என் மலர்tooltip icon

    வழிபாடு

    • முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 13 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை பிற்பகல் 3.06 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: அஸ்தம் நண்பகல் 1.42 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறிகண்டருளல். பழனி ஸ்ரீமுருகப்பெருமான் தந்தப்பல்லக்கு இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிம்மதி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-வரவு

    கடகம்-உழைப்பு

    சிம்மம்-இனிமை

    கன்னி-களிப்பு

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- வெற்றி

    மகரம்-உண்மை

    கும்பம்-உறுதி

    மீனம்-துணிவு

    • தேரோட்டம் இன்று விமரி சையாக நடைபெற்றது.
    • நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது..

    விழாவையொட்டி, கடந்த மாதம் 21-ந்தேதி ஓசூர் தேர்பேட்டையில் பால்கம்பம் நட்டு, தேர்கட்டும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விழா நிகழ்ச்சிகள், கடந்த 19-ந் தேதி ஓசூர் வீரசைவ லிங்காயத்து மரபினரால் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து நேற்றுவரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் தினமும் இரவு சிறப்பு பூஜைகளும் சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாக னம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்ச வங்கள், பூ அலங்காரங்கள் நடைபெற்றது. நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 10.10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமியை வைத்து முதலில் விநாயகர் சிறிய தேரையும், அதனை தொடர்ந்து பெரிய தேரையும் பகுதி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.

    விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை யொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா என்பது பழனியில் `தீர்த்தக்காவடி' என அழைக்கப்படுகிறது.

    அதாவது கோடை வெயில் உக்கிரமாக உள்ள பங்குனி, சித்திரை மாதங்களில் நவபாஷாணத்தால் ஆன பழனி முருகப்பெருமானை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு ஆகும். குறிப்பாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.

    பல்வேறு சிறப்புக்கு சொந்தமான பங்குனி உத்திர திருவிழா, கடந்த 18-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து வழிபட்டு வருகின்றனர். விழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதில் பெரும்பாலான பக்தர்கள், தீர்த்தக்காவடி எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பங்குனி உத்திர நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மதியம் 11.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தனித்தனி தேர்களில் எழுந்தருளிய விநாயகர், அஸ்திர தேவருக்கு தீபாராதனை நடைபெற்று தேர் இழுக்கப்பட்டது.

    தொடர்ந்து பெரிய தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    தேரோட்டம்

    பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது. அதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதனையடுத்து 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா' என்ற சரண கோஷம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    • தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 16-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் நாள் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்ட, திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜவள்ளி பாலமுருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேரானது நான்கு வீதிகளையும் வலம் வந்து மதியம் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது.

    திருக்கடையூர்:

    திருக்கடையூர் கீழ வீதியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது.

    முன்னதாக மாலை 5 மணி அளவில் திருக்கடையூர் ஆணைக்குளத்தில் உள்ள எதிர்காலிஸ்வரர் கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக்காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி, சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மகா முத்துமாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.

    புதுச்சேரி:

    தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிக சிறப்பை பெற்றது. அதன் நினைவை போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திர பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமானது, தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்ததாக முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக முருங்கப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பக்தருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) 108 சங்காபிஷேகமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமிக்கு சந்தனக்காப்பு அரங்கமும் நடக்கிறது.

    புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் காலை முருகப்பெருமானுக்கு பால் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணமும், அம்பாள் உள்புறப்பாடும் நடந்தது.

    காராமணிக்குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயக சிவசுப்ரமணிய சாமி கோவிலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்சைசாற்றி அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    புதுவை சஞ்சய்காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய கோவிலில் காலை 8 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதேபோல் புதுச்சேரி கதிர்வேல் சுவாமி கோவில், லாஸ்பேட்டை முருகன் கோவில், பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    காலாந்தோட்டம் சிவசுப்பிரமணியர் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிவசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    • பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணியளவில் தொடங்கியது. பவுர்ணமி காலையில் தொடங்கியதால் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர். வழக்கமாக சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் தான் பக்தர்களின் வரிசையானது கோவிலையும் தாண்டி மாட வீதியில் வரை காணப்படும். நேற்று விடுமுறை தினம் என்பதால் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

    நேற்று வழக்கத்தை விட பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் பக்தர்கள் பலர் பகலில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று முடிவு செய்து வரிசையில் நின்றனர். கோவிலை சுற்றியுள்ள மாட வீதி வரை பக்தர்கள் வரிசை நீண்டு காணப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தலையில் துண்டு வைத்து மறைத்தும், குடை பிடித்தபடியும் வரிசையில் நின்றனர்.

     கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதுடன் மோர் வழங்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தினால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    மேலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் தனித்தனியாக நேற்று கிரிவலம் சென்றனர். மாலையில் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

    பவுர்ணமி கிரிவலமானது இன்று மதியம் 12.55 மணி வரை உள்ளது. அதனால் பக்தர்கள் இன்று காலை வரை தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    • சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.
    • பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தொண்டி:

    உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவபெருமான் கடும் தவம் இருந்தார். தேவலோகத்தில் தலைவனாக இருப்பவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் சிவனின் தவத்தை கலைக்க வேண்டும் என்று பலரையும் நாடினர். ஆனால் சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.

    இந்நிலையில் மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்து விடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான். தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.

    இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதி தேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுதலாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று அழுது புலம்பி முறையிட்டாள். ரதிதேவியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவரிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார்.

