என் மலர்
வழிபாடு
- பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.
- அம்மன் கையில் ரத்தின செங்கோல் அளிக்கப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது.
மதுரையை அரசாள்பவள் சொக்கநாதர் அல்ல; மீனாட்சி அல்லவா. மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவில் பட்டாபிஷேக விழா கொண்டாடப்படும். சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை சுந்தரேசுவரரும் மதுரையை ஆள்வதாக ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
மதுரையைத் தவிர இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.
இந்த பட்டாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். அந்தக் காலத்தில், பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை தரித்தவர்களாக இருந்துள்ளனர். எனவே மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி மீனாட்சி அம்மனுக்கும் பட்டாபிஷேகம் அன்று அம்மன் சந்நதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனை இருத்தி வைத்து வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டு ராயர் கிரீடம் அணிவித்து, அம்மன் கையில் ரத்தின செங்கோல் அளிக்கப்படும்.
- ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.
- சைத்ர மாத சுக்ல பட்ச ஏகாதசி காமதா ஏகாதசி.
பொதுவாக, திதிகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. அமாவாசையில் இருந்து 11-ம் நாள் மற்றும் பௌர்ணமியில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி திதி. மனிதன் இந்திரியங்களால் இயக்கப்படுபவன். இந்த உடல் யந்திரத்தை கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என்னும் 10 இந்திரியங்கள் இயக்குகின்றன. உடல் இயக்கமான கை, கால், உள்ளுறுப்புகள் போன்றவை கர்மேந்திரியங்கள்.
ஒரு பொருளின் தன்மையை நமக்கு விளக்கும் கண், காது, மூக்கு போன்றவை ஞானேந்திரியங்கள். இவற்றோடு மனம் என்னும் கண்ணுக்குத் தெரியாத இந்திரியம் நம்மை வழிநடத்துகிறது. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்துக்கு ஓய்வு கொடுப்பதுபோல 11 என்கிற எண்ணிக்கை அடிப்படையில் அமையும் இந்த திதி ஓய்வுக்கான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
காமதா ஏகாதசி என்றால் எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஏகாதசி என்று பொருள்.
ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25- ம் வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர். பெயர் மட்டுமல்ல ஒவ்வோர் ஏகாதசியும் தனிச் சிறப்பும் பலன்களும் வாய்ந்தவை. ஏகாதசி புராணம் என்னும் நூல் ஒவ்வோர் ஏகாதசியின் சிறப்பையும் பட்டியலிடுகிறது. அவ்வாறு சைத்ர மாத (சித்திரை அல்ல) சுக்ல பட்ச ஏகாதசி காமதா ஏகாதசி என்று போற்றப்படுகிறது.
இந்த ஏகாதசி அன்று விரதத்தைக் கடைப்பிடித்தால் அது ஏழு ஜன்மப் பாவங்களையும் போக்கிவிடும் என்று கூறுகிறது புராணம்.
முன்னொருகாலத்தில் போகீபூர் என்னும் நகரத்தை பரம உத்தமமான மன்னன் புண்டரீகன் ஆண்டுவந்தான். அவன் அவையில் தேவர்களும் முனிவர்களும் கூடியிருப்பார்கள். அவன் அவைப் பாடகனான லலித் என்பவன் அரசவையில் பாடும்போது சிற்றின்ப சிந்தனையோடு பாடினான். இதைக் கேட்ட மன்னன் வெகுண்டு அவனை அரக்கனாகப் போகும்படி சபித்தான்.
லலித் அரக்கனாகிக் காடுகளில் திரிந்தான். அவன் மனைவியான லலிதா அரக்கனான தன் கணவனைப் பின் தொடர்ந்தாள். தங்களின் சாபம் எப்போது நீங்கும் என்று தவித்திருந்தவர்களுக்கு சிருங்கி முனிவரின் தரிசனம் கிடைத்தது. அவர், இவர்களின் துயரை அறிந்து, காமதா ஏகாதசி விரதத்தை எடுத்துரைத்தார். இதைக் கேட்ட லலித், லலிதா ஆகிய இருவரும் மகிழ்ந்து அடுத்துவரும் காமதா ஏகாதசி விரதத்தைப் பின்பற்றினர்.
