என் மலர்tooltip icon

    வழிபாடு

    • முருகப் பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.
    • ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    'சட்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் இது அப்படி அல்ல! 'சஷ்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்பது தான் சரியான உச்சரிப்பு ஆகும்.

    அதாவது சஷ்டி திதியில் விரதம் இருப்பவர்களுக்கு கருப்பை நிறையும், குழந்தை பேறு உண்டாகும் என்பது நியதி! இப்படி குழந்தை பாக்கியத்தையும், சொந்த வீடு அமையும் யோகத்தையும் கொடுக்கும் முருகப் பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

    அறுபடை வீடு கொண்ட முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    முருகனுக்கு செய்யப்படும் எந்த ஒரு விஷயத்தையும் ஆறாக செய்வது, நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு வழிமுறையாகும்.

    கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய மகா சஷ்டி விரத நாளில் 6 நாட்கள் தொடர்ந்து விரதத்தை கடைபிடிப்பது வழக்கம்.

    இந்நாட்களில் முருகனின் மந்திரங்களை உச்சரித்து, முருகனை நினைத்து உண்ணாமல் நோன்பு இருந்து குழந்தைக்காக பெண்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.

    சஷ்டி நாட்களில் மட்டும் அல்லாமல், பொதுவாக செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு விரதமிருந்து முருகனுடைய திருவிளையாடல்களை படித்து, திருப்புகழ் பாடி, கவசம் பாராயணம் செய்பவர்களுக்கு, முறையாக விரதம் இருப்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்குகிறார்.

    குறிப்பாக குழந்தைப் பேறு உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகன் படத்தை வைத்து அவருக்கு ஆறு விதமான நைவேத்தியங்கள் படைத்து, 6 புதிய அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, மனதார முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும்.

    சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை உடையவர்களுக்கு செவ்வாய் பகவானுடைய அருள் தேவை. செவ்வாய் காரகத்துவம் பெற்ற வீடு பேறு அமைய, அவருடைய அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட வேண்டும்.

    முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் செவ்வாய் தோறும் ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

    சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும், முருகனுடைய படம் நிச்சயம் இருக்கும். அந்த படத்திற்கு தம்பதியராக சேர்ந்து மாலை இட்டு, புதிய 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, முருகன் மந்திரங்களை உச்சரித்து ஒன்றாக பூஜை செய்தால் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து, மன ஒற்றுமை நிச்சயம் ஏற்படும்.

    கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், ஒரு முறை செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியப்படும் விஷயங்கள் எல்லாம் நடக்கும்.

    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு சஷ்டி திதிகளில் முருகனை இவ்வாறு வழிபட்டு வர, எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். அது மட்டுமல்லாமல் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருபவர்களுக்கும், எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.

    கலியுகத்தில் காக்கும் கடவுளாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இந்த முருகனுக்கு பழனி என்றால் விருப்பம் தான்! அறுபடை வீடுகளில் பழனியில் இருக்கும் நவபாஷாண சிலை இன்றும் விஞ்ஞானிகள் வியக்கும் ஒரு அதிசயம் தான். எனவே வாரந்தோறும் முருகப் பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட்டு வாருங்கள், அனைத்தையும் அடையுங்கள்.

    • கார்த்திகை நட்சத்திரம் முருகனை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.
    • ஆடி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும்.

    ஈரோடு மாவட்டம் கோபி பச்சைமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை அன்று காலை 6.30 மணிக்கு 2 மாடுகள் 181 படிகட்டுகள் ஏறி வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும். அப்படி ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுவது ஆடிக்கிருத்திகை நாளாகும்.

    முருகப்பெருமான் அவதரித்தது விசாகம் நட்சத்திரத்தில் என்றாலும் கூட அவரை வளர்த்தெடுத்தது எல்லாம் கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.

    மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது. கார்த்திகை விரதத்தன்று கந்தசஷ்டி பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் குளித்து விட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டு, பிறகு விரதத்தை நிறைவு செய்வது சிறப்பானதாகும்.

