என் மலர்
வழிபாடு
- வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
- விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. வழக்கமாக தை மற்றும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.
இந்தநிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை, மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் சமேதராய் ஸ்ரீதேவி பூதேவி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோபுர தரிசனமும், 6 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த கருடசேவையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, பூந்தமல்லி, ஊத்து க்கோட்டை, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வீரராகவ பெருமாளை தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 21-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந்தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லாக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
- ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது. கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சேநயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமந்த வாகன சேவை நடக்கிறது. இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசல் அருகில் ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
திருப்பதி கோவிலில் நேற்று 67 ஆயிரத்து 294 பேர் சாமி தரிசனம் செய்தனர். 22,765 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவில் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் வருகிற 22-ந்தேதியும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் 23-ந்தேதியும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் 23-ந்தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
- பெருமாளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷமான சேவை நடைபெறும்.
- சேவைகள் வாராந்திர சேவைகள் என்று அழைக்கப்படுகின்றன.
திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விசேஷமான சேவை நடைபெறுகிறது. இந்த சேவைகள் 'வாராந்திர சேவைகள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்திய பக்தர்கள், சேவையில் பங்கு கொண்டு ஶ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமியின் அருளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும் தேவஸ்தான அலுவலகம் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொண்டு இவற்றில் கலந்து கொள்ளலாம்.
திங்கட்கிழமை - விசேஷ பூஜை
திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறும் முக்கிய சேவை 'விசேஷபூஜை' . இந்த சேவை கோயிலின் உள்ளே இருக்கும் கல்யாண மண்டபத்தில் ஶ்ரீதேவி, பூதேவி உடனுறை ஶ்ரீமலையப்ப சுவாமிக்கு நடைபெறுகின்றது.
பிரதி திங்கட்கிழமை நடைபெறும் இந்த சேவை 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தொடங்கப்பட்டு ஆர்ஜித சேவையாக நடைபெற்று வருகின்றது.
திருமலையான் ஆலயத்தில் இரண்டாவது அர்ச்சனை, இரண்டாவது நைவேத்தியம் நடைபெற்ற பிறகு மலையப்ப சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். வைகானச ஆகம் சாத்திர முறைப்படி ஹோமங்கள் நடைபெற்ற பின்னர், உத்ஸவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நிர்வகிக்கப்படுகிறது.. இந்த சேவையில் பங்கு பெறுபவர்களுக்கு பிரசாதம் அளிக்கப்படுகின்றது.
செவ்வாய்க்கிழமை - அஷ்டதள பாதபத்மாராதனம்
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு இரண்டாவது அர்ச்சனையாக 108 தங்கத் தாமரைகளால் மூலமூர்த்திக்கு நடைபெறும் அர்ச்சனை நிகழ்ச்சியே 'அஷ்டதள பாத பத்மாராதனம்' சுமார் 20 நிமிடம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
1984-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான பொன் விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஐதராபாத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் பக்தர் இதற்குத் தேவையான 108 தங்கத் தாமரைகளை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர் இது ஆர்ஜித சேவையாக அறிவிக்கப்பட்டது. 108 தங்கத் தாமரையால் அர்ச்சனை நடக்கும்போது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் எம்பெருமானை தரிசிக்கலாம்.
புதன்கிழமை - சஹஸ்ர கலசாபிஷேகம்
ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணிக்கு தங்கவாயில் முன்பு நடைபெறும் பிரதான சேவை 'சஹஸ்ர கலசாபிஷேகம்' போக ஶ்ரீநிவாச மூர்த்தியுடன் ஶ்ரீதேவி பூதேவி உடனுறை திருமலையப்பர் ஸ்வாமிக்கும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறும். 1511-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆதாரம் உள்ளது. தங்கவாயில் முன்பு நடைபெறும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகத்தில் ஆர்ஜித சேவைக் கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்குகொள்ளலாம். எம்பெருமானை தரிசித்து பிரசாதம் பெற்றுச் செல்லலாம்.
வியாழக்கிழமை - திருப்பாவாடை - நேத்ர தரிசனம்:
பிரதி வியாழக்கிழமைதோறும் வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டாவது அர்ச்சனைக்குப் பிறகு நடைபெறும் நிவேதனம் 'திருப்பாவாடை சேவை' ஆகும். இதை 'அன்ன கூடோத்ஸவம்' என்றும் கூறுவார்கள்.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு எம்பெருமான் மூலமூர்த்திக்கு அணிந்துள்ள ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து விடுவார்கள்.