அந்த நாளில் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபட்டனர். இதன் பலனாக அவன் தன் அரக்க ரூபம் நீங்கி, மீண்டும் தன் சுய உருவைப் பெற்றான். இருவரும் நீண்ட காலம் மகிழ்வோடு வாழ்ந்தனர்
காமதா ஏகாதசி சிறப்புகள்
1. ஏழு ஜன்மப் பாவம் தீரும்
2. ஆன்மா சுத்தமாகும்
3. சாபங்கள் தீரும்
4. மூவுலகிலும் இதைப் போன்ற சுப முகூர்த்த நாள் இல்லை
5. எதிர்மறை உணர்வுகளை நீக்கி நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்
6. தீமைகள் இல்லாத வாழ்வை அருளும்.
7. தீர்க்க ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும்.
- மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு சித்திரை-6 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி இரவு 10.28 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: மகம் நண்பகல் 1.18 மணி வரை பிறகு பூரம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஆறுமுகமங்கலம் நீ ஆயிரத்தொன்று விநாயகர் உருகு சட்ட சேவை. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தெப்ப உற்சவம். திருத்தணி ஸ்ரீ சிவபெருமான் புலி வசந்த உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குஜாம்பிகை புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-பொறுமை
மிதுனம்-ஓய்வு
கடகம்-உற்சாகம்
சிம்மம்-நன்மை
கன்னி-விருத்தி
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- ஆதாயம்
மகரம்-உண்மை
கும்பம்-போட்டி
மீனம்-ஆக்கம்
- மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.
- ராமநாதர் சன்னதியில் ராமரின் பாதம் உள்ளது.
தலவரலாறு
பாதாளத்தை ஆண்ட நாகவேந்தனாகிய ஆதிசேஷன் தனக்கு குழந்தை வேண்டி குடந்தை முதல் நாகைக்காரோணம் வரை நான்கு தலங்களுக்கும் சென்று வழிபடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டார். பின்னர் இறைவன் அருளால் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை மூன்று தனங்களுடன் இருந்தது கண்டு வருந்தினர்.
அப்போது அசரீரி தோன்றி, "இக்குழந்தைக்கு தக்க வயது வந்தபோது இது எந்த ஆடவனைப் பார்க்கும்போது இதன் மிகை தனம் மறையுமோ, அவனே இவளுக்கு கணவனாவான்" என்று கூறியது.
அதன்படி, ஒருநாள், தேவதீர்த்தக்கரையில் அரசகுமாரன் சாடீசுகன் என்பவனைக் கண்டதும் மிகைதனம் மறைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து காதல் கொண்டனர். காமவயப்பட்ட நாக கன்னிகை, தன் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்துகொள்ள எண்ணி சுரங்கம் வழியாகப் பாதாளம் சென்றாள். பின்னர் நாக கன்னிகையின் பிரிவால் வருந்திய அரசகுமாரன், பாதாளம் செல்லும் வழி தெரியாமல் பலவாறு புலம்பி இறைவனிடம் முறையிட்டான்.
இறைவன் அவனுக்கு பாதாளம் செல்லும் வழியைக் கூற, அவனும் அங்கு சென்று நாக கன்னிகையை மணந்தான். தன் மகளை மணம் முடித்து கொடுத்தபின் நாகை காரோணம் வந்து தான் பிரதிஷ்டை செய்த நாகநாதர் கோயில் அருகில் குளம் அமைத்து, அதற்கு நாகதீர்த்தம் என்று பெயரிட்டார்.
ஆதிசேடன், மாசி சிவராத்திரியின் போது ஒவ்வொரு யாமமும் குடந்தை, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் ஆகிய தலங்களில் வழிபட்டு, நாலாம் யாமத்தில் நாகை காரோணரை மலர்கொண்டு வழிபட்டு பூஜையை நிறைவு செய்வார். ஒருநாள் நாகநாதர் இவனது பூஜையில் மகிழ்ந்து இறைவன் காட்சி தந்து, "வேண்டும் வரம் கேள்" எனக் கூறினார்.
அதற்கு ஆதிசேடன், "இறைவா, இந்நகர் என் பெயரால் வழங்க வேண்டும். நான் பிரதிஷ்டை செய்த லிங்கம் என் பெயர் கொண்டு விளங்கவும், தாங்கள் இதில் இருந்து வேண்டுபவர்களுக்கு வேண்டிய பலன்களை தந்தருள வேண்டும். மேலும் இவ்வூர் வளம்பெற்று விளங்க ஆறு ஒன்று இப்பகுதியில் ஓடிக் கடலில் கலக்க வேண்டும். இவ்வாறு காவிரி தோன்றுவதற்கு முன்னே தோன்றுவதால், `விருத்த காவிரி' எனப் பெயர் பெற வேண்டும்" என்றார்.
