என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    ரிஷபம்

    கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் நாள். புதிய உத்தியோகத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்துமுடிப்பீர்கள்.

    மிதுனம்

    பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

    கடகம்

    தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். தடைகள் அகலும். தன வரவு திருப்தி தரும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.

    சிம்மம்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். பெரியவர்களின் யோசனையால் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

    கன்னி

    பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    துலாம்

    முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். ஆரோக்கியம் சீராகும்.

    விருச்சிகம்

    மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். சேமிப்பு உயரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். பாராட்டுகளை பெறுவீர்கள். பயணம் பலன் தரும்.

    தனுசு

    யோகமான நாள். அதிகாலையிலேயே வரவு வந்து சேரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

    மகரம்

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீண் விவகாரங்கள் வீடு தேடி வரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சமாளிக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

    கும்பம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். பண வரவு திருப்தி தரும்.

    மீனம்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். பிரச்சனைகள் தீரும். எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    • தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான்.
    • விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.

    லட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள். அந்த ''நெல்லி'' அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும். நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள். நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும்.

    அதனாலயே அப்பழுக்கற்ற தூய தலைவன் விஷ்ணுவுக்கு அமலன் என்ற பெயர் உண்டு. அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான். தாத்ரீ என்ற பதம் பூமாதேவியை குறிக்கும். ஆம் பூமாதேவியும் தேவியின் அம்சம்தானே.

    ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும். எனவே பல இடங்களில் விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.

    நெல்லி மரத்தின் நிழலில் நின்று தானம் செய்வதும் அன்னமளிப்பதும் மிகுந்த சிறப்புமிக்கது. அதிக பலன்களை தரக்கூடியது. நெல்லி இலைகளால் விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.

    • துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
    • துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.

    துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். துளசியை துளசி, திருத்துழாய் என்றும் சொல்வார்கள். இந்த சொற்களுக்கு தெய்வீக சக்தி என்பதே பொருளாகும். துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.

    பாற்கடலில் அமிர்தம் கடைந்த காலத்தில் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஆனந்த மிகுதியால் விஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டு அதில் சில துளிகள் அமிர்த கலசத்தினுள் விழுந்தது. அதுவே மரகதப் பச்சை நிறத்தில் ஸ்ரீதுளசி தேவியாக உருவெடுத்தது என்று சொல்வார்கள். அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட போது அந்த அமிர்த கலசத்திலிருந்து மேலும் சில துளிகள் பூமியில் விழ அவையே பூமியெங்கும் துளசிச் செடிகளாக உற்பத்தியாயின என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    துளசிதேவி பகவானிடம் பெற்ற வரத்தின்படியே வீட்டில் துளசி மாடம் வைத்து அதற்கு பூஜை செய்பவர்களுக்கும், துளசி பறித்து அதன் திவ்யதளங்களால் விஷ்ணுவை லட்சுமியை அர்ச்சிப்பவர்களுக்கும், இருவரும் சகல சவுபாக்கியங்களையும் தந்து நிறைவில் விஷ்ணு லோகத்திலும் இடம் தந்து அருளுகின்றார்கள்.

    நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிக்காத்த நம் தாயாரை மதித்துக் காப்பாற்றி அவள் அருளாசிகளைப் பெறுவதும், தந்தையை பக்தி சிரத்தையுடன் உபசரித்து ஆசி பெறுவதும், துளசிச்செடி வைத்து அதற்கு பூஜித்து சேவைகள் புரிவதும் இம்மூன்றும் மனிதருக்கு உத்தம கதியை தரவல்ல சேவைகள் என மகான்கள் கூறி உள்ளனர்.