பின்னர் பெருமாளுக்கு இடப்படும் திருநாமத்தின் அளவை நன்றாகக் குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படி செய்வார்கள்.
வெங்கடேசப் பெருமாளுக்கு எதிராக மலைபோன்று புளியோதரையை குவித்து வைப்பர். புளியோதரையுடன் ஜிலேபியையும், முறுக்கையும் வைத்து பூவினால் அலங்கரிப்பர். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள எம்பெருமானுக்கு நிவேதிப்பர்.
இச்சேவையில் ஆர்ஜிதம் செலுத்தும் பக்தர்களும் பங்கு கொள்ளலாம். இச்சேவையின் போது வேத பண்டிதர்கள் வேத பாராயணம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பின்னர் பக்தர்களுக்கு இச்சேவையுடன் ஸ்வாமி நேத்ர தரிசனமும் உண்டு.
பூவங்கி சேவை
பிரதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு எம்பெருமானுக்கு நடைபெறும் தோமாலை சேவையை 'பூவங்கி சேவை' என்பர். ஆனால், இந்தச் சேவை மட்டும் முழுமையாக ஏகாந்தமாக நடைபெறும். ஜீயர் ஸ்வாமிகள் எடுத்துக்கொடுக்க பூமாலையை அர்ச்சக ஸ்வாமிகள் எம்பெருமான் திருமேனியில் அணிவிப்பர். எம்பெருமான் பூவை ஆடையாக அணிந்திருப்பது போன்று அது காட்சியளிக்கும். இந்த சேவை ஆன பிறகு பிரதி வியாழக்கிழமை இரவு பக்தர்கள் இந்த அலங்காரத்தில் எம்பெருமானை தரிசிக்கலாம்.
வெள்ளிக்கிழமை அபிஷேகம்
ஶ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி மூலமூர்த்திக்கு ஒவ்வொரு பிரதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த வெள்ளிக்கிழமை அபிஷேகத்தை பகவத் ராமாநுஜாச்சார்ய ஸ்வாமிகள் துவக்கிவைத்துள்ளார். அவர், எம்பெருமானின் திருமார்பில் உறையும் 'தங்க அலர்மேல் மங்கை' உருவத்தை அலங்காரம் செய்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த அபிஷேகம் நடைபெறும்படிக்கு ஏற்பாடு செய்தார்களாம். இந்த சேவை பகவத் ராமாநுஜர் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.

ஆகாசகங்கை தீர்த்தத்தால் அபிஷேகம்
முற்காலத்தில் எம்பெருமான் நித்திய அபிஷேக சேவை கைங்கர்யத்தில் ஈடுபட்ட மகா பக்தர் திருமலைநம்பி வம்சத்தவர் கொண்டு வந்த குடத்தை முதலில் பக்தி பிரபத்தியோடு தங்கச் சங்கில் ஆகாசகங்கை தீர்த்தத்தை எம்பெருமான் சிரசின் மீது பொழிந்து ஹரி: ஓம் ஸஹஸ்ரசீர்ஷா: புருஷ: என்று புருஷசூக்தத்தினை தொடங்குவார். குலசேகரப்படிக்கு வெளியே உள்ள பண்டிதர்கள் புருஷசூக்தத்தினை ஜீயர்ஸ்வாமிகள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பிறருக்குக் கேட்கும்படி உச்சரிப்பர். இவர்கள் அபிஷேகம் நடைபெறும் வரையிலும் பஞ்சசூக்தங்களையும் சேவித்துக் கொண்டே இருப்பர்.
ஆகாசகங்கை தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்ற வரையிலும் சுவாமி திவ்யமங்கள மூர்த்தியைப் பார்த்து பக்தர்கள் அந்த அபிஷேகத்தை தாமே செய்வதைப் போன்று எண்ணி, மெய் மறந்து போவார்கள். புனுகு, கஸ்தூரி, ஜவ்வாது முதலான சுகந்த பரிமளத்துடன் ஆகாச கங்கை தீர்த்தத்தால் சுமார் ஒரு மணி நேரம் அபிஷேகம் நடைபெறும். அதன்பின்னர் மஞ்சளினால் சுவாமியின் திருமார்பில் உறைந்துள்ள மஹாலட்சுமிக்கும் இந்த அபிஷேகம் நடைபெறும்.
