என் மலர்
வழிபாடு
- பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அவினாசி:
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். இதில் விநாயகர் பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளினர்.

நேற்று முன்தினம் இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நடைபெற்றது.சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் `அவிநாசியப்பா', `அரோகரா', `நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.
நாளை 22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 25-ந் தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 26-ந் தேதி மகா தரிசன விழாவும், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்த படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய இடங்களில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.
- மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும்.
- இஷ்ட தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
ஜோதிட ரீதியாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று நேர் எதிரில் துலாம் ராசியில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாளில் பவுர்ணமி வருவதால், சித்ரா பவுர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆத்மகாரகனும், மனோகாரகனும் 180 பாகையில் சந்திக்கும் நாள் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.
2024 ஆம் ஆண்டு இந்த வருடம் சித்ரா பவுர்ணமி எப்பொழுது கொண்டாடப்படுகிறது என்றால் ஏப்ரல் 22-ந் தேதி மாலை 5:30 மணிக்கு மேல் பவுர்ணமி திதி ஆரம்பித்தாலும் 22 -ந்தேதி முழு இரவு மூன்றாம் தேதி முழு பகலும் நமக்கு பவுர்ணமி திதியாக வருகிறது.
இந்த சமயத்தில் ஏப்ரல் 23-ந் தேதி காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து நம் இஷ்ட தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
முடிந்தவர்கள் காலையிலேயே நீராடி விட்டு வீட்டை சுற்றிலும் மஞ்சள் நீரால் தெளித்து விட்டு காலையில் உங்கள் வீட்டில் அருகாமையில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று 9 முறை நவகிரகத்தை சுற்றிவர பவுர்ணமி அன்று பெறக்கூடிய அனைத்து சக்திகளையும் நீங்கள் பெறலாம்.
ஒருவேளை நீங்கள் மிகுந்த பக்தியோடு இருப்பவர் ஆயினும் சக்கரை பொங்கல் நெய்வேத்தியம் பாயாசம் போன்றவை படையெடுத்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கலாம்.
குறிப்பாக சனி பகவான் ஜோதிடத்தில் கருமக்காரனாய் வருகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனியை வைத்து அவரின் கர்மாவை நம்மால் கணித்து விட முடியும். இப்படியான சூழ்நிலையில் ஒருவர் ஜாதகத்தில் சனி நீச்சம் பெற்றாலோ அல்லது நாவாம்சத்தில் நீச்சம் பெற்று இருந்தாலும் அவருக்கான பலன்களை அவர் வாழ்க்கையில் அனுபவித்தே தீர வேண்டும்.
இது மாதிரியான சமயங்களில் குருவின் பார்வை ஒன்று ஐந்து ஏழு ஒன்பது போன்ற ஸ்தானங்களில் இருந்து சனியை பார்த்தால் நிச்சயமாக கர்மாவில் இருந்து அவருக்கு விடுதலை கிடைக்கும்.
அப்படி குரு பார்க்கும் சனி கொண்ட ஜாதகர்கள் இதுபோன்று சித்ரா பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் விரதம் இருந்தால் உடனடியாக அவர்களது கர்மா தீர்க்கப்பட்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சுப காரியங்களோ நடக்க வேண்டிய நல்லதுகளோ அல்லது பணம் சம்பந்தமான தொழில் சம்பந்தமான வியாபாரம் சம்பந்தமான எந்த ஒரு தடையாக இருந்தாலும் உடனடியாக நிவர்த்தி ஆகும் என்பது தான் முன்னோர்கள் கூறி வைத்த கருத்து.
சிவனையும் பார்வதியும் ஒரு சேர இருக்கும் தளங்களுக்கு சென்று நீங்கள் பவுர்ணமி தினத்தில் வழிபடுவது சிறப்பு.
- நடவாவி கிணறு உற்சவம் வருகின்ற 23-ந் தேதி நடைபெற உள்ளது.
- பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு வரதர் அருள் பெறுவார்கள்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும், நடவாவி கிணறு உற்சவம் வருகின்ற 23-ந் தேதி நடைபெற உள்ளது.