    • ஓம் அம்ருதலட்சுமியே போற்றி ஓம் அனந்தலட்சுமியே போற்றி
    • ஓம் சத்யலட்சுமியே போற்றி ஓம் சர்வலட்சுமியே போற்றி

     ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தர சதநாமாவளி

    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி

    ஓம் அத்ரூஷ்டலட்சுமியே போற்றி

    ஓம் அன்னலட்சுமியே போற்றி

    ஓம் அபயலட்சுமியே போற்றி

    ஓம் அலங்காரலட்சுமியே போற்றி

    ஓம் அஸ்வாரூடலட்சுமியே போற்றி

    ஓம் அஷ்டபுஜலட்சுமியே போற்றி

    ஓம் அஷ்டாதசபுஜலட்சுமியே போற்றி

    ஓம் அம்ருதலட்சுமியே போற்றி

    ஓம் அனந்தலட்சுமியே போற்றி

    ஓம் ஆதிலட்சுமியே போற்றி

    ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி

    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி

    ஓம் இந்திரலட்சுமியே போற்றி

    ஓம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி

    ஓம் ஓங்கார ரூபியே போற்றி

    ஓம் கஜலட்சுமியே போற்றி

    ஓம் கனகலட்சுமியே போற்றி

    ஓம் கற்பகலட்சுமியே போற்றி

    ஓம் கனகாபிஷேகலட்சுமியே (20) போற்றி

    ஓம் கன்யாலட்சுமியே போற்றி

    ஓம் கமலாலட்சுமியே போற்றி

    ஓம் கிருபாலட்சுமியே போற்றி

    ஓம் கீர்த்திலட்சுமியே போற்றி

    ஓம் கோலட்சுமியே போற்றி

    ஓம் கோலாபுரிலட்சுமியே போற்றி

    ஓம் சத்யலட்சுமியே போற்றி

    ஓம் சர்வலட்சுமியே போற்றி

    ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி

    ஓம் சந்தானலட்சுமியே (30) போற்றி

    ஓம் சாந்தலட்சுமியே போற்றி

    ஓம் சாகரோத்பவலட்சுமியே போற்றி

    ஓம் சித்தலட்சுமியே போற்றி

    ஓம் சிவானந்தலட்சுமியே போற்றி

    ஓம் சுபலட்சுமியே போற்றி

    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி

    ஓம் சுவர்ணலட்சுமியே போற்றி

    ஓம் சுஸ்மிதலட்சுமியே போற்றி

    ஓம் சுகாசனலட்சுமியே போற்றி

    ஓம் சௌபாக்யலட்சுமியே (40) போற்றி

    ஓம் ஸ்திதலட்சுமியே போற்றி

    ஓம் சௌந்தர்யலட்சுமியே போற்றி

    ஓம் சுவர்க்கலட்சுமியே போற்றி

    ஓம் ஸைன்யலட்சுமியே போற்றி

    ஓம் ஜயலட்சுமியே போற்றி

    ஓம் ஜகல்லட்சுமியே போற்றி

    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி

    ஓம் ஜேஷ்டலட்சுமியே போற்றி

    ஓம் ஷ்ட்புஜலட்சுமியே போற்றி

    ஓம் ஷோடசலட்சுமியே (50) போற்றி

    ஓம் தனலட்சுமியே போற்றி

    ஓம் தனதலட்சுமியே போற்றி

    ஓம் தயாலட்சுமியே போற்றி

    ஓம் தான்யலட்சுமியே போற்றி

    ஓம் த்ரிகுணலட்சுமியே போற்றி

    ஓம் த்வாரலட்சுமியே போற்றி

    ஓம் த்விபுஜலட்சுமியே போற்றி

    ஓம் த்விபுஜவீரலட்சுமியே போற்றி

    ஓம் திவ்யலட்சுமியே போற்றி

    ஓம் தீபலட்சுமியே (60) போற்றி

    ஓம் தைர்யலட்சுமியே போற்றி

    ஓம் துளசிலட்சுமியே போற்றி

    ஓம் துக்கநிவாரணியே போற்றி

    ஓம் நாகலட்சுமியே போற்றி

    ஓம் நித்தியலட்சுமியே போற்றி

    ஓம் பாலலட்சுமியே போற்றி

    ஓம் பங்கஜலட்சுமியே போற்றி

    ஓம் பிரம்மசோதரியே (70) போற்றி

    ஓம் பிரசன்னலட்சுமியே போற்றி

    ஓம் பிரகாசலட்சுமியே போற்றி

    ஓம் பில்வலட்சுமியே போற்றி

    ஓம் பூலட்சுமியே போற்றி

    ஓம் புவனலட்சுமியே போற்றி

    ஓம் பூஜ்யலட்சுமியே போற்றி

    ஓம் பூர்ணலட்சுமியே போற்றி

    ஓம் போகலட்சுமியே போற்றி

    ஓம் மகாலட்சுமியே போற்றி

    ஓம் மாயாலட்சுமியே (80) போற்றி

    ஓம் மோஷலட்சுமியே போற்றி

    ஓம் மோஹனலட்சுமியே போற்றி

    ஓம் யக்ஞலட்சுமியே போற்றி

    ஓம் யந்திரலட்சுமியே போற்றி

    ஓம் யோகலட்சுமியே போற்றி

    ஓம் யௌவனலட்சுமியே போற்றி

    ஓம் ராஜலட்சுமியே போற்றி