    கந்தசஷ்டி கவசத்துடன் கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பது மிகப்பெரிய புண்ணியத்தை தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் ஆடி கிருத்திகை நாளில் திருப்புகழில் உள்ள பாடலை பாராயணம் செய்து வழிபடுவதால் விரைவில் திருமண வரம் கூடி வரும்.

    பகல் முழுவதும் உப்பில்லாமல் உணவு எடுத்துக் கொண்டு, மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்கு சென்றும் விரதத்தை நிறைவு செய்வது சிறப்பு.

    • பரமேஸ்வரரின் அம்சமான துர்வாச முனிவர் சிறந்த தவசீலர்.
    • வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன்.

    வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன். துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்கரம் ஸ்தாபித்ததால் மலையும் தெய்வமும் சிறப்பு பெற்றன.

    பரமேஸ்வரரின் அம்சமான துர்வாச முனிவர் சிறந்த தவசீலர். பொதிகை மலைக்குச் சென்று திரும்பும் வழியில் குன்னத்தூர் என்னும் ஊரை வந்தடைந்தார். அங்குள்ள சிவன்கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு தன் ஞான சிருஷ்டியால் தினமும் சிவபூஜை செய்ய உகந்த இடம் யாது எனக் கண்டார். அது அரசமரமும் நாக புற்றுக் கண்ணும் அமைந்த மொச்சூர் என்ற தலமாகும்.

    தம் தவவலிமையால் பூஜைப் பொருட்களை வரவழைத்தார். இடியுடன் கூடிய மழையை பெய்விக்கச் செய்து சிறப்பான ஒரு சிவ பூஜையைச் செய்தார். குறை தீர்க்கும் குமரவேல் இல்லையே என வருந்தினார்.

    அப்போது, முனிவரே உமது சிவபூஜையால் மகிழ்ந்தோம். எங்கள் இளைய குமாரன் இங்கிருந்து அரை காத தூரத்தில் மரகதவள்ளி என்ற தன் தாயின் நிறம் கொண்ட குன்றின் மேல் அருள்கிறார். நீ அந்த மரகத கிரிக்குச் சென்று மேற்கு நோக்கி உள்ள இளம்குமரக் கடவுளைக் கண்டு தொழுது உனது பெயரால் ஒரு சக்கரம் ஸ்தாபித்து பூஜிப்பாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்டது.

    முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதன்படி அங்கு சென்று குழந்தை வடிவில் முருகப்பெருமான் இருக்கக்கண்டு பேரானந்தம் அடைந்து மானசீகமாக பூஜை செய்தார். பின் இறைவனை மனதில் நிறுத்தி தவம் மேற்கொண்டார்.

    நாக வடிவில் இறைவன் முனிவர் முன் தோன்றி, உமக்கு யாது வரம் வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு முனிவர், இறைவா நான் பூஜித்த இக்குன்று மரகதகிரி எனப் பெயர் பெற வேண்டும். தாங்கள் இளம் குமரனாக குழந்தை வடிவில் எழுந்தருளி அடியார்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும். நான் அமைத்த சக்கரம் என்றும் பிரகாசமாக இருக்க வேண்டும். மந்திரம் எந்திரம், மூர்த்தி, சானித்யம் சூரிய சந்திரன் உள்ளவரை இம்மலை சானித்யமாய் விளங்க வரமளிக்க வேண்டும் என வேண்டினார்.

    அவ்வாறே ஆகுக. கலியுகத்திலும் இம்மலையில் பல திருவிளையாடல்கள் செய்து அடியார் தம் குறைகளை தீர்த்தருள அனுக்கிரகம் செய்வோம் எனக்கூறி நாகம் மறைந்தது.

    21.07.1954 அன்று கோபி, புதுப்பாளையத்தை சேர்ந்த நிலக்கிழார் குப்புசாமி கவுண்டர் குமரனை வழிபட அங்கு வந்தார். முருகன் ஒருவனையே தன் இஷ்ட தெய்வமாக வழிபடும் அடியார் அவர்.