    இந்த புராண சம்ப வத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி, பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் காமன் பண்டிகையை யொட்டி காமன் மேடையில் காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படி தாரர்களால் பூஜைகள் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காமன் மேடையில் எரியூட்டப்பட்டு தகனம் நடந்தது. முன்னதாக பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர். மேலும் குழந்தை இல்லாத தம்பதியர் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

    காம தகன ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராம மூர்த்தி, நாகராஜ், ராஜாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோ விலில் ஆழித்தேரோட்ட விழாவை போன்று திருவாதிரை திருவிழா, பங்குனி உத்திர திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    அதன்படி, இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு வலது பாதத்தை காண்பித்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூஜையில் இறைவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடது பாதத்தையும், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வலது பாதத்தையும் காட்டுவதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த பங்குனி திருவிழாவில் முதல்நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனையும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. அதனை, தொடர்ந்து, இன்று காலை தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை, மகா அபிஷேகம் நடைபெற்று, தியாகராஜர் வலது பாத தரிசனம் காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம் என்பார்கள்.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்து வலது பாதத்தை தரிசனம் செய்தனர்.

    • நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
    • 108 மகாதேவர் முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.அங்கிருந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி பந்தல் மண்டபம் முகப்பிற்கு வந்து அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்நதுனர். இரவு 10 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    திருக்கல்யாணத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • தீய பார்வைகளை தீய்த்துவிடும் நோன்பு.
    • நோன்பின் புனிதம் காக்க முயலுங்கள்.

    தீய பார்வைகளை தீய்த்துவிடும் நோன்பு

    பார்வைகள் பலவிதம். அவற்றில் அழகிய பார்வையும் உண்டு. அன்பு பார்வையும் உண்டு. கருணைப் பார்வையும், கலங்கியப் பார்வையும் அடங்கும். சிந்திக்கும் பார்வையும், சீர்திருத்தும் பார்வையும், கண்டிக்கும் பார்வையும் வரவேற்கப்படுகின்றன. எனினும், காமப்பார்வையையும், சந்தேகப் பார்வையையும், பயமுறுத்தும் பார்வையையும், சீரழிக்கும் பார்வையையும், கவிழ்க்கும் பார்வையையும் இஸ்லாம் தடை செய்கிறது. தீய பார்வைகளை தீய்த்துவிடும் ஆயுதமாக நோன்பு அமைந்துள்ளதாக அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்.

    "உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப்பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். யார் அதற்கு சக்தி பெறவில்லையோ, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)

    "(நபியே!) இறைவிசுவாசிகளான ஆடவர்களுக்கு நீர் கூறும்: அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்." (திருக்குர்ஆன் 24:30)

    "இன்னும் இறை விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறும்: அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண் டும்." (திருக்குர்ஆன் 24:31)

    ஆண்கள், பெண்கள் தங்களது பார்வைகளை தாழ்த்தும்படி திருக்குர்ஆன் ஏன் பணிக் கிறது? அது விஷம் தடவப்பட்ட ஷைத்தானின் அம்புகளாகவும் அமைந்துள்ளதாக பின்வரும் நபிமொழி தெரிவிக்கின்றன. "பார்வை, ஷைத்தானின் விஷம் தடவப்பட்ட அம்புகளில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பாளர்: மஸ் ஊத் (ரலி), நூல்: தப்ரானி)

    இப்னு "பாதைகளின் மீது அமர்ந்து இருப்பதை உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்' என நபி (ஸல்) கூறிய போது, 'நபியே! நாங்கள் பாதையில் அமர்ந்து பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் என்ன செய்வது?' என தோழர்கள் வேண்டியதும், 'பாதைக்குரிய உரிமைகளை கொடுத்திடுங்கள்' என நபி (ஸல்) பதில் கூறினார்கள்.

    'பாதைக்குரிய உரிமைகள் என்ன?' என்பது பற்றி தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் 'பார்வையை தாழ்த்திக் கொள்வது, நோவினை தரும் பொருட்களை அகற்றுவது, ஸலாமுக்கு பதில் கூறுவது, நன்மையை ஏவி தீயதை தடுப்பது' என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத்,நூல்: திர்மிதி)

    தகாத பார்வைகளை தவிர்த்து வாழ்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் நுழைவிக்க பொறுப்பேற்று இருக்கிறார்கள். எவர் தமது இரண்டு கண்களையும் தடுக்கப்பட்ட காட்சிகளை பார்ப்பதை விட்டும் தவிர்த்து, பார்வையை தாழ்த்தி நோன்பிருக்கிறாரோ, அவரின் நோன்பை எல்லாம் வல்ல அல்லாஹ் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு, அவரை தன் கருணை பார்வையைக் கொண்டு பார்க்கிறான்.

    "எதைப்பற்றி உமக்கு(த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும், இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்." (திருக்குர்ஆன் 17:36) நோன்பாளிகளே! தடுக்கப்பட்ட பார்வைகளை விட்டும் தவிர்த்து, நோன்பின் புனிதம் காக்க முயலுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம்.
    • குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.

    குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை என்ன செய்வது என்று கவலைப்படாதீர்கள். கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவிலுக்கு சென்று, அந்த துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாராம்.

    குல தெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்று விக்கப்பட்டதோ, ஆகாசத்தில் இருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.

    வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கிறார்கள்.

    சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்ணுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.

    மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த குலதெய்வ வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குதான் தெரியும்.

    ×