    ஓம் ராஜ்யலட்சுமியே போற்றி

    ஓம் ரம்யலட்சுமியே போற்றி

    ஓம் ரூபலட்சுமியே (90) போற்றி

    ஓம் லட்சுமியே போற்றி

    ஓம் லங்காதகனியே போற்றி

    ஓம் வரலட்சுமியே போற்றி

    ஓம் வரதலட்சுமியே போற்றி

    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி

    ஓம் விஜயலட்சுமியே போற்றி

    ஓம் விஸ்வலட்சுமியே போற்றி

    ஓம் வித்யாலட்சுமியே போற்றி

    ஓம் வீரலட்சுமியே போற்றி

    ஓம் வீர்யலட்சுமியே போற்றி

    ஓம் ஞானலட்சுமியே போற்றி

    ஓம் ஹம்சவாகினியே போற்றி

    ஓம் ஹருதயலட்சுமியே போற்றி

    ஓம் ஹிரண்யலட்சுமியே போற்றி

    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி

    ஓம் ஸ்ரீசக்ரலட்சுமியே போற்றி

    ஓம் ஸ்ரீசூக்தலட்சுமியே போற்றி

    ஓம் ஸ்ரீப்ரதனாலட்சுமியே போற்றி

    • ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
    • வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள்.

    ஒரு சமயம் லட்சுமிதேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது.

    மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து அந்த இல்லத்தரசி சுலோகங்களாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.

    வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள். மனையை போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த சுமங்கலி இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடந்தது. அதாவது லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்.

    • அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.
    • வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

    திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.

    எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

    கொஞ்சம் சாஸ்திரபடி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விநாயகர் பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணபிரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

    இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சவுபாக்கியங்களையும் பெற்றனர்.

    ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம் என்பது சான்றோர் வாக்கு!

    கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும். கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.

    அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகுதான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

    இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்தரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயாசம் செய்யலாம். இவ்விரதத்தை கடைபிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

    • ஒரு கலசத்தை எடுத்து, அதனை சுற்றி மஞ்சள் கயிற்றை கட்ட வேண்டும்.
    • குத்துவிளக்கேற்றி வைத்து, கலசத்துக்கு மலர்மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

    வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் சுமங்கலிப் பெண்கள் பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து அழகாக அலங்கரிக்க வேண்டும். பூஜை அறையை மெழுகி கோலமிட்டு மண்டபம் அமைக்க வேண்டும். அதன்பின் வரலட்சுமியின் படம் வைத்து, அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். வரலட்சுமி படத்தின் முன்னர் ஒரு வாழை இலையை விரித்து, அதன்மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். அதன்மேல் தேங்காய், எலுமிச்சை, பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.