நாகனது வேண்டுகோளுக்கு இணங்கிய இறைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று வரமளித்தார். தங்கள் தலைவனாகிய நாகன் வந்து நகர் உண்டாக்கி, நாகநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறுபெற்ற பெருமையை அறிந்து, வாசுகி, குளிகன், சங்கபாலன் ஆகியோர் இக்கோயில் வந்து நாகநாதரை வழிபட்டு, தங்கள் பெயரால் மேலத்திருச்சுற்றில் அருள்குறிகள் நிறுவிப் பூஜித்து பேறு பெற்றுப்போயினர்.
வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கோவில் அமைப்பு
நாகநாத சுவாமி கோயில் வலது புறத்தில் உள்ள தென்திருச்சுற்று அருகில் அர்த்த மண்டபத்துடன் கூடிய ஒரு கோயில் உள்ளது. அதில் உள்ள இறைவனுக்கு, "ராமநாத சுவாமி" என்று பெயர். இதற்கு ஒரு காரணம் உண்டு.
கோசலநாட்டின் தலைநகரான அயோத்தி வேந்தன் ராமபிரான் திருமுடி துறந்து, சிற்றன்னையின் சொற்படி மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் கானகம் சென்றார். காட்டில் வாழ்ந்து வரும்போது ராமன் மனைவியை ராவணன் என்ற அசுரன் அபகரித்துச் சென்றான். மனைவியைத்தேடி, தம்பியும் தானுமாகக் காட்டில் பல இடங்களில் அலைந்துகொண்டு கிஷ்கிந்தை என்ற நகருக்கு வந்தார்.
கிஷ்கிந்தையின் மன்னனான சுக்ரீவனைக் கண்டு, அவனது நட்பைப் பெற்றார். அவனது உதவியால் வானரப்படைகளைக் கொண்டு இலங்கைத்தீவில் தன் மனைவி இருப்பதை அறிந்தார். இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்க எண்ணினார். இவ்வாறு ஆலோசித்துக் கொண்டு தம்பியுடன் கீழக்கடற்கரை ஓரமாக வந்துகொண்டிருந்தார்.
வரும் வழியில் நாகைக்காரோணம் வந்தார். விருத்த காவிரி ஆற்றின் சங்கமத்தில் நீராடி, வெண்ணீறு அணிந்து, ஐந்தெழுத்தை உச்சரித்து கோயில் சென்று காரோணப் பெருமானை வணங்கினார். பின்பு அக்கோயிலின் மேல் திசையில் நாகன் பூஜித்த நாகநாதரை வணங்கினார். அப்பெருமானுக்கு தென்புறம் ஒரு அருள்குறி நிறுவ பூஜித்தார். பூஜைக்குகந்த பெருமான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார்.
சிவபெருமானைக் கண்ட ராமன் அவரை வலம் வந்து போற்றி வணங்கினார். தனது மனத்துயரை போக்குமாறு கேட்டுக்கொண்டார். பெருமானும் "உனது குறைகளை கூறுவாய்" என்றார்.
"என் மனைவியை ராவணன் என்ற அரக்கன் கவர்ந்து சென்றுள்ளான். அவன் வாழும் இலங்கை நகர் செல்ல கடலிடத்தை மலைகளால் அடைத்து வழிசெய்ய வரம் வேண்டும். அத்துடன் நீர் நான் நிறுவிய லிங்கத்துள் என்றும் இருந்து வழிபடுபவரது குறைகளைத் தீர்க்க வேண்டும். இந்த லிங்கம் ராமநாதன் என்று என் பெயர் கொண்டு விளங்க வேண்டும்" என்றார். அதன் காரணமாக இப்போது ராமலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் கூறியவாறே ராமன், ராவணவதம் நிகழ்த்தி, சீதையை சிறை மீட்டுக்கொண்டு திரும்ப நாகை அடைந்தார்; சீதையுடன் கடலில் நீராடி, கருந்தடங்கண்ணி உடனாய காரோணரை வழிபட்டு, முன்பு தான் பிரதிஷ்டை செய்த மூர்த்தியாகிய ராமநாதரை வழிபட்டு, பின் தன் நகராகிய அயோத்திக்கு எழுந்தருளினார். இது கிருத்திகை நட்சத்திர பரிகார தலம் ஆகும். இக்கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது.