நிஜபாத தரிசனம்
பிரதி வெள்ளிக்கிழமை அபிஷேகத்துக்குப் பிறகு அபிஷேக சேவையில் பங்கு கொள்ளும் பக்தர்கள் எம்பெருமானை தரிசித்துச் சென்ற பின்னர் 'நிஜபாத தரிசனம்' தொடங்கும். ஸ்வாமியின் நிஜபாதத்தை எவ்வித கவசமும் இல்லாது தரிசிக்கலாம். இந்த தரிசனத்தில் மட்டுமே எம்பெருமானின் திருவடிகளை தரிசிக்க ஏதுவாகிறது. மற்ற நேரங்களில் அந்த திருவடிகளுக்கு தங்கக் கவசம் வேயப்பட்டிருக்கும்.
- 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்கு ராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய, அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறுகையில் ராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சி அளிக்கிறார். 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி பெருவிழா கடந்த (9-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை மங்கல இன்னிசையுடன் பல்லக்கிலும், மாலை வண்ண மின் விளக்குகள் ஒளிர இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர். தேரானது 4 ரத வீதிகளிலும் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) திருமஞ்சனமும், புஷ்பயாகமும், மறுநாள் 21-ந்தேதி ராஜ உபசார திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.
- அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம்.
- உதாரண புருஷராய் விளங்கியவர் ஶ்ரீராம சந்திரமூர்த்தி.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம். பூவுலகில் மனிதனாய் அவதரித்து, தர்மத்தின் பாதையில் நடந்து, ஓர் உதாரண புருஷராய் விளங்கியவர் ஶ்ரீராம சந்திரமூர்த்தி. பங்குனி மாத வளர்பிறை நவமியே ராமநவமியாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராம பகவான் நவமியை யொட்டி அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராமநவமி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாட்களுக்கு விஷ்ணு தலங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமருக்கு கோயில்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெறும். அதைத் தரிசித்தால் பாவங்கள் விலகும். மேலும், பல கோயில்களில், ராமபஜனைகள் நடைபெறும்.
ஸ்ரீராம நவமி நாளில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் கிடைப்பது உறுதி, நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம். வீட்டில் ஸ்ரீராமநவமி தினத்தில் வாசல், பூஜை அறை சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
சுவாமிக்கு நிவேதனமாக நீர்மோர், பானகம், பாயசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
- திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- ஸ்ரீசிவஞான சுவாமி நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை 4 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி இரவு 6.59 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பூசம் காலை 8.51 மணி வரை. பிறகு ஆயில்யம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று ஸ்ரீராம நவமி. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்திலும், இரவு அனுமார் வாகனத்திலும் பவனி. சங்கரன்கோவில் சுவாமி அம்பாள் இருவரும் வெள்ளி விருஷப சேவை. சீர்காழி ஸ்ரீசிவபெருமான், குடந்தை ஸ்ரீராமபிரான் தேரோட்டம். ஸ்ரீசிவஞான சுவாமி நாயனார் குருபூஜை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. அயோத்தி ஸ்ரீராமபிரான் புறப்பாடு. அயோத்தி ஸ்ரீராம் லாலா சிறப்பு அலங்கார திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-துணிவு
ரிஷபம்-உறுதி
மிதுனம்-பரிசு
கடகம்-நன்மை
சிம்மம்-லாபம்
கன்னி-உயர்வு
துலாம்-பணிவு
விருச்சிகம்-பண்பு
தனுசு- போட்டி
மகரம்-நன்மை
கும்பம்-நிறைவு
மீனம்-கவனம்
- மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம்.
- தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது.
மண்ணச்சநல்லூர்:
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இறுதியில் இருந்து மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். இக்காலங்களில் அம்மனுக்கு பக்தர்களால் பூச்செரிதல் நடைபெறும்.
பூச்செரிதலையடுத்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி அம்மன் பட்டினி விரதம் முடிவடைந்து, சித்திரை தேர்திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்பாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் மூலஸ்தானத்திலிருந்து அம்மன்(உற்சவர்) புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் மிதுன லக்கனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மிகுந்த உற்சாகத்துடன் ஒம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் சென்று, முக்கிய வீதிகளின் வழியாக வலம்வந்து பின்னர் நிலையை அடைந்தது.