    ஒரு கலசத்தை எடுத்து, அதனை சுற்றி மஞ்சள் கயிற்றை கட்ட வேண்டும். அந்த கலசத்தில் அரிசியை நிரப்பி, அதன் மேலே குங்குமம் தடவிய முழுத் தேங்காயை வைக்க வேண்டும். அந்த கலசத்தை இலையில் பரப்பிய அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பூஜையில் மஞ்சள் தடவிய ஒன்பது இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்பு சரடை வைக்க வேண்டும். மஞ்சள் கயிறு என்பது மங்கலத்தின் அறிகுறி ஆகும். வரலட்சுமியுடன் அஷ்ட லட்சுமிகளையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

    குத்துவிளக்கேற்றி வைத்து, கலசத்துக்கு மலர்மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் மீது மகாலட்சுமியின் முக பிம்பத்தை பதிக்கலாம். முதலில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு பூஜையை தொடங்க வேண்டும். பின்பு வரலட்சுமி தேவிக்கான பாடலை பாடி, பூக்களை தூவி தீபங்கள் காட்ட வேண்டும். பூஜையின் முடிவில் ஒன்பது முடிச்சு போட்ட மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின்பு அனைவருக்கு பிரசாதங்கள் வழங்கலாம்.

    வரலட்சுமி விரதமிருந்து வழிபட்டால் அஷ்ட லட்சுமிகளான ஆதி லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெய லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, வித்யா லட்சுமி ஆகியோரை வணங்கிய பலன்கள் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதால், மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும், குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும், கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். வரலட்சுமியை வழிபட்டு அஷ்ட ஐஸ்வரியங்களையும், வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறுவோம்.

    • சாருமதி தினமும் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
    • தன் பெற்றோரின் நிலைமையை அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள்.

    வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும், அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்க வேண்டியும் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடிக்கும் விரதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு பெண்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்களில் இந்த வரலட்சுமி விரதமும் ஒன்று. இந்த வரலட்சுமி விரதம் உருவானது குறித்து பல புராணக் கதைகள் கூறப்படுகிறது.

    மகத நாட்டில் குந்தினபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண், தன் கணவன், மாமனார், மாமியார் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சாருமதி தினமும் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும் இறை அம்சமாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். இதனால் மனம் மகிழ்ந்த வரலட்சுமி, அவளது கனவில் தோன்றி, ''உனது பக்தியால் மனம் மகிழ்ந்தோம். என்னை நினைத்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் குடிகொள்வேன்'' என்றார். மேலும் கனவில் வரலட்சுமி விரதம் இருப்பதற்கான வழிமுறைகளையும் தேவி அருளினார்.

    மறுநாள் அதிகாலையில் கண் விழித்ததும், தன் கனவில் கண்டவற்றை குடும்பத்தினரிடம் கூறினாள் சாருமதி. இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனைவரும் இந்த சிறப்புவாய்ந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டனர். அதன்படி விரதம் இருந்து வரலட்சுமியின் அருளை பெற்றனர். இவர் விரதம் இருந்து பெற்ற நன்மைகளை பார்த்த அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு வரும் அந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கினர்.

    பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்தார். அவரது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளுக்கு சியாமபாலா என்ற மகள் இருந்தாள். இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். தன் மகள் மீது அதிக அன்பு கொண்டிருந்த சுரசந்திரிகா அவளது பிரிவு தாங்காமல் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தாள்.

    ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, வயதான சுமங்கலியின் வேடத்தில் சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். மகாலட்சுமி, சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி எடுத்து கூறினார். ஆனால் தன் மகளை பிரிந்த வருத்தத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ யாசகம் கேட்டு வந்திருப்பதாக கருதி அவமானப்படுத்தி வெளியே விரட்டி விட்டாள்.

    விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகளான சியாமபாலா சமாதானப்படுத்தினாள். அத்துடன், லட்சுமி தேவியிடம் இருந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கான முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். இதையடுத்து பக்தியுடன் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தாள். விரதத்தின் மகிமையில் அவள் செல்வ செழிப்பு பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்தாள். ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், எல்லாவற்றையும் இழந்து வறுமையின் பிடியில் சிக்கி ஏழ்மையில் வாடத் தொடங்கினர்.