நடவாவி உற்சவம்
அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பௌர்ணமி வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் வரதர், அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள்.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த உற்சவத்தை ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு வரதர் அருள் பெறுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நடவாவி உற்சவம் நடைபெற உள்ளது. முன்னதாக சித்திரை 9 (22-04-2024) திருவவதார உற்சவம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தின் பொழுது விடியற்காலை மூன்று மணிக்கு திருமஞ்சனம் கொண்டு வந்து, பெருமாளுக்கு திருவாராதனை நிவேதனம் செய்யப்பட்டு, பெருமாள் திருமலையில் இருந்து இறங்குதல் மற்றும் பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் புறப்படுதல் விழா நடைபெறும் இரவு 7:30 மணிக்கு பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளி கண்ணாடி அறையில் தரிசனம் தருவார். தொடர்ந்து இரவு 9 மணி அளவில் பெருமாள் திருக்கோவில் இருந்து மாடவீதி புறப்பாடு நடைபெறும்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் பெருமாள் செவிலிமேடு கிராமங்களில் வீதி உலா நடைபெறும். தொடர்ந்து காலை 6 மணி அளவில் புஞ்சையரசந்தாங்கல் கிராம மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து வாகை கிராம மண்டகப்படி நிகழ்ச்சியும், தூசி கிராமத்திற்கு வீதி புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து 23-ந் தேதி மதியம் ஒரு மணி அளவில் தூசி கிராம ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலில், சுவாமி ஓய்வு எடுப்பார்.
மீண்டும் புறப்பட்டு நான்கு மணி அளவில் அப்துல்லாபுரம் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்று, அயங்கார் குளத்திற்கு எழுந்தருளி கிராம வீதி புறப்பாடு நடைபெறும். இரவு 7 மணி அளவில் பெருமாள் ஐயங்கார் குளம் ஸ்ரீ சஞ்சீவிராயர் கோவில் இறங்குதல் நடைபெறும், தொடர்ந்து திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடர்ந்து இரவு 9 மணி அளவில், சஞ்சீவ ராயர் திருக்கோவிலில் இருந்து நடவாவி கிணற்றுக்கு புறப்பாடு நடைபெறும். 9.30 மணி அளவில் பெருமாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவு 10 மணி அளவில் நடவாவி கிணற்றில் இருந்து பாலாற்றுக்கு எழுந்தருள் உள்ள நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 24-ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், பாலாற்றில் எழுந்தருளி செவிலியமேடு வீதி மண்டகப்படி நிகழ்ச்சியும், பங்காரு காமாட்சி காலணி மண்டக படியும் நடைபெறும்.
விடியற்காலை 3 மணியளவில் பெருமாள் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி காட்சி தருவார். 4 மணியளவில் திரு கோவிலுக்கு எழுந்தருளி திருமுற்றவெளி நான்கு கால மண்டபத்தில் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து மதுரகவிகள் சாத்துமுறை நடைபெறும்.
இறுதி நாள் உற்சவம்
தொடர்ந்து 25-ந் தேதி தோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. பெருமாள் திருக்கோவில் இருந்து பல்லாக்கில் மாட வீதியாக தோட்டத்திற்கு புறப்படும், நடைபெற உள்ளது. தொடர்ந்து 26-ந் தேதி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ பெருமாள் தோட்டத்திலிருந்து திருக்கோவில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளி திருமுற்றவெளி நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளி காட்சி தருவார்.
தொடர்ந்து பெருமாள் கண்ணாடி அறைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறும். 26-ந் தேதி இரவு 7 மணி அளவில் கண்ணாடி அறையில் இருந்து பெருமாள் திருமலைக்கு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று உற்சவத்தில் நிறைவு பகுதி வந்தடையும்.
- விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்.
- மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும்.
சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும்.
இன்று சித்திரை வளர்பிறை பிரதோஷ நாள். பல திருக்கோயில்களில் சித்திரை விழாக்கள் நடைபெற்று வரும் இத்தருணத்தில் பிரதோஷமும் சேர்ந்து வருவது சிறப்பு. பிரதோஷ விரதம் இருப்பவர்கள் காலை முதல் மாலை உபவாசம் இருந்து மாலையில் பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் அபிஷேகங்களை தரிசித்து, பிராகாரத்தை வலம் வந்து, விரதத்தை நிறைவு செய்வதன் மூலம் பிற தோஷங்கள் எதுவாக இருந்தாலும் வெற்றி கொள்ளலாம்.
பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.
- இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம்.
- மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு சித்திரை-8 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி பின்னிரவு 2.29 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: உத்திரம் இரவு 6.23 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். சூரியனார்கோவில் சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். தூத்துக்குடி சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர், நரசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-உறுதி
மிதுனம்-நன்மை
கடகம்-வரவு
சிம்மம்-செலவு
கன்னி-இன்பம்
துலாம்- சந்தோஷம்
விருச்சிகம்-முயற்சி
தனுசு- ஆக்கம்
மகரம்-ஆதரவு
கும்பம்-நற்செயல்
மீனம்-தாமதம்
- சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இன்றைய தினம் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரையில் அரசாளும் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் கற்பக விருட்சம், சிம்மம், பூத, அன்ன, கைலாச பர்வதம், காமதேனு, தங்கப் பல்லக்கு, தங்கக்குதிரை, ரிஷப, நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன் றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர்புரியும் திக்கு விஜயம் நேற்று இரவு விமரிசையாக நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.
கோவிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை ரூ.30 லட்சம் செலவில், 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலை 7.45 மணி அளவில் முதலாவதாக திருக்கல் யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனி வாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார்கள்.
அதன் பின்னர் திருக்கல் யாண வைபவங்கள் வேத மந்திர முழக்கங்களுடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடதுபுறம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையும் எழுந்தருளினர்.
மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி மற்றும் தங்க காசு மாலை, பச்சைக் கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபர ணங்கள் அணிந்திருந்தார். சுவாமி சுந்தரேசுவரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். பிரியாவிடை சிவப்பு பட்டு அணிந்திருந்தார்.
திருக்கல்யாண நிகழ்வு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டது. மேலும் சங்கல்பம், கணபதி ஹோமம், புண்ணியாக வாசனம், பஞ்சகாவியம் நவதானியமிடும் பாலிகா பூஜை நடந்தது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடத்தப்பட்டது. திருக்கல் யாண நிகழ்ச்சியில் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், மீனாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

இதையடுத்து பவளக்கனிவாய் பெருமாள், தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக் குள் ரிஷப லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் விண்ணதிர மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மீனாட்சி அம்மனாக ஹாலாஸ்யநாதன் பட்டரும், சுந்தரேசுவரராக செந்தில் நாதன் பட்டரும் வேடம் தரித்திருந்தனர். அவர்கள் இருவரும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் சுந்தரேசுவரராக வேடமணிந்திருந்த செந்தில் நாதன் பட்டர், வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார்.

அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர். திருமண நிகழ்ச்சியை கோவிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும் மற்றும் சித் திரை வீதி, மாசி வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டுகளித்தனர்.
சுவாமிகள் திருக்கல்யாணம் நடந்தபோது, கோவிலின் உள்ளேயும், வெளிபுறத்திலும் திரண்டிருந்த பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர். திருக்கல் யாணம் முடிந்த பின்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். திருக்கல்யாணத்தை பார்த்தால் வீட்டில் திருமணமாகாத கன்னிகைகள், இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இதனால் சுவாமி திருக்கல்யாணத்தை காண இந்த ஆண்டும் பல்லாயிரக்கானோர் திரண்டிருந்தனர். பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக சுவாமியும், அம்மனும் பழைய கல்யாண மண்டபத்தில் இன்று முழுவதும் எழுந்தருளி இருப்பார்கள்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கூட்டமாகவே காட்சி அளித்தது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு சேதுபதி பள்ளியில் கல்யாண விருந்து அளிக்கப் பட்டது. பின்னர் விருந்தில் பங்கேற்றவர்கள் மொய் எழுதி சென்றனர். திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரி, தெப்பக் குளம் மாரியம்மன் கோவில், காமராஜர் சாலை சவுராஷ் டிரா பள்ளி, பழைய குயவர்பாளையம் செயின்ட் மேரீஸ் பள்ளி, மதுரை கல்லூரி, எல்லீஸ் நகர் 70 அடி சாலை, அரசரடி இறையியற் கல்லூரி வளாகம் ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள். அதனை காண ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள். நாளை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
- பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இதில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ராபவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சித்ரா பவுர்ணமி வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24-ந் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது.
இதனால் 23-ந் தேதி முழுமையாக சித்ரா பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சித்ரா பவுர்ணமிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும்.
- நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.
"பிறவி தோஷங்களை போக்கும் தினம் பிரதோஷ தினம்" என்று சொல்வார்கள். மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் பிரதோஷம் வந்தாலும், வளர்பிறை காலத்தில் அதுவும் ஞாயிற்று கிழமைகளில் பிரதோஷம் வருவது விசேஷமானது. இப்படியான மிகச் சிறப்பான நாளைய தினத்தில் "சூரிய பகவான்" மற்றும் "சிவபெருமானை" போற்றி வழிபட வேண்டிய மந்திரம் இது.
சூரிய பகவான் மந்திரம்: ஆம் ஹுராம் ஹிரீம் ஹுராம் சஹ் சூரியாய் நமஹ
சிவ பெருமான் மந்திரம்: ஓம் நமோ பகவதே ருத்ராய
பிரதோஷ நேரமான மாலை வேலையில் கோவிலுக்கு சென்று முதலில் சூரிய பகவானை தரிசித்து, அவருக்கு நெய் தீபமேற்றி மந்திரத்தை 10 முறை உச்சரித்து வணங்க வேண்டும். இதனால் சூரிய தோஷம் நீங்கும்.

பிரதோஷ நேர பூஜையின் போது சிவபெருமானை வேண்டி மந்திரத்தை 9 முறை கூறி வணங்க வேண்டும். இம்மந்திரங்களை நாளை கூறி வழிபடுவதன் மூலம் நம் ஒவ்வொருவரின் உடல், மனம், ஆன்மா தூய்மை பெற்று ஆன்மிகச் சிந்தனை நமக்குள் நிறையும். அதோடு நமது கர்ம வினைகள் நீங்கி நன்மைகள் பெருகும். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி.
