என் மலர்
வழிபாடு
- வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழா.
- நாட்டார்கள் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமையாக கொண்டு சுற்றி உள்ள 58 கிராமங்கள் இணைந்து வெள்ளலூர் நாடு என பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளலூர்நாடு வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி என 5 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மூண்டவாசி, வேங்கைப்புலி, சமட்டி, நைக்கான், சாவடைதாங்கி, வெக்காளி, சலிப்புளி, திருமான், செம்புலி, நண்டன்கோப்பன், பூலான் மலவராயன் என 11 கரைகளாக மக்கள் வாழ்கின்றனர்.
ஆண்டுதோறும் இங்கு தமிழ்ப்புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி வெள்ளலூர் கருங்கல் மந்தையில் நாட்டார்கள் அனைவரும் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம். அதாவது வீடுதோறும் வெற்றிலைகளை வழங்கி அதை வைத்து வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழாவாகும்.
அதன்படி நேற்று வெற்றிலைப்பிரி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கருங்கல் மந்தை முன்பு நாட்டார்கள் வழிபாடு செய்தனர். பின் அருகில் உள்ள சுனை பாறையில் தமிழ் எழுத்து ப வடிவில் அம்பலகாரர்களும், இளங்கச்சிகளும், பொதுமக்களும் அமர்ந்தனர்.
குவித்து வைக்கப்பட்ட வெற்றிலை கட்டுகளை பிரித்து முதலில் விவசாய பணிகளில் முக்கிய உதவிகள் செய்பவர்களுக்கு வெற்றிலைகள் வழங்கப்பட்டன. பின்னர் பாரம்பரிய வழக்கப்படி 11 கரையினருக்கும், 5 மாகாணத்திற்கும் வெற்றிலை கட்டுகள் வழங்கப்பட்டு அந்த வெற்றிலைகள் ஆங்காங்கே தனித்தனியாக 56 கிராமத்தினர்களும் வெற்றிலைகளை வாங்கி சென்றனர்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் அந்த வெற்றிலைகளை தங்களுடைய வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்கி கலப்பை, மண்வெட்டி, நெல் அளக்க பயன்படும் மரக்கால், கடப்பாரை ஆகியவற்றின் முன்பு வைத்து வழிபட்டனர். பின்னர் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்ட இயற்கை உரங்களை எடுத்து அவரவர்களின் வயல்களில் கொட்டி நிலத்தை உழுது விவசாய பணிகளை தொடங்கினர். இவ்வாறு செய்வதால் ஆண்டுதோறும் மழை பெய்து, செல்வம் செழித்து விவசாயம் நன்றாக நடைபெறும் என்பது இப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கை ஆகும்.
- சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 25-ந்தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது.
திருவையாறு:
திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இதில் தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தேரோட்டம்
விழாவில் வருகிற 18-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.
22-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர்வீதி உலா வருகிறது. அப்போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேர் நான்கு வீதி வந்து நிலையடி வந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
சப்தஸ்தான பெருவிழா
விழாவில் 25-ந்தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.
பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
26-ந்தேதி தில்லைஸ்தானம் பல்லக்குகளுடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.
விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- 16 நாட்களுக்குள் கரும காரியத்தினை சிரத்தையுடன் செய்து முடிப்பர்.
- கசப்புத்தலை நாளில் கறி எடுக்க வேண்டும்.
இறந்தவருக்கான கரும காரியத்தினை செய்து முடித்த மறுநாள் கசப்புத்தலை நாள் என்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் சொல்வது வழக்கம். இந்த நாளை சுபஸ்வீகரண நாள் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதாவது, ஒருவர் இறந்தவுடன் அவரது வாரிசுகளும், பங்காளிகளும் பத்துநாள் தீட்டு என்ற பெயரில் தலையில் எண்ணெய் தடவாது, நெற்றியில் மங்கல சின்னங்களை அணியாது இறந்தவரின் நினைவாகவே இருப்பார்கள்.
இந்த நாட்களில் உணவுப் பழக்கத்திலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். பத்து இரவுகள் முழுமையாக கடந்த பின்னர் அவரவருக்கு உரிய சம்பிரதாயப்படி 11 முதல் 16 நாட்களுக்கு உள்ளாக கரும காரியத்தினை சிரத்தையுடன் செய்து முடிப்பர்.
கரும காரியத்தினை செய்து முடித்த மறுநாளில் இருந்து இறந்தவரின் வாரிசுகளும், பங்காளிகளும் வழக்கம்போல் தங்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் மற்ற வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் சுபஸ்வீகரணம் என்ற நிகழ்வினைச் செய்வார்கள். அதாவது, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, ருசிமிகுந்த நல்ல உணவுகளை உட்கொண்டு புத்துணர்ச்சியோடு வழக்கமான பணியில் ஈடுபடுவர்.