    தன் பெற்றோரின் நிலைமையை அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் இங்கிருந்த அனுப்பிய தங்கம் எல்லாம் அவர்கள் செய்த தீவினையால் கரியாக மாறி போனது. இதை கேள்விப்பட்டு வருந்திய சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி சொல்லி பூஜை செய்யும்படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன்பிறகு விரதத்தின் பலனால் இழந்த செல்வங்கள் பெற்று மீண்டும் சுகவாழ்வு வாழ தொடங்கினாள்.

    சித்திரநேமி என்றவள் தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள், தேவர்களுக்கிடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நடுவராக இருந்து நியாயமான தீர்ப்பு வழங்குவாள். ஒரு சமயம் கயிலாயத்தில் சிவ பெருமானும், பார்வதி தேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பார்வதி தேவி, ''நாதா நான் உங்களை ஜெயித்து விட்டேன்'' என்றார். ஆனால் அதை மறுத்தார் சிவபெருமான். இதனால் சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இறுதியில் இருவரும் சித்திரநேமியிடம் இதற்கான தீர்ப்பை கேட்டனர். அவள், பரமசிவன் தான் போட்டியில் வெற்றி பெற்றதாக கூறினார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, ''நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாகி பொலிவிழந்து தவிப்பாயாக'' என்று சாபமிட்டார். இதையடுத்து தன்னை மன்னித்து அருளும்படி வேண்டினாள் சித்திரநேமி. உடனே மனம் இரங்கிய பார்வதி தேவி, ''நதிக்கரையில் வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் உனக்கு ஏற்பட்ட இந்த நிலை மாறும்'' என்று சாபவிமோசனம் அருளினார். சித்திரநேமியும் அவ்வாறே விரதம் இருந்து வரலட்சுமியை வழிபட்டு நோய் நீங்கி சாபவிமோசனம் பெற்றாள்.

    • அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது.
    • விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்-செல்வ வளம் சேரும்.

    வரலட்சுமி விரதம் இருக்க வீடு அல்லது கோவில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

    சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேசபூஜை செய்ய வேண்டும்.

    அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள் கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும். நைவேத்தியமாக கொழுக்கட்டை படைக்கலாம்.

    பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்- செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

    சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் உண்டாகும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித செல்வங்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும்.

    ரிஷபம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களைத் தவிர்க்கவும். உடல்நலனுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    மிதுனம்

    திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். சகோதர வழியில் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    கடகம்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

    சிம்மம்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.

    கன்னி

    நிதிநிலை உயரும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும்.

    துலாம்

    காலை நேரம் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் உதவியோடு தொழில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

    விருச்சிகம்

    நன்மைகள் நடைபெறும் நாள். பாசத்தோடு பழகியவர்கள் நேசக்கரம் நீட்டுவர். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.

    தனுசு

    செல்வாக்கு மேலோங்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொலைதூரப் பயணங்கள் உறுதியாகும்.

    மகரம்

    வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். பாசம்மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வாகனமாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

    கும்பம்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிம்மதிக்காக வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

    மீனம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-22 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திரயோதசி பிற்பகல் 2.45 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : பூராடம் நண்பகல் 3 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சனம், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு

    சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வடமதுரை ஸ்ரீ சவுந்திர ராஜப் பெருமாள் திருக்கல்யாணம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தபசு காட்சி விருஷபாரூட தரிசனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தாமதம்

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-நன்மை

    கடகம்-பக்தி

    சிம்மம்-ஆசை

    கன்னி-பணிவு

    துலாம்- நிம்மதி

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- உவகை

    மகரம்-ஈகை

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-பொறுமை

    • 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
    • மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையையே சிவனாக வழிபடுவதால் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.43 மணி முதல் மறுநாள் 9-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 2.18 மணிவரை உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ×