என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
    • சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆடிப்பூர பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு பராசக்தி அம்மன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மேலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்.

    10-ம் நாள் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறும். 

    • வடபழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலை 3மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பின்னர் பள்ளியறை பூஜை முடிந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    இதையடுத்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நண்பகல் 12 மணி வரை சந்தனகாப்பு அலங்காரத்திலும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை ராஜ அலங்காரமும், பின்னர் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடனும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

    பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடி தண்ணீர் வசதி, முதியோர், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை என பல்வேறு வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • முருகருக்கு மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது.

    ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம். வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    ஆடி கிருத்திகை விழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆடிக்கிருத்திகை விழா கடந்த 27-ந் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கி, நேற்று ஆடிப்பரணியும், இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், நாளை இரண்டாம் நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது.

    இந்த 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் மலைக்கோவில், மலை அடிவாரம், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் 160 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக சென்னை, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேரணாம்பட்டு, பள்ளிப்பட்டு, திருப்பதி, சித்தூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆடி கிருத்திகை விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருணகிரிநாதருக்கு வழிகாட்டிய முருகப்பெருமான்.
    • அருணகிரிநாதர் முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளார்.

    முருகன் சுருட்டு புகைப்பாரா?... எந்த ஒரு இறை வழிபாடும் காரண காரியங்கள் இல்லாமல் செய்வதில்லை. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் நடைமுறை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள மலைமீது அமைந்துள்ள முருகன் கோவிலில் இன்றும் உள்ளது.

    வயலூரில் அருணகிரிநாதருக்கு காட்சி தந்த முருகன் விராலிமலைக்கு வரச் சொல்லியதால் இங்கு அருணகிர நாதர் வந்துள்ளார். வயலூரில் இருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் விராலிமலை தலம்.

    வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் இந்த விராலிமலை தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி (கூடு விட்டு கூடு பாயும் வித்தை) வழங்கியுள்ளார். இங்கு பலகாலம் தங்கியிருந்த அருணகிரிநாதர் இங்குள்ள முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளார். இந்த ஆலயத்துக்கு பல பெருமைகள் உண்டு.

    திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை. திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம்.

    ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம். இக்கோயிலில் ஒரு காலத்தில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து என்றபக்தர் ஈடுபட்டார்.

    ஒருநாள் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்றவைத்தார்.

    அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, "உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா?' என கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தபோது அவர் முன்னால் சுருட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

    கருப்பமுத்து நடந்ததைக்கூற அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார்.

    அவர் கனவில் தோன்றிய முருகன், "எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என பக்தர் விரும்பினார்.

    அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே!' என்றார். அதன்பிறகு இன்றுவரை இப்பழக்கம் இருக்கிறது.

    இந்த சுருட்டை பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவனுக்கு என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல; பக்தியும் அன்புமே முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

    இந்த கோவிலில் கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் என்பது அதிகளவில் நடக்கிறது. அந்த வகையில் ஆடி கிருத்திகையில் இங்கு பக்தர்கள் பலரும் அன்னதானம் வழங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

    • சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் திருமஞ்சன சேவை.
    • சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் திருமஞ்சன சேவை. நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-13 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி இரவு 9.11 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: பரணி பிற்பகல் 2.40 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று ஆடி கிருத்திகை விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம் மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் உற்சவம் ஆரம்பம். திருக்குளம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கோவில்களில் தெப்ப உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியுர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-உயர்வு

    கடகம்-உற்சாகம்

    சிம்மம்-இன்பம்

    கன்னி-லாபம்

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-பரிசு

    தனுசு- ஆர்வம்

    மகரம்-மேன்மை

    கும்பம்-வரவு

    மீனம்-முயற்சி

    • கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
    • அதிகாலை முதலே பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.

    வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் மயில்காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடிகள் சுமந்தும். உடலில் வேல், அம்பு அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    குழந்தைகள் முதல் முதியவர் வரை பம்பை உடுக்கை முழங்க கிராமியக் கலையோடு ஆடி பாடி சென்று முருகனை வழிபட்டனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காட்சி அளித்தது.

    பக்தர்கள் காவடி செலுத்துவதற்கு தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே காவடி செலுத்த கட்டணம் ரத்து செய்யப் பட்டு இருந்ததை பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.

    பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவிலுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக் கப்படவில்லை. கோவில் வாகனம் மட்டும் இயக்கப்பட்டது. பக்தர்கள் சரவணப் பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டுகளின் வழியாகவும் சென்று சுவாமியை தரிசித்தனர்.