விழாவின்போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்ரனர். இத்தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் திருவிழாவையொட்டி 7 மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இதேபோன்று திருச்சியில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துறையூர் வழியாக சென்னை செல்வதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மரக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி 48 இடங்களில் மண்டகப்படி பூஜைக்கான அம்பாள் நேற்று இரவு புறப்பட்டார்.
பல்வேறு இடங்களில் பூஜைகளை பெற்றுக் கொண்டு பின்னர் இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மன் தேரில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தேர் திருவிழாவை கண்டுகளிக்க குவிந்தனர்.
இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்க அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.
- நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. காலையில் ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு, கோவில் வளாகத்தில் ஜீயர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
இதையொட்டி நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை (18-ம் தேதி) இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் 1,031 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். இதுவரையில் மொத்தம் 11 ஆயிரத்து 329 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பக்தர்கள் அளிக்கும் தங்க காணிக்கையும் உயர்ந்து வருகிறது.
திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 77 ஆயிரத்து 511 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 553 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.4.28 கோடி வசூல் ஆனது.பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- குரு பார்வை பதியும் இடமெல்லாம் வளம் கொழிக்கும்.
- வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ந் தேதி புதன்கிழமை அன்று, மாலை 5.21 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார். குரு தன்னுடைய பார்வையால், 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார்.
இந்த குருப்பெயர்ச்சிக்கு முன்னதாக, குரு சன்னிதியில் கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த குருவானவர், தன்னுடைய பகை கிரகமான சுக்ர வீட்டிற்கு அல்லவா செல்கிறார். அதற்காக நாம் பயப்படவும் தேவை இல்லை. 'குரு பார்க்க கோடி நன்மை' என்றும், குரு சேர்ந்தால் கோடி தோஷம் நிவர்த்தி என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
எதிரியாக இருந்தாலும் எதிரில் வந்து குரு பார்த்தால், பகை உணர்வு மாறி பாச உணர்வு கூடும். எனவே இந்த குருப்பெயர்ச்சி எல்லோர் வாழ்விலும் எதிர் பாராத மாற்றங்களையும், ஏற்றங்களையும் வழங்கப்போகிறது. குரு பார்வை பதியும் இடமெல்லாம் வளம் கொழிக்கும்.
இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக, கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய மூன்று ராசிகளையும் குரு நேரடியாக பார்க்கிறார். எனவே அந்தராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
விரும்பியபடியே காரியம் நடைபெறும். வருமானம் உயரும். வாகன யோகம் வந்து சேரும். செல்வாக்கு மிக்கவர்களாக தேசத்தில் பவனி வரும் வாய்ப்பு உண்டு.
இவை தவிர, ஜென்ம குருவாக ரிஷபத்திற்கும், அர்த்தாஷ்டம குருவாக கும்பத்திற்கும், அஷ்டமத்து குருவாக துலாத்திற்கும், விரய குருவாக மிதுனத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்களும், வளர்ச்சி பெற நினைப்பவர்களும் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் தசாபுத்தி பலம் பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட வேண்டியது அவசியம்.
அவ்வாறு செய்வதால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு, வீடு கட்டும் யோகம், வழக்கில் வெற்றி உத்தியோக உயர்வு குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை தக்கவிதத்தில் நடைபெறும்.
ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் இடையில் வக்ரம் பெறுகிறார். வக்ர காலத்தில் சிலருக்கு வளர்ச்சியும், சிலருக்கு தளர்ச்சியும் ஏற்படும். இதற்கிடையில் 26.4.2025 அன்று ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ்கிறது. இவற்றைப் பொறுத்தும், சுழலும் மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தும் குருப்பெயர்ச்சி பலன்கள் இப்புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
ரிஷப குருவின் சஞ்சாரம்
1.5.2024 முதல் 11.6.2024 வரை கார்த்திகை நட்சத்திரக் காலில் குரு பகவான் (சூரியன் சாரம்)
12.6.2024 முதல் 18.8.2024 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்)
19.8.2024 5 7.12.2024 நட்சத்திரக் காலில் குரு பகவான் (செவ்வாய் சாரம்)
8.12.2024 முதல் 10.2.2025 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்) வக்ரம்
11.2.2025 முதல் 4.4.2025 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்) வக்ர நிவர்த்தி
5.4.2025 முதல் 11.5.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரக் காலில் குரு பகவான் (செவ்வாய் சாரம்)
- அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் என்று பொருள்.
- மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் அசோகாஷ்டமி என்று பெயர்.
அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் (மகிழ்ச்சி) என்று பொருள். சோகத்தை நீக்கி, மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் இந்நாளுக்கு அசோகாஷ்டமி என்று பெயர்.
சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச்சோலையிலே சிறைவைத்தான் ராவணன். குளிர்ந்த அந்த மலர்ச் சோலையிலே சீதையின் உள்ளம் மட்டும் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய்ச் சுட்டது. சீதையின் இந்த சோகத்தைப் போக்குவதற்காக, இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து, அவளை சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம். சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம்.
அந்த மரம் எப்படியாவது ராமன் வந்து சீதையை மீட்டுச் செல்ல வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்தது. அந்த பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது. சீதை அசோகவனத்தில் சிறையிலிருந்து விடுபட்ட போது, அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன. அப்பொழுது சீதை, அசோகமரங்களை நோக்கி, "என்ன வரம் வேண்டும்?" என கேட்டார். "அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும் வரக்கூடாது'' எனக் கேட்டது.
சீதாதேவியும் "மருதாணி மரங்களான (அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு) உங்களை யார் ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிக்கொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று வரமளித்தாள்.
ஆகவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள். சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே "அசோகாஷ்டமி'' நாளாகும். பங்குனி மாத அமாவாசையில் இந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்குத் துன்பத்தை போக்கி இன்பத்தைத் தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம்.
கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி மருதாணி அரைத்து பூசிக் கொள்ளலாம். மருதாணி உடல் பிணிகளையும் தீர்க்கும், அப்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ
பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.
- மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் வேடம்பறி லீலை.
- முருகப்பெருமாள் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை 3 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி மாலை 5.46 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: புனர்பூசம் காலை 7.13 மணி வரை. பிறகு பூசம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமாள் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். இலஞ்சி ஸ்ரீசிவபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி விடையாற்று. மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் வேடம்பறி லீலை. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் வீதி உலா.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அனுபவம்
ரிஷபம்-கணிப்பு
மிதுனம்-ஆரோக்கியம்
கடகம்-திடம்
சிம்மம்-நட்பு
கன்னி-நற்செய்தி
துலாம்- வரவு
விருச்சிகம்-சுகம்
தனுசு- துணிவு
மகரம்-பொறுமை
கும்பம்-பொறுப்பு
மீனம்-சுபம்
- கேரள மாநிலம் `கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படுகிறது.
- இயற்கை பேரழகில் காண்போரை சொக்க வைக்கிறது.
இயற்கை எழில் சூழ்ந்த இன்றைய கேரள மாநிலம் `கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இன்றைய குமரி மாவட்டமும், கேரள மாநிலத்தின் ஒரு அங்கமாக, அதாவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. எனவே குமரி மாவட்டமும் இயற்கை பேரழகில் காண்போரை சொக்க வைக்கிறது. குமரி மாவட்டத்தில் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. அந்த வரிசையில் சமணர்களின் பெருமைகளைச் சொல்லும் சிதறால் மலைக்கோவிலும் ஒன்று.
இங்குள்ள திருச்சாணத்து மலை மீது அமைந்திருக்கும் குடைவரைக் கோவில், பல்வேறு வரலாற்று அதிசயங்களைத் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது.

சமணத் துறவிகள்
இந்தியாவில் தோன்றிய பல சமயங்களில் சமணமும் ஒன்று. இந்த சமயத்தை பின்பற்றியவர்கள் 'சமணர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். எதிலும் பற்று இல்லாத துறவற வாழ்க்கையை வாழ்வது சமண மதக் கொள்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கி.பி. 7-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் சிதறால் மலைப்பகுதியில் வசித்து வந்ததாக சான்றுகள் சொல்கின்றன.
இந்த சிதறால் மலைக்கிராமம், குமரி மற்றும் கேரள எல்லையோரம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருக்கிறது. குமரியின் 2-வது பெரிய நகராக கருதப்படும் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இருந்து 55 கி.மீ. தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது.
தொலைவில் இருந்து பார்க்கும்போது மலை உச்சியில் ஒரு சிறிய புள்ளியைப்போன்று இந்த சிதறால் மலைக் கோவில் மிக அழகாகத் தெரியும். சுற்றிலும் உயர்ந்தோங்கிய பாறைக்கூட்டங்கள், மலையில் இருந்து பார்க்கும் திசை அனைத்தும் மனதுக்கு இதம் அளிக்கும் விதமாய், பூமிப் பந்து பசுமைப் பட்டாடையை உடுத்தியது போன்று காட்சி அளிக்கிறது.