    அப்போது கருவறையில் ஒரு ஜோதி தோன்றியது. நான் பல காலம் இங்கு தனிமையில் வாடிக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ வசதி படைத்தவர்கள் இவ்வூரில் இருந்தாலும் என்னைக் கவனிக்க ஆள் இல்லையே? இன்று முதல் என்னைக் கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு என இளங்குமரன் இட்ட ஆணையை மானசீகமாக உணர்ந்து ஒரு கால பூஜையுடன் இறைப்பணி மீண்டும் தொடங்கியது.

    இன்று ஏழு கால பூஜையுடன், மிக பிரமாண்டமான கோவிலில் குகப்பெருமானுக்கு உகந்த திருவிழாக்களுடன், மற்ற தெய்வங்களுக்கான அனைத்து சிறப்பு தினங்களும் வெகு சிறப்பாக பச்சைமலை ஸ்ரீ பாலமுருகனின் திருவருளோடு நடைபெற்று வருகிறது.

    பச்சைமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ பாதவிநாயகர் ஆலயத்தில்ஆதி காலம் முதல் அனைத்து விழாக்கள் மற்றும் உற்சவங்களின் முதல் பூஜை பாதவிநாயகருக்கு தான். அரசுவேம்பு மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாதவிநாயகருக்கு பிரம்ம அதிகாலை முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி ஒரு குடம் நீர் ஊற்றி 108 முறை வலம் வந்து வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும், அனைத்து வினைகளும் தீரும்.

    முதல் திருப்பணி ஆரம்பித்த வருடத்தில் குப்புசாமி கவுண்டர் சிறப்பாக செயல்பட நிதியுதவி மற்றும் இதர வசதிகள் சரிவர கிடைக்கவில்லை. அன்றைய காஞ்சி மகா பெரியவரிடம் ஆசி பெற காஞ்சிபுரம் சென்றார்.

    தன் நிலைமையை கண்டு வியந்த மகா பெரியவர் தன்னிடம் வருபவர்கள் சொந்த பிரச்சினைகளுக்காக ஆசி வேண்டி வருவர், ஆனால் நீங்கள் முருகன் ஆலயம் அமைக்க எண்ணி ஆசி வேண்டி வந்துள்ளீர்கள். அந்த குமரன் அருளால் நிச்சயம் அருமையான கோவில் அமையும் என ஆசி வழங்கினார்.

    ஆனை முகத்தோனுக்கு ஒரு யாகம் நடத்தி மிகப்பெரிய யாகம் ஒன்றை குப்புசாமி கவுண்டர் நடத்தினார். அன்று ஆரம்பித்த திருப்பணி இன்று வரை பல மடங்கு வளர்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அன்று முதல் அனைத்து முக்கிய விசேஷங்களும் முழு முதற் கடவுளின் யாகத்துடன் தொடங்குகிறது. அச்சமயம் பக்தர்கள் விடாது தண்ணீர் ஊற்றி வழிபடுவர். இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மலை ஏறும் முன் ஸ்ரீ பாத விநாயகரையும் வணங்கி மலை ஏறத்தொடங்குவர்.

    ஒருமுறை இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர் மீண்டும் மீண்டும் இந்த அழகு முருகனால் இங்கு வர தூண்டப்படுகின்றனர். 

    • ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார்.
    • லட்சுமி நரசிம்மர் புன்னகையுடன் விளையாடினார்.

    சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார். எந்த காரியமாக இருந்தாலும் நரசிம்மரிடம் சம்மதம் (பூ போட்டு பார்த்தல்) கேட்டுவிட்டுத்தான் செய்வார். இவரிடம் லட்சுமி நரசிம்மர் கொஞ்சம் விளையாடி பார்த்தார்.

    அவரது பையனுக்கு கல்லூரி அட்மிஷனுக்கு அலைந்து கொண்டிருந்த நேரத்தில், இன்னொரு பக்தர் இவரிடம் அறிமுகம் ஆனார். அவர் கல்லூரி அட்மிஷன் விசயத்தில் விவரம் தெரிந்தவர். ஆனாலும் பணத்தாசை. எனவே இந்த அட்மிஷனில் முதலாம் வருடம் இருந்து பெரிய தொகை பெற்றுக்கொண்டு அட்மிஷன் வாங்கித் தருவதாக வாக்களித்தார்.