    வாகன நெரிசலை தவிர்க்க திருத்தணி நகரத்தின் நான்கு எல்லைகளிலும் அனைத்து பஸ்களும், வாக னங்களும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக அந்தந்த பகுதிகளில் இருந்து கோயில் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தன.

    ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு மலைக்கோயில், திருக்குளம், மலைப்பாதை, கோபுரம், உள்ளிட்ட அனைத்து பகுதி களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

    பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வ தற்கு கோவில் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பிரசாதம். குடிநீர். கழிப்பிட வசதிகள் சுகாதாரம் உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    காவடி கொண்டு வரும் பக்தர்கள் திருக்குளத்தில் வீசி செல்லும் பூமாலைகளை அகற்றுவதற்கும், மலைக் கோயில். மலை பாதை பகுதிகளில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் அகற்றவும் சுழற்சி முறையில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணயர் அருணாச்சலம் (பொறுப்பு) அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு காமிராக்கள் அமைத்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    • சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் திருமஞ்சன சேவை.
    • நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆடி 12 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அஷ்டமி இரவு 11.11 மணி வரை பிறகு நவமி.

    நட்சத்திரம்: அஸ்வினி பிற்பகல் 3.58 மணி வரை. பிறகு பரணி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை.

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் திருமஞ்சன சேவை. கிழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம் -தாமதம்

    மிதுனம்-திடம்

    கடகம்- வரவு

    சிம்மம்-விவேகம்

    கன்னி-இரக்கம்

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- பயணம்

    மகரம்-ஆசை

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-சாந்தம்

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்.
    • வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை)

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-11 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி நள்ளிரவு 1.25 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: ரேவதி மாலை 5.27 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று), தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமி காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மரியாதை

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-சுபம்

    கடகம்-கவனம்

    சிம்மம்-சுகம்

    கன்னி-தெளிவு

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- தெளிவு

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-உறுதி

    மீனம்-திடம்

    • 442-வது ஆண்டு திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி தேரோட்டம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், நடை பெற்றது. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், 8.30 மணிக்கு பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

    அப்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பாட்டிருந்த படகில் இருந்து சைரன் ஒலி இசைக்கப்பட்டது. சமாதானபுறாக்கள் பறக்கவிடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகர் மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட ஆயிரகாக்கானோர் கலந்து கொண்டனர்.

    பகல் 12 மணிக்கு முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய மாதா அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை, ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது,

    திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடிக்கு பல ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். வருகிற 5-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழாவில், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.

    இந்த தேவாலயமானது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த தேவாலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி தூத்துக்குடி மக்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா ஆகும். இந்த ஆண்டு 442-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ-மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும் நற்கருணை பவனி நடைபெறும்.

    இந்த கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள்,5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஆங்காங்கே சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 

    • பிள்ளையாருக்கு ‘விக்னகர்த்தா’ என்ற பெயரும் உண்டு.
    • `விக்னம்’ என்பதற்கு ‘இடையூறு’ என்று பொருள்.

    விநாயகரை கும்பிட்டால் விக்கினம் தீரும் என்பது நம்பிக்கை. 'விக்னம்' என்பதற்கு 'இடையூறு' என்று பொருள். இந்த இடையூறுகளை நீக்குவதற்கு, விநாயகர் வழிபாடு முக்கியமான ஒன்று.

    எந்த காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையாரை வழிபட்டு தான் தொடங்குகிறோம். அப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது, இந்து சமயம் சொல்லும் ஆகம விதி. பிள்ளையாருக்கு 'விக்னகர்த்தா' (விக்னங்களை உண்டாக்குபவர்), 'விக்னேஸ்வரன்' (விக்னங்களை நீக்குபவர்) என்ற பெயரும் உண்டு.

    நாம் ஒரு காரியத்தை தொடங்கும் போது அந்த காரியம் எந்த தடையும் இன்றி நன்கு நடைபெற வேண்டும் என்று நினைப்போம். அந்த நினைப்பை வணங்குதலாக, விநாயகரை நோக்கி வைக்க வேண்டும். விநாயகரை வழிபடாது தொடங்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படும் என்பதை பல புராணக் கதைகள் நமக்கு சொல்கின்றன.

    வள்ளியை மணம் முடிக்கச் சென்ற முருகப்பெருமான் கதை நம்மில் பலருக்கும் தெரியும். வள்ளியை மணம் முடிக்கும் அவசரத்தில், அவர் தன் அண்ணனான விநாயகரை வணங்காமல் சென்று விட்டார். வள்ளியை மணம் முடிக்க அவர் வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக என்று பல உருவங்கள் எடுத்தும் அவரது முயற்சி பலிக்கவில்லை.

