என் மலர்
வழிபாடு
- திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர்.
- சித்திரை முதல் நாள் இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.
கோவிலின் முகப்புத் தோற்றம்
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பாபவிநாசர் -உலகாம்பிகை கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழாவின் 10-ம் நாளில் சிவபெருமான்-பார்வதி தேவி திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்த வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

முன் காலத்தில் தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திர நன்னாளில், சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது. திருமண கோலத்தில் சுவாமி-அம்பாளை தரிசிப்பதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் இமயமலை அமைந்துள்ள வடபகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது.
எனவே உலகை சமநிலைப்படுத்த அகத்திய முனிவரை அழைத்த பரமேஸ்வரன், அவரை உடனடியாக தென்திசை நோக்கி செல்லுமாறு கட்டளையிட்டார். இதனால் 'சுவாமி-அம்பாளின் திருமணக்காட்சியை காணும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடுமே' என்று அகத்தியர் வருந்தினார்.
அகத்தியரின் வருத்தத்தை உணர்ந்த ஈசன், `இங்கு நடைபெறும் திருமணக் கோலத்தில் பொதிகை மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்தில், சித்திரை மாதப்பிறப்பு நாளில், சித்திரை விசு தினத்தன்று நேரில் வந்து காட்சி கொடுப்போம்' என்று உறுதியளித்தார்.
இதையடுத்து அங்கிருந்து விடைபெற்ற அகத்தியரிடம், தாமிரபரணி தீர்த்தத்தை சிவபெருமான் வழங்கினார். அதை தன் கமண்டலத்தில் பெற்றுக் கொண்டு தென்பகுதிக்கு வந்து சேர்ந்தார் அகத்தியர்.
சித்திரை 1-ந்தேதி பாபநாசத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர். மேலும் அகத்தியரை பொதிகை மலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை பொதிகை மலையின் உச்சியில் இருந்து தாமிரபரணி நதியாக பாய விட வேண்டும் என்றும் ஈசன் கூறினார். அவ்வாறு பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் இப்பகுதி செழுமையுற்று திகழ்கிறது.
சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை அகத்தியருக்கு அளித்த நிகழ்வு, ஆண்டு தோறும் பாபநாசம் கோவிலில் 10 நாள் உற்சவமாக நடைபெறும். சித்திரை மாத முதல் நாள் அன்று இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.
இந்த ஆண்டுக்கான 10 நாள் உற்சவம், கடந்த 5-ந் தேதி தொடங்கியது. 10-ம் நாள் நிகழ்வான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி அளவில் சுவாமி-அம்பாள் இருவரும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

பாபநாசம் கோவிலில் அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அருளியது பற்றி, கல்வெட்டிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.
கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.
- பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சிக்குட்பட்ட அடவி சாமிபுரம் கிராமத்தில் மதனகிரி முனீஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தீர்த்தம் தெளித்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் உற்சவ மூர்த்தியை அமர்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்து தேரை நிலை நிறுத்தினர்.
இதில் விழா கமிட்டி தலைவர் சமபங்கிராம ரெட்டி, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் நீலம்மா ஜெயராமன், மல்லசந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேகா முனிராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர ஆர்த்தி, தொழில் அதிபர் சுரேஷ் பாபு, வசந்தகுமார், துரைசாமி, டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, ஊராட்சி மன்ற செயலாளர் விஸ்வநாத், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விழா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று இரவு நாடகம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கிராம தேவதைகளின் பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
- சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அருணசலேஸ்வரர் உண்ணாமுலை அம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாளித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் சம்பந்த விநாயகர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர். இதில் அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உறுப்பினர்கள் கோமதி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ஏராளமான பக்த்ர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் இன்று காலை முதல் கிரிவலம் சென்றனர்.
- அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்க கூடாது.
- தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள்.
அன்னதானம் செய்வதை செலவு என்று சொல்ல முடியாது. தானத்தைப் பெறுபவன் போதும், போதும் என்று சொல்வது அன்னதானத்தில் மட்டுமே. மற்ற எந்த பொருளை தானமாகப் பெற்றாலும் இன்னும் கொஞ்சம் தந்திருக்கலாம் என்றே எண்ணுவான்.
அன்னதானத்தின் போது மட்டுமே வயிறு நிறைந்துவிட்டது, போதும் என்று திருப்தி அடைவான். இத்தனை சிறப்பு வாய்ந்த அன்னதானத்தைச் செய்வது என்பது செலவுக் கணக்கில் சேராது. மாறாக கிடைத்தற்கரிய புண்ணியம் என்ற வரவுக்கணக்கில் சேரும்.