    வழக்கப்படி பையனின் தந்தை லட்சுமி நரசிம்மரிடம் பூப்போட்டு பார்த்தார். மல்லிகை பூ வந்தால் சரி, அரளிப்பூ வந்தால் வேண்டாம் என்ற நியதியில். லட்சுமி நரசிம்மர் இங்கு தான் புன்னகையுடன் விளையாடினார். சரி என்று மல்லிகை பூவே வந்தது.

    தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பணத்தை கொடுத்துவிட்டு அட்மிஷனுக்காக காத்துக்கொண்டு இருந்தார். காலம் கடந்து ஏமாந்தது தெரியவந்தது. பெருமாளே விளையாடி விட்டானே என்று நொந்து கொண்டார். இருப்பினும் கோவிலுக்கு வருவதை நிறுத்தவில்லை.

    சுமார் ஒரு வாரம் கழித்து பணம் வாங்கிய பெரிய மனிதர் அடித்து கட்டிக்கொண்டு பெருமாள் காலடியில் விழுந்தார். அவருக்கு ஒரு கனவு வந்ததாம். அதில் ஒரு சிம்மம் அவரை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலை நோக்கி துரத்திக்கொண்டு வந்ததாம். மனிதர் அப்படியே அரண்டு போய் பணத்தை கொண்டுவந்து பணம் தந்தவரிடம் கொடுத்து சென்று விட்டார்.

    ஒரு கேள்வி அனைவரது மனதிலும் தோன்றும். பூ கட்டி பார்த்தபோது வேண்டாம் என்று பெருமாள் காண்பித்து இருக்கலாமே? ஆனால் அந்த பணம் பெற்று ஏமாற்ற நினைத்தவரை திருத்தி நல்வழிப்படுத்த முடியாதே? அதற்குதான் இந்த விளையாட்டு.

    • பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.
    • மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்.

    மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.

    சிங்க தலையும், மனித உடலும் கொண்ட இந்த அவதாரம், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தன் பக்தனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒரு நொடிப்பொழுதில் பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.

    நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து, தீபம் ஏற்றி வைத்து, நரசிம்மரை மனதார வேண்டிக்கொண்டு, தூய்மையான பக்தியில் எவரொருவர் தனக்குள்ள கஷ்டங்களை எல்லாம் தீர்க்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக நல்ல தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    பக்த பிரகலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லட்சுமி தேவியை மடியில் அமரவைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

    நரசிம்மர், விஷ்ணுவின் அம்சம் என்பதால் இவருக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இது தவிர, செவ்வரளி சிகப்பு செம்பருத்தி போன்ற பூக்களையும் நரசிம் மருக்கு சமர்ப்பணம் செய்யலாம்.

    நரசிம்மர் ஜெயந்தி தினத்தன்று மாலை உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்த நைவேத்தியத்தை நரசிம்மருக்கு படைக்கலாம். அவரவர் உடல் சூழ்நிலைக்கு ஏற்ப விரதமிருந்து, நரசிம்ம ஜெயந்தி விரதத்தை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டும்.

    "யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து

    பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்

    ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

    லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே"

    பொருள்: பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே, தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே, நினைத்த மாத்திரத்தில் உங்களுடைய பக்தர்களின் துன்பத்தை போக்குபவனே, லட்சுமி நரசிம்மனே. இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம். 

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.09 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. பவுர்ணமி இரவில் தொடங்கியதால் பகலில் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர்.

    தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாலும், நேற்று வைகாசி விசாகம் என்பதாலும் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். இதில் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

    கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர், குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது.

    பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்றாலும் மாலைக்கு பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (வியாழக்கிழமை) இரவு 7.44 மணி அளவில் நிறைவடைகின்றது. அதனால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    • காஞ்சிபுரம் குமரக்கோட்டம் ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கல்யாணம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-10 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி இரவு 7.48 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: விசாகம் காலை 9.43 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். காஞ்சி குமரக்கோட்டம் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம். நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி வெள்ளி குதிரை வாகனத்தில் சூர்ணோற்சவம். உத்தமர்கோவில் ஸ்ரீ சிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள், அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், காட்டுப்பருவூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் தேரோட்டம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை சாற்று வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-ஜெயம்

    மிதுனம்-விருத்தி

    கடகம்-லாபம்

    சிம்மம்-உயர்வு

    கன்னி-முயற்சி

    துலாம்- யோகம்

    விருச்சிகம்-பரிவு

    தனுசு- பிரீதி

    மகரம்-நன்மை

    கும்பம்-நட்பு

    மீனம்-வெற்றி

    • எந்தவித பிடிமானமும் இன்றி கத்தி பானை மீது அந்தரத்தில் நின்றது.
    • அம்மனின் கத்தி கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் மையப்பகுதியில் நுற்றாண்டுகள் பழமையான ராமலிங்க சவுடேஷ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இதற்காக கொட்டக்குடி ஆற்றில் இருந்து அம்மன் பாதத்தில் வைக்கப்பட்டிருந்த கத்தியை அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக்குதிரை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கோவிலுக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் பக்தர்கள் தங்கள் உடலின் மீது கத்தி போட்டு சென்றனர்.

    அதன்பின் அம்மனின் கத்தி கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் உடலில் கத்தி போட்டு ஆடி வந்த பக்தர்கள் ஆமணக்கு முத்துக்குவியல் வைக்கப்பட்டிருந்த பானை மீது புனித நீர்த்தங்களை ஊற்றி நிற்க வைத்தனர். அப்போது எந்தவித பிடிமானமும் இன்றி கத்தி பானை மீது அந்தரத்தில் நின்றது. இதனை பக்தர்கள் மெர்சிலிர்க்க கண்டு ரசித்தனர்.

    இந்த திருவிழாவை காண சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    • அரோகரா கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகமே நிரம்பி வழிகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ம் நாளான இன்று விசாகத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.

    வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையாகி சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை சுற்றி வருகிறார். அங்கு முக்கிய நிகழ்ச்சியான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடக்கிறது.

    தொடர்ந்து மகா தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    வைகாசி விசாகத் திருவிழாவில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்து கடலில் புனித நீராடி அரோகரா கோஷம் முழங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் விண்ணதிர அரோகரா கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகமே நிரம்பி வழிகிறது.

    • நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
    • முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முத லாம் படை வீடாக போற் றப்படும் திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப் படும் விழாக்களில் வைகாசி விசாகப் பெருவிழா முக்கி யத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்காண விசா கத்திருவிழா, கடந்த 13-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன்-தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். 9-ம் நாளான நேற்று வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நடைபெற்றது.

    10-ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். வெளியூர்களில் இருந்தும் நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடை பெற்றது. 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத் தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி னர்.

    அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் நேர்த்திக்கடனாக தலையில் வைத்து சுமந்து வந்த பாலில் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. அவ்வாறு அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வைகாசி விசாகத்தை யொட்டி மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் திருப் பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்தி ருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். நகரில் பல்வேறு பகுதிகளில் இருந் தும் பக்தர்கள் சாரை சாரையாக கோவிலை நோக்கி படையெடுத்தனர்.

    குறிப்பாக கோரிப்பாளை யம், சிம்மக்கல், நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆண்டாள்புரம், வசந்தநகர், பழங்காநத்தம், பைக்காரா, பசுமலை, மூலக்கரை, திரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையே தெரியாத அள வுக்கு பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். அதிலும் குழந்தை கள் பால்குடங்களை தலை யில் சுமந்து வந்ததை வழி நெடுகிலும் நின்று பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்றனர்.