மலை அடிவாரத்தில் இருந்து அரை கி.மீ. தூரம் வரை படிகள் வழியே மேலே நடந்து சென்றால் குகைக் கோவிலை அடைந்து விடலாம். முன்பு திருச்சாணத்துப்பள்ளி அல்லது திருச்சாணத்து மலை என்று அழைக்கப்பட்ட இந்த ஊா், திகம்பர சமண மதத் துறவிகளின் உறைவிடமாக திகழ்ந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்தான், இந்த சிதறால் மலை குடைவரைக் கோவில்.
இதய வடிவில் குளம்
இங்கு மலை உச்சியில் உள்ள குகையில் உள்ளேயும், வெளியேயும் சமண மதம் தோன்றவும், வளரவும் காரணமாக இருந்த தீா்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் முதலாம் மகேந்திரவா்மனின் உதவியால் சமண மதம் வளா்ந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் இந்த குகைக்கோவில், பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டது.
இந்த சிதறால் மலை 'சொக்கன் தூங்கி மலை' எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள சிதறால் குகை, அனைத்து தரப்பினரையும் கவரும் அழகிடமாகத் திகழ்கிறது. இங்கு 9-ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன.
கோவில் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. மகாவீரர் சிலை, அம்பிகா இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் காட்சி, பறக்கும் வித்யாதாரர் போன்ற சிற்பங்கள் அவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. சிற்பங்களுக்கு கீழ் உள்ள ஒரு சிறு குகையில், கல்லில் வடிக்கப்பட்ட 5 தலை நாகர் சிலையும், பார்ச்சுவநாதர் உருவமும், பத்மாவதி உருவமும் உள்ளது.
ஒவ்வொரு உருவத்தின் கீழும் அதைச் செதுக்கியவர்களின் பெயர், ஊர் பற்றிய விவரங்கள் வட்டெழுத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள், உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சிதறால் மலையில் இதய வடிவில் அமைந்த குளம் ஒன்று, அந்த இடத்திற்கு கூடுதல் அழகைத் தருகிறது. சமணத் துறவிகளால் இயற்கையான முறையில் பாறையில் அமைக்கப்பட்டுள்ள குளம் இதுவாகும்.
ஒரு பாறையின் மீது தொங்கும் நிலையில் உள்ள மற்றொரு பாறையில், இயற்கையாக அமைந்த குகைக்குள் பகவதி கோவில் அமைந்திருக்கிறது. குகை மேற்குப் பார்த்து உள்ளது. திருச்சாணத்து மலையில் காணப்படும் தற்போதைய பகவதி கோவில், ஒரு காலத்தில் தென்னாட்டில் வாழ்ந்த சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக திகழ்ந்துள்ளது.
இங்கு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் பள்ளி அல்லது சமணப் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டதாகவும், அதில் பல நூறு மாணவர்கள் படித்ததாகவும், அவர்களுக்கு குறத்தியறையார் என்ற மகாராணி சொத்துகளை அளித்தது பற்றியும், தமிழ்-பிராமி மொழியில் கல்வெட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மறைந்த பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த சமயத்தில் சீனப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது அவரிடம், அந்த நாட்டு தலைவர் சுவன்லாய், திருச்சாணத்து மலையைப் பற்றி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு புகழ் வாய்ந்த சமணக் கோவிலாக சிதறால் கோவில் இருந்திருக்கிறது.
அதன்பிறகு நேருவின் உத்தரவுப்படி, இன்று அந்தக் கோவில் மத்திய தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 8-ம் நூற்றாண்டில் சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியால் இந்தியாவில், குறிப்பாக தென் பகுதிகளில் சமண, புத்த மதங்கள் வீழ்ச்சியடைந்தன. சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப்பின் பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றிக் கிடந்த இந்தக் கோவில், இரண்டாம் ராஜராஜன் காலத்தில்தான் சற்று புதுப்பொலிவு அடைந்திருக்கிறது. பின்னர் பத்மாவதி சிலை, பகவதி சிலையாக மாற்றப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா காலத்தில், சிதறால் குகையில் `சிதறாலம்மா' என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.