அட்சய திருதியை நாளுக்கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு உண்டு. பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.
கானகத்தில் தங்களைக் காணவரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் விருந்தோம்பல் விதியின்படி உணவளிக்க வேண்டும் அல்லவா?
உணவு சமைக்க என்ன செய்வது என்று மனம் கலங்கிய திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசிர்வதித்தார் சூரிய பகவான்.
க்ஷயம் என்றால் குறை என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாத என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை என்றும், சூரியன் அளித்த அந்த பாத்திரத்திற்கு அக்ஷய பாத்திரம் என்றும் பெயர் வந்தது.
அந்த நாளில் எது செய்தாலும் அந்த செயலானது மீண்டும், மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கும், தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் வாங்கிக் கொண்டிருப்போம் என்பதற்காக அட்சய திருதியை நாளில் ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, தங்களால் இயன்றவகையில் குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.
ஆனால், ஒரு விஷயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டுதான் தங்கம் வாங்க வேண்டுமே தவிர, கடன் வாங்கிச் செய்யக் கூடாது.
அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்கினீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் தங்களிடம் இருக்கும் பொருளைக் கொண்டுதான் அன்னதானம் செய்ய வேண்டுமே தவிர, கடன் வாங்கி செய்யக் கூடாது.
ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவக்ரகங்களில் தந்தைக்குரிய கிரகமான சூரியனும், தாய்க்குரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில், உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள். அதாவது, சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாள். அதாவது தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள்.
இந்த உலகை ஆளும் தாய்-தந்தையராகிய பார்வதியும் பரமேஸ்வரனும் பூரணமான சந்தோஷத்துடன் விளங்கும் நாள். இந்த நாளில் நாம் எந்த வரம் கேட்டாலும் குறைவில்லாமல் கிடைக்கும் அல்லவா? இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமையல்ல.
திரௌபதிக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை வழங்கியது அவர்கள் சாப்பிடுவதற்காக மட்டும் அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான்.
அட்சய திருதியை நாளின் இந்த உண்மையான அர்த்தத்தினைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற அன்னதானத்தையும், பொருளுதவியையும் செய்தோமேயாகில் நம்மிடமும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
கிடைத்தற்கரிய இந்த நாளில் இவ்வுலகில் வாழ பொருட்செல்வத்தினைச் சேர்ப்போம், நம்மால் இயன்ற அன்னதானம் செய்து அவ்வுலகத்திற்கான அருட்செல்வத்தையும் சேர்ப்போம்.
- மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை.
- தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன.
மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன.
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளில் இருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்ம கணக்குகளை நேர் செய்த பின்னர் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.
இதுபோன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்த பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.
- இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை உடையது.
- கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும்.
ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு `ராமநாமம்' ஜெபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது.
`ராமர் மிகச் சிறந்த வில்லாளி' என்று சொல்கிறார்களே. அப்படி அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், `சேதுவுக்கும், இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல், ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?' என்பதுதான் அந்த சந்தேகம்.
தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்துவிட்டது என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று, "வானரமே! உன் ராமனுக்கு வலிமை இல்லையா? அவன் சிறந்த வில் வீரன் என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், அவன் ஏன் வில்லால் பாலம் அமைக்காமல், வானரங்களின் உதவியை நாடவேண்டும்?" என்று கேட்டான்.
அர்ஜூனனின் இந்த ஆணவப் பேச்சால், தியானம் கலைந்தது அனுமனுக்கு. தன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை அறிந்து கொண்ட அனுமன் , அர்ஜூனனின் அகந்தையை ஒடுக்க முடிவு செய்தார்.
"சரங்களால் கட்டப்படும் சரப்பாலம் என் ஒருவனின் பாரத்தையே தாங்காது. எனில் ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தை எப்படித் தாங்கும்?" என்று அனுமன் கேட்டார். உடனே அர்ஜூனன். "ஏன் தாங்காது, என்னால் முடியும். நான் ஒரு பாலம் கட்டுகிறேன், உன் ஒட்டு மொத்த வானரக் கூட்டங்களையும் அது தாங்கும்" என்றான். மேலும், "பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து உயிர்துறப்பேன் என்றான். தன் காண்டீபத்தின்மேல் உள்ள நம்பிக்கையால்.