தீட்டு காப்பவர்களின் தலை காய்ந்துபோய் வறட்டு நிலையில் இருக்கும் என்பதால் இந்த நாளில் நன்றாக எண்ணெய் தேய்த்து தலைமுடியினை கசக்கிக் குளித்து பார்ப்பவர்களின் கண்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நாளை கசப்புத்தலை நாள் என்று அழைத்தார்கள். கசப்புத்தலை நாளில் கறி எடுக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.
அதாவது, எவ்வாறு வைகுண்ட ஏகாதசியின்போது விரதம் இருந்து மறுநாள் துவாதசி நாளில் 21 வகையான காய்கறிகளுடன் உணவினை உட்கொள்கிறோமோ, அதேபோல விதவிதமான காய்கறிகளை அந்த நாளில் உண்டு மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லி வைத்தார்கள்.
ஆனால், இந்த சொல்வழக்கு காலப்போக்கில் மருவி, கசாப்புக்கடையில் தலைக்கறி எடுக்க வேண்டும் என்பதால் இந்த நாளுக்கு கசப்புத்தலை என்று பெயர் என்றும், இந்த நாளில் கட்டாயம் அசைவ உணவினை சாப்பிட வேண்டும் என்றும் ஒரு சிலர் மாற்றுக் கருத்தினை பரப்பி வைத்துள்ளார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று.
கசப்புத்தலை நாளில் கட்டாயம் கறி என்று சொல்லப்படும் அசைவ உணவினைச் சாப்பிட வேண்டும் என்று நம் பெரியவர்கள் யாரும் விதிமுறையை வகுக்கவில்லை. சுபஸ்வீகரணம் என்று சாஸ்திரம் சொல்வது சுபத்தினை அதாவது, மங்களகரமானவற்றை சுப ஸ்வீகரணம் செய்துகொள்ள வேண்டும். அதாவது, ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இறந்தவரைப் பற்றிய துக்க நினைவுகளை மறந்து, அந்தநாள் முதல் வழக்கம்போல் உலக வாழ்வினில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே கசப்புத்தலை அல்லது சுபஸ்வீகரண நாள் ஆகும். அதனை விடுத்து கசப்புத்தலை நாளில் அசைவ விருந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்வது அபத்தமான வாதம்.
- சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.
ராமேசுவரம்:
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆற்காடு நவாப் பஞ்சாங்கம், சமஸ்தான அரண்மனை பஞ்சாங்கம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-
தங்கம் விலை ஏற்றம்
மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்று நோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சினை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.
பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.
விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.
எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றம் செய்து தலைமறைவாக வாழ்ந்தவர்கள் இச்சமயம் மாட்டிக் கொள்ள நேரும்.
அரசியல் மாற்றம்
அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.
இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்.
புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.
- 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது.
- பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் தங்க மூஷிக வாகனத்திலும் அருள்பாலித்தனர். காலை 9.30 மணிக்கு அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவர் புறப்பாடாகி கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினர்.
தீர்த்தவாரி உற்சவம்
அங்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதர் குருக்கள் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவரை எடுத்துச் சென்று திருக்குளத்தில் 3 முறை மூழ்கி தீர்த்தவாரி உற்சவத்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு நின்ற பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் புதிய புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன் செட்டியார், பூலான்குறிச்சி சுப.முத்துராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
- பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
- விடுமுறை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விழா நாட்களிலும், விடுமுறை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் சித்திரை மாதம் 1-ம் நாளான நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி மூலவருக்கும், சம்பந்த விநாயகருக்கும் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பஞ்சாங்கம் வாசித்தல்
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்து பஞ்சாங்கத்தை வாசித்து இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ் புத்தாண்டையொட்டி நகரத்தார் சார்பில் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுக்கப்பட்டது. இதில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்தனர். மேலும் கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தாிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை பக்தர்கள் பலர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
ஆரணி
ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சப்த மாதாக்களுக்கும், அரியாத்தம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல புதுக்காமூர் பகுதியில் உள்ள குழந்தை வரம் அருளும் பெரியநாயகி சமேத புத்திர காமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் வரதராஜ பெருமாள் கோவில், பாப்பாத்தி அம்மன் கோவில், ஆண்டாள் அம்மன் கோவில், கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பூமிநாதர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் நகராட்சி அருகே உள்ள வீரஆஞ்சநேயர் கோவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்சதீப விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அகல் தீபம் ஏற்றி லட்சதீப வழிபாடு செய்தனர்.
போளூர்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போளூரில் உள்ள கைலாசநாதர் கோவில், சோமநாத ஈஸ்வரர் கோவில், நற்குன்று பாலமுருகன் கோவில், குன்னத்தூர் தண்டபாணி முருகர் கோவில் ஆகிய கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு ஆகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு, வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வருகை எதிரொலியாக படிப்பாதை, யானைப்பாதை, சன்னதி வீதி, கிரிவீதிகளில் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையத்திலும் கூட்டம் காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தமிழப் புத்தாண்டையொட்டி முருகன் கோவில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமான் சந்நியாசி அலங்காரத்திலும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரத்திலும் அருள்பாலித்தார். பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் செய்யப்பட்டது.
பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பின்னர் உச்சிகால அபிஷேகமும், 10.30 மணிக்கு சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
இதைமுன்னிட்டு திருச்செந்தூரில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர். கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள்.
- ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது.
மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்டு விட்டார் பிதாமர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது. உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர், அர்ச்சுனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார். மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக, அர்ச்சுனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கயை வரவழைத்துக் கொடுத்தான். இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது.
உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை. பாண்டவர்கள், கவுரவர்கள், கிஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
பீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர்.
அவரைப் பார்த்த பீஷ்மர், `மகரிஷியே.. என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் தான் என்ன?' என்றார்.
அதற்கு வியாசர், `பீஷ்மரே! ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் செய்வதுதான் தீமை என்றில்லை. தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.'
பீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது, தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரித்த போது, சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர். அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர், `இதற்கு என்ன பிராயச்சித்தம்?' என்று வியாசரிடம் கேட்டார்.
`பீஷ்மா! ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது. உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது.
என்றாலும், திரவுபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், தவறை தட்டிக் கேட்காத வாய், அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள், வாளை பயன்படுத்தாத உன் கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள், தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி' என்றார் வியாசர்.
அதையடுத்து பீஷ்மர், 'என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. எனக்கு சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்' என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார்.
வியாசர், எருக்க இலை ஒன்றைக் காட்டி, 'பீஷ்மா! எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் `அர்க்க பத்ரம்'. அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்தியாகும்' என்றார்.
அதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி, ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.
அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், 'வருந்தாதே தருமா! ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும்.
ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்' என்று ஆறுதல் சொன்னார்.
ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறையும் ஏற்பட்டது.
- சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
- ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் தந்தப் பல்லக்கில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை 2 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி மாலை 5.01 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: புனர்பூசம் (முழுவதும்)
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஆறுமுகமங்க லம் ஆயிரத்தொன்று விநாயகர் புறப்பாடு. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் தந்தப் பல்லக்கில் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-அன்பு
கடகம்-பணிவு
சிம்மம்-பயணம்
கன்னி-தெளிவு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-உயர்வு
தனுசு- பரிசு
மகரம்-செலவு
கும்பம்-வரவு
மீனம்-தாமதம்
- விழாக்கள் பெண் தெய்வங்களை மையப்படுத்தியே கொண்டாடப்பட்டுள்ளன.
- சூரிய பகவானுக்கு நன்றி கூறி திருவிழாவை தொடங்குகின்றனர்.
தமிழ் மக்கள் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு திருவிழா கொண்டாடி, அந்த மாதத்தின் சிறப்புகளை உலகறிய செய்துள்ளனர். அப்படி கொண்டாடப்படும் திருவிழாக்கள், காரண காரியம் இல்லாமல் நடைபெறுவதில்லை. சித்திரை விஷூ இப்போது கேரளாவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான திருவிழாவாக இருந்தாலும், ஆரம்ப காலங்களில் நம் தமிழ் பேசும் மக்களால் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்த சித்திரை விஷூவானது ஆரம்ப காலங்களில் நம் மக்களால் `அறுவடை திருவிழா' என்றுதான் அழைக்கப்பட்டது.
ஆரம்ப காலங்களில் நம் மக்கள் இரண்டு பருவங்களில் விவசாய அறுவடைகளை செய்து வந்துள்ளனர். அதில் ஆடி மாதம் விதை விதைத்து தை மாதம் அறுவடை செய்வது ஒரு பருவமாகும். புரட்டாசி மாதம் விதை விதைத்து சித்திரை மாதம் அறுவடை செய்வது இன்னொரு பருவமாகும். புரட்டாசி மாதமானது வைணவர்களின் மிக முக்கியமான மாதமாகும்.
இந்த மாதத்தில் விதை விதைத்து விவசாய வேலைகளை ஆரம்பிப்பது வைணவ கடவுளான பெருமாளின் முழு ஆசீர்வாதத்தோடு நடப்பதாக வைணவர்களின் முழு நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பயிரிடப்படும் பயிர்களின் அறுவடையானது சரியாக சித்திரை மாதம் பிறக்கும் பொழுது, இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இது போன்ற விழாக்கள் பெண் தெய்வங்களை மையப்படுத்தியே கொண்டாடப்பட்டு வந்துள்ளன. இந்த சித்திரை விஷூவும் பெண் தெய்வமான கொற்றவையை மையப்படுத்தியதுதான். கொற்றவை தெய்வமானது திருமாலின் பெண் அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்த விவசாய வேலைகள் நல்லபடியாக முடிந்ததற்காக முதலில் சூரிய பகவானுக்கு நன்றி கூறி திருவிழாவை தொடங்குகின்றனர்.