இங்கு விநாயகர், பஞ்ச லிங்கங்கங்கள், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர், சனிபகவான் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. இங்கு தெட்சிணாமூர்த்தி தனி கோயிலில் அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் வலஞ்சுழி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நாகருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இங்கு மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இங்கு நாகநாதர், ராமநாதர் என்ற இரு சிவன் சன்னதிகளும், அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி என்ற இரு அம்மன் சன்னதிகளும் தனித்தனியாக உள்ளது சிறப்பு. ராமநாதர் சன்னதியில் ராமரின் பாதம் உள்ளது. இக்கோயில் மூலவரின் திருநாமத்தின் அடிப்படையில்தான் இந்த ஊருக்கே "நாகப்பட்டினம்" என்ற பெயர் வந்தது.
- 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டி உள்ளது.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது.
விழாவின் 6-வது நாளான நேற்று இரவு தங்க-வெள்ளி ரிஷப வாகனங்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
7-ம் நாளான இன்று காலை 8 மணிக்கு தங்க சப்பரத்தில் எழுந்தரு ளிய சுவாமி-அம்மன் 4 மாசி வீதிகளில் உலா வந்து கோவிலில் உள்ள சிவ கங்கை ராஜா மண்டகப்படி யில் எழுந்தருளினார். இன்று இரவு நந்திகேசுவரர் வாகனத்தில் சுவாமியும், யாளி வாகனத்தில் அம்ம னும் எழுந்தருளுகின்றனர்.
ஒவ்வொரு நாள் விழாவும் வாழ்க்கையின் தத்துவத்தையும், பலனையும் எடுத்துகூறும் வகையில் நடந்து வருகிறது.
8-ம் நாளான நாளை (19-ந்தேதி) காலை 10 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்மன் தெற்காவணி மூலவீதி வழியாக மேலமாசி வீதியில் உள்ள கட்டுச்சட்டி மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.
சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நாளை இரவு நடக்கிறது. இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடக்கிறது.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனிடம் இருந்து அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன் செங்கோல் பெறுகிறார். இதற்காக அம்மன் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம், ரத்தின செங்கோலுடன் காட்சி அளிக்கிறார்.
மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை மதுரையில் மீனாட்சி ஆட்சி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- 23-ந்தேதி சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமான நாளாகும்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், 24-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. 21-ந்தேதி சித்திரை மாத பிரதோஷத்தை முன் னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்து வார்கள். 23-ந்தேதி சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமான நாளாகும். அன்றைய தினம் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
24-ந்தேதியுடன் 4 நாள் அனுமதி முடிவடைகிறது. விடுமுறை நாட்களில் பிரதோஷம் மற்றும் சித்திரை மாத பவுர்ணமி வருவதால் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களான பீடி, சிகரெட், பாலிதீன் பை, மது, போதை வஸ்து பொருட்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அவசியம் மருத்துவக் குழுவினர் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
- பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றமும் நடந்தது.
திருமலை:
திருப்பதி மாவட்டம் சந்திரகிரி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணமும், நேற்று காலை 9.05 மணியில் இருந்து 10 மணி வரை விருஷப லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றமும் நடந்தது.
அதைத்தொடர்ந்து ராமநவமியான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை உற்சவர் கோதண்டராமர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சீனிவாசலு, கோவில் ஆய்வாளர் ஹரிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வேதப் பண்டிதர்கள் மந்திரங்கள் மற்றும் ராமாயண பாசுரங்களை ஓதினார்கள்.
- தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி அதிகாலை மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, அர்ச்சனை செய்யப்பட்டது. கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அப்போது வேதப் பண்டிதர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்தனர். புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் ராமாயண பாசுரங்களை ஓதினார்கள்.
அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ராமர், சிறப்பு அலங்காரத்தில் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பிறகு இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. அதிகாலை சுப்ரபாதம், மூலவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊஞ்சல் மண்டபத்தில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை திருப்பதியில் உள்ள பெரிய ஜீயர் சுவாமி மடத்தில் இருந்து அர்ச்சகர்கள் பட்டு வஸ்திரங்களை எடுத்து வந்து விமான பிரதட்சணம் செய்து மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சமர்ப்பித்தனர்.