அனுமனோ, "நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும் உனக்கு அடிமையாக இருக்கிறேன்" என்கிறார். போட்டி தொடங்கியது.

அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத்தொடங்கினான். அனுமனோ ஓர் ஓரத்தில் அமர்ந்து 'ராம நாமம்' ஜபித்துக் கொண்டிருந்தார். பாலம் கட்டி முடித்தான் அர்ஜூனன்.
அனுமன் அதன் மீது ஏற ஆரம்பித்தார். முதல் அடியை எடுத்து வைத்த கணமே பாலம் சுக்குநூறானது. அனுமனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி. அர்ஜூனனோ அவமானத்தில் தலை குனிந்தான். "போரில் எப்படியாவது வெல்ல வேண்டும். என் சகோதரர்களை காப்பாற்ற வேண்டும் என்று பாசுபதாஸ்திரத்தை தேடி வந்தேன். ஆணவத்தால் வானரத்திடம் தோற்றுவிட்டேன். கிருஷ்ணா, நீதான் என்னை மன்னிக்க வேண்டும்" என்றவாறு வேள்வித் தீ வளர்த்து அதில் குதிக்கத் தயாரானான்.
அனுமன் எவ்வளவோ தடுத்தும் அர்ஜூனன் கேட்கவில்லை. அப்போது ஒரு குரல் "இங்கே நடப்பது என்ன"? என்று கேட்டது. குரல் கேட்ட திசையில், இருவரும் பார்த்தனர். அந்தணர் ஒருவர் தென்பட்டார். இருவரின் அருகே வந்து நடந்தவற்றை கேட்டறிந்தார்.
பின்பு அவர், "எந்தவொரு பந்தயத்திற்குமே சாட்சி என்பது மிக அவசியமானது. சாட்சியே இல்லாமல் நீங்கள் இருவரும் செய்தது ஒருபோதும் பந்தயம் ஆகாது" என்றார். தொடர்ந்து, "நீ பாலம் கட்டு. இப்போது வானரம் அதை உடைக்கட்டும். பின்பு யார் பலசாலி என்பதை முடிவு செய்துகொள்ளலாம்" என்றார். அர்ஜூனனும், அனுமனும் ஒப்புக்கொண்டனர்.
'போனமுறைதான் தோற்றுவிட்டோம். எனவே இந்த முறை கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே கட்டுவோம்' என்று முடிவெடுத்தான் அர்ஜூனன். எனவே 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஜபித்துக் கொண்டே பாலம் கட்டிமுடித்தான். சென்ற முறையே எளிதாக வென்றுவிட்டோம், இந்த முறையும் வென்றுவிடலாம் என்ற கர்வத்தோடு 'ராம நாமம்' சொல்லாமல் பாலத்தில் ஏறினார் அனுமன்.

பாலம் அப்படியே இருந்தது. ஓடினார், குதித்தார் பாலம் ஒன்றுமே ஆகவில்லை. பரிதாபத்தோடு நின்ற அனுமனைப் பார்த்து அர்ஜூனன் "பார்த்தாயா, எங்கள் கண்ணன் மகிமையை, இப்போது சொல் எங்கள் கண்ணன்தானே வலிமையானவர்?" என்று கேட்டான்.
அர்ஜூனனின் இந்தக் கேள்வி அனுமனுக்கு மேலும் குழப்பத்தைத் தந்தது. அந்தணர் அருகே வந்து, "யார் நீங்கள்?" என்று கேட்டான். அந்தணரின் உருவம் மறைந்து பரந்தாமன் காட்சி தரவே, இருவரும் அவர் கால்களில் விழுந்து ஆசி பெறுகின்றனர். பகவான் வாய்திறந்தார் "நீங்கள் இருவருமே தோற்கவில்லை வென்றது கடவுள் பக்தியும், நாமஸ்மரணையும் தான்.
இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை உடையது. அர்ஜூனன் முதல்முறை பாலம் கட்டும்போது, தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற ஆணவத்தோடு பாலம் கட்டினான். அனுமனோ எப்படியாவது வெல்ல வேண்டும் என்று ராமநாமத்தை ஜெபித்தான். எனவே அனுமனின் வெற்றி ராமநாமத்தால் உறுதியானது.
