என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் தேரோட்டம்.
    • ஸ்ரீ ரங்க மன்னார் யானை வாகனத்தில் திருக்கல்யாணம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 12 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி நண்பகல் 1.16 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: உத்திரம் காலை 11.19 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கங்கை கொண்டான் ஸ்ரீ வைகுண்டபதி சாற்றுமுறை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தண்டியலில் ஸ்ரீ ரங்க மன்னார் யானை வாகனத்தில் திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல். பரமகுடி ஸ்ரீ முத்தாலம்மன், திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள், பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேரோட்டம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தெளிவு

    ரிஷபம்-பண்பு

    மிதுனம்-களிப்பு

    கடகம்-சாதனை

    சிம்மம்-வரவு

    கன்னி-செலவு

    துலாம்- தாமதம்

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- லாபம்

    மகரம்-பக்தி

    கும்பம்-பாசம்

    மீனம்-பயணம்

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    போரூர்:

    பிரசித்தி பெற்ற வட பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தினசரி காலை மற்றும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன்கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இன்று இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 27-ந்தேதி வரை 3 நாட்களும் இரவு 7 மணிக்கு திருக்குளத்தில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

    பாரிமுனை, ராசப்பா செட்டி தெருவில் உள்ள கந்தக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.

    மேலும் 3 பெருமாளும் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தை சென்றடைந்தனர். மற்ற கோவில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து இருந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

    • குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
    • சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரம் எனப்படும் சாஸ்தா கோவில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் இன்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் இன்று சில கோவில்களிலும், நாளை (திங்கட்கிழமை) பெரும்பாலான கோவில்களிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படு கிறது. அதன்படி இன்று சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

    பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. எனினும் இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும்பா லான பக்தர்கள் அங்கு புறப்பட்டு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாபநாசம் பகுதியில் வனத்துறையினரின் சோதனைக்கு பின்னர் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் சாஸ்தா கோவில், தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில், வீரவ நல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாளை பங்குனி உத்திரத்தை யொட்டி இந்த கோவில்களில் மேலும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையொட்டி அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    மேலும் தாழையூத்து, சீவலப்பேரி சாஸ்தா கோவில்கள், சேரன்மகா தேவி செங்காடு சாஸ்தா கோவில், நாங்குநேரி செம்பு குட்டி சாஸ்தா கோவில், ஆழ்வார் குறிச்சி காக்கும் பெருமாள் கோவில், அம்பை மன்னார் கோவில் மெய்யப்ப சாஸ்தா கோவில், அருணாபேரி மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் உள்பட பல்வேறு கோவில்க ளிலும் இன்றும், நாளையும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டம் மேலபுதுக்குடி அய்யனார் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மாவட்டத்தில் உள்ள மணக்கரை, மணத்தேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று காலையில் கணபதி ஹோமம் தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடந்தது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். இதனால் நாளை சாஸ்தா கோவில்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.

    இதனால் பெரும்பாலான சாஸ்தா கோவில்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதுதவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, வாடகை கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் இன்று வாடகை கார், வேன்கள் கூடுதலாக இயக்கப்பட்டது. முக்கிய கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர பகுதி யில் மட்டும் சுமார் 40 சாஸ்தா கோவிலுக்கும், நெல்லை மாவட்ட பகுதியில் 120 கோவில்களுக்கும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தலா 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் `தீர்த்தக்காவடி திருவிழா' என அழைக்கப்படும் பங்குனி உத்திரம் தனி சிறப்பு வாய்ந்தது. அதாவது கோடை காலமான பங்குனி, சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இந்த காலத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இது பங்குனி உத்திர விழாவின் சிறப்பு ஆகும்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ந்தேதி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மாலை 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'வீர வேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. மகா தீபாராதனைக்குப் பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பங்குனி உத்திர திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்ததை தொடர்ந்து, மண கோலத்தில் சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளினார். முன்னதாக திருஆவினன்குடி கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வெள்ளிதேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தேர்பவனி தொடங்கியது. சன்னதி வீதி, வடக்கு, கிழக்கு, மேற்கு கிரிவீதிகள் வழியாக சென்று நிலை வந்து சேர்ந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

     திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே பழனி நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தம் எடுத்து வந்தும், காவடி சுமந்தும் ஆடிப்பாடியும் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • நேற்று இரவு பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.
    • தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அன்னசாகரம் ஸ்ரீ விநாயகர் சிவசுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி உத்திரவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    9-ம் நாளான நேற்று மாலை விநாயகர் ரதம் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஈரோடு சிவகிரி செங்குந்தர் சமூகத்தினர் பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுரசித்தனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் விழா நடைபெற்றது. சிவ சுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்தார். தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது அவர்கள் அரோகரா, அரோகரா என்று கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி, அன்னசாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரளாமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து சென்றனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குத்த மரபினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர்.
    • கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னை:

    இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மீது பவனியாக அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது குருத்தோலை களை பிடித்தவாறு ஜெருசேலம் மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும், பவனியாக சென்றனர்.

    சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) ஆலயங்கள், மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்தே, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.

    சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், சின்னமலை தேவாலயம், கத்தீட்ரல் பேராலயம், புதுப்பேட்டை புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

     குருத்தோலை பவனியில் சென்ற கிறிஸ்தவர்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்ற பாடலை பாடியபடி சென்ற னர். பின்னர் ஆலயங்களில் பேராயர்கள், பாதிரியர்கள், போதகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    • சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.
    • கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது.

    ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியின் எல்லையில் சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் புணரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த கோவிலில் உள்ள சங்கிலி கருப்பராயன் காவல் தெய்வமாக இருந்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்றனர். இரவு திடீரென காவல் தெய்வம் சிலை வழக்கம் போல் இல்லாமல் கண் திறந்து காணப்பட்டது. இதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.


    இது பற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் பரவலாக பரவியது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மேலும் வேலைக்கு சென்று திரும்பி மக்களும் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். இதையடுத்து மக்கள் காவில் தெய்வமே என மனமுருகி வழிபட்டனர்.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். பெண்கள், குழந்தைகள் என பலர் வந்த வண்ணம் இருந்தனர். மேலும் இதை செல்போன்களில் படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பினர்.

    நேற்று பெரியமாரியம்மன கோவிலில் கம்பம் நடப்பட்டது. அந்த நேரத்தில் சாமி கண் திறந்ததால் பக்தர்கள் பலர் பக்தி பரவசமாக பேசி கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாமிகள் கண் திறந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இதனால் பொதுமக்கள் உடல் சிலிர்த்து காவல் தெய்வமே, தாயே அம்மா என்றும் கருப்பராயன் காவல் தெய்வமே என மெய் சிலிர்த்து கொண்டனர். அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • நந்திக்கும் சுயம் பிரகாசைக்கும் திருமழப் பாடியில் திருமணம் நடந்தது.
    • நன்றி கூறும் திருவிழாவிற்கு ஏழூர் பெருவிழா எனப்பெயர்.

    பங்குனி மாத புனர்பூச நன்னாளில் நந்திக்கும் சுயம் பிரகாசைக்கும் திருமழப் பாடியில் திருமணம் நடந்தது. தன் மகன் போல் உள்ள பக்தன் நந்திக்கு திருமணம் செய்து வைக்க எண்ணம் கொண்டார் திருவையாறு ஐயாறப்பன். புலிக்கால் முனிவரான வியாக்ர பாத முனிவரின் மகள் சுயம்பிரகாசைக்கும் ஐப்பேசன் என்ற பெயருடைய நந்தி தேவருக்கும் சிறப்பாகத் திருமணம் செய்வித்தார். இதற்கு எல்லாரும் அவரவர் பங்குக்கு சில செலவுகளை ஏற்றுக் கொண்டனர்.

    பழமும், பூவும், நெய்யும், குண்டலங்களும் கொடுத்ததுடன் வேதியர்களையும் அனுப்பி திருமணத்தை சிறப்பாக நடத்த உதவினர். இப்படி திருமணம் நடத்தி சிறப்பித்தவர்களக்கு நன்றி கூறினார் நந்திதேவர். இந்த நன்றி கூறும் திருவிழாவிற்கு ஏழூர் பெருவிழா எனப்பெயர்.

    ஏழு ஊர்களுக்கும் சென்று நன்றி கூறி, அவர்களின் மரியாதைகளை ஏற்றபின், இரு பல்லக்கு களுடன் அந்த ஏழு ஊர்களின் பெருமான்களும் பிராட்டியும் உடன் வந்த திருவையாறு அடைவார்கள். பின் எல்லா ஊர் பெருமான்களும் கல்யாண தம்பதிகளிடமும் பிரபஞ்ச தம்பதிகளிடமும் (சிவ-பார்வதி) விடை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர் போய் சேருவார்கள்.

