள். எமதர்மன், சாவித்திரியின் சாதுர்யத்தை எண்ணி மகிழ்ந்து, சத்தியவானின் உயிரைத் திருப்பித் தந்ததுடன், துயுமத்சேனன் இழந்த ராஜ்ஜியத்தையும் திரும்பப் பெறுவான் என்று வரம் கொடுத்தார்.

    சாவித்திரிக்கு அவளது கணவனைத் திரும்பித் தந்தது, அவள் கடைப்பிடித்து வந்த பதிவிரதை விரதம்தான். அதைத்தான் நாம் `சாவித்திரி விரதம்' என்கிறோம்.

    விரதம் இருக்கும் முறை

    பூஜை அறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வீட்டில் உள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கையின்படி ஒவ்வொரு இலையாக எண்ணி கோலத்தின் மீது வைப்பார்கள். இலையின் நூனி வடக்கு நோக்கி இருக்குமாறு போட வேண்டும். கார் அரிசி மற்றும் வெல்லம் கொண்டு இனிப்பு அடை, மற்றும் உப்பு அடை செய்து பின் நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைத்து அம்பாளை பூஜிப்பார்கள்.

    கலசத்திற்கு பூச்சரம் அல்லது மாலை அணிவித்து, ரவிக்கை துண்டு வைத்து, கும்பத்தை அலங்காரம் செய்வார்கள். பின்னர் கும்பத்திற்கு தூப, தீபங்கள் காட்டி அம்பாளை வழிபடுவார்கள்.

    இந்த இலையின் நுனிப்பகுதியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ கட்டிய மஞ்சள் சரடு ஆகியவற்றை வைத்து, இலையின் நடுவில் இரண்டு வெல்ல அடைகளும், வெண்ணெய்யும் வைக்க வேண்டும். வயதானவர்கள் இந்த இலையில் அம்மனுக்கு ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்வார்கள்.

    ஒற்றைப்படையில் இலை வந்தால், ஒரு இலையை அதிகப்படுத்துவார்கள். அதாவது ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என இருந்தால் அதை மாற்றி, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு என இரட்டைப் படையில் வருமாறு இலைகளைப் போடுவார்கள்.

    வீட்டில் உள்ள வயதான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், ஒவ்வொரு இலையின் முன்பாக நின்று கொண்டு நீரை எடுத்து மூன்று முறை இலையை சுற்றி விட்டு, 'உருகாத வெண்ணெய்யும் ஓர் அடையும் நான் தருவேன். ஒரு காலும் என்னை விட்டு என் கணவர் பிரியாது இருக்க வேண்டும்' என சொல்லுவார்கள். பிறகு வீட்டில் உள்ள வயதான பெண், பூஜை அறையில் நின்று முதலில் சரடு ஒன்றை எடுத்து அம்மனுக்கு கட்டிவிட்டு அல்லது படத்திற்கு சாற்றி விட்டு, தோராம் என்னும் சுலோகத்தை சொல்லி, தன் கழுத்தில் கட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கும் அது போல் கட்டி விடுவார்கள்.

     அடையில் ஒன்றை தன் கணவருக்காக தனியாக எடுத்து வைத்துவிட்டு, பின் அடையை சாப்பிடுவார்கள். இரண்டு அடையை எடுத்து தனியாக வைத்து விட்டு, மறுநாள் பசு மாட்டிற்கு கொடுப்பார்கள். 'ஏழையார் நோற்ற நோன்பை மோழையார் கொண்டு செல்வார்' என்று பழமொழி. எனவே அன்று முழுவதும் மோர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    காரடையான் நோன்பை கடைப்பிடிப்பதால் ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷம் விலகும். மேலும் சிலருக்கு திருமணத்திற்குப்பின் ரஜ்ஜு தோஷம் இருந்தால், அந்த தோஷமும் விலகும். கணவருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

    அங்க பூஜை

    * ஓம் காமாக்ஷ்யை நம: பாதௌ பூஜயாமி (கால்)

    * ஓம் கல்மஷக்ன்யை நம: குல்பே பூஜயாமி (முன்கால்)

    * ஓம் வித்யாப்ரதாயின்யை நம: ஜங்கே பூஜயாமி (நுனிக்கால்)

    * ஓம் கருணாம்ருத ஸாகராயை நம: ஜாநுநீ பூஜயாமி (முழங்கால்)

    * ஓம் வரதாயை நம: ஊரூ பூஜயாமி (தொடை)

    * ஓம் காஞ்சீ நகர வாஸின்யை நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)