மறுமுறை போட்டி நடந்தபோது, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமனோ தன் பலத்தை நம்பி, இறைவனை நாடாமல் தோற்றான். எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே" என்றார். கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும். எனவேதான் தேவையற்ற சந்தேகம் தோன்றி அனுமனை சீண்டினான் அர்ஜூனன். அப்போதுதான் தான் சீண்டிய வானரம் அனுமன் என்பதை அறிந்தான் அர்ஜூனன். உடனே அனுமனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

உங்கள் இருவரின் பக்தியும் எல்லையற்றது. ஆனால், இறைவன் ஒருவன் தான் என்பதை உணர மறந்துவிட்டீர்கள். இதை உணர்த்தவே இந்த நாடகம் என்று சொல்லி இருவருக்கும் ஆசி வழங்கி மறைந்தார் பகவான் கிருஷ்ணன்.
- ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) சூரிய, சந்திர மண்டல காட்சிகளும் 16-ந்தேதி அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், அன்னவாகன காட்சிகள் நடக்கிறது. 17-ந்தேதி கைலாச வாகன புஸ்ப விமானம் நிகழ்ச்சி நடக்கிறது.
18-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் கரிவரதராஜ பெருமாள் கோவில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 63 நாயன்மார்கள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
19-ந்தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், வெள்ள யானை வாகன காட்சி நடைபெற உள்ளது. 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 21-ந்தேதி சிறிது தொலைவு தேர் இழுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது.
மீண்டும் 22-ந்தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கப்படுகிறது. 23-ந்தேதி அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரோட்டம் நடைபெறுவதற்காக பெரிய தேர் மற்றும் சிறிய தேர்கள் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
சோபகிருது முடிந்து இன்று குரோதி வருடம் பிறந்ததைத் தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
குரோதி வருட தமிழ்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அடிவாரம், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் வரை ஆன போதிலும் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இதே போல் திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கும், அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட நாணயங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து நாணயங்களையும், பிரசாதங்களையும் பெற்றுச் சென்றனர்.
- சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர்.
- சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.
விறன்மிண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அடியார்கள் மீது அன்பும், பக்தியும் விறன்மிண்ட நாயனார் கொண்டிருந்ததால், சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.
சேரநாடு என்று அழைக்கப்படும் மலைநாட்டில் திருச்செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளராக அவதரித்தவர் விறல்மிண்ட நாயனார். திருச்செங்குன்றூர் நீர் வளமும், நில வளமும், மலை வளமும் நிரம்பி வேளாண்மைக்கு சிறந்ததாக விளங்கியது.
விறன்மிண்டர் திருநீறும், உருத்திராக்கமும் அணிந்த சிவப்பரம்பொருளிடம் மாறாத பக்தி கொண்டிருந்தார். சிவனிடத்தில் மட்டுமில்லாது சிவனடியார்களிடத்தும் பெரும் பக்தியும், மரியாதையையும் கொண்டிருந்தார்.
அவர் இறைவழிபாட்டிற்கு சிவாலயம் செல்லும்போது ஆலயத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் சிவனடியார்களை வணங்கி, பின்னர் ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இறைவனுடைய திருவருள் சிறப்பை எல்லோரும் உணரும்படி தம்முடைய ஒழுக்கத்தின் சிறப்பால் வெளிப்படுத்துபவர்கள் சிவனடியார்கள். ஆதலால் அரனின் அடியார்களின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் விறல்மிண்டர்.
ஒருசமயம் சேரநாட்டு திருத்தலங்களை வணங்கியபின், சோழநாட்டு திருதலங்களை வழிபடும் நோக்கில் சோழநாட்டிற்கு வந்திருந்தார் விறன்மிண்டர்.
ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டு வந்த நிலையில் திருவாரூரை அடைந்தார் விறன்மிண்டர்.
திருவாரூரில் சிவனடியார்கள் குழுமி இருக்கும் இடத்திற்குப் பெயர் தேவாசிரியர் மண்டபம். அம்மண்டபம் தியாகேசர் கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்தது.
திருவாரூரை அடைந்த விறன்மிண்டர் முதலில் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கி மரியாதை செய்துவிட்டு கோவிலுக்குள் சென்று தியாகேசரை வழிபட்டார்.
பின்னர் மீண்டும் தேவாசிரிய மண்டபத்திற்குள் வந்து சிவனடியார்களிடம் அளாவிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வன்தொண்டரான சுந்தரர் வீதிவிடங்கரை வழிபட வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை மனதினால் வழிபட்டுவிட்டு ஒதுங்கி சென்றார்.