    கடந்த வாரம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத் திய நிலையில் சில நாட்க ளாக பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கமின்றி சாலைகளில் பக்தர்கள் பாதயாத்திரை யாக கோவிலை நோக்கி சென்றனர். அதேபோல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிச னம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

    மேலும் கோவிலுக்குள் கூடுதலாக மின்விசிறி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அதி காலை 6 மணி முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவி லுக்கு செல்லும் வழிநெடுகி லும் சாலையின் இருபுறமும் பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானம், நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஆங் காங்கே மருத்துவம் உள் ளிட்ட அடிப்படை வசதிக ளும் செய்யப்பட்டிருந்தது.

    விழாவையொட்டி, மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்ப ரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து விண்ணதிர அரோ கரா கோஷம் எழுப்பினர். விழாவிற்கான ஏற்பாடு களை அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், பொம்ம தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர்.

    இதேபோல் முருகப்பெரு மானின் 6-வது படை வீடான அழகர்மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச் சோலை முருகன் கோவிலி லும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் வெள் ளத்தில் சிறப்பாக நடை பெற்றது. மலையடிவாரத் தில் இருந்து நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பால் குடம், பல்வேறு காவடிகள் எடுத்து மலைமேல் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத் தில் நீராடி பின்னர் பழ முதிர்ச்சோலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    • பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 14-ந் தேதி கொடியேற்று விழாவுடன் தொடங்கியது. பின்னர் பல்லக்கில் சாமி, மாட வீதியில் வீதி உலா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் இன்று (22-ந் தேதி) நடை பெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணி லட்சுமி நரசிம்மர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக கம்பீரமாக பூக்களால் அலங்கரிக்கப் பட்ட தேரில் எழுந்தருளி னார். பின்னர் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முக்கிய மாடவீதியில் தேரோட்டம் நடைபெற்று பின்னர் நிலையை அடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நரசிம்மர் அவதாரம் தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நாளை (23-ந் தேதி) காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்தவர் நரசிம்மர்.
    • ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர்.

    அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்த நரசிம்மர், ஒரு வேடனிடம் கட்டுண்டார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த சம்பவம் ஆதிசங்கரரின் வாழ்க்கை குறிப்புகள் பற்றிய தகவலில் உள்ளது.

    ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர். இவர் கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்று கொண்டிருந்த போது, மறுகரையில் இருந்த ஆதிசங்கரர் உடனடியாக வரும் படி அழைத்தார். குருவின் மீது கொண்ட பக்தியால் எதை பற்றியும் யோசிக்காமல் கரைபுரண்டு ஓடும் கங்கை நீரில் இறங்கி நடக்க துவங்கி விட்டார்.

    பிறகு தான் தெரிந்தது அவர் நீரின் மீது நடப்பதும், அதுவும் தாமரை மலர்கள் மீது கால் வைத்து நடந்து வந்ததும். குருவின் மீது இவர் கொண்ட பக்தியை பார்த்து நெகிழ்ந்து கங்கை தாயே தாமரை மலர்களை நீட்டி, அவரை தாங்கி பிடித்துள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு பத்மபாதமர் என்ற பெயர் ஏற்பட்டது.

    ஆதிசங்கரரின் சீடனான பத்மபாதன், நரசிம்ம சுவாமியின் தீவிர பக்தன். அவருக்கு நரசிம்மரை நேரில் காண வேண்டும் என வெகு நாட்களாக ஆசை. இந்த ஆசை சில நாட்களில் வைராக்கியமாக மாறியது. இதனால் நரசிம்மரை நோக்கி கடும் தவம் புரிவதற்காக காட்டிற்கு சென்றார்.

    அடர்ந்த காட்டில் வெகு நாட்களாக கண்களை மூடி, நரசிம்மரை வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேடன் ஒருவன், " யாரு சாமி நீ? பல நாட்களாக நான் உன்னை இங்கு பார்க்கிறேன். எதற்காக இங்கு வந்து கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறாய்?" என கேட்டான்.

    அவனுக்கு பதிலளித்த பத்மபாதன், "நான் நரசிம்மரை காண்பதற்காக தவம் செய்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே" என சொன்னார். " நரசிம்மமா? அப்படின்னா என்ன சாமி?" என அறியாமையுடன் கேட்டான் வேடன். "நரசிம்மம் என்றால் மனிதன் பாதி, மிருகம் பாதியான . அதை பற்றி சொன்னால் உனக்கு புரியாது" என சொல்லி விட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் பத்மபாதன்.