பொதுவாக பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமையன்று ராகு காலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே நாளை ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள்.
நாளை மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.
முடிந்தால் வில்வமும், செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம், பெருகும்; நிலைக்கும் என்பது ஐதீகம்.
- பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
- நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகின்றனர்.
விழாவின் 8-ம் நாளான நேற்று மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள அம்மன் சன்னதி முன்பு உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராயர் கீரிடம் சாற்றி, ரத்தின செங்கோலுடன் மீனாட்சி காட்சி அளித்தார்.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று பிரகாரம் சுற்றி வந்தார். அதனை தொடர்ந்து பட்டத்தரசியாக அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மாசி வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) எழுந்தருளினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-வது நாளான இன்று காலை மரவர்ண சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். திக்கு விஜயபுராண வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் இன்று இரவு திக்குவிஜயம் நடக்கிறது. அரசியான மீனாட்சி இந்திர விமானத்தில் 4 மாசி வீதிகளில் எழுந்தருளி அஷ்ட திக்கு பாலகர்களை போரில் வெற்றி கொள்ளும் நிகழ்வு நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இதற்காக கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ரூ.30 லட்சம் செலவில் பல டன் மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
நாளை அதிகாலை திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருளுகிறார்கள். அதிகாலை 4 மணிக்கு கோவில் மண்டகப்படிகளில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் சுவாமி-அம்மன் உலா வருகின்றனர். பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடும் நிகழ்வு நடக்கிறது.
அதனை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முதலில் மணமேடையில் முருகப் பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளுகின்றனர். அதன்பின் மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வருகை தருவார்கள். தொடர்ந்து காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கிறது.
கோவிலில் நேரடியாக திருக்கல்யாணத்தை காண 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி சீட்டு பெற்றவர்கள் 4 கோபுர நுழைவுவாயில் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்திரை வீதிகள் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரை மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. மறுநாள் (21-ந் தேதி) காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
- அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
- தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர்.
தஞ்சாவூர்:
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவிலில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டு மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கலெக்டர் தீபக்ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஆணையர் மகேஸ்வரி, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர், தேருக்கு முன்பாக, விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி சென்றது.
இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது.

தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர். மேலும் சிவவாத்தியங்களும் இசைக்கப்பட்டன. கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் தேருக்கு முன்னாள் நடத்தப்பட்டன.
நான்கு ராஜ வீதிகள் வழியாக தேர் அசைந்தாடியபடி சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்து அடையும்.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த தேர் திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- வடக்கு நாதர் கோவில் மேற்கு நடை பகுதியில் 300 கலைஞர்கள் நின்று மேள வாத்தியங்களை இசைத்தனர்.
- அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, இரவில் நடந்த வாணவேடிக்கையால் திருச்சூரே விழா கோலம் பூண்டது.
திருச்சூர்:
கேரள மாநிலம் திருச்சூர் நகரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இது புகழ்பெற்றது. திருவம்பாடி கோவில், பாரம்மேகாவு கோவில் சார்பில், தேக்கின்காடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது.
மேலும் பட்டம் அணிவிக்கப்பட்ட யானைகள் மீது சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாண வேடிக்கை நடந்தது. இதில் 2 கோவில் தரப்பில் போட்டி போட்டு பட்டாசுகளை வெடித்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூரம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு யானைகளுக்கு பட்டம் அணிவிக்கப்பட்டு, குடை மாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் எதிர் எதிரே தலா 16 யானைகள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு யானை மீது சுவாமி வீதி உலா வந்தார். வடக்கு நாதர் கோவில் மேற்கு நடை பகுதியில் 300 கலைஞர்கள் நின்று மேள வாத்தியங்களை இசைத்தனர். செண்டை மேள கச்சேரி நடந்தது.
சுவாமி எழுந்தருளிப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் குடை மாற்றும் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, இரவில் நடந்த வாணவேடிக்கையால் திருச்சூரே விழா கோலம் பூண்டது. விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
- ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் ரதோற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு சித்திரை-7 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: பூரம் பிற்பகல் 3.50 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். தூத்துக்குடி ஸ்ரீ நடராஜர் பச்சை சாத்தி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் ரதோற்சவம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திக் விஜயம் செய்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-தனம்
கடகம்-துணிவு
சிம்மம்-நன்மை
கன்னி-உறுதி
துலாம்- நட்பு
விருச்சிகம்-சுபம்
தனுசு- வெற்றி
மகரம்-போட்டி
கும்பம்-பெருமை
மீனம்-ஆக்கம்