    அப்போது நாரதரின் மூலமாக தன் அண்ணனை வழிபடாமல் வந்த விஷயம் தெரியவர, உடனடியாக விநாயகரை நினைத்து வழிபட்டார் முருகப் பெருமான். அப்போது யானை வடிவில் வந்த விநாயகர், முருகப்பெருமானையும், வள்ளியையும் சேர்த்து வைத்தார்.

    இதேபோல ஒவ்வொரு கடவுளரும், விநாயகரை வணங்க மறந்த போதெல்லாம் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டதை நமது புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    விநாயகரை திருப்திப்படுத்த ஒரு அச்சுவெல்லம், ஒரு கை பொரி, ஒரு பிடி அவல் மட்டுமே போதுமானது. இவற்றைக் கொண்டு விநாயகரை நினைத்து, தலையில் குட்டிக்கொண்டு 'சுக்லாம் பரதரம்..' என்ற சுலோகத்தை சொல்லி வழிபட்டால், அவர் உடனடியாக நம்மை தேடி வந்து நன்மைகளைச் செய்வார்.

    • கலியுகத்தில் திருப்பாதம் பதித்து, திருக்காட்சி அளிப்பேன்.
    • கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு மலைகளுக்கு நடுவில் இயற்கை எழில் சூழ சுயம்பு தேவியாக சொர்ண ரேகையுடன் வெளிப்பட்டவள், தேவி கருமாரி. இந்த தேவியை கருவாக வைத்து எழுப்பப்பட்டதே, தேவி கருமாரி அம்மன் ஆலயம். இது பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

    தல வரலாறு

    ஆதியும் அந்தமுமாகி அனைத்து உலகையும் காத்தருள்பவள், அன்னை ஆதிசக்தி. இவளே கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகங்களிலும் தாயாக நின்று உயிர்களை காத்தருளியவள். இதனையடுத்து, நான்காவது யுகமான, கலியுகம் மிகவும் கொடுமைகள் நிறைந்தது.

    இந்த கலியுகத்தின் தீமைகளை உணர்ந்து அச்சம் அடைந்த தேவர்கள், இந்த யுகத்திலும் உலக உயிர்களைக் காத்தருள வேண்டுமென, மீண்டும் ஒருமுறை ஆதிசக்தியிடம் சரண் அடைந்தனர். குழந்தையின் அழுகுரலுக்கு ஓடோடி வரும் தாயான ஆதிசக்தி, அதற்கான வழியையும் கூறினாள்.

    "யுகங்கள் தோன்றுவதற்கு முன்பே நான், என்னுடைய பரமனுடன் ஒன்றிணைந்து திருவடி பதித்து, எனக்கான இடத்தை தேர்வு செய்துள்ளேன். ஏழு மலைகளால் சூழ்ந்திருக்கும் எழிலார்ந்த அந்த வனத்தில், எம் வருகைக்காக அருவுருவமாக அமர்ந்து தவம் செய்யுங்கள். காலம் கனியும்போது அந்த புனித மண்ணிற்கு இக்கலியுகத்தின் நாயகியாக நான் வருகைபுரிவேன். அங்கே என் விஸ்வரூபக் காட்சியை தங்களுக்கு அருள் பாலிப்பேன்" என்றாள்.

    மேலும் தேவி கூறுகையில், "அத்திருவடி அருட்கோட்டத்தில் நேரில் வந்து என்னை மனமுருகி வழிபட்டு செல்வோருக்கு, ருத்ரனின் திருநீற்று சாம்பலை நான் சிருஷ்டித்த தவசீலர்கள் மூலம் வழங்கி அனைவருக்கும் அருள் தருவேன். அதன் மூலம் அவர்களின் துயரங்களையும், துன்பங்களையும் அகற்றுவேன்" என்றாள்.

    இக்கலியுகத்தில் திருப்பாதம் பதித்து, திருக்காட்சி அளிப்பேன் என தேவர்களுக்கு, ஆதிசக்தி அளித்த திருவாக்கின் காலம் கனிந்தது. அதன்படி, சிவபெருமானின் திருக்கர செங்கோலை தம் கரம் பற்றினாள்.

    அதன்பின் ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில்களை தமதாக்கி, பக்தர்களை ஆட்கொள்ளும் தனித்துவத்துடன் கரிய நாகரூபம் கொண்டாள். தமது திருவிளையாடலுக்காக படைத்த புனிதமான பெண் மணியை தீண்டினாள்.