    ஆனால் வேடனோ, நீ சொல்வது போன்ற ஒரு மிருகத்தை இதுவரை நான் இந்த காட்டில் பார்த்தது கிடையாது. என்னவோ உன்னை பார்த்தால் எனக்கு பாவமாக உள்ளது. உனக்காக இன்று பொழுது சாய்வதற்குள் அந்த மிருகம் எங்கிருந்தாலும் பிடித்து, கட்டி இழுத்து வருகிறேன்" என சொல்லி விட்டு காட்டிற்குள் சென்றான் வேடன். மான், முயல் என எத்தனையோ கண்ணில் பட்டும் அவற்றை பொருட்படுத்தாமல், நரசிம்மத்தின் மீது அவனது சிந்தனை இருந்தது.

    பசி, தாகம் அத்தனையும் மறந்து காடு முழுவதும் தேடினான் கிடைக்கவில்லை. அந்தி சாயும் நேரமானது. தான் கொடுத்த வாக்குப்படி நரசிம்மத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என மனம் வருந்திய வேடன், இனியும் தான் உயிர் வாழ்வதில் அர்த்தம் கிடையாது என நினைத்தான்.

    கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் வாழ்வதை விட சாவது மேல் என நினைத்த வேடன், ஒரு பெரிய பாறையின் மீது ஏறி உயிரை விட தயாரானான். அவனது அர்ப்பணிப்பு, கடமை உணர்வு கண்டு உருகிப் போன ஸ்ரீமன் நாராயணன், நரசிம்மமாக வேடனுக்கு காட்சி கொடுத்தார்.

    தான் நாள் முழுவதும் தேடி அலைந்த நரசிம்மம் தன் முன் தோன்றியதை உண்டு உற்சாகமடைந்த வேடன், " மாட்டிக்கிட்டியா? உன்னை விடுவேனா பார்" என்று சொல்லி செடி, கொடிகளை வைத்து நரசிம்மரை கட்டி, பத்மபாதன் முன் அழைத்து வந்தான். பெரிய பெரிய வேதாந்திகளுக்கும், ரிஷிகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள், ஒரு வேடனின் அன்பிற்கு கட்டுப்பட்டு நின்றார்.

    "சாமி, இதோ நீ கேட்ட நரசிம்மம்" என காட்டினான். பத்மபாதனின் கண்களுக்கு நரசிம்மம் தெரியவில்லை. அந்தரத்தில் நின்ற செடி, கொடிகள் மட்டுமே சுற்றிக் கொண்டு நிற்பது தெரிந்தது.

    இதனால், கோபமடைந்த பத்மபாதன், "அடேய் பைத்தியமே... என்னுடைய அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் செடி, கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாயே" என ஏளனமாக சிரித்தார். ஆனால் கட்டில் இருப்பது நரசிம்மம் என வேடன் என பலமுறை சொல்லியும் பத்மபாதன் கண்ணிற்கு தெரியவே இல்லை.

    அப்போது ஒரு அசரீரி கேட்டது. "பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தேடி அலைந்தான். என்னை காணாததால் உயிரை விடுவதற்கும் தயாரானான். ஆனால் நீயோ, அலைபாயும் மனதுடன், நான் வருவோனோ, மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவம் செய்தாய். உன்னிடம் ஆணவமும் உள்ளது. அப்படி இருக்கும் போது உன் கண்ணிற்கு நான் எப்படி தெரிவேன்?" என கூறி மறைந்து விட்டார் நரசிம்மர்.

    ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன் தனக்கு காட்சி அளிக்காமல் போனதற்கும், வேடனைப் போல் தனக்கு உறுதியான நம்பிக்கை இல்லாமல் போனதற்கும் வெட்கி தலைகுனிந்தார். வேடனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு, நம்பிக்கையும், முழு அர்ப்பணிப்புமே உண்மையான பக்தி என்பதை புரிந்து கொண்டார் பத்மபாதர்.

    ×