அதனைக் கண்ட விறன்மிண்டர் அருகில் இருந்தோரிடம் யார் என விசாரித்தார். அவரும் ஆரூர் பெருமானின் அருளால் பரவை நாச்சியாரை மணந்து இங்கே இருக்குமாறு பணிக்கப்பட்ட சுந்தரர். இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் செல்கிறார் என்று கூறினார்.
"இவ்வளவு பெரியவர் அடியார் திருக்கூட்டத்தை வணங்காது செல்கிறாரே? இவரே இப்படிச் சென்றால் அடியார்களிடம் யார் மதிப்புடன் நடப்பார்கள்? அடியார்களை மதிக்காமல் செல்லும் வன்தொண்டரைப் புறக்கணிக்கிறேன்" என்றார் விறல்மிண்டர். "அவர் ஆரூரானின் அருளுக்குப் பாத்திரமானவர்" என்றனர் அருகில் இருந்தவர்கள்.
விறன்மிண்டர் கூறியவை யாவற்றையும் கேட்ட சுந்தரர் 'இறைவனை வழிபடுவது எளிது. அடியர்களை வழிபடுவது அரிது.
அடியவர்களை வழிபட தகுதி மிகுதியானதாக இருக்க வேண்டும். ஆதலால்தான் அடியவர்களை நான் மனதிற்குள் வழிபட்டு ஒதுங்கிச் சென்றேன்' என மனத்திற்குள் கவலை கொண்டவராக தியாகேசரரை அடைந்தார்.
"இறைவா, நான் அடியர்களுக்கு அடியவானாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்" என்று மனதிற்குள் பிராத்தித்தார் சுந்தரர்.
அதனைக் கண்ட விறன்மிண்ட நாயனார் மகிழ்ந்தார். பின் பலகாலம் சிவதொண்டுகள் புரிந்து இறுதியில் சிவனை அடைந்து சிவனாரின் பூதகணங்களின் தலைவரானார்.
விறன்மிண்டர் சுந்தரரையும், வீதிவிடங்கரையும் புறக்கணித்தால் திருத்தொண்டர் தொகையை சுந்தரர் பாடினார். பெரியபுராணம் என்னும் மரத்திற்கு திருத்தொண்டர் தொகை விதை எனில் விறன்மிண்டரின் செயல் அதற்கு மழை என்றால் மிகையாகாது.
விறல்மிண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரமான இன்று கொண்டாடப்படுகிறது.
- கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உண்டு.
- இஷ்டதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
இன்று தமிழ்ப் புத்தாண்டு. சோபகிருது வருடம் நம்மைவிட்டு விலகிவிட்டது. இன்றுமுதல் குரோதி வருடத் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள். பொதுவாகவே, தமிழ் புத்தாண்டு தினத்தன்று கோயில்களிலும் வீட்டுப்பூஜையிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உண்டு. இதை "பஞ்சாங்கப் படனம்'' என்று சொல்வார்கள்.
முந்தைய நாள் இரவே பூஜை அறையில் மங்கலப் பொருள்களான வெற்றிலை பாக்கு, புஷ்பம், முக்கனிகள், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், அரிசி, பருப்பு, வெல்லம், கண்ணாடி முதலிய பொருள்களை பரப்பிவையுங்கள். அடுத்த நாள் காலை எழுந்து குளித்துவிட்டு முதன்முதலாக பூஜை அறையில் இந்த மங்கலப் பொருள்களை பார்ப்பதன் மூலமாக அந்த வருடம் முழுக்க நமக்கு மங்கலங்களாக இருக்கும். இதனை "சித்திரை விஷூ'' என்பார்கள்.
உங்கள் இஷ்டதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அன்று வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள். மாதப்பிறப்பை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும். அன்றைய தினம் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, பாயசம், நீர்மோர் போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.
- இன்று தமிழ் வருடப் பிறப்பு.
- மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாத்தியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை 1 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி மாலை 4.47 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: திருவாதிரை நாளை விடியற்காலை 5.55 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று தமிழ் வருடப் பிறப்பு. சஷ்டி விரதம். மாவூற்று ஸ்ரீ வேலப்பர் திருவிழா. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாத்தியருளல். திருச்சி ஸ்ரீ உச்சிப்பிள்ளையார் பாலபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கடமை
ரிஷபம்-கனிவு
மிதுனம்-பரிசு
கடகம்-லாபம்
சிம்மம்-வெற்றி
கன்னி-நன்மை
துலாம்- சுகம்
விருச்சிகம்-கவலை
தனுசு- ஆதரவு
மகரம்-உவகை
கும்பம்-வெற்றி
மீனம்-பண்பு