    முதல் ஊர் திருப்பழனம், அடுத்து திருச்சோற்றுத்துறை, தொடர்ந்து திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், இறுதியாக திருவையாறு என ஏழு ஊர்களுக்கும் செல்வது தான் இவ்விழா.

    இந்த ஊர்வலத்துடன் பக்தர்கள், இசை வித்வான்கள், நடனக்காரர்கள், நாயனக்காரர்கள் எல்லாரும் போவார்கள். எல்லா இடங்களிலும் இசை, நாதஸ்வரம், குசல விசாரிப்புகள், விருந்து உபசாரம் கேளிக்கை, கொண்டாட்டம் என உற்சாகமாகவும் கோலாகலமாகவும் இவ்விழா நடைபெறும்.

    • நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி.
    • 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 22-ந்தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பங்குனி மாத பவுர்ணமியையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    இதனையடுத்து 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. காலையில் வெயில் இல்லாத நிலையில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனத் திற்கு மலையேறி சென்றனர். இன்று பங்குனி மாத பவுர்ணமியையொட்டி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

    • கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
    • ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

    ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். பங்குனி உத்திரத்தன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

    பங்குனி உத்திர தினத்தன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர் களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திரம் தினத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரு வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு. அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டு.

    பங்குனி உத்திரம் தினத்தன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சி னைகள் விலகும். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத் திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும். இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை பங்குனி உத்திரம் தினத்தன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். இந்த விரதத்தால் உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரணையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

    • பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு சுற்று வட்டாரப்கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். கர்நாடக மாநில பக்தர்களும் அதிகளவு வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள். இதனால் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    பண்ணாரியம்மன் கோவில் புகழ்பெற்ற குண்டம் விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநில பக்தர்கள் என சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. குண்டம் விழாவில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி அம்மன் சப்பரம் புறப்பாடு சத்தியமங்கலம், புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று கோவிலை வந்தடைந்தது.

    இதையொட்டி தினமும அம்மனுக்கு சிறப்பு அஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவை யொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து வழிகிறார்கள்.

    இதை தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் குண்டம் விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) இரவு எரி கரும்புகளால் (விறகு) குண்டம் வார்க்கப்படுகிறது. இதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இதனால் குண்டம் வளர்க்கப்படும் இடத்தின் அருகே விறகுகள் குவிந்து வருகிறது. மேலும் வேண்டுதல்கள் நிறை வேற்றும் வகையிலும் ஏராளமானோர் விறகுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

    பக்தர்கள் பாதுகாப்பாக குண்டம் இறங்குவதற்காக கோவில் வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தினமும் அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோவில் அருகே பக்தர்களுக்கு கழிவறை மற்றும் குளியல் அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் அதிகாலை குண்டம் விழா நடப்பதால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்குவதற்காக இடம் பிடித்து காத்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் பலர் குண்டம் இறங்க செல்லும் தடுப்புகளில் துண்டு, சேலை மற்றும் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.

    விழாவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ளதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் பண்ணாரியம்மனை தரிசனம் செய்து விட்டு குண்டம் இறங்க இடம் பிடித்து காத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் குழந்தைகளுடன் வந்த பலர் அங்கேயே தொட்டில் கட்டி அவர்களும் அங்கேயே தூங்குகிறார்கள். அவர்கள் இரவு, பகலாக அங்கே தங்கி உள்ளனர்.

    தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இன்று மேலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போதே கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கோவிலில் குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே போல் பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    • காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • இன்று இரவு சுவாமிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வருகிறார். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்பிற்கு வரு கின்றனர். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்கின்றனர். இரவு 9 மணிக்கு மேல் கோவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இன்று இரவு சுவாமிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.

    பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு குலதெய்வம் தெரியாத வர்கள் முருகப்பெருமானை தரிசி த்தால் தங்கள் குலதெய்வத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

     நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உபகோவிலான நாலு மூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர விழா நடக்கிறது. உத்திரத்தை முன்னிட்டு இன்று குன்றுமலை சாஸ்தா கோவிலில் சிறப்பு அபிசேகம், அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

    திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், மின்வசதி, உள்பட அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    ×