    இறந்தவளின் சடலத்தில், தான் உள் ஒளியாய் வெளிப்பட்டாள். எரி மயானச் சுடலையில் உதித்தாள். பரம்பரை தெய்வமாய் கலியுக நாயகி கருமாரி என்னும் திருநாமத்தில் நடமாடி வரம் தரும் சக்தியாய், வட வேதாரண்யம் எனும் திருவேற்காடு திருத்தலத்தில் தம் பாதம் பதித்தாள்.

    தம்பு சுவாமிகள் வழியாக திருவாய் மலர்ந்து, திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் தேவஸ்தானம் எனும் திருக்கோவில் கண்டாள்.

    இந்த கருமாரி தேவியே, தன் அருளாணைப்படி, ஏழு சக்திகளும் ஏழு மலைகளாக காவல் புரியும், மகா ஆரண்யத் திருத்தலம் வந்தாள். அப்போது அங்கே விண்ணுக்கும், மண்ணுக்குமான உயரத்தில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்த ஒளி வெள்ளமாய் பிரகாசித்தாள்.

    அங்கே தேவி விஸ்வரூபக் காட்சி தந்து, தன் திருவடி பதித்த முழு முதற் தலம் இதுவே என்பதை பிரகடனப்படுத்தினாள்.

    ஆதிசக்தி மகாஜோதியாய் காட்சி தந்து அடையாளம் காட்டிய இடம், அன்றைய வேகவதி ஆற்றின் பழங்கால பயணப்பாதை என்பது புவியியல் வரலாறு.

    அங்கே 13 அடி ஆழத்தில் ஆவுடையார் அமைக்க கடைக்காலுக்கு இயந்திரங்களைக் கொண்டு மண் தோண்டப்பட்டது. அப்போது, வேகவதியின் நீரோட்டத்தை உறுதி செய்யும் விதமாக, தோண்டி முடித்தவுடன் நன்னீர் நீரூற்று பொங்கி எழுந்தது. அதில் மற்றுமொரு அதிசயமும் நிகழ்ந்தது.

    நீருற்றில் குருதியும் கொப்பளிக்க , மூன்று சுவர்ண ரேகைகள் கொண்ட சுயம்புத் திருமேனியாக தேவி தன் பக்தர்களின் கண்முன்னே வெளிப்பட்டாள். இந்த ஆதிசக்தியான, தேவி கருமாரியம்மனே, தன்னை நாடி வந்து வழிபடுவோரின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி, வளத்தையும், நலத்தையும் தந்து கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

    கோவிலின் தனிச்சிறப்பு

    இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பு, இங்கு பரிகார பூஜைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. தேவி கருமாரியம்மனை நேரில் வந்து வேண்டிக் கொண்டாலே வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்பு, அவசியம் மீண்டும் ஒரு முறை நேரில் வந்து அம்மனுக்கு நன்றி கூற வேண்டும்.

    இந்த வளாகத்தில், ஒரே கல்லினால் உருவான 51 அடி உயர தேவி கருமாரியின் சிலை, ஒரே இடத்தில் 108 திவ்ய தேசக்கோவில்கள், பய உணர்வுகளைப் போக்கும் பைரவர், நாக தோஷங்கள் நீக்கும் சர்வ கரிய நாக சொரூபிணி ஆலயம் ஆகியவையும் அமைந்துள்ளன. இதுதவிர தற்போது, 163 அடி உயர கோடி லிங்கமும் எழுப்பப்பட்டு வருகிறது.

    இவ்வாலயத்தில் சித்ரா பவுர்ணமி மூன்று நாட்கள், வைகாசியில் மும்முடிசேவை, ஆடி ஞாயிறுக்கிழமை வழிபாடு, நவராத்திரி போன்றவை குறிப்பிடத்தக்க விழாக்களாக உள்ளன. இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்போரூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பசுமையான ஏழு மலைகளுக்கு நடுவில் இத்திருக்கோவில் அமைந்திருக்கிறது. பேருந்தில் வருவோர் திருவடிசூலம் என்ற இடத்தில் இறங்கி, 2 கிலோமீட்டர் உள்ளே வர வேண்டும். திருவடிசூலம் தேவாரத்தலத்தினை அடுத்து இக்கோவில் அமைந்துள்ளது. திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் நேரடி பஸ் வசதி உள்ளது.

    • திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆடி 10 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: பஞ்சமி காலை 6.10 மணி வரை. பிறகு சஷ்டி பின்னிரவு 3.28 மணி வரை. பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 7 மணி வரை. பிறகு ரேவதி.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: ேமற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. லால்குடி ஸ்ரீபிரலிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியர் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஜெயம்

    ரிஷபம் -சாந்தம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்- அமைதி

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-நலம்

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- நன்மை

    மகரம்-புகழ்

    கும்பம்-பரிசு

    மீனம்-போட்டி

    ×