    * ஓம் கந்தர்ப்ப ஜனன்யை நம: நாபிம் பூஜயாமி (நாபி)

    * ஓம் புரமதனபுண்யகோட்யை நம: வக்ஷ: பூஜயாமி (மார்பு)

    * ஓம் மஹாக்ஞான தாயின்யை நம: ஸ்தநௌ பூஜயாமி (ஸ்தனம்)

    * ஓம் லோகமாத்ரே நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    * ஓம் மாயாயை நம: நேத்ரே பூஜயாமி (கண்)

    * ஓம் மதுரவேணீ ஸஹோதர்யை நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)

    * ஓம் ஏகாம்பரநாதாயை நம: கர்ணம் பூஜயாமி (காது)

    * ஓம் காமகோடி நிலயாயை நம: சிர: பூஜயாமி (தலை)

    * ஓம் காமேச்வர்யைநம: சி'குரம் பூஜயாமி (முன் முடி)

    * ஓம் காமிதார்த்ததாயின்யை நம: தம்மில்லம் பூஜயாமி (நெற்றிச்சுட்டி)

    * ஓம் காமாக்ஷ்யை நமஸர்வாணி அங்கானி பூஜயாமி (முழுவதும்)

    • இன்று காரடையான் நோன்பு விரதம்.
    • பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

    இன்று காரடையான் நோன்பு விரதம். பூஜை செய்து சரடு கட்டிக் கொள்ள உகந்த நேரம், காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை. இனி இந்த விரதம் குறித்து சுருக்கமாகக் காண்போம்.

    எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதி விரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும், பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

    சுமங்கலி பெண்கள் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் மகத்தான விரத நாள்தான் இது. மாசி மாதத்தின் இறுதி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது. இது சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம், ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    எந்த பெயரில் இந்த விரதம் கொண்டாடப்பட்டாலும், நோக்கம் என்னவோ ஒன்றுதான். தன் கணவன், பூரண ஆயுளைப் பெற்று அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பதுதான் காரடையான் நோன்பு விரதத்தின் நோக்கமாகும்.

    கார் அரிசியால் செய்த இனிப்பு அடையும், உப்பு அடையும் செய்வது வழக்கம். இந்த நாளில் மஞ்சள் பூசிய நோன்புக் கயிற்றை பெண்கள் கட்டிக் கொள்வார்கள். சிலர் புதிய தாலிச்சரடுடன் நோன்புக்கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். `மாசிக்கயிறு பாசி படியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, பங்குனி நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், தங்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். படைக்கப்பட்ட அடையை எல்லோரும் உண்ட பிறகு, பசுமாட்டுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

     சம்பத்கௌரி விரதம்

    முதலில் பங்குனி மாத பிறப்பு என்பதால், மாத பிறப்பு பூஜையை செய்வார்கள். முன்னோர்களுக்கான மாத தர்ப்பணத்தை செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்குரிய விரத நாட்களை ''கௌரி விரத நாள்கள்'' என்று சொல்வார்கள்.

    ஒவ்வொரு கௌரி விரதத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதில் பங்குனி மாதம் அதாவது இன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டிய கௌரி விரதம், சம்பத் கௌரி விரதம். சகல விதமான செல்வாக்குடன் பெண்கள் வாழ்வதற்கும், குடும்ப கருத்து ஒற்றுமைக்கும் இந்த விரதமானது அனுசரிக்கப்படுகிறது. காரடையான் நோன்பு நாளாகவும் இந்த நாள் அமைவதால், இரண்டு விரதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அம்பாளை வழிபடுவதுதானே முக்கியமான நோக்கம்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • இன்று காரடையான் நோன்பு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 1 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி காலை 7.02 மணி வரை பிறகு பஞ்சமி நாளை விடியற்காலை 4.41 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: பரணி இரவு 10.23 மணி வரை பிறகு கிருத்திகை

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று காரடையான் நோன்பு (நோன்பு நோற்கும் நேரம் காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள்). சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆலங்குடி குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு காலை சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-பயணம்

    மிதுனம்-வரவு

    கடகம்-இன்சொல்

    சிம்மம்-நன்மை

    கன்னி-பரிசு

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- தேர்வு

    மகரம்-நிறைவு

    கும்பம்-இன்பம்

    மீனம்-கவனம்

    • ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.
    • இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடை பெறாது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு ஹரிவராசனம் பாடப் பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்பு நாளை(14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடி வடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சி யாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.

    ×