அதன்பிறகு ராமர் ஜென்ம புராணம், ஆஸ்தான நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 7 மணியில் 9 மணி வரை உற்சவர் ராமச்சந்திரமூர்த்தி தனது பிரியமான அனுமன் வாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- ராமநவமி, பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சித்தூர்:
சித்தூர் கோதண்டராமர் கோவிலில் நேற்று ராமநவமி, பிரம்மோற்சவ விழா தொடங்கியது. அதையொட்டி உற்சவர் கோண்டராமர் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமநவமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சித்தூர் கோதண்டராமர் கோவிலில் 11 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ராமநவமி, பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
நேற்று காலை கோதண்டராமர் கோவிலில் மூலவருக்கு சிறப்புப்பூஜைகள், ஆராதனை நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் கருடசேவை நடந்தது. உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளி சித்தூர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் ராம நவமியை முன்னிட்டு சித்தூர் கிரீம்ஸ்பேட்டையில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் காலை 8.30 மணியளவில் மூலவருக்கு அபிேஷகம், அலங்காரம், சிறப்புப்பூஜைகளும், காலை 9.30 மணியளவில் சீதா-ராமர் திருக்கல்யாணம் உற்சவமும், ராமர் பட்டாபிஷேகமும் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி பா.ஜனதா அலுவலகம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பா.ஜனதா மாநில செயலாளர் கோலா.ஆனந்த் தலைமை தாங்கினார். அலுவலக வளாகத்தில் உள்ள ராமர் உருவப்படத்துக்கு ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி பா.ஜனதாவினர் சிறப்புப்பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
- சீதா-ராமருக்கு திருக்கல்யாண உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.
- பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பக்தி கோஷம் எழுப்பினர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலின் துணைக் கோவிலான ஸ்ரீகாளஹஸ்தி பட்டாபி ராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. அதையொட்டி உற்சவர்களான சீதா-ராமருக்கு பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மேடையில் எழுந்தருளச் செய்தனர்.
முன்னதாக கணபதி பூஜை மற்றும் பல்வேறு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, சீதா-ராமருக்கு திருக்கல்யாண உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பக்தி கோஷம் எழுப்பினர்.
திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, செயல் அலுவலர் எஸ்.வி நாகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் தசமி தர்மராஜா தசமி.
- தர்மராஜாவையும், குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கலாம்.
தசமி திதி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களைத் தொடர்ந்து வரும் பத்தாவது நாள் ஆகும். இவற்றுள் பௌர்ணமியில் இருந்து வரும் பத்தாவது நாள் கிருஸ்ணபட்ச தசமி என்றும் அமாவாசையில் இருந்து வரும் பத்தாவது நாள் சுக்கிலபட்ச தசமி என்றும் அழைக்கப்படுகின்றது.
தசமி திதி ஆனது வீரபத்திரன் மற்றும் தர்மராஜா போன்ற தெய்வங்களுக்கு உரிய நாளாக காணப்படுகின்றது. இந்த நாளில் மதம் சார்ந்த நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். ஆன்மீக செயல்களில் இந்த தசமி திதியில் ஈடுபடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
இன்று தர்மராஜா தசமி. பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் தசமி தர்மராஜா தசமி கொண்டாடப்படுகிறது. இதற்கான கோயில் வலங்கைமான் நரிக்குடி கிராமத்தில் உள்ளது. புவனேஸ்வரி சமேத கோயிலில் இவ்விழா சிறப்பாக நடைபெறும் பல்வேறு நோய்களிலிருந்து விடுபடவும் மரண பயத்தை நீக்கவும் இந்த நாளில் இருந்து தர்மராஜாவையும் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கலாம்.
மேலும் தசமி திதியில் சுப காரியங்கள், புதிய தொழில்கள் போன்றன செய்யலாம். இவை தவிர திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் வாங்கலாம். மேலும் திருமணம், கிரகப்பிரவேசம், போன்ற நிகழ்வுகளும் அரச காரியங்கள், வெளியூர் பயணங்கள் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். அத்தோடு கஷ்டப்படுபவர்களுக்கு பண உதவி கடன் கொடுக்கலாம்.
- ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன சேவை.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, சித்திரை-5 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: தசமி இரவு 8.35 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: ஆயில்யம் காலை 10.56 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வரயாளி வாகனத்தில் பவனி. திருவையாறு ஸ்ரீ சிவபெருமான் தன்னைத்தான் பூஜித்தல், விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாத்தும் வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-இன்பம்
கடகம்-வரவு
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-உண்மை
துலாம்- நிறைவு
விருச்சிகம்-பணிவு
தனுசு- யோகம்
மகரம்-ஆதரவு
கும்பம்-புகழ்
மீனம்-அமைதி