பிற்கால பாண்டியர் காலம் வரை கேரள பகுதியானது நம் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. அதனால் இந்த ஏப்ரல் மாத அறுவடையானது, நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிற்கால பாண்டிய பேரரசு தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்தவுடன் அனைத்து பகுதிகளும் தனித்தனியாக பிரிந்து, ஒவ்வொரு திருவிழாவும் அந்தந்த பகுதி சார்ந்த திருவிழாவாக மாற ஆரம்பித்தன.
அப்படித்தான் இந்த சித்திரை விஷூ திருவிழாவும். இன்று அறுவடை திருவிழா கேரள மக்களுக்கான ஒரு திருவிழாவாக மாறிப்போனது. சித்திரை விஷூ தற்போதும் கேரள மக்களாலும், பாலக்காடு தமிழர்களாலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.
- வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. தினந்தோறும் வள்ளி தெய்வ யானை சமேதராய் உற்சவர் முருகன் காலை, மாலை என இருவேளைகளிலும் புலி வாகனம், சிங்க வாகனம், வெள்ளி நாக வாகனம், ஆட்டுக்கிடாவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சித்திரை பிரம்மோற்சவ தொடக்க விழாவையொட்டி இன்று அதிகாலையில் மூலவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கு தங்க கவசம், பச்சைக்கல் மரகத மாலை. அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுகசாமி கோவிலில் இருந்து 1008 பால்குடங்கள் எடுத்து வந்தனர். இதில் கோவில் இணைஆணையர் ரமணி,அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் உஷாரவி,மோகனன். சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து காவடி மண்டபத்தில் சண்முகர் கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது.
- காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது. `விருப்பன் திருநாள்' என்றும் இந்தத் திருவிழா கூறப்படுகிறது. ஒரு வரலாற்று சம்பவத்தினால் இப்பெயர் வந்துள்ளது. தென்னகத்தை முற்றுகையிட்ட மாலிக்கபூர், திருவரங்கத்தில் இருந்து பெருமாளை 1310-ம் ஆண்டில் எடுத்துச் சென்றார். பின்னர் 1371-ம் ஆண்டில் விருப்பண்ண உடையார் என்னும் நாயக்கர் வம்சத்து மன்னரால் அந்த பெருமாள் மீட்டுக் கொண்டுவரப்பட்டது.

60 ஆண்டுகள் கோவிலில் இல்லாமல் இருந்த பெருமாள் மீண்டும் வந்தவுடன், சித்திரை மாதத்தில் அந்த பெருமாளை தேரில் வைத்து திருவீதி உலா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை, மன்னர் விருப்பண்ண உடையார் செய்தார். அதனால் இந்த சித்திரை தேர் திருவிழா `விருப்பன் திருநாள்' என்று பெயர் பெற்றது. சித்திரை மாதம் பவுர்ணமி அன்றுதான் திருவரங்கம் காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

புராணத்தில் முதலை வாயில் சிக்கிய யானை, 'ஆதிமூலமே' என்று பெருமாளை அலறி அழைக்க, பெருமாள் அந்த யானையை முதலை வாயில் இருந்து மீட்ட புராண கதையின் நினைவாக கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி இன்றும் நடந்து வருகிறது. கோவில் யானையை காவிரி ஆற்றிற்கு அழைத்து வந்து, வெள்ளியாலான முதலை கவ்வுவது போலவும், யானைக்கு நம்பெருமாள் மோட்சம் அளிப்பது போலவும் அந்த நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்படும்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். மஞ்சள் ஆடை அணிந்து, வேப்பிலை கட்டிக்கொண்டும், பால்குடம் எடுத்துக்கொண்டும், அலகு குத்தியும், அக்னிச் சட்டி ஏந்தியும், சாரை சாரையாக தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் ஈரத்துணியுடன் அருள் வந்து, ஆர்ப்பரித்து சென்று, மாரியம்மனை தேரில் கண்டு வழிபடும் பெரும் விழா இதுவாகும்.
மற்ற எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக சமயபுரத்தில் உற்சவ அம்மன் (பஞ்சலோக) திருவுருவம் 2 உள்ளது. சித்திரை தேருக்கு முதல்நாள் இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவதற்கு ஒரு உற்சவ அம்பாளும், மறுநாள் திருத்தேரில் பவனி வருவதற்கு ஒரு உற்சவ அம்மன் திருவுருவமும் இருப்பது, சமயபுரத்தில் மட்டுமே.
இதுபோல் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெறும். கோவில்களில் இசை, கூத்து, நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள், சித்திரையில்தான் இரவு முழுவதும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






