search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Umapati Shivacharya Guru Puja"

    • சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர்.
    • தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார்.

    உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.

    சிதம்பரம் கோவிலில் பூஜை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்தில் இருந்து நீக்கியதுடன் கோவிலில் பூஜை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார்.

    அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம்.

    அச்சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.

    63 நாயன்மார்களை போலவே சைவ மரபில் சந்தான குரவர்கள் என்று நால்வரைச் சொல்வார்கள். அதில் உமாபதி சிவாச்சாரியார் ஒருவர். அவர் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் அருகாமையில் உள்ள கொற்றவன்குடி என்னும் சிற்றூரில் அவதரித்தவர்.

    இவருக்கு சிதம்பரம் கொற்றவன் குடி தோப்பில் திருமடம் இருக்கிறது. நடராஜர் தரிசனத்தின் போது கவிக்கொடி ஏற்றியவர்.

    இன்று அவருடைய குருபூஜை என்பதால், அவருடைய திருமடத்தில் உமாபதி சிவாச்சாரியாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பன்னிரு திருமுறை பாடல் ஓதுதலும் நடைபெறும். இன்றைய தினம் திரு உத்தரகோசமங்கை மங்களநாதருக்கு மங்கள நாயகிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    மணிவாசகப் பெருமானுக்கு திருவுருவக்காட்சி தந்த தலம் இந்த தலம். சொக்கலிங்க பெருமாள் பார்வதிதேவியை பரதவர் குலத்தில் பிறக்கும் படியாக சபித்து சாப விமோசனமாக இத்தலத்தில் அம்பாளை திருமணம் செய்து கொண்டு வேதப் பொருளை உபதேசம் செய்ததாக புராண வரலாறு. எனவே, மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டியே இங